யெகோவாவை உங்கள் பங்காகக் கொண்டிருக்கிறீர்களா?
“முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.”—மத். 6:33.
1, 2. (அ) கலாத்தியர் 6:16-ல் குறிப்பிடப்படும் ‘கடவுளுடைய இஸ்ரவேலர்’ யாரைக் குறிக்கிறார்கள்? (ஆ) மத்தேயு 19:28-ல் குறிப்பிடப்படும் ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்’ யாரைக் குறிக்கிறார்கள்?
பைபிளில் இஸ்ரவேல் என்ற வார்த்தை கண்ணில் பட்டவுடன் உங்களுடைய நினைவுக்கு வருவது யார்? இஸ்ரவேல் என்று மறுபெயரிடப்பட்ட ஈசாக்கின் மகன் யாக்கோபா? அல்லது, அவருடைய சந்ததியான பூர்வ இஸ்ரவேல் தேசத்தாரா? அடையாளப்பூர்வ இஸ்ரவேலரைப் பற்றியென்ன? இஸ்ரவேல் என்பது அடையாள அர்த்தத்தில் குறிப்பிடப்படும்போது, அது பொதுவாக ‘கடவுளுடைய இஸ்ரவேலரை’ குறிக்கிறது; அதாவது, பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யப்போகிற 1,44,000 பேரைக் குறிக்கிறது. (கலா. 6:16; வெளி. 7:4; 21:12) ஆனால், மத்தேயு 19:28-ல் சொல்லப்பட்டுள்ள இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாரைப் பற்றிய விசேஷக் குறிப்பைச் சிந்தித்துப் பாருங்கள்.
2 “அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே, மனிதகுமாரன் தமது மகிமையான சிம்மாசனத்தில் அமரும்போது, என்னைப் பின்பற்றுகிற நீங்களும் பன்னிரண்டு சிம்மாசனங்களில் அமர்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்” என இயேசு கூறினார். இந்த வசனத்தில், ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்’ பூஞ்சோலை பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறப்போகிறவர்களைக் குறிக்கிறார்கள். இவர்களுக்கு 1,44,000 பேர் நீதிபதிகளாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள்.
3, 4. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்ன சிறந்த முன்மாதிரியை வைத்திருக்கிறார்கள்?
3 பூர்வகால குருமாரையும் லேவியரையும் போல, இன்று பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களுடைய பரிசுத்த சேவையைப் பாக்கியமாகக் கருதுகிறார்கள். (எண். 18:20) இந்தப் பூமியில் தங்களுக்கு ஏதாவது ஓர் இடம் சுதந்தரமாகக் கொடுக்கப்படும் எனப் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, இயேசு கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பதையே எதிர்நோக்கியிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அந்த ஸ்தானத்திலேயே யெகோவாவுக்குச் சேவை செய்வார்கள்; வெளிப்படுத்துதல் 4:10, 11 இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.—எசே. 44:28.
4 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பூமியில் இருக்கும்போது, யெகோவாவே தங்களுடைய பங்கு என்பதைக் காட்டும் விதத்தில் வாழ்கிறார்கள். கடவுளுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தை அவர்கள் அதிமுக்கியமாகக் கருதுகிறார்கள். கிறிஸ்துவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைத்து அவரைத் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்; இவ்வாறு, தாங்கள் “அழைக்கப்பட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருப்பதால், கடைசிவரை அதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதற்கு” முழுமுயற்சி எடுக்கிறார்கள். (2 பே. 1:10) அவர்கள் ஒவ்வொருவருடைய சூழ்நிலைமைகளும் திறமைகளும் வேறுபடுகின்றன. இருந்தாலும், அவர்கள் எந்தவொரு வரம்பையும் சாக்காகச் சொல்லிக்கொண்டு, கடவுளுடைய சேவையைப் பேருக்குச் செய்வதில்லை. மாறாக, அதற்கே முதலிடம் தந்து அதில் முழுமூச்சாய் ஈடுபடுகிறார்கள். பூஞ்சோலை பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளோருக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.
5. கிறிஸ்தவர்கள் அனைவரும் எப்படி யெகோவாவைத் தங்களுடைய பங்காகக் கொண்டிருக்கலாம், அது ஏன் சவாலாக இருக்கலாம்?
5 நாம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தாலும்சரி பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தாலும்சரி, ‘நம்மையே அர்ப்பணம் செய்து, நம் கழுமரத்தைச் சுமந்துகொண்டு தொடர்ந்து கிறிஸ்துவின் பின்னால் வரவேண்டும்.’ (மத். 16:24) பூஞ்சோலை பூமியில் வாழ்வதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் லட்சோபலட்ச மக்கள் இவ்விதத்தில்தான் கிறிஸ்துவைப் பின்பற்றி, கடவுளை வழிபடுகிறார்கள். அவர்கள் கடவுளுடைய சேவையில் அதிகம் செய்ய முடியும்போது கொஞ்சத்தை மட்டும் செய்துவிட்டுத் திருப்திப்பட்டுக் கொள்வதில்லை. அநேகர் தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டு பயனியராகச் சேவை செய்ய உந்துவிக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலரோ ஒவ்வொரு வருடமும் சில மாதங்களில் பயனியர் சேவை செய்கிறார்கள். மற்றவர்கள், பயனியர் சேவை செய்ய முடியாவிட்டாலும் ஊழியத்தில் அதிகளவு ஈடுபட தீவிர முயற்சி எடுக்கிறார்கள். இயேசுவின் தலையில் வாசனைத் தைலத்தை ஊற்றிய பக்தியுள்ள மரியாளைப் போல இவர்கள் இருக்கிறார்கள். “இவள் எனக்கு நல்ல காரியம்தான் செய்தாள். . . . இவள் தனக்கு முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறாள்” என்று இயேசு கூறினார். (மாற். 14:6-8) சாத்தானால் ஆளப்படுகிற ஓர் உலகில் நாம் வாழ்வதால், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது சவாலாக இருக்கலாம். என்றாலும், நாம் யெகோவாமீது நம்பிக்கை வைத்து தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். இதை எப்படிச் செய்யலாம் என்பதற்கு நான்கு அம்சங்களை இப்போது சிந்திக்கலாம்.
முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள்
6. (அ) இவ்வுலக வாழ்க்கையே தங்களுடைய பங்கு என்பதைப் பொதுவாக மக்கள் எப்படிக் காட்டியிருக்கிறார்கள்? (ஆ) தாவீதைப் பின்பற்றுவது ஏன் நல்லது?
6 முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கற்பித்தார். ‘இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலக மக்கள்’ அநேகர் தங்களுடைய விருப்பங்களையே முதலாவது நாடுகிறார்கள். (சங்கீதம் 17:1, 13-15-ஐ வாசியுங்கள்.) சுகபோகமாய் வாழ்வதற்கு... பிள்ளை குட்டிகளைப் பெற்று வளர்ப்பதற்கு... ஆஸ்தியை விட்டுச்செல்வதற்கு... தங்கள் வாழ்வை அர்ப்பணித்துவிடுகிறார்கள்; ஆனால், கடவுளை ஒரு மூலையில் வைத்துவிடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் பங்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான். மறுபட்சத்தில், தாவீது யெகோவாவிடம் “நற்கீர்த்தி” பெறுவதையே, அதாவது நல்ல பெயர் எடுப்பதையே, குறிக்கோளாய்க் கொண்டிருந்தார்; இதைத்தான் பிற்காலத்தில் அவரது மகன் எல்லாருக்கும் சிபாரிசு செய்தார். (பிர. 7:1) ஆசாப்பைப் போல தாவீதும், யெகோவாவை நண்பராகக் கொண்டிருப்பதையே மிக முக்கியமாய்க் கருதினார். கடவுளுடன் நடப்பதில் அவர் அகமகிழ்ந்தார். நம்முடைய நாளில், கிறிஸ்தவர்கள் பலர் வேலையைவிட ஆன்மீகக் காரியங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
7. முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடியதால் ஒரு சகோதரர் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றார்?
7 மத்திப ஆப்பிரிக்கக் குடியரசைச் சேர்ந்த ஷான்-கிளோடு என்பவரைச் சிந்தித்துப் பாருங்கள். இவர் மூன்று பிள்ளைகளை உடைய ஒரு மூப்பர். அந்த நாட்டில் வேலை கிடைப்பதென்றால் குதிரைக்கொம்பு; ஆட்கள் தங்களுடைய வேலையைத் தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்வார்கள். ஒருநாள் மேனேஜர் ஷான்-கிளோடுவை அழைத்து, ‘நைட் டியூட்டி’ பார்க்கச் சொன்னார்; அதாவது, வாரத்தில் ஏழு நாட்களும் மாலை ஆறரை மணியிலிருந்து ராத்திரி முழுக்க வேலை பார்க்கச் சொன்னார். தன் குடும்பத்தாரின் பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதோடு அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டுமென ஷான்-கிளோடு விளக்கினார். அதோடு, சபைப் பொறுப்புகளையும் தான் பார்த்துக்கொள்ள வேண்டுமெனச் சொன்னார். அதற்கு அந்த மேனேஜருடைய பதில்? “உனக்கு வேலை கிடைத்திருப்பதே ஒரு அதிர்ஷ்டம்; அதனால், உன் மனைவி மக்கள்... மற்ற பிரச்சினைகள்... எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிடு. உன் வேலைதான் உனக்கு எல்லாமே, தொழில்தான் தெய்வம். இப்போது, மதமா வேலையா என்பதை நீயே முடிவு பண்ணிக்கொள்” என்றார். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? வேலை பறிபோனால், கடவுள் தன்னைக் கவனித்துக்கொள்வார் என்பதை ஷான்-கிளோடு அறிந்திருந்தார். ஆகவே, வேலை போனாலும் கடவுளுடைய சேவையில் தான் செய்வதற்கு இன்னும் ஏராளம் இருக்கும் என்றும், தன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை கவனித்துக்கொள்ள யெகோவா உதவுவார் என்றும் நம்பினார். அதனால், அவர் அடுத்த சபைக் கூட்டத்திற்குச் சென்றார். அதற்குப்பின், வேலை பறிபோய்விட்டதா இல்லையா என்ற சந்தேகத்துடன் வேலைக்குக் கிளம்பத் தயாரானார். அப்போது பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அவரை டிஸ்மிஸ் செய்ய நினைத்த மேனேஜரே டிஸ்மிஸ் ஆகிவிட்டார்!
8, 9. யெகோவாவை நம் பங்காகக் கொண்டிருப்பதில் குருமாரையும் லேவியரையும் நாம் எப்படிப் பின்பற்றலாம்?
8 வேலை நிலைக்குமா நிலைக்காதா என்ற சூழ்நிலையில் இருக்கும் சிலர், ‘நான் எப்படி என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்?’ என யோசிக்கலாம். (1 தீ. 5:8) இதுபோன்ற சவாலை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களோ இல்லையோ, கடவுளை உங்களுடைய பங்காகக் கொண்டிருந்தால்... அவருக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெரும் பொக்கிஷமாகப் போற்றினால்... ஒருபோதும் கைவிடப்பட மாட்டீர்கள்; இதை உங்களுடைய அனுபவத்திலிருந்தே நீங்கள் அறிந்திருக்கலாம். முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடிக்கொண்டே இருக்கும்படி இயேசு சொன்னபோது, “இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்ற உறுதியளித்தார்; அதாவது, உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கடவுள் கொடுப்பார் என்ற உறுதியளித்தார்.—மத். 6:33.
9 நிலத்தில் ஒரு பங்கைப் பெறாத லேவியரைச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் தூய வழிபாட்டை முன்னேற்றுவிக்கவே தங்களை அர்ப்பணித்திருந்ததால், பொருளாதாரத் தேவைகளுக்கு யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. “நானே உன் பங்கு” என்று அவர் சொல்லியிருந்தார். (எண். 18:20) குருமாரையும் லேவியரையும் போல் நாம் ஓர் ஆலயத்தில் சேவை செய்யவில்லையென்றாலும், அவர்களுடைய மனப்பான்மையைப் பின்பற்றலாம்; யெகோவா நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம். இந்தக் கடைசி காலத்திற்கு முடிவு நெருங்கி வரவர, நம் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்பதில் நம்முடைய நம்பிக்கை மேன்மேலும் வளர வேண்டும்.—வெளி. 13:17.
முதலாவது கடவுளுடைய நீதிநெறிகளை நாடுங்கள்
10, 11. வேலை விஷயத்தில், சிலர் எப்படி யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? உதாரணம் தருக.
10 ‘முதலாவது கடவுளுடைய . . . நீதிநெறிகளை நாடிக்கொண்டே இருங்கள்’ என்றும் இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்தினார். (மத். 6:33) எது சரி எது தவறு என்ற விஷயத்தில், மனித நெறிமுறைகளைவிட யெகோவாவின் நெறிமுறைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. (ஏசாயா 55:8, 9-ஐ வாசியுங்கள்.) முன்பு அநேகர், புகையிலைச் செடியை வளர்ப்பதில், புகையிலைப் பொருள்களை விற்பதில், போர்ப் பயிற்சி கொடுப்பதில், போர்க் கருவிகளைத் தயாரிப்பதில் அல்லது விற்பதில் ஈடுபட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் சத்தியத்தை அறிந்துகொண்ட பிறகு, அநேகர் தங்களுடைய வேலையை மாற்றிக்கொண்டு, ஞானஸ்நானம் எடுக்கிற தகுதியைப் பெற்றார்கள்.—ஏசா. 2:4; 2 கொ. 7:1; கலா. 5:14.
11 ஆன்ட்ரூ என்பவருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவரும் அவரது மனைவியும் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டபோது அவருக்குச் சேவை செய்யத் தீர்மானித்தார்கள். ஆன்ட்ரூவுக்குத் தான் செய்துவந்த வேலை ரொம்பப் பிடித்திருந்தது, ஆனாலும் அதை விட்டுவிட்டார். ஏன்? ஏனென்றால், அவர் வேலை செய்துவந்த அமைப்பு போர் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டது; அவரோ கடவுளுடைய நீதிநெறிகளுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கத் தீர்மானித்திருந்தார். வேலையை விட்ட சமயத்தில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள், எந்த வருமானமும் இருக்கவில்லை, ஒருசில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத்தான் கையில் காசும் இருந்தது. மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், லேவியரைப் போல அவருக்கு எந்தவித ‘சுதந்தரமும்’ இல்லாதது மாதிரி தோன்றியிருக்கலாம். அவர் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வேலை தேடினார். யெகோவாவின் கரம் குறுகியதில்லை என்பதை அவரும் அவரது குடும்பத்தாரும் இப்போது ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். (ஏசா. 59:1) தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டதால் ஆன்ட்ரூவும் அவரது மனைவியும் முழுநேர சேவை செய்யும் பாக்கியத்தையும் பெற்றார்கள். “பணக் கஷ்டம், அடிக்கடி வீடு மாற வேண்டிய பிரச்சினை, உடல் நலப் பிரச்சினை, முதுமை போன்ற எல்லாமே எங்களுக்குக் கவலையை உண்டாக்கத்தான் செய்தன. ஆனால், யெகோவா எப்போதும் எங்களோடு இருந்திருக்கிறார். . . . யெகோவாவுக்குச் சேவை செய்வதே திருப்தியளிக்கும் ஒரு வேலை, கௌரவமான ஒரு வேலை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று அவர் சொல்கிறார்.a—பிர. 12:13.
12. கடவுளுடைய நீதிநெறிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்றால் என்ன குணம் தேவை? உள்ளூர் அனுபவங்களைக் கூறுங்கள்.
12 “உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட, இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கே போ’ என்று சொன்னால், அது பெயர்ந்துபோகும்; உங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது” என்று இயேசு தம் சீடர்களிடம் கூறினார். (மத். 17:20) கஷ்டங்கள் வந்தாலும் கடவுளுடைய நீதிநெறிகளுக்கு முதலிடம் கொடுப்பீர்களா? இதைக் குறித்து உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால், சபையிலுள்ள யாருடனாவது பேசுங்கள். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்கக் கேட்க உங்களுடைய விசுவாசம் பலப்படும்.
யெகோவாவின் ஆன்மீக ஏற்பாடுகளுக்கு நன்றியுடன் இருங்கள்
13. யெகோவாவின் ஊழியத்தில் நாம் தீவிரமாக ஈடுபடும்போது எதில் நம்பிக்கையுடன் இருக்கலாம்?
13 யெகோவாவைச் சேவிக்கும் பாக்கியத்தை நீங்கள் உயர்வாய் மதித்தால், லேவியரைப் பராமரித்ததுபோல் அவர் உங்களையும் பராமரிப்பார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம். தாவீதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒரு குகையில் இருந்தபோதிலும், கடவுள் தனக்கு உதவி செய்வார் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தார். யாராலுமே உதவ முடியாதெனத் தோன்றும் சமயங்களில்கூட நாமும் யெகோவாவை நம்பலாம். ஆசாப் ‘தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோது’ தன் மனசஞ்சலத்திற்கான காரணத்தைப் புரிந்துகொண்டார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். (சங். 73:16, 17) அது போலவே நாமும், ஆன்மீகப் போஷாக்குக்கு ஊற்றாய் விளங்கும் கடவுளின் உதவியை நாட வேண்டும். அப்போதுதான், நம்முடைய சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும்சரி, கடவுளைச் சேவிக்கும் பாக்கியத்திற்கு நன்றி காட்டுவோம். இதன் மூலம் யெகோவாவே நம் பங்கு என்று காண்பிப்போம்.
14, 15. பைபிள் போதனைகளின் விளக்கங்கள் மாற்றப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
14 ஆன்மீக அறிவொளியைத் தரும் யெகோவா அவருடைய வார்த்தையிலுள்ள “ஆழமான காரியங்களை” வெளிப்படுத்தும்போது நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா? (1 கொ. 2:10-13) இதற்கு அப்போஸ்தலன் பேதுரு மிகச் சிறந்த முன்மாதிரியாய் விளங்குகிறார். எப்படி? ஒரு சந்தர்ப்பத்தில், “மனிதகுமாரனின் சதையைச் சாப்பிட்டு அவரது இரத்தத்தைக் குடித்தால் தவிர நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்” என்று யூதர்களிடம் இயேசு சொன்னார். இதைச் சீடர்களில் அநேகர் அப்படியே நேர்பொருளில் எடுத்துக்கொண்டார்கள். அதனால், “இவருடைய பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது; யாரால் இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?” என்று சொல்லி, “தாங்கள் விட்டுவந்த காரியங்களைக் கவனிப்பதற்கே திரும்பிப் போனார்கள்.” ஆனால் பேதுரு, “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன” என்று சொன்னார்.—யோவா. 6:53, 60, 66, 68.
15 இயேசு சொன்னதை பேதுரு முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனாலும் ஆன்மீக அறிவொளிக்கு அவர் கடவுள்மீது சார்ந்திருந்தார். பைபிள் போதனைகளின் விளக்கங்கள் மாற்றப்படும்போது அதற்குரிய காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள முயலுகிறீர்களா? (நீதி. 4:18) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பெரோயா பட்டணத்தார் கடவுளுடைய வார்த்தைகளை “மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, . . . தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.” (அப். 17:11) அவர்களைப் பின்பற்றி நடந்தால், யெகோவாவுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தை நீங்கள் இன்னும் உயர்வாக மதிப்பீர்கள்; யெகோவாவை உங்களுடைய பங்காகக் கொண்டிருப்பதற்காக நன்றியுடனும் இருப்பீர்கள்.
எஜமானரைப் பின்பற்றுகிறவரையே திருமணம் செய்யுங்கள்
16. ஒன்று கொரிந்தியர் 7:39-ன்படி, மணமாகாத கிறிஸ்தவர்கள் எப்படிக் கடவுளைத் தங்கள் பங்காகக் கொண்டிருக்கலாம்?
16 கிறிஸ்தவர்கள் மனதில் வைக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உண்டு; அவர்கள், ‘எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். (1 கொ. 7:39) இந்தக் கட்டளையை மீறுவதைவிட பலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைக் கடவுள் நன்கு கவனித்துக்கொள்கிறார். தாவீது தனிமையில் வாடிய சமயத்தில்... எந்த உதவியும் இல்லாததுபோல் தோன்றிய சமயத்தில்... என்ன செய்தார்? ‘என் மனக்குறைகளை கடவுள் முன்னிலையில் கொட்டுகின்றேன். அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்; என் மனம் சோர்வுற்றிருந்தது’ என்று கூறினார். (சங். 142:1-3, பொது மொழிபெயர்ப்பு) இதுபோன்ற உணர்வுகள் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கும் ஏற்பட்டிருக்கலாம்; இவர் திருமணம் செய்துகொள்ளாமலே பல பத்தாண்டுகள் கடவுளுக்கு உண்மையாய்ச் சேவை செய்தார். அவருடைய உதாரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், எரேமியா மூலம் கடவுளின் செய்தி என்ற ஆங்கில புத்தகத்தில் 8-ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள்.
17. மணமாகாத சகோதரி ஒருவர் எப்போதாவது ஏற்படும் தனிமையுணர்வை எப்படிச் சமாளிக்கிறார்?
17 அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சகோதரி இவ்வாறு கூறுகிறார்: “கல்யாணம் செய்யாமலே இருந்துவிட வேண்டுமென நான் ஒருநாளும் தீர்மானிக்கவில்லை. பொருத்தமான துணை கிடைக்கும்போது கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறேன். யாராவது ஒருவருக்கு வாழ்க்கைப்படச் சொல்லி, சத்தியத்தில் இல்லாத என் அம்மா என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருந்தார். ‘யாரையாவது கட்டிக்கொண்டு காலம்பூராவும் அவதிப்பட்டால் பரவாயில்லையா?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். காலப்போக்கில், நான் நல்ல வேலையில் இருப்பதையும் சொந்தக் காலில் நிற்பதையும் சந்தோஷமாக வாழ்வதையும் அம்மா பார்த்தார்கள். அதனால் என்னைத் தொல்லைப்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள்.” இந்தச் சகோதரி சில சமயங்களில் தனிமையில் வாடுகிறார். “அப்போது, யெகோவாமேல் நம்பிக்கையாய் இருக்க முயற்சி செய்கிறேன். அவர் ஒருபோதும் என்னைக் கைவிடுவதில்லை” என்று அவர் சொல்கிறார். யெகோவாவின்மீது நம்பிக்கை வைக்க எது அந்தச் சகோதரிக்கு உதவியது? “கடவுள் நிஜமானவர்... எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்... என்பதைப் புரிந்துகொள்ள ஜெபம் எனக்கு உதவுகிறது. எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுள் என் ஜெபத்தைக் கேட்கிறார் என்ற உணர்வே எனக்குச் சந்தோஷத்தையும் சுயமரியாதையையும் தருகிறது” என்று அவர் கூறுகிறார். “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்பதில் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதனால், “எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நான் முயற்சி செய்கிறேன். ‘இவர்களுக்கு நான் எப்படி உதவி செய்யலாம்?’ என்று நினைக்கும்போது, மனதுக்குச் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார். (அப். 20:35) ஆம், அந்தச் சகோதரி யெகோவாவைத் தன் பங்காகக் கொண்டிருக்கிறார், அவருக்குச் சேவை செய்யும் பாக்கியத்தையும் அனுபவித்து மகிழ்கிறார்.
18. எந்த அர்த்தத்தில் நீங்கள் யெகோவாவின் பங்காக இருக்க முடியும்?
18 நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும்சரி, கடவுளை உங்கள் பங்காகக் கொண்டிருக்க முடியும். அப்படிச் செய்யும்போது, மகிழ்ச்சியுள்ள அவரது மக்களில் ஒருவராக இருப்பீர்கள். (2 கொ. 6:16, 17) அதோடு, கடந்தகால ஊழியர்களைப் போல நீங்களும் யெகோவாவின் பங்காக இருப்பீர்கள். (உபாகமம் 32:9, 10-ஐ வாசியுங்கள்.) புறதேசத்தார் மத்தியில் இஸ்ரவேலரைக் கடவுள் தமது பங்காகத் தேர்ந்தெடுத்தது போல், உங்களையும் தமது பங்காகத் தேர்ந்தெடுத்து அன்புடன் கவனித்துக்கொள்வார்.—சங். 17:8, 9.
[அடிக்குறிப்பு]
a நவம்பர் 2009 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! இதழில் 12-14 பக்கங்களைக் காண்க.
உங்கள் பதில்?
பின்வரும் அம்சங்களில் யெகோவாவை எப்படி உங்கள் பங்காகக் கொண்டிருக்க முடியும்:
• முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவரது நீதிநெறிகளையும் நாடுவதன் மூலம்?
• ஆன்மீக உணவுக்கு நன்றி காட்டுவதன் மூலம்?
• எஜமானரைப் பின்பற்றுகிறவரையே திருமணம் செய்வதன் மூலம்?
[பக்கம் 13-ன் சிறுகுறிப்பு]
யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுக்கும்போது அவர் நம் பங்காக ஆகிறார்
[பக்கம் 15-ன் படம்]
எரேமியாவின் உதாரணம் ஊக்கமூட்டுகிறது