சர்தையின் மெலட்டோ—பைபிள் சத்தியங்களுக்காக வாதாடியவரா?
உண்மை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருடமும் கர்த்தரின் இராப்போஜனத்தை ஆசரிக்கிறார்கள். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, நிசான் 14-க்கு (எபிரெய காலண்டர்) இணையான தேதியில் அதை ஆசரிக்கிறார்கள். பொ.ச. 33-ம் ஆண்டில், இதே நிசான் 14-ம் தேதியில்தான், பஸ்கா பண்டிகையை ஆசரித்த பிறகு, இயேசு தம்முடைய மரண நினைவுநாள் ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார். அந்த நாள் முடிவதற்குள் அவர் மரணமடைந்தார்.—லூக்கா 22:19, 20; 1 கொரிந்தியர் 11:23-28.
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின்போது, சிலர் அந்த ஆசரிப்பு நாளையும் ஆசரிப்பு முறையையும் மாற்ற ஆரம்பித்தார்கள். ஆசியா மைனரில் இயேசுவின் மரண நாள் சரியான தேதியில் ஆசரிக்கப்பட்டு வந்தது. என்றாலும், ஓர் ஆராய்ச்சி நூல் குறிப்பிடுகிறபடி, ‘ரோமிலும் அலெக்சாண்டிரியாவிலும், [இயேசுவின்] மரண நாள் அல்ல, ஆனால் அதைத் தொடர்ந்துவந்த ஞாயிற்றுக்கிழமையில் அவருடைய உயிர்த்தெழுதலை ஆசரிப்பதுதான் வழக்கமாயிருந்தது’; அது ‘உயிர்த்தெழுதல் பஸ்கா’ எனவும் அழைக்கப்பட்டது. என்றாலும், குவார்ட்டோடெசிமன்கள் (பதினான்கவர்கள்) என்ற ஒரு தொகுதியினர் நிசான் 14-ம் தேதியில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை ஆசரிப்பதுதான் சரியென்று வாதாடினர். சர்தை பட்டணத்தைச் சேர்ந்த மெலட்டோவும் இந்தக் கருத்தை ஆதரித்தார். இந்த மெலட்டோ யார்? பைபிளிலுள்ள இந்தச் சத்தியத்திற்காகவும் மற்ற சத்தியங்களுக்காகவும் அவர் எவ்விதத்தில் வாதாடினார்?
‘மாபெரும் ஒளிவிளக்கு’
இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், எபேசுவைச் சேர்ந்த பாலிக்ரடிஸ், ரோம சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் (எக்ளிஸியாஸ்டிகல் ஹிஸ்டரி என்ற நூலில் செசரியாவைச் சேர்ந்த யூசிபியஸ் இதைக் குறிப்பிடுகிறார்); அக்கடிதத்தில் பாலிக்ரடிஸ் இவ்வாறு வலியுறுத்தினார்: “சுவிசேஷ பதிவின்படி பதினான்காம் தேதியில் பஸ்கா கொண்டாடப்பட்டது; அந்தத் தேதியை மாற்றாமல், கிறிஸ்தவ கொள்கையின்படியே அதை ஆசரிக்க வேண்டும்.” மேலும், நிசான் 14-ல்தான் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென வாதாடியவர்களில் லிடியாவிலுள்ள சர்தையைச் சேர்ந்த பிஷப் மெலட்டோவும் ஒருவர் என அதில் குறிப்பிட்டிருந்தார். மெலட்டோவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவரை ‘அணைந்துபோன மாபெரும் ஒளிவிளக்குகளில்’ ஒருவராய் கருதியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மெலட்டோ “பிரமச்சாரியாக இருந்தார், தன் வாழ்க்கையை முற்றிலும் பரிசுத்த ஆவிக்கே அர்ப்பணித்தார், சர்தையில் அடக்கம் செய்யப்பட்டார், உயிர்த்தெழுப்பப்படுவதற்காக பரலோகத்திலிருந்து அழைப்பு வருவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்” என்றெல்லாம் பாலிக்ரடிஸ் குறிப்பிட்டிருந்தார். எனவே, கிறிஸ்து திரும்பி வரும்போதுதான் உயிர்த்தெழுதல் நடைபெறும் என நம்பியவர்களில் மெலட்டோவும் ஒருவர் என்பதை இது அர்த்தப்படுத்தலாம்.—வெளிப்படுத்துதல் 20:1-6.
அப்படியானால், மெலட்டோ தைரியமானவராகவும் மன உறுதி படைத்தவராகவும் இருந்திருக்க வேண்டும். சொல்லப்போனால், மார்கஸ் ஆரிலியஸ் என்ற ரோம சக்கரவர்த்திக்கு (பொ.ச. 161-180) முகவரியிட்டு, அப்பாலஜி என்ற புத்தகத்தை மெலட்டோ எழுதினார்; கிறிஸ்தவர்களுக்காக வாதாடி அவர் எழுதிய முதல் புத்தகம் அதுதான். கிறிஸ்தவர்களை ஆதரித்துப் பேசுவதற்கும், பேராசைபிடித்த துஷ்டர்களைக் கண்டித்துப் பேசுவதற்கும் அவர் அஞ்சவில்லை. அந்தத் துஷ்டர்கள், கிறிஸ்தவர்களின் உடைமைகளை அபகரிப்பதற்காக அவர்களைத் துன்புறுத்தி, அநியாயமாகக் குற்றம்சாட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். எனவே தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற அரசு பல்வேறு ஆணைகளை பிறப்பிக்கும்படி செய்தார்கள்.
சக்கரவர்த்திக்கு மெலட்டோ இவ்வாறு துணிந்து எழுதினார்: “இந்த ஒரேவொரு வேண்டுகோளை தங்களுக்கு முன் கொண்டுவருகிறோம்: அத்தகைய துஷ்டர்களை நீங்களே விசாரித்து, கிறிஸ்தவர்கள் மரணத்துக்கும் தண்டனைக்கும் உரியவர்களா அல்லது பாதுகாப்புக்கும் விடுதலைக்கும் உரியவர்களா என்று நீதியாகத் தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். காட்டுமிராண்டித்தனமான விரோதிகள்மீதுகூட சுமத்துவதற்கு தகுந்ததல்லாத இந்தச் சட்டத்தையும் புதிய ஆணையையும் நீங்கள் பிறப்பிக்கவில்லை என்றால், அநியாயமாகக் கொள்ளையடிக்கிற துஷ்டர்களின் பிடியில் இருக்கும் எங்களுக்கு உதவும்படி மிகவும் கெஞ்சிக் கேட்கிறோம்.”
பைபிளைப் பயன்படுத்தி கிறிஸ்தவத்தை ஆதரித்தார்
பரிசுத்த பைபிளைப் படிப்பதில் மெலட்டோ மிகுந்த ஆர்வம் காட்டினார். அவர் எழுதிய நூல்களின் முழு பட்டியல் நம்மிடம் இல்லை; இருந்தாலும், பைபிள் விஷயங்களில் அவருக்கு ஆர்வம் இருந்ததை அவர் எழுதிய சில நூல்களின் பெயர்கள் காட்டுகின்றன. அவற்றில் சில: கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் தீர்க்கதரிசிகளின் பேரில்; மனித விசுவாசத்தின் பேரில்; படைப்பின் பேரில்; முழுக்காட்டுதல், சத்தியம், விசுவாசம், மற்றும் கிறிஸ்துவின் பிறப்பின் பேரில்; உபசரிப்பின் பேரில், வேதாகம விளக்கத்தின் பேரில், யோவானின் வெளிப்படுத்துதல் மற்றும் பிசாசின் பேரில்.
எபிரெய வேதாகமத்திலுள்ள புத்தகங்களின் சரியான எண்ணிக்கையை ஆராய்வதற்காக பைபிள் தேசங்களுக்கு மெலட்டோ பயணித்தார். அது சம்பந்தமாக ஒருவருக்கு இவ்வாறு எழுதினார்: “நான் கிழக்குப் பகுதிக்குச் சென்று, அந்த விஷயங்கள் எல்லாம் பிரசங்கிக்கப்பட்ட இடங்களையும் அவற்றைக் கடைப்பிடித்த ஜனங்கள் வாழ்ந்த இடங்களையும் பார்த்தேன்; பழைய ஏற்பாட்டு புத்தகங்களின் சரியான எண்ணிக்கையை பதிவு செய்திருக்கிறேன், இப்போது அதைப் பட்டியலிட்டு உமக்கு அனுப்பியிருக்கிறேன்.” இந்தப் பட்டியலில் நெகேமியா புத்தகமும் எஸ்தர் புத்தகமும் இடம்பெறவில்லை. இருந்தாலும், கிறிஸ்தவர்களென சொல்லிக்கொண்டவர்கள் பதிவுசெய்த எபிரெய வேதாகம புத்தகங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இதுவே மிகப் பழமையானது.
இந்த ஆராய்ச்சியின்போது, எபிரெய வேதாகமத்திலிருந்து மெலட்டோ பல வசனங்களை—இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் அடங்கிய பல வசனங்களை—எடுத்து ஒரு தொகுப்பை அமைத்தார். எக்ஸ்ட்ராக்ட்ஸ் என்ற தனது நூலில், ஜனங்கள் வெகு காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த மேசியா இயேசுவே என்று சொல்லியிருக்கிறார்; அதோடு, நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவின் வருகையை முன்னதாகவே சுட்டிக்காட்டியதாகவும் சொல்லியிருக்கிறார்.
மீட்கும்பலியின் மதிப்பை ஆதரித்துப் பேசினார்
ஆசியா மைனரின் முக்கிய நகரங்களில் யூதர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். மெலட்டோ வசித்த சர்தையில் யூதர்கள் பஸ்கா பண்டிகையை நிசான் 14-ம் தேதி ஆசரித்தனர். இந்தத் தேதி நியாயப்பிரமாணத்தின்படி சரிதான் என்றும், கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தை இதே தேதியில்தான் ஆசரிக்க வேண்டும் என்றும் மெலட்டோ வாதாடினார்; இதை பஸ்கா என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை காட்டுகிறது.
பஸ்கா ஆசரிப்பு கிறிஸ்துவின் பலிக்கு முன்நிழலாகவே இருந்தது என்பதை யாத்திராகமம் 12-ம் அதிகாரத்திலிருந்து மெலட்டோ எடுத்துக் காட்டினார், கிறிஸ்தவர்கள் அதை ஆசரிப்பது ஏன் அர்த்தமற்றது என்பதை அதிலிருந்தே விளக்கினார். நியாயப்பிரமாணத்தைக் கடவுள் ஒழித்துவிட்டதால் கிறிஸ்தவர்கள் பஸ்காவை ஆசரிப்பது அர்த்தமற்றதாக இருக்கிறது என்று விளக்கம் அளித்தார். அடுத்ததாக, கிறிஸ்துவின் பலி ஏன் தேவைப்பட்டது என்பதை பின்வருமாறு விளக்கினார்: ஆதாம் சந்தோஷமாய் வாழ கடவுள் அவனை ஒரு பரதீஸில் வைத்தார். ஆனால் அந்த முதல் மனிதனோ நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாதென்ற கட்டளையை மீறினான். அதனால், ஒரு மீட்கும்பொருளுக்கான அவசியம் ஏற்பட்டது.
பூமியில் வாழ இயேசு அனுப்பப்பட்டார் என்றும், விசுவாசம் காட்டுகிறவர்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்க கழுமரத்தில் அவர் மரித்தார் என்றும் மெலட்டோ விளக்கிச் சொன்னார். இயேசுவைக் கொல்வதற்குப் பயன்படுத்திய கழுமரத்தைப் பற்றி எழுதுகையில், “மரம்” என்ற அர்த்தமுடைய ஒரு கிரேக்க வார்த்தையை (ஸைலான்) அவர் உபயோகித்தது ஆர்வத்திற்குரிய விஷயம்.—அப்போஸ்தலர் 5:30; 10:39; 13:29.
ஆசியா மைனருக்கு வெளியேயும் அவருடைய பெயர் பிரபலமானது. டெர்டுல்லியன், அலெக்ஸாண்டிரியாவின் கிளமென்ட், ஆரிகன் ஆகியோர் அவருடைய நூல்களை அலசியிருந்தார்கள். இருந்தாலும், அவரைப் பற்றி ரானியரோ கான்டாலாமிஸா என்ற சரித்திராசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பஸ்காவை ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசரிக்கும் பழக்கம் ஆரம்பமான பிறகு குவார்டோடெசிமன்கள் மதபேதவாதிகளாகக் கருதப்பட ஆரம்பித்தனர். அதுமுதல் மெலட்டோவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது, அவருடைய நூல்களும் படிப்படியாக மறைய ஆரம்பித்தன.” முடிவில், அவர் எழுதிய நூல்கள் முற்றிலும் மறைந்துவிட்டன என்றே சொல்ல வேண்டும்.
விசுவாசதுரோகத்திற்கு ஆளானவரா?
முன்னறிவிக்கப்பட்டபடியே, அப்போஸ்தலர்களின் மறைவுக்குப் பிறகு உண்மை கிறிஸ்தவத்திற்குள் விசுவாசதுரோகம் ஊடுருவ ஆரம்பித்தது. (அப்போஸ்தலர் 20:29, 30) அதற்கு மெலட்டோவும்கூட ஆளானார். சிக்கலான நடையில் எழுதப்பட்ட அவருடைய நூல்களில் கிரேக்க தத்துவமும் ரோம நம்பிக்கைகளும் கலந்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான், கிறிஸ்தவத்தை “நம் தத்துவம்” என்பதாக மெலட்டோ அழைத்திருக்க வேண்டும். ‘கிறிஸ்தவம்’ ரோம சாம்ராஜ்யத்தோடு இணைவதும்கூட, நாட்டின் “வெற்றிக்கு . . . மிகப் பெரிய அத்தாட்சி” என்று அவர் கருதினார்.
அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு மெலட்டோ கவனம் செலுத்தவே இல்லை: “லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளை கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” ஆக, பைபிள் சத்தியங்களை மெலட்டோ ஓரளவுக்கு ஆதரித்துப் பேசினாலும், பல அம்சங்களில் அவற்றை நிராகரிக்கவே செய்தார்.—கொலோசெயர் 2:8.
[பக்கம் 18-ன் படம்]
கர்த்தருடைய இராப்போஜனத்தை நிசான் 14 அன்று இயேசு ஆரம்பித்து வைத்தார்