யெகோவா நம் மேய்ப்பர்
‘யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.’ —சங்கீதம் 23:1.
1-3. யெகோவாவை தாவீது ஒரு மேய்ப்பனோடு ஒப்பிட்டதில் ஏன் எந்த ஆச்சரியமும் இல்லை?
யெகோவா தம்முடைய மக்களைக் கவனித்துக்கொள்ளும் விதத்தைப் பற்றி யாராவது உங்களிடம் கேட்டால், நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? தமது உண்மையுள்ள ஊழியர்கள்மீது அவர் காட்டும் கனிவான அக்கறையை எதனுடன் ஒப்பிடுவீர்கள்? 3,000-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன், தாவீது ராஜா ஓர் ஒப்புமையின் மூலம் யெகோவாவை அழகாக விவரித்து ஒரு பாடல் இயற்றினார்; தன்னுடைய வாலிப வயதில் செய்த வேலையை மனதில் வைத்து அவர் அந்த ஒப்புமையைப் பயன்படுத்தினார்.
2 வாலிப வயதில் தாவீது ஒரு மேய்ப்பனாக இருந்தார். எனவே, ஆடுகளை எப்படிக் கவனிப்பது என்பதை அறிந்திருந்தார். ஆடுகளைத் தனியே விட்டுவிட்டால் அவை வெகு எளிதில் தொலைந்துவிடும் என்பதையும், கள்வர்களிடமோ வனவிலங்குகளிடமோ மாட்டிக்கொள்ளும் என்பதையும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார். (1 சாமுவேல் 17:34-36) ஆடுகளை அக்கறையோடு கவனிக்கிற ஒரு மேய்ப்பன் இல்லையென்றால், புல்வெளியை அவற்றால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம். ஆடுகளை மணிக்கணக்காக வழிநடத்தி, பாதுகாத்து, அவற்றிற்கு உணவளித்ததைப் பற்றிய இனிய நினைவுகளெல்லாம் வயதுசென்ற காலத்திலும் நிச்சயமாக தாவீதின் மனதில் பசுமையாய் இருந்திருக்கும்.
3 எனவே, யெகோவா தம்முடைய மக்களைக் கவனித்துக்கொள்ளும் விதத்தைப் பற்றி விவரிக்க ஏவப்பட்டபோது, தாவீதுக்கு ஒரு மேய்ப்பனுடைய வேலை ஞாபகம் வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. தாவீது இயற்றிய 23-ம் சங்கீதம் பின்வரும் வார்த்தைகளுடன் ஆரம்பமாகிறது: ‘யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் [அதாவது, எதிலும் குறைவுபடேன்].’ இவ்வார்த்தைகள் ஏன் பொருத்தமானவை என்பதை இப்போது சிந்திக்கலாம். பிறகு, ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்வது போல் யெகோவா எந்தெந்த வழிகளில் தம்முடைய வணக்கத்தாரைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை 23-ம் சங்கீதத்தின் உதவியுடன் நாம் புரிந்துகொள்ளலாம்.—1 பேதுரு 2:25.
பொருத்தமான ஒப்புமை
4, 5. ஆடுகளின் இயல்பைப் பற்றி பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
4 பைபிளில் யெகோவாவுக்கு அநேக பட்டப்பெயர்கள் இருக்கின்றன, என்றாலும் அவற்றில் ‘மேய்ப்பர்’ என்ற பட்டப்பெயரே மிகமிக கனிவான பட்டப்பெயராகும். (சங்கீதம் 80:1) யெகோவாவை ஒரு மேய்ப்பர் என்று அழைப்பது ஏன் பொருத்தமானது என்பதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள இரண்டு விஷயங்களைத் தெரிந்திருப்பது நமக்கு உதவும்: ஒன்று, ஆடுகளுடைய இயல்பு; மற்றொன்று, ஒரு நல்ல மேய்ப்பனுடைய கடமைகள் மற்றும் குணங்கள்.
5 ஆடுகளின் இயல்பைப் பற்றி பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது; ஆடுகள் மேய்ப்பனின் அன்புக்குச் சந்தோஷமாய்க் கட்டுப்பட்டு நடப்பவை (2 சாமுவேல் 12:3), சாதுவானவை (ஏசாயா 53:7), தற்காப்பற்றவை. (மீகா 5:8) பல வருடங்களாக ஆடுகளை வளர்த்துவந்த ஓர் எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சிலர் நினைப்பது போல், ஆடுகளால் ‘தங்களைத் தாங்களே துளியும் பராமரித்துக்கொள்ள’ முடியாது. வேறெந்த கால்நடையையும்விட இவற்றிற்குத்தான் கண்ணும் கருத்துமான கவனிப்பும் மிகுந்த அக்கறையும் தேவைப்படுகின்றன.” வலுவற்ற இந்தப் பிராணிகள் உயிர்வாழ வேண்டுமானால், அன்பும் அக்கறையும் உள்ள ஒரு மேய்ப்பன் அவற்றிற்குத் தேவை.—எசேக்கியேல் 34:5.
6. பூர்வகால மேய்ப்பனுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றி பைபிள் அகராதி ஒன்று எப்படி விளக்குகிறது?
6 பூர்வகால மேய்ப்பனுடைய அன்றாட வாழ்க்கை எப்படியிருந்தது? பைபிள் அகராதி ஒன்று இவ்வாறு விளக்குகிறது: “விடியற்காலையிலேயே மந்தையைத் தொழுவத்திலிருந்து மேய்ச்சல் இடத்திற்குக் கூட்டிக்கொண்டு செல்வான், அவற்றிற்கு முன்பாக நடந்துசெல்வான். அங்கே நாள் முழுக்க அவற்றைக் கண்காணித்து, அவற்றில் ஒன்றுகூட வழிவிலகிப் போய்விடாதவாறு பார்த்துக்கொள்வான்; அப்படியே தப்பித்தவறி ஏதோவொன்று தொலைந்துவிட்டதென்றால், முழுமூச்சாக அதைத் தேடிக் கண்டுபிடித்து, திரும்பக் கொண்டுவருவான். . . . பொழுதுசாயும்போது, மந்தையை மீண்டும் தொழுவத்திற்குள் கூட்டிச்சேர்ப்பான், அப்போது தொழுவத்தின் கதவருகே நின்றுகொண்டு, தன் கோலை குறுக்கே பிடித்தவாறு ஒவ்வொரு ஆடாக அதனடியில் போகவிடுவான், அப்போது எல்லா ஆடுகளும் இருக்கின்றனவா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள அவற்றை ஒவ்வொன்றாக எண்ணுவான். . . . மந்தையைக் காட்டு மிருகங்கள் தாக்காமல் அல்லது கள்வர்கள் திருடாமல் இருப்பதற்காகப் பெரும்பாலும் இரவுநேரங்களில் கண்விழித்திருப்பான்.”a
7. ஒரு மேய்ப்பன் சில நேரங்களில் அதிக பொறுமையுடனும் கனிவுடனும் நடந்துகொள்வது ஏன் அவசியப்பட்டது?
7 ஆடுகளிடம், முக்கியமாய் ஆட்டுக்குட்டிகளிடமும் சினை ஆடுகளிடமும், ஒரு மேய்ப்பன் அதிக பொறுமையுடனும் கனிவுடனும் நடந்துகொள்வது சில சமயம் அவசியப்பட்டது. (ஆதியாகமம் 33:13) பைபிள் ஆராய்ச்சி நூல் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “மந்தையிலுள்ள ஓர் ஆடு வெகு தூரத்திலிருக்கிற மலைப்பகுதியில்தான் பெரும்பாலும் குட்டி ஈனும். இக்கட்டான அச்சமயத்தில், தாய் ஆட்டை மேய்ப்பன் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பான், பிறகு ஆட்டுக்குட்டியைக் கையிலெடுத்து, அதைத் தொழுவத்திற்குக் கொண்டுபோவான். கொஞ்ச நாட்கள்வரை, அது தானாக எழுந்து நடக்கும்வரை, தன் கைகளிலேயே அதைச் சுமப்பான் அல்லது தன்னுடைய மேலங்கியின் மடிப்புகளில் அதை வைத்துக்கொள்வான்.” (ஏசாயா 40:10, 11) ஆக, ஒரு நல்ல மேய்ப்பன் உறுதியாயும், அதேசமயத்தில் கனிவாயும் இருக்க வேண்டியிருந்தது.
8. யெகோவாமீது தான் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு தாவீது என்ன காரணங்களைக் குறிப்பிடுகிறார்?
8 ‘யெகோவா என் மேய்ப்பர்’—நம்முடைய பரலோகத் தகப்பனுக்கு இது மிகமிகப் பொருத்தமான ஒரு விவரிப்பு, அல்லவா? சங்கீதம் 23-ஐ ஆராய்ந்து பார்க்கையில், ஒரு மேய்ப்பனைப் போல கடவுள் எப்படி உறுதியாயும் கனிவாயும் நம்மீது அக்கறை காண்பிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்வோம். தம்முடைய ஆடுகள் ‘எதிலும் குறைவுபடக் கூடாது’ என்பதற்காக அவற்றிற்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கையை வசனம் 1-ல் தாவீது வெளிப்படுத்துகிறார். அதற்கு அடுத்துவரும் வசனங்களில், அந்த நம்பிக்கைக்கான மூன்று காரணங்களை அவர் குறிப்பிடுகிறார்: யெகோவா தமது ஆடுகளை வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார், போஷிக்கிறார். இவற்றை ஒவ்வொன்றாகக் கலந்தாராயலாம்.
‘என்னை வழிநடத்துகிறார்’
9. என்ன அமைதியான காட்சியை தாவீது விவரிக்கிறார், அத்தகைய இடத்திற்கு ஆடுகளால் எப்படிச் செல்ல முடியும்?
9 முதலாவதாக, யெகோவா தம்முடைய மக்களை வழிநடத்துகிறார். தாவீது இவ்வாறு எழுதினார்: “அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.” (சங்கீதம் 23:2, 3) செழிப்பாக வளர்ந்திருக்கும் புற்களின் நடுவே அமைதியாகப் படுத்துக்கிடக்கும் ஒரு மந்தையை தாவீது இங்கே வர்ணிக்கிறார்; மனநிறைவை, புத்துணர்ச்சியை, பாதுகாப்பை வெளிப்படுத்துகிற ஒரு காட்சி இது. ‘புல்லுள்ள இடங்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை “இனிமையான இடம்” என்ற அர்த்தத்தையும் கொடுக்கலாம். அமைதியாகப் படுத்து, ஓய்வெடுத்து புத்துயிர் பெறுவதற்கான ஓர் இடத்தை ஆடுகளால் தானாகக் கண்டுபிடிக்க முடியாது என்றே சொல்லலாம். அத்தகைய ‘இனிமையான இடத்திற்கு’ மேய்ப்பர்கள்தான் அவற்றை வழிநடத்த வேண்டும்.
10. கடவுள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எப்படிக் காண்பிக்கிறார்?
10 யெகோவா இன்று நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்? ஒரு வழி, தம்முடைய முன்மாதிரியின் மூலமாகும். ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாக’ ஆகும்படி அவருடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (எபேசியர் 5:1) அந்த வசனத்தின் சூழமைவு தயவையும், மன்னிக்கிற குணத்தையும், அன்பையும் பற்றிக் குறிப்பிடுகிறது. (எபேசியர் 4:32; 5:2) நிச்சயமாகவே, அத்தகைய அருமையான குணங்களைக் காண்பிப்பதில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். தம்மைப் பின்பற்றும்படி அவர் நம்மிடம் சொல்லும்போது, நம்மால் செய்ய முடியாத ஒன்றையா கேட்கிறார்? இல்லை. அந்த ஆலோசனை, நம்மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையே அருமையாக வெளிப்படுத்துகிறது. எவ்விதத்தில்? நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம், அதாவது தார்மீகப் பண்புகளுடனும் ஆன்மீக குணத்துடனும் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:26) எனவே, நாம் அபூரணர்களாக இருந்தாலும், யெகோவாவின் சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் நமக்கு இருக்கிறது; இதை அவர் அறிந்திருக்கிறார். சற்று யோசித்துப் பாருங்கள்—நம்முடைய அன்பான கடவுளைப் போலவே நம்மால் இருக்க முடியுமென்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. அவருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றினால், அடையாள அர்த்தத்தில், ஓர் ‘இனிமையான இடத்திற்கு’ அவர் நம்மை வழிநடத்துவார். அப்போது, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதை அறிந்து, வன்முறைமிக்க இவ்வுலகின் மத்தியில்கூட மன சமாதானத்தில் நாம் ‘சுகமாய்த் தங்குவோம்.’—சங்கீதம் 4:8; 29:11.
11. தமது ஆடுகளை வழிநடத்தும்போது, யெகோவா எதை மனதில் வைக்கிறார், அவர் நம்மிடம் கேட்கும் காரியத்திலிருந்து இது எப்படித் தெரிகிறது?
11 யெகோவா நம்மை வழிநடத்தும்போது, கனிவையும் பொறுமையையும் காட்டுகிறார். ஒரு மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளின் வரம்புகளை மனதில் வைத்து, ‘மந்தைகளின் நடைக்குத் தக்கதாக’ அவற்றை வழிநடத்துகிறான். (ஆதியாகமம் 33:14) அதேபோல், யெகோவாவும் தம்முடைய ஆடுகளின் ‘நடைக்குத் தக்கதாக’ அவர்களை வழிநடத்துகிறார். நம்முடைய திறமைகளையும் சூழ்நிலைகளையும் மனதில் வைக்கிறார். நம்மால் முடியாததை அவர் ஒருபோதும் நம்மிடம் கேட்பதில்லை; ஒருவிதத்தில், அவர்தாமே தமது நடையை நமக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம், முழு ஆத்துமாவோடு நாம் அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான். (கொலோசெயர் 3:24, NW) ஆனால், உங்களுக்கு வயதாகிவிட்டது, முன்புபோல் சேவை செய்ய முடியவில்லை, அப்போது என்ன? அல்லது உங்களால் அதிகம் செய்ய முடியாதபடி ஒரு கொடிய வியாதி உங்களைத் தடுக்கிறது, அப்போது என்ன? முக்கியமாக அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான், எதைச் செய்தாலும் முழு ஆத்துமாவோடு செய்ய வேண்டுமென்ற கட்டளை மனதிற்கு வெகு ஆறுதலாக இருக்கிறது. எந்த இரண்டு நபர்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. முழு ஆத்துமாவோடு சேவை செய்வது, உங்களுடைய எல்லாச் சக்தியையும் பலத்தையும் உங்களால் முடிந்தமட்டும் கடவுளுடைய சேவையில் முழுமையாகப் பயன்படுத்துவதையே அர்த்தப்படுத்துகிறது. நம் நடையின் வேகத்தைக் குறைக்கிற சில பலவீனங்கள் நமக்கு இருந்தாலும், நம்முடைய இருதயப்பூர்வமான வணக்கத்தை யெகோவா உயர்வாகக் கருதுகிறார்.—மாற்கு 12:29, 30.
12. யெகோவா தமது ஆடுகளின் ‘நடைக்குத் தக்கதாக’ வழிநடத்துகிறார் என்பதை மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள எந்த உதாரணம் காண்பிக்கிறது?
12 யெகோவா தமது ஆடுகளின் ‘நடைக்குத் தக்கதாக’ வழிநடத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்; அதாவது, மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தில் ஒருசில பாவநிவாரண பலிகளைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். நன்றியுள்ள இருதயங்களால் தூண்டப்பட்டு செலுத்தப்பட்ட நல்ல பலிகளே யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேசமயம், பலிசெலுத்துபவரின் சக்திக்கு ஏற்ப அந்தப் பலிகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. நியாயப்பிரமாணம் இவ்வாறு சொன்னது: “ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால் . . . இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு புறாக் குஞ்சுகளையாவது . . . கொண்டுவரக்கடவன்.” இரண்டு புறாக் குஞ்சுகளைக்கூட அவனால் கொண்டுவர முடியவில்லையென்றால்? ‘மெல்லிய மாவில்’ கொஞ்சத்தைக் கொண்டுவரலாம். (லேவியராகமம் 5:7, 11) ஒருவருடைய சக்திக்கு மிஞ்சிய ஒன்றைக் கொடுக்கும்படி கடவுள் கட்டாயப்படுத்தவில்லை என்பதை இது காண்பிக்கிறது. கடவுள் என்றும் மாறாதவர், எனவே இன்றும்கூட, நம்மால் கொடுக்க முடிந்ததைக் காட்டிலும் அதிகமாக நம்மிடத்திலிருந்து அவர் கேட்பதில்லை; மாறாக நம்மால் கொடுக்க முடிந்ததை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார் என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. (மல்கியா 3:6) இத்தகைய கரிசனைமிக்க ஒரு மேய்ப்பரால் வழிநடத்தப்படுவது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்!
“பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்”
13. சங்கீதம் 23:4-ல், தாவீது எப்படி இன்னும் அன்யோன்யமாகப் பேசினார், இதைக் குறித்து ஏன் ஆச்சரியப்படத் தேவையில்லை?
13 தாவீது தன்னுடைய நம்பிக்கைக்கான இரண்டாவது காரணத்தைக் கொடுக்கிறார்: யெகோவா தம்முடைய ஆடுகளைப் பாதுகாக்கிறார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” (சங்கீதம் 23:4) தாவீது இங்கே “உமது” என்ற வார்த்தையை உபயோகித்து, யெகோவாவிடம் இன்னும் அன்யோன்யமாகப் பேசுகிறார், அதற்கு அடுத்த வசனத்தில் அவரை “நீர்” என்றும் அழைக்கிறார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் இன்னல்களின்போது சகித்திருக்க தனக்கு யெகோவா எப்படி உதவினார் என்பதைப் பற்றியே அவர் இங்கு பேசிக்கொண்டிருக்கிறார். அநேக முறை ‘இருளின் பள்ளத்தாக்குகளை,’ ஆம், உயிருக்கு ஆபத்தான சமயங்களை, தாவீது கடந்துவந்திருந்தார். ஆனாலும் தன் மனதைப் பயம் கவ்விக்கொள்ள அவர் அனுமதிக்கவில்லை, காரணம், கடவுள் தமது ‘கோலுடனும்,’ ‘தடியுடனும்’ தயாராகத் தன்னோடு கூடவே வந்ததாக அவர் உணர்ந்தார். கடவுளுடைய பாதுகாப்பு இருக்கிறது என்ற உணர்வு தாவீதுக்கு ஆறுதலளித்தது, சந்தேகமில்லாமல் யெகோவாவிடம் அவரை நெருங்கிவரவும் செய்தது.b
14. யெகோவாவின் பாதுகாப்பு குறித்து பைபிள் நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது, ஆனால் இது எதை அர்த்தப்படுத்துவதில்லை?
14 யெகோவா தம்முடைய ஆடுகளை இன்று எவ்வாறு பாதுகாக்கிறார்? எந்த எதிரியாலும், அது மனிதனாக இருந்தாலும் சரி, பிசாசாக இருந்தாலும் சரி, அவருடைய ஆடுகளை இந்தப் பூமியிலிருந்து அழித்துப்போட முடியாது என்று பைபிள் உறுதி அளிக்கிறது. யெகோவா ஒருகாலும் அதற்கு அனுமதிக்க மாட்டார். (ஏசாயா 54:17; 2 பேதுரு 2:9) ஆனால், நம்முடைய மேய்ப்பரான அவர் எல்லாத் தீங்குகளிலிருந்தும் நம்மைப் பாதுகாத்திடுவார் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குச் சகஜமாக வரக்கூடிய சோதனைகளை நாம் அனுபவிக்கிறோம், மெய்க் கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் வருகிற எதிர்ப்பையும் நாம் சந்திக்கிறோம். (2 தீமோத்தேயு 3:12; யாக்கோபு 1:2, 3) அடையாள அர்த்தத்தில், ‘இருளின் பள்ளத்தாக்குகளில் நடக்க’ வேண்டிய சந்தர்ப்பம் சில சமயம் நமக்கு வரலாம். உதாரணத்திற்கு, துன்புறுத்தல் காரணமாகவோ ஏதோவொரு நோயின் காரணமாகவோ நாம் மரண வாசலை நெருங்கலாம். அல்லது நமக்குப் பிரியமான ஒருவர் மரித்துப்போகும் நிலையில் இருக்கலாம், அல்லது மரித்தே போயிருக்கலாம். அப்படிப்பட்ட இருண்ட சமயங்களில், நம்முடைய மேய்ப்பர் நம்மோடு இருந்து, நம்மைப் பாதுகாப்பார். எப்படி?
15, 16. (அ) நாம் எதிர்ப்படுகிற பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவா எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறார்? (ஆ) சோதனைக் காலத்தில் யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார் என்பதைக் காட்டுகிற ஓர் அனுபவத்தைச் சொல்க.
15 ஏதோ அற்புதகரமாக நம்முடைய விஷயத்தில் தலையிட்டு நம்மைப் பாதுகாக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கவில்லை.c ஆனால் ஒன்றைக் குறித்து மட்டும் நிச்சயமாய் இருக்கலாம்: நாம் எதிர்ப்படுகிற எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க யெகோவா நமக்கு உதவுவார். “பலவிதமான சோதனைகளில்” நாம் சகித்திருப்பதற்கு வேண்டிய ஞானத்தை அவரால் அருள முடியும். (யாக்கோபு 1:2-5) ஒரு மேய்ப்பன் தன்னுடைய கோலையோ தடியையோ, காட்டு மிருகங்களைத் துரத்தியடிக்க மட்டுமல்ல, தன்னுடைய ஆடுகள் சரியான திசையில் செல்லும்படி மென்மையாய்த் தட்டுவதற்கும் பயன்படுத்துகிறான். அதேபோல, யெகோவாவும் நம்மை ‘தட்டிவிடலாம்,’ ஒருவேளை சக வணக்கத்தார் ஒருவரைப் பயன்படுத்தி வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பைபிள் ஆலோசனையைக் கொடுப்பதன் மூலம் யெகோவா நம்மைத் ‘தட்டிவிடலாம்.’ அதுமட்டுமல்ல, சகித்திருப்பதற்கு வேண்டிய பலத்தையும் அவர் நமக்குத் தரலாம். (பிலிப்பியர் 4:13, NW) தமது பரிசுத்த ஆவியின் மூலம் “இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை” கொடுத்து, நம்மைத் தயார்படுத்தலாம். (2 கொரிந்தியர் 4:7, NW) சாத்தான் நம்மீது கொண்டுவரும் எந்தவொரு சோதனையிலும் சகித்திருக்க கடவுளுடைய ஆவி நம்மைப் பலப்படுத்தும். (1 கொரிந்தியர் 10:13) நமக்கு உதவுவதற்காக யெகோவா எப்போதும் தயாராய் இருக்கிறார் என்பது ஆறுதலளிக்கிறது, அல்லவா?
16 ஆம், எப்படிப்பட்ட இருண்ட பள்ளத்தாக்காய் இருந்தாலும், அதை நாம் தனியாகக் கடக்க வேண்டியிருக்காது. நம்முடைய மேய்ப்பர் நம்மோடு இருக்கிறார், நமக்கு உதவுகிறார், அவர் உதவுகிற வழிகள் ஒருவேளை ஆரம்பத்தில் நமக்கு முழுமையாகப் புரியாதிருக்கலாம். கிறிஸ்தவ மூப்பர் ஒருவருடைய அனுபவத்தைக் கவனியுங்கள்; அவருடைய மூளையில் ஒரு கட்டி வேகமாக வளர்ந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா என்மீது கோபமாக இருக்கிறாரோ, என்மீது அவருக்குச் சுத்தமாக அன்பே இல்லையோ என்றெல்லாம் நினைத்து ஆரம்பத்தில் நான் குழம்பியது உண்மைதான். ஆனால், என்ன நடந்தாலும் யெகோவாவிடமிருந்து விலகிப்போகாதிருக்க திடத்தீர்மானமாய் இருந்தேன். விலகிப்போவதற்குப் பதிலாக, என்னுடைய கவலைகளையெல்லாம் சொல்லி அவரிடம் மன்றாடினேன். அவர் எனக்கு உதவினார், பெரும்பாலும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மூலம் அவர் என்னைத் தேற்றினார். கொடிய வியாதிகள் வந்தபோது அவர்கள் எப்படியெல்லாம் சகித்தார்கள், சமாளித்தார்கள் என்பதைப் பற்றிய பயனுள்ள விஷயங்களை தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து என்னிடம் சொன்னார்கள். என்னைப் போல் இன்னும் எத்தனையோ பேர் இத்தகைய வியாதியில் அவதிப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய சமநிலையான கருத்துகள் எனக்கு நினைப்பூட்டின. சிலர் நடைமுறையான உதவிகள் அளித்ததும், நெகிழ வைக்கும் விதத்தில் உதவிகள் அளிக்க முன்வந்ததும், யெகோவா என்மீது கோபமாய் இல்லை என்ற உறுதியை எனக்குத் தந்தன. என்னதான் இருந்தாலும், இந்த வியாதியோடு நான் போராடியாக வேண்டும், கடைசியில் என்ன நடக்குமோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், யெகோவா என் கூடவே இருக்கிறார், இந்தச் சோதனையைச் சமாளிக்க தொடர்ந்து எனக்கு உதவுவார்.”
‘எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்’
17. சங்கீதம் 23:5-ல், யெகோவாவை தாவீது எவ்வாறு விவரிக்கிறார், மேய்ப்பனுடைய உவமையோடு இது ஏன் ஒத்துப்போகிறது?
17 தன்னுடைய மேய்ப்பர்மீது தனக்கிருக்கும் நம்பிக்கைக்கான மூன்றாவது காரணத்தை தாவீது இப்போது குறிப்பிடுகிறார்: யெகோவா தமது ஆடுகளைப் போஷிக்கிறார், அதுவும் அபரிமிதமாகப் போஷிக்கிறார். அதைப் பற்றி தாவீது இவ்வாறு எழுதுகிறார்: “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” (சங்கீதம் 23:5) இந்த வசனத்தில், உணவையும் பானத்தையும் அபரிமிதமாகத் தந்து உபசரிக்கிற தாராள குணமுடைய ஒருவராக தன் மேய்ப்பரை தாவீது விவரிக்கிறார். கரிசனைமிக்க மேய்ப்பர் மற்றும் தாராளமாய் உபசரிப்பவர்—இந்த இரண்டு உவமைகளும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன. ஒரு நல்ல மேய்ப்பன் தன்னுடைய ஆடுகள் ‘எதிலும் குறைவுபடக் கூடாது’ என்பதற்காகச் செழுமையான புல்வெளி எங்கிருக்கிறது என்றும், போதுமான தண்ணீர் எங்கு கிடைக்குமென்றும் தெரிந்துவைத்திருப்பார் தானே!—சங்கீதம் 23:1, 2; NW.
18. யெகோவா தாராளமாக உபசரிப்பவர் என்பதை எது காட்டுகிறது?
18 நம்முடைய மேய்ப்பர் தாராளமாக உபசரிப்பவரா? அதிலென்ன சந்தேகம்! இப்போது நாம் அனுபவித்துவரும் ஆன்மீக உணவின் தரத்தையும், அளவையும், வகைகளையும் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின் மூலம் யெகோவா நமக்குப் பயனுள்ள பிரசுரங்களையும், சபை கூட்டங்கள், வட்டார, மற்றும் மாவட்ட மாநாடுகள் ஆகியவற்றின் மூலமாக அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளையும் அளித்து வந்திருக்கிறார்; இவையெல்லாமே நம்முடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. (மத்தேயு 24:45-47, NW) நிச்சயமாக, ஆன்மீக உணவுக்குப் பஞ்சமே இல்லை. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்’ கோடிக்கணக்கான பைபிள்களையும் பைபிள் படிப்புப் புத்தகங்களையும் தயாரித்திருக்கின்றனர்; அத்தகைய பிரசுரங்கள் இப்போது 413 மொழிகளில் கிடைக்கின்றன. இத்தகைய ஆன்மீக உணவை யெகோவா விதவிதமாக அளித்திருக்கிறார்—‘பாலிலிருந்து,’ அதாவது பைபிளின் அடிப்படைப் போதனைகளிலிருந்து, ‘பலமான ஆகாரமாகிய’ கருத்தாழமிக்க போதனைகள் வரைக்கும் ஏகப்பட்ட விதங்களில் பிரசுரங்களை அளித்திருக்கிறார். (எபிரெயர் 5:11-14) எனவே, பிரச்சினைகளைச் சந்திக்கையில் அல்லது தீர்மானங்களை எடுக்கையில், நமக்குக் குறிப்பாக எது தேவையோ அதை அந்தப் பிரசுரங்களில் பெரும்பாலும் நாம் காணலாம். அப்படிப்பட்ட ஆன்மீக உணவுமட்டும் இல்லாதிருந்தால் நாம் எப்படியெல்லாம் தவித்திருப்போம்? நம்முடைய மேய்ப்பர் உண்மையிலேயே மாபெரும் கொடைவள்ளல்தான்!—ஏசாயா 25:6; 65:13.
‘நான் யெகோவாவுடைய வீட்டிலே நிலைத்திருப்பேன்’
19, 20. (அ) சங்கீதம் 23:6-ல், தாவீது என்ன நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார், அந்த நம்பிக்கையை நாமும் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
19 மேய்ப்பரும் கொடைவள்ளலுமான கடவுளுடைய வழிகளை ஆழ்ந்து சிந்தித்த பிறகு, தாவீது இவ்வாறு முடிக்கிறார்: “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.” (சங்கீதம் 23:6) நன்றியும் விசுவாசமும் நிறைந்த இருதயத்திலிருந்து தாவீது பேசுகிறார்—கடந்த காலத்திற்காக நன்றியையும், எதிர்காலத்திற்கான விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறார். இந்த முன்னாள் மேய்ப்பன், தன்னுடைய பரலோக மேய்ப்பரோடு நெருங்கி இருக்கும்வரை, அவருடைய வீட்டிலே குடியிருப்பது போல் நெருங்கி இருக்கும்வரை, அவரது அன்பான கவனிப்பை எப்போதும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்து பாதுகாப்பாய் உணருகிறார்.
20 சங்கீதம் 23-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த அழகான வர்ணனைக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! யெகோவா தமது ஆடுகளை எப்படி வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார், உணவளிக்கிறார் என்பதையெல்லாம் விவரிக்க தாவீது மிகமிகப் பொருத்தமான ஒப்புமையைத் தேர்ந்தெடுத்தார். மேய்ப்பரான யெகோவாமீது நமக்கும்கூட நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே தாவீதின் இந்த அன்பான வார்த்தைகள் பைபிளில் பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ளன. ஆம், யெகோவாவோடு நெருங்கி இருக்கும்வரை, ஓர் அன்பான மேய்ப்பரைப் போல அவர் நம்மை ‘நீடித்த நாட்களுக்கு,’ ஏன் நித்திய நித்தியத்திற்கும்கூட அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். ஆனால், நமது மிகப் பெரிய மேய்ப்பரான யெகோவாவோடு நடப்பதற்கான பொறுப்பு அவருடைய ஆடுகளான நமக்கு இருக்கிறது. இதில் என்னென்ன உட்பட்டிருக்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a ஆதியாகமம் 29:7; யோபு 30:1; எரேமியா 33:13; லூக்கா 15:4; யோவான் 10:3, 4 ஆகிய வசனங்களைக் காண்க.
b ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக யெகோவாவைப் புகழ்ந்துபாடி, தாவீது ஏராளமான பாடல்கள் இயற்றினார்.—உதாரணத்திற்கு சங்கீதம் 18, 34, 56, 57, 59, 63 ஆகியவற்றின் மேற்குறிப்பைக் காண்க.
c அக்டோபர் 1, 2003 காவற்கோபுரத்தில் “தெய்வத் தலையீடு—நாம் எதை எதிர்பார்க்கலாம்?” என்ற கட்டுரையைக் காண்க.
நினைவிருக்கிறதா?
• யெகோவாவை ஒரு மேய்ப்பனோடு தாவீது ஒப்பிட்டுப்பேசியது ஏன் பொருத்தமானது?
• கரிசனைமிக்க விதத்தில் யெகோவா எப்படி நம்மை வழிநடத்துகிறார்?
• சோதனைகளின்போது சகித்திருக்க யெகோவா எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறார்?
• யெகோவா தாராளமாக உபசரிப்பவர் என்பதை எது காட்டுகிறது?
[பக்கம் 18-ன் படம்]
இஸ்ரவேலிலிருந்த ஒரு மேய்ப்பனைப் போல், யெகோவா தமது ஆடுகளை வழிநடத்துகிறார்