‘உமது சட்டத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!’
“உமது வேதத்தில் [“சட்டத்தில்,” NW] நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.”—சங்கீதம் 119:97.
1, 2. (அ) பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் சங்கீதம் 119-ஐ எழுதியவர் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்பட்டார்? (ஆ) அப்போது அவர் என்ன செய்தார், ஏன்?
சங்கீதம் 119-ஐ இயற்றியவர் கடும் சோதனையை எதிர்ப்பட்டார். கடவுளுடைய சட்டத்தை மதிக்காத ஆணவம் மிகுந்த விரோதிகள் அவரைக் கேலிசெய்து, பழிதூற்றினார்கள். இளவரசர்கள் அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்து, அவரைத் துன்புறுத்தினார்கள். வஞ்சகர்கள் அவரைச் சூழ்ந்திருந்தார்கள், அவரைக் கொல்லப்போவதாகவும் மிரட்டினார்கள். இந்த எல்லா ‘கவலையாலும் அவரது தூக்கம் பறிபோனது.’ (சங்கீதம் 119:9, 23, 28 , 51, 61, 69, 85, 87, 161 ,NW) இந்தச் சோதனையின் மத்தியிலும் அந்தச் சங்கீதக்காரன் பின்வருமாறு பாடினார்: “உமது வேதத்தில் [“சட்டத்தில்,” NW] நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.”—சங்கீதம் 119:97.
2 “கடவுளுடைய சட்டம் எப்படி ஆறுதலையும் தேறுதலையும் அந்தச் சங்கீதக்காரனுக்கு அளித்தது?” என்று நீங்கள் யோசிக்கலாம். யெகோவா, தன்மேல் அக்கறையாயிருக்கிறார் என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்; அதுவே அவருக்கு ஆறுதல் அளித்தது. கடவுள் அன்புடன் கொடுத்த சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் வரும் நன்மைகளை அவர் நன்கு அறிந்திருந்தார். இதனால், விரோதிகளிடமிருந்து வந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் அவரால் சந்தோஷமாக இருக்க முடிந்தது. யெகோவா தன்னை தயவுடன் நடத்தியதை அவர் புரிந்துகொண்டார். அதுமட்டுமின்றி, கடவுளுடைய சட்டத்தின் வழிநடத்துதலைப் பின்பற்றியதால் தன் விரோதிகளைவிட ஞானமுள்ளவராக ஆனார். அதனால் தன் உயிரையும்கூட பாதுகாத்துக்கொள்ள அவரால் முடிந்தது. அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்ததால் சமாதானத்தையும் நல்மனசாட்சியையும் பெற்றார்.—சங்கீதம் 119:1, 9, 65, 93, 98, 165.
3. கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வது கிறிஸ்தவர்களுக்கு ஏன் சவாலாக இருக்கிறது?
3 இன்றும், கடவுளுடைய ஊழியர்கள் சிலர் கடுமையான விசுவாச பரீட்சைகளைச் சந்திக்கிறார்கள். அந்தச் சங்கீதக்காரனைப் போல உயிருக்கு ஆபத்தான நெருக்கடிகளை நாம் ஒருவேளை எதிர்ப்படாதிருக்கலாம். ஆனாலும், ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்ந்து வருகிறோம். கடவுளுடைய பார்வையில் எது சரி, எது தவறு என்பதைப் பற்றி நம்மைச் சுற்றியுள்ள அநேகர் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அவர்கள் சுயநலமான, பேராசையான இலட்சியங்களைக் கொண்டிருக்கிறார்கள். அகம்பாவத்தோடும், அவமரியாதையோடும் நடந்துகொள்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5, NW) ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ளும் விஷயத்தில் கிறிஸ்தவ இளைஞர்கள் தினம்தினம் சோதனைகளை எதிர்ப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து யெகோவாவையும், நீதியையும் நேசிப்பது கடினமாக இருக்கலாம். அப்படியென்றால், நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்?
4. கடவுளுடைய சட்டத்துக்குத் தன்னுடைய போற்றுதலை சங்கீதக்காரன் எவ்வாறு காட்டினார், கிறிஸ்தவர்களும் அவ்வாறே காட்ட வேண்டுமா?
4 கடவுளுடைய சட்டத்திற்குச் சங்கீதக்காரன் போற்றுதல் காட்டினார்; அதைப் படிக்கவும், அதை ஆழ்ந்து சிந்திக்கவும் அவர் நேரம் ஒதுக்கினார். இவ்வாறு, நெருக்கடிகளை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கு உதவியைப் பெற்றார். அதோடு அந்தச் சட்டத்தை நேசிக்கவும் தொடங்கினார். சொல்லப்போனால், 119-ம் சங்கீதத்திலுள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு வசனமும் கடவுளுடைய சட்டத்தின் ஏதோவொரு அம்சத்தைக் குறிப்பிடுகிறது.a இன்றுள்ள கிறிஸ்தவர்கள் பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. (கொலோசெயர் 2:14) என்றாலும், அதிலுள்ள நியமங்கள் எக்காலத்துக்கும் பிரயோஜனமானவை. அவை அந்தச் சங்கீதக்காரனுக்கு ஆறுதல் அளித்தன. இன்றும்கூட, வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் அவை ஆறுதல் அளிக்க முடியும்.
5. நியாயப்பிரமாணத்திலுள்ள எந்த விஷயங்களை நாம் இப்போது சிந்திக்கப் போகிறோம்?
5 நியாயப்பிரமாணத்திலுள்ள ஓய்வுநாள் ஏற்பாடு, கதிர் பொறுக்குதல் பற்றிய சட்டம், பேராசைக்கு எதிரான கட்டளை ஆகிய மூன்று விஷயங்களை மட்டும் இப்போது கவனிக்கலாம். அவற்றிலிருந்து நாம் என்ன ஊக்கமூட்டுதலைப் பெற முடியும் என்பதைச் சிந்திக்கலாம். இன்றைக்கு நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் சமாளிப்பதற்கு அந்தச் சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ள நியமங்களைப் புரிந்துகொள்வதன் அவசியத்தையும் காணலாம்.
ஆன்மீக தேவையைத் திருப்தி செய்தல்
6. மனிதர்கள் அனைவருக்கும் என்னென்ன அடிப்படை தேவைகள் உள்ளன?
6 மனிதர்கள் பல்வேறு தேவைகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமாய் இருக்க ஒரு நபருக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம் ஆகியவை அத்தியாவசியம். இருப்பினும், மனிதர்கள் தங்களுடைய ‘ஆன்மீக தேவைக்கும்’ கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவர்களால் உண்மையிலேயே சந்தோஷமாய் இருக்க முடியாது. (மத்தேயு 5:3, NW) இந்த இயல்பான தேவையைத் திருப்தி செய்துகொள்வது மிக மிக அவசியம் என யெகோவா கருதினார். அதனால்தான், வாரத்தில் ஒருநாள் அன்றாட வேலைகளை நிறுத்திவிட்டு ஆன்மீக காரியங்களுக்குக் கவனம் செலுத்தும்படி தம்முடைய ஜனங்களுக்குக் கட்டளையிட்டார்.
7, 8. (அ) ஓய்வுநாளை மற்ற நாட்களிலிருந்து கடவுள் எவ்வாறு வித்தியாசப்படுத்தினார்? (ஆ) ஓய்வுநாள் என்ன நோக்கத்தை நிறைவேற்றியது?
7 கடவுளோடு உள்ள உறவை வளர்த்துக்கொள்வதற்காக நேரம் ஒதுக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை ஓய்வுநாள் ஏற்பாடு வலியுறுத்தியது. வனாந்தரத்தில் மன்னா அளிக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடும்போதுதான் ‘ஓய்வுநாள்’ என்ற வார்த்தையை பைபிள் முதன்முறையாகப் பயன்படுத்துகிறது. ஆறு நாட்கள் இந்த அற்புதமான உணவை சேகரித்துக்கொள்ளும்படி இஸ்ரவேலருக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. ஆறாம் நாளில், “இரண்டு நாளைக்கு வேண்டிய ஆகாரத்தை” சேகரித்துக்கொள்ளும்படி சொல்லப்பட்டிருந்தது. ஏனெனில், ஏழாம் நாளில் அது கிடைக்காது. ஏழாம் நாள் ‘யெகோவாவுக்குரிய பரிசுத்த ஓய்வுநாள்.’ அந்நாளில் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. (யாத்திராகமம் 16:13-30) ஓய்வுநாளன்று எந்த வேலையையுமே செய்யக்கூடாதென்று பத்துக் கட்டளைகளில் ஒன்று வலியுறுத்தியது. அது பரிசுத்தமான நாளாக இருந்தது. அதை அனுசரிக்காதவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.—யாத்திராகமம் 20:8-11; எண்ணாகமம் 15:32-36.
8 யெகோவா தம் மக்களின் சரீர நலனிலும் ஆன்மீக நலனிலும் அக்கறையுள்ளவராக இருந்ததை ஓய்வுநாள் சட்டம் தெளிவாக்கியது. “ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” என்று இயேசு கூறினார். (மாற்கு 2:27) இந்த ஏற்பாடு, இஸ்ரவேலர் ஓய்வெடுக்க வழிசெய்தது. அதோடு, தங்கள் படைப்பாளரிடம் நெருங்கி வரவும், அவரை நேசிப்பதைக் காட்டவும் அவர்களுக்கு வாய்ப்பளித்தது. (உபாகமம் 5:12) குடும்பமாகக் கடவுளை வழிபடுவதற்கும், ஜெபிப்பதற்கும், கடவுளுடைய சட்டத்தை ஆழ்ந்து சிந்திப்பதற்கும் அந்த நாள் விசேஷமாக ஒதுக்கப்பட்டது. பொருளாதார காரியங்களிலேயே தங்களுடைய நேரம், சக்தி அனைத்தையும் செலவழித்துவிடாதபடி இந்த ஏற்பாடு இஸ்ரவேலரைப் பாதுகாத்தது. யெகோவாவுடனுள்ள உறவுதான் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது என்பதை இந்த ஏற்பாடு அவர்களுக்கு நினைப்பூட்டியது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்று கூறியதன் மூலம், என்றுமே மாறாத இந்த அடிப்படை உண்மையை இயேசு மறுபடியும் வலியுறுத்தினார்.—மத்தேயு 4:4.
9. ஓய்வுநாள் ஏற்பாடு கிறிஸ்தவர்களுக்கு எதைக் கற்பிக்கிறது?
9 கடவுளுடைய மக்களாகிய நாம் அந்த 24 மணிநேர ஓய்வுநாளை ஆசரிக்கத் தேவையில்லை. (கொலோசெயர் 2:16) ஆனாலும், அந்த ஏற்பாடு நமக்கு இன்று அதிக அர்த்தமுடையதாக இருக்கிறது. ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை அது நமக்கும் நினைப்பூட்டுகிறது, அல்லவா? பொருளாதார நாட்டங்களோ, பொழுதுபோக்கு நாட்டங்களோ ஆன்மீக காரியங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடாது. (எபிரெயர் 4:9, 10) ஆகவே, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: “என் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தருகிறேன்? படிப்பது, ஜெபிப்பது, கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்து கொள்வது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிப்பது ஆகியவற்றுக்கு முதலிடம் தருகிறேனா? அல்லது இவற்றையெல்லாம் செய்ய முடியாதளவுக்கு மற்ற காரியங்கள் என் நேரத்தை எடுத்துக்கொள்கின்றனவா?” வாழ்க்கையில் ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் தரும்போது, மற்ற அத்தியாவசிய தேவைகள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று யெகோவா உறுதி அளிக்கிறார்.—மத்தேயு 6:24-33.
10. ஆன்மீக காரியங்களுக்கு நேரம் செலவிடுவதால் நாம் எப்படிப் பயனடைகிறோம்?
10 பைபிளையும், அது சம்பந்தமான பிரசுரங்களையும் படிப்பதற்கும், அதிலுள்ள விஷயங்களை ஆழ்ந்து சிந்திப்பதற்கும் நேரம் செலவிடுவது, யெகோவாவிடம் நெருங்கி வர நமக்கு உதவும். (யாக்கோபு 4:8) சூசன் என்பவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பைபிளைத் தவறாமல் படித்து வருகிறார். ஆரம்பத்தில், அது அவ்வளவு ஆர்வமூட்டுவதாக இருக்கவில்லையென ஒத்துக்கொள்கிறார். படிப்பது அவருக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாகவும் கூறுகிறார். ஆனால் அதிகமதிகமாக வாசிக்க ஆரம்பித்தபோது அது சுவாரஸ்யமாக ஆனது. இப்போதெல்லாம் ஏதோவொரு காரணத்துக்காக பைபிளைத் தனிப்பட்ட விதமாக படிக்க முடியாமல் போய்விட்டால் அதை நினைத்து ரொம்பவே கவலைப்படுவதாகக் கூறுகிறார். “யெகோவாவை அப்பாவாகக் கருத இந்தப் படிப்பு எனக்கு உதவியிருக்கிறது. அவரை நம்பவும், சார்ந்து இருக்கவும், ஜெபத்தில் தயங்காமல் அணுகவும் முடிகிறது. அவர் தம் ஊழியர்களை எந்தளவு நேசிக்கிறார், என் மேல் எந்தளவு அக்கறையாக இருக்கிறார், எனக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளும்போது என் உள்ளம் பூரித்துப்போகிறது” என்று அவர் கூறுகிறார். நம் ஆன்மீக தேவைகளுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தும்போது நமக்குக் கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது!
கதிர் பொறுக்குதல் பற்றிய கடவுளுடைய சட்டம்
11. கதிர் பொறுக்கும் ஏற்பாட்டில் என்னென்ன உட்பட்டிருந்தன?
11 கதிரைப் பொறுக்கிக் கொள்ள ஏழை எளியோருக்கு உரிமை இருக்கிறதென நியாயப்பிரமாணத்தில் யெகோவா ஒரு சட்டத்தைக் கொடுத்திருந்தார். இந்தச் சட்டம், தம் மக்கள்மேல் அவருக்கு இருக்கும் அக்கறையைப் படம்பிடித்து காட்டியது. ஓர் இஸ்ரவேல விவசாயி அறுவடை செய்யும்போது, தன் வேலையாட்கள் விட்டுவருவதை எடுத்துக்கொள்வதற்கு ஏழைகளை அனுமதிக்க வேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டிருந்தார். விவசாயிகள் தங்கள் வயலின் ஓரம் வரை முழுமையாக அறுக்கக்கூடாது. அதோடு மீந்திருக்கும் திராட்சைப் பழங்களையோ, ஒலிவப் பழங்களையோ சேகரிக்கக்கூடாது. அரிக்கட்டுகளை மறந்துபோய் வயலிலேயே விட்டுவிட்டால் அதை எடுக்க திரும்பிப் போகக்கூடாது. ஏழைகள், அந்நியர், அநாதைகள், விதவைகள் ஆகியோருக்கு உதவுவதற்காக இந்த அன்பான ஏற்பாட்டை கடவுள் செய்திருந்தார். அப்படி மீதியிருப்பவற்றைச் சேகரிப்பதற்குக்கூட இவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது என்னவோ உண்மைதான். எனினும் இத்தகைய ஏற்பாடு இருந்ததால், பிச்சை எடுக்க வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படவில்லை.—லேவியராகமம் 19:9, 10; உபாகமம் 24:19-22; சங்கீதம் 37:25.
12. கதிர் பொறுக்கும் ஏற்பாடு எதைச் செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பளித்தது?
12 விவசாயிகள் தங்கள் விளைச்சலில் எந்தளவு ஏழைகளுக்கு விட்டுவிட வேண்டும் என்பதை அந்தச் சட்டம் குறிப்பிடவில்லை. தங்கள் வயலின் ஓரங்களில் எந்தளவு அறுக்காமல் விடலாம், கொஞ்சமாகவா, அதிகமாகவா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த விவசாயிகளுக்கு இருந்தது. இந்த ஏற்பாடு, தாராள குணத்தைக் காட்ட அவர்களுக்குக் கற்றுத் தந்தது. விளைச்சலை வாரி வழங்குபவரான யெகோவாவுக்குத் தங்கள் நன்றியைக் காட்ட அவர்களுக்கு இது வாய்ப்பளித்தது. ஏனெனில், ‘தரித்திரனுக்குத் தயை செய்கிறவன் [அவனை உண்டாக்கினவரை] கனம்பண்ணுகிறான்.’ (நீதிமொழிகள் 14:31) இப்படி ஏழைகளுக்குத் தயை செய்தவர்களில் போவாஸும் ஒருவர். தன்னுடைய வயல்களில் சிந்திக் கிடப்பதை சேகரிக்க வந்த விதவையான ரூத்துக்குப் போதுமானளவு தானியம் கிடைக்கும்படி அவர் பார்த்துக்கொண்டார். தாராள குணத்தைக் காட்டியதற்காக போவாஸை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்தார்.—ரூத் 2:15, 16; 4:21, 22; நீதிமொழிகள் 19:17.
13. கதிர் பொறுக்கும் ஏற்பாடு நமக்கு எதைக் கற்பிக்கிறது?
13 இந்தச் சட்டத்துக்கு அடிப்படையாக உள்ள நியமம் இன்றும் பொருந்துகிறது. தம்முடைய ஊழியர்கள் தாராள குணத்தைக் காட்ட வேண்டும், முக்கியமாக ஏழைகளிடம் அதைக் காட்ட வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். நாம் எந்தளவுக்குத் தாராள குணத்தை காட்டுகிறோமோ அந்தளவுக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” என்று இயேசு கூறினார்.—லூக்கா 6:38.
14, 15. தாராள குணத்தை நாம் எவ்வாறு வெளிக்காட்டலாம், இதனால் நமக்கும் நாம் உதவும் மற்றவர்களுக்கும் என்ன நன்மைகள் கிடைக்கலாம்?
14 நாம் “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். (கலாத்தியர் 6:10) நம்முடைய சக கிறிஸ்தவர்கள் விசுவாச பரீட்சைகளை எதிர்ப்படும்போதெல்லாம் அவர்களுக்கு பைபிளிலிருந்து வழிநடத்துதலைக் கொடுக்க நாம் எப்போதும் கவனமாய் இருக்க வேண்டும். அதேசமயத்தில், அவர்களுக்கு நடைமுறை உதவிகள் தேவைப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். உதாரணமாக, ராஜ்ய மன்றத்துக்குச் செல்வது, மளிகை சாமான்களை வாங்கி வருவது போன்றவற்றில் அவர்களுக்கு உதவி தேவையா? உங்களுடைய ஊக்கமூட்டும் சந்திப்பையோ, வீட்டு வேலைகளில் ஒத்தாசையையோ எதிர்பார்க்கும் முதியவர்கள், வியாதிப்பட்டவர்கள், வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்கள் யாரேனும் உங்கள் சபையில் இருக்கிறார்களா? மற்றவர்களுடைய தேவைகளுக்கு நாம் கவனம் செலுத்த முயலும்போது, உதவி தேவைப்படுவோரின் ஜெபங்களுக்குப் பதில் அளிக்க நம்மை ஒரு கருவியாக யெகோவா பயன்படுத்தக்கூடும். பிறரிடம் அக்கறை காட்டுவது ஒரு கிறிஸ்தவக் கடமை என்பது உண்மையே. இருந்தாலும், அக்கறை காட்டுபவரும் இதனால் நன்மை அடைகிறார். சக வணக்கத்தாரிடம் உண்மையான அன்பை காட்டும்போது அளவிலா ஆனந்தமும், பூரண திருப்தியும் கிடைக்கும். அதோடு, யெகோவாவின் அங்கீகாரத்தையும் பெற முடியும்.—நீதிமொழிகள் 15:29.
15 தன்னலமற்ற மனப்பான்மையை கிறிஸ்தவர்கள் வெளிக்காட்டும் மற்றொரு முக்கியமான வழி, தங்களுடைய நேரம், சக்தி ஆகியவற்றைக் கடவுளுடைய நோக்கங்களைப் பிரசங்கிப்பதற்குப் பயன்படுத்துவதன் மூலமாகும். (மத்தேயு 28:19, 20) கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க புதியவர் ஒருவருக்கு உதவுவோர் பெறும் சந்தோஷமே அலாதிதான். “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [அதாவது, சந்தோஷம்]” என்ற இயேசுவின் வார்த்தைகளின் உண்மையை இவர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 20:35.
பேராசையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல்
16, 17. பத்தாவது கட்டளை எதைத் தடைசெய்தது, ஏன்?
16 இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திலிருந்து நாம் இப்போது சிந்திக்கப்போகும் மூன்றாவது விஷயம், பேராசையைத் தடைசெய்த பத்தாவது கட்டளையாகும். “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” என்று அது குறிப்பிட்டது. (யாத்திராகமம் 20:17) எந்த மனிதனாலும் இப்படிப்பட்ட சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஏனெனில், பிறருடைய மனதிலிருப்பதை அறியும் திறன் யாருக்குமே இல்லை. அந்தப் பத்தாவது கட்டளை நியாயப்பிரமாணத்தை மனிதனுடைய சட்டத்தைவிட மேம்பட்ட நிலைக்கு உயர்த்தியது. இருதயத்தின் எண்ணங்களை அறிபவரான யெகோவாவுக்குத் தாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதை ஒவ்வொரு இஸ்ரவேலனுக்கும் அந்தக் கட்டளை உணர்த்தியது. (1 சாமுவேல் 16:7) அதுமட்டுமின்றி, சட்டவிரோதமான காரியங்களின் ஆணிவேரை நீக்குவதே அதன் குறிக்கோளாக இருந்தது.—யாக்கோபு 1:14.
17 பொருளாசை, பேராசை, வாழ்க்கையில் தங்கள் நிலைமையைக் குறித்து முறுமுறுப்பது ஆகியவற்றைத் தவிர்க்கும்படி கடவுளுடைய மக்களை இந்தக் கட்டளை ஊக்குவித்தது. திருட்டில் அல்லது ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கான தூண்டுதலிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது. நாம் விரும்பும் உடைமைகள் சிலரிடம் இருக்கலாம், ஒருசில விஷயங்களில் சிலர் நம்மைவிடச் சிறந்தவர்களாக இருப்பதுபோல் தோன்றலாம். இதுபோன்ற ஆட்கள் எப்போதுமே இருக்கத்தான் செய்வார்கள். இவர்களைக் கவனிக்கையில், நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், மகிழ்ச்சியை பறிகொடுத்துவிடுவோம், பொறாமைப்படவும் ஆரம்பித்துவிடுவோம். ‘கேடான சிந்தையின்’ வெளிக்காட்டுதான் பேராசை என்று பைபிள் கூறுகிறது. பேராசையைத் தவிர்ப்பதே நமக்கு மிகவும் நல்லது.—ரோமர் 1:28-30.
18. இன்று எந்த மனப்பான்மை உலகெங்கும் காணப்படுகிறது, அது என்ன மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
18 பொருளாசையையும் போட்டியையும் ஊக்குவிக்கிற மனப்பான்மைதான் இன்று உலகெங்கும் காணப்படுகிறது. வியாபார உலகம், புதுப்புது பொருள்களை வாங்கும்படி விளம்பரங்கள் மூலமாக மக்களைத் தூண்டுகிறது. அந்தப் பொருளை வாங்காவிட்டால் சந்தோஷமாய் இருக்க முடியாது என்ற எண்ணத்தையே பெரும்பாலும் திணிக்கிறது. இந்த மனப்பான்மையைத்தான் யெகோவாவுடைய நியாயப்பிரமாணம் கண்டனம் செய்தது. எப்பாடுபட்டாவது வாழ்க்கையில் முன்னேறி, சொத்துக்களைக் குவிக்க வேண்டுமென்ற வெறியையும் கடவுளுடைய சட்டம் கண்டித்தது. இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
19, 20. (அ) யெகோவாவின் சட்டத்தை நேசிப்பவர் எவற்றை பெருமதிப்புள்ளவையாய் கருதுகிறார்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
19 கடவுளுடைய சட்டத்தை நேசிப்பவர்கள் பொருளாசையால் வரும் ஆபத்துக்களை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்; அதன் காரணமாக அவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். உதாரணமாக, யெகோவாவிடம் சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபித்தார்: “என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் [அதாவது, நினைப்பூட்டுதல்களைச்] சாரும்படி செய்யும். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே [“சட்டமே,” NW] எனக்கு நலம்.” (சங்கீதம் 119:36, 72) இந்த வார்த்தைகளிலுள்ள உண்மையை நாம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இது பொருளாசை, பேராசை, வாழ்க்கையில் தங்கள் நிலைமையைக் குறித்து முறுமுறுப்பது ஆகிய படுகுழிகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான சமநிலையைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும். சொத்துக்களைக் குவிப்பது அல்ல, “தேவபக்தியே” மிகப் பெரிய பலனைப் பெற்றுத்தரும்.—1 தீமோத்தேயு 6:6.
20 பூர்வ இஸ்ரவேலருக்கு மோசேயின் மூலமாக யெகோவா கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்திற்கு அடிப்படையான நியமங்கள் அன்றும் பெருமதிப்புமிக்கவையாய் இருந்தன. இந்தக் கடினமான காலங்களிலும் அவை அதேயளவு மதிப்புள்ளவையாய் இருக்கின்றன. இந்த நியமங்களை வாழ்க்கையில் எந்தளவு கடைப்பிடிக்கிறோமோ அந்தளவுக்கு அவற்றை இன்னும் நன்றாக புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் அதோடு, அதிக சந்தோஷத்தைப் பெறவும் முடியும். நியாயப்பிரமாணத்தில் நமக்குப் பிரயோஜனமான அநேக பாடங்கள் இருக்கின்றன. பைபிள் கதாபாத்திரங்களின் வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் இவற்றின் மதிப்பை நாம் தெரிந்துகொள்ள முடியும். அதில் சிலவற்றை அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a இந்தச் சங்கீதத்திலுள்ள 176 வசனங்களில் நான்கைத் தவிர மற்றெல்லா வசனங்களும் யெகோவாவுடைய கற்பனைகள், நீதிநியாயங்கள், வேதம் [அதாவது, சட்டம்], கட்டளைகள், பிரமாணங்கள், சாட்சிகள் [அதாவது, நினைப்பூட்டுதல்கள்], வாக்கு, நியாயங்கள் [அதாவது, நீதித்தீர்ப்புகள்], வழிகள், வசனம் ஆகியவற்றில் ஏதோவொன்றைக் குறிப்பிடுகின்றன.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• சங்கீதம் 119-ஐ எழுதியவர் யெகோவாவுடைய சட்டத்தை ஏன் நேசித்தார்?
• ஓய்வுநாள் ஏற்பாட்டிலிருந்து கிறிஸ்தவர்கள் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
• கதிர் பொறுக்குவது பற்றிய கடவுளுடைய சட்டம் எந்தளவு மதிப்புடையது?
• பேராசையைத் தவிர்க்கும்படியான கட்டளை நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது?
[பக்கம் 21-ன் படம்]
ஓய்வுநாள் சட்டம் எதை வலியுறுத்தியது?
[பக்கம் 23-ன் படம்]
கதிர் பொறுக்கும் ஏற்பாடு நமக்கு எதைக் கற்பிக்கிறது?