லூக்கா பிரியமான உடன்வேலையாள்
வருடம் பொ.ச. 65. அப்போஸ்தலன் பவுல் ரோமில் இருந்தார். விசுவாசத்தை விட்டுக்கொடுக்காததால் விசாரணைக் கைதியாக சிறையில் தள்ளப்பட்டிருந்தார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவிருந்ததாகத் தெரிகிறது. அவருடைய நண்பர் என்று சொன்னால் தனக்கு எத்தகைய ஆபத்து வரும் என்பதை லூக்கா அறிந்திருந்தார். எனினும், அந்தக் இக்கட்டான சூழ்நிலையில் பவுலோடு இருந்தது லூக்கா மட்டுமே.—2 தீமோத்தேயு 4:6, 11.
பைபிள் வாசகர்கள் லூக்கா என்ற பெயரை நன்கு அறிந்திருக்கிறார்கள்; ஏனென்றால், தன் பெயரில் ஒரு சுவிசேஷத்தை அவர் எழுதியுள்ளார். ‘பிரியமான வைத்தியன்,’ ‘உடன்வேலையாள்’ என்று தன்னை அழைத்த பவுலோடு அவர் தொலை தூரங்களுக்குப் பயணம் செய்தார். (கொலோசெயர் 4:14; பிலேமோன் 24) பைபிளில் லூக்காவைப் பற்றிய தகவல் அதிகமில்லை; மூன்று முறை மட்டுமே அவருடைய பெயர் காணப்படுகிறது. என்றாலும், லூக்காவைப்பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்களை நீங்கள் அறியும்போது, உண்மையுள்ள இந்தக் கிறிஸ்தவரை பவுலைப் போலவே நீங்களும் பாராட்டுவீர்கள்.
எழுத்தாளர், மிஷனரி
லூக்கா எழுதின சுவிசேஷமும் அப்போஸ்தலருடைய நடபடிகளும் தெயோப்பிலுவுக்கு எழுதப்பட்டதால் இந்த இரண்டு புத்தகங்களையுமே லூக்காதான் எழுதினார் என்ற முடிவுக்கு நாம் வரலாம். (லூக்கா 1:1; அப்போஸ்தலர் 1:1) இயேசு கிறிஸ்து ஊழியம் செய்தபோது அவருடன் தானும் இருந்ததாக லூக்கா சொல்கிறதில்லை. மாறாக, கண்ணாரக் கண்டவர்களிடமிருந்து தகவலைப் பெற்று, ‘எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து’ எழுதியதாக அவர் சொல்கிறார். (லூக்கா 1:1-4) எனவே, பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு அவர் கிறிஸ்துவின் சீஷராக ஆகியிருக்கலாம்.
லூக்கா, சீரியாவிலுள்ள அந்தியோகியாவைச் சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கு, அந்தப் பட்டணத்தில் நடந்த சம்பவங்களைப்பற்றி அப்போஸ்தலர் புத்தகம் சொல்வதையும் ‘நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரில்’ ஆறுபேரின் பட்டணங்களைக் குறிப்பிடாமல், ஒருவரை ‘யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தான்’ என்று சொல்வதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும், இதை வைத்து, தன்னுடைய சொந்த ஊரான அந்தியோகியாவைப்பற்றி லூக்கா விசேஷமாகக் குறிப்பிட்டிருந்தார் என்ற முடிவுக்கு நாம் வரமுடியாது.—அப்போஸ்தலர் 6:3-6.
அப்போஸ்தலர் புத்தகத்தில் லூக்காவுடைய பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், சில வசனங்களில், “நாங்கள்,” “எங்களுடைய,” “எங்களை” போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள சில சம்பவங்களில் அவரும் பங்கேற்றிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பவுலும் அவரோடிருந்தவர்களும் ஆசியா மைனரைக் கடந்து சென்ற வழியைப்பற்றி லூக்கா சொல்லும்போது, ‘அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்’ என்று குறிப்பிடுகிறார். துரோவாவில் இருக்கும்போது பவுல், “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய” வேண்டுமென்று ஒரு மக்கெதோனிய தேசத்தான் அவரை மன்றாடியதைப்போல் ஒரு தரிசனத்தைக் கண்டார். ‘அந்தத் தரிசனத்தை அவர் கண்டபோது, . . . நாங்கள் . . . உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம் பண்ணினோம்’ என்று லூக்கா தொடர்ந்து கூறுகிறார். (அப்போஸ்தலர் 16:8-10) முதலில் “அவர்கள்” என்று சொல்லிவிட்டு, பிறகு “நாங்கள்” என்று குறிப்பிட்டதிலிருந்து துரோவாவில் பவுலுடன் இருந்தவர்களோடு லூக்காவும் சேர்ந்துகொண்டாரென நாம் அறிந்துகொள்கிறோம். பிறகு, பிலிப்பி பட்டணத்தில் செய்த பிரசங்க வேலையை விவரிக்கும்போது, தானும் அதில் பங்கேற்றதைத் தெரிவிக்க பன்மையில் குறிப்பிடுகிறார். “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்” என்று அவர் எழுதுகிறார். அதன் விளைவாக, லீதியாளும் அவளுடைய குடும்பத்தாரும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, முழுக்காட்டுதல் பெற்றார்கள்.—அப்போஸ்தலர் 16:11-15.
பிலிப்பி பட்டணத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அங்கே, ‘குறிசொல்ல ஏவுகிற ஆவியினால்’ குறிசொல்லிவந்த ஒரு வேலைக்காரப் பெண்ணை பவுல் சுகப்படுத்தினார். வருமானத்திற்கு வழியில்லாமல் போன கோபத்தில், அவளுடைய எஜமானர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, அடித்து சிறையில் அடைத்தார்கள். அப்போது, லூக்கா கைது செய்யப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது; ஏனென்றால், தன் நண்பர்கள் சந்தித்த சோதனைகளை விவரிக்கையில் தன்னை உட்படுத்தாமல், மூன்றாவது நபராக இருந்து விளக்குகிறார். விடுதலையான பிறகு, “அவர்கள் [பவுலும் சீலாவும்] . . . [சகோதரர்களுக்கு] ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.” பிற்பாடு, பிலிப்பி பட்டணத்திற்கு பவுல் திரும்பி வந்த பிறகுதான் லூக்கா மீண்டும் தன்னையும் உட்படுத்தி பன்மையில் எழுத ஆரம்பித்தார். (அப்போஸ்தலர் 16:16-40; 20:5, 6) ஒருவேளை, பிலிப்பி பட்டணத்தில் ஊழியத்தை மேற்பார்வை செய்வதற்கு லூக்கா அங்கேயே தங்கியிருக்கலாம்.
தகவலைச் சேகரித்தல்
சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் புத்தகத்தையும் எழுதுவதற்குத் தேவையான தகவல்களை லூக்கா எவ்வாறு பெற்றார்? அப்போஸ்தலர் புத்தகத்தில், சில சம்பவங்களை விவரிக்கையில் லூக்கா தன்னையும் அதில் உட்படுத்தி எழுதியுள்ளார்; அந்தப் பதிவுகள், அவர் பவுலோடு பிலிப்பியிலிருந்து எருசலேமுக்குச் சென்றார் என்பதைக் காட்டுகின்றன. அங்கே பவுல் மீண்டும் கைது செய்யப்பட்டார். எருசலேமுக்குப் பயணிக்கும் வழியில், பவுலும் அவரோடிருந்தவர்களும் செசரியா பட்டணத்தில் சுவிசேஷ ஊழியம் செய்து வந்த பிலிப்பு என்பவருடன் தங்கினார்கள். (அப்போஸ்தலர் 20:6; 21:1-17) ஆரம்பத்தில் சமாரியாவில் நடைபெற்ற மிஷனரி ஊழியத்தைப் பற்றிய தகவல்களை பிலிப்புவிடமிருந்து லூக்கா பெற்றிருந்திருப்பார். ஏனென்றால், அங்கே அவர்தான் பிரசங்க ஊழியத்தில் முன்நின்று செயல்பட்டுவந்தார். (அப்போஸ்தலர் 8:4-25) வேறு யாரிடமிருந்தெல்லாம் லூக்கா தகவலை சேகரித்திருப்பார்?
செசரியாவிலுள்ள சிறையில் பவுல் இரண்டு வருடங்கள் இருந்தபோது சுவிசேஷ பதிவுக்கான தகவலை லூக்கா சேகரித்திருக்கலாம். செசரியாவிற்கு அருகில் எருசலேம் இருந்ததால் இயேசுவின் வம்சாவளிப் பட்டியலுக்கான தகவலை அங்கிருந்து அவர் பெற்றிருக்க முடியும். இயேசுவின் வாழ்க்கையோடும் ஊழியத்தோடும் சம்பந்தப்பட்ட அநேக சம்பவங்களை லூக்கா சுவிசேஷத்தில் மட்டுமே காணமுடிகிறது. வேறெங்கும் குறிப்பிடப்படாத சுமார் 82 விஷயங்களை அவர் எழுதியிருப்பதாக ஓர் அறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.
முழுக்காட்டுபவனாகிய யோவானின் பிறப்பைப் பற்றிய தகவலை அவருடைய தாய் எலிசபெத்திடமிருந்து லூக்கா கேட்டுத் தெரிந்திருக்கலாம். இயேசுவின் பிறப்பையும் அவருடைய பிள்ளைப் பருவத்தையும் பற்றிய விவரங்களை அவருடைய தாய் மரியாளிடமிருந்து அவர் பெற்றிருக்கலாம். (லூக்கா 1:5-80) அற்புதமாக மீன் பிடித்ததைப்பற்றி பேதுருவும் யாக்கோபும் யோவானும் லூக்காவுக்குச் சொல்லியிருக்கலாம். (லூக்கா 5:4-10) நல்ல சமாரியன், இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுவது, காணாமல்போன வெள்ளிக்காசு, கெட்ட குமாரன், ஐசுவரியவானும் லாசருவும் போன்ற இயேசுவின் சில உவமைகளை லூக்காவின் சுவிசேஷத்தில் மட்டுமே காண முடிகிறது.—லூக்கா 10:29-37; 13:23, 24; 15:8-32; 16:19-31.
மக்களிடம் லூக்கா அதிக அக்கறை காட்டினார். சுத்திகரிப்பு பலியை மரியாள் செலுத்தியது, விதவையின் மகன் உயிர்த்தெழுப்பப்பட்டது, இயேசுவின் பாதத்தில் ஒரு பெண் பரிமள தைலம் பூசியது போன்ற சம்பவங்களை அவர் எழுதினார். கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்த பெண்களைப் பற்றியும் மார்த்தாளும் மரியாளும் அவரை உபசரித்ததைப் பற்றியும் லூக்கா குறிப்பிடுகிறார். கூனியாயிருந்த பெண்ணையும் நீர்க்கோவை வியாதியுள்ளவனையும் பத்து குஷ்டரோகிகளையும் இயேசு குணப்படுத்தியதைப்பற்றி லூக்கா சுவிசேஷம் கூறுகிறது. இயேசுவைப் பார்ப்பதற்கு மரத்தின்மேல் ஏறிய குள்ளனான சகேயுவைப் பற்றியும் கிறிஸ்துவுக்குப் பக்கத்தில் கழுமரத்தில் அறையப்பட்ட கள்வன் மனந்திரும்பியதைப் பற்றியும் லூக்காவின் சுவிசேஷம் நமக்குச் சொல்கிறது.—லூக்கா 2:24; 7:11-17, 36-50; 8:2, 3; 10:38-42; 13:10-17; 14:1-6; 17:11-19; 19:1-10; 23:39-43.
இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட நல்ல சமாரியன், காயத்திற்கு சிகிச்சை அளித்ததைப்பற்றி லூக்கா சுவிசேஷம் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. சமாரியனுக்கு அளிக்கப்பட்ட உதவியை இயேசு விவரித்தபோது, கிருமிநாசினியாக திராட்சை ரசமும் வலியைத் தணிக்க எண்ணெயும் பயன்படுத்தப்பட்டதாகவும், காயங்களுக்குக் கட்டுப்போடப்பட்டதாகவும் கூறினார். இந்த உவமையை லூக்கா ஒரு மருத்துவருக்கே உரிய பாணியில் விவரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.—லூக்கா 10:30-37.
கைதிக்கு உதவி
அப்போஸ்தலன் பவுல்மீது லூக்கா அதிக கரிசனை காட்டினார். செசரியாவில் பவுல் காவலில் இருந்தபோது, “கண்டுகொள்ளுகிறதற்கு . . . வருகிற [பவுலுடைய] மனுஷர்களில் ஒருவரையும்” தடைசெய்யாதிருக்க ரோம அதிகாரியாகிய பேலிக்ஸ் கட்டளையிட்டார். (அப்போஸ்தலர் 24:23) அப்படி உதவியவர்களில் லூக்காவும் இருந்திருப்பார். உடல்நலக் குறைவால் பவுல் அவ்வப்போது கஷ்டப்பட்டு வந்ததால் அவரைக் கவனித்துக்கொள்வது இந்தப் ‘பிரியமான வைத்தியரின்’ சேவையில் ஒன்றாக இருந்திருக்கலாம்.—கொலோசெயர் 4:14; கலாத்தியர் 4:13.
அப்போஸ்தலன் பவுல் இராயனுக்கு அபயமிட்டபோது, ரோம அதிகாரியாகிய பெஸ்து அவரை ரோமுக்கு அனுப்பினார். அந்தச் சமயத்திலும் அவரைத் தனியே விட்டுவிடாமல் அவருடன் லூக்கா இத்தாலியாவுக்கு நீண்ட தூரம் கப்பலில் பயணித்தார். அவர்கள் சந்தித்த கப்பற்சேதத்தைப்பற்றி தத்ரூபமாக எழுதினார். (அப்போஸ்தலர் 24:27; 25:9-12; 27:1, 9-44) ரோமில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டபோது, கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால் அநேக கடிதங்களை பவுல் எழுதினார்; அவற்றில் லூக்காவைப்பற்றி இரண்டு கடிதங்களில் குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 28:30; கொலோசெயர் 4:14; பிலேமோன் 24) ஒருவேளை இந்த இரண்டு வருட காலத்தில் அப்போஸ்தலர் புத்தகத்தை லூக்கா எழுதியிருக்கலாம்.
ரோமில் பவுல் தங்கியிருந்த வீட்டில் ஆன்மீகக் காரியங்கள் மும்முரமாய் நடைபெற்றிருக்கலாம். தீகிக்கு, அரிஸ்தர்க்கு, மாற்கு, யுஸ்து, எப்பாப்பிரா, ஒநேசிமு போன்ற பவுலின் உடன்வேலையாட்களை லூக்கா அங்கு சந்தித்திருப்பார்.—கொலோசெயர் 4:7-14.
இரண்டாவது முறை பவுல் சிறைப்பட்டபோது மரணம் நெருங்கிவிட்டதாக அவர் உணர்ந்தார்; மற்றவர்கள் அவரை விட்டு ஒதுங்கியபோதிலும் உண்மையும் தைரியமுமிக்க லூக்கா அவருக்குப் பக்கபலமாக இருந்தார். லூக்காவின் சுதந்திரம் பறிபோகும் ஆபத்து இருந்திருக்கலாம். ஆனாலும், அவர் பவுலோடு தங்கியிருந்தார். பவுல் சொன்னதையெல்லாம் ஓர் எழுத்தாளராக இருந்து லூக்கா எழுதினார்; “லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான்” என்று பவுல் சொன்னதையும்கூட லூக்காவே எழுதினார். அதன் பிறகு, சீக்கிரத்திலேயே பவுல் சிரச்சேதம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது வழிவழியாய் நம்பப்படுகிற கருத்து.—2 தீமோத்தேயு 4:6-8, 11, 16.
லூக்கா தன்னலமற்றவர், தன்னடக்கமுள்ளவர். தன் கல்வியறிவைப்பற்றிப் பெருமையடித்துக்கொள்ளவோ மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை. ஆம், மருத்துவத் தொழிலுக்குத் தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருக்கலாம்; அப்படிச் செய்யாமல், ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். லூக்காவைப்போல நாமும், தன்னலம் துறந்து நற்செய்தியை அறிவிக்கலாம்; யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் தன்னடக்கத்துடன் சேவை செய்யலாம்.—லூக்கா 12:31.
[பக்கம் 19-ன் பெட்டி]
தெயோப்பிலு யார்?
சுவிசேஷத்தையும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தையும் தெயோப்பிலுவுக்கு லூக்கா எழுதினார். லூக்கா சுவிசேஷத்தில் இவர் ‘மகா கனம்பொருந்தியவர்’ என்று அழைக்கப்படுகிறார். (லூக்கா 1:1) “மகா கனம்பொருந்திய” என்ற அடைமொழி செல்வச்சீமான்களையும் ரோம அரசாங்கத்தின் உயரதிகாரிகளையும் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அப்போஸ்தலன் பவுல், யூதாவிலிருந்த ரோம தேசாதிபதியாகிய பெஸ்துவை இதேவிதமாக அழைத்தார்.—அப்போஸ்தலர் 26:25.
இயேசுவைப் பற்றிய செய்தியை தெயோப்பிலு நிச்சயமாகவே கேள்விப்பட்டிருப்பார், அதில் ஆர்வமும் காட்டியிருப்பார். ‘உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை [தெயோப்பிலு] அறிந்துகொள்வதற்கு’ தன்னுடைய சுவிசேஷம் உதவும் என்று லூக்கா நம்பினார்.—லூக்கா 1:3.
ரிச்சர்ட் லென்ஸ்கீ என்ற கிரேக்க அறிஞர் சொல்கிறபடி, “மகா கனம்பொருந்திய” என்று லூக்கா அவரைக் குறிப்பிட்டபோது தெயோப்பிலு ஒரு கிறிஸ்தவராக இருந்திருக்க மாட்டார். ஏனென்றால், “கிறிஸ்தவ இலக்கியங்கள் முழுவதிலும் . . . எந்தவொரு சகவிசுவாசியும் இதுபோன்ற கெளரவப் பட்டத்தினால் அழைக்கப்படவில்லை.” பிற்பாடு, அப்போஸ்தலர் புத்தகத்தை லூக்கா எழுதினபோது, “மகா கனம்பொருந்திய” என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறுமனே “தெயோப்பிலுவே” என்று எழுதினார். (அப்போஸ்தலர் 1:1) “லூக்கா சுவிசேஷத்தை தெயோப்பிலுவுக்காக அவர் எழுதியபோது இந்தப் பிரமுகர் கிறிஸ்தவராக இல்லை; என்றாலும், கிறிஸ்தவத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், அப்போஸ்தலர் புத்தகத்தை லூக்கா அவருக்கு அனுப்பியபோது தெயோப்பிலு கிறிஸ்தவராக மாறியிருந்தார்” என்று லென்ஸ்கீ கூறுகிறார்.