யோனத்தான் ‘கடவுளின் துணையோடு செயல்பட்டார்’
இ ஸ்ரவேலின் முதல் அரசனுடைய புதல்வன், தலைமறைவாகத் திரியும் ஒருவரைச் சந்திக்கிறார். “நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்” என்று அந்நபரிடம் சொல்கிறார்.—1 சாமுவேல் 23:17.
இவ்வாறு சந்திக்கச் செல்லும் நபர் யோனத்தான்; தலைமறைவாகத் திரிபவர் தாவீது. இதற்குப்பின் சிறிது காலத்திலேயே யோனத்தான் மரித்துவிட்டார்; இல்லையெனில், அவர் தாவீதின் வலதுகையாக ஒருவேளை ஆகியிருப்பார்.
தாவீதிடம் யோனத்தானுக்கு இருந்த நட்பு அசாதாரணமானது. சொல்லப்போனால், அவர் சிறப்புமிக்க நபராய் திகழ்ந்தார். அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்களும்கூட அவரைப்பற்றி அவ்வாறே நினைத்தார்கள்; எனவேதான், ‘கடவுளின் துணையோடு அவர் செயல்பட்டார்’ என்று அவரைப்பற்றிச் சொன்னார்கள். (1 சாமுவேல் 14:45, பொது மொழிபெயர்ப்பு) அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள்? யோனத்தானுக்கு எப்படிப்பட்ட பண்புகள் இருந்தன? அவருடைய வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்வதால் நமக்கென்ன பயன்?
‘இக்கட்டில்’ இஸ்ரவேலர்
யோனத்தானைப்பற்றி பைபிள் முதன்முதலாகக் குறிப்பிடுகையில், இஸ்ரவேலர் ‘இக்கட்டான’ நிலையில் இருந்தார்கள். இஸ்ரவேலரின் தேசத்தை பெலிஸ்தர் சூறையாடியிருந்தார்கள்; அதோடு ஜனங்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக எதுவும் செய்யமுடியாத நிலைக்கும் தள்ளிவிட்டிருந்தார்கள்.—1 சாமுவேல் 13:5, 6, 17-19.
என்றாலும், தம் ஜனங்களைக் கைவிடுவதில்லை என்று யெகோவா சொல்லியிருந்தார். அதில் யோனத்தானுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அவருடைய தகப்பனாகிய சவுலைக் குறித்து கடவுள் இவ்வாறு சொல்லியிருந்தார்: “அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்.” இதை யோனத்தான் நம்பினார். போதுமான ஆயுதபலம் இல்லாத 1,000 இஸ்ரவேலரைத் தலைமைத்தாங்கி பெலிஸ்தரை அவர் ஏற்கெனவே முறியடித்திருந்தார். இப்போதோ, பெலிஸ்தரின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்.—1 சாமுவேல் 9:16; 12:22; 13:2, 3, 22.
துணிச்சலான தாக்குதல்
யோனத்தான் மிக்மாஸ் கணவாய்க்கு அருகே இருந்த எல்லைக்காவல் படையைத் தாக்கத் தீர்மானித்தார். (1 சாமுவேல் 13:23) அப்பகுதியைச் சென்றடைய அவர் “தன் கைகளாலும் தன் கால்களாலும்” தவழ்ந்து ஏற வேண்டியிருந்தது. ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. யோனத்தான் தன் ஆயுதங்களைச் சுமந்துவந்த ஒருவருடைய உதவியோடு மட்டுமே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார். அவரிடம் இவ்வாறு சொன்னார்: ‘ஒருவேளை யெகோவா நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்க யெகோவாவுக்குத் தடையில்லை.’—1 சாமுவேல் 14:6, 13.
அந்த இரண்டு இஸ்ரவேலரும் யெகோவாவிடமிருந்து ஓர் அடையாளத்தை நாடினார்கள். எல்லைக்காவல் படையிலிருந்த ஆட்களின் கண்ணில்படும் தூரத்தில் அவர்கள் நிற்பார்கள். அந்தப் பெலிஸ்தர் அவர்களிடம், “நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள்” என்று சொல்வார்களென்றால், யோனத்தானும் அவருடைய ஆயுதங்களைச் சுமப்பவரும் அவர்களிடத்திற்குச் செல்ல மாட்டார்கள். ஆனால் அந்த எதிரிகள் அவர்களிடம், “எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள்” என்று சொல்வார்களென்றால், யோனத்தானுக்கும் ஆயுதங்களைச் சுமப்பவருக்கும் யெகோவா வெற்றி அளிப்பார் என்று அர்த்தம். கடவுளுடைய ஆதரவில் யோனத்தானுக்கு முழு நம்பிக்கை இருந்ததால், எல்லைக்காவல் வரைக்கும் சென்று போரிடுவதற்குத் தீர்மானித்தார். —1 சாமுவேல் 14:8-10.
எல்லைக்காவல் படைவீரர்களுக்கு எதிராக இந்த இரண்டு பேரால் என்ன செய்துவிட முடியும்? மோவாபியர்களுக்கு எதிராக இஸ்ரவேலரை வழிநடத்திய நியாயாதிபதியாகிய ஏகூத்திற்கு யெகோவா உதவி செய்யவில்லையா? ஒரு தாற்றுக்கோலால் 600 பெலிஸ்தரை முறியடித்த சம்காருக்கு யெகோவா துணை நிற்கவில்லையா? பெலிஸ்தருக்கு எதிராக தன்னந்தனியாய் சண்டையிட்ட சிம்சோனுக்கு அவர் பலம் அளிக்கவில்லையா? அதுபோல் தனக்கும் கடவுள் உதவுவார் என யோனத்தான் நம்பினார்.—நியாயாதிபதிகள் 3:12-31; 15:6-8, 15; 16:29, 30.
இந்த இரண்டு இஸ்ரவேலரைப் பார்த்ததும், “எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம்” என்று பெலிஸ்தர் கத்தினார்கள். யோனத்தானும் அவருடைய ஆயுதங்களைச் சுமந்தவரும் மேலே ஏறிச் சென்றார்கள். துணிவுடன் சுமார் 20 எதிரி வீரர்களைத் தாக்கி கொன்று போட்டார்கள்; இவ்வாறு எல்லைக்காவல் படையினர் மத்தியில் பீதியை கிளப்பிவிட்டார்கள். இந்த இருவரையும் பின்தொடர்ந்து இஸ்ரவேல் படைவீரர்கள் இன்னும் பலர் வருவார்கள் என பெலிஸ்தர் ஒருவேளை நினைத்திருக்கலாம். அதைப்பற்றி பதிவு இவ்வாறு சொல்கிறது: அதற்குப்பிறகு, ‘பாளயத்திலும் . . . சகல ஜனங்களிலும் பயங்கரம் [அதாவது, நடுக்கம்] உண்டானது; . . . பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.’ அது கடவுளால் உண்டான நிலநடுக்கமாய் இருந்ததால், பெலிஸ்தரின் மத்தியில் அமளி ஏற்பட்டது. எனவே, ‘ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாய் இருந்தது.’ இஸ்ரவேல் படைவீரர்கள் அதைக் கண்டபோது, தைரியம் அடைந்தார்கள். பெலிஸ்தரைக் கண்டு பயந்து ஒளிந்திருந்த இஸ்ரவேலரும் வீரர்களோடு சேர்ந்துகொண்டார்கள்; அதைப்போல் பெலிஸ்தருடன் சேர்ந்துவிட்டிருந்த இஸ்ரவேலரும் இவர்களுக்குக் கைகொடுக்க ‘மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தார்கள்.’—1 சாமுவேல் 14:11-23, 31.
மக்களால் தப்புவிக்கப்படுகிறார்
போரில் வெற்றி கிட்டுவதற்கு முன்பு வீரர்களில் யாராவது உணவருந்தினால் அவன் சபிக்கப்பட்டவன் என்ற மடத்தனமான ஓர் ஆணையை அரசனாகிய சவுல் பிறப்பித்திருந்தார். ஏதோ காரணத்தினால், யோனத்தானுடைய காதில் அந்த விஷயம் விழவில்லை. எனவே அவர் தன்னுடைய கோலினால் தேன்கூட்டில் குத்தி அதிலிருந்து கொஞ்சம் தேனை எடுத்து உண்டார். அதனால், கடைசிவரை போரிடுவதற்கான புதுத்தெம்பை அவர் பெற்றதாகத் தெரிகிறது.—1 சாமுவேல் 14:24-27.
யோனத்தான் உணவருந்தியதை சவுல் கேள்விப்பட்டபோது, அவரைக் கொல்லும்படி ஆணையிட்டார். யோனத்தானோ சாவுக்கு அஞ்சவில்லை. “இதோ, நான் சாகத் தயார்” என்றார். “ஆனால் மக்கள் சவுலை நோக்கி, ‘இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர்மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடியும் தரையில் விழக்கூடாது! ஏனெனில் கடவுளின் துணையோடுதான் இன்று அவர் செயல்பட்டார்’ என்றார்கள். இவ்வாறு வீரர்கள் அவரைச் சாவினின்று தப்புவித்தார்கள்.”—1 சாமுவேல் 14:38-45, பொ.மொ.
இன்று கடவுளுக்கு ஊழியம் செய்யும் ஒருவர் போர்களில் ஈடுபடுவதில்லை; ஆனால், விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்விலும் வரலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் தவறானதைச் செய்யும்போது நீங்கள் மட்டுமே சரியானதைச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், தம் நீதியான நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற உங்கள் விருப்பத்தை யெகோவா ஆதரிப்பதோடு அதற்கான பலத்தையும் அருளுவார். யெகோவாவின் அமைப்பில் ஏதேனும் விசேஷ பொறுப்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்குத் தைரியம் தேவைப்படலாம்; உதாரணமாக, பயனியர் சேவை செய்வதன்மூலம் ஊழியத்தை அதிகரிப்பது, புதிய நியமிப்புகளை ஏற்றுக்கொள்வது, பிரசங்கிப்பவர்களுக்கான தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிச் செல்வது போன்ற விசேஷ பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தைரியம் தேவைப்படலாம். அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்குத் தகுதியிருக்கிறதா என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்; யெகோவா உங்களை எவ்வேலையில் பயன்படுத்த விரும்புகிறாரோ அவ்வேலையைச் செய்ய நீங்கள் முன்வந்தால், அதுவே பாராட்டுக்குரியது. யோனத்தானை நினைத்துக் கொள்ளுங்கள்! ‘கடவுளின் துணையோடு அவர் செயல்பட்டார்.’
யோனத்தானும் தாவீதும்
சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு, பெலிஸ்த வீரனான கோலியாத் இஸ்ரவேலரின் சேனையை நிந்தித்தான்; ஆனால் தாவீது அவனை வெட்டி வீழ்த்தினார். தாவீதைவிட யோனத்தான் கிட்டத்தட்ட 30 வயது மூத்தவராக இருந்தாலும் இவர்களுக்கிடையே பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தது.a மிக்மாசில் யோனத்தான் காட்டிய அதே தைரியம் தாவீதிடமும் தென்பட்டது. அதில் முனைப்பாகத் தெரிந்த ஒற்றுமை என்னவென்றால், யோனத்தானைப்போல தாவீதுக்கும் யெகோவாவின் காக்கும் வல்லமையில் விசுவாசம் இருந்தது; எனவே, கோலியாத்தின் சவாலைக்கேட்டு மற்ற இஸ்ரவேலர் அஞ்சி நடுங்கியபோதும் தாவீது அஞ்சா நெஞ்சுடன் அவனை எதிர்க்கொண்டார். அதனால்தான் ‘யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவரைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தார்.’—1 சாமுவேல் 17:1–18:4.
தாவீதின் வீரதீரத்தைக் கண்டு சவுல் அரசன் அவரை விரோதியாக பாவித்தபோதிலும், யோனத்தானின் முகத்தில் பொறாமையின் சாயல் துளியும் தென்படவில்லை. யோனத்தானும் தாவீதும் உயிர்த் தோழர்களானார்கள். அவர்கள் இருவரும் மனம்விட்டுப் பேசிய சமயத்தில், இஸ்ரவேலின் அடுத்த அரசராக தாவீது அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற விஷயம் யோனத்தானுக்குத் தெரியவந்திருக்கலாம். கடவுளுடைய தீர்மானத்தை யோனத்தான் மதித்தார்.
தாவீதைக் கொல்வதைப்பற்றி அரசனாகிய சவுல் தன் மகனிடமும் ஊழியக்காரரிடமும் பேசியபோது, யோனத்தான் தாவீதை எச்சரித்தார். தாவீதை நினைத்து எள்ளளவும் பயப்பட வேண்டாம் என்று சவலுக்கு நம்பிக்கை அளித்தார். சொல்லப்போனால், அரசனுக்கு எதிராக தாவீது எந்தக் குற்றமும் செய்யவில்லையே! கோலியாத்தை எதிர்த்து தாவீது போரிட்டபோது தன் உயிரையே பணயம் வைக்கவில்லையா? தவறாக நடத்தப்பட்ட தன் நண்பனுக்காக யோனத்தான் உருக்கமாக மன்றாடியபோது சவுல் அமைதியானார். இருந்தாலும், சவுலின் மனம் மீண்டும் மாறியதால் தாவீதைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினார்; தாவீதைத் தீர்த்துக்கட்ட அவர் பலமுறை முயற்சித்ததன் காரணமாக தாவீது அங்கிருந்து தப்பியோடினார்.—1 சாமுவேல் 19:1-18.
யோனத்தானோ தாவீதுக்குப் பக்கபலமாக இருந்தார். என்ன செய்ய வேண்டுமென்பதை திட்டமிடுவதற்கு இந்த இரு நண்பர்களும் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். தன் நண்பனுக்கு உண்மையாக இருப்பதோடு, தன் தகப்பனுக்கும் உண்மையாக இருக்க முயன்ற யோனத்தான், “அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை” என்று தாவீதிடம் தெரிவித்தார். இருந்தாலும், “மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது” என்று தாவீது யோனத்தானிடம் சொன்னார்.—1 சாமுவேல் 20:1-3.
சவுலின் உள்ளெண்ணத்தைச் சோதித்துப் பார்க்க யோனத்தானும் தாவீதும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். அரச பந்தியில் உணவருந்த தாவீது வராததைக் காணும்போது, சவுல் அதைப்பற்றி விசாரிப்பார்; அப்போது, தாவீது தன் குடும்பத்தாருடன் பலி செலுத்தச் சென்றுவருவதற்கு அனுமதி கேட்டுக்கொண்டதாக யோனத்தான் தன் தகப்பனிடம் சொல்ல வேண்டும். அதைக் கேட்டு சவுல் ஆத்திரமடைந்ததால், தாவீதின்மீது அவருக்குப் பகை இருக்கிறதென்று அர்த்தம். அதன்பிறகு, யோனத்தான் தாவீதை ஆசீர்வதித்தார்; அதோடு, எதிர்காலத்தில் தாவீது அரியணையில் அமரவிருப்பதை தான் ஏற்றுக்கொண்டார் என்பதை மறைமுகமாகப் பின்வருமாறு தெரிவித்தார்: “கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.” ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பார்கள் என இருவரும் ஆணையிட்டுக் கொண்டார்கள்; அதோடு இந்தச் சோதனையில் சவுலின் மனதை அறிந்துகொண்டு அதை யோனத்தான் எப்படி தாவீதுக்கு தெரிவிப்பார் என்பதையும் தீர்மானித்தார்கள்.—1 சாமுவேல் 20:5-24.
தாவீது பந்திக்கு வரவில்லையென்று சவுல் கண்டபோது அதைக் குறித்து விசாரித்தார்; அப்போது யோனத்தான், “உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவுகொடும்” என்று தாவீது தன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். தான் தாவீதுக்குப் பட்சமாக நடந்துகொள்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள யோனத்தான் பயப்படவில்லை. அரசனுக்கு கோபம் தலைக்கேறியது! யோனத்தானை அவர் கேவலமாகப் பேசினார்; தனக்குப் பிறகு தன் மகன் அரியணையில் ஏறுவதற்கு தாவீது தடையாக இருக்கிறார் என்று சொல்லி காட்டுக் கூச்சல் போட்டார். தாவீதைக் கொல்வதற்காக அவரை தன்முன் கொண்டுவந்து நிறுத்தும்படி யோனத்தானுக்கு கட்டளையிட்டார். யோனத்தானோ, “அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவன் என்ன செய்தான்” என்று கோபமாகக் கேட்டார். ஆத்திரமடைந்த சவுல், தன் மகன்மீது ஈட்டியை எறிந்தார். யோனத்தான் எந்தக் காயமுமின்றி தப்பித்தார்; ஆனால் தாவீதை நினைத்து அவர் மிகவும் வேதனையடைந்தார்.—1 சாமுவேல் 20:25-34.
யோனத்தான் காட்டிய உண்மைத்தன்மை அபாரம்! மனித கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால், தாவீதிடம் வைத்த நட்பினால் அவர் பெற்றதோ கையளவு; ஆனால் இழந்ததோ கடலளவு. இருந்தாலும், சவுலுக்குப் பிறகு அரியணை ஏறுவதற்கு தாவீதை யெகோவாவே நியமித்திருந்தார்; அதோடு, கடவுள் நோக்கம் கொண்டிருந்த காரியம் யோனத்தானுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையாகவே இருந்தது.
கண்ணீருடன் பிரியாவிடை
தாவீதை யோனத்தான் இரகசியமாகச் சந்தித்து, நடந்த சங்கதிகளைத் தெரிவித்தார். சவுலின் அரசவையில் தாவீது இனி கால்பதிக்கவே முடியாது என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. இருவரும் கட்டித் தழுவி அழுதார்கள். பிறகு, தாவீது அங்கிருந்து தலைமறைவானார்.—1 சாமுவேல் 20:35-42.
அதற்குப்பிறகு, தாவீதை யோனத்தான் ஒரு முறை மட்டுமே பார்த்தார்; சவுலுக்குப் பயந்து, “சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே” தாவீது ஒளிந்திருந்த சமயத்தில் அவரைப் பார்த்தார். அப்போதுதான் தாவீதை யோனத்தான் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “நீர் பயப்பட வேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்.” (1 சாமுவேல் 23:15-18) அதன்பிறகு சீக்கிரத்தில் யோனத்தானும் சவுலும் பெலிஸ்தருக்கு எதிரான போரில் மாண்டார்கள்.—1 சாமுவேல் 31:1-4.
கடவுளை நேசிக்கும் அனைவரும் யோனத்தானின் வாழ்க்கையை கவனமாக சிந்தித்துப் பார்ப்பது நல்லது. யாருக்கு உண்மையாயிருப்பது என மனதுக்குள் போராடுகிறீர்களா? அப்படியானால், தன்னுடைய சொந்த காரியத்தைத் தேடும்படி யோனத்தானுக்கு சவுல் புத்தி சொன்னதை நினைவில் வையுங்கள். இருந்தாலும், யோனத்தான் இதயப்பூர்வமான கீழ்ப்படிதலோடும் பக்தியோடும் யெகோவாவைக் கனப்படுத்தினார்; அதோடு கடவுள் தேர்ந்தெடுத்த நபரே இஸ்ரவேலின் அடுத்த அரசராக இருப்பார் என்பதில் ஆனந்தம் அடைந்தார். ஆம், யோனத்தான் தாவீதுக்கு ஆதரவாக இருந்தார்; யெகோவாவுக்கும் உண்மையாக இருந்தார்.
யோனத்தானிடம் மெச்சத்தக்க பண்புகள் இருந்தன. அப்பண்புகளைப் பின்பற்றுங்கள்! அப்போது மக்கள் யோனத்தானைக் குறித்து சொன்னதைப் போலவே உங்களைக் குறித்தும் சொல்வார்கள்: ‘கடவுளின் துணையோடு அவர் செயல்பட்டார்.’—1 சாமுவேல் 14:45.
[அடிக்குறிப்பு]
a யோனத்தானைப்பற்றி பைபிள் முதன்முதலாக குறிப்பிடுகையில் அவர் சவுலின் படைத்தளபதியாக இருக்கிறார்; அப்போது அவருக்கு குறைந்தபட்சம் 20 வயது இருந்திருக்கலாம். சவுலின் 40 ஆண்டுகால ஆட்சியின் துவக்கமாக அது இருந்தது. (எண்ணாகமம் 1:3; 1 சாமுவேல் 13:2) எனவே, பொ.ச.மு. 1078-ல் யோனத்தான் இறந்தபோது கிட்டத்தட்ட 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்திருக்கலாம். அச்சமயத்தில் தாவீதுக்கு 30 வயது; யோனத்தான் அவரைவிட சுமார் 30 வயது மூத்தவர் என்பது இதிலிருந்து தெரிகிறது.—1 சாமுவேல் 31:2; 2 சாமுவேல் 5:4.
[பக்கம் 19-ன் படம்]
தாவீதைக் கண்டு யோனத்தான் பொறாமைப்படவில்லை