வாழ்க்கை சரிதை
நல்ல தெரிவுகளால் நீடித்த ஆசீர்வாதம்
பால் குஷ்னிர் சொன்னபடி
என்னுடைய தாத்தாவும் பாட்டியும் 1897-ல் உக்ரைனிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார்கள்; அங்கே சஸ்காட் செவன், யார்க்டனுக்கு அருகே நான்கு பிள்ளைகளுடன் (மூன்று பையன்கள் ஒரு பெண்) குடியேறினார்கள். 1923-ல் அவர்களுடைய மகள் மாரின்கா என்னைப் பெற்றெடுத்தார்; நான் அவருடைய ஏழாவது பிள்ளை. அப்போதெல்லாம் இன்றுபோல் வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்தோம். சத்தான உணவுகளைச் சாப்பிட்டோம்; குளிரைத் தாக்குப்பிடிக்கும் கதகதப்பான உடைகளை உடுத்தினோம், அரசாங்கம் அடிப்படை வசதிகளை செய்து தந்தது. நட்பாகப் பழகிய அக்கம்பக்கத்தார் பெரிய பெரிய வேலைகளைச் செய்துமுடிக்க ஒருவருக்கொருவர் மனமுவந்து உதவி செய்தார்கள். 1925-ஆம் ஆண்டின் இறுதியில் பைபிள் மாணாக்கர் ஒருவர் எங்களைச் சந்தித்தார்; யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறே அறியப்பட்டார்கள். அவருடைய சந்திப்பு நல்ல தெரிவுகளைச் செய்ய எங்களைத் தூண்டியது; அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.
பைபிள் சத்தியத்தை அறிந்தோம்
அந்த பைபிள் மாணாக்கரிடமிருந்து சிறு புத்தகங்கள் சிலவற்றை அம்மா பெற்றுக் கொண்டார்; அதுதான் சத்தியம் என சீக்கிரத்தில் புரிந்து கொண்டார். அவர் ஆன்மீக ரீதியாக விரைவில் முன்னேறி, 1926-ல் முழுக்காட்டப்பட்டார். அம்மா பைபிள் மாணாக்கராக ஆனபோது, வாழ்க்கையைப் பற்றிய எங்கள் குடும்பத்தின் கண்ணோட்டமே மாறியது. விருந்தாளிகளுக்காக எங்கள் வீட்டின் கதவு எப்போதுமே திறந்திருந்தது. பில்க்ரிம்ஸ் என அழைக்கப்பட்ட பயணக் கண்காணிகளும் மற்ற பைபிள் மாணாக்கர்களும் எங்கள் வீட்டில் அடிக்கடி தங்கினர். 1928-ல் பயணக் கண்காணி ஒருவர் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்பதன் சுருக்கப்பட்ட பதிப்பான “யுரேக்கா டிராமா”வை எங்களுக்கு போட்டுக் காண்பித்தார். பிள்ளைகளாகிய எங்களிடமிருந்து ‘கிளிக்’ என ஒலி எழுப்பிய ஒரு தவளைப் பொம்மையை அவர் வாங்கிக் கொண்டார். அந்தத் தவளைப் பொம்மையை வைத்து அவர் ‘கிளிக்’ செய்தபோது, ஒவ்வொரு ஸ்லைடாக மாற்றப்பட்டது. அவருக்கு அந்தப் பொம்மையை கொடுத்ததில் எங்களுக்கு பெருமையோ பெருமை!
பயணக் கண்காணியான இமல் ஸாரிஸ்க்கி அவருடைய டிரெய்லரில் வந்து எங்களை அடிக்கடி சந்தித்தார். சில சமயங்களில் அவருடைய பெரிய மகனையும் கூட்டிக் கொண்டு வந்தார்; பிள்ளைகளாகிய எங்களை முழுநேர ஊழியர்களாக அல்லது பயனியர்களாக ஆவதைக் குறித்து சிந்திக்கும்படி அவருடைய மகன் உற்சாகப்படுத்தினார். அநேக பயனியர்களும்கூட எங்கள் வீட்டில் தங்கினர். ஒரு சமயம், ஒரு பயனியருடைய சட்டையை அம்மா தைத்துக் கொண்டிருந்தார்; அதுவரை போடுவதற்கு ஒரு சட்டையை அவருக்கு இரவலாகக் கொடுத்திருந்தார். அவர் திரும்பிச் சென்றபோது தெரியாத்தனமாக அந்தச் சட்டையை கொண்டு போய்விட்டார். ரொம்ப நாட்கள் கழித்து அதை அவர் அனுப்பினார்; தாமதமாக அனுப்பியதற்கு மன்னிப்பு கேட்டு எழுதியிருந்ததோடு, “தபாலில் அனுப்ப என்னிடம் பத்து சென்ட்டுகள்கூட இருக்கவில்லை” என்றும் அவர் எழுதியிருந்தார். அந்தச் சட்டையை அவரே வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என நாங்கள் நினைத்தோம்! தன்னலம் துறந்த இந்தப் பயனியர்களைப் போலவே ஒரு நாள் நானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய அம்மாவின் உபசரிக்கும் குணத்திற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; அதுதான் எங்கள் வாழ்க்கையை வளமாக்கி, சகோதர சகோதரிகள்மீது அன்பை அதிகரிக்க உதவியது.—1 பேதுரு 4:8, 9.
அப்பா பைபிள் மாணாக்கராக ஆகவில்லை; இருந்தாலும் எங்களை அவர் எதிர்க்கவில்லை. 1930-ல் நடைபெற்ற ஒருநாள் மாநாட்டிற்காக தன்னுடைய பெரிய ஷெட்டை பயன்படுத்தவும்கூட சகோதரர்களை அனுமதித்தார். எனக்கு அப்போது ஏழு வயதுதான்; இருந்தாலும் அந்த மாநாட்டு நிகழ்ச்சியின் கண்ணியத்தையும், அங்கு நிலவிய சந்தோஷத்தையும் கண்டு அசந்துபோனேன். அப்பா 1933-ல் இறந்தார். தனிமரமாகிவிட்ட அம்மா, பிள்ளைகள் எட்டுப் பேரையும் உண்மை வணக்கத்தின் பாதையில் வளர்க்க தீர்மானமாயிருந்தார். கூட்டங்களுக்குச் சென்றபோது, என்னையும் அழைத்துக் கொண்டு போனார். அச்சமயத்தில், கூட்டங்கள் ரொம்ப நேரம் நடப்பதுபோல எனக்குத் தோன்றியது. மற்ற பிள்ளைகள் கூட்டங்களுக்கு வந்தாலும் விளையாடுவதற்காக வெளியே சென்றுவிடுவார்கள்; நானும் அவர்களோடு விளையாட ஆசைப்பட்டேன். ஆனாலும் அம்மாவுக்கு மதிப்பு கொடுத்து கூட்டத்திலேயே அமர்ந்திருந்தேன். அம்மா சமையல் செய்யும்போதுகூட ஒரு வசனத்தைச் சொல்லி, அது பைபிளில் எங்கிருக்கிறது என்பதை சொல்லும்படி எங்களிடம் புதிர் போடுவார். 1933-ல் எங்களுடைய நிலத்தில் அமோக விளைச்சல் இருந்தது, அதில் கிடைத்த வருமானத்தை வைத்து அம்மா ஒரு கார் வாங்கினார். பணத்தை வீண் செலவு செய்வதாக அக்கம்பக்கத்தார் சிலர் அம்மாவைக் குறைகூறினார்கள்; ஆனால், ஆன்மீக காரியங்களில் ஈடுபட அந்தக் கார் பயனுள்ளதாக இருக்கும் என அம்மா நினைத்தார். அவர் நினைத்தது நூற்றுக்கு நூறு சரியே.
சரியான தெரிவுகள் செய்ய மற்றவர்களின் உதவி
இளம் பருவத்தில் ஒருவர் செய்யும் தெரிவுகளைப் பொறுத்துதான் அவருடைய எதிர்காலம் அமைகிறது. அப்படியொரு தெரிவைச் செய்ய வேண்டிய கட்டம் வந்தபோது, என்னுடைய அக்காமாரான ஹெலனும், கேயும் பயனியரானார்கள். பயனியரான ஜான் ஜாஸூஸ்கீ எங்கள் வீட்டில் அடிக்கடி வந்து தங்குவார்; அவர் மிகச் சிறந்த இளைஞர்; சில நாட்கள் எங்களுடன் தங்கி, பண்ணை வேலைகளில் கூடமாட உதவி செய்யும்படி அம்மா அவரிடம் கேட்டுக் கொண்டார். கொஞ்ச காலம் கழித்து, ஜான் என் அக்கா கேயை மணம்செய்தார்; அவர்கள் இருவரும் எங்கள் வீட்டுக்கு கொஞ்சம் பக்கத்திலேயே பயனியராக சேவை செய்தார்கள். எனக்கு 12 வயதானபோது, பள்ளி விடுமுறை நாட்களில் அவர்களுடன் வெளி ஊழியத்திற்கு வரும்படி என்னையும் அழைத்தார்கள். பயனியர் ஊழியத்தை ருசித்துப் பார்க்க இந்தச் சந்தர்ப்பம் கைகொடுத்தது.
காலப்போக்கில், நானும் என் அண்ணன் ஜானும் சேர்ந்து பண்ணையை ஓரளவு நன்றாக கவனித்துக் கொண்டோம். இதனால், கோடைக் காலங்களில், துணைப்பயனியர் சேவை என இன்று அழைக்கப்படுகிற ஊழியத்தை அம்மா செய்யத் துவங்கினார். ஊழியத்திற்கு இரண்டு சக்கர குதிரை வண்டியில்தான் அம்மா பயணித்தார். வயதான அந்தக் குதிரை அடங்காப்பிடாரியாய் இருந்தது. அந்தக் குதிரைக்கு சவுல் என அப்பா பேரிட்டிருந்தார்; ஆனால், அம்மாவிடமோ அது பெட்டிப் பாம்பாய் அடங்கியிருந்தது. ஜானும் நானும் பண்ணை வேலைகளை ரொம்ப ரசித்து செய்வோம். ஆனால், ஒவ்வொரு முறையும் வெளி ஊழியம் முடித்து அம்மா திரும்பிவந்தபோது ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களைச் சொல்வார்; இதனால் பண்ணை வேலையைவிட பயனியர் ஊழியத்தின்மீது ரொம்ப ஆர்வம் ஏற்பட்டது. 1938-ல் ஊழியத்தில் மும்முரமாக இறங்கினேன்; பிப்ரவரி 9, 1940-ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.
சில காலம் கழித்து, சபையில் ஊழியனாக நியமிக்கப்பட்டேன். சபையின் பதிவுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது; அதிகரிப்பு ஏற்பட்டபோதெல்லாம் சந்தோஷத்தில் மிதந்தேன். என்னுடைய வெளி ஊழியப் பிராந்தியம் வீட்டிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. குளிர்காலத்தில், ஒவ்வொரு வாரமும் அந்த இடத்திற்கு நான் நடந்தே செல்வேன்; அங்கே, பைபிளில் ஆர்வம் காட்டிய ஒரு குடும்பத்தாருடைய வீட்டின் மாடி அறையில் ஓரிரு இரவுகள் தங்குவேன். ஒரு சமயம் லூத்தரன் போதகர் ஒருவரிடம் உரையாடினேன்; ஆனால் கொஞ்சம் யோசித்து நிதானமாகப் பேசத் தவறிவிட்டேன்; அவருடைய சர்ச் ஆட்களை சென்று சந்தித்தால், போலீசிடம் புகார் செய்துவிடுவதாக அவர் மிரட்டினார். அதைக் கேட்டு பயந்துவிடாமல், இன்னும் அதிகமாக ஊழியம் செய்யத் தீர்மானித்தேன்.
1942-ல் ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒஹாயோ, கிளீவ்லாண்ட்டில் நடைபெற்ற மாநாட்டுக்குச் செல்வதற்கு என் அக்கா கேயும் அவருடைய கணவர் ஜானும் திட்டமிட்டனர். என்னையும் வரும்படி அவர்கள் அழைத்தபோது, சந்தோஷத்தில் சிறகடித்துப் பறந்தேன். அந்த மாநாடு என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. என் எதிர்காலத் திட்டங்களில் உறுதியாயிருக்க அது எனக்கு உதவியது. அச்சமயத்தில் உலகளாவிய வேலையை தலைமை தாங்கி நடத்திவந்த சகோதரர் நேதன் நார் 10,000 பயனியர்கள் தேவை என்ற உந்துவிக்கும் அழைப்பைக் கொடுத்தபோது, அவர்களில் நானும் ஒருவன் என அந்த நொடியே தீர்மானித்தேன்!
ஜனவரி 1943-ல் பயணக் கண்காணியான ஹென்றி எங்கள் சபையைச் சந்தித்தார். உற்சாகம் ததும்பிய உந்துவிக்கும் பேச்சைக் கொடுத்தார். அதற்கு அடுத்தநாள் வெளியே வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே 40 டிகிரி செல்ஷியஸாக இருந்தது; அதோடு வடமேற்கிலிருந்து பலத்த காற்றும் வீசியதால் கடும்குளிர் நிலவியது. உடம்பைத் துளைக்கும் இத்தகைய குளிரில் பொதுவாக நாங்கள் வெளியில் செல்லவே மாட்டோம். ஆனால் ஹென்றி எப்படியாவது ஊழியத்திற்குச் செல்ல வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்தார். அவரும், மற்றவர்களும் விறகடுப்பு பொருத்தப்பட்ட கபூஸ் என்ற பனிச்சறுக்கு குதிரை வண்டியில் 11 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கிராமத்திற்குச் சென்றனர். ஜந்து பையன்களை உடைய ஒரு குடும்பத்தைச் சந்திப்பதற்காக நான் தனியாகச் சென்றேன். பைபிள் படிப்புக்கு அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்; பிற்பாடு சத்தியத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.
தடையுத்தரவு காலத்தில் ஊழியம்
இரண்டாம் உலகப் போரின்போது, கனடாவில் பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டிருந்தது. எங்களுடைய பைபிள் பிரசுரங்களை யார் கண்ணிலும் பட்டுவிடாமல் மறைத்து வைக்க வேண்டியிருந்தது; அதற்கேற்றாற்போல் எங்கள் பண்ணையிலும் ஒளித்து வைப்பதற்கு ஏகப்பட்ட இடங்கள் இருந்தன. அதைக் கண்டுபிடிப்பதற்காக போலீசார் அடிக்கொருதரம் அங்கே வந்தார்கள்; ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் ஊழியத்தில் பைபிளை மட்டுமே பயன்படுத்தினோம். சிறுசிறு தொகுதிகளாகக் கூடி வந்தோம்; பிரசுரங்களை இரகசியமாக கொண்டு செல்லும் வேலைக்கு நானும் என் அண்ணன் ஜானும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
யுத்தம் நடந்த சமயத்தில், நாஸிஸத்தின் முடிவு என்ற ஆங்கில சிறுபுத்தகத்தை நாடெங்கும் விநியோகிப்பதில் எங்கள் சபையும் பங்கு பெற்றது. நாங்கள் நள்ளிரவில் வெளியே கிளம்புவோம். நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் பதுங்கி பதுங்கிச் சென்று வாசற்படியில் இந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு வரும்போது எனக்கு பயமாக இருந்தது. நான் இந்தளவு பயந்து நடுங்கிக்கொண்டு எந்தக் காரியத்தையும் செய்ததே இல்லை. நாங்கள் அந்தச் சிறுபுத்தகத்தின் கடைசி பிரதியை வைத்துவிட்டு வரும்போது எவ்வளவு நிம்மதியாக இருந்தது! பிறகு, எங்கள் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வேகவேகமாக திரும்பினோம், எல்லாரும் வந்துவிட்டோமா என்பதை உறுதிசெய்த பிறகு, இருட்டிலேயே காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினோம்.
பயனியர் சேவை, சிறைவாசங்கள், மாநாடுகள்
மே 1, 1943-ஆம் தேதி, அம்மாவிடம் விடைபெற்றேன். என்னுடைய பர்ஸில் 20 டாலர்களுடனும், ஒரு சிறிய சூட்கேஸுடனும் என் முதல் பயனியர் நியமிப்புக்கு புறப்பட்டேன். சஸ்காட் செவன், க்வில் லேக்கைச் சேர்ந்த சகோதரர் டாம் ட்ரூப்பும் அவருடைய அன்பான குடும்பத்தினரும் என்னை வரவேற்று உபசரித்தார்கள். அடுத்த வருடம், சஸ்காட் செவனிலுள்ள வேபான் என்ற ஒதுக்குப்புற பிராந்தியத்திற்குச் சென்றேன். டிசம்பர் 24, 1944-ல் தெரு ஊழியம் செய்துக் கொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டேன். சில காலம் உள்ளூர் சிறையில் கழித்தப் பிறகு, ஆல்பர்ட்டாவிலுள்ள ஜேஸ்பர் என்ற இடத்திலிருந்த ஒரு சிறைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டேன். யெகோவாவின் படைப்பை கம்பீரமாக பறைசாற்றிய கனடியன் ராக்கி மலைத்தொடர்கள் சூழ்ந்த அவ்விடத்தில் மற்ற சாட்சிகளும் இருந்தனர். 1945-ன் ஆரம்பத்தில், ஆல்பர்ட்டாவிலுள்ள எட்மண்டன் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குச் செல்ல முகாம் அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி தந்தனர். அக்கூட்டத்தில் சகோதரர் நார் உலகளாவிய வேலையின் வளர்ச்சியைக் குறித்து உற்சாகமூட்டும் அறிக்கையை அளித்தார். சிறையிலிருந்து விடுதலைப் பெற்று, மீண்டும் ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடப்போகும் அந்த நாளுக்காக மிகவும் ஏங்கினோம்.
எனக்கு விடுதலை கிடைத்த பிறகு, மீண்டும் பயனியர் செய்யத் தொடங்கினேன். அதற்கு பிறகு, கொஞ்ச காலத்திலேயே, கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் “அனைத்து தேசங்களின் விஸ்தரிப்பு” மாநாடு நடக்கப்போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. என்னுடைய புதிய பயனியர் நியமிப்பு பகுதியைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் தன்னுடைய டிரக்கில் 20 பயணிகள் அமருவதற்கு ஏற்ப வசதிகள் செய்தார். ஆகஸ்ட் 1, 1947-ல் நெஞ்சைவிட்டு நீங்காத பயணத்தை ஆரம்பித்தோம்; 7,200 கிலோமீட்டர் தூர பயணத்தில், பரந்த புல்வெளிகளையும், பாலைவனங்களையும், எல்லோஸ்டோன் மற்றும் யோஸ்மைட் தேசிய பூங்காக்களையும் அதுபோன்ற மற்ற கம்பீரமான இயற்கை காட்சிகளையும் கண்டுகளித்தவாறு சென்றோம். அந்தப் பயணம் 27 நாட்கள் நீடித்தது; அற்புதமான இனிய அனுபவம் அது!
அந்த மாநாடும்கூட மறக்கமுடியாத அருமையான அனுபவமாக இருந்தது. அதிலிருந்து முழுமையாக நன்மையடைய பகலில் அட்டென்டண்ட்டாகவும் இரவில் காவல்காரனாகவும் பணியாற்றினேன். மிஷனரி சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, அதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்தேன்; ஆனால் எனக்கு அழைப்பு கிடைக்கும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. அதற்கிடையே, 1948-ல் கனடாவைச் சேர்ந்த கியுபெக் மாகாணத்தில் பயனியர்கள் தேவை என்பதை அறிந்ததால் மனமுவந்து அங்கே சென்றேன்.—ஏசாயா 6:8.
கிலியட் பள்ளியும் அதற்கு பிறகும்
1949-ல் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 14-வது வகுப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றபோது சந்தோஷத்தில் திளைத்தேன். அதில் கிடைத்த பயிற்சி என் விசுவாசத்தை பலப்படுத்தியதோடு யெகோவாவிடமும் நெருங்கிவரச் செய்தது. ஜானும் கேயும் 11-வது வகுப்பில் பட்டம் பெற்று, வட ரோடீஷியாவில் (இன்றைய ஜாம்பியாவில்) மிஷனரிகளாக சேவை செய்து வந்தனர். என் அண்ணன் ஜான் 1956-ல் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றார். இறக்கும் வரையில், அவருடைய மனைவி ஃப்ரீடாவுடன் பிரேசிலில் 32 ஆண்டுகள் சேவை செய்தார்.
பிப்ரவரி 1950-ல் என்னுடைய பட்டமளிப்பு நாளன்று, எனக்கு வந்த இரண்டு வாழ்த்துத் தந்திகள் என்னை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தின; ஒன்று, என்னுடைய அம்மாவிடமிருந்தும், இரண்டாவது க்வில் லேக்கிலுள்ள ட்ரூப் குடும்பத்தினரிடமிருந்தும் வந்தது. இந்த இரண்டாவது தந்தியில், “பட்டதாரிக்கு ஓர் அறிவுரை” என்ற தலைப்பில்: “இந்த நாள் உங்கள் வாழ்வில் இனிய நாள், நீங்கள் பொன்னெனப் போற்றும் நாள், உங்கள் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் பெற்று வளர்க” என்பதாக வாழ்த்தியிருந்தார்கள்.
கியுபெக் நகரத்தில் சேவை செய்வதற்கு எனக்கு நியமிப்பு கிடைத்தது; ஆனாலும், நியு யார்க் மாகாணத்திலுள்ள ராஜ்ய பண்ணையிலேயே கொஞ்ச காலத்திற்கு தங்கினேன்; அப்போது கிலியட் பள்ளி அங்குதான் நடைபெற்றது. பின்பு ஒருநாள், ‘பெல்ஜியத்திற்கு போகத் தயாரா’ என்பதாக சகோதரர் நார் என்னிடம் கேட்டார். இருந்தாலும், இரண்டுமூன்று நாட்கள் கழித்து, ‘நெதர்லாந்தில் நியமிப்பு கிடைத்தால் போகத் தயாரா’ என்று கேட்டார். நியமிப்புக் கடிதம் கிடைத்தபோது, அங்கே, “கிளை அலுவலக ஊழியராக வேலை செய்யும்படி” தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் மலைத்துப் போனேன்.
ஆகஸ்ட் 24, 1950-ல், நெதர்லாந்துக்கு கப்பல் ஏறினேன்; 11 நாட்கள் நீடித்த அந்தப் பயணத்தின்போது, புதிதாக வெளியிடப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பை [ஆங்கிலம்] முழுமையாக வாசித்து முடித்தேன். செப்டம்பர் 5, 1950-ல் ரோட்டர்டாமில் வந்திறங்கினேன்; அங்கே இருந்த பெத்தேல் குடும்பத்தார் என்னை அன்பாக வரவேற்றார்கள். இரண்டாம் உலகப்போர் அந்நாட்டை சின்னாபின்னமாக்கியபோதிலும்கூட, கிறிஸ்தவ நடவடிக்கைகளை மீண்டும் துவங்குவதற்கு சகோதரர்கள் அரும்பாடுபட்டிருந்தார்கள். கடுமையான துன்புறுத்தல்களின் மத்தியிலும் உத்தமத்தைக் காத்துக்கொண்ட அந்தச் சகோதரர்களுடைய அனுபவங்களை நான் கேட்டபோது, அனுபவமற்ற இளம் கிளை அலுவலக ஊழியனின் மேற்பார்வையில் சேவை செய்வதை அவர்கள் கஷ்டமாக கருதுவார்களோ என்பதாக மனதுக்குள் பயந்தேன். ஆனால், நான் அனாவசியமாக பயந்திருக்கிறேன் என்பதை விரைவில் புரிந்துகொண்டேன்.
இருந்தபோதிலும், சில விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டியிருந்தது. ஒரு மாநாடு நடப்பதற்குச் சற்று முன்புதான் நான் அங்கு சென்றிருந்தேன்; மாநாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த விதத்தைப் பார்த்து அசந்து போனேன். அடுத்த மாநாட்டின்போது, வீடுகளில் தங்க வைப்பதற்கு முயற்சி செய்யும்படி யோசனை தெரிவித்தேன். அது சிறந்த யோசனையாக இருந்தாலும், தங்கள் நாட்டுக்கு அது ஒத்துவராது என்பதாக சகோதரர்கள் நினைத்தார்கள். அதைக் குறித்து பலவாறு ஆலோசித்தப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்தோம்; பிரதிநிதிகளில் பாதிபேரை மாநாட்டு வளாகத்தில் தங்க வைப்பது எனவும், மீதிபேரை மாநாடு நடைபெறுகிற ஊரிலுள்ள சாட்சிகளல்லாதவர்களின் வீடுகளில் தங்க வைப்பது எனவும் தீர்மானித்தோம். சகோதரர் நார் மாநாட்டுக்கு வந்தபோது, அதனால் கிடைத்த பலன்களைக் குறித்து கொஞ்சம் பெருமையுடன் அவரிடம் சுட்டிக் காட்டினேன். இருந்தபோதிலும், அந்த மாநாட்டைப் பற்றிய அறிக்கை காவற்கோபுரத்தில் வெளியானபோது, இருந்த கொஞ்சநஞ்ச சாதனை உணர்வும் அடியோடு காணாமல் போனது. அந்த அறிக்கையில்: “அடுத்த முறை சகோதரர்கள் விசுவாசத்தோடு செயல்பட்டு மாநாட்டுக்கு வருகை தருபவர்களை அங்குள்ள மக்களுடைய வீடுகளில் தங்க வைப்பதற்கு முயற்சி எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்; அதுதான் சிறந்த விதத்தில் சாட்சி கொடுப்பதற்கு உதவும்” என்று எழுதியிருந்தது. “அடுத்த முறை” நாங்கள் அப்படியே செய்தோம்!
ஜூலை 1961-ல் கிளை அலுவலக பிரதிநிதிகளுடன் லண்டனில் நடைபெற்ற கூட்டத்திற்கு எங்கள் கிளை அலுவலகத்திலிருந்து இரண்டு பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள். பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பை டச்சு மொழி உட்பட இன்னும் அநேக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான திட்டத்தைக் குறித்து சகோதரர் நார் தெரிவித்தார். அதைக் கேட்டதும் நாங்கள் சந்தோஷத்தில் பூரித்தோம்! நல்லவேளையாக, அது எவ்வளவு பெரிய வேலை என்பதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 1963-ல் நியு யார்க்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது; அப்போது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு டச்சு மொழியில் வெளியிடப்பட்டது.
தீர்மானங்களும் புதிய நியமிப்புகளும்
ஆகஸ்ட் 1961-ல் லைடா வாமலிங்க் என்பவரை நான் மணம்செய்தேன். அவளுடைய குடும்பத்தினர், 1942-ல் நாசி துன்புறுத்தலின் காலத்தில் சத்தியத்திற்கு வந்தவர்கள். லைடா 1950-லிருந்து பயனியராக சேவைசெய்து வந்தாள்; 1953-ல் பெத்தேலுக்கு வந்தாள். அவள் பெத்தேலிலும் சபையிலும் சுறுசுறுப்பாக வேலை செய்ததைக் கண்டு என்னுடைய ஊழியத்தில் எனக்கு உற்ற துணையாக இருப்பாள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
எங்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு, புரூக்ளினில் நடைபெற்ற பத்து மாத கூடுதல் பயிற்சித் திட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன். கணவர்களுடன் மனைவிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. லைடாவின் உடல்நிலை சரியில்லாதபோதிலும்கூட அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படி அவள் சந்தோஷமாக ஆமோதித்தாள். பிற்பாடு, லைடாவின் உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. பெத்தேலில் தொடர்ந்து வேலை செய்வதற்கு எங்களால் முடிந்தளவு முயன்றோம்; ஆனால் முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவது எங்களுடைய சூழ்நிலைக்கு இன்னும் நல்லது என்பதாக கடைசியில் தீர்மானித்தோம். எனவே, பயண ஊழியர்களாக சேவை செய்யத் துவங்கினோம். அதற்குப் பிறகு கொஞ்ச காலத்திலேயே, என் மனைவிக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் ஆதரவுடன் அந்தச் சூழ்நிலையை எங்களால் சமாளிக்க முடிந்தது; பிறகு, ஒரு வருடம் கழித்து மாவட்ட கண்காணியாக சேவை செய்வதற்கான நியமிப்பையும் ஏற்றுக்கொண்டோம்.
ஏழு ஆண்டுகள் பயண ஊழியத்தில் செலவிட்டது அதிக புத்துணர்ச்சி அளித்தது. பிறகு மீண்டும் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை வந்தது; பெத்தேலில் ராஜ்ய ஊழியப் பள்ளியில் கற்பிப்பதற்காக அழைக்கப்பட்டேன். பயண ஊழியத்தை நாங்கள் மிகவும் நேசித்த காரணத்தால், அதற்கு ஒத்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது; என்றாலும் ஒத்துக்கொண்டோம். அந்தப் பள்ளியில் 47 வகுப்புகள் நடைபெற்றன; ஒவ்வொரு வகுப்பும் இரண்டு வாரங்கள் நீடித்தன. சபை மூப்பர்களோடு ஆன்மீக விஷயங்களை பகிர்ந்துகொள்ள எனக்கு அது மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
அம்மாவை 1978-ம் வருடம் சென்று சந்திப்பதற்கு அச்சமயத்தில் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தேன். ஆனால், திடீரென்று ஏப்ரல், 29, 1977-ல் அம்மா இறந்துவிட்டதாக எங்களுக்கு தந்தி கிடைத்தது. அவருடைய அன்பொழுகும் குரலை இனி கேட்க முடியாது என்பதோடு, அவர் எனக்குச் செய்த எல்லாவற்றுக்காகவும் நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை அவருக்கு சொல்வதற்கும் வாய்ப்பில்லாமல் போனதை உணர்ந்தபோது, துக்கத்தில் துவண்டுபோனேன்.
ராஜ்ய ஊழியப் பள்ளி முடிந்தபிறகு, பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினராக ஆவதற்கு அழைப்பு பெற்றோம். அதற்குப் பிறகு வந்த வருடங்களில், கிளை அலுவலக ஒருங்கிணைப்பாளராக பத்து வருடங்கள் சேவை செய்தேன். பிற்பாடு, பொறுப்பை நன்கு நிர்வகிக்கிற புதிய ஒருங்கிணைப்பாளரை ஆளும் குழு நியமித்தது. நான் அதற்கு மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
வயதைப் பொறுத்து முடிந்தளவு சேவை
லைடாவுக்கும் எனக்கும் இப்போது 83 வயதாகிறது. முழுநேர ஊழியத்தில் 60-க்கும் அதிகமான ஆண்டுகளை மகிழ்ச்சியுடன் கழித்திருக்கிறேன்; அதில் கடந்த 45 ஆண்டுகளை என் உண்மையுள்ள மனைவியுடன் கழித்திருக்கிறேன். எங்களுடைய நியமிப்புகள் அனைத்திலும் என்னை முழுமையாக ஆதரிப்பதை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த சேவையின் ஒரு பாகமாகவே அவள் கருதியிருக்கிறாள். தற்போது, பெத்தேலிலும் சபையிலும் எங்களால் முடிந்தளவுக்கு சேவைசெய்து வருகிறோம்.—ஏசாயா 46:4.
அவ்வப்போது, எங்கள் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை மனதில் அசைபோட்டு ஆனந்தம் அடைகிறோம். யெகோவாவின் சேவையில் செய்த எதைக் குறித்தும் நாங்கள் ஒருபோதும் வருந்தியதில்லை; எங்களுடைய இளம் பருவத்தில் நாங்கள் செய்த தெரிவுகள் மிகச் சிறந்தவை என்பதையும் உறுதியாக நம்புகிறோம். எங்கள் முழு பலத்தோடும் யெகோவாவைத் தொடர்ந்து சேவிக்கவும் கனப்படுத்தவும் தீர்மானமாயிருக்கிறோம்.
[பக்கம் 13-ன் படம்]
நானும் என் அண்ணன் பில்லும் எங்கள் குதிரை சவுலும்
[பக்கம் 15-ன் படம்]
ஆகஸ்ட் 1961-ல் எங்கள் மணநாள் அன்று
[பக்கம் 15-ன் படம்]
இன்று லைடாவுடன்