“இன்னும் நிறைய சொல்லு!”
ரஷ்யாவில் நிஸ்லாப்னாயா நகரில் ஓர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய இலக்கிய வகுப்பில் மிக்காயில் பூல்காகஃப் என்ற ரஷ்ய எழுத்தாளரின் படைப்புகளைப் படித்துவந்தார்கள். அவருடைய ஒரு நாவல், இயேசுவை இழிவாக சித்தரித்தது, சாத்தானையோ வீரனாக வர்ணித்தது. வகுப்பு முடிந்த பிறகு, அந்த நாவலின் பேரில் தேர்வு எழுதும்படி மாணவர்களிடம் டீச்சர் சொன்னார். ஆனால், யெகோவாவின் சாட்சியாய் இருந்த அன்ட்ரே என்ற 16 வயது மாணவன், அத்தேர்வை எழுதுவதில் தனக்கு விலக்கு அளிக்கும்படி ஆசிரியையிடம் தயவாகக் கேட்டுக்கொண்டான். ஏனென்றால், அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கு அவன் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக இயேசுவைக் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதாகக் கூறினான். ஆசிரியையும் ஒத்துக்கொண்டார்.
அந்தக் கட்டுரையில் அன்ட்ரே, மற்றவர்களுடைய கருத்தை தான் மதிப்பதாகவும், இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நான்கு சுவிசேஷங்களில் ஏதாவது ஒன்றைப் படிப்பதே சிறந்த வழியென கண்டுபிடித்திருப்பதாகவும் விளக்கியிருந்தான். அப்படிச் செய்வதன் மூலம் “நேரில்கண்ட சாட்சிகளால் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்” என்று அவன் எழுதியிருந்தான். “சாத்தான் வர்ணிக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சாத்தானை வீரனாக வர்ணிக்கிற புத்தகத்தை சிலர் நகைச்சுவையாக கருதலாம். ஆனால் எனக்கு அது நகைச்சுவை அல்ல” என்றும் எழுதியிருந்தான். சாத்தான் ஒரு பொல்லாத ஆவி சிருஷ்டி, கடவுளிடமிருந்து விலகிச்சென்றவன், அவனே மனிதகுலத்திற்குக் கொடுமை இழைத்தவன், துயரத்திற்கெல்லாம் காரணமானவன் என்பதை விளக்கி எழுதியிருந்தான். “இந்தப் புத்தகத்தைப் படிப்பதனால் எனக்கு எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கென்று, எழுத்தாளர் பூல்காகஃப்மீது எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. ஆனால், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு பைபிளைப் படிக்கவே நான் விரும்புகிறேன்” என்று எழுதி முடித்தான்.
அன்ட்ரேயின் கட்டுரை ஆசிரியைக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எனவே, இயேசுவைப் பற்றி ஓர் அறிக்கையைத் தயாரிக்கும்படி சொன்னார். அன்ட்ரே உடனடியாக ஒப்புக்கொண்டான். அடுத்த இலக்கிய வகுப்பின்போது அன்ட்ரே தன் அறிக்கையை வகுப்பு மாணவர்களுக்கு முன்பாக வாசித்துக்காட்டினான். இயேசுவே எக்காலத்திலும் வாழ்ந்தவருள் தலைசிறந்தவர் என்று தான் நினைப்பதற்கான காரணத்தை விளக்கினான். பிறகு, இயேசுவின் மரணத்தைக் குறித்து பைபிளிலுள்ள மத்தேயு புத்தகத்திலிருந்து ஓர் அதிகாரத்தை வாசித்துக்காட்டினான். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அறிக்கையை முடித்துக்கொள்ள நினைத்தான், ஆனால் மற்ற மாணவர்களோ, “அப்புறம் என்ன ஆச்சு? இன்னும் நிறைய சொல்லு!” என்று ஆவலோடு கேட்டார்கள். அதனால் அதே மத்தேயு புத்தகத்திலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதல் பதிவையும் வாசித்துக்காட்டினான்.
அந்த அறிக்கையை வாசித்து முடித்த பிறகு, இயேசுவையும் யெகோவாவையும் பற்றி மாணவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். “ஞானத்திற்காக யெகோவாவிடம் ஜெபித்தேன், அவர் என் ஜெபத்திற்குப் பதிலளித்தார். அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடிந்தது!” என்கிறான் அன்ட்ரே. வகுப்பு முடிந்த பிறகு, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்a புத்தகத்தை அன்ட்ரே தன் ஆசிரியைக்கு கொடுத்தான், அவர் அதை சந்தோஷமாக வாங்கிக்கொண்டார். “என்னுடைய அறிக்கைக்கு அவர் அதிக மதிப்பெண் கொடுத்தார், சில விஷயங்களை நான் உறுதியாய் நம்பியதற்காகவும் அவற்றைத் தயங்காமல் மற்றவர்களுக்குச் சொன்னதற்காகவும் என்னைப் பாராட்டினார். என்னுடைய நம்பிக்கைகள் சிலவற்றை தான் ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார்” என்று அன்ட்ரே குறிப்பிட்டான்.
யெகோவாவையும் அவருடைய மகனான இயேசு கிறிஸ்துவையும் குறித்து தவறாகப் பேசுகிற புத்தகத்தைப் படிக்க மறுத்து, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்கு செவிகொடுத்ததற்காக சந்தோஷப்படுகிறான் அன்ட்ரே. அவனுடைய தீர்மானம் வேதப்பூர்வமற்ற கருத்துகளிலிருந்து அவனைப் பாதுகாத்திருப்பது மட்டுமல்லாமல், அதிமுக்கியமான பைபிள் சத்தியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அருமையான வாய்ப்பை அளித்திருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.