ஒளியிடம் வாருங்கள்
கலங்கரை விளக்கங்கள் கணக்கிலடங்கா உயிர்களைக் காப்பாற்றியிருக்கின்றன. கடல் பயணத்தால் களைத்துப்போன பயணி, தூரத்தில் தெரியும் இந்த ஒளியின் உதவியால் ஆபத்தான பாறைகளை அடையாளம் கண்டுகொள்கிறார். அதைவிட முக்கியமாக, ‘கரை பக்கத்தில்தான் இருக்கிறது’ என்ற நம்பிக்கை அவர் மனதில் பிறக்கிறது. அதேபோல், இருள்சூழ்ந்த, ஆன்மீக ஆபத்துகள் நிறைந்த இந்த உலகில் கிறிஸ்தவர்களும் ஒரு நீண்ட, நெடுந்தூர பயணத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார்கள். கடவுள் தந்த நெறிமுறைகளை ஒதுக்கித் தள்ளிய மனிதர்கள், “கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது” என்று பைபிள் கூறுகிறது. (ஏசாயா 57:20) கடவுளுடைய ஜனங்கள் இப்படிப்பட்ட சூழலில்தான் வாழ்கிறார்கள். எனினும், இரட்சிப்பு என்ற பிரகாசமான நம்பிக்கை அவர்களுக்குள் ஒளிவீசுகிறது; அது அவர்களுக்கு நம்பத்தகுந்த வெளிச்சத்தைப் போன்று இருக்கிறது. (மீகா 7:8) யெகோவாவின் உதவியாலும் அவருடைய வார்த்தையின் வழிநடத்துதலாலும், “நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.”—சங்கீதம் 97:11.a
என்றாலும், சில கிறிஸ்தவர்கள் தங்களுடைய மனதை அலைபாய விட்டதால், யெகோவாவின் ஒளியிலிருந்து திசைதிரும்பியிருக்கிறார்கள். பொருளாசை, ஒழுக்கக்கேடு, விசுவாசதுரோகம் ஆகிய ஆபத்தான பாறைகளில் மோதி விசுவாசம் என்ற கப்பலை இவர்கள் சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஆம், முதல் நூற்றண்டில் இருந்தவர்களைப் போன்றே, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் சிலரும், ‘விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.’ (1 தீமோத்தேயு 1:19; 2 பேதுரு 2:13-15, 20-22) புதிய உலகத்தை, நாம் போய்ச் சேர வேண்டிய துறைமுகத்திற்கு ஒப்பிடலாம். அதற்கு மிக அருகில் இருக்கிற இந்தச் சமயத்தில், யெகோவாவின் தயவை இழப்பது எவ்வளவு பரிதாபகரமானது!
“விசுவாசமாகிய கப்பலைச்” சேதப்படுத்தாதீர்கள்
பரந்து விரிந்த கடலைப் பத்திரமாகக் கடந்துவந்த கப்பல்கூட, துறைமுகத்திற்கு அருகில் சென்று சேதமடைந்ததாக சரித்திரம் சொல்கிறது. கப்பல், கரையை நெருங்கும் நேரம்தான் பெரும்பாலும் ஆபத்தானதாய் இருந்திருக்கிறது. அதேபோல, இந்தப் பொல்லாத உலகின் ‘கடைசி நாட்களே’ மனித சரித்திரத்தின் மிக ஆபத்தான காலப்பகுதி என்று அநேகர் கருதுகிறார்கள். இது, “கையாளுவதற்குக் கடினமான” காலமாக இருக்குமென்று பைபிள் துல்லியமாகக் குறிப்பிடுகிறது. அதுவும், ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களுக்கு இது மிகக் கடினமான காலம்.—2 தீமோத்தேயு 3:1-5, NW.
இந்தக் கடைசி நாட்களில் வாழ்வது ஏன் இத்தனை கடினமாய் இருக்கிறது? கடவுளுடைய ஜனங்களுக்கு எதிராகப் போரிட தனக்குக் ‘கொஞ்சக்கால மாத்திரமே’ இருப்பதை சாத்தான் அறிந்திருக்கிறான். ஆகவே, அவர்களுடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போட தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17) இருந்தாலும், நாம் உதவியோ வழிநடத்துதலோ இல்லாமல் நட்டாற்றில் விடப்படவில்லை. யெகோவாவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் அவர் பாதுகாப்பளிக்கும் புகலிடமாய் திகழ்கிறார். (2 சாமுவேல் 22:31) சாத்தானின் தந்திரமான ஏமாற்று வழிகளை நாம் தெரிந்துகொண்டு எச்சரிக்கையாய் இருப்பதற்கு உதவும் சம்பவங்களை அவர் பைபிளில் பதிவு செய்திருக்கிறார். இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அருகில் வந்த சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை இப்போது சிந்திக்கலாம்.—1 கொரிந்தியர் 10:11; 2 கொரிந்தியர் 2:11.
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அருகில்
மோசேயின் தலைமையின்கீழ் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்தார்கள். சீக்கிரத்தில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் தெற்கு எல்லையை நெருங்கினார்கள். அந்தத் தேசத்தை உளவு பார்ப்பதற்காக 12 பேரை மோசே அனுப்பினார். அவர்களில், விசுவாசமில்லாத 10 உளவாளிகள் திரும்பி வந்து சொன்ன தகவல் அனைவரையும் வெலவெலத்துப்போகச் செய்தது. அந்தக் கானானியர் “மிகவும் பெரிய ஆட்கள்,” ராணுவ பலம் படைத்தவர்கள்; ஆகவே, இஸ்ரவேலரால் அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்று அவர்கள் பயமுறுத்தினார்கள். இதைக் கேட்ட இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்? “நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன?” என்று மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அதோடு, “நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்” என்று அவர்கள் சொன்னதாகவும் பைபிள் தெரிவிக்கிறது.—எண்ணாகமம் 13:1, 2, 28-32; 14:1-4.
சற்று யோசித்துப் பாருங்கள்! அழிவை ஏற்படுத்திய பத்து வாதைகளின் மூலமாகவும் மலைக்க வைக்கும் அற்புதத்தை சிவந்த சமுத்திரத்தில் நடப்பித்ததன் மூலமாகவும் யெகோவா அன்றைய உலக வல்லரசான எகிப்தை மண்டியிடச் செய்தார்; இதையெல்லாம் இஸ்ரவேலர் கண்ணாரக் கண்டிருந்தார்கள். அதோடு, வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அவர்களுடைய கண்ணெதிரே இருந்தது. கரைக்கு வழிகாட்டுகிற வெளிச்சத்தை நோக்கி கப்பல் செல்வதைப் போன்று, அவர்கள் அந்தத் தேசத்தை நோக்கி செல்வது மட்டுமே மீதமிருந்தது. அப்படியிருந்தும், மலைபோன்ற உலக வல்லரசை தூக்கியெறிந்த யெகோவா தேவனுக்கு மடுபோன்ற கானான் தேசத்தைத் தோற்கடிக்க சக்தியில்லை என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள். விசுவாசமில்லாமல் அவர்கள் நடந்துகொண்டது யெகோவாவை எந்தளவு புண்படுத்தியிருக்கும்! கானானியர் “நமக்கு [இஸ்ரவேலருக்கு] இரையாவார்கள்” என்று சொன்ன தைரியமிக்க உளவாளிகளான யோசுவாவும் காலேபும் எந்தளவு வேதனைப்பட்டிருப்பார்கள்! இவர்கள் இருவரும் அந்தக் கானான் தேசமெங்கும் சுற்றிப்பார்த்து நேரில் கண்டதை வந்து சொன்னார்கள். அந்த ஜனங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையாமல், வனாந்தரத்தில் பல பத்தாண்டுகளாக அலைந்து திரிந்த சமயத்தில் யோசுவாவும் காலேபும்கூட அவர்களோடு சென்றார்கள். என்றாலும் விசுவாசமற்ற அந்த ஜனங்களோடு அவர்களும் அங்கே இறந்துவிடவில்லை. சொல்லப்போனால், அடுத்த தலைமுறையினரை வனாந்தரத்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு யோசுவாவும் காலேபும் வழிநடத்திச் சென்றார்கள். (எண்ணாகமம் 14:9, 30) இரண்டாவது முறையாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நெருங்கிய இந்தச் சமயத்தில், இஸ்ரவேலர் வேறொரு சோதனையைச் சந்தித்தார்கள். இதை அவர்கள் சமாளிப்பார்களா?
பொய் தீர்க்கதரிசியான பிலேயாமைப் பயன்படுத்தி இஸ்ரவேலரை சபிக்க பாலாக் என்ற மோவாபிய அரசன் முயற்சி செய்தான். என்றாலும், இஸ்ரவேலரை பிலேயாம் சபிப்பதற்குப் பதிலாக ஆசீர்வதிக்கும்படி செய்து அந்தத் திட்டத்தை யெகோவா முறியடித்தார். (எண்ணாகமம் 22:1-7; 24:10) திட்டம் தோல்வி அடைந்ததைக் கண்டு பிலேயாம் பின்வாங்கிவிடவில்லை. மாறாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை இஸ்ரவேலர் இழந்துபோகும்படி செய்வதற்கு அவன் ஒரு சதித்திட்டம் தீட்டினான். அது என்ன திட்டம்? ஒழுக்கக்கேட்டிலும் பாகால் வணக்கத்திலும் அவர்களை விழ வைப்பதே அந்தத் திட்டம். இஸ்ரவேலர் எல்லாரையும் வசியப்படுத்த முடியாவிட்டாலும், அவர்களில் 24,000 பேர் விழுந்துபோனார்கள். மோவாபிய பெண்களோடு அவர்கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார்கள். பாகால் பேயோரை வணங்கினார்கள்.—எண்ணாகமம் 25:1-9.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! “பயங்கரமான பெரிய வனாந்தரவழி” முழுவதும் யெகோவா தங்களைப் பாதுகாத்து வந்ததை அந்த இஸ்ரவேலரில் அநேகர் நன்கு அறிந்திருந்தார்கள். (உபாகமம் 1:19) இருப்பினும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழையவிருந்த சமயத்தில், கடவுளுடைய ஜனங்களில் 24,000 பேர் மாம்ச இச்சைகளுக்கு அடிபணிந்து, யெகோவாவின் கையில் செத்துமடிந்தார்கள். கடவுளுடைய ஜனங்களாகிய நாம் மிக மிக உயர்ந்த ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் தறுவாயில் இருப்பதால், இது நமக்கு நல்லதோர் எச்சரிக்கை, அல்லவா?
இன்று யெகோவாவைச் சேவிக்கிற ஊழியர்களும் தங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்ளாதிருக்கச் செய்வதற்கு, புதிதாக எந்தச் சதித்திட்டத்தையும் தீட்டுவதற்கான அவசியம் சாத்தானுக்கு இல்லை. இஸ்ரவேலர் முதன்முறையாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அருகில் வந்தபோது பயன்படுத்திய அதே சூழ்ச்சி வலையையே இப்போதும் அவன் விரிக்கிறான்; ஆம், சாத்தான் பெரும்பாலும் பயத்தையும் சந்தேகத்தையும் நம் மனதில் விதைக்க முயற்சி செய்கிறான். மிரட்டலையோ துன்புறுத்தலையோ கேலி கிண்டலையோ அவன் பயன்படுத்தலாம். இது போன்றவற்றுக்குப் பயந்துபோய் சிலர் சத்தியத்தைவிட்டு விலகிப்போயிருக்கிறார்கள். (மத்தேயு 13:20, 21) சாத்தான் பயன்படுத்தும் மற்றொரு வெற்றிகரமான சதித்திட்டம், ஆட்களை ஒழுக்க ரீதியில் கறைபடுத்துவதாகும். கடவுள் அளித்திருக்கும் ஒளியை நோக்கி நம்பிக்கையுடன் நடைபோடாமல் ஆன்மீக ரீதியில் பலவீனமாய் இருப்பவர்களை சீர்குலைக்க, கிறிஸ்தவ சபையில் தவறான உள்நோக்கத்தோடு நுழைந்த சிலர் ஒரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள்.—யூதா 8, 12-16.
இந்த உலகம் ஒழுக்க ரீதியில் அதலபாதாளத்தை நோக்கி செல்கிறது. இந்தச் சீர்குலைவு சாத்தான் கோபத்தில் கொதித்துக்கொண்டிருப்பதற்கு தெள்ளத் தெளிவான அத்தாட்சி என்பதை ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி வாய்ந்தவர்களும், கடவுளுடைய எச்சரிக்கைகளுக்குக் கவனமாகச் செவிகொடுப்பவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். ஆம், கடவுளுக்கு உண்மையாய் இருப்போரைத் தன்னால் தொடக்கூட முடியாத காலம் சீக்கிரத்தில் வரவிருப்பதை சாத்தான் அறிந்திருக்கிறான். எனவே, அவனுடைய முயற்சிகளை முறியடிக்க நாம் தொடர்ந்து ஆன்மீக ரீதியில் கவனமாய் இருப்பதற்கான காலம் இதுவே.
ஆன்மீக ரீதியில் கவனமாய் இருப்பதற்கான வழிகள்
கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை, “இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கை” போலிருப்பதாய் அப்போஸ்தலன் பேதுரு கூறினார். ஏனென்றால், கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதைப் புரிந்துகொள்ள கிறிஸ்தவர்களுக்கு அது உதவுகிறது. (2 பேதுரு 1:19-21) கடவுளுடைய வார்த்தையை நேசித்து, அதைப் பின்பற்ற தொடர்ந்து முயற்சி செய்பவர்கள், யெகோவா தங்கள் பாதையை நேராக்குவார் என்பதை அறிந்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 3:5, 6) அப்படிப்பட்ட நம்பிக்கையும் நன்றியுமுள்ளவர்கள், “மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.” ஆனால், யெகோவாவை அறியாதவர்களும், அவருடைய வழிநடத்துதலை உதறித்தள்ளுகிறவர்களும் ‘மனநோவினாலும்,’ ‘ஆவியின் முறிவினாலும்’ கஷ்டப்படுவார்கள். (ஏசாயா 65:13, 14) ஆகவே, பைபிளை ஊக்கமாய்ப் படிப்பதன் மூலமாகவும், கற்றுக்கொள்வதைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் அசைக்க முடியாத நம்முடைய எதிர்கால நம்பிக்கைமீது கண்களை ஊன்ற வைக்கலாம். இந்தப் பொல்லாத சகாப்தத்தில் புகையைப் போல் மறைந்துபோகிற இன்பங்களில் கவனம் செலுத்தாதிருக்கலாம்.
ஆன்மீக ரீதியில் விழித்திருக்க ஜெபமும் மிக முக்கியம். இந்தப் பொல்லாத உலகின் முடிவைப்பற்றிப் பேசுகையில், இயேசு பின்வருமாறு குறிப்பிட்டார்: “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.” (லூக்கா 21:34-36) மிக ஊக்கமாய் ஜெபிக்கும்படி இயேசு சொன்னதைக் கவனியுங்கள். இந்த இக்கட்டான காலப்பகுதியில் நித்திய ஜீவனை இழந்துபோகச் செய்கிற காரியங்களில் விழுந்துவிட வாய்ப்பிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆன்மீக ரீதியில் அதிக விழிப்போடிருக்க நீங்கள் விரும்புவதை உங்களுடைய ஜெபங்கள் காட்டுகின்றனவா?
புதிய உலகை நோக்கிச் செல்கிற பயணத்தின் மிக ஆபத்தான கட்டம் அதன் நிறைவு பகுதியே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஜீவனுக்கு நம்மை வழிநடத்தும் ஒளியை விட்டு விலகக்கூடாது என்பதை எப்போதும் மனதில் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம்!
போலி ஒளி, ஜாக்கிரதை!
கப்பல் பிரயாணம் களைகட்டியிருந்த காலத்தில், அமாவாசை இரவுகளில் மாலுமிகள் கரையைக் காண முடியாமல் திண்டாடினார்கள். ஆனால், தீயவர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்காக, கரையருகே ஆபத்தான பகுதியில் இவர்கள் ஒளியை ஏற்றி வைப்பார்கள். கப்பல் தலைவர்கள் இதைப் பார்த்து ஏமாந்து, பாதை மாறி வர வேண்டுமென்பதே அவர்களுடைய திட்டம். இப்படித் திசை மாறிச் செல்பவர்களின் கப்பல் சேதமடையும், சரக்குகள் கொள்ளை போகும், உயிர்கள் பலியாகும்.
அதேபோல, “ஒளியின் தூதனுடைய” வேஷத்தைப் போட்டிருக்கிற சாத்தானும், கடவுளுடைய ஜனங்கள் அவருடன் வைத்திருக்கிற நல்லுறவைக் குலைத்துப்போட முயற்சி செய்கிறான். “கள்ள அப்போஸ்தலர்கள்,” ‘நீதியின் ஊழியக்காரரைப்’ போன்று நடிக்கும் விசுவாச துரோகிகள் ஆகியோரைப் பயன்படுத்தி ஆன்மீக ரீதியில் அசதியாய் இருப்பவர்களை சாத்தான் ஏமாற்றிவிடலாம். (2 கொரிந்தியர் 11:13-15) விழிப்புள்ள, அனுபவசாலியான கப்பல் தலைவரும் அவருடைய மாலுமிகளும் போலியான ஒளியைக் கண்டு பெரும்பாலும் ஏமாறுவதில்லை. அதேபோல, “நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்த பயிற்சி பெற்ற” கிறிஸ்தவர்கள், பொய் போதனைகளாலும் தீங்கிழைக்கும் தத்துவங்களாலும் ஏமாந்துவிடுவதில்லை.—எபிரெயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு; வெளிப்படுத்துதல் 2:2.
மாலுமிகள் தாங்கள் பயணிக்கையில் எங்கெங்கே கலங்கரை விளக்கங்கள் இருக்கும் என்ற பட்டியலை தங்களோடு எடுத்துச் செல்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தைப் பற்றிய விவரங்கள் இருக்கும். அதற்கே உரிய சமிக்கைகளைப் பற்றிய குறிப்புகளும் இருக்கும். “மாலுமிகள் கலங்கரை விளக்கங்களைப் பார்க்கையில் அதன் அமைப்பைக் கவனிக்கிறார்கள். பின்னர், தங்களிடமிருக்கும் பட்டியலோடு ஒப்பிட்டு அது எந்தக் கலங்கரை விளக்கம் என்பதையும் அது எந்த இடம் என்பதையும் அறிந்துகொள்கிறார்கள்” என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. அதேபோன்று, உண்மை வணக்கத்தையும், அதைப் பின்பற்றுபவர்களையும் அடையாளம் கண்டுகொள்ள நல்மனமுள்ளோருக்கு கடவுளுடைய வார்த்தை உதவுகிறது. அதுவும் குறிப்பாக, தம்முடைய உண்மை வணக்கத்தைப் பொய் வணக்கத்திற்கு மேலாக யெகோவா உயர்த்தியிருக்கிற இந்தக் காலத்தில் அது உதவுகிறது. (ஏசாயா 2:2, 3; மல்கியா 3:18) உண்மை வணக்கத்திற்கும் பொய் வணக்கத்திற்கும் இடையிலான பெரும் வித்தியாசத்தை ஏசாயா 60:2, 3 பின்வருமாறு விவரிக்கிறது: “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.”
எல்லா நாடுகளிலுமுள்ள லட்சக்கணக்கானோர் யெகோவாவின் ஒளியால் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறார்கள்; தங்கள் பயணத்தின் இந்த நிறைவு கட்டத்தில் அவர்கள் விசுவாசத்தை இழந்துவிட மாட்டார்கள். மாறாக, இந்தப் பொல்லாத சகாப்தத்தின் எஞ்சியிருக்கும் நாட்களைப் பத்திரமாகக் கடந்து சென்று, புதிய உலகம் என்ற பாதுகாப்பான புகலிடத்தில் கரை சேருவார்கள்.
[அடிக்குறிப்பு]
a “வெளிச்சம்,” “ஒளி” ஆகிய வார்த்தைகளை வேதாகமம் பல்வேறு அடையாள அர்த்தங்களில் பயன்படுத்துகிறது. உதாரணமாக, கடவுளை ஒளியோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறது. (சங்கீதம் 104:1, 2; 1 யோவான் 1:5) கடவுளையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய பைபிள் சத்தியங்கள் வெளிச்சத்திற்கு ஒப்பிடப்படுகின்றன. (ஏசாயா 2:3-5; 2 கொரிந்தியர் 4:6) இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது இயேசு ஒளியாக இருந்தார். (யோவான் 8:12; 9:5; 12:35) இயேசுவைப் பின்பற்றியவர்கள் தங்களுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும்படி கட்டளையிடப்பட்டார்கள்.—மத்தேயு 5:14, 16.
[பக்கம் 15-ன் படம்]
மாலுமிகளைப் போன்றே உண்மை கிறிஸ்தவர்களும் போலி வெளிச்சத்தைக் கண்டு ஏமாறாதிருக்கிறார்கள்