என்னைச் செதுக்கிச் சீராக்கிய மூன்று மாநாடுகள்
ஜார்ஜ் வாரன்சக் சொன்னபடி
நீங்கள் ஒரு மாநாட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.. அங்கு கேட்கிற ஒரு விஷயம் உங்கள் மனதை ஆழமாகத் தொடுகிறது.. உங்களுக்குள் ஒரு வேகம் பிறக்கிறது.. அதன்பின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்கிறீர்கள். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மூன்று மாநாடுகள் என் வாழ்க்கையைச் செதுக்கிச் சீராக்கியிருக்கின்றன. பயந்தாங்கொள்ளியாக இருந்த என்னைத் தைரியசாலியாக்கியது முதல் மாநாடு; போதுமென்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளச் செய்தது இரண்டாவது மாநாடு; ஊழியத்தில் அதிகமாக ஈடுபட வைத்தது மூன்றாவது மாநாடு. இந்த மாநாடுகள் நடைபெறுவதற்குமுன், நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களைச் சொல்கிறேன், கேளுங்களேன்.
நான் 1928-ல் பிறந்தேன். மூன்று பிள்ளைகளில் நான்தான் கடைக்குட்டி. என்னுடைய ஒரு அக்கா மார்ஜி, இன்னொரு அக்கா ஆல்கா. நாங்கள் மூன்று பேரும் அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்ஸி மாகாணத்தில் சவுத் பவுன்ட் புருக் என்ற ஊரில் வளர்ந்தோம். அந்தச் சமயத்தில் சுமார் 2,000 பேர்தான் அங்கு இருந்தார்கள். எங்கள் குடும்பம் என்னவோ ஏழைக் குடும்பம்தான், ஆனாலும் அம்மாவுக்கு ரொம்பவே தாராள குணம். என்றைக்காவது ஒருநாள் அம்மாவின் கையில் காசு இருந்தால், விருந்து சாப்பாடு சமைப்பார், சமைத்ததை அக்கம்பக்கத்தாருக்கும் கொடுப்பார். எனக்கு 9 வயதாக இருந்த சமயத்தில், யெகோவாவின் சாட்சி ஒருவர் என் அம்மாவைச் சந்தித்தார். அவர் ஹங்கேரியன் மொழியில் பேசினார். அது என் அம்மாவின் தாய்மொழி என்பதால், அந்தச் சகோதரி சொன்ன பைபிள் விஷயத்தை என் அம்மா காதுகொடுத்துக் கேட்டார். 20 வயதைத் தாண்டிய பெர்த்தா என்ற சகோதரி பிற்பாடு அம்மாவுக்கு பைபிள் படிப்பு நடத்தினார், ஆன்மீக முன்னேற்றம் செய்ய உதவினார்; சீக்கிரத்திலேயே அம்மா யெகோவாவின் சாட்சியானார்.
அம்மாவுக்கு இருந்தளவு தைரியமும், தன்னம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை; பயந்த சுபாவமுள்ளவனாக இருந்தேன். போதாக்குறைக்கு, அம்மா எப்போது பார்த்தாலும் என்னைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கு அழுகை அழுகையாக வரும். ஒருமுறை, “எப்போ பாத்தாலும் நீங்க ஏன் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கீங்க?” என்று கண்கள் கலங்கியபடி கேட்டேன். அதற்கு அவர், ‘உன்மேல எனக்கு அன்பு இல்லாம இல்ல, ஆனா செல்லம் கொடுத்து உன்னைக் கெடுக்க விரும்பல’ என்று சொன்னார். நல்லெண்ணத்தோடு அம்மா அப்படி நடந்துகொண்டார், ஆனால் அவரிடமிருந்து எந்தப் பாராட்டும் எனக்குக் கிடைக்காததால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது.
எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி என்னிடம் கனிவாகப் பேசுவார்; சர்ச்சில் நடக்கும் ஸன்டே கிளாஸுக்குத் தன்னுடைய மகன்களோடு கூடப்போகும்படி ஒருநாள் என்னைக் கேட்டுக்கொண்டார். சர்ச்சுக்குப் போவது யெகோவாவுக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரிந்திருந்தது, ஆனால் நான் போக மாட்டேன் என்று சொன்னால் அந்தப் பெண்மணியின் மனம் புண்பட்டுவிடுமோ எனப் பயந்தேன். அதனால், மாதக்கணக்கில் சர்ச்சுக்குப் போய்வந்தேன்; என்னைப் பார்த்தால் எனக்கே அவமானமாக இருந்தது. அதேபோல்தான் பள்ளியிலும் மனித பயத்திற்கு இடங்கொடுத்து மனசாட்சிக்கு விரோதமாக நடந்துவந்தேன். பள்ளித் தலைமை ஆசிரியர் ரொம்பக் கண்டிப்பானவர். எல்லா மாணவர்களும் கொடி வணக்கம் செய்கிறார்களா இல்லையா என்பதைப் பார்த்துக்கொள்ளும்படி ஆசிரியர்களிடம் சொல்லி வைத்திருந்தார். பயத்தில் நானும் கொடி வணக்கம் செய்துவந்தேன். இப்படியே சுமார் ஒரு வருடம் ஓடியது; அதன்பின் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
தைரியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்
1939-ல், புத்தகப் படிப்புத் தொகுதி ஒன்று எங்கள் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. பென் மிஸ்கால்ஸ்கி என்ற இளம் பயனியர் சகோதரர் படிப்பை நடத்தினார். அவரை நாங்கள் பிக் பென் (Big Ben) என்று அழைத்தோம், அது அவருக்குப் பொருத்தமான பெயர். ஏனென்றால், அவர் பயில்வான்போல் இருந்தார். பார்ப்பதற்குத்தான் அவர் அப்படி இருந்தாரே தவிர அவருடைய மனம் பூப்போல் இருந்தது; அவருடைய சிரித்த முகத்தைப் பார்த்து அவரிடம் ஈர்க்கப்பட்டேன். அதனால், வெளி ஊழியத்திற்குத் தன்னோடு வரும்படி அவர் அழைத்தபோது உடனே சரியென்றேன். நாங்கள் இருவரும் நண்பர்களானோம். நான் சோகமாக இருக்கும்போதெல்லாம், அவர் பாசமான அண்ணன் போலப் பேசி என்னைத் தட்டிக்கொடுப்பார். அது எனக்கு உற்சாக டானிக் போல் இருக்கும். அவர் என்னுடைய ஆருயிர் நண்பரானார்.
மிஸ்சௌரியிலுள்ள செ. லூயிஸ் நகரில் 1941-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒரு மாநாட்டுக்குத் தன்னுடைய காரில் வரும்படி பென் எங்கள் குடும்பத்தாரை அழைத்தார். எனக்கு ஏக குஷியாகிவிட்டது! அதுவரை என் வீட்டிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்திற்குமேல் நான் எங்கேயும் போனதில்லை, ஆனால் இப்போது 1,500 கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டிப் போகவிருந்தேன்! என்றாலும், செ. லூயிஸில் பிரச்சினைகள் இருந்தன. சர்ச் அங்கத்தினர்கள் யெகோவாவின் சாட்சிகளைத் தங்கள் வீடுகளில் தங்க வைப்பதற்காகச் செய்திருந்த ஏற்பாடுகளையெல்லாம் ரத்து செய்யும்படி சர்ச் குருமார்கள் கட்டளையிட்டிருந்தார்கள். பலர் ரத்து செய்தார்கள். நாங்கள் தங்கவிருந்த வீட்டாரையும்கூட குருமார்கள் மிரட்டியிருந்தார்கள். ஆனால் அவர்கள் மசியவில்லை. ‘கொடுத்த வாக்கை நாங்கள் காப்பாற்றியே தீருவோம்’ எனச் சொன்னார்கள். அவர்களுடைய தைரியம் என்னைக் கவர்ந்தது.
அந்த மாநாட்டில் என் அக்காமார் ஞானஸ்நானம் பெற்றார்கள். அதே தினத்தன்று, புருக்லின் பெத்தேலிலிருந்து வந்திருந்த சகோதரர் ரதர்ஃபர்ட் ஊக்குவிக்கும் பேச்சு ஒன்றைக் கொடுத்தார்; அப்போது, கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிற எல்லாப் பிள்ளைகளையும் எழுந்து நிற்கச் சொன்னார். சுமார் 15,000 பிள்ளைகள் எழுந்து நின்றார்கள். நானும் நின்றேன். அதன்பின், ‘உங்களில் யாருக்கெல்லாம் பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபட விருப்பம் இருக்கிறதோ அவர்களெல்லாம் “ஆம்” என்று சொல்லுங்கள்’ என்றார். மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து நானும் “ஆம்” என்று உரக்கச் சொன்னேன். கரவொலி காதைப் பிளந்தது. எனக்குள் புதிய உத்வேகம் பிறந்தது.
மாநாடு முடிந்த பின்பு, மேற்கு வர்ஜீனியாவிலிருந்த ஒரு சகோதரரைச் சந்தித்தோம். அவர் தன்னுடைய அனுபவத்தை எங்களிடம் சொன்னார்; ஒருமுறை அவர் பிரசங்க வேலையில் ஈடுபட்டிருந்தபோது, சிலர் ஆக்ரோஷத்துடன் அவரைக் கண்மண் தெரியாமல் அடித்து, உடம்பு முழுக்க தார் பூசி, இறக்கைகளை ஒட்டினார்களாம். அவர் சொல்லச் சொல்ல என் அடிவயிற்றில் புளியைக் கரைத்ததுபோல் இருந்தது. அவர் இந்த அனுபவத்தைச் சொல்லிவிட்டு, “என்ன ஆனாலும் சரி, பிரசங்க வேலையை நான் நிறுத்த மாட்டேன்” என்றார். அங்கிருந்து கிளம்பியபோது, நான் தாவீதைப் போல் உணர்ந்தேன். கோலியாத்தைச் சந்திப்பதற்குத் தயாரானேன், ஆம் என் பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்திப்பதற்குத் தயாரானேன்.
பள்ளிக்குச் சென்றதும் தலைமை ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்து முறைத்தார். மனதிற்குள் யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு, “சார், நான் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டுக்குப் போயிருந்தேன். இனிமேல் கொடி வணக்கம் செய்ய மாட்டேன்!” என்று கடகடவெனச் சொல்லி முடித்தேன். கொஞ்ச நேரம் அவர் ஒன்றுமே சொல்லவில்லை. பிறகு மெதுவாகத் தன் இருக்கையைவிட்டு எழுந்து என்னை நோக்கி வந்தார். அவர் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. “நீ கொடி வணக்கம் செய்தே ஆகணும், இல்ல. . . , ஸ்கூலைவிட்டுத் துரத்திடுவேன்!” என்றார். இந்த முறை அவருடைய மிரட்டலுக்கு நான் அசரவில்லை. முன்னொருபோதும் இல்லாதளவுக்கு என் மனதிற்குள் ஆனந்தம் பொங்கியது.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனடியாகச் சகோதரர் பென்னிடம் இதைப் பற்றி சொல்லத் துடித்தேன். ராஜ்ய மன்றத்தில் அவரைப் பார்த்ததுமே, “நான் கொடி வணக்கம் செய்யல! என்னை ஸ்கூல்லயிருந்து துரத்திட்டாங்க!” என்று சந்தோஷத்தில் கத்தினேன். அப்போது அவர் புன்முறுவலோடு என்னை அணைத்து, “யெகோவா உன்னைப் பார்த்து நிச்சயம் சந்தோஷப்படுவார்” என்றார். (உபா. 31:6) அந்த வார்த்தைகள் உண்மையிலேயே எனக்கு உற்சாகமூட்டின. ஜூன் 15, 1942-ல் ஞானஸ்நானம் பெற்றேன்.
போதுமென்ற மனப்பான்மையைக் கற்றுக்கொண்டேன்
இரண்டாம் உலகப் போருக்குப்பின், நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலை கிடுகிடுவென முன்னேறியது; விதவிதமான பொருள்கள் நாடுமுழுக்கக் குவிந்தன. எனக்குக் கைநிறைய சம்பளம் கிடைத்தது; எதையெல்லாம் வாங்க வேண்டுமென ஏங்கினேனோ அதையெல்லாம் வாங்கினேன். என் நண்பர்கள் சிலர் பைக் வாங்கினார்கள், சிலர் தங்கள் வீடுகளைப் புதுப்பித்தார்கள். நான் புத்தம்புதிய கார் ஒன்றை வாங்கினேன். அதிகமதிகமாகப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும், சொகுசாக வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குள் நாளுக்குநாள் அதிகரித்தது; அதனால் யெகோவாவுடைய சேவையை ஓரங்கட்ட ஆரம்பித்தேன். நான் போகிற போக்கு சரியில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நல்ல வேளை, 1950-ல் நியு யார்க் நகரில் நடைபெற்ற மாநாடு என் போக்கை மாற்றிக்கொள்ள உதவியது.
அந்த மாநாட்டில், அடுத்தடுத்து வந்த பேச்சாளர்கள் எல்லாருமே பிரசங்க வேலையில் முழுமூச்சோடு ஈடுபடும்படி ஊக்கமூட்டினார்கள். “தேவையற்ற பொருள்களைக் களைந்துவிட்டு, ஜீவனுக்கான ஓட்டப் பந்தயத்தில் ஓடுங்கள்” என்று ஒரு பேச்சாளர் ஊக்கப்படுத்தினார். அந்தப் பேச்சு எனக்கே கொடுக்கப்பட்டது போல் இருந்தது. அன்று நடந்த கிலியட் பட்டமளிப்பு நிகழ்ச்சியையும் பார்த்தேன்; ‘என் வயதிலிருந்த அந்தப் பட்டதாரிகளால் சொகுசான வாழ்க்கையைத் தியாகம் செய்து வெளிநாடுகளில் சேவை செய்ய முடிகிறதென்றால், என்னாலும் அப்படித் தியாகம் செய்து என் நாட்டிலேயே சேவிக்க முடியும்’ என்று நினைத்துக்கொண்டேன். அந்த மாநாட்டின் இறுதிக்குள், ஒரு பயனியர் ஆகிவிடத் தீர்மானித்தேன்.
இதற்கிடையே, எங்கள் சபையில் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்துவந்த ஈவ்லன் மான்டாக் என்ற பெண்ணைக் காதலித்து வந்திருந்தேன். ஈவ்லனின் அம்மாவுக்கு ஆறு பிள்ளைகள், அவர் ரொம்பவே தைரியசாலி. பிரமாண்டமான ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கு முன் நின்றுகொண்டு தெரு ஊழியம் செய்வதில் அவருக்குக் கொள்ளைப் பிரியம். அங்கிருந்து போகும்படி அந்த சர்ச் பாதிரி கோபத்துடன் எத்தனையோ முறை கத்தியிருக்கிறார்; ஆனாலும், அதற்கெல்லாம் அவர் மசியவில்லை. ஈவ்லனும் தன் தாயைப் போலவே மனித பயத்திற்கு இடங்கொடுக்காதவளாக இருந்தாள்.—நீதி. 29:25.
1951-ல், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம், இருவருமே வேலையை விட்டோம், பயனியர் ஊழியத்தைத் தொடங்கினோம். வட்டாரக் கண்காணி ஒருவர் எங்களை அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்திருந்த அமகன்செட் என்ற கிராமத்திற்குச் சென்று ஊழியம் செய்யும்படி ஊக்கப்படுத்தினார்; அது, நியு யார்க் நகரிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அங்கிருந்த சபையாரோ, எங்களுக்கு வீடு எதுவும் அமையவில்லை என எங்களிடம் தெரிவித்தார்கள்; அதனால், ஒரு ட்ரெய்லர் வண்டியை வாங்க அலைந்தோம், எங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி எந்த வண்டியும் கிடைக்கவில்லை. கடைசியில், ஒரு ‘ஓட்டை’ வண்டி கிடைத்தது. அதன் உரிமையாளர் அதற்கு 900 டாலர் பணம் கேட்டார்; எங்களிடம் இருந்ததே அவ்வளவுதான்; அது எங்கள் திருமணத்தின்போது அன்பளிப்பாகக் கிடைத்த பணம்! அந்தப் பணத்தைக் கொடுத்து வண்டியை வாங்கினோம், ரிப்பேர் செய்தோம், எங்கள் புதிய பிராந்தியத்திற்கு இழுத்துக்கொண்டு போனோம். அப்போது எங்கள் கையில் சல்லிக்காசு இல்லை; எப்படித்தான் சமாளிக்கப்போகிறோமோ என யோசித்தோம்.
ஈவ்லன் சுத்தம் செய்கிற வேலையைச் செய்தாள், எனக்கு இத்தாலியன் உணவு விடுதி ஒன்றில் இரவு நேரத்தில் சுத்தம் செய்கிற வேலை கிடைத்தது. விடுதியின் முதலாளி என்னிடம், “உணவு மீதமானால் எடுத்துக்கொண்டுபோய் உன் மனைவிக்குக் கொடு” என்று சொல்லியிருந்தார். அதனால், வேலையை முடித்துவிட்டு விடியற்காலை இரண்டு மணிக்கு வீடுதிரும்பும்போது பிட்ஸா, பாஸ்தா போன்ற பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு போவேன். ட்ரெய்லர் முழுக்க அந்த வாசனை கமகமக்கும். அதை நாங்கள் சூடுபண்ணிச் சாப்பிடுவோம், குளிர்காலத்தில் ஐஸ் போல இருந்த எங்கள் ட்ரெய்லருக்குள் அவற்றைச் சூடாகச் சாப்பிடுவது எங்களுக்குப் பெரிய விருந்துபோல் இருந்தது. சிலசமயம், சகோதரர்கள் எங்கள் ட்ரெய்லர் படிக்கட்டில் ஒரு பெரிய மீனை வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அமகன்செட் சபையைச் சேர்ந்த அந்த அன்பான சகோதரர்களுடன் ஊழியம் செய்த காலத்தில், போதுமென்ற மனப்பான்மையோடு வாழ்வதே மனநிறைவைத் தருமெனக் கற்றுக்கொண்டோம். அது எங்களுக்குப் பொன்னான காலமாக இருந்தது.
ஊழியத்தில் அதிகமாக ஈடுபட ஊக்கம் பெற்றேன்
ஜூலை 1953-ல், நியு யார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மிஷனரிகளை நாங்கள் வரவேற்றோம். சுவாரஸ்யமான அனுபவங்களை அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொண்டது. அநேக நாடுகளில் நற்செய்தி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று ஒரு பேச்சாளர் அந்த மாநாட்டில் குறிப்பிட்டபோது, என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது, ஆம் ஊழியத்தில் முன்பைவிட அதிகமாக ஈடுபட வேண்டுமென்பது புரிந்துவிட்டது. மிஷனரிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை அதே மாநாட்டில் பூர்த்திசெய்தோம். அந்த வருடத்திலேயே கிலியட் பள்ளியின் 23-வது வகுப்பில் கலந்துகொள்ளும்படி எங்களுக்கு அழைப்பு வந்தது; அந்தப் பள்ளி, பிப்ரவரி 1954-ல் ஆரம்பிக்கவிருந்தது. அது எங்களுக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
பிரேசிலில் மிஷனரிகளாகச் சேவை செய்யும்படி நியமிக்கப்பட்டதை அறிந்தபோது, ரொம்பவே சந்தோஷப்பட்டோம். அங்கு போவதற்கு நீராவிக் கப்பலில் நாங்கள் பதினான்கு நாள் பயணிக்க வேண்டியிருந்தது; அதற்குமுன், பொறுப்பிலிருந்த ஒரு பெத்தேல் சகோதரர் எங்களிடம், “மணமாகாத ஒன்பது மிஷனரி சகோதரிகள் உங்களோடு பிரேசிலுக்கு வருவார்கள். அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார். கப்பலில் என் பின்னால் பத்து இளம் பெண்கள் வரிசையாக ஏறுவதைப் பார்த்த மாலுமிகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்ததைப் பார்க்க வேண்டுமே! ஆனாலும், சகோதரிகள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. பிரேசிலுக்குப் பத்திரமாக வந்துசேர்ந்த பிறகு நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.
போர்ச்சுகீஸ் மொழியைக் கற்றுக்கொண்ட பின்பு, தெற்கு பிரேசிலிலுள்ள ரியோ கிரான்டி டோ சூல் என்ற மாகாணத்தில் வட்டார ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். மணமாகாத ஒரு சகோதரர் எனக்குமுன் அங்கு வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்துவந்திருந்தார்; அவர் என்னிடமும் என் மனைவியிடமும், “கரடுமுரடான இந்த இடத்தில் ஒரு தம்பதியர் நியமிக்கப்பட்டிருப்பதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றார். பரந்துவிரிந்த அந்தக் கிராமப்புறப் பகுதியில் சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் இருந்தன, சில சபைகளுக்கு ட்ரக்கில் மட்டும்தான் போக முடிந்தது. ட்ரக் டிரைவருக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் போதும், தன்னுடைய ட்ரக்கில் ஏறிக்கொள்ள அனுமதி கொடுப்பார். குதிரையில் சவாரி செய்யும்போது எப்படி உட்காருவோமோ அப்படித்தான் ட்ரக்கிலிருந்த சரக்குகளின் மேல் உட்காருவோம்; சரக்கு கட்டப்பட்டிருந்த கயிறுகளை இரண்டு கைகளிலும் கெட்டியாகப் பிடித்தபடி உட்காருவோம். ட்ரக் திடீர் திடீரென்று திரும்பும்போது, மலைபோன்ற சரக்குகளோடு சேர்ந்து நாங்களும் அப்படியே சாய்வோம், கீழே பார்த்தால் தலை கிறுகிறுக்கும், அந்தளவு ஆழமான பள்ளத்தாக்குகள்! உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் உட்காருவோம்!
சகோதரர்களுடைய வீடுகளிலேயே நாங்கள் தங்கிக்கொண்டோம். அவர்கள் பரம ஏழைகளாக இருந்தபோதிலும், தாராள குணமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒதுக்குப்புறப் பகுதி ஒன்றில் வசித்த எல்லாச் சகோதரர்களும் இறைச்சியைப் பதப்படுத்தி ‘பேக்’ செய்யும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார்கள். சொற்ப சம்பளமே கிடைத்தது, அவர்களுடைய ஒரு வேளை சாப்பாட்டுக்குத்தான் அது சரியாக இருந்தது. ஒரு நாள் வேலை செய்யாவிட்டாலும், அவர்களுக்குக் கூலி கிடைக்காது. என்றாலும், நாங்கள் அவர்களுடைய சபையைச் சந்திக்கச் சென்றபோதெல்லாம், அவர்கள் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு சபைக் காரியங்களில் ஈடுபட்டார்கள். மனத்தாழ்மைமிக்க அந்தச் சகோதரர்கள் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்திருந்தார்கள். கடவுளுடைய சேவைக்காகத் தியாகங்களைச் செய்வது பற்றி மறக்க முடியாத பாடங்களை அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம். ஆம், எந்தப் பள்ளியும் கற்றுக்கொடுக்காத பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அந்தச் சகோதரர்களோடு செலவிட்ட அருமையான நாட்களை இப்போது யோசித்தாலும், என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரும்.
உடல்நிலை சரியில்லாத என் அம்மாவைப் பார்த்துக்கொள்வதற்காக 1976-ல் நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பினோம். பிரேசிலைவிட்டு வருவது எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது, ஆனால் அந்த நாட்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். பிரேசிலிலிருந்து எங்களுக்குக் கடிதங்கள் வரும்போதெல்லாம், அந்தக் காலத்து இனிய நினைவுகள் எங்கள் மனதைத் தாலாட்டும்.
அன்பானவர்களுடன் மீண்டும் இணைந்தோம்
எங்கள் அம்மாவைக் கவனித்துக்கொண்டிருந்த சமயத்தில், பயனியர் ஊழியம் செய்துவந்தோம், பகுதிநேர வேலைகளையும் செய்துவந்தோம். கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாய் இருந்த என் அம்மா 1980-ல் கண்மூடினார். அதன்பின், அமெரிக்காவில் வட்டார ஊழியம் செய்வதற்காக அழைக்கப்பட்டேன். 1990-ல், நானும் என் மனைவியும் கனெடிகட் மாகாணத்தில் இருந்த ஒரு சபையை விஜயம் செய்தபோது, முக்கியமான ஒருவரைச் சந்தித்தோம். ஆம், சுமார் 50 வருடங்களுக்குமுன் ஆன்மீக ரீதியில் எனக்கு உதவிய சகோதரர் பென்னைச் சந்தித்தோம். அவர் இந்தச் சபையில் ஒரு மூப்பராக இருந்தார். ஒருவரையொருவர் பார்த்த சந்தோஷத்தில் அன்போடு அரவணைத்துக்கொண்டோம்!
1996-லிருந்து நானும் ஈவ்லனும் நியூ ஜெர்ஸியிலுள்ள எலிசபெத் நகரில் போர்ச்சுகீஸ் மொழிச் சபையில் இருக்கிறோம்; ஆரோக்கியம் குன்றிய விசேஷ பயனியர்களாகச் சேவை செய்துவந்திருக்கிறோம். என் உடல்நிலை தற்போது சரியில்லை, இருந்தாலும் என் அருமை மனைவியின் உதவியுடன் முடிந்தவரை ஊழியத்தில் பங்குகொள்கிறேன். எங்கள் பக்கத்து வீட்டிலிருக்கும் வயதான ஒரு பெண்ணுக்கும் என் மனைவி உதவி செய்துவருகிறாள்; அவர் யார் தெரியுமா? ஏறக்குறைய 70 வருடங்களுக்கு முன்பு அம்மா சத்தியத்திற்கு வர உதவிய அதே பெர்த்தா தான்! எங்கள் குடும்பத்திற்கு அவர் செய்த ஆன்மீக உதவிகளுக்கெல்லாம் கைமாறு செய்யக் கிடைத்த வாய்ப்புக்காக நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.
உண்மை வணக்கத்தின் சார்பில் தைரியமாக நிலைநிற்கை எடுப்பதற்கும், என் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கும், என் ஊழியத்தை அதிகரிப்பதற்கும் உதவிய அந்த மூன்று மாநாடுகளுக்காக யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். ஆம், அந்த மாநாடுகள் என் வாழ்க்கையைச் செதுக்கிச் சீராக்கியிருக்கின்றன.
[பக்கம் 23-ன் படம்]
ஈவ்லனின் அம்மா (இடது), என் அம்மா
[பக்கம் 23-ன் படம்]
நண்பர், பென்
[பக்கம் 24-ன் படம்]
பிரேசிலில்
[பக்கம் 25-ன் படம்]
ஈவ்லனோடு இன்று