வரவுக்கேற்ற செலவு செய்வது எப்படி?
“விரலுக்கேற்ற வீக்கம்” என்று மக்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நம் வருமானத்திற்கு ஏற்ற விதமாகச் செலவு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
இதைச் சொல்வது சுலபம், செய்வது கஷ்டம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த அடிப்படை விஷயத்தைக் கடைப்பிடித்தால் பண நெருக்கடிகளிலிருந்தும் கழுத்தை நெறிக்கும் கடன்களிலிருந்தும் தப்பிக்கலாம். இதை எப்படிச் செய்வது? இதற்கு ஏதாவது வழிகாட்டி இருக்கிறதா? ஆம், அதுவே பைபிள். அது என்ன சொல்கிறது என்று கவனிப்போமா?
கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள்
நம் வரவுசெலவுகளைச் சமாளிக்க உதவும் நிறைய ஆலோசனைகள் பைபிளில் இருக்கிறது. அதில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம். உங்கள் வீட்டு வரவுசெலவுகளைக் கவனிக்க இந்த ஆலோசனைகள் உதவுமா என நீங்களே பாருங்கள்.
திட்டமிடுங்கள் அல்லது பட்ஜெட் போடுங்கள்.
பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டுமென்றால் முதலில், உங்களுடைய வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 21:5, பொது மொழிபெயர்ப்பு) சிலர், “சாப்பாடு,” “வாடகை,” “துணிமணி” என்று ஒவ்வொரு செலவிற்கும் ஒரு ‘கவர்’ வைத்துக்கொண்டு அதில் பணத்தைப் போடுகிறார்கள். நீங்கள் இப்படிச் செய்தாலும் சரி வேறு எப்படிச் செய்தாலும் சரி, உங்கள் பணம் எங்கே போகிறது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். எப்போதும் அத்தியாவசியமான காரியங்களுக்கு முதலில் பணத்தை ஒதுக்குங்கள், ஆடம்பரத்திற்கு அல்ல.
பொறாமை வேண்டாம்.
வளரும் நாடுகளில் இருக்கும் நிறையப் பேர் செழிப்பான நாடுகளில் உள்ள மக்களைப் போல் வாழ நினைக்கிறார்கள். தனி நபர்கள்கூட, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார்கள். அப்படிச் செய்தால், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடுமே. யாருக்குத் தெரியும், அப்படி ஆடம்பரமாக வாழ்கிறவர்களும் கடன் வாங்கியே பொருள்களைச் சேர்த்திருக்கலாம். “பொறாமைக் கண்ணோடு பார்ப்பவன் பணக்காரனாகத் துடிக்கிறான்; ஆனால், படுகுழியில்தான் விழுவான் என்பது அவனுக்குத் தெரியாது” என்று பைபிளும் எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 28:22, த ஜெருசலேம் பைபிள்.
எளிமையாக வாழுங்கள்.
“நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே” என்று எரேமியாவின் உதவியாளர் பாருக் என்பவருக்கு யெகோவா தேவன் அறிவுரை சொன்னார். (எரேமியா 45:5) ஆம், வாங்கும் சம்பளம் கைக்கும் வாய்க்குமே போதாதபோது கார் பங்களாவிற்கு ஆசைப்பட்டால் பண நெருக்கடியில்தானே மாட்டிக்கொள்வோம். ஏஷியன் டெவலப்மென்ட் பேங்க், ஆசியாவைப் பற்றி வெளியிட்ட அறிக்கையின்படி பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவரும் இந்தியாவில் பாதிக்கு அதிகமானோரும் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள்; அவர்களுடைய தினக்கூலி கிட்டத்தட்ட 60 ரூபாய்தான். இந்தளவு குறைவான சம்பளம் வாங்குகிறவர்கள், அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதானே சரியாக இருக்கும். ஏன், பணக்கார நாட்டில் உள்ளவர்கள்கூட இந்த ஆலோசனையைப் பின்பற்றினால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கலாம்.
போதும் என்ற மனதோடு வாழுங்கள்.
எளிமையாக வாழ வேண்டுமென்றால் போதும் என்ற மனம் வேண்டும். 1 தீமோத்தேயு 6:8-ல் பைபிள் சொல்லும் ஆலோசனையைக் கவனியுங்கள்: “நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.” பணம் மட்டுமே சந்தோஷத்தைத் தராது. ஏனென்றால், கொஞ்ச பணத்தை வைத்துக்கொண்டே அதிக சந்தோஷமாக வாழ்கிறவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். இருப்பதை வைத்து அவர்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். பணத்தைப் பெரிதாக நினைக்காமல், தங்கள் உறவுகளும் நண்பர்களும் காட்டும் பாசத்தையே சொத்தாக நினைக்கிறார்கள்.—நீதிமொழிகள் 15:17.
அநாவசியமாகக் கடன் வாங்காதீர்கள்.
“ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை” என்று பைபிள் சொல்வதை யாராலும் மறுக்க முடியாது. (நீதிமொழிகள் 22:7) சில நேரங்களில், கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், கடன்வாங்கியாவது ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் பணக்கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுவார்கள். அதுவும், ‘கிரெடிட் கார்டு’ (கடன் அட்டை) வைத்திருந்தால் கேட்கவே வேண்டாம்! டைம் பத்திரிகை சொல்கிறது: “கையில் ‘கிரெடிட் கார்டு’ இருந்தால், கண்மண் தெரியாமல் செலவு செய்துவிடுவோம்.” பிலிப்பைன்ஸில் இருக்கும் எரிக் சொல்கிறார்: “பணம் கொடுத்து வாங்கறதவிட, ‘கிரடிட் கார்டுல’ வாங்கினேனா எவ்ளோ செலவு பண்றேன்னே தெரியாது. கடைசியில மொத்தமா பணம் கட்டும்போதுதான் பட்ஜெட் உதைக்கும்.” அப்படியென்றால், ‘கிரெடிட் கார்டை’ கொண்டு போகும்போது பார்த்துப் பார்த்து செலவு செய்வது முக்கியம் இல்லையா?—2 இராஜாக்கள் 4:1; மத்தேயு 18:25.
சேமித்து வைத்து வாங்குங்கள்.
அதெல்லாம் இந்தக் காலத்திற்குச் சரிப்பட்டுவராது என்று நினைக்காதீர்கள். பணப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க இதுவே மிகச் சிறந்த வழி. சேமித்து வைத்துப் பொருள் வாங்கினால், கடன் தொல்லை... எக்கச்சக்கமான வட்டி... போன்ற அடுக்கடுக்கான பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். தவணையில் வாங்கினால், பொருளுக்குரிய பணத்தைவிட அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். சின்னஞ்சிறிய ஜீவனான எறும்பே, “அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.” இப்படி முன்கூட்டியே சேர்த்து வைப்பதால், எறும்பு ‘ஞானமுள்ளது’ என பைபிள் சொல்கிறது.”—நீதிமொழிகள் 6:6-8; 30:24, 25.
முயன்று பார்த்தவர்கள் சொல்வது...
“இந்த பைபிள் ஆலோசனைகள் எல்லாமே படிக்க நன்றாக இருக்கிறது, ஆனால், நடைமுறைக்கு ஒத்துவருமா?” என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியென்றால், இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்து பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளித்த சிலரிடம் பேசிப் பார்க்கலாம்.
டியஸ்டாடோவுக்கு நான்கு பிள்ளைகள். சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவருக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும், பட்ஜெட் போட்டது அவருக்குக் கைகொடுத்திருக்கிறது. “நான் சம்பாதிக்கிற ஒவ்வொரு பைசாவுக்கும் பட்ஜெட் போட்டுடுவேன். நான் எதுக்கெல்லாம் செலவு பண்றேன்னு எழுதி வைச்சிருக்கேன்” என்கிறார். டானிலோவும் இதை ஒத்துக்கொள்கிறார். அவரும் அவரது மனைவியும் செய்த சிறுதொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், பட்ஜெட் போட்டு செலவு செய்வதால் அவர்களால் சமாளிக்க முடிகிறது. “ஒவ்வொரு மாசமும் எங்களோட வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவுன்னு எங்களுக்கு நல்லா தெரியும். அது போக மிச்சம் இருக்கிற பணத்துல வேற எதுக்கெல்லாம் செலவு செய்யலாம்னு நாங்க பேசி முடிவு பண்ணுவோம்” என்கிறார் அவர்.
போட்ட பட்ஜெட்டிற்குள்ளேயே செலவு செய்வதற்காகச் சில செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது எனச் சிலர் நினைக்கிறார்கள். மர்னா ஒரு விதவை, அவருக்கு மூன்று பிள்ளைகள். “இப்போ எல்லாம் நானும் என் பிள்ளைகளும் பைபிள் கூட்டங்களுக்கு பஸ்ல போறதில்ல, நடந்தேதான் போறோம்” என்கிறார். எளிமையாக வாழ பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக மர்னா நிறைய முயற்சிகளை எடுத்திருக்கிறார். “1 தீமோத்தேயு 6:8-10-ல இருக்கிற ஆலோசனையைக் கடைப்பிடிக்கிறதுல நான் என் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியா இருக்கனும்னு நினைச்சேன். அந்த வசனத்துல சொல்ற மாதிரி, இருக்கறத வச்சுகிட்டு திருப்தியா வாழ நான் முயற்சி பண்றேன்.”
ஜெரல்ட் விஷயத்திலும் இதுவே உண்மை, இவருக்கு இரண்டு பிள்ளைகள். “நாங்க குடும்பமா பைபிள் படிக்கும்போது, ஆன்மீக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கிறிஸ்தவங்களோட அனுபவங்களை பத்தி படிப்போம். அந்த மாதிரி படிச்சதுனால எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்னு பிள்ளைங்க கத்துக்கிட்டாங்க. இப்பல்லாம் அவசியம் இல்லாத பொருள்களை வாங்கித்தர சொல்லி அவங்க நச்சரிக்கிறதில்ல.”
பிலிப்பைன்ஸில் வாழும் ஜானட் மணமாகாதவர். பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித் தருகிறார், இதை ஒரு முழுநேர சேவையாகச் செய்கிறார். கொஞ்ச நாட்களுக்குமுன் தன் வேலையை இழந்துவிட்டார். இருந்தாலும், இருப்பதை வைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ்கிறார். அவர் சொல்கிறார்: “இவ்ளோதான் செலவு பண்ணனும்னு எனக்கே ஒரு கட்டுப்பாடு வச்சிருக்கேன். ரொம்ப முக்கியமான பொருள்களை மட்டும்தான் வாங்குவேன். பொதுவா நான் பெரிய பெரிய கடைகளுக்கு போகமாட்டேன், சின்ன கடைகளுக்குத்தான் போவேன்; அப்பதான் பேரம் பேசி வாங்க முடியும். ஏன்னா, அதே பொருள் குறைஞ்ச விலையில கிடைக்கும்போது, பெரிய கடைகளுக்குப் போய் ஏன் அதிக விலை கொடுத்து வாங்கனும்? அதேமாதிரி, ஒரு பொருள பார்த்தவுடனே யோசிக்காம வாங்கிட மாட்டேன்.” பணத்தை சேமித்து வைப்பதன் அருமையையும் ஜானட் புரிந்து வைத்திருக்கிறார். “செலவெல்லாம் போக மிச்சமாகிற பணத்தை, அது கொஞ்சமா இருந்தாகூட, அப்படியே சேமிச்சு வச்சிடுவேன். திடீர்னு ஏதாவது செலவு வந்தா அந்த பணம் ரொம்ப உதவியா இருக்குமில்ல.”
‘கிரெடிட் கார்டு’ பயன்படுத்துவதைப் பற்றி முன்பு பேசிய எரிக் சொல்கிறார்: “அவசரத் தேவைக்கு மட்டுந்தான் ‘கிரெடிட் கார்டை’ பயன்படுத்துவேன்.” டியஸ்டாடோவும் இப்படித்தான்: “நான் எப்போதும் என் ‘கிரெடிட் கார்டை’ ஆஃபீஸிலேயே வச்சிட்டு போய்டுவேன். அப்பத்தான் அநாவசியமா அதை பயன்படுத்தாம இருக்க முடியும்.”
உங்களாலும் முடியும்
நமது கடவுளாகிய யெகோவாவோடு நெருங்கி வருவதற்கு பைபிள் முக்கியமாக உதவினாலும், நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் நிறைய ஆலோசனைகளும் அதில் இருக்கின்றன. (நீதிமொழிகள் 2:6; மத்தேயு 6:25-34) இந்தக் கட்டுரையில் பார்த்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்து... மற்றவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி... வாழ்ந்தால் உங்களாலும் வரவுக்கேற்ப செலவு செய்ய முடியும். அப்படிச் செய்தால் லட்சக்கணக்கான மக்கள் அனுபவிக்கிற கவலைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் விடுபடலாம். (w11-E 06/01)