மக்களிடையே மலர்ந்து வரும் ஒற்றுமை—எவ்வாறு?
“ஒற்றுமை.” இதை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? சண்டை சச்சரவோ உரசலோ இல்லாத நிலையே ஒற்றுமை என்பதாக இந்த வார்த்தைக்குச் சிலர் விளக்கம் அளிக்கிறார்கள். உதாரணமாக, இரண்டு நாடுகளோ அதற்கும் மேற்பட்ட நாடுகளோ சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டதென்றால் அவை ஒன்றுக்கொன்று ஒற்றுமையாய் இருப்பதாகச் சொல்லப்படலாம். ஆனால் நிஜமாகவே அவை ஒற்றுமையுடன் இருக்கின்றனவா? அப்படிச் சொல்லிவிட முடியாது.
இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: ஆண்டாண்டு காலமாகவே சமாதான ஒப்பந்தங்கள் ஆயிரக்கணக்கில் செய்யப்பட்டுள்ளதோடு, மீறப்பட்டுமுள்ளன. ஏன்? உலகில் சமாதானமும் ஒற்றுமையும் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, தாங்கள் பெரும்புள்ளிகளாக ஆதிக்கம் செலுத்தினால் போதுமென உலகத் தலைவர்கள் கருதுவதே பெரும்பாலும் அதற்குக் காரணம். சில நாடுகளோவென்றால், மற்ற நாடுகளைவிட தங்களிடம் படைபலம் குறைவாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து நேரிடுமோவென்று பயப்படுகின்றன.
ஆகவே, இரு நாடுகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளவில்லை என்பதற்காக அவை ஒற்றுமையுடன் சமாதானமாய் இருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது. ஒருவரையொருவர் குறிபார்த்துச் சுடுவதற்காக இரண்டு பேர் துப்பாக்கியுடன் தயார்நிலையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்; ஆனால், அவர்கள் இன்னும் சுடவில்லை என்பதற்காக ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருக்கின்றனர் எனச் சொல்லிவிட முடியுமா? அப்படிச் சொன்னால், அது அபத்தமாக இருக்கும், அல்லவா? என்றாலும், இன்று அநேக நாடுகள் அப்படிப்பட்ட நிலையிலேயே உள்ளன. நாடுகளுக்கிடையில் நம்பிக்கையில்லா நிலை வளர்ந்து வருவதால், என்றாவது ஒரு நாள் ஆயுதங்கள் களமிறக்கப்படும் என்ற அச்சம் அனைவரையும் பீடித்துள்ளது. அப்படியொரு பேரழிவு ஏற்படாமல் தடுக்க என்ன செய்யப்பட்டுள்ளது?
அணு ஆயுதங்கள்—ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை
அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை (NPT) பலரும் மலைபோல் நம்புகின்றனர். 1968-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அவற்றைத் தயாரிப்பதைத் தடை செய்கிறது, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அவற்றைப் பெருக்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு 180-க்கும் அதிகமான நாடுகள் இப்போது ஒப்புதல் தெரிவித்துள்ளன. படிப்படியாக ஆயுதங்களைக் குறைத்துவிட வேண்டும் என்பதுதான் NPT-யின் குறிக்கோள்.
இது மெச்சத்தக்க குறிக்கோளாகத் தோன்றலாம். ஆனால், “அணு ஆயுத கிளப்” எனப்படும் அணு ஆயுத வல்லரசுகளின் வரிசையில் சேர்ந்துவிடாதபடி சில நாடுகளைத் தடுக்கும் முயற்சியே இது என விமர்சகர்கள் சிலர் கருதுகிறார்கள்; அதாவது அணு ஆயுதங்கள் கைவசம் இல்லாத நாடுகள் அவற்றை உற்பத்தி செய்வதைத் தடுப்பதே இதன் குறிக்கோள் என அவர்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் சில நாடுகளும்கூட அதை மறுபரிசீலனை செய்துவிடுமோ என அஞ்சப்படுகிறது. உண்மையில், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடுப்பது எவ்விதத்திலும் நியாயம் அல்ல என்றே சில நாடுகள் கருதுகின்றன; ஆயுதங்கள் இருந்தால் தங்களைத் தற்காத்துக்கொள்ளலாம் என்பது அவற்றின் அபிப்பிராயம்.
இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி, ஒருவேளை அபாயத்தை இன்னும் அதிகரிப்பது எதுவென்றால், அணு மின்சக்தியை உற்பத்தி செய்யும் கருவிகளை உருவாக்குவதற்கு எந்தவொரு நாட்டிற்கும் தடை போடப்படாததே. ஆகையால், போர் சம்பந்தப்படாத காரியங்களுக்கென்று அணு மின்சக்தியைப் பயன்படுத்துவதாகக் கருதப்படும் நாடுகள் இரகசியமாக அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனவோ என்ற பீதியை இது சிலருடைய மனதில் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே அணு ஆயுதங்களைத் தங்கள் வசம் வைத்திருக்கும் நாடுகளும்கூட NPT-யை ஓரங்கட்டிவிடலாம். அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள நாடுகள் அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்றோ, அவற்றைக் குறைக்க வேண்டுமென்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். “அதற்கு . . . தற்போது எதிரும் புதிருமாக இருக்கும் நாடுகள் மத்தியில் நட்பும் நம்பிக்கையும் மலர வேண்டும்; இது [கனவிலும் நடக்காத காரியம் என்பதால்] நடைமுறையில் நடக்கப்போவதே இல்லை” என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது.
ஒற்றுமைக்காக மனிதன் என்னதான் ஆத்மார்த்தமாக முயற்சி செய்தாலும் தோல்வியே மிஞ்சியிருக்கிறது. பைபிளைப் படிப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமூட்டும் விஷயமல்ல. ஏனெனில், “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே [அதாவது, மனிதனாலே] ஆகிறதல்ல” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 10:23) பைபிள் ஒளிவுமறைவின்றி சொல்லும் மற்றொரு விஷயம் என்னவெனில்: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதிமொழிகள் 16:25) ஒற்றுமைக்காக மனித அரசாங்கங்களால் செய்ய முடிந்ததெல்லாம் அற்பசொற்பம்தான். என்றபோதிலும், நாம் நம்பிக்கை இழந்துவிட வேண்டியதில்லை.
உண்மையான ஒற்றுமைக்குக் காரணர்
உலக ஒற்றுமை கைகூடும் என்றும், ஆனால் அது மனிதனால் சாத்தியமல்ல என்றும் பைபிளில் கடவுள் வாக்குறுதி அளித்துள்ளார். மனிதர் உலகெங்கும் சமாதானமாய் வாழ வேண்டுமென்பது படைப்பாளரின் நோக்கமாய் இருந்தது; மனிதனால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை அவர் சாதிப்பார். ‘அதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது’ என்று சிலர் நினைக்கலாம். ஆனாலும், மனிதர் ஒற்றுமையுடன் சமாதானமாய் வாழ வேண்டுமென்பதே மனிதனைப் படைத்த நாள்முதலாய் கடவுளின் நோக்கம்.a அதுவே இன்றும் அவருடைய நோக்கம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிற பைபிள் வசனங்கள் பலவாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது சிந்திப்போம்:
• “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:8, 9.
• “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.
• “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.”—ஏசாயா 25:8.
• “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13.
• “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:4.
இந்த வாக்குறுதிகள் நம்பத்தக்கவை. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனெனில் படைப்பாளராகிய யெகோவா தேவனுக்கு, மனிதகுலத்தை ஒன்றுபடுத்துவதற்கான சக்தியும் திறமையும் இருக்கிறது. (லூக்கா 18:27) அவ்வாறு ஒன்றுபடுத்துவதற்கான விருப்பமும் அவருக்கு உள்ளது. சொல்லப்போனால், ‘கடவுள் விரும்பிச் செய்த தீர்மானமே . . . விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும்’ என்பதுதான் என பைபிள் சொல்கிறது.—எபேசியர் 1:8-10, பொது மொழிபெயர்ப்பு.
“நீதி வாசமாயிருக்கும்” “புதிய பூமி” உருவாகுமென்ற கடவுளுடைய வாக்குறுதி கானல்நீரல்ல. (2 பேதுரு 3:13) மாறாக, அந்த வாக்குறுதியைப் பற்றி யெகோவா தேவன் கூறுவதாவது: “அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.
கடவுளுடைய வார்த்தை ஒன்றுபடுத்துகிறது
மனிதகுலத்தை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக இரண்டுபடுத்துவதில் பெரும்பாலும் மதமே பங்கு வகித்திருக்கிறது என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இது சிந்தித்துப் பார்க்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால், படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரென்று நாம் நம்பினால், அவரை வணங்குவோர் ஒருவருக்கொருவர் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்போம், அல்லவா? ஆம், நிச்சயமாக!
மதம், மனிதரிடையே இந்தளவுக்குப் பிரிவினைகளை ஏற்படுத்தியிருப்பதற்கு யெகோவா தேவனையோ அவருடைய வார்த்தையையோ பழிசொல்ல முடியாது. மாறாக, கடவுளுடைய நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல், ஒற்றுமைக்காக மனிதன் போடும் திட்டங்களுக்குப் பச்சைக்கொடி காட்டுகிற மதங்களையே பழிசொல்ல வேண்டும். இயேசு தம் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்களை “மாயக்காரரே” என்று அழைத்து, அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் . . . தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.”—மத்தேயு 15:7-9.
அதற்கு நேர்மாறாக, உண்மை வணக்கம் மக்களை ஒன்றுபடுத்துகிறது. அதைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்தார்: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:2, 4.
இன்று 230-க்கும் மேற்பட்ட தேசங்களில் வாழும் யெகோவாவின் சாட்சிகள், ஒற்றுமைக்கான வழிகளைக் குறித்து யெகோவா தேவன் அளிக்கும் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கின்றனர். அவர்களிடையே காணப்படும் ஒற்றுமைக்கு அடித்தளமாய் அமைந்திருப்பது எது? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 3:14) ‘கட்டு’ என்று பவுல் பயன்படுத்தியுள்ள கிரேக்க வார்த்தை, நம் உடலிலுள்ள தசைநார்களைக் குறிக்கக்கூடும். அவை கயிற்றைப் போன்று உறுதியானவை, இரண்டு முக்கியப் பணிகளைச் செய்பவை. உடலின் உறுப்புகள் அதனதன் இடத்தில் இருக்கும்படி அவை பார்த்துக் கொள்கின்றன, எலும்புகளைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கின்றன.
அவ்வாறே அன்பும் ஆட்களைப் பிணைக்கிறது. இந்தப் பண்பு, மக்கள் ஒருவரையொருவர் கொன்று குவிப்பதைத் தடுக்கிறது; அதைவிடவும் முக்கியமாக, கிறிஸ்து காட்டியதைப் போன்ற இந்த அன்பு, வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஆட்கள் ஒருவருக்கொருவர் சமாதானமாய் நடந்துகொள்ளத் துணை புரிகிறது. உதாரணமாக, நன்கு அறியப்பட்ட ஒரு நியமத்திற்கு இசைய மக்கள் வாழ்வதற்கு உதவுகிறது. இயேசு சொன்ன இந்த நியமம், மத்தேயு 7:12-ல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” இந்த நியமத்தைப் பின்பற்றி அநேகர் தப்பெண்ணத்தை விட்டுவிட்டிருக்கிறார்கள்.
“ஒருவரிலொருவர் அன்பு”
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் 13:35) இவ்வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் கிறிஸ்துவின் சீஷர்களென்று நிரூபிக்கத் தீர்மானமாய் இருக்கின்றனர். இனப் போராட்டம், அரசியல் ஆர்ப்பாட்டம் ஆகியவை தலைதூக்கும் சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட அன்பை அவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் காட்டியிருக்கின்றனர். உதாரணமாக, 1994-ல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலையின்போது, யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கொருவர் அன்பைக் காட்டினர். அவர்களில் ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவர்கள், டூட்ஸி இனத்தைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரையே பணயம் வைத்தனர்!
உலக ஒற்றுமையை ஏற்படுத்துமளவுக்கு இவ்வுலக நாடுகள் ஒன்றுக்கொன்று அன்பை ஊட்டி வளர்க்கும் என எதிர்பார்ப்பது வெறும் பகல்கனவுதான். கடவுள் தக்க சமயத்தில் உலக ஒற்றுமையை நிலைநாட்டுவார் என்பதாக பைபிள் கூறுகிறது. என்றாலும், இன்றும்கூட மக்கள் அன்பெனும் ஆடையை அணிந்துகொண்டால் உலக ஒற்றுமை நனவாகும்.
யெகோவாவின் சாட்சிகள் மக்களைச் சந்தித்து, பைபிளைப் பற்றியும், அதிலுள்ள நெறிகளை இன்றைய வாழ்க்கையில் கடைப்பிடிப்பதைப் பற்றியும் பேசுவதற்குக் கடந்த ஆண்டில் நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரங்களைச் செலவிட்டனர். கடவுளுடைய வார்த்தையைத் திருத்தமாக அறிந்துகொண்டதன் பலனாக லட்சக்கணக்கானோர் ஒன்றுபட்டுள்ளனர்; இவர்களில் சிலர் முன்பு ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக இருந்தவர்கள். உதாரணமாக, அரேபியர்-யூதர், ஆர்மீனியர்-துருக்கியர், ஜெர்மானியர்-ரஷ்யர் என ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டியோரும் இவர்களில் அடங்குவர்.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் எவ்வழிகளில் மக்களை ஒன்றுபடுத்துகிறது என்பதைப்பற்றி இன்னும் கூடுதலான விஷயங்களை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் ஊரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள், அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான முகவரிக்கு எழுதுங்கள்.
[அடிக்குறிப்பு]
a மனிதருக்கான கடவுளுடைய நோக்கம் பற்றிய கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 3-வது அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
சமாதான ஒப்பந்தங்கள் ஆயிரக்கணக்கில் செய்யப்பட்டுள்ளதோடு, மீறப்பட்டுமுள்ளன
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
மனித அரசாங்கங்களால் சாதிக்க முடியாதவற்றை பைபிள் நியமங்கள் சாதித்திருக்கின்றன
[பக்கம் 5-ன் படம்]
உண்மையான ஒற்றுமைக்குக் காரணர் யாரென கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது
[பக்கம் 7-ன் படம்]
ஹூட்டு, டூட்ஸி இனத்தைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் ஒன்றுபட்டு கடவுளை வணங்குவதற்காக ஒரு மன்றத்தைக் கட்டுகிறார்கள்