அறிமுகம்! எளிமையான ஆங்கிலப் பதிப்பு
காவற்கோபுரத்தின் இந்த இதழ் முதற்கொண்டு ஒவ்வொரு இதழுக்கும் அதற்குரிய எளிமையாக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்படும் என்பதைத் தெரிவிப்பதில் சந்தோஷப்படுகிறோம்; அது தொடர்ந்து வெளிவருமா என்பது ஒரு வருடத்திற்குப் பிறகு தீர்மானிக்கப்படும். இந்தப் புதிய பதிப்பில் படிப்புக் கட்டுரைகளும், மீதமுள்ள பக்கங்களைப் பொறுத்து இதர கட்டுரைகளும் இடம்பெறும். யெகோவாவின் சாட்சிகளில் அநேகருடைய ஆன்மீகத் தேவையை இந்தப் பதிப்பு பூர்த்தி செய்யும் என நம்புகிறோம். ஏன்?
பிஜி, கானா, கென்யா, லைபீரியா, நைஜீரியா, பாப்புவா-நியூ கினி, சாலமன் தீவுகள் போன்ற நாடுகளில் நம் சகோதர சகோதரிகள் பொதுவாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இவர்கள் உள்ளூர் மொழிகளைப் பேசினாலும், சபைக் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். என்றாலும், இவர்கள் பேசுகிற ஆங்கிலம் நம் பிரசுரங்களில் வெளிவரும் ஆங்கிலத்தைவிட எளிமையானது. அதோடு, வேறு நாடுகளுக்குக் குடிமாறிச் செல்லும் யெகோவாவின் சாட்சிகளில் அநேகருக்கு ஆங்கிலம் சரியாகத் தெரிவதில்லை; ஆனாலும், அங்கு அதைத்தான் அவர்கள் பேச வேண்டியிருக்கிறது. அவர்களுடைய தாய்மொழியில் அங்கு கூட்டங்கள் நடத்தப்படாததால் ஆங்கிலத்தில் நடைபெறும் கூட்டங்களில்தான் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் நாம் கலந்தாலோசிக்கிற காவற்கோபுர படிப்புக் கட்டுரைகள், போஷாக்கான ஆன்மீக உணவை ஏற்ற காலத்தில் பெறுவதற்குரிய முக்கிய வழியாகும். ஆகவே, இந்தக் கட்டுரைகளிலிருந்து முழு பயனைப் பெற அனைவருக்கும் உதவுவதற்காக, எளிமையாக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பில் எளிமையான வார்த்தைகள் எளிய மொழிநடையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அட்டைப்படம் வித்தியாசமாக இருக்கும். இதில் படிப்புக் கட்டுரைகளின் உபதலைப்புகள், பாராக்கள், மறுபார்வைக் கேள்விகள், படங்கள் என அனைத்தும் சாதாரண பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கும். அதனால், காவற்கோபுர படிப்பின்போது அனைவரும் இந்த இரண்டு பதிப்புகளில் எதை வேண்டுமானாலும் உபயோகித்துப் பங்குபெறலாம். இந்த இரண்டு பதிப்புகளுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள, கீழே பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பாருங்கள்; இந்த இதழுடைய முதல் படிப்புக் கட்டுரையின் 2-ஆம் பாராவிலிருந்து இது எடுக்கப்பட்டிருக்கிறது.
“உம்முடைய கட்டளைகளை நான் கற்றுக்கொள்ளும்படி எனக்குப் புரிந்துகொள்ளுதலைத் தாரும்” என்று யெகோவாவிடம் அநேகர் கேட்டிருக்கிறார்கள்; இந்தப் புதிய பதிப்பு, இவர்களுடைய ஜெபங்களுக்குக் கிடைத்த பதிலாக இருக்கும் என்று நம்புகிறோம். (சங். 119:73, NW) ஆங்கிலம் அதிகம் தெரியாதவர்களும், ஆங்கிலம் பேசுகிற சிறு பிள்ளைகளும் இனி ஒவ்வொரு வாரமும் காவற்கோபுர படிப்புக்கு நன்கு தயாரிக்க முடியும் என்பது உறுதி. யெகோவா, ‘சகோதரர்கள் எல்லாரிடமும் உள்ள அன்பினால்’ ஆன்மீக உணவை அள்ளி வழங்க “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பாரைப் பயன்படுத்துகிறார்; இதற்காக யெகோவாவுக்குக் கோடானு கோடி நன்றி!—1 பே. 2:17; மத். 24:45.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு