நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமா?
மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டுமென்ற ஆசை கிட்டத்தட்ட எல்லாருக்குமே இருக்கிறது. மற்றவர்களுடைய பாராட்டு நம்மைச் சந்தோஷப்படுத்தலாம், ஏதோவொன்றைச் சாதித்துவிட்டது போல் உணர வைக்கலாம். மற்றவர்கள் நம் தோளைத் தட்டிக்கொடுத்து ‘பலே!’ என்று சொல்லும்போது நாம் செய்த அந்தக் காரியத்தை இன்னும் நன்றாகச் செய்வதற்கான ஆசை அதிகரிக்கலாம். ஆனால், மற்றவர்கள் நம்மைக் கண்டனம் பண்ணும்போது அதற்கு நேர்மாறான உணர்ச்சிகளே உள்ளத்தில் எழும்பும். அன்பற்ற பதிலோ ஏளன வார்த்தையோ நம்முடைய மன உறுதியையே நொறுக்கிவிடலாம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நம்மைப் பற்றி நாம் வைத்துள்ள அபிப்பிராயத்தைக்கூட அடியோடு மாற்றிவிடலாம்.
மற்றவர்கள் நம்மை எப்படிக் கருதுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமலேயே இருந்துவிடுவது தவறாகும். சொல்லப்போனால், மற்றவர்களிடம் நம்முடைய நடத்தையை உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்வது நமக்கு நன்மையையே அளிக்கும். உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களின் அடிப்படையில் சொல்லப்படும் அவர்களுடைய அபிப்பிராயங்கள் நமக்குப் பயனளிக்கக்கூடும், ஏனெனில் பண்புள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு அவை நம்மைத் தூண்டும். (1 கொரிந்தியர் 10:31-33) ஆனால், பொதுமக்களுடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் பாரபட்சமானவையாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு, இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி, “‘அவனைக் கழுவேற்றுங்கள்! கழுவேற்றுங்கள்!’ என்று” கூக்குரலிட்ட பிரதான ஆசாரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருந்த தவறான அபிப்பிராயத்தைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். (லூக்கா 23:13, 21-25, NW) ஆகையால், பொய்த் தகவல்களின் அடிப்படையிலோ பொறாமை அல்லது தப்பெண்ணத்தின் அடிப்படையிலோ கூறப்படும் கருத்துகளை நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித்தள்ள வேண்டியிருக்கலாம். எனவே, மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை நன்றாய்ச் சீர்தூக்கிப் பார்த்து, அதற்கேற்றாற்போல் ஞானமாக நடந்துகொள்வது அவசியம்.
யாருடைய அபிப்பிராயம் முக்கியம்?
மெய் வணக்கத்தில் நம்மோடு நெருங்கியிருப்பவர்களுடைய அங்கீகாரத்தைப் பெற நாம் விரும்புகிறோம். இவர்களில், விசுவாசத்திலுள்ள குடும்ப அங்கத்தினர்களும் நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் அடங்குவர். (ரோமர் 15:2; கொலோசெயர் 3:18-21) சக விசுவாசிகளின் அன்பும் மரியாதையும், அவர்களுடைய ‘உற்சாகப் பரிமாற்றமும்’ நமக்கு ரொம்பவே முக்கியமானவையாய் இருக்கின்றன. (ரோமர் 1:11, 12, NW) ‘மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் நம்மிலும் மேன்மையானவர்களாக நாம் எண்ணுகிறோம்.’ (பிலிப்பியர் 2:2-4) அதுமட்டுமல்ல, நம்மை ‘நடத்துகிறவர்களுடைய,’ அதாவது சபை மூப்பர்களுடைய, அங்கீகாரத்தைப் பெற நாம் முயல்கிறோம், அதை மதிக்கவும் செய்கிறோம்.—எபிரெயர் 13:17.
சபைக்குப் ‘புறம்பானவர்களிடமிருந்து பெறுகிற நற்சாட்சியும்’ விரும்பத்தக்கதே. (1 தீமோத்தேயு 3:7) விசுவாசத்தில் இல்லாத உறவினர்களும், சக வேலையாட்களும், அக்கம்பக்கத்தவர்களும் நமக்கு மதிப்பு மரியாதை காட்டுவது எவ்வளவு நன்றாக இருக்கிறது! ஏன், நாம் பிரசங்கிக்கிற ஆட்கள் ராஜ்ய செய்தியைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்களுடைய மனதில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த நாம் முயற்சி செய்வதில்லையா? ஒழுக்கமானவர்கள், கண்ணியமானவர்கள், நாணயமானவர்கள் என்றெல்லாம் சமுதாயத்தில் நாம் பெயரெடுப்பது கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது. (1 பேதுரு 2:12) என்றாலும், மற்றவர்களுடைய ஆதரவைப் பெற வேண்டுமென்பதற்காக பைபிள் நியமங்களை நம்மால் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது; அவர்களுடைய மனதைக் கவருவதற்காக வெளிவேஷமும் போட முடியாது. அதே சமயத்தில், எல்லாரையுமே நம்மால் பிரியப்படுத்த முடியாது என்பதையும் நாம் கட்டாயம் புரிந்திருக்க வேண்டும். இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.” (யோவான் 15:19) அப்படியானால், நம்மை எதிர்ப்பவர்களிடமிருந்து மரியாதையைப் பெறுவதற்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா?
எதிர்ப்பவர்களிடமிருந்து மரியாதையைப் பெறுதல்
“என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” என இயேசு எச்சரித்தார், ஆனால் “முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” என்றும் அவர் கூறினார். (மத்தேயு 10:22) இந்தப் பகை சிலசமயம் கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்துமளவுக்குச் சென்றுவிடும். “தேசத்துரோகிகள்” என்றோ “கலகக்காரர்கள்” என்றோ பாரபட்சமுள்ள அரசாங்க அதிகாரிகள் நம்மீது முத்திரை குத்தலாம். ஒடுக்கப்பட வேண்டிய தொந்தரவுபிடித்த ஒரு மதத்தொகுதியினர் என்று துணிச்சல்கார எதிரிகள் நம்மைப் பற்றி ஆவேசமாகப் பேசலாம். (அப்போஸ்தலர் 28:22) இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சிலசமயம் ஒன்றுமில்லாதபடி செய்துவிடலாம். எப்படி? “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் அவ்வாறு செய்துவிடலாம். (1 பேதுரு 3:15) அதுமட்டுமல்ல, ‘எதிரியானவன் நம்மைக் குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, . . . குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தை’ நாம் உபயோகிக்க வேண்டும்.—தீத்து 2:8.
நம்மீது சுமத்தப்பட்டுள்ள பழிச்சொற்களைப் பொய்யென நிரூபிக்க நாம் முயற்சி செய்கிற அதே நேரத்தில், அநியாயமாக பழிதூற்றப்படுவதை எண்ணி சோர்ந்துபோகவோ சோகக்கடலில் மூழ்கிப்போகவோ அவசியமில்லை. தேவதூஷணம் செய்ததாகவும், அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்ததாகவும், பேய்களோடு தொடர்பு வைத்திருந்ததாகவும் கடவுளுடைய பரிபூரண குமாரனான இயேசுமீது குற்றம்சுமத்தப்பட்டது. (மத்தேயு 9:3; மாற்கு 3:22; யோவான் 19:12) அப்போஸ்தலன் பவுலும் தூஷிக்கப்பட்டார். (1 கொரிந்தியர் 4:13) ஆனால் இயேசு, பவுல் ஆகிய இருவருமே அத்தகைய விமர்சனங்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை, தங்களுடைய வேலையிலேயே அதிக மும்முரமாய் ஈடுபட்டார்கள். (மத்தேயு 15:14) எதிரிகளுடைய அங்கீகாரத்தைத் தங்களால் ஒருபோதும் பெற முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், ஏனெனில் “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (1 யோவான் 5:19) இன்று, நாமும்கூட அதேவிதமாகப் பழிதூற்றப்படுகிறோம். என்றாலும், ஈவிரக்கமற்ற எதிரிகள் நம்மைப் பற்றி பொய்களைப் பரப்பும்போது நாம் பயந்துநடுங்க வேண்டியதே இல்லை.—மத்தேயு 5:11.
மிக மிக முக்கியமான அபிப்பிராயங்கள்
ஜனங்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுடைய உள்நோக்கங்களைப் பொறுத்தும், நம்மைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ள விஷயங்களைப் பொறுத்தும் பெருமளவு வேறுபடுகிறது. ஒரு சிலரால் நாம் பாராட்டப்படுகிறோம், கெளரவிக்கப்படுகிறோம்; மற்றவர்களால் வையப்படுகிறோம், பகைக்கப்படுகிறோம். என்றாலும், பைபிள் நியமங்களின்படி நடக்கும்வரை நாம் சந்தோஷமாய், நிம்மதியாய் இருக்கலாம்.
அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) எல்லா விஷயங்களுக்கும் கடவுளுடைய வார்த்தையை நாம் வழிகாட்டியாகப் பயன்படுத்தும்போது, யெகோவா தேவனுடைய தயவையும் அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடைய தயவையும் நாம் பெற்றுக்கொள்வோம். பார்க்கப்போனால், யெகோவாவின் அபிப்பிராயமும் அவருடைய குமாரனின் அபிப்பிராயமும் தானே மற்ற எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியம்! அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் நம்முடைய உண்மையான மதிப்பைக் காண்பிக்கிறது. கடைசியாக, அவர்களுடைய அங்கீகாரம் இருந்தால்தான் நமக்கு ஜீவனே கிடைக்கும்.—யோவான் 5:27; யாக்கோபு 1:12.
[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]
“மற்றவர்கள் என்னைப் புகழும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது; ஏனென்றால் அந்தப் புகழைப் பெறுவதற்குத்தானே என் மனம் கெஞ்சுகிறது.”—இந்தியக் கவிஞர் ரபீந்தரநாத் தாகூர்
[பக்கம் 31-ன் படங்கள்]
சக விசுவாசிகளுடைய அபிப்பிராயங்கள் முக்கியமானவை
[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]
Culver Pictures