இளையோருக்கு வரப்பிரசாதமாயுள்ள —முதியோர்
“தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும் வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.”—சங்கீதம் 71:18.
1, 2. கடவுளின் ஊழியர்களாய் இருக்கிற முதியோர் எதை உணர வேண்டும், இப்போது எதைப்பற்றி நாம் சிந்திக்கப்போகிறோம்?
ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியில் ஒரு கிறிஸ்தவ மூப்பர், அபிஷேகம் செய்யப்பட்ட முதிய சகோதரரைப் பார்க்கச் சென்றிருந்தார். “எப்படி இருக்கிறீர்கள்?” என்று அவரை நலம் விசாரித்தார். அதற்கு அந்த முதிய சகோதரர், “என்னால் ஓட முடிகிறது, குதிக்க முடிகிறது” என்று பதில் சொல்லிக்கொண்டே அவற்றைச் செய்து காட்டவும் முற்பட்டார். “ஆனால், . . .” என்று உரையாடலை இழுத்த அவர், “என்னால் பறக்க முடியாது” என்றார். அவர் சொல்ல வந்த கருத்தை அந்த மூப்பர் சட்டெனப் புரிந்துகொண்டார். ‘என்னால் செய்ய முடிந்ததை விரும்பிச்செய்கிறேன், முடியாததை விட்டுவிடுகிறேன்’ என்பதே அதன் அர்த்தம். அந்த மூப்பர் இப்போது 80 வயதைத் தாண்டிவிட்டார்; ஆனால் இன்றும் அந்தச் சகோதரரின் நகைச்சுவை உணர்வையும் உண்மைப் பற்றுறுதியையும் பிரியத்தோடு நினைத்துப் பார்க்கிறார்.
2 கடவுளுக்குப் பிடித்தமான குணங்களை முதியோர் வெளிக்காட்டுவது, மற்றவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். ஆனாலும், ஒருவரின் வயது ஏற ஏற, ஞானமும் கிறிஸ்துவின் குணங்களும் தானாக அவரில் மலர்ந்துவிடாது. (பிரசங்கி 4:13) பைபிள் குறிப்பிடுகிறது: “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.” (நீதிமொழிகள் 16:31) நீங்கள் தள்ளாத வயதில் இருப்பவரா? அப்படியென்றால், உங்கள் பேச்சும் செயலும் மற்றவர்களுக்கு எந்தளவு நன்மை தரக்கூடும் என்பதை உணருகிறீர்களா? இளையோருக்கு வரப்பிரசாதமாய் இருந்த முதியோரின் உதாரணங்கள் பைபிளில் காணப்படுகின்றன, அவற்றில் சிலவற்றை இப்போது சிந்திக்கலாம்.
நீடித்த பலன்தந்த விசுவாசம்
3. நோவாவின் உண்மைத்தன்மையால் இன்று வாழ்கிற அனைத்து மக்களுக்கும் என்ன நன்மை விளைந்திருக்கிறது?
3 நோவாவின் விசுவாசத்தாலும் மன உறுதியாலும் விளைந்திருக்கிற நீடித்த பலன்களை இன்றும் நம்மால் உணர முடிகிறது. நோவா பேழையைக் கட்டியபோது 600 வயதைத் தொடவிருந்தார்; அந்த வயதிலும் அவர் மிருகங்களைக் கூட்டிச் சேர்த்தார், அக்கம்பக்கத்தாருக்குப் பிரசங்கித்தார். (ஆதியாகமம் 7:6; 2 பேதுரு 2:5) கடவுள்மீது நோவாவுக்கிருந்த பயபக்தியினாலேயே தன் குடும்பத்தோடு ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தார்; இன்று வாழ்கிற அனைத்து மக்களின் மூதாதையும் ஆனார். ஆம், பொதுவாக ஜனங்களின் வாழ்நாள் நீண்டிருந்த காலத்திலேயே நோவா வாழ்ந்தார். என்றபோதிலும், தனது தள்ளாத வயதில்கூட அவர் உண்மையுடன் நிலைத்திருந்ததால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைந்தன. எவ்வாறு?
4. நோவாவின் மன உறுதி கடவுளுடைய ஊழியர்களுக்கு எவ்வாறு பலனளித்திருக்கிறது?
4 “பூமியை நிரப்புங்கள்” என்று யெகோவா கொடுத்த கட்டளைக்கு எதிராக நிம்ரோது பாபேல் கோபுரத்தைக் கட்டத் தொடங்கியபோது நோவாவுக்கு கிட்டத்தட்ட 800 வயது. (ஆதியாகமம் 9:1; 11:1-9) என்றாலும், நிம்ரோது செய்த அந்தக் கலகத்திற்கு நோவா துணைபோகவில்லை. அதன் பலனாக, கலகம் செய்தவர்களின் பாஷை தாறுமாறாக்கப்பட்டபோது நோவாவின் பாஷை மாறவில்லை. முதிர்வயதில் மட்டுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் நோவா வெளிக்காட்டிய விசுவாசமும் மன உறுதியும் இன்று கடவுளின் அனைத்து ஊழியர்களும் பின்பற்றத் தகுந்தவையே.—எபிரெயர் 11:7.
குடும்பத்தார்மீது ஏற்படுத்துகிற தாக்கம்
5, 6. (அ) ஆபிரகாமுக்கு 75 வயதாக இருந்தபோது, என்ன செய்யும்படி யெகோவா அவரிடம் சொன்னார்? (ஆ) கடவுளுடைய கட்டளையைக் கேட்ட ஆபிரகாம் என்ன செய்தார்?
5 முதியோர் தங்கள் குடும்பத்தாரது விசுவாசத்தின் மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்பதை, நோவாவுக்குப் பிறகு வாழ்ந்த முற்பிதாக்களின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ‘கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்’ என்று சொன்னபோது ஆபிரகாமுக்குச் சுமார் 75 வயது.—ஆதியாகமம் 12:1, 2.
6 உங்களை அந்த நிலையில் வைத்துச் சற்று கற்பனை செய்து பாருங்கள். பிறந்த வீட்டை விட்டு, உற்ற நண்பர்களை விட்டு, சொந்த நாட்டை விட்டு, உறுதுணையாயிருந்த உறவினர்களை விட்டுப் புறப்பட்டு, முன்பின் தெரியாத ஒரு தேசத்துக்குப் போகும்படி கடவுள் உங்களிடம் சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படிப் போகும்படிதான் ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார். தன்னிடம் ‘யெகோவா சொன்னபடியே’ ஆபிரகாம் ‘புறப்பட்டுப்போனார்.’ அவருடைய வாழ்நாளில் மீந்திருந்த காலமெல்லாம் கானான் தேசத்தில் ஓர் அந்நியனாகவும் பரதேசியாகவுமே கூடாரங்களில் வசித்தார். (ஆதியாகமம் 12:4; எபிரெயர் 11:8, 9) ‘பெரிய ஜாதியாக்குவேன்’ என்று ஆபிரகாமிடம் யெகோவா சொல்லியிருந்தபோதிலும், அவருடைய சந்ததியினர் பலுகிப் பெருகுவதற்கு வெகு காலம் முன்பாகவே ஆபிரகாம் இறந்துவிட்டார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஆபிரகாம் 25 வருடங்கள் நாடோடியாகத் திரிந்த பின்னரே அவருடைய மனைவி சாராள், தன் ஒரே மகனாகிய ஈசாக்கைப் பெற்றெடுத்தார். (ஆதியாகமம் 21:2, 5) அப்படியிருந்தும்கூட, ஆபிரகாம் மனதளவில் சோர்ந்துபோய், தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போகவில்லை. விசுவாசத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் எப்பேர்ப்பட்ட ஓர் உதாரணம்!
7. ஆபிரகாமின் சகிப்புத்தன்மை, அவருடைய மகனான ஈசாக்கின்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, மனிதகுலத்துக்கு அதனால் என்ன நன்மை விளைந்தது?
7 ஆபிரகாமின் சகிப்புத்தன்மை அவருடைய மகன் ஈசாக்கின் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியெனில், ஈசாக்கு தன் வாழ்நாள் முழுவதையும், அதாவது 180 ஆண்டுகளையும், ஓர் அந்நியனாகவே கானான் தேசத்தில் செலவிட்டார். கடவுள் அளித்த வாக்குறுதியில் அவருக்கிருந்த விசுவாசத்தினாலேயே அப்படிச் சகித்திருந்தார். அந்தளவு விசுவாசம் அவருக்கு எப்படி வந்தது? தள்ளாத வயதிலிருந்த அவருடைய பெற்றோர், கடவுளின் வாக்குறுதியை அவருடைய இருதயத்தில் படிப்படியாகப் பதியவைத்தபோது அதன்மீது அவருக்கு விசுவாசம் ஏற்பட்டது; பின்னர் யெகோவாவே அவரிடம் பேசியபோது அந்த விசுவாசம் வலுப்பெற்றது. (ஆதியாகமம் 26:2-5) ஆபிரகாமின் வம்சத்தில் வரும் ‘வித்துவின்’ மூலமே மனிதகுலம் முழுவதும் ஆசீர்வதிக்கப்படுமென்று யெகோவா அளித்திருந்த வாக்குறுதி நிறைவேறியதற்கு ஈசாக்கின் மன உறுதி ஒரு முக்கியக் காரணியாக இருந்தது. எப்படியெனில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ‘வித்துவின்’ முதன்மை பாகமாகிய இயேசு கிறிஸ்து தம்மில் விசுவாசம் வைக்கும் அனைவரும் கடவுளோடு ஒப்புரவாகி நித்திய ஜீவனை அனுபவிக்க வழிதிறந்து வைத்தார்.—கலாத்தியர் 3:16; யோவான் 3:16.
8. யாக்கோபு உறுதியான விசுவாசத்தை எவ்வாறு வெளிக்காட்டினார், அதனால் விளைந்த நன்மை என்ன?
8 ஈசாக்கும், தனது மகனான யாக்கோபு உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உதவினார். அதனால்தான் யாக்கோபு தனது தள்ளாத வயதிலும் பலத்த விசுவாசத்தை வெளிக்காட்டினார். ஒரு தேவதூதனோடு இரவெல்லாம் போராடி மேற்கொண்டபோது அவருக்கு 97 வயது. (ஆதியாகமம் 32:24-28) அவர் 147 வயதில் இறப்பதற்கு முன்பு, தன் உடலில் இருந்த சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி தனது 12 மகன்களையும் ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 47:28) அன்று அவர் உரைத்த தீர்க்கதரிசனங்கள் ஆதியாகமம் 49:1-28-ல் பதிவாகியுள்ளன; அச்சுப்பிசகாமல் அவை நிறைவேறின, இன்றும் நிறைவேறி வருகின்றன.
9. ஆன்மீக முதிர்ச்சியுள்ள முதியோர் தங்கள் குடும்பத்தாருக்கு எவ்வாறெல்லாம் உதவலாம்?
9 கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதி காட்டியிருக்கும் முதிய ஊழியர்கள், தங்களது குடும்பத்தார்மீது அருமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்பது தெளிவு. இளவயதிலுள்ள ஒருவர் திடமான விசுவாசத்தை ஊட்டமாகப்பெற்று ஆன்மீக ரீதியில் நன்கு வளருவதற்கு முதிய ஊழியர்கள் எவ்வாறெல்லாம் உதவலாம்? முக்கியமாக, வேதவாக்கியங்களிலிருந்து அறிவுரைகள் வழங்கலாம், அனுபவத்திலிருந்து ஆலோசனைகள் அளிக்கலாம், சகிப்புத்தன்மைக்கு உதாரணமாய் விளங்கலாம். (நீதிமொழிகள் 22:6) இவ்வாறு, தங்கள் குடும்பத்தாருக்கு தாங்கள் ஒரு வரப்பிரசாதமாய்த் திகழ முடியும் என்பதை முதியோர் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
சக ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்
10. யோசேப்பு “தன் எலும்புகளைக் குறித்து” என்ன ‘கட்டளைகொடுத்தார்,’ அதனால் விளைந்த நன்மை என்ன?
10 முதியோர், சக ஊழியர்கள்மீதும் அருமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். யாக்கோபுவின் மகனான யோசேப்பு தனது முதிர்வயதில் ஓர் எளிய செயலின்மூலம் தன் விசுவாசத்தை வெளிக்காட்டினார்; அது அவருக்குப் பின்பு வாழ்ந்த லட்சக்கணக்கான உண்மை வணக்கத்தார்மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. “தன் எலும்புகளைக் குறித்துக் கட்டளைகொடுத்த” சமயத்தில் அவர் 110 வயதானவராய் இருந்தார். என்ன கட்டளை கொடுத்தார்? இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகிச் செல்லும்போது, அவருடைய எலும்புகளை அங்கிருந்து கொண்டுபோகும்படியாகக் கட்டளை கொடுத்தார். (எபிரெயர் 11:22; ஆதியாகமம் 50:25) அந்தக் கட்டளை இஸ்ரவேலரது நெஞ்சத்தில் நம்பிக்கைச் சுடராக ஒளிவீசியது; அதனாலேயே, யோசேப்பு இறந்த பின்னர் பல வருடங்களாக அடிமைத்தனத்தில் அகப்பட்டுத் தவித்த அவர்கள், தங்களுக்கு விடுதலை கிடைக்குமென்று உறுதியாக இருந்தார்கள்.
11. யோசுவாவுக்கு மோசே எவ்வாறு ஒரு வரப்பிரசாதமாய்த் திகழ்ந்திருப்பார்?
11 யோசேப்பு வெளிக்காட்டிய விசுவாசத்தால் ஊட்டம்பெற்றவர்களில் ஒருவர் மோசே. அவர் 80 வயதாய் இருந்தபோது, யோசேப்பின் எலும்புகளை எகிப்திலிருந்து கொண்டுபோகும் பாக்கியத்தைப் பெற்றார். (யாத்திராகமம் 13:19) அச்சமயத்தில்தான், அவரைவிட வெகு இளையவராய் இருந்த யோசுவாவோடு அறிமுகமானார். அடுத்த 40 ஆண்டுகளுக்கு யோசுவாவே மோசேக்கு உதவியாளராய்ச் செயல்பட்டார். (எண்ணாகமம் 11:28) சீனாய் மலைக்கு மோசே சென்றபோது யோசுவாவும் அவரோடு சென்றார். சாட்சிப் பலகைகளைப் பெற்றுக்கொண்டு மோசே கீழே இறங்கி வரும்போது அவரைச் சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தார். (யாத்திராகமம் 24:12-18; 32:15-17) யோசுவாவுக்கு மோசே, ஞானமான புத்திமதிகளையும் அனுபவமிக்க ஆலோசனைகளையும் எவ்வளவாய் வழங்கியிருப்பார்!
12. யோசுவா தன் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேல் தேசத்தாருக்கு எவ்வாறு ஒரு வரப்பிரசாதமாய்த் திகழ்ந்தார்?
12 யோசுவாவும், தன் வாழ்நாள் முழுக்க இஸ்ரவேல் தேசத்தாருக்கு ஊக்கமூட்டும் அருமருந்தாய் விளங்கினார். “யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்” என்று நியாயாதிபதிகள் 2:7 கூறுகிறது. ஆனால், யோசுவாவும் பிற மூப்பர்களும் இறந்த பின்பு, சாமுவேல் தீர்க்கதரிசி தலையெடுத்த காலம் வரையில் சுமார் 300 வருடங்களாக இஸ்ரவேல் தேசம் உண்மை வணக்கத்திற்கும் பொய் வணக்கத்திற்கும் இடையே ஊசலாடியது.
சாமுவேல் “நீதியை நடப்பித்தார்”
13. சாமுவேல் எவ்வாறு ‘நீதியை நடப்பித்தார்’?
13 சாமுவேல் இறந்தபோது அவருக்கு எத்தனை வயதென்று பைபிளில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஒன்று சாமுவேல் புத்தகத்திலுள்ள நிகழ்ச்சிகள் சுமார் 102 வருட காலப்பகுதியை உள்ளடக்குகின்றன; அவற்றில் பெரும்பாலானவற்றை சாமுவேல் கண்ணாரக் கண்டார். நேர்மையான நியாயாதிபதிகளும் தீர்க்கதரிசிகளும் “நீதியை நடப்பித்தார்கள்” என்று எபிரெயர் 11:32, 33-ல் நாம் வாசிக்கிறோம். அது உண்மைதான், சாமுவேல் தன் காலத்தில் வாழ்ந்தவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபடியும், அப்படி ஈடுபட்டிருந்தாலும் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியும் அறிவுறுத்தினார். (1 சாமுவேல் 7:2-4) எவ்விதங்களில் அவ்வாறு செய்தார்? தன் வாழ்நாள் முழுவதும் அவர் யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதி காட்டினார். (1 சாமுவேல் 12:2-5) எவ்வித தயக்கமுமின்றி ராஜாவுக்கும்கூட கடுமையான புத்திமதி அளித்தார். (1 சாமுவேல் 15:16-29) அதுமட்டுமின்றி, ‘கிழவனும் நரைத்தவனுமாயிருந்த’ சாமுவேல், மற்றவர்களுக்காக ஜெபிப்பதில் ஓர் அருமையான உதாரணமாய்த் திகழ்ந்தார். தம் சக இஸ்ரவேலருக்காக ‘விண்ணப்பம் செய்யாதிருப்பது’ ‘கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வது’ என்றும், ‘அது தனக்குத் தூரமாயிருப்பதாக’ என்றும் அவர் கூறினார்.—1 சாமுவேல் 12:2, 23.
14, 15. இன்றுள்ள முதியோர், ஜெபம் செய்கிற விஷயத்தில் சாமுவேலை எவ்வாறு பின்பற்றலாம்?
14 இவை எல்லாம், சக ஊழியர்மீது ஒரு முக்கியமான வழியில் முதியோர் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைச் சிறப்பித்துக்காட்டுகின்றன. உடல்நலக் கோளாறு காரணமாகவோ, பிற சூழ்நிலைகள் காரணமாகவோ முன்புபோல் செயல்பட முடியாத முதியோர், மற்றவர்களுக்காக ஜெபிக்கலாம் என்பதைச் சிறப்பித்துக்காட்டுகின்றன. முதியோரே, நீங்கள் செய்கிற ஜெபங்கள் சபைக்கு எந்தளவு வரப்பிரசாதமாய் இருக்கின்றன என்பதை உணருகிறீர்களா? கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மீது நீங்கள் விசுவாசம் வைத்திருப்பதால், யெகோவாவுக்கு முன் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள்; சகிப்புத்தன்மையில் நீங்கள் அழியாப் பதிவை ஏற்படுத்தியிருப்பதால், உங்கள் விசுவாசம் ‘சோதிக்கப்பட்டதாய்’ உள்ளது. (யாக்கோபு 1:3; 1 பேதுரு 1:7) எனவே, இதை ஒருபோதும் மறவாதீர்கள்: “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”—யாக்கோபு 5:16.
15 யெகோவாவின் ராஜ்ய வேலைக்கு ஆதரவாக நீங்கள் செய்கிற ஜெபங்கள் பெரிதும் உதவுகின்றன. கிறிஸ்தவ நடுநிலை காரணமாக நம் சகோதரர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கைப் பேரழிவுகள், போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர், ஏன், நம் சபைகளில் உள்ளவர்களே சோதனைகளையோ எதிர்ப்புகளையோ சந்தித்து வருகிறார்கள். (மத்தேயு 10:35, 36) பிரசங்க வேலையிலும் சபைகளை மேற்பார்வை செய்வதிலும் தலைமை தாங்கி நடத்துபவர்களும்கூட தங்களுக்காக நீங்கள் தவறாமல் ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். (எபேசியர் 6:18, 19; கொலோசெயர் 4:2-4) எப்பாப்பிரா செய்ததைப் போலவே நீங்களும் சக விசுவாசிகளைக் குறிப்பிட்டு, அவர்களுக்காக ஜெபிப்பது எவ்வளவாய் நன்மை தரும்!—கொலோசெயர் 4:12.
வரப்போகிற சந்ததிக்குக் கற்பித்தல்
16, 17. சங்கீதம் 71:18-ல் முன்கூட்டியே என்ன சொல்லப்பட்டது, அது இன்று எவ்வாறு நிறைவேறியிருக்கிறது?
16 பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கை உடைய ‘வேறே ஆடுகள்,’ பரலோக அழைப்பு பெற்றிருக்கிற உண்மையுள்ள “சிறுமந்தை” வகுப்பாருடன் கூட்டுறவு கொள்வதன்மூலம் அத்தியாவசியமான பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள். (லூக்கா 12:32; யோவான் 10:16) இது முன்கூட்டியே தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டது. இதை சங்கீதம் 71:18-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும் வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.” ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், தாங்கள் இயேசு கிறிஸ்துவோடு மகிமைப்படுவதற்காக பரலோகத்திற்குச் செல்லும்போது வேறே ஆடுகளாகிய தங்கள் நண்பர்களை விட்டுப் பிரிய நேரிடுகிறது; ஆகவே, பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள தங்களுடைய நண்பர்கள் கூடுதலான பொறுப்புகளைச் சுமப்பதற்காக அவர்களுக்கு ஆவலுடன் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்கள்.
17 “வரப்போகிற யாவருக்கும்” கற்பிப்பதாக சங்கீதம் 71:18-ல் சொல்லப்பட்டுள்ள கூற்று, கோட்பாட்டளவில் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடமிருந்து பயிற்சி பெற்றிருக்கிற வேறே ஆடுகளைச் சேர்ந்த வகுப்பாருக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது. இன்று உண்மை வணக்கத்துக்கு ஆதரவு காட்டுபவர்களுக்குத் தம்மைப் பற்றி சாட்சி கொடுக்கும் பொறுப்பை முதியோரிடம் யெகோவா ஒப்படைத்திருக்கிறார். (யோவேல் 1:2, 3) அபிஷேகம் பெற்றவர்களிடமிருந்து தாங்கள் கற்றிருப்பவற்றை வேறே ஆடுகளைச் சேர்ந்தோர் தங்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகிறார்கள்; அதே சமயத்தில், தாங்கள் கற்றுக்கொண்ட ஆன்மீகக் கல்வியை, யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிற மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டுமென்று உணருகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 10.
18, 19. (அ) யெகோவாவின் முதிய ஊழியர்களில் அநேகர் என்னென்ன பொன்னான தகவலை நமக்கு அளிப்பார்கள்? (ஆ) எதைக் குறித்து முதிய கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்?
18 அபிஷேகம் செய்யப்பட்டவர்களாய் இருந்தாலும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், யெகோவாவின் முதிய ஊழியர்கள், அன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக நிகழ்ச்சிகளை இன்றும் ஞாபகப்படுத்திச் சொல்கிறார்கள். இன்று உயிரோடிருப்பவர்களில் வெகு சிலர், ஆரம்பத்தில் காட்டப்பட்ட “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” படக்காட்சிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறார்கள். சிலர், 1918-ல் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் ராஜ்ய காரியங்களில் தலைமை வகித்தவர்களுமான சகோதரர்களைத் தனிப்பட அறிந்திருக்கிறார்கள். இன்னும் சிலர், காவற்கோபுர சங்கத்தின் WBBR எனப்பட்ட வானொலி நிலைய ஒலிபரப்பில் பங்கேற்றிருக்கிறார்கள். அநேகர், மத சுதந்திரம் சம்பந்தமாக உயர்நீதிமன்ற வழக்குகளில் யெகோவாவின் சாட்சிகளுக்கு வெற்றி கிடைத்த காலம்பற்றிக் கதை கதையாய்ச் சொல்வார்கள். இன்னும் சிலர், சர்வாதிகார ஆட்சியின்கீழ் வாழ்ந்திருந்தபோதிலும் உண்மை வணக்கத்தில் உறுதியாய் நிலைத்து நின்றிருக்கிறார்கள். ஆம், சத்தியம் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை முதியோர் விவரித்துக் கூறுவார்கள். இப்படிப்பட்ட அனுபவங்களைக் கேட்டுப் பயனடையும்படியே பைபிள் நமக்கு ஊக்கமளிக்கிறது.—உபாகமம் 32:7.
19 முதியோராய் இருக்கும் கிறிஸ்தவர்கள், இளையோருக்கு நல்ல உதாரணங்களாய்த் திகழும்படியாக அறிவுறுத்தப்படுகிறார்கள். (தீத்து 2:2-4) நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையாகட்டும், செய்கிற ஜெபங்களாகட்டும், அளிக்கிற புத்திமதியாகட்டும், இவையெல்லாம் எவ்வளவு பலன் தரும் என்பதை இப்போது ஒருவேளை நீங்கள் அறியாதிருக்கலாம். நோவா, ஆபிரகாம், யோசேப்பு, மோசே போன்றோர் தாங்கள் காட்டிய உண்மைத்தன்மை, வரவிருந்த சந்ததிக்கு விளைவித்த நன்மையை முழுமையாய் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனாலும், தங்களது விசுவாசத்தையும் உத்தமத்தையும் நிரூபித்திருக்கிற அவர்கள் விட்டுச்சென்றுள்ள அழியாப் பதிவு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது; அவ்வாறே நீங்களும் ஏற்படுத்தக்கூடும்.
20. முடிவு வரையில் தங்கள் நம்பிக்கையில் உறுதியாய் இருப்போருக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கவிருக்கின்றன?
20 நீங்கள் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ தப்பிப் பிழைத்தாலும் சரி உயிர்த்தெழுதலில் மீண்டும் வந்தாலும் சரி, “உண்மையான வாழ்வை” அனுபவிக்கையில் அது எவ்வளவு இன்பமாய் இருக்கும்! (மத்தேயு 24:21; 1 தீமோத்தேயு 6:19, பொது மொழிபெயர்ப்பு) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, யெகோவா தேவன் முதுமையின் பாதிப்புகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றும் காலத்தைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். எவராலும் தடுக்க முடியாதபடி நம் உடல் உறுப்புகளின் இயக்கம் சீர்கெட்டு வருவதைக் காண்பதற்கு மாறாக, தினந்தோறும் கண்விழிக்கும்போதே உடல் ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதை உணர்வோம்; அதிகமான சக்தி, கூர்மையான பார்வைத்திறன், தீட்டப்பட்ட செவித்திறன், சிக்கென்ற தோற்றம் என எல்லாமே மாறும்! (யோபு 33:25; ஏசாயா 35:5, 6) கடவுளுடைய புதிய உலகில் வாழும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பவர்கள், காலங்காலமாய் வாழப்போவதோடு ஒப்பிடுகையில் என்றும் இளமையுடன் இன்புறுவார்கள். (ஏசாயா 65:22) ஆகவே, நாம் அனைவருமே முடிவு வரையில் நமது நம்பிக்கையில் உறுதியாயிருந்து, யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு தொடர்ந்து சேவை செய்வோமாக. தாம் வாக்குறுதி அளித்துள்ள அனைத்தையும் யெகோவா நிறைவேற்றுவார் என்பதிலும், நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகத்தையே செய்வார் என்பதிலும் நம்பிக்கை வைப்போமாக.—சங்கீதம் 37:4; 145:16.
உங்கள் பதில்?
• தள்ளாத வயதிலும் நோவா காட்டிய மன உறுதி அனைத்து மக்களுக்கும் எவ்வாறு நன்மை அளித்திருக்கிறது?
• முற்பிதாக்களின் விசுவாசம் வாழையடி வாழையாக அவர்களது சந்ததிமீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
• தங்களது தள்ளாத வயதில் யோசேப்பு, மோசே, யோசுவா, சாமுவேல் ஆகியோர் சக வணக்கத்தாரை எவ்வாறு பலப்படுத்தினார்கள்?
• முதியோர் என்ன அழியாப் பதிவை விட்டுச்செல்லலாம்?
[பக்கம் 26-ன் படம்]
ஆபிரகாமின் சகிப்புத்தன்மை ஈசாக்கின் மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது
[பக்கம் 28-ன் படம்]
மோசேயின் ஞானமான புத்திமதி யோசுவாவுக்கு ஊக்கமளித்தது
[பக்கம் 29-ன் படம்]
மற்றவர்களுக்காக நீங்கள் ஜெபிப்பதால் ஏராளமான நன்மை விளையும்
[பக்கம் 30-ன் படம்]
உண்மையுள்ள முதியோர் சொல்வதைக் கேட்பது இளையோருக்கு நன்மை தரும்