யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
கிறிஸ்தவ சபை பிறந்ததையும் பிற்பாடு அது படிப்படியாக வளர்ந்ததையும் பற்றிய விவரமான வரலாறை பைபிளிலுள்ள அப்போஸ்தலர் புத்தகம் அளிக்கிறது. இதை மருத்துவராகிய லூக்கா எழுதினார். கிறிஸ்தவ ஊழியத்தையும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையும் பற்றிய 28 ஆண்டு கால சரித்திரத்தை இது நம் கண் முன்னே நிறுத்துகிறது; அதாவது, பொ.ச. 33 முதல் பொ.ச. 61 வரையான வருட சரித்திரத்தைத் தொகுத்து அளிக்கிறது.
இப்புத்தகத்தின் முற்பகுதியில் முக்கியமாக அப்போஸ்தலன் பேதுரு செய்த ஊழியத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களும் பிற்பகுதியில் அப்போஸ்தலன் பவுல் செய்த ஊழியத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், “நாங்கள்,” “எங்களுடைய,” “எங்களை” போன்ற வார்த்தைகள் காணப்படுவது, சில சம்பவங்கள் நடக்கையில் லூக்காவும் அங்கிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அப்போஸ்தலர் புத்தகத்திலுள்ள செய்திக்கு நாம் கவனம் செலுத்துவது, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கும் அவருடைய பரிசுத்த ஆவிக்கும் எந்தளவு வல்லமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். (எபி. 4:12) இது சுயதியாக மனப்பான்மையோடு நடந்துகொள்வதற்கும் நம்மைத் தூண்டும்; அத்துடன், ராஜ்ய நம்பிக்கையில் நம் விசுவாசத்தையும் பலப்படுத்தும்.
“ராஜ்யத்தின் திறவுகோல்களை” பேதுரு உபயோகிக்கிறார்
அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு தைரியமாகச் சாட்சி கொடுக்கிறார்கள். ‘பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களில்’ முதல் திறவுகோலை பேதுரு உபயோகித்து, யூதர்களுக்கும் யூத மதத்திற்கு மாறியவர்களுக்கும் அறிவெனும் கதவைத் திறந்து வைக்கிறார்; இவ்வாறு, ‘அவருடைய வார்த்தையை . . . ஏற்றுக்கொள்கிறவர்கள்’ பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வாய்ப்பளிக்கிறார். (மத். 16:19; அப். 2:5, 41) திடீரென தாக்கிய துன்புறுத்தல் எனும் பேரலை சீஷர்களை நாலாபுறமும் சிதறடிக்கிறது; ஆனாலும், பிரசங்க வேலை எட்டுத்திக்கும் பரவுகிறது.
கடவுளுடைய வார்த்தையை சமாரியர்கள் ஏற்றுக்கொண்டதை அறிந்தவுடனே எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்கள் பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைக்கிறார்கள். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை சமாரியர்களுக்கு அளிப்பதன்மூலம் பேதுரு இரண்டாவது திறவுகோலை உபயோகிக்கிறார். (அப். 8:14-17) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்திற்குள்ளாக, தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல் தன்னை அடியோடு மாற்றிக்கொண்டு கிறிஸ்தவராகிறார். பொ.ச. 36-ல் பேதுரு மூன்றாவது திறவுகோலை உபயோகிக்கிறார்; அந்தச் சமயத்தில், பரிசுத்த ஆவியின் வரம் விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தார்மீது பொழியப்படுகிறது.—அப். 10:46.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:44-47; 4:34, 35—விசுவாசிகள் ஆஸ்திகளை விற்று, பணத்தை ஏன் வினியோகித்தார்கள்? விசுவாசிகளாக மாறிய பலரும் தொலைதூர இடங்களிலிருந்து எருசலேமுக்கு வந்தவர்கள்; அவர்கள் அங்கு பல நாட்கள் தங்கியிருப்பதற்குப் போதுமான உணவும் பிற வசதிகளும் இல்லாதிருந்தது. என்றாலும், தாங்கள் ஏற்றுக்கொண்ட புதிய மதத்தைப்பற்றி அதிகமாய்த் தெரிந்துகொள்வதற்கும் அதைப்பற்றி மற்றவர்களுக்குச் சாட்சி கொடுப்பதற்கும் அங்கு இன்னும் கொஞ்ச காலம் தங்கியிருக்க அவர்கள் விரும்பினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ, கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய நிலபுலன்களை விற்றார்கள். அதிலிருந்து கிடைத்த பணத்தைத் தேவையிலிருந்தோருக்குக் கொடுத்தார்கள்.
4:13—பேதுருவும் யோவானும் படிப்பறிவில்லாதவர்களாய் இருந்தார்களா? இல்லவே இல்லை. அவர்கள், ‘படிப்பறியாதவர்கள் என்றும் பேதைமையுள்ளவர்கள் என்றும்’ அழைக்கப்பட்டதற்குக் காரணம், ரபீக்களின் பள்ளிகளுக்குச் சென்று மத சம்பந்தமான பயிற்சி பெறாததே.
5:34-39—ஆலோசனைச் சங்கத்திலிருந்து அப்போஸ்தலர்களை வெளியே அனுப்பிய பிறகு, கமாலியேல் பேசிய விஷயம் லூக்காவுக்கு எப்படித் தெரிய வந்தது? அதற்கு குறைந்தபட்சம் மூன்று வாய்ப்புகள் இருக்கலாம்: (1) கமாலியேலின் முன்னாள் மாணவரான பவுல், நடந்த விஷயத்தை லூக்காவுக்கு தெரிவித்திருக்கலாம்; (2) ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினர்களில் அப்போஸ்தலர்களின் கருத்தை ஆமோதித்த நிக்கொதேமுவைப் போன்ற ஒருவரிடமிருந்து லூக்கா விசாரித்து தெரிந்துகொண்டிருக்கலாம்; (3) கடவுளே லூக்காவுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம்.
7:59—இயேசுவிடம்தான் ஸ்தேவான் ஜெபம் செய்தாரா? இல்லை. ஒருவர் யெகோவா தேவனை மட்டுமே வழிபட வேண்டும், அவரிடமே ஜெபம் செய்ய வேண்டும். (லூக். 4:8; 6:12) பொதுவாக, இயேசுவின் பெயரில் யெகோவாவிடம் ஸ்தேவான் ஜெபம் செய்து வந்திருப்பார். (யோவா. 15:16) என்றாலும், இந்தச் சந்தர்ப்பத்தின்போது ஒரு தரிசனத்தில் “மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதை” அவர் கண்டார். (அப். 7:56) மரித்தோரை உயிர்த்தெழுப்பும் வல்லமை இயேசுவுக்கு அளிக்கப்பட்டிருந்ததை ஸ்தேவான் நன்கு அறிந்திருந்தார். அதனால், தன் ஆவியை ஏற்றுக்கொள்ளும்படி, அதாவது தன்னை நினைவில் வைக்கும்படி இயேசுவிடம் அவர் நேரடியாகக் கேட்டாரே தவிர அவரிடம் ஜெபம் செய்யவில்லை.—யோவா. 5:27-29.
நமக்குப் பாடம்:
1:8. யெகோவாவை வழிபடுவோர் பரிசுத்த ஆவியின் உதவியின்றி உலகெங்கும் பிரசங்க வேலையை செய்யவே முடியாது.
4:36–5:11. சீப்புருவைச் சேர்ந்த யோசே என்பவருக்கு பர்னபா என்ற மறுபெயர் இருந்தது. பர்னபா என்பதற்கு “ஆறுதலின் மகன்” என்று அர்த்தம். அவர் கனிவானவராக, இரக்கமுள்ளவராக, மற்றவர்களுக்கு உதவுபவராக இருந்ததால் அப்போஸ்தலர்கள் அவருக்கு பர்னபா என்று பெயர் சூட்டியிருக்கலாம். நாம் இவரைப்போல் இருக்க வேண்டும்; பாசாங்குக்காரர்களான, கபட வேஷதாரிகளான, ஏமாற்றுப் பேர்வழிகளான அனனியா, சப்பீராளைப்போல் இருக்கக் கூடாது.
9:23-25. பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்வதற்காக நம் விரோதிகளைக் கண்டு விலகிச் செல்வது கோழைத்தனம் அல்ல.
9:28-30. சில பிராந்தியங்களில் அல்லது சில ஆட்களிடம் பிரசங்கிக்கையில், உடல் ரீதியாகவோ, ஒழுக்க ரீதியாகவோ, ஆன்மீக ரீதியாகவோ ஆபத்து வரலாம் என தெரிந்தால், நாம் விவேகமாய் நடந்துகொள்வது அவசியம்; அதோடு, எங்கே, எப்போது ஊழியம் செய்வதென கவனமாய்த் தேர்ந்தெடுப்பதும் அவசியம்.
9:31. ஓரளவு சமாதானம் நிலவுகிற காலத்தில், கருத்தூன்றிப் படிப்பதன் மூலமும் தியானிப்பதன் மூலமும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடித்து, ஊழியத்தில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபடுவது யெகோவாவுக்குப் பயந்து நடக்க நமக்கு உதவும்.
பவுல் பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்கிறார்
பொ.ச. 44-ல், அகபு என்பவர் அந்தியோகியாவுக்கு வருகிறார். அங்கே, “ஒரு வருஷகாலமாய்” பர்னபாவும் சவுலும் உபதேசம் செய்துவந்திருக்கிறார்கள். ஒரு ‘கொடிய பஞ்சத்தை’ பற்றி அகபு முன்னறிவிக்கிறார்; இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்பஞ்சம் உண்டாகிறது. (அப். 11:26-28) எருசலேமில், “தர்ம ஊழியத்தை நிறைவேற்றின பின்பு” பர்னபாவும் சவுலும் அந்தியோகியாவுக்குத் திரும்பி வருகிறார்கள். (அப். 11:29, 30; 12:25) சவுல் கிறிஸ்தவராக மாறி சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு, அதாவது பொ.ச. 47-ல், அவரும் பர்னபாவும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் மிஷனரிகளாக அனுப்பப்படுகிறார்கள். (அப். 13:1-4) பொ.ச. 48-ல் இவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பி வருகிறபோது, ‘தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்படுகிறார்கள்.’—அப். 14:26.
சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சவுல் என்றும் அறியப்படுகிற பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தில் சீலாவைக் கூட்டிக்கொண்டு செல்கிறார். (அப். 15:40) செல்லும் வழியில் தீமோத்தேயும் லூக்காவும் பவுலுடன் சேர்ந்துகொள்கிறார்கள். லூக்கா பிலிப்பி பட்டணத்தில் தங்கிவிடுகிறார்; பவுல், அத்தேனே பட்டணத்திற்கும் பிற்பாடு கொரிந்து பட்டணத்திற்கும் செல்கிறார், கொரிந்து பட்டணத்தில் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா தம்பதியருடன் ஒரு வருடமும் ஆறு மாதமும் தங்குகிறார். (அப். 18:11) தீமோத்தேயுவையும் சீலாவையும் கொரிந்துவில் விட்டுவிட்டு, பொ.ச. 52-ன் ஆரம்பத்தில், ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாவையும் கூட்டிக்கொண்டு சீரியாவுக்கு கப்பல் ஏறுகிறார். (அப். 18:18) ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் எபேசுவரை சென்று அங்கேயே தங்கிவிடுகிறார்கள்.
சீரியாவின் அந்தியோகியாவில் சில காலம் தங்கியிருந்த பிறகு, பொ.ச. 52-ல் பவுல் மூன்றாவது மிஷனரி பயணத்தைத் துவங்குகிறார். (அப். 18:23) எபேசுவிலே, ‘கர்த்தருடைய வசனம் [“தொடர்ந்து,” NW] விருத்தியடைந்து மேற்கொள்கிறது,’ அதாவது பிரசித்தமாகிறது. (அப். 19:20) அங்கு பவுல் சுமார் மூன்று வருடங்கள் தங்கியிருக்கிறார். (அப். 20:31) பொ.ச. 56, பெந்தெகொஸ்தே நாளுக்குள் அவர் எருசலேமுக்கு வந்துவிடுகிறார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு அதிகாரிகளுக்கு முன் தைரியமாகச் சாட்சி கொடுக்கிறார். ரோமில், சுமார் பொ.ச. 59-61 வரை இரண்டு வருடங்களுக்கு வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அங்கிருக்கையில், ராஜ்யத்தைப்பற்றிப் பிரசங்கித்து, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசேஷங்களை” போதிக்கிறார்.—அப். 28:30, 31.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
14:8-13—லீஸ்திராவில் உள்ளவர்கள் “பர்னபாவை யூப்பித்தர் என்றும்,” ‘பவுலை . . . மெர்க்கூரி என்றும்’ அழைத்தது ஏன்? ரோம புராணங்களில் குறிப்பிடப்படும் தெய்வங்களுக்கெல்லாம் யூப்பிதர் தலைவனாக இருந்தான். மெர்க்கூரி சொல்வன்மைக்குப் பெயர்போனவனாய் இருந்தான். பவுல் பிரசங்கத்தை நடத்தினபடியால், லீஸ்திராவில் உள்ளவர்கள் அவரை மெர்க்கூரி என்றும் பர்னபாவை யூப்பிதர் என்றும் அழைத்தார்கள்.
16:6, 7—ஆசியாவிலும் பித்தினியாவிலும் பிரசங்கிக்க வேண்டாமென பவுலையும் அவரைச் சேர்ந்தவர்களையும் பரிசுத்த ஆவி ஏன் தடை செய்தது? அங்கே ஊழியர்கள் சிலரே இருந்தார்கள். ஆகவே, அதிக பலன்தரும் இடங்களுக்குச் செல்லும்படி பரிசுத்த ஆவி அவர்களை வழிநடத்தியது.
18:12-17—பொதுமக்கள் சொஸ்தேனேயை அடிக்க ஆரம்பித்தபோது அதிபதியான கல்லியோன் அதில் ஏன் தலையிடவில்லை? பவுலை எதிர்த்த கலகக் கும்பலின் தலைவன் என்று சொஸ்தேனேயை கல்லியோன் கருதினார். அதனால், மக்கள் அவரை அடித்தது சரிதான் என்று நினைத்து அவர் தலையிடாமல் இருந்திருக்கலாம். என்றாலும், இந்தச் சம்பவம் நன்மையில் முடிவடைந்தது. எப்படியெனில், சொஸ்தேனே கிறிஸ்தவராக மாறுவதற்கு அது வழிசெய்தது. சொஸ்தேனேயை ‘[நம்] சகோதரன்’ என்று பவுல் பிற்பாடு சொல்வதிலிருந்து இது தெளிவாகிறது.—1 கொ. 1:1.
18:18—பவுல் என்ன பிரார்த்தனை, அதாவது பொருத்தனை செய்தார்? நசரேய விரதமிருக்க பவுல் பொருத்தனை செய்திருக்கலாம் என சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (எண். 6:1-21) என்றாலும், எத்தகைய பொருத்தனையை பவுல் செய்திருந்தார் என்பதை பைபிள் குறிப்பிடுவதில்லை. அதுமட்டுமல்ல, அவர் எப்போது அந்தப் பொருத்தனையைச் செய்தார், கிறிஸ்தவராவதற்கு முன்னரா, பின்னரா, அல்லது அந்தப் பொருத்தனையை அப்போதுதான் செய்திருந்தாரா, முடிக்கவிருந்தாரா போன்ற எந்தத் தகவலையும் அது குறிப்பிடுவதில்லை. எப்படியானாலும், அவர் அத்தகைய பொருத்தனை செய்தது தவறல்ல.
நமக்குப் பாடம்:
12:5-11. நம் சகோதரர்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம், அப்படிச் செய்யவும் வேண்டும்.
12:21-23; 14:14-18. கடவுளுக்கே சேர வேண்டிய மகிமையை ஏரோது மனதார ஏற்றுக்கொண்டான். இவனோடு ஒப்பிட பவுலும் பர்னபாவும் எவ்வளவு வித்தியாசமாய் நடந்துகொண்டார்கள்! கடவுளுக்குரிய கனத்தையும் மகிமையையும் தங்களுக்கு மக்கள் கொடுத்தபோது அவர்கள் உடனடியாகவும் உறுதியாகவும் அதை மறுத்துவிட்டார்களே! யெகோவாவின் சேவையில் எதைச் சாதித்தாலும் பேருக்கும் புகழுக்கும் நாம் ஆசைப்படக் கூடாது.
14:5-7. விவேகமாய் நடந்துகொள்வது, ஊழியத்தில் எப்போதும் மும்முரமாய் ஈடுபட நமக்கு உதவும்.—மத். 10:23.
14:22. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலை எதிர்பார்க்கிறார்கள். அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகத் தங்களுடைய மத நம்பிக்கைகளை அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.—2 தீ. 3:12.
16:1, 2. கிறிஸ்தவ இளைஞர்கள் சபை காரியங்களில் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும். அதோடு, நல்ல பெயரெடுக்க யெகோவாவின் உதவியை நாட வேண்டும்.
16:3. மற்றவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், பைபிள் நியமங்களுக்கு இசைவாக நம்மாலான அனைத்தையும் செய்வது அவசியம்.—1 கொ. 9:19-23.
20:20, 21. நம்முடைய ஊழியத்தின் முக்கிய அம்சம் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பதாகும்.
20:24; 21:13. நம்முடைய உயிரைப் பாதுகாத்துக்கொள்வதைவிட கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதே மிக முக்கியம்.
21:21-26. நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நாம் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
25:8-12. ‘நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டுவதற்கு’ சட்ட ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் கிறிஸ்தவர்கள் இன்று பயன்படுத்திக்கொள்ளலாம், அப்படிப் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.—பிலி. 1:7, பொ.மொ.
26:24, 25. ‘சத்தியமும் சொஸ்த புத்தியுமுள்ள வார்த்தைகள்,’ ‘ஜென்ம சுபாவமான மனுஷனுக்கு’ எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும் அவற்றை நாம் அறிவிக்க வேண்டும்.—1 கொ. 2:14.
[பக்கம் 30-ன் படம்]
“ராஜ்யத்தின் திறவுகோல்களை” பேதுரு எப்போது உபயோகித்தார்?
[பக்கம் 31-ன் படம்]
பரிசுத்த ஆவியின் உதவியாலேயே உலகெங்கும் பிரசங்க வேலை நடைபெறுகிறது