‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்’
“பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
1, 2. (அ) லோத்துவுக்கு சோதோமில் ஏற்பட்ட அனுபவம் நமக்கு எதைக் கற்பிக்கிறது? (ஆ) ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்’ என்பதன் அர்த்தம் என்ன?
மனதுக்குப் பிடித்த ஒரு பிராந்தியத்தை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி லோத்துவிடம் ஆபிரகாம் சொன்னார்; அப்போது, ‘யெகோவாவின் தோட்டத்தைப் போலிருந்த’ நீர்வளம் பொருந்திய பகுதி லோத்துவின் கண்களைக் கவர்ந்தது. அவரது குடும்பத்தார் குடியேறுவதற்கு மிகப் பொருத்தமான இடம்போல் அது தெரிந்திருக்கும்; ஆகவே அவர் “யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு” சோதோமுக்கு அருகே கூடாரம் போட்டார். ஆனால் வெளித் தோற்றம் ஏமாற்றத்தையே அளித்தது, ஏனென்றால் அருகே வசித்துவந்த “சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.” (ஆதியாகமம் 13:7-13) நாள் ஆகஆக லோத்துவும் அவரது குடும்பத்தாரும் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். இறுதியில் அவரும் அவரது மகள்களும் ஒரு குகையில் வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. (ஆதியாகமம் 19:17, 23-26, 30) ஆரம்பத்தில் எது அவருக்கு மிகவும் நல்லதாகத் தோன்றியதோ அதுவே கடைசியில் மிகவும் தீயதாக ஆகிவிட்டது.
2 லோத்துவின் அனுபவம் இன்று கடவுளுடைய ஊழியர்களுக்குப் பாடமாக அமைகிறது. நாம் ஏதேனும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கையில், அதில் என்ன ஆபத்துக்கள் மறைந்திருக்கலாம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்; முதலில் ஏற்படும் அபிப்பிராயத்தையே நம்பி ஏமாந்துபோகாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆகவேதான், ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்’ என கடவுளுடைய வார்த்தை பொருத்தமாகவே நம்மை ஊக்குவிக்கிறது. (1 பேதுரு 1:13) இதற்குரிய கிரேக்க வார்த்தையின் நேரடியான அர்த்தம், ‘நிதான புத்தி’ ஆகும். பைபிள் அறிஞரான ஆர்.சி.எச். லென்ஸ்கி அவ்வார்த்தையை இவ்வாறு விவரிக்கிறார்: “காரியங்களைச் சரியாக சீர்தூக்கிப் பார்த்து மதிப்பிடவும், அதன் மூலம் சரியான தீர்மானங்களை எடுக்கவும் நமக்கு உதவுகிற பதட்டமில்லாத, தடுமாற்றமில்லாத புத்தி.” இப்போது, நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டிய சில சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்கலாம்.
தொழில் சம்பந்தமான வாய்ப்பை சீர்தூக்கிப்பார்த்தல்
3. தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கையில் நாம் ஏன் உஷாராய் இருக்க வேண்டும்?
3 மதிப்புமரியாதை பெற்ற ஒருவர்—ஒருவேளை யெகோவாவின் வணக்கத்தாரிலேயே ஒருவர்—ஏதேனும் தொழில் செய்யும் வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறார் என வைத்துக்கொள்ளலாம். நிச்சயம் லாபம் கிடைக்கும் என அடித்துச் சொல்கிறார், வாய்ப்பை நழுவவிடாமல் உடனடியாக ஏற்றுக்கொள்ளும்படி உந்துவிக்கிறார். அதைக் கேட்டவுடன், எப்படியெல்லாம் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வசதியாக வாழலாமென நீங்கள் கற்பனை செய்ய ஆரம்பிக்கலாம்; அதோடு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டால் ஆவிக்குரிய காரியங்களுக்கு அதிக நேரம் செலவிட முடியும் என்றுகூட நினைக்க ஆரம்பிக்கலாம். ஆனால் நீதிமொழிகள் 14:15-ல் காணப்படும் எச்சரிப்பைக் கவனியுங்கள்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” பொதுவாக, புதிய தொழிலை ஆரம்பிக்கப்போகும் பூரிப்பில், ஒருவர் அதிலுள்ள ‘ரிஸ்க்குகளை’ குறைவாக மதிப்பிட்டுவிடலாம், ஆபத்துக்களைப் புறக்கணித்துவிடலாம், அதோடு, அத்தொழிலிலுள்ள நிச்சயமில்லாத அம்சங்களை முழுமையாக அலசிப்பார்க்காமல் விட்டுவிடலாம். (யாக்கோபு 4:13, 14) அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், நீங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருப்பது எவ்வளவு அவசியம்!
4. ஒரு தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்பை மதிப்பிடுகையில் எவ்வாறு ‘நம் நடையின்மேல் கவனமாயிருக்கலாம்’?
4 விவேகமுள்ள ஒருவர், ஏதேனும் தொழிலில் இறங்குவதற்கு முன்பு அதைப் பற்றி கவனமாக அலசி ஆராய்வார். (நீதிமொழிகள் 21:5) அப்போது, அந்தத் தொழிலில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள் பெரும்பாலும் தெரியவரும். இந்தச் சூழ்நிலையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: ஒருவர் ஏதோவொரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்க நினைக்கிறார்; நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கும் அதிக லாபமிருப்பதாகச் சொல்கிறார். இது அருமையான வாய்ப்பாக உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் இதில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன? தொழில் நன்றாக நடந்தாலும் நடக்காவிட்டாலும், கடனைத் திருப்பித்தர அவர் சம்மதித்திருக்கிறாரா? அல்லது லாபம் கிடைப்பதைப் பொறுத்துத்தான் கடனை அடைப்பாரா? வேறு வார்த்தைகளில் சொன்னால், அந்தத் தொழில் நஷ்டத்தில் ஓடினால் உங்கள் பணத்தைப் பறிகொடுக்க நீங்கள் தயாரா? இவ்வாறும் கேட்டுக்கொள்ளுங்கள்: “இப்படிப்பட்டவர்கள் ஏன் தனி ஆட்களிடம் கடன் கேட்கிறார்கள்? ஒருவேளை அந்தத் தொழிலில் ‘ரிஸ்க்’ அதிகம் என வங்கிகள் நினைப்பதாலா?” என்னென்ன ஆபத்துக்கள் மறைந்திருக்கலாமென நேரமெடுத்துச் சிந்திப்பது, அந்த வாய்ப்பை நடைமுறையான கண்ணோட்டத்தில் மதிப்பிட உங்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 13:16; 22:3.
5. (அ) எரேமியா ஒரு நிலத்தை வாங்கியபோது என்ன ஞானமான செயலைச் செய்தார்? (ஆ) தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் முறைப்படி எழுத்தில் வைத்துக்கொள்வது ஏன் பயனுள்ளது?
5 தீர்க்கதரிசியாகிய எரேமியா, சக வணக்கத்தாராகிய அவரது பெரிய தகப்பனின் மகனிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கியபோது, சாட்சிகளுக்கு முன்பாக அதைப் பத்திரத்தில் எழுதி வைத்தார். (எரேமியா 32:9-12) இன்றும் ஞானமுள்ள நபர், தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும்—உறவினர்களோடும் உடன் வணக்கத்தாரோடும் செய்கிற ஒப்பந்தங்களையும்கூட—முறைப்படி எழுத்தில் வைத்துக் கொள்வார்.a நன்கு தயாரிக்கப்பட்டு, தெளிவாக எழுதி வைக்கப்படும் ஒப்பந்தம், மனஸ்தாபங்களைத் தவிர்த்து ஒற்றுமை காக்க உதவும். மறுபட்சத்தில், ஒப்பந்தத்தை எழுத்தில் வைத்துக்கொள்ளாதபோது, யெகோவாவின் ஊழியர்களுக்கு இடையே தொழில் ரீதியான பிரச்சினைகள் வருவதற்கு அது பெரும்பாலும் ஒரு காரணமாகிவிடுகிறது. வருத்தகரமாக, அப்படிப்பட்ட பிரச்சினைகளால் வேதனையும், மனக்கசப்பும், ஆன்மீக பாதிப்பும்கூட ஏற்படுகின்றன.
6. நாம் ஏன் பேராசையைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
6 பேராசையைக் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (லூக்கா 12:15) கொள்ளை லாபம் கிடைக்கும் என்ற ஆசைக்கனவு, புதிய தொழில் துவங்கும் விஷப்பரிட்சையில் உட்பட்டுள்ள ஆபத்துக்களுக்கு நம் கண்களை மறைத்துவிடும். யெகோவாவின் அமைப்பில் முக்கிய பொறுப்புகளைப் பெற்றிருந்த சிலர்கூட இந்தக் கண்ணியில் சிக்கியிருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்.” (எபிரெயர் 13:5) ஆகவே ஏதேனும் ஒரு தொழில் செய்ய நினைக்கும் கிறிஸ்தவர், ‘அதில் கால்வைப்பது உண்மையிலேயே அவசியமா?’ எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். யெகோவாவின் வணக்கத்தை மையமாகக் கொண்ட எளிய வாழ்க்கை வாழ்வது, ‘எல்லாத் தீமையிலிருந்தும்’ நம்மைக் காக்கும்.—1 தீமோத்தேயு 6:6-10.
மணமாகாத கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்கள்
7. (அ) மணமாகாத கிறிஸ்தவர்கள் அநேகர் என்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்? (ஆ) மணத்துணையைத் தேர்ந்தெடுப்பது, கடவுளுக்கு உத்தமமாக இருப்பதோடு எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?
7 யெகோவாவின் ஊழியர்களில் அநேகர் திருமணம் செய்துகொள்ள ஏங்குகிறார்கள், ஆனால் பொருத்தமான துணை கிடைக்காததால் இன்னும் காத்திருக்கிறார்கள். சில நாடுகளில், திருமணத்திற்கு சமுதாயம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. இருந்தாலும் சக வணக்கத்தார் மத்தியில் பொருத்தமான மணத்துணையைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். (நீதிமொழிகள் 13:12) ஆனால், ‘கர்த்தருக்குட்பட்டவரை’ மட்டுமே மணமுடிக்கும்படியான பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால்தான் யெகோவாவுக்கு உத்தமமாக இருக்க முடியும் என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:39) ஆகவே, மணமாகாத கிறிஸ்தவர்கள் பல அழுத்தங்களையும் ஆசைகளையும் சமாளித்து உறுதியாக நிலைத்திருப்பதற்கு, தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
8. சூலேமியப் பெண் என்ன தொல்லையை எதிர்ப்பட்டாள், அதேபோன்ற பிரச்சினையை இன்றும் கிறிஸ்தவப் பெண்கள் எவ்வாறு எதிர்ப்படலாம்?
8 சாலொமோனின் உன்னதப்பாட்டில் விவரிக்கப்பட்டிருக்கும் எளிமைமிகு கிராமத்து மங்கையான சூலேமியப் பெண், ராஜாவின் ஆசைப்பார்வையில் சிக்கினாள். அவர் செல்வத்தையும் அந்தஸ்தையும் அழகையும் விமரிசையாகக் காட்டி அவளை வசீகரிக்க முயன்றார்; ஆனால் அவளோ ஏற்கெனவே வேறொரு வாலிபனைக் காதலித்து வந்தாள். (உன்னதப்பாட்டு 1:9-11; 3:7-10; 6:8-10, 13) நீங்கள் ஒரு கிறிஸ்தவப் பெண்ணா? ஒருவேளை நீங்களும் யாராவது ஒருவரது ஆசைப்பார்வையில் சிக்கும் தொல்லையை எதிர்ப்படலாம். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் யாராவது ஒருவர்—ஒருவேளை உயர்ந்த பதவியில் இருப்பவர்—உங்களிடம் தேனொழுகப் பேச ஆரம்பிக்கலாம், வலியவந்து உங்களுக்கு உதவிகள் செய்யலாம், உங்களோடு இருக்க சந்தர்ப்பத்தைத் தேடலாம். இப்படி அவர் உங்களை ‘விசேஷமாக’ கவனித்துக்கொள்கிறார் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள். அப்படிப்பட்ட ஆட்கள் காதல்வயப்பட்டு அல்லது காமத்தால் தூண்டப்பட்டு அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என எப்போதும் சொல்ல முடியாதுதான்; ஆயினும் பெரும்பாலும் அதுவே உண்மையாக இருக்கிறது. சூலேமியப் பெண்ணைப் போல் நீங்கள் ஒரு ‘மதிலாக’ இருங்கள். (உன்னதப்பாட்டு 8:4, 10) காம உணர்வோடு அணுகும் ஆண்களை எவ்விதத்திலும் உங்களை நெருங்க விடாதீர்கள். ஆரம்பத்திலிருந்தே, நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை உங்களுடன் வேலை செய்பவர்களிடம் சொல்லிவிடுங்கள்; அதோடு, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களிடம் சாட்சி கொடுங்கள். அது உங்களுக்குப் பாதுகாப்பாக அமையும்.
9. இன்டர்நெட்டில் முன்பின் தெரியாதவர்களோடு பழக ஆரம்பிப்பதில் உள்ள சில ஆபத்துக்கள் யாவை? (பக்கம் 25-ல் உள்ள பெட்டியையும் காண்க.)
9 மணமாகாதவர்களுக்கு மணத்துணையைத் தேடித்தரும் இன்டர்நெட் வெப் சைட்டுகள் பிரபலமாகிவருகின்றன. நேரில் சந்திக்க முடியாத ஆட்களை இந்த வெப் சைட்டுகளின் மூலம் ‘சந்தித்துப்’ பழகலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் முன்பின் தெரியாதவர்களோடு கண்மூடித்தனமாகப் பழக ஆரம்பித்தால் விபரீதங்களே மிஞ்சும். இன்டர்நெட்டில் உண்மை எது பொய் எது என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டம். (சங்கீதம் 26:4, NW) யெகோவாவின் சாட்சி என சொல்லிக்கொள்ளும் எல்லாருமே உண்மையில் அவ்வாறு இருப்பதில்லை. அதோடு, இன்டர்நெட்டில் டேட்டிங் செய்கையில் வெகு சீக்கிரத்தில் நெருக்கம் அதிகரிக்கலாம்; அது நம் விவேகத்தைக் குலைத்துவிடலாம். (நீதிமொழிகள் 28:26) ஆகவே, இன்டர்நெட்டிலும் சரி வேறெந்த விதத்திலும் சரி, முன்பின் தெரியாதவர்களோடு நெருங்கிப் பழக ஆரம்பிப்பது புத்திசாலித்தனமானது அல்ல.—1 கொரிந்தியர் 15:33, NW.
10. மணமாகாத கிறிஸ்தவர்களை மற்றவர்கள் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்?
10 யெகோவா தம் ஊழியர்களிடம் “மிகக் கனிவான பாசத்தைக்” காட்டுகிறார். (யாக்கோபு 5:11, NW) சந்தர்ப்ப சூழ்நிலையால் மணமாகாமல் இருக்கும் கிறிஸ்தவர்கள் சவால்களைச் சந்திப்பதால் சிலசமயம் துவண்டுபோகலாம் என்பதை அவர் அறிந்திருக்கிறார், ஆகவே அவர்களுடைய உத்தமப் போக்கை அவர் உயர்வாக மதிக்கிறார். மணமாகாதவர்களை மற்றவர்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்? கீழ்ப்படிதலையும் சுயதியாகத்தையும் காட்டுவதற்காக அவர்களை அடிக்கடி பாராட்டலாம். (நியாயாதிபதிகள் 11:39, 40, NW) புத்துணர்ச்சி பெற சிலருடன் சேர்ந்து ஏதேனும் விதத்தில் பொழுதைப் போக்கத் திட்டமிட்டிருந்தால் அதில் இவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். சமீபத்தில் நீங்கள் அப்படிச் செய்திருக்கிறீர்களா? மேலும், நாம் அவர்களுக்காக ஜெபம் செய்யலாம்; அவர்கள் ஆன்மீகத்தில் சமநிலை இழந்துவிடாதிருக்கவும் கடவுளுடைய சேவையில் சந்தோஷம் காணவும் உதவுமாறு ஜெபத்தில் கேட்கலாம். இவ்வாறு உள்ளப்பூர்வ அக்கறை காட்டுவதன் மூலம், யெகோவாவைப் போலவே நாமும் இந்த உத்தம ஊழியர்களை உயர்வாக மதிக்கிறோம் என்பதைக் காட்டுவோமாக.—சங்கீதம் 37:28.
உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளித்தல்
11. பயங்கர வியாதிகளால் ஏற்படும் சவால்கள் என்னென்ன?
11 நமக்கு அல்லது நம் அன்புக்குரியவருக்கு பயங்கர வியாதி ஏதேனும் வருகையில் அது எவ்வளவு வருத்தம் தருகிறது! (ஏசாயா 38:1-3) சிறந்த சிகிச்சையைப் பெற விரும்பினாலும், நாம் பைபிள் நியமங்களை மீறாதிருப்பது முக்கியம். உதாரணமாக, இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டுமென்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்கிறார்கள்; மேலும், ஆவியுலகத்தொடர்போடு சம்பந்தப்பட்ட எல்லா சிகிச்சைமுறைகளையும் உடல்நலப் பராமரிப்பு முறைகளையும் தவிர்க்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29; கலாத்தியர் 5:19-21) இருந்தாலும், மருத்துவத்தைப் பற்றி அதிகம் தெரியாத நம்மில் அநேகருக்கு, பல்வேறு சிகிச்சைமுறைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம், அது நம்மைத் திக்குமுக்காட வைக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க எது நமக்கு உதவும்?
12. சிகிச்சைமுறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கையில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு சமநிலையைக் காத்துக்கொள்ளலாம்?
12 பைபிளிலும் கிறிஸ்தவப் பிரசுரங்களிலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம் ‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.’ (நீதிமொழிகள் 14:15) உலகின் சில பகுதிகளில் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் காண்பது அரிது; மூலிகை வைத்தியம் மட்டுமே அங்கு கிடைக்கலாம். அப்படிப்பட்ட சிகிச்சையைப் பெற நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால், ஆங்கில காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1987, பக்கங்கள் 26-9-ல் உள்ள தகவலைப் பார்ப்பது உதவியாக இருக்கும். அந்த சிகிச்சைமுறையில் உட்பட்டுள்ள ஆபத்துக்களைக் குறித்து அது எச்சரிக்கிறது. உதாரணத்திற்கு, பின்வரும் விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்: அந்த மூலிகை வைத்தியர் ஆவியுலகத்தொடர்பு உள்ளவரா? கடவுட்களின் (அல்லது மூதாதையருடைய ஆவிகளின்) கோபத்தால் அல்லது எதிரிகளின் செய்வினையால் வியாதியும் மரணமும் வருகின்றன என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் சிகிச்சை அளிக்கிறாரா? மருந்துகளைத் தயாரிக்கையில் அல்லது கொடுக்கையில் அவர் பலி செலுத்துகிறாரா, மந்திரம் ஓதுகிறாரா, அல்லது ஆவி உலகுடன் சம்பந்தப்பட்ட பிற சடங்குகளைச் செய்கிறாரா? (உபாகமம் 18:10-12) இவ்வாறெல்லாம் நாம் கூர்ந்து ஆராய்வது, ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பின்வரும் ஆலோசனையைக் கடைப்பிடிக்க உதவும்: “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.”b (1 தெசலோனிக்கேயர் 5:21) மேலும், சமநிலையைக் காத்துக்கொள்ள அது நமக்கு உதவும்.
13, 14. (அ) உடல்நலத்தைப் பராமரிப்பதில் நாம் எவ்வாறு நியாயத்தன்மையைக் காட்டலாம்? (ஆ) உடல்நலம், மருத்துவம் சம்பந்தமாக மற்றவர்களுடன் பேசும்போது நாம் ஏன் நியாயத்தன்மையைக் காட்ட வேண்டும்?
13 உடல்நலப் பராமரிப்பு உட்பட, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நாம் நியாயத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். (பிலிப்பியர் 4:5, NW) நம் உடல்நலத்தைப் பராமரிப்பதில் சமநிலையைக் காத்துக்கொள்வது, விலைமதிப்புள்ள பரிசாகிய உயிருக்கு நன்றியுணர்வு காட்டுவதாக இருக்கும். உடல்நலப் பிரச்சினைகளை நாம் எதிர்ப்படும்போது அவற்றிற்கு உரிய கவனம் செலுத்துவது தகுந்ததே. இருந்தாலும், ‘ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு’ கடவுள் நியமித்துள்ள காலம் வரும்வரை பரிபூரண ஆரோக்கியத்தை நாம் பெற முடியாது. (வெளிப்படுத்துதல் 22:1, 2) ஆகவே, உடல்நலத்தைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டு, மிக முக்கியமான ஆன்மீகத் தேவைகளைப் புறக்கணித்துவிடாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும்.—மத்தேயு 5:3, NW; பிலிப்பியர் 1:10, NW.
14 உடல்நலம், மருத்துவம் சம்பந்தமாக மற்றவர்களுடன் பேசும்போதுகூட நாம் சமநிலையைக் காத்துக்கொண்டு, நியாயத்தன்மையைக் காட்ட வேண்டும். ஆன்மீகக் கூட்டுறவுக்காக நாம் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் செல்கையில் உடல்நலத்தைப் பற்றியே அதிகமாகப் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. மேலும், பைபிள் நியமங்கள், மனசாட்சி, யெகோவாவுடன் உள்ள உறவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே சிகிச்சை சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன. ஆகவே, நம்முடைய கருத்துக்களை சக கிறிஸ்தவர்மீது திணிப்பதோ, மனசாட்சியைப் பொருட்படுத்தாதிருக்கும்படி அவரை வற்புறுத்துவதோ அன்பற்றதாகும். சபையிலுள்ள முதிர்ச்சியுள்ளவர்களை உதவிக்காக அணுகலாம் என்பது உண்மைதான்; ஆனால், தீர்மானம் எடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவருடைய தனிப்பட்ட பொறுப்பு. ‘அவனவன் தன்தன் பாரத்தைச் சுமக்க’ வேண்டும், ‘நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிக்க’ வேண்டும்.—கலாத்தியர் 6:5; ரோமர் 14:12, 22, 23.
அழுத்தத்தைச் சந்திக்கையில்
15. அழுத்தமிக்க சூழ்நிலைகள் நம்மை எவ்வாறு பாதிக்கலாம்?
15 அழுத்தமிக்க சூழ்நிலைகள், யெகோவாவின் உத்தம ஊழியர்களைக்கூட ஞானமில்லாமல் பேசவோ நடக்கவோ செய்துவிடலாம். (பிரசங்கி 7:7) கடும் சோதனை வந்தபோது யோபு சற்று நிலைதடுமாறிவிட்டார்; ஆகவே அவரது சிந்தையைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. (யோபு 35:2, 3; 40:6-8) மோசே ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராக’ இருந்தும் ஒரு சந்தர்ப்பத்தில் மிகுந்த கோபமடைந்து, முன்யோசனையின்றி பதறிப் பேசிவிட்டார். (எண்ணாகமம் 12:3; 20:7-12; சங்கீதம் 106:32, 33) தாவீது, ராஜாவாய் இருந்த சவுலைக் கொல்லாமல் அபார தன்னடக்கத்தைக் காட்டினார்; ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் நாபால் அவரைப் புண்படுத்தி, அவரது ஆட்களைக் கண்டபடி திட்டியபோது, மிகுந்த கோபத்தில் விவேகத்தை இழந்துவிட்டார். அபிகாயில் தலையிட்டபோதுதான் அவர் மறுபடியும் நிதானத்தைப் பெற்றார்; இவ்வாறு, மிகுந்த கேடுண்டாக்கும் தவறைச் செய்வதிலிருந்து மயிரிழையில் தப்பினார்.—1 சாமுவேல் 24:2-7; 25:9-13, 32, 33.
16. முன்பின் யோசிக்காமல் நடப்பதைத் தவிர்க்க எது நமக்கு உதவும்?
16 நாமும்கூட அழுத்தமிக்க சூழ்நிலைகளை எதிர்ப்படலாம்; அப்போது விவேகத்தை இழக்கலாம். தாவீதைப் போல் நாமும் மற்றவர்களுடைய கருத்துகளைக் கவனமாக சீர்தூக்கிப் பார்த்தால், முன்பின் யோசிக்காமல் அவசரப்பட்டு தவறு செய்வதைத் தவிர்ப்போம். (நீதிமொழிகள் 19:2) மேலும், கடவுளுடைய வார்த்தை இவ்வாறு நமக்கு அறிவுறுத்துகிறது: “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.” (சங்கீதம் 4:4) முடிந்தவரை, நாம் நிதானத்தை மீண்டும் பெறும்வரை காத்திருந்து பிறகு செயல்படுவது அல்லது தீர்மானமெடுப்பது ஞானமானது. (நீதிமொழிகள் 14:17, 29) நாம் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபிக்கலாம்; ‘அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும் நம் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.’ (பிலிப்பியர் 4:6, 7) கடவுள் தரும் அப்படிப்பட்ட சமாதானம் நம்மை ஸ்திரப்படுத்தி, தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க நமக்கு உதவும்.
17. தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க நாம் ஏன் யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டும்?
17 ஆபத்துக்களைத் தவிர்த்து ஞானமாக நடக்க எவ்வளவுதான் முயன்றாலும், நாம் அனைவருமே தவறுகளைச் செய்கிறோம். (யாக்கோபு 3:2) சீரழிக்கும் தவறான பாதையில் நமக்கே தெரியாமல் நாம் அடியெடுத்து வைத்துவிடலாம். (சங்கீதம் 19:12, 13) அதுமட்டுமின்றி, மானிடர்களாக, யெகோவாவின் உதவியின்றி நம்மை நாமே வழிநடத்திக்கொள்ள நமக்குத் திறமையும் இல்லை, உரிமையும் இல்லை. (எரேமியா 10:23) “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று யெகோவா நமக்கு உறுதி அளிப்பதற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! (சங்கீதம் 32:8) ஆம், யெகோவாவின் உதவியோடு, நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a தொழில் ஒப்பந்தங்களை எழுத்தில் வைத்துக்கொள்வது பற்றிய கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பின்வரும் பத்திரிகைகளைக் காண்க: காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1997, பக்கங்கள் 30-31; ஆங்கில காவற்கோபுரம் நவம்பர் 15, 1986, பக்கங்கள் 16-17 மற்றும் ஆங்கில விழித்தெழு!, பிப்ரவரி 8, 1983, பக்கங்கள் 13-15.
b இந்த நியமம், சர்ச்சைக்குரிய மாற்று சிகிச்சைமுறைகளைப் பற்றி சிந்திப்போருக்கும் உதவியாக இருக்கும்.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
பின்வரும் சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கலாம்:
• ஏதேனும் தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போது?
• திருமணத் துணையைத் தேடும்போது?
• உடல்நலப் பிரச்சினைகளை எதிர்ப்படும்போது?
• அழுத்தத்தில் இருக்கும்போது?
[பக்கம் 25-ன் பெட்டி]
நீங்கள் நம்ப முடியுமா?
மணமாகாதவர்களுக்குரிய வெப் சைட்டுகளில், பொறுப்பேற்க மறுக்கும் பின்வரும் அறிக்கைகள் காணப்படுகின்றன:
“நபர்களின் உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்த முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறோம். என்றாலும், அதற்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்க முடியாது.”
“இந்த ஆன்-லைனில் உள்ள எவ்விதத் தகவலும் உண்மையானது என்றோ, முழுமையானது என்றோ, பயனுள்ளது என்றோ நாங்கள் உறுதி அளிப்பதற்கில்லை.”
“இந்த ஆன்-லைனில் வெளியாகும் கருத்துகள், அறிவுரைகள், கூற்றுகள், அளிப்புகள், மற்ற தகவல்கள் அல்லது விஷயங்கள் அந்தந்த எழுத்தாளர்களுடையவை . . . அவற்றை முழுமையாக நம்புவதற்கில்லை.”
[பக்கம் 23-ன் படம்]
‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்’
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
கிறிஸ்தவப் பெண்கள் எவ்வாறு சூலேமியப் பெண்ணைப் பின்பற்றலாம்?
[பக்கம் 26-ன் படம்]
“எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்”