வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உடன்படிக்கைப் பெட்டியில் இரண்டு கற்பலகைகள் மட்டும் இருந்ததா, அல்லது வேறு ஏதேனும் இருந்ததா?
பொ.ச.மு. 1026-ல் சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பிரதிஷ்டையின்போது உடன்படிக்கைப் பெட்டியில் என்ன இருந்தது? “இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.” (2 நாளாகமம் 5:10) என்றாலும், அது எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
“இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.” (யாத்திராகமம் 19:1, 2) அதன் பிறகு, மோசே சீனாய் மலைமீது ஏறி கட்டளைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளைக் கொண்டுவந்தார். அவர் இவ்வாறு விவரிக்கிறார்: “அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.” (உபாகமம் 10:5) அந்தப் பெட்டி, நியாயப்பிரமாணப் பலகைகளை வைப்பதற்காக மோசேயிடம் யெகோவா செய்யச் சொன்ன மரப்பெட்டி ஆகும், அது தற்காலிகமான பெட்டியாகத்தான் இருந்தது. (உபாகமம் 10:1) உடன்படிக்கைப் பெட்டியோ, சுமார் பொ.ச.மு. 1513-ன் முடிவுவரை செய்யப்படவில்லை.
எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, இஸ்ரவேலர் உணவுக்காக முறுமுறுக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு யெகோவா மன்னாவைக் கொடுத்தார். (யாத்திராகமம் 12:17, 18; 16:1-5) அச்சமயத்தில், ஆரோனிடம் மோசே இவ்வாறு அறிவுறுத்தினார்: “நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை.” அந்தப் பதிவு தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் [முக்கியமான ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் பெட்டியில்] வைத்தான்.” (யாத்திராகமம் 16:33, 34) சந்தேகமின்றி அந்தச் சமயத்தில் மன்னாவை ஆரோன் ஒரு பாத்திரத்தில் சேகரித்தார், ஆனால் மோசே உடன்படிக்கைப் பெட்டியைச் செய்து முடித்து, அதில் கற்பலகைகளை வைக்கும்வரை அதை அவர் சாட்சி சந்நிதியில் வைக்க வேண்டியிருந்தது.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, பொ.ச.மு. 1513-ன் பிற்பகுதியில் உடன்படிக்கைப் பெட்டி செய்து முடிக்கப்பட்டது. வெகு காலத்திற்குப் பிறகு, அதாவது கோராகும் மற்றவர்களும் கலகம் செய்த பிறகு ஆரோனின் கோலும் அதில் வைக்கப்பட்டது. ‘உடன்படிக்கைப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன’ என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்.—எபிரெயர் 9:4.
இஸ்ரவேலர் 40 வருடங்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, அவர்களுக்குக் கடவுள் கொடுத்த உணவுதான் மன்னா. ஆனால், அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட ‘தேசத்தின் தானியத்தை புசிக்க’ ஆரம்பித்த பிறகு மன்னா நிறுத்தப்பட்டது. (யோசுவா 5:11, 12) ஆரோனின் கோல் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது; கலகக்கார சந்ததியாருக்கு விரோதமான ஓர் அடையாளமாக அல்லது அத்தாட்சியாக அது இருந்தது. அப்படியானால், வனாந்தரத்தில் அவர்கள் பயணம் செய்த காலம் வரைக்குமாவது அந்தக் கோல் வைக்கப்பட்டிருக்க வேண்டுமென இது தெரிவிக்கிறது. ஆக, இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்த பின்பு, ஆனால் சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பிரதிஷ்டைக்கு முன்பு, ஆரோனின் கோலும் மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும் உடன்படிக்கைப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகத் தெரிகிறது.