மாபெரும் வளர்ச்சியின்போது செய்த சேவை
ஹார்லி ஹேரிஸ் சொன்னபடி
அன்று செப்டம்பர் 2, 1950. அமெரிக்காவில், மிஸ்சௌரியிலுள்ள கென்னட் நகரில் நடந்த வட்டார மாநாட்டில் நாங்கள் இருந்தோம்; அங்கே ஒரு கும்பல் எங்களைச் சூழ்ந்துகொண்டது. அந்தக் கலகக்காரக் கும்பலிடமிருந்து எங்களைக் காப்பாற்ற தேசிய பாதுகாப்புப் படையுடன் மேயர் அங்கு வந்தார். துப்பாக்கியும் ஈட்டி செருகிய துப்பாக்கியும் ஏந்திய வீரர்கள் தெருவில் வரிசைக் கட்டி நின்றார்கள். கேலி கிண்டல்கள் மத்தியிலும் நாங்கள் அங்கிருந்து வெளியே வந்து காரில் ஏறி மாநாட்டின் மீதமுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மிஸ்சௌரியிலுள்ள கேப் கரார்டோவுக்குச் சென்றோம். அங்குதான் நான் ஞானஸ்நானம் பெற்றேன்; அப்போது எனக்கு வயது 14. கலவரம் நிறைந்த அக்காலப்பகுதியில் என்னால் எப்படி யெகோவாவுக்குச் சேவை செய்ய முடிந்தது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள்.
என்னுடைய தாத்தா பாட்டியும் அவர்களுடைய எட்டுப் பிள்ளைகளும் 1930-களின் ஆரம்பத்தில் சகோதரர் ரதர்ஃபர்டு கொடுத்த பேச்சுகளின் சில ரெக்கார்டிங்குகளைக் கேட்டார்கள்; அதன்மூலம், சத்தியம் எது என்பது அவர்களுக்குப் பிடிபட்டுவிட்டது. என்னுடைய அப்பா பே ஹாரிஸும் அம்மா மில்ட்ரட் ஹாரிஸும் 1935-ல் வாஷிங்டன் டி.சி-யில் நடந்த மாவட்ட மாநாட்டில் ஞானஸ்நானம் பெற்றார்கள். அந்த மாநாட்டில்தான் ‘திரள் கூட்டத்தார்’ முதன்முதலாக அடையாளம் காட்டப்பட்டனர்; தாங்களும் இந்தத் ‘திரள் கூட்டத்தின்’ பாகமாக இருக்கப்போவதை நினைத்து என் பெற்றோர் எவ்வளவாய்ப் பூரித்துப்போனார்கள்!—வெளி. 7:9, 14.
அடுத்த வருடத்தில் நான் பிறந்தேன். ஒரு வருடத்திற்குப் பின், என் பெற்றோர் மிஸ்ஸிசிப்பியில் உள்ள ஓர் ஒதுக்குப்புற பகுதிக்குக் குடிமாறினார்கள். அந்தப் பகுதியில் வசித்தபோது, எங்களை வந்து பார்க்க ஒரு பயணக் கண்காணிகூட இருக்கவில்லை. நாங்கள் பெத்தேலுக்கு எழுதிக் கேட்டுத்தான் மாநாடுகளுக்குச் செல்ல முடிந்தது; அப்போது மட்டுமே எங்களால் மற்ற சகோதர சகோதரிகளுடன் கூட்டுறவு கொள்ள முடிந்தது.
துன்புறுத்தலைச் சகித்தோம்
இரண்டாம் உலகப் போரின்போது, யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகித்ததால் மிகுந்த துன்புறுத்தலை எதிர்ப்பட்டார்கள். அச்சமயம், அர்கான்சாஸிலுள்ள மௌன்டன் ஹோமுக்குக் குடிமாறியிருந்தோம். ஒரு நாள், நானும் என் அப்பாவும் தெரு ஊழியம் செய்துகொண்டிருந்தோம். திடீரென்று ஒரு ஆள் என் அப்பாவிடமிருந்து பத்திரிகைகளைப் பிடுங்கி கொளுத்தி விட்டான்; எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன. அவன் எங்களைப் பார்த்து, ‘போருக்குச் செல்லாத கோழைகள்’ என்று சொன்னான். எனக்கு அப்போது ஐந்து வயதுதான்; நான் ஓ-வென்று அழ ஆரம்பித்துவிட்டேன். அவன் அங்கிருந்து கிளம்பும்வரை அப்பா அவனைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றார்.
எங்களுக்கு ஆதரவு காட்டிய சில நல்ல ஆட்களும் இருந்தார்கள். ஒரு தடவை, ஒரு கும்பல் எங்கள் காரைச் சூழ்ந்துகொண்டது; அந்தச் சமயம் பார்த்து அரசாங்க வக்கீல் அங்கு வந்தார். “இங்கு என்ன நடக்கிறது” என்று கேட்டார். அதற்கு அந்த கும்பலில் இருந்த ஒருவன், “இந்த யெகோவாவின் சாட்சிகள் நாட்டுக்காகப் போர் செய்வதே இல்லை” என்று சொன்னான். உடனே அந்த வக்கீல் காரின் ஃபுட் போர்டில் ஏறி நின்று, “நான் முதல் உலகப் போரில் கலந்துகொண்டேன், இந்தப் போரிலும் கலந்துகொள்வேன்! இவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் யாருக்கும் கெடுதல் செய்யாதவர்கள்” என்று சொன்னார். அந்தக் கும்பல் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டது. எங்களிடம் மனிதாபிமானமாக நடந்துகொண்ட அப்படிப்பட்ட நல்ல ஆட்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்தோம்!—அப். 27:3.
பலப்படுத்திய மாநாடுகள்
மிஸ்சௌரியிலுள்ள செ. லூயிஸில் 1941-ஆம் வருடம் நடந்த மாநாடு அந்தச் சமயத்தில் எங்களுக்கு தேவைப்பட்ட ‘உற்சாக டானிக்காக’ இருந்தது. ஒரு மதிப்பீட்டின்படி, அதில் 1,15,000 பேர் கலந்துகொண்டார்கள். திகைக்கவைக்கும் அளவுக்கு 3,903 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்! “ராஜாவின் பிள்ளைகள்” என்ற தலைப்பில் சகோதரர் ரதர்ஃபர்டு கொடுத்த பேச்சு இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இளம் பிள்ளைகளான எங்களைப் பார்த்து அவர் நேரடியாகப் பேசினார், பிள்ளைகள் என்ற தலைப்பிலான நீலநிற அழகிய புத்தகத்தை நாங்கள் எல்லாரும் பெற்றோம். அடுத்த வருடத்தில் நான் தொடக்கப் பள்ளியில் சேரவிருந்ததால், அங்கு எதிர்ப்படப்போகும் சவால்களைச் சமாளிக்க அந்த மாநாடு என்னைப் பலப்படுத்தியது. நானும் என் சித்தப்பாவின் பிள்ளைகளும் கொடி வணக்கம் செய்யாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டோம். பள்ளி நிர்வாகத்தினர் மனம் மாறியிருக்கலாம் என நினைத்து தினமும் பள்ளிக்குச் செல்வோம். காலையில் காட்டுப் பாதை வழியே நடந்து பள்ளிக்கு போயும், பிரயோஜனமில்லாமல் வீடு திரும்புவோம்; இப்படிப் போவதும் திரும்பி வருவதுமாக பல நாட்கள் ஓடின. இருந்தாலும், இதன் மூலம் நாங்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்கு உண்மைத்தன்மை காட்டுவதாக நான் உணர்ந்தேன்.
ஆனால், சீக்கிரத்திலேயே கொடி வணக்கம் கட்டாயமான ஒன்றல்ல என அமெரிக்க உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. கடைசியில், எங்களால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. அந்த ஆசிரியர் மிகவும் கனிவானவராக இருந்ததால் நாங்கள் இத்தனை நாட்களாகத் தவறவிட்ட பாடங்களை எல்லாம் கற்றுகொள்ள உதவினார். மற்ற மாணவர்களும் எங்களை மரியாதையுடன் நடத்தினார்கள்.
ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்டில் 1942-ஆம் வருடம் நடந்த மாநாடும் என் நினைவுக்கு வருகிறது; அதில், “சமாதானம்—அது நிலைத்திருக்குமா?” என்ற பேச்சைச் சகோதரர் நேதன் எச். நார் கொடுத்தார். வெளிப்படுத்துதல் 17-ஆம் அதிகாரத்தை மையமாகக் கொண்ட அந்தப் பேச்சில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் கொஞ்ச காலம் சமாதானம் நிலவும் என அவர் சுட்டிக்காட்டினார். அதனால், ஊழிய வேலை இன்னும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு ஆயத்தமாக 1943-ல் கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பெரியவனான பிறகு நானும் இந்தப் பள்ளியில் கலந்துகொள்வேன் என அப்போது கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை. சகோதரர் நார் பேச்சில் சொன்னபடியே போருக்குப் பின் சமாதானம் நிலவியது, துன்புறுத்தலும் குறைந்தது. என்றாலும், 1950-ல் கொரியப் போர் துவங்கியபோது, ஆரம்பத்தில் சொன்ன விதமாக பிரசங்க வேலைக்கு மீண்டும் எதிர்ப்பு தலைதூக்கியது.
வளர்ச்சியில் முழுமையாகப் பங்கு கொண்டோம்
நான் 1954-ல் பள்ளிப் படிப்பை முடித்து, அடுத்த மாதமே பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். 1950-ல் கலகக் கும்பல் எங்களைச் சூழ்ந்துகொண்ட இடமான மிஸ்சௌரியிலுள்ள கென்னட்டில் நான் சேவை செய்த பிறகு, மார்ச் 1955-ல் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டேன். அங்கு, நான் நியமிக்கப்பட்ட சபையின் பிராந்தியத்தில் நியு யார்க் நகரின் மையத்தில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கமும் இருந்தது. கிராமவாசியாய் இருந்த எனக்கு வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட மாற்றம் அது! அங்கு அவசரக் கதியில் ஓடிக்கொண்டிருக்கும் நியு யார்க் வாசிகளைக் கவருவதற்காக, பத்திரிகையிலுள்ள சிந்தனையைத் தூண்டும் ஒரு கட்டுரையைக் காட்டி, “இந்தக் கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் வந்ததுண்டா?” என்று கேட்பேன். அநேகர் பத்திரிகையை ஏற்றுக்கொள்வார்கள்.
பெத்தேலில் எனக்கு மிகவும் பிடித்தது, சகோதரர் நார் நடத்திய காலைநேர தினவசனக் கலந்தாலோசிப்பு ஆகும். அவர் பைபிள் வசனங்களைத் தத்ரூபமாய் விளக்கி, எங்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்திக் காட்டுவது எவ்வளவு பிரமாதமாய் இருக்கும்! மணமாகாத இளம் சகோதரர்களாகிய எங்களிடம் ஓர் அப்பா தன் மகனிடம் பேசுவதுபோல் பேசுவார்; எதிர்பாலாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும் அடிக்கடி ஆலோசனை கொடுப்பார். 1960-ல் நான் திருமணம் செய்யத் தீர்மானித்தேன்.
நான் 30 நாட்களில் பெத்தேலை விட்டுப்போவதாக நோட்டிஸ் கொடுத்தேன்; ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனக்கு கூச்சமாக இருந்தபோதிலும், 30-வது நாளில் அதைப் பற்றிக் கேட்க எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன். சகோதரர் ராபர்ட் வாலன் ஃபோனில் எனக்கு பதிலளித்ததோடு, நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கே வந்தார். விசேஷப் பயனியராக அல்லது பயணக் கண்காணியாகச் சேவை செய்வதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று அவர் கேட்டார். “எனக்கு 24 வயதுதானே ஆகிறது; அவ்வளவாக அனுபவமும் இல்லையே, சகோதரரே” என்று பதிலளித்தேன்.
வட்டார ஊழியத்தில்
அன்று இரவு என்னுடைய அறையில் ஒரு பெரிய ‘கவர்’ இருந்தது. அதில் விசேஷப் பயனியருக்கான விண்ணப்பமும் வட்டார ஊழியத்திற்கான விண்ணப்பமும் இருந்தன. வாவ்! நான் அப்படியே வாயடைத்துப் போனேன்! இவ்வாறு, தென்மேற்கு மிஸ்சௌரியிலும் கிழக்கு கன்சஸ்ஸிலும் உள்ள சகோதரர்கள் மத்தியில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்யும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன். என்றாலும், பெத்தேலை விட்டுப்போவதற்கு முன் பயணக் கண்காணிகளுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன். சகோதரர் நார் தன்னுடைய பேச்சின் முடிவில், “நீங்கள் வட்டாரக் கண்காணிகளாகவும் மாவட்ட கண்காணிகளாகவும் இருப்பதுதானே, சபையிலுள்ள மற்றவர்களைவிட உங்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்று அர்த்தப்படுத்தாது. சிலர் உங்களைவிட அதிக அனுபவசாலிகளாக இருப்பார்கள். ஆனால், சூழ்நிலை காரணமாக அவர்களால் உங்களைப்போல் சேவை செய்ய முடியவில்லை, அவ்வளவுதான். அவர்களிடமிருந்து நீங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்” என்று சொன்னார்.
அவர் சொன்னது எவ்வளவு உண்மையாக இருந்தது! சகோதரர் ஃப்ரெட் மாலஹனும் அவருடைய மனைவியும், கன்சஸ்ஸிலுள்ள பார்சன்ஸ் நகரில் இருந்த அவருடைய அண்ணன் சார்லியும் அதற்குத் தலைசிறந்த உதாரணங்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் 1900-களின் ஆரம்பத்திலேயே சத்தியத்திற்கு வந்தவர்கள். நான் பிறப்பதற்கு முன்பே அவர்கள் பெற்றிருந்த அனுபவங்களைப் பற்றிக் கேட்டது எவ்வளவு இனிமையாக இருந்தது! மற்றொரு சகோதரர்தான் ஜான் ரிஸ்டன்; அன்பான அந்தச் சகோதரர் மிஸ்சௌரியிலுள்ள ஜாப்லனில் பல பத்தாண்டுகளாக பயனியர் சேவை செய்தவர். அருமையான அந்தச் சகோதரர்கள் யெகோவாவின் அமைப்பு செயல்படும் விதத்திற்கு மிகுந்த மதிப்பு மரியாதை காட்டியவர்கள். நான் இளம் வட்டாரக் கண்காணியாக இருந்தபோதிலும், என்னை அவர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள்.
நான் 1962-ல் க்ளோரிஸ் நோக்கே என்ற சகோதரியைக் கரம்பிடித்தேன்; அவள் கலகலப்பானவள், செந்நிற தலைமுடியுள்ளவள். க்ளோரிஸுடன் சேர்ந்து வட்டார ஊழியத்தைத் தொடர்ந்தேன். சகோதரர்களின் வீட்டில் தங்கியபோது அவர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடிந்தது. முழுநேர சேவையை ஆரம்பிக்க இளைஞர்களை ஊக்குவிக்க முடிந்தது. எங்களுடைய வட்டாரத்திலிருந்த இரண்டு டீனேஜர்களான ஜே கோசின்ஸ்கியும் ஜோயன் க்ரெஸ்மனும் அப்படிப்பட்ட ஊக்குவிப்புக்காகவே காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு ஊழியத்தில் ஈடுபட்டதும் சுய தியாக வாழ்க்கையில் கிடைத்த சந்தோஷங்களைப் பகிர்ந்துகொண்டதும் முழுநேர இலக்குகளை வைக்க அவர்களை ஊக்குவித்தன. பிறகு, ஜோயன் விசேஷ பயனியரானாள்; ஜே, பெத்தேலில் சேவை செய்தான். பிற்பாடு, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்; இப்போது சுமார் 30 வருடங்களாக வட்டார ஊழியம் செய்துவருகிறார்கள்.
மிஷனரி சேவையில்
சகோதரர் நார் எங்களிடம் வெளிநாட்டில் சேவை செய்ய விருப்பமா என 1966-ல் கேட்டார். “இங்கேகூட நாங்கள் சந்தோஷமாகத்தான் சேவை செய்கிறோம். ஆனால், வேறெங்காவது தேவை அதிகம் இருந்தால் அங்கு செல்வதற்கும் தயார்” என்று பதிலளித்தோம். ஒரு வாரம் கழித்து, கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டோம். நான் பெத்தேலுக்குச் சென்று அந்தப் பள்ளியில் கலந்துகொள்வதோடு, முன்பு என்னுடன் அன்பாகவும் மரியாதையாகவும் பழகிய அநேக சகோதர சகோதரிகளுடன் மீண்டும் தங்கியது எவ்வளவு குஷியாக இருந்தது! இன்றுவரையாக உண்மையோடு சேவை செய்துவருகிற சக மாணவர்களுடனும் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டோம்.
நானும் க்ளோரிஸும் தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வடாருக்கு அனுப்பப்பட்டோம். எங்களோடுகூட டென்நஸ் க்றிஸ்ட், எட்வினா க்றிஸ்ட் தம்பதியரும் ஆனா ராட்ரிகஸ், டேல்யா சான்செஸ் ஆகிய சகோதரிகளும் அனுப்பப்பட்டார்கள். க்றிஸ்ட் தம்பதியர் தலைநகரான கவிடோவுக்குச் சென்றார்கள். ஆனா, டேல்யா ஆகிய சகோதரிகளும் எங்களைப் போல ஈக்வடாரிலுள்ள மூன்றாவது பெரிய நகரமான கியூயெனகாவுக்கு நியமிக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியில் இரண்டு மாகாணங்கள் இருந்தன. கியூயெனகாவில் முதல் சபை எங்களுடைய வீட்டில்தான் தொடங்கியது. அப்போது நாங்கள் நான்கு பேரும் இன்னும் இரண்டு பேரும் இருந்தோம். நாங்கள் எப்படித்தான் பிரசங்க வேலையை செய்து முடிக்கப் போகிறோமோ என நினைத்தோம்.
கியூயெனகா எங்கும் சர்ச் மயமாக இருந்தது; அந்த நகரில், மக்கள் எப்போது பார்த்தாலும் புனித நாட்களைக் கொண்டாடுவதும் மத ஊர்வலங்களை நடத்துவதுமாக இருந்தார்கள். ஆனாலும், அந்த மக்களின் மனதில் அநேக கேள்விகள் இருந்தன. உதாரணத்திற்கு, கியூயெனகாவில் சைக்கிள் வீரராக இருந்த மார்யோ போலோ என்பவரை நான் முதன்முறை சந்திந்தபோது அவர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைமகள் யார்?” என்று அவர் கேட்டார்.
இன்னொரு முறை, இரவு நேரத்தில் மார்யோ வாடிய முகத்தோடு எங்கள் வீட்டிற்கு வந்தார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அபாண்டமாக குற்றஞ்சாட்டியிருந்த சில பிரசுரங்களை சர்ச் பாதிரியார் ஒருவர் அவருக்குக் கொடுத்திருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தன்னுடைய நியாயத்தை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என மார்யோவிடம் எடுத்துச் சொன்னேன். அதனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அடுத்த நாள் மார்யோ என்னையும் அந்த பாதிரியாரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். அப்போது, திரித்துவத்தைப் பற்றி பேசலாம் என்று சொன்னேன். யோவான் 1:1-ஐ பாதிரியார் வாசித்தபோது, அதன் அர்த்தத்தை மார்யோவே சரியாக விளக்கிவிட்டார். இப்படி ஒவ்வொரு வசனமாக விளக்கப்பட்டது. கடைசியில், அந்தப் பாதிரியாரால் திரித்துவக் கோட்பாட்டை நிரூபிக்க முடியாமல் போக, அவர் அங்கிருந்து நடை கட்டினார். அதனால், நாங்கள் சொன்னதுதான் சத்தியம் என்பது மார்யோவுக்கும் அவரது மனைவிக்கும் தெள்ளத்தெளிவாகிவிட்டது; அவர்களும் பைபிள் சத்தியங்களை ஆதரித்துப் பேசுவதில் திறம்பட்டவர்களாக ஆனார்கள். கியூயெனகா நகரில் சபைகள் 33-ஆக அதிகரித்து எவ்வளவு சந்தோஷத்தை அளித்தது! நாங்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்ட இந்தப் பெரிய பிராந்தியத்தில் இப்போது மொத்தம் 63 சபைகள் இருக்கின்றன; இது உண்மையிலேயே மாபெரும் வளர்ச்சி!
கிளை அலுவலகத்தில்
நானும் சகோதரர் ஆல் ஸ்கூலோவும் 1970-ல் குயாகுவிலுள்ள கிளை அலுவலகத்துக்குப் போகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். நாங்கள் இருவரும் கிளை அலுவலக வேலைகளைக் கவனித்துக்கொண்டோம். சகோதரர் ஜோ செக்கராக், நாடு முழுவதிலுமுள்ள 46 சபைகளுக்கும் தேவையான பிரசுரங்களை அட்டைப்பெட்டிகளில் அடுக்கி வைக்கும் வேலையைப் பகுதி நேரமாகச் செய்து வந்தார். சில காலத்திற்கு, க்ளோரிஸ் மிஷனரி சேவையிலும் நான் பெத்தேல் சேவையிலும் இருந்தோம். இதுவரை 55 பேர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு க்ளோரிஸ் உதவியிருக்கிறாள்; ஒவ்வொரு மாநாட்டிலும் பெரும்பாலும் மூன்றிலிருந்து ஐந்து மாணாக்கர்கள் ஞானஸ்நானம் எடுப்பார்கள்.
உதாரணத்திற்கு, லூக்ரஸ்யா என்ற பெண்மணிக்கு க்ளோரிஸ் பைபிள் படிப்பு எடுத்தாள்; அவருடைய கணவரோ எதிர்ப்பு தெரிவித்தார். என்றாலும், லூக்ரஸ்யா பிற்பாடு ஞானஸ்நானம் பெற்று, ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தார். அவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொடுத்தார். அவருடைய இரண்டு மகன்களும் இப்போது மூப்பர்களாகச் சேவை செய்கிறார்கள், அதில் ஒருவர் விசேஷ பயனியராக இருக்கிறார்; மகளும் பயனியராகச் சேவை செய்கிறார். அவருடைய பேத்தியும் ஒரு தங்கமான சகோதரரை மணமுடித்து, அவர்கள் இருவரும்கூட விசேஷ பயனியராகச் சேவை செய்கிறார்கள். இந்தக் குடும்பத்தார், சத்தியத்திற்கு வர அநேகருக்கு உதவியிருக்கிறார்கள்.
ஈக்வடாரில் 1980-ஆம் வருடத்திற்குள் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை சுமார் 5,000-மாக உயர்ந்தது. இந்தளவு பிரஸ்தாபிகளை கவனித்துக்கொள்ள, இந்தச் சிறிய கிளை அலுவலகம் போதுமானதாக இருக்கவில்லை. ஒரு சகோதரர் குயாகுவிலுக்கு வெளியே சுமார் 80 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு அளித்தார். 1984-ல் இந்த இடத்தில் ஒரு புதிய கிளை அலுவலகமும் ஒரு மாநாடு மன்றமும் கட்டுவதற்கான பணி ஆரம்பமானது; 1987-ல் அவை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வளர்ச்சிக்குக் கைகொடுக்க முன்வந்தவர்கள்
இத்தனை வருடங்களாக, ஈக்வடாரில் தேவை அதிகமுள்ள பிராந்தியங்களில் ஊழியம் செய்வதற்கு மற்ற நாடுகளிலிருந்து அநேக பிரஸ்தாபிகளும் பயனியர்களும் வந்திருப்பது நெஞ்சை நெகிழச் செய்திருக்கிறது. இந்த விஷயத்தில், என் நினைவுக்கு வருவது கனடாவில் ஆசிரியராக வேலை செய்து ஒய்வு பெற்ற ஆண்டி கிட் என்பவரின் உதாரணம். 1985-ல், தனது 70-வது வயதில் அவர் ஈக்வடாருக்குக் குடிமாறினார்; 2008-ல் தனது 93-வது வயதில் இறக்கும்வரை உண்மையோடு சேவை செய்தார். அவர் முதன்முதலாக இந்த நாட்டிற்கு வந்தபோது, ஒரு சிறிய சபையில் அவர் ஒருவரே கண்காணியாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஸ்பானிய மொழி பேசுவது அவருக்குக் கஷ்டமாக இருந்தபோதிலும், அவரே பொதுப்பேச்சையும் கொடுத்து காவற்கோபுர படிப்பையும் நடத்தினார். அவர் தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் நடத்தி, ஊழிய கூட்டத்தில் பெரும்பாலான பகுதிகளைக் கையாண்டார்! அதே இடத்தில், இப்போது சுமார் 200 பிரஸ்தாபிகளையும் நிறைய மூப்பர்களையும் கொண்ட இரண்டு சபைகள் களைகட்டுகின்றன.
அமெரிக்காவிலிருந்து குடும்பத்துடன் ஈக்வடாருக்குக் குடிமாறி வந்த இன்னொரு சகோதரர் எர்னஸ்டோ டையஸ். எட்டு மாதங்களுக்கு பின் அவர் இவ்வாறு சொன்னார்: “எங்களுடைய மூன்று பிள்ளைகளும் பாஷையை நன்றாகக் கற்றுக்கொண்டார்கள்; இப்போது ரொம்ப அழகாக மற்றவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஓர் அப்பாவாக, மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து ஒழுங்கான பயனியராக முழுநேர ஊழியம் செய்வது இந்த உலகத்தில் சரிபட்டுவராது என்று நினைத்தேன்; ஆனால், அந்த இலக்கை இப்போது எட்டிவிட்டேன். நாங்கள் எல்லாரும் மொத்தம் 25 பைபிள் படிப்புகளை நடத்துகிறோம். இதெல்லாம் நாங்கள் இன்னும் ஒற்றுமையாக இருக்க உதவியிருக்கின்றன; எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவாவிடம் நெருங்கிவர முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கத்தை இதற்கு முன் நான் அனுபவித்ததே இல்லை.” இவ்வளவு அருமையான சகோதர சகோதரிகளை நாங்கள் எவ்வளவு உயர்வாய்க் கருதுகிறோம்!
கிளை அலுவலகத்தில், 1994-ன்போது சில விரிவாக்கப் பணிகள் நடந்தன; சொல்லப்போனால், கட்டிடங்கள் இருமடங்கானது. 2005-ல் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 50,000-தைத் தாண்டிவிட்டது; அதனால், கிளை அலுவலகத்தை இன்னும் விரிவாக்க வேண்டியிருந்தது. ஒரு பெரிய மாநாட்டு மன்றம், இன்னுமொரு குடியிருப்பு கட்டிடம், அதோடு, மொழிபெயர்ப்புக்கான அலுவலகங்கள் கட்ட வேண்டியிருந்தன. இந்தப் புதிய கட்டிடங்கள் அக்டோபர் 31, 2009-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நான் 1942-ல் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அமெரிக்காவில் சுமார் 60,000 சாட்சிகள் இருந்தார்கள். இப்போதோ பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். நாங்கள் 1966-ல் ஈக்வடாருக்கு வந்தபோது இங்கே சுமார் 1,400 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். இப்போதோ 68,000-க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். இங்கு 1,20,000 பைபிள் படிப்புகள் நடத்தப்படுவதையும் 2009-ல் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்புக்கு 2,32,000-க்கும் மேலானோர் வந்திருந்ததையும் பார்க்கும்போது பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. ஆம், நாம் சற்றும் நினைத்திராத விதத்தில் யெகோவா தம் மக்களை ஆசீர்வதித்திருக்கிறார். மாபெரும் வளர்ச்சி ஏற்படுகிற சமயத்திலும் இடத்திலும் வாழ்வது மனதிற்கு எந்தளவு மட்டில்லா மகிழ்ச்சி அளிக்கிறது!a
[அடிக்குறிப்பு]
a இக்கட்டுரையைப் பிரசுரிப்பதற்குத் தயாரிக்கையில், கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையுள்ளவராய் இருந்த ஹார்லி ஹேரிஸ் இறந்துபோனார்.
[பக்கம் 5-ன் படங்கள்]
திறந்தவெளி மைதானத்தில் மாநாடு (1981) அதே இடத்தில் குயாகுவில் மாநாட்டு மன்றம் (2009)