‘அந்தச் சக்தி . . . கடவுளுடைய ஆழமான காரியங்களை ஆராய்ந்தறிகிறது’
“அந்தச் சக்தி எல்லாக் காரியங்களையும், சொல்லப்போனால் கடவுளுடைய ஆழமான காரியங்களையும்கூட ஆராய்ந்தறிகிறது.”—1 கொ. 2:10.
1. கடவுளுடைய சக்தி வகிக்கும் என்ன பங்கை, 1 கொரிந்தியர் 2:10-ல் பவுல் சிறப்பித்துக் காட்டினார், என்னென்ன கேள்விகள் எழும்புகின்றன?
யெகோவாவுடைய சக்தி செயல்படுவதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! அந்தச் சக்தியை ஒரு சகாயராக, ஓர் அன்பளிப்பாக, சாட்சி கொடுப்பவராக, நமக்காகப் பரிந்து பேசுபவராக பைபிள் விவரிக்கிறது. (யோவா. 14:16; அப். 2:38; ரோ. 8:16 அடிக்குறிப்பு, 26, 27) கடவுளுடைய சக்தியின் மற்றொரு முக்கியமான பங்கை அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சிறப்பித்துக் காட்டினார்: “அந்தச் சக்தி எல்லாக் காரியங்களையும், சொல்லப்போனால் கடவுளுடைய ஆழமான காரியங்களையும்கூட ஆராய்ந்தறிகிறது.” (1 கொ. 2:10) ஆம், ஆழமான ஆன்மீக சத்தியங்களை வெளிப்படுத்துவதற்கு யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்துகிறார். அந்தச் சக்தியின் உதவி மட்டும் இல்லாவிட்டால், யெகோவாவுடைய நோக்கங்களை நாம் அறிந்திருக்க முடியுமா என்ன? (1 கொரிந்தியர் 2:9-12-ஐ வாசியுங்கள்.) இருப்பினும், பின்வரும் பல கேள்விகள் எழும்புகின்றன: ‘அந்தச் சக்தி . . . கடவுளுடைய ஆழமான காரியங்களை ஆராய்ந்தறிவது’ எப்படி? முதல் நூற்றாண்டில் இந்தக் காரியங்களை யெகோவா யார் மூலமாக வெளிப்படுத்தினார்? நம்முடைய காலத்தில் அந்தச் சக்தி எப்படி, யார் மூலமாக இந்த ஆழமான காரியங்களை ஆராய்ந்தறிகிறது?
2. கடவுளுடைய சக்தி என்ன இரண்டு விதங்களில் செயல்படுகிறது?
2 கடவுளுடைய சக்தி இரண்டு விதங்களில் செயல்படுவதாக இயேசு குறிப்பிட்டார். அவர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு தம்முடைய சீடர்களிடம், “என் தகப்பன் என்னுடைய பெயரில் அனுப்பப்போகிற அவரது சக்தியாகிய சகாயர் எல்லாக் காரியங்களையும் உங்களுக்குக் கற்பித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாக் காரியங்களையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என்று சொன்னார். (யோவா. 14:26) இவ்வாறு கடவுளுடைய சக்தி, கற்பிப்பவராகவும் நினைப்பூட்டுபவராகவும் செயல்படுகிறது. கற்பிப்பவராகச் செயல்படுகையில், முன்பு விளங்காதிருந்த காரியங்களை விளங்கிக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது. நினைப்பூட்டுபவராகச் செயல்படுகையில், முன்பு கொடுக்கப்பட்ட விளக்கத்தை ஞாபகப்படுத்திப் பார்க்கவும், சரியான விதத்தில் அதைப் பொருத்தவும் உதவுகிறது.
முதல் நூற்றாண்டில்
3. ஆழமான ஆன்மீகக் காரியங்கள் படிப்படியாக வெளிப்படுத்தப்படும் என்பதை இயேசுவின் எந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டின?
3 இயேசுகூட தம்முடைய சீடர்களுக்கு அநேக சத்தியங்களை கற்பித்தார்; அவை அவர்களுக்குப் புதிய விஷயங்களாக இருந்தன. அவை தவிர இன்னும் நிறைய விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. இருந்தாலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தியாகிய அந்தச் சகாயர் வரும்போது சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வார்.” (யோவா. 16:12, 13) இவ்வாறு, கடவுளுடைய சக்தியின் மூலம், ஆழமான ஆன்மீகக் காரியங்கள் படிப்படியாக வெளிப்படுத்தப்படும் என இயேசு சுட்டிக்காட்டினார்.
4. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று கடவுளுடைய சக்தி எப்படிக் கற்பிப்பவராகவும், நினைப்பூட்டுபவராகவும் செயல்பட்டது?
4 கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று, “சத்தியத்தை வெளிப்படுத்துகிற [அந்த] சக்தி” வந்தபோது, எருசலேமில் கூடியிருந்த சுமார் 120 கிறிஸ்தவர்கள்மேல் அது பொழியப்பட்டது. இதைக் கண்ணாரப் பார்த்தவர்களும் காதாரக் கேட்டவர்களும் இருந்தார்கள். (அப். 1:4, 5, 15; 2:1-4) சீடர்கள் பல்வேறு மொழிகளில் “கடவுளுடைய மகத்தான செயல்களை” பற்றிப் பேசினார்கள். (அப். 2:5-11) அது புதிதான ஒரு விஷயம் வெளிப்படுத்தப்படுவதற்கான நேரமாக இருந்தது. இப்படிக் கடவுளுடைய சக்தி பொழியப்படுமென யோவேல் தீர்க்கதரிசி முன்னறிவித்திருந்தார். (யோவே. 2:28-32) யாருமே எதிர்பார்த்திராத விதத்தில் அத்தீர்க்கதரிசனம் நிறைவேறியதை அங்கு வந்திருந்தோர் பார்த்தார்கள்; இந்த நிகழ்வைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு எல்லாருக்கும் முன்பாக விளக்கினார். (அப்போஸ்தலர் 2:14-18-ஐ வாசியுங்கள்.) இவ்வாறு, கடவுளுடைய சக்தி கற்பிப்பவராகச் செயல்பட்டது; எப்படியெனில், பூர்வத்தில் முன்னுரைக்கப்பட்டதன் நிறைவேற்றத்தையே சீடர்கள் அனுபவித்தார்கள் என்பதை பேதுருவுக்குத் தெளிவுபடுத்தியதன் மூலம் அப்படிச் செயல்பட்டது. கடவுளுடைய சக்தி நினைப்பூட்டுபவராகவும் செயல்பட்டது; எப்படியெனில், யோவேல் புத்தகத்திலிருந்து மட்டுமல்ல தாவீதின் இரண்டு சங்கீதங்களிலிருந்தும் மேற்கோள் காட்ட பேதுருவைத் தூண்டியதன் மூலம் அப்படிச் செயல்பட்டது. (சங். 16:8-11; 110:1; அப். 2:25-28, 34, 35) அங்கே கூடியிருந்த எல்லாரும் கண்டவையும் கேட்டவையும், உண்மையிலேயே கடவுளுடைய ஆழமான காரியங்களாக இருந்தன.
5, 6. (அ) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, புதிய ஒப்பந்தம் சம்பந்தமாக என்னென்ன முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தேவைப்பட்டது? (ஆ) யார் மூலமாக இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டன, எப்படித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன?
5 முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்கள் இன்னும் அநேக விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, அந்த பெந்தெகொஸ்தே நாளன்று அமலுக்கு வந்த புதிய ஒப்பந்தம் சம்பந்தமாக அவர்களுக்குக் கேள்விகள் இருந்தன. யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் மட்டுமே அந்த ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்தார்களா? புறதேசத்தாரும் அதில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுவார்களா? (அப். 10:45) புறதேச ஆண்கள் முதலாவது விருத்தசேதனம் செய்யப்பட்டு, திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா? (அப். 15:1, 5) இவை மிக முக்கியமான கேள்விகளாக இருந்தன. இந்த ஆழமான காரியங்களை ஆராய்ந்தறிவதற்கு யெகோவாவுடைய சக்தி தேவைப்பட்டது. அப்படியென்றால், அது யார் மூலமாகச் செயல்படும்?
6 இந்த ஒவ்வொரு கேள்வியும் பொறுப்பான சகோதரர்கள் மூலமாக எழுப்பப்பட்டது; இவற்றிற்குப் பதில் தேவைப்பட்டது. ஆளும் குழுவினுடைய கூட்டத்தில் பேதுரு, பவுல், பர்னபா ஆகியோர் இருந்தார்கள்; விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாரிடம் யெகோவா எவ்வாறு கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தார் என்பதை அவர்கள் விவரித்தார்கள். (அப். 15:7-12) ஆளும் குழுவினர் இந்த அத்தாட்சியை, எபிரெய வேதாகமத்தில் சொல்லப்பட்டவற்றின் அடிப்படையிலும், கடவுளுடைய சக்தியின் உதவியோடும் சிந்தித்த பிறகு ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். பின்னர், அத்தீர்மானத்தைக் கடிதம் மூலம் எல்லாச் சபைகளுக்கும் தெரியப்படுத்தினார்கள்.—அப்போஸ்தலர் 15:25-30; 16:4, 5-ஐ வாசியுங்கள்; எபே. 3:5, 6.
7. எந்த விதங்களில் ஆழமான சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டன?
7 கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் யோவான், பேதுரு, யாக்கோபு, பவுல் ஆகியோர் எழுதிய புத்தகங்களின் உதவியோடு வேறு பல விஷயங்களும் தெளிவுபடுத்தப்பட்டன. கிறிஸ்தவ வேதாகமம் எழுதி முடிக்கப்பட்ட பிறகு ஒரு கட்டத்தில், தீர்க்கதரிசனம் சொல்கிற வரமும் அற்புதமாய் வெளிப்படுத்தப்பட்ட அறிவெனும் வரமும் ஒழிந்துபோயின. (1 கொ. 13:8) அப்படியென்றால், கடவுளுடைய சக்தி தொடர்ந்து கற்பிப்பவராகவும், நினைப்பூட்டுபவராகவும் செயல்படுமா? கடவுளுடைய ஆழமான காரியங்களை ஆராய்ந்தறிய தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கு அது உதவுமா? உதவுமென தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது.
முடிவின் காலத்தில்
8, 9. முடிவின் காலத்தில் ஆன்மீக ஞானத்தோடு யார் பிரகாசிப்பார்கள்?
8 முடிவின் காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு தேவதூதர் இவ்வாறு முன்னுரைத்தார்: “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். . . . அறிவும் பெருகிப்போம்.” (தானி. 12:3, 4) ஞானவான்களாக இருப்பவர்கள் யார், ஒளியைப்போல பிரகாசிப்பவர்கள் யார்? அதைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு குறிப்பை, கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையில் இயேசு தெரிவித்தார். ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தை’ பற்றிப் பேசுகையில், “அச்சமயத்திலே, நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்” என்று அவர் சொன்னார். (மத். 13:39, 43) இந்த விளக்கத்தில், ‘நீதிமான்களை,’ அதாவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை, “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” என்று அவர் அடையாளம் காட்டினார்.—மத். 13:38.
9 பரலோக நம்பிக்கையுள்ள எல்லாக் கிறிஸ்தவர்களுமே ‘பிரகாசிப்பார்களா’? ஒரு கருத்தில் பிரகாசிப்பார்கள் எனலாம்; ஏனென்றால், கிறிஸ்தவர்கள் எல்லாருமே பிரசங்கிப்பதிலும், சீடராக்குவதிலும், கூட்டங்களில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதிலும் பங்குகொள்வார்கள். பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் இதில் முன்மாதிரி வைப்பார்கள். (சக. 8:23) இது தவிர, இந்த முடிவின் காலத்தில் ஆழமான காரியங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டியிருந்தன. அதுவரையில், தானியேல் எழுதிய தீர்க்கதரிசனம் ‘முத்திரிக்கப்பட்டிருந்தது.’ (தானி. 12:9) இந்த ஆழமான காரியங்களைக் கடவுளுடைய சக்தி எப்படி, யார் மூலம் ஆராய்ந்தறியும்?
10. (அ) இந்தக் கடைசி நாட்களில், கடவுளுடைய சக்தி யார் மூலமாக ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்துகிறது? (ஆ) யெகோவாவின் பெரிய ஆன்மீக ஆலயத்தைப் பற்றிய சத்தியங்கள் தெளிவுபடுத்தப்பட்ட விதத்தை விளக்குங்கள்.
10 நம்முடைய நாட்களில் ஓர் ஆன்மீக விஷயம் தெளிவுபடுத்தப்படுவதற்கான சமயம் வருவதாக வைத்துக்கொள்வோம். அப்போது, உலகத் தலைமை அலுவலகத்திலுள்ள “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பாரைப் பிரதிநிதித்துவம் செய்கிற பொறுப்பிலுள்ள சகோதரர்களுக்கு முன்னர் புரிந்துகொள்ள முடியாதிருந்த ஆழமான சத்தியங்களைப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி உதவுகிறது. (மத். 24:45; 1 கொ. 2:13) ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விளக்கங்களில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமா என ஆளும் குழுவிலுள்ள எல்லாரும் கலந்துபேசுகிறார்கள். (அப். 15:6) பின்னர், அவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வருகிறார்கள்; தேவைப்பட்டால், செய்யப்பட்ட திருத்தத்தை எல்லாருடைய நன்மைக்காகவும் பிரசுரங்களில் வெளியிடுவார்கள். (மத். 10:27) பிற்பாடு, அவற்றுக்கு இன்னும் கூடுதலான விளக்கங்கள் தேவைப்படலாம்; இவையும்கூட நேர்மையுடன் பிரசுரங்களில் வெளியிடப்படும்.—“ஆன்மீக ஆலயத்தின் அர்த்தத்தைக் கடவுளுடைய சக்தி வெளிப்படுத்திய விதம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
இன்று கடவுளுடைய சக்தி செயல்படும் விதத்திலிருந்து பயனடைதல்
11. கடவுளுடைய ஆழமான காரியங்களை வெளிப்படுத்துவதில் கடவுளுடைய சக்தி வகிக்கும் பங்கிலிருந்து இன்று கிறிஸ்தவர்கள் எல்லாருமே எப்படிப் பயனடைகிறார்கள்?
11 கடவுளுடைய ஆழமான காரியங்களை வெளிப்படுத்துவதில் அவருடைய சக்தி வகிக்கும் பங்கிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே பயனடைகிறார்கள். முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களைப் போல, இன்று நாமும் கடவுளுடைய சக்தி நமக்குப் புரிய வைக்கிற தகவலைப் படிக்கிறோம், அவற்றைப் பின்னர் நினைவுபடுத்திப் பார்க்கிறோம், வாழ்க்கையில் பொருத்துகிறோம். (லூக். 12:11, 12) பிரசுரங்களில் வெளியிடப்பட்டுள்ள ஆழமான ஆன்மீகச் சத்தியங்களைப் புரிந்துகொள்ள நமக்கு அதிகமான படிப்பறிவு தேவையில்லை. (அப். 4:13) கடவுளுடைய ஆழமான காரியங்களைப் புரிந்துகொள்வதில் நாம் எப்படி முன்னேறலாம்? இதோ, சில ஆலோசனைகள்.
12. கடவுளுடைய சக்திக்காக நாம் எப்போது ஜெபம் செய்ய வேண்டும்?
12 கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். பைபிள் விஷயங்களை ஆராய்வதற்கு முன்பு, முதலாவதாக கடவுளுடைய சக்தியைத் தந்து உதவும்படி அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும். நாம் தனியாக இருந்தாலும்சரி நமக்கு நேரம் குறைவாக இருந்தாலும்சரி, அவ்வாறு ஜெபம் செய்ய வேண்டும். மனத்தாழ்மையோடு செய்யும் அத்தகைய வேண்டுதல்கள் நம்முடைய பரலோகத் தகப்பனின் மனதை நிச்சயம் குளிர்விக்கும். இயேசு குறிப்பிட்ட விதமாக, நாம் கடவுளுடைய சக்திக்காக உண்மையாய் மன்றாடினால் அவர் அதைத் தாராளமாய்க் கொடுப்பார்.—லூக். 11:13.
13, 14. கடவுளுடைய ஆழமான காரியங்களைப் புரிந்துகொள்வதில் கூட்டங்களுக்குத் தயாரிப்பது என்ன பங்கை வகிக்கிறது?
13 கூட்டங்களுக்குத் தயாரியுங்கள். நாம் அடிமை வகுப்பார் மூலமாக ‘ஏற்ற வேளையில் . . . உணவை’ பெறுகிறோம். அந்த “அடிமை” வகுப்பார் பைபிளின் அடிப்படையிலான தகவலைத் தருவதன் மூலமும் ஆழ்ந்த படிப்பிற்கும் கூட்டங்களுக்குமான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலமும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு தகவலை ‘சகோதரர்கள் எல்லாரும்’ கலந்தாலோசிக்கும்படி சொல்லப்படுவதற்கு, நியாயமான காரணங்கள் உள்ளன. (1 பே. 2:17; கொலோ. 4:16; யூ. 3) அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யும்போது நாம் கடவுளுடைய சக்தியுடன் ஒத்துழைக்கிறோம்.—வெளி. 2:29.
14 கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தயாரிக்கும்போது, கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களை பைபிளைத் திறந்து வாசிக்க வேண்டும்; அதோடு, சிந்திக்கப்படுகிற பொருளுடன் அவை ஒவ்வொன்றும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, நாளடைவில் பைபிளை நன்கு புரிந்துகொள்வோம். (அப். 17:11, 12) அவ்வாறு வசனங்களை எடுத்துப் பார்ப்பது, மனதிலே அவற்றைப் பதித்துக்கொள்ள உதவுகிறது; அவற்றை நினைவுக்குக் கொண்டு வர கடவுளுடைய சக்தி உதவுகிறது. அதோடு, பைபிளில் அந்த வசனத்தை எடுத்துப் பார்க்கும்போது அது காணப்படும் இடத்தை மனதில் பதித்துக்கொள்ளவும், தேவைப்படும்போது பைபிளைப் புரட்டி அதைக் கண்டுபிடிக்கவும் நமக்கு உதவுகிறது.
15. எல்லாப் பிரசுரங்களையும் நாம் ஏன் வாசித்து முடிக்க வேண்டும், இதை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?
15 எல்லாப் பிரசுரங்களையும் வாசித்துவிடுங்கள். சில பிரசுரங்கள் நம்முடைய கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்படுவதில்லை; ஆனால், அவை நம்முடைய நன்மைக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிற பத்திரிகைகள்கூட நம்மை மனதில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன. எந்திரகதியில் சுழலும் இந்த உலகில், யாராவது ஒருவருக்காக அல்லது ஏதாவது ஒரு காரியத்திற்காக நாம் பெரும்பாலும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்தச் சந்தர்ப்பங்களில், நாம் வாசித்திராத அல்லது ஓரளவே வாசித்துள்ள பிரசுரங்களைக் கையில் எடுத்துச் சென்றால், அதிலிருந்து கொஞ்சத்தை வாசிக்கலாம். சிலர், நடக்கும்போதோ வாகனத்தில் பயணிக்கும்போதோ நம்முடைய பிரசுரங்களின் ஆடியோ பதிவுகளைக் கேட்பதன் மூலம் எல்லாப் பிரசுரங்களையும் ‘வாசித்து’ முடித்துவிடுகிறார்கள். சராசரி வாசகர்கள் வாசித்து மகிழ்வதற்காக, கவனமாய் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டுள்ள இந்தப் பிரசுரங்கள் எல்லாமே ஆன்மீகக் காரியங்களிடம் நம் போற்றுதலை அதிகரிக்கின்றன.—ஆப. 2:2.
16. மனதில் எழும் கேள்விகளைக் குறித்து வைத்துக்கொண்டு, பின்னர் ஆராயும்போது என்ன பலன் கிடைக்கிறது?
16 தியானியுங்கள். பைபிளையோ பைபிள் பிரசுரங்களையோ வாசிக்கும்போது அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள். அப்படி வாசித்து, கருத்துகளின் கோர்வையைப் புரிந்துகொள்ளும்போது உங்கள் மனதில் கேள்விகள் எழலாம். அத்தகைய கேள்விகளைக் குறித்து வைத்துக்கொண்டு, பின்னர் அவற்றைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ளலாம். பெரும்பாலும் நம் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களை ஆராயும்போது இன்னும் ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவோம். அப்போது நாம் புரிந்துகொள்கிற விஷயங்கள், தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள முடிகிற பொக்கிஷமாகி விடுகின்றன.—மத். 13:52.
17. குடும்பப் படிப்பில் அல்லது தனிப்பட்ட படிப்பில் என்ன முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்?
17 குடும்ப வழிபாட்டுக்கு நேரத்தைத் திட்டமிடுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு மாலை நேரத்தை அல்லது வேறொரு நேரத்தை தனிப்பட்ட படிப்புக்கோ குடும்பப் படிப்புக்கோ ஒதுக்கும்படி ஆளும் குழுவினர் நம் எல்லாரையும் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். நம்முடைய சபைக் கூட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றம், இந்த அறிவுரையைப் பின்பற்ற நமக்கு வாய்ப்பளிக்கிறது. உங்களுடைய குடும்ப வழிபாட்டில் நீங்கள் எதைக் கலந்தாலோசிக்கிறீர்கள்? சிலர் பைபிளை வாசித்து, புரியாத வசனங்களை ஆராய்ச்சி செய்து, சுருக்கமான விளக்கக் குறிப்பைத் தங்கள் பைபிளில் எழுதி வைத்துக்கொள்கிறார்கள். அநேக குடும்பங்கள், படித்தவற்றைக் குடும்பத்திற்கு எப்படிப் பொருத்தலாம் என்பதைச் சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்கின்றன. குடும்பத் தலைவர்கள் சிலர், தங்கள் குடும்பத்தாருக்குத் தேவை என்று தாங்கள் கருதுகிற விஷயங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; அல்லது குடும்பத்தார் விரும்பிக் கேட்ட தகவலையோ கேள்விகளையோ அந்தச் சமயத்தில் சிந்திக்கத் தீர்மானிக்கிறார்கள். காலப்போக்கில் வேறு தகவல்களைப் படிப்பதைப் பற்றி நீங்களும்கூட யோசிப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.a
18. கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான சத்தியங்களை ஆழ்ந்து படிப்பதை நாம் ஏன் நிறுத்திவிடக் கூடாது?
18 கடவுளுடைய சக்தி சகாயராகச் செயல்படுமென இயேசு சொன்னார். எனவே, கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான சத்தியங்களை ஆழ்ந்து படிப்பதை நிறுத்திவிடக் கூடாது. அத்தகைய சத்தியங்கள், ‘தேவனை அறியும் அறிவின்’ பாகமாக உள்ளன; அந்தச் சத்தியங்களை ஆராய்ந்தறியும்படி நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. (நீதிமொழிகள் 2:1-5-ஐ வாசியுங்கள்.) அந்தச் சத்தியங்கள், “கடவுள் தம்மீது அன்பு காட்டுகிறவர்களுக்காகத் தயார் செய்திருக்கிறவற்றை” பற்றிய ஏராளமான தகவலை வெளிப்படுத்துகின்றன. யெகோவாவுடைய வார்த்தையைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள நாம் முயற்சி எடுக்கும்போது, அவருடைய சக்தி நமக்கு உதவும்; ஏனெனில், “அந்தச் சக்தி எல்லாக் காரியங்களையும், சொல்லப்போனால் கடவுளுடைய ஆழமான காரியங்களையும்கூட ஆராய்ந்தறிகிறது.”—1 கொ. 2:9, 10.
[அடிக்குறிப்பு]
a அக்டோபர் 2008 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ஐயும் பாருங்கள்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• ‘கடவுளுடைய ஆழமான காரியங்களை ஆராய்ந்தறிய,’ அவருடைய சக்தி என்ன இரண்டு விதங்களில் நமக்கு உதவுகிறது?
• முதல் நூற்றாண்டில், கடவுளுடைய சக்தி யார் மூலமாக ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்தியது?
• நம்முடைய நாட்களில் கடவுளுடைய சக்தி எவ்வாறு காரியங்களைத் தெளிவுபடுத்துகிறது?
• கடவுளுடைய சக்தி வகிக்கும் பங்கிலிருந்து பயனடைய நீங்கள் என்ன செய்யலாம்?
[பக்கம் 22-ன் பெட்டி]
ஆன்மீக ஆலயத்தின் அர்த்தத்தைக் கடவுளுடைய சக்தி வெளிப்படுத்திய விதம்
முதல் நூற்றாண்டில் வெளிப்படுத்தப்பட்ட ‘கடவுளுடைய ஆழமான காரியங்களுள்’ ஆசரிப்புக் கூடாரமும் பின்னர் பயன்படுத்தப்பட்ட ஆலயங்களும் உட்பட்டிருந்தன; இவை மிகப் பெரிய ஆன்மீக ஆலயத்திற்கு முன்நிழலாய் இருந்தன. இதை பவுல், ‘மனிதனால் அல்லாமல் யெகோவாவினால் அமைக்கப்பட்ட உண்மையான கூடாரம்’ என்று அழைத்தார். (எபி. 8:2) இந்தப் பெரிய ஆன்மீக ஆலயம், இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலமும் ஆசாரியத்துவத்தின் மூலமும் கடவுளை அணுகுவதற்கான ஓர் ஏற்பாடாகும்.
இந்த ‘உண்மையான கூடாரம்’ கி.பி. 29-ல் உருவானது; அதாவது, இயேசு ஞானஸ்நானம் பெற்று, பரிபூரண பலியாகும் ஒருவராக அவரை யெகோவா ஏற்றுக்கொண்டபோது உருவானது. (எபி. 10:5-10) இயேசு இறந்து, உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, இந்த ஆன்மீக ஆலயத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றார்; இங்கே தம்முடைய பலியின் மதிப்பை, “கடவுளுக்குமுன்” சமர்ப்பித்தார்.—எபி. 9:11, 12, 24.
பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள், ‘யெகோவாவுக்கென்று பரிசுத்த ஆலயமாக எழும்பி வருகிறவர்கள்’ என்று அவர்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் மற்றொரு இடத்தில் எழுதினார். (எபே. 2:20-22) இந்த ஆலயமும், மேற்குறிப்பிடப்பட்ட ‘உண்மையான கூடாரமும்’ ஒன்றுதானா? இரண்டும் ஒன்றுதான் என்று யெகோவாவின் ஊழியர்கள் பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், யெகோவாவின் பரலோக ஆலயத்தின் ‘கற்களாய்’ ஆவதற்குப் பூமியில் தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததாக அவர்கள் நினைத்தார்கள்.—1 பே. 2:5.
ஆனால் 1971 வாக்கில், அடிமை வகுப்பாரைச் சேர்ந்த பொறுப்பான சகோதரர்கள் எபேசியர் புத்தகத்தில் பவுல் குறிப்பிட்ட ஆலயம், யெகோவாவின் பெரிய ஆன்மீக ஆலயமாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ‘உண்மையான கூடாரம்’ என்பது பரலோக நம்பிக்கையுள்ள, உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதியைக் குறிப்பதாக இருந்தால், “எஜமானருடைய பிரசன்னத்தின்போது” அவர்களுடைய உயிர்த்தெழுதல் ஆரம்பமான பிறகே அது உருவாகியிருக்க வேண்டும். (1 தெ. 4:15-17) ஆனால், ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றிச் சொல்லுகையில், “அன்றிருந்த கூடாரம், குறிக்கப்பட்ட இந்தக் காலத்திற்கு அடையாளமாக இருந்தது” என பவுல் எழுதினார்.—எபி. 9:9.
இந்த வசனங்களையும் பிற வசனங்களையும் கவனமாய் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எது தெளிவாகத் தெரிகிறது? ஆன்மீக ஆலயம், இப்போது கட்டப்பட்டுவருகிற ஒன்றல்ல என்பதும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அதன் பாகமாக இருப்பதற்குப் பூமியில் தயார்படுத்தப்படுகிற ‘கற்களாக’ இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. மாறாக, அவர்கள் ஆன்மீக ஆலயத்தின் முற்றத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் சேவை செய்கிறார்கள்; கடவுளுக்குத் தினமும் “புகழ்ச்சிப் பலியை” செலுத்தி வருகிறார்கள். —எபி. 13:15.
[பக்கம் 23-ன் படம்]
“கடவுளுடைய ஆழமான காரியங்களை” எப்படி இன்னும் நன்கு புரிந்துகொள்ளலாம்?