யெகோவாவின் அமைப்புக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போமாக!
“உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.”—சங்கீதம் 65:4.
1, 2. (அ) ஆலயம் கட்டப்படுவதால் கடவுளுடைய மக்கள் எப்படி பயனடைவார்கள்? (ஆ) ஆலயக் கட்டுமானப் பணியை தாவீது எவ்வாறு ஆதரித்தார்?
எபிரெய வேதாகமம் குறிப்பிடுகிற முக்கியமான ஆட்களில் பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த தாவீதும் ஒருவர். மேய்ப்பராகவும் இசைக் கலைஞராகவும் தீர்க்கதரிசியாகவும், அரசராகவும் இருந்த தாவீது, யெகோவாவில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அதுமட்டுமல்ல, யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தையும் கொண்டிருந்தார். அதனால், கடவுளுக்காக ஒரு வீட்டைக் கட்ட ஆசைப்பட்டார். அந்த வீடு, அதாவது ஆலயம் இஸ்ரவேலில் மெய் வணக்கத்திற்கு மையமாக இருக்கவிருந்தது. ஆலயமும் அதில் நடக்கும் வேலைகளும் கடவுளுடைய மக்களுக்கு சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் அளிக்கும் என்பதை தாவீது அறிந்திருந்தார். எனவே, தாவீது இவ்வாறு பாடினார்: “உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் [யெகோவா] தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.”—சங்கீதம் 65:4.
2 யெகோவாவின் வீட்டைக் கட்ட தாவீது அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அந்த விசேஷ பொறுப்பை அவருடைய மகன் சாலொமோனுக்குத் தர யெகோவா தீர்மானித்திருந்தார். தான் மனதார விரும்பிய வாய்ப்பு வேறொருவருக்கு கொடுக்கப்பட்டதற்காக தாவீது முறுமுறுக்கவில்லை. ஆலயம் கட்டப்பட வேண்டுமென்பதுதான் அவருக்கு முக்கியமானதாய் இருந்தது. யெகோவாவிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட கட்டுமான குறிப்புகளை சாலொமோனுக்கு கொடுப்பதன் மூலம் அவர் அந்தப் பணியை மனப்பூர்வமாக ஆதரித்தார். அதோடு, அந்தப் பணிக்காக ஆயிரக்கணக்கான லேவியர்களை பல்வேறு தொகுதிகளாகப் பிரித்தார்; ஏராளமான தங்கத்தையும் வெள்ளியையும் அவர் காணிக்கையாக அளித்தார்.—1 நாளாகமம் 17:1, 4, 11, 12; 23:3-6; 28:11, 12; 29:1-5.
3. மெய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு கருதுகிறார்கள்?
3 மெய் வணக்கத்தின் சம்பந்தமாக கடவுளுடைய வீட்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை உண்மையுள்ள இஸ்ரவேலர் ஆதரித்தார்கள். அவர்களைப் போலவே, யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்களான நாமும் அவருடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தில் வணக்கத்திற்காக செய்யப்படும் ஏற்பாடுகளை ஆதரிக்கிறோம். இதன் மூலம் தாவீதுக்கு இருந்த அதே மனப்பான்மை நமக்கும் இருப்பதை வெளிக்காட்டுகிறோம். குறைகூறும் மனப்பான்மையை நாம் கொண்டிருப்பதில்லை. அதற்கு பதிலாக, கடவுளுடைய அமைப்பிலுள்ள நல்ல விஷயங்களில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறோம். நாம் அநேக நன்மைகளுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். அந்த நன்மைகளைக் குறித்து யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சிலவற்றை இப்போது சிந்திக்கலாம்.
முன்னின்று நடத்துவோருக்கு நன்றியுள்ளவர்களாய் இருத்தல்
4, 5. (அ) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் தங்களுடைய பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்? (ஆ) சாட்சிகள் சிலர் தாங்கள் பெற்றுக்கொள்ளும் ஆன்மீக உணவைக் குறித்து எவ்வாறு உணர்ந்திருக்கிறார்கள்?
4 இயேசு கிறிஸ்து பூமியிலுள்ள தம்முடைய உடைமைகளை மேற்பார்வையிட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரை நியமித்திருக்கிறார். அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்ட இந்த அடிமை வகுப்பார், நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் முன்னின்று வழிநடத்துகிறார்கள்; வணக்கத்திற்காக கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்; 400-க்கும் மேற்பட்ட மொழிகளில் பைபிள் பிரசுரங்களை வெளியிடுகிறார்கள். ‘ஏற்ற வேளையில் கொடுக்கப்படும் இந்த [ஆன்மீக] உணவை’ உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோர் நன்றியோடு உட்கொள்கிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) அதைக் குறித்து நாம் முறுமுறுப்பதற்கு நிச்சயமாக எந்தக் காரணமும் இல்லை.
5 அடிமை வகுப்பார் அளிக்கும் பிரசுரங்களில் உள்ள பைபிளின் அறிவுரையைப் பின்பற்றியதால் பல ஆண்டுகளாக ஆறுதலையும் ஆதரவையும் அனுபவித்து வந்திருப்பதாக யெகோவாவின் சாட்சியாக இருக்கும் அல்ஃபி என்ற வயதானவர் கூறினார். “யெகோவாவின் அமைப்பு மட்டும் இல்லையென்றால் நான் என்ன செய்வேன்?” என நன்றிபொங்க அவர் எழுதினார். பீட்டர், அர்ம்கார்ட் தம்பதியர் பல ஆண்டுகளாக கடவுளுக்கு சேவை செய்து வருகிறார்கள். “அன்பும் அக்கறையுமுள்ள யெகோவாவின் அமைப்பு” அளித்திருக்கும் எல்லா பிரசுரங்களுக்காகவும் அர்ம்கார்ட் நன்றி தெரிவிக்கிறார். கண்தெரியாதோர், காதுகேளாதோர் போன்ற விசேஷ தேவையுள்ள ஆட்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட பிரசுரங்களும் இதில் அடங்கும்.
6, 7. (அ) உலகெங்கிலும் உள்ள சபைகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன? (ஆ) யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தைக் குறித்து சிலர் எவ்வாறு உணருகிறார்கள்?
6 யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினர், ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இந்த ஆளும் குழு, ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட ஆட்களைக் கொண்ட சிறு தொகுதியாகும். இவர்கள் நியு யார்க், புரூக்ளினில் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமையகத்தில் சேவை செய்கிறார்கள். கிளை அலுவலகங்களில் சேவை செய்வதற்கு அனுபவமிக்க ஊழியர்களை ஆளும் குழு நியமிக்கிறது. இந்தக் கிளை அலுவலகங்கள் உலகெங்கிலும் உள்ள 98,000-க்கும் மேற்பட்ட சபைகளைக் கண்காணிக்கின்றன. பைபிள் குறிப்பிடுகிற தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நபர்கள் இந்தச் சபைகளில் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். (1 தீமோத்தேயு 3:1-9, 12, 13) மூப்பர்கள் சபையில் முன்னின்று செயல்படுகிறார்கள், தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய மந்தையை அன்போடு மேய்க்கிறார்கள். அந்த மந்தையின் பாகமாக இருப்பதும், ‘சகோதரர்’ மத்தியில் நிலவும் அன்பையும் ஒற்றுமையையும் அனுபவிப்பதும் உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதம்தான்!—1 பேதுரு 2:17; 5:2, 3.
7 மூப்பர்களைக் குறைகூறுவதற்கு பதிலாக, ஆன்மீக ரீதியில் அவர்கள் தரும் அன்பான வழிநடத்துதலுக்கு சபையிலுள்ள ஒவ்வொருவரும் நன்றி தெரிவிக்கிறார்கள். உதாரணமாக, கிறிஸ்தவ மனைவியான பிர்கிட் என்பவரின் அனுபவத்தை கவனியுங்கள். இவர் 30 வயதைக் கடந்தவர். அவர் டீனேஜராக இருந்தபோது மோசமான ஆட்களோடு பழக ஆரம்பித்தார். தவறான காரியங்களில் கிட்டத்தட்ட விழுந்துவிடும் நிலைக்குச் சென்றுவிட்டார். ஆனால் மூப்பர்கள் பைபிளிலிருந்து அளித்த தெளிவான ஆலோசனையும், சக வணக்கத்தார் கொடுத்த ஆதரவும் ஆபத்தான சூழ்நிலைக்கு போய்விடாதபடி அவருக்கு உதவியது. பிர்கிட் இப்பொழுது எவ்வாறு உணருகிறார்? “யெகோவாவின் அருமையான அமைப்பில் இன்னும் இருப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என்று கூறுகிறார். 17-வயது ஆண்ட்ரேயாஸ் இவ்வாறு கூறுகிறான்: “இதுதான் யெகோவாவின் அமைப்பு, உலகத்திலேயே மிகச் சிறந்த அமைப்பு.” யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், அல்லவா?
முன்னின்று நடத்துவோரும் அபூரணரே
8, 9. தாவீதோடு இருந்த சிலர் எவ்வாறு நடந்துகொண்டார்கள், அதற்கு அவர் எப்படி பிரதிபலித்தார்?
8 மெய் வணக்கத்தில் முன்னின்று வழிநடத்த நியமிக்கப்பட்டிருப்போரும் அபூரணரே. அவர்கள் எல்லாரும் தவறு செய்கிறவர்கள்தான்; அதிலும் சிலர் சில விஷயங்களில் அதிக பலவீனராக இருக்கிறார்கள். அவற்றை மேற்கொள்ள கடினமாகப் போராடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நாம் சோர்ந்துவிட வேண்டுமா? இல்லை. பூர்வ இஸ்ரவேலில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்த ஆட்கள்கூட படுமோசமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். உதாரணமாக, சவுல் ராஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் மனஅமைதியின்றி தவித்த சமயத்தில் சங்கீதம் இசைத்து அவரை அமைதிப்படுத்தும்படி இளைஞனாயிருந்த தாவீதிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. பிற்பாடு, அந்த சவுல் ராஜாவே தாவீதை கொலைசெய்ய முயன்றதால், அவர் உயிர்தப்ப அங்கிருந்து ஓடவேண்டியதாயிற்று.—1 சாமுவேல் 16:14-23; 18:10-12; 19:18; 20:32, 33; 22:1-5.
9 தாவீதோடு இருந்த சக இஸ்ரவேலர் சிலரும்கூட அவருக்கு குழிபறித்தனர். உதாரணமாக, தாவீதின் ராணுவ தளபதியான யோவாப், சவுலின் உறவினரான அப்னேரை கொன்றார். ஆட்சியைப் பறிப்பதற்காக அப்சலோம் தன் தகப்பனான தாவீதுக்கு எதிராக சூழ்ச்சி செய்தான். தாவீதின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரான அகித்தோப்பேல் அவருக்கு துரோகம் இழைத்தார். (2 சாமுவேல் 3:22-30; 15:1-17, 31; 16:15, 21) இருந்தாலும், தாவீது மனக்கசப்படைந்து குறைகூறவுமில்லை, உண்மை வணக்கத்தை விட்டு விலகவுமில்லை. சொல்லப்போனால், அதற்கு நேர்மாறானதையே அவர் செய்தார். பிரச்சினைகள் வந்தபோது தாவீது யெகோவாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்; சவுலிடமிருந்து தப்பியோடியபோது அவருக்கிருந்த சிறந்த மனப்பான்மையை காத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் தாவீது இவ்வாறு பாடினார்: “எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.”—சங்கீதம் 57:1.
10, 11. கெர்ட்ரூட் என்ற சகோதரி தன்னுடைய இளவயதில் எதை எதிர்ப்பட்டார், சக வணக்கத்தாரின் குறைபாடுகளைக் குறித்து அவர் என்ன கூறினார்?
10 கடவுளுடைய அமைப்பிற்குள் இப்படி சூழ்ச்சிகள் செய்யப்படுவதாக குறைகூற இன்று நமக்கு எந்தக் காரணமும் இல்லை. கிறிஸ்தவ சபையில் வஞ்சகமான, கெட்ட ஆட்களை யெகோவாவோ, அவருடைய தூதர்களோ, ஆன்மீக மேய்ப்பர்களோ பொறுத்துக்கொள்வதில்லை. என்றாலும், நாம் எல்லாருமே மனித அபூரணத்தை எதிர்ப்படுகிறோம், அது நம்முடையதாகவும் இருக்கலாம், கடவுளுடைய மற்ற ஊழியர்களுடையதாகவும் இருக்கலாம்.
11 கெர்ட்ரூட் என்ற சகோதரி யெகோவாவை நீண்ட காலமாக சேவித்து வருகிறார். அவர் ஒரு முழுநேர ஊழியர் அல்ல, மாறாக, மோசடிக்காரர் என்பதாக இளவயதில் பொய் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் எப்படி பிரதிபலித்தார்? அப்படி நடத்தப்பட்டதற்காக கெர்ட்ரூட் முறுமுறுத்தாரா? இல்லை. 2003-ம் ஆண்டு தன்னுடைய 91-ம் வயதில் மரிப்பதற்கு முன் அவர் தன் வாழ்க்கையைக் குறித்து இவ்வாறு கூறினார்: “யெகோவா தம்முடைய முக்கியமான வேலையில் அபூரண மனிதர்களைப் பயன்படுத்துகிறார். அவர்கள் தவறு செய்தாலும் இந்த வேலையை வழிநடத்துகிறார். இதைத்தான் என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு கற்பித்திருக்கின்றன.” சக வணக்கத்தாரின் அபூரணங்களை எதிர்ப்பட்டபோது யெகோவாவிடம் கெர்ட்டூட் உள்ளப்பூர்வமாக ஜெபித்தார்.
12. (அ) முதல் நூற்றாண்டிலிருந்த சில கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட மோசமான முன்மாதிரி வைத்தனர்? (ஆ) நம் மனதை எவற்றில் நாம் ஊன்ற வைக்க வேண்டும்?
12 உண்மைத்தன்மை காட்டுவதிலும், தங்களையே அர்ப்பணிப்பதிலும் தலைசிறந்தவர்களாய் விளங்கும் கிறிஸ்தவர்கள்கூட அபூரணர்கள்தான். ஆகையால், நியமிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் தவறு செய்யும்போது, ‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் . . . செய்வதை’ தொடருவோமாக. (பிலிப்பியர் 2:16) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் இருந்த சிலருடைய கெட்ட முன்மாதிரியை நாம் பின்பற்றினால் அது நிச்சயம் வருந்தத்தக்கதாய் இருக்கும். அப்போதிருந்த பொய் போதகர்கள் ‘கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவமானவர்களைத் தூஷித்ததாக’ சீஷனாகிய யூதா குறிப்பிட்டார். அதோடு, இந்தப் பொல்லாதவர்கள் ‘முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களுமாக இருந்தார்கள்.’ (யூதா 8, 16; NW) இப்படி முறுமுறுத்து குறைகூறிய ஆட்களைப் போலின்றி ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பார் மூலமாக கிடைக்கும் அருமையான காரியங்களைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்போமாக. யெகோவாவின் அமைப்புக்கு நன்றியுள்ளவர்களாக இருந்து, ‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் . . . செய்வோமாக.’
“இது கடினமான உபதேசம்”
13. இயேசு கிறிஸ்துவின் சில போதனைகளைக் கேட்ட சிலர் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?
13 நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விரோதமாக முதல் நூற்றாண்டிலிருந்த சிலர் முறுமுறுத்தார்கள்; மற்றவர்களோ, இயேசுவின் போதனைகளுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். இச்சம்பவம் யோவான் 6:48-69-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” என்று இயேசு கூறினார். அதைக் கேட்டவுடன் “இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்” என்று “அவருடைய சீஷரில் அநேகர்” கூறினார்கள். “சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று” இயேசு அறிந்தார். அதோடு, “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.” ஆனால், எல்லா சீஷர்களும் முறுமுறுக்கவில்லை. “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ” என்று இயேசு தன்னுடைய 12 சீஷர்களைக் கேட்டபோது என்ன நடந்ததென்பதைக் கவனியுங்கள். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு பதிலளித்தார்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.”
14, 15. (அ) சில கிறிஸ்தவ போதனைகளைக் குறித்து சிலர் ஏன் முறுமுறுக்கிறார்கள்? (ஆ) எமானுவல் என்பவரின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 இன்றும், கடவுளுடைய மக்களில் சிலர் கிறிஸ்தவ போதனையின் ஏதோ சில விஷயங்களைக் குறித்து திருப்தியற்றவர்களாய் ஆகியிருக்கிறார்கள். அதனால், யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்திற்கு எதிராக முறுமுறுத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? காரியங்களை கடவுள் நிறைவேற்றும் விதத்தைப் பற்றி அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததே இதற்குக் காரணம். படைப்பாளர் தம் மக்களுக்கு உண்மைகளை படிப்படியாக வெளிப்படுத்துகிறார். ஆகவே, பைபிளைப் பற்றி நம்முடைய புரிந்துகொள்ளுதலில் சில சமயம் திருத்தங்கள் செய்யப்படலாம். அப்படிப்பட்ட திருத்தங்களைக் குறித்து யெகோவாவின் மக்கள் பெரும்பாலோர் சந்தோஷப்படுகிறார்கள். ‘மிஞ்சின நீதிமானாக’ இருக்கும் சிலர் மட்டும் இப்படிப்பட்ட மாற்றங்களைக் கண்டு எரிச்சலடைகிறார்கள். (பிரசங்கி 7:16) பெருமை இதற்குக் காரணமாக இருக்கலாம்; அதோடு, தன்னிச்சையாக செயல்படுவது என்ற கண்ணிக்குள் சிலர் சிக்கியிருக்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், இப்படி முறுமுறுப்பது ஆபத்தானது. ஏனெனில் அது நம்மை மறுபடியும் இந்த உலகத்திடம் இழுத்து, அதன் போக்கிற்குள் தள்ளிவிடலாம்.
15 உதாரணத்திற்கு, எமானுவல் என்ற சாட்சியை எடுத்துக்கொள்ளலாம். ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் அளிக்கும் பிரசுரங்களில் அவர் குற்றம் கண்டுபிடித்தார். (மத்தேயு 24:45, NW) அதனால் அப்பிரசுரங்களை வாசிப்பதையே நிறுத்திவிட்டார். பிற்பாடு, சபை மூப்பர்களிடம் தான் இனிமேலும் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்க விரும்பவில்லை என்று கூறினார். எனினும், யெகோவாவின் அமைப்பு போதித்த விஷயங்கள் உண்மையானவையே என்பதை எமானுவல் சீக்கிரத்தில் புரிந்துகொண்டார். சாட்சிகளை அவர் தொடர்பு கொண்டு, தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொண்டார். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதன் விளைவாக, அவர் மறுபடியும் சந்தோஷமுள்ள மனிதராக ஆனார்.
16. குறிப்பிட்ட சில கிறிஸ்தவ போதனைகளைப் பற்றிய சந்தேகங்களை மேற்கொள்ள எது நமக்கு உதவும்?
16 யெகோவாவுடைய அமைப்பின் சில போதனைகளைப் பற்றி சந்தேகப்படுவதால் அவற்றைக் குறித்து முறுமுறுக்க நாம் தூண்டப்பட்டால் என்ன செய்வது? நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நம்முடைய கேள்விக்கு பதிலளித்து, நம் சந்தேகங்களைப் போக்கும் ஏதோவொன்றை ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பார் காலப்போக்கில் பிரசுரிக்கலாம். கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியை நாடுவதும் ஞானமான செயல். (யூதா 22, 23, NW) ஜெபம், தனிப்பட்ட படிப்பு, ஆன்மீக சிந்தையுடைய சக விசுவாசிகளின் கூட்டுறவு ஆகியவை நம்முடைய சந்தேகங்களை நீக்க உதவலாம்; அதோடு, நமக்கு போதிப்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டின் மூலமாக விசுவாசத்தை பலப்படுத்தும் பைபிள் சத்தியங்களை நாம் கற்றிருக்கிறோம்; அவற்றிற்கு நம்முடைய நன்றியுணர்வை அதிகப்படுத்தவும் இப்படிப்பட்ட காரியங்கள் உதவும்.
நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள்
17, 18. முறுமுறுப்பதற்கு பதிலாக எப்படிப்பட்ட மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும், ஏன்?
17 அபூரண மனிதர்களுக்கு பாவம் செய்வதற்கான தூண்டுதல் இயல்பாகவே உள்ளது. தேவையில்லாமல் குறைசொல்வதற்கான தூண்டுதல் சிலருக்கு அதிகமாக இருக்கலாம். (ஆதியாகமம் 8:21; ரோமர் 5:12) ஆனால் முறுமுறுப்பது நம் பழக்கமாக ஆகிவிட்டால், யெகோவாவுடன் நாம் கொண்டிருக்கும் பந்தம் பாதிக்கப்படலாம். ஆகவே, முறுமுறுப்பதற்கான எவ்வித தூண்டுதலையும் நாம் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம்.
18 சபை காரியங்களைப் பற்றி முறுமுறுப்பதற்கு பதிலாக, நம்பிக்கையான மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும்; நம்மை சுறுசுறுப்பாக, சந்தோஷமாக, மரியாதையாக, சமநிலையாக, விசுவாசத்தில் உறுதியாக வைப்பதற்கு உதவும் பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். (1 கொரிந்தியர் 15:58; தீத்து 2:1-5) யெகோவா தம்முடைய அமைப்பில் நடக்கும் அனைத்தையும் கண்காணித்து வருகிறார். முதல் நூற்றாண்டிலிருந்த சபைகளை இயேசு நன்கு அறிந்திருந்ததுபோல, இன்று ஒவ்வொரு சபையிலும் தலைதூக்கும் காரியங்களை அவர் அறிந்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 1:10, 11) யெகோவாவும் கிறிஸ்தவ சபையின் தலைவரான கிறிஸ்துவும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொறுமையோடு காத்திருங்கள். பொறுப்புள்ள மேய்ப்பர்களை பயன்படுத்தி பிரச்சினைக்குரிய விஷயங்களை அவர்கள் சரிசெய்யலாம்.—சங்கீதம் 43:5; கொலோசெயர் 1:18; தீத்து 1:5.
19. மேசியானிய அரசாங்கம் மனித விவகாரங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையில், நாம் எதன்மீது கவனம் செலுத்த வேண்டும்?
19 சீக்கிரத்தில் சாத்தானின் இந்த உலகத்திற்கு ஒரு முடிவு ஏற்படும். மேசியானிய அரசாங்கம் மனித விவகாரங்களை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். அதுவரை, நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியம்! இப்படிப்பட்ட மனப்பான்மை, சக விசுவாசிகளுடைய குறைகளை பார்த்துக்கொண்டிராமல் அவர்களுடைய நல்ல பண்புகளுக்கு கவனம் செலுத்த உதவும். அவர்களுடைய நல்ல பண்புகளை மட்டுமே கவனித்துக்கொண்டிருக்கையில் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். இவ்வாறு செய்கையில், முறுமுறுத்து உணர்ச்சி ரீதியில் சோர்வடைவதற்குப் பதிலாக உற்சாகமடைவோம், ஆன்மீக ரீதியில் ஊக்கமடைவோம்.
20. நம்பிக்கையான மனநிலை என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்க நமக்கு உதவும்?
20 யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்துடன் தொடர்பு கொள்வதால் நாம் பெற்றிருக்கும் அநேக ஆசீர்வாதங்களை நினைவில் வைக்கவும் இந்த நம்பிக்கையான மனநிலை நமக்கு உதவும். சர்வலோக பேரரசருக்கு விசுவாசமாய் இருக்கும் ஒரே அமைப்பு உலகத்திலேயே இதுமட்டும்தான். அந்த உண்மையைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவை வணங்கும் சிலாக்கியத்தை குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? தாவீதின் மனநிலையே உங்களுக்கும் இருப்பதாக. அவர் இவ்வாறு பாடினார்: “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.”—சங்கீதம் 65:2, 4.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• சபையில் முன்னின்று நடத்துவோருக்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
• பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள் தவறு செய்கையில் நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்?
• பைபிளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலில் திருத்தங்கள் செய்யப்படுகையில் அதை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
• சந்தேகங்களை மேற்கொள்ள ஒரு கிறிஸ்தவருக்கு எது உதவும்?
[பக்கம் 20-ன் படம்]
சாலொமோனிடம் ஆலயக் கட்டுமான குறிப்புகளைக் கொடுத்து, தாவீது மெய் வணக்கத்தை மனப்பூர்வமாக ஆதரித்தார்
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்தவ மூப்பர்கள் ஆன்மீக உதவியை சந்தோஷமாக அளிக்கிறார்கள்