ஒன்றுசேர்ந்து மகிழ்வோமாக!
சந்தோஷம். இன்று பலருக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. உற்சாகமூட்டும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதென்றால் அவர்களுக்கு இமாலயக் காரியமாகத் தோன்றுகிறது. நவீன கால வாழ்க்கை, முக்கியமாகப் பெருநகர வாழ்க்கை, மக்களை நத்தை போல் தனிமை எனும் ஓட்டுக்குள் முடங்கிவிடச் செய்கிறது.
உளவியல் பேராசிரியர் ஆல்பெர்ட்டோ ஆலிவெரியோ இவ்வாறு கூறுகிறார்: “தனிமை இன்றைக்குச் சர்வசாதாரணமாகக் காணப்படும் ஒரு பிரச்சினை. மாநகர வாழ்க்கை தனிமைக்குத் தீனிபோடுகிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அங்கு வசிப்பவர்கள் சக பணியாளரை... அண்டை அயலில் வசிப்பவரை... பக்கத்துக் கடைக்காரரை... யாரோ எவரோ என்பது போல்தான் பெரும்பாலும் நடத்துகிறார்கள்.” தனிமை அடிக்கடி மன உளைச்சலைத்தான் உண்டாக்குகிறது.
ஆனால், கிறிஸ்தவர்களுடைய நிலைமையும் மனப்பான்மையும் வேறு. “எப்போதும் சந்தோஷமாக இருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தெ. 5:16) நாம் ஆனந்தமாய் இருப்பதற்கும் சேர்ந்து மகிழ்வதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. உன்னதரான யெகோவாவை நாம் வழிபடுகிறோம்; பைபிளில் உள்ள சத்தியத்தின் செய்தியைப் புரிந்துகொள்கிறோம்; சாவில்லாமல் வாழ்வோம் என்ற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம்; இதே ஆசீர்வாதங்களை மற்றவர்கள் பெறவும் உதவுகிறோம்.—சங். 106:4, 5; எரே. 15:16; ரோ. 12:12.
சந்தோஷமாக இருப்பதும் மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதும் உண்மைக் கிறிஸ்தவர்களுடைய பண்புகள். அதனால்தான், பிலிப்பியருக்கு பவுல் இவ்வாறு எழுதியதில் ஆச்சரியமேதுமில்லை: “நான் மனமகிழ்ந்து உங்கள் அனைவரோடும் சந்தோஷப்படுவேன். அதேபோல், நீங்களும் மனமகிழ்ந்து என்னோடு சந்தோஷப்படுங்கள்.” (பிலி. 2:17, 18) மனமகிழ்ச்சியுடன் இருப்பதையும் ஒருவருக்கொருவர் சந்தோஷமாக இருப்பதையும் பற்றி இந்தச் சில வரிகளிலேயே பவுல் இரண்டு முறை சொல்கிறார்.
தனிமைப்படுத்திக்கொள்ளும் மனோபாவம் தலைதூக்காமல் இருக்கும்படி கிறிஸ்தவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எவ்வித ஒட்டும் உறவும் இல்லாதிருக்கும் எவரும் சக விசுவாசிகளுடன் மனமகிழ்ச்சியாய் இருக்க முடியாது. அப்படியென்றால், பவுலின் புத்திமதியைப் பின்பற்றி, எவ்வாறு நம் சகோதரர்களுடன் சேர்ந்து “எஜமானருடைய சேவையில் தொடர்ந்து மனமகிழ்ச்சியோடு” இருக்கலாம்?—பிலி. 3:1.
சக விசுவாசிகளுடன் சேர்ந்து மனமகிழுங்கள்
பிலிப்பியருக்கு பவுல் கடிதம் எழுதிய சமயத்தில், பிரசங்க வேலையை முன்னிட்டு அவர் ரோமாபுரியில் சிறைக்கைதியாய் இருந்திருக்கலாம். (பிலி. 1:7; 4:22) என்றாலும், ஊழியத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வக் கனலைச் சிறைக்காவல் தணித்துவிடவில்லை. மாறாக, தன்னால் முடிந்தளவு யெகோவாவுக்கு முழுமையாகச் சேவை செய்வதிலும் தன்னை ‘பானபலியாக ஊற்றுவதிலுமே’ அவர் மகிழ்ச்சியைக் கண்டார். (பிலி. 2:17) மகிழ்ச்சி என்பது ஒருவருடைய சூழ்நிலைகளைப் பொறுத்ததல்ல என்பதை பவுலின் மனப்பான்மை காட்டுகிறது. சிறைக்குள் தள்ளப்பட்டிருந்தாலும், “இனிமேலும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருப்பேன்” என்றே அவர் கூறினார்.—பிலி. 1:18.
பிலிப்பியில் பவுல் சபையை ஸ்தாபித்திருந்தார், அங்கிருந்த சகோதரர்கள்மீது தனி பாசம் வைத்திருந்தார். யெகோவாவின் சேவையில் தான் அனுபவித்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொண்டால் அவர்களும் உற்சாகத்தைப் பெறுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவேதான், அவர் இவ்வாறு எழுதினார்: “சகோதரர்களே, எனக்கு நேரிட்டதெல்லாம் நற்செய்தி பரவுவதற்கு உதவியாக இருந்ததே தவிர, தடங்கலாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நான் கிறிஸ்துவுக்காகவே விலங்கிடப்பட்டிருக்கிறேன் என்பது ரோம அரசனின் மெய்க்காவலர்கள் அனைவருக்கும் மற்ற எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.” (பிலி. 1:12, 13) ஊக்கமளிக்கும் இந்த அனுபவத்தைச் சகோதரர்களோடு பகிர்ந்துகொண்டதே பவுல் அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாகவும் மனமகிழ்ச்சியாகவும் இருந்ததற்கு ஒரு வழி. இதனால், பவுலுடன் சேர்ந்து பிலிப்பியரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அப்படியென்றால், பவுலுடைய நிலைமையைக் கேள்விப்பட்டு உற்சாகத்தை இழந்துவிடுவதற்குப் பதிலாக, அவரது முன்மாதிரியைப் பின்பற்ற அவர்கள் தூண்டப்பட்டிருப்பார்கள். (பிலி. 1:14; 3:17) அதோடு, பவுலுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்ய... தங்களால் இயன்ற உதவியையும் ஆதரவையும் அளிக்க... தூண்டப்பட்டிருப்பார்கள்.—பிலி. 1:19; 4:14-16.
பவுலைப் போல நாமும் சந்தோஷமிக்க மனநிலையைக் காட்டுகிறோமா? நம் வாழ்விலும் சரி ஊழியத்திலும் சரி, நல்ல விஷயங்களைப் பார்க்க முயலுகிறோமா? நம் சகோதரர்களுடன் தோழமை கொள்கையில், ஊழிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சந்தோஷப்படுவது நல்லது. இதற்காகப் புல்லரிக்கும் அனுபவங்கள் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. நாம் ஒரு நல்ல அறிமுகத்தைப் பயன்படுத்தியதால் அல்லது நன்கு நியாயங்காட்டிப் பேசியதால் நற்செய்தியிடம் ஒருவரது ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம். ஏதாவது பைபிள் வசனத்தைக் குறித்து வீட்டுக்காரரிடம் நன்கு உரையாடியிருக்கலாம். அல்லது, பிராந்தியத்தில் நம்மை யெகோவாவின் சாட்சிகள் என்று மற்றவர்கள் அடையாளம் கண்டிருக்கலாம், அதுவே ஒரு நல்ல சாட்சியாக அமைந்திருக்கலாம். இப்படிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுகூட ஒருவருக்கொருவர் மனமகிழ்ச்சியுடன் இருப்பதற்கு ஒரு வழியாகும்.
பிரசங்க வேலையைச் செய்வதற்காக யெகோவாவின் மக்களில் அநேகர் தியாகங்கள் செய்திருக்கிறார்கள், செய்தும் வருகிறார்கள். பயனியர்கள், பயணக் கண்காணிகள், பெத்தேல் ஊழியர்கள், மிஷனரிகள், சர்வதேச ஊழியர்கள் ஆகியோர் முழுநேர சேவைக்காகத் தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள், அதனால் மகிழ்ச்சியும் காண்கிறார்கள். நாமும் மனமகிழ்ந்து அவர்களோடு சேர்ந்து சந்தோஷப்படுகிறோமா? அப்படியானால், ‘கடவுளுடைய அரசாங்கத்திற்காக உழைக்கிற இந்தச் சக வேலையாட்களுக்கு’ நம் நன்றியைக் காட்டுவோமாக. (கொலோ. 4:11) சபைக் கூட்டங்களிலோ கிறிஸ்தவ மாநாடுகளிலோ நாம் ஒன்றாகக் கூடிவரும்போது அவர்களை நாம் அன்புடன் ஊக்குவிக்கலாம். அவர்களுடைய அருமையான முன்மாதிரியையும் நாம் பின்பற்றலாம். அவர்களது அனுபவங்களையும் உற்சாகமூட்டும் வார்த்தைகளையும் கேட்பதற்கு நாம் ‘வாய்ப்பை’ உருவாக்கலாம், ஒருவேளை அவர்களை வீட்டிற்கு அழைத்து உபசரிக்கலாம்.—பிலி. 4:10.
உபத்திரவப்படுகிறவர்களோடு சேர்ந்து மனமகிழுங்கள்
பவுல் தனக்கு நேரிட்ட துன்புறுத்தலைச் சகித்தார்... சோதனைகளைச் சமாளித்தார்... இவையெல்லாம் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருக்க வேண்டுமென்ற அவரது மனவுறுதியை வலுப்படுத்தின. (கொலோ. 1:24; யாக். 1:2, 3) பிலிப்பியிலிருந்த சகோதரர்கள் இதுபோன்ற சோதனைகளை எதிர்ப்படும்போது அவரது உறுதியைக் கண்டு ஊக்கம் அடையலாம் என்பதை அவர் அறிந்திருந்தார்; இது, மனமகிழ்ந்து அவர்களுடன் சேர்ந்து சந்தோஷப்பட அவருக்குக் காரணத்தை அளித்தது. அதனால்தான் அவர் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதற்கு மட்டுமல்ல, அவருக்காகப் பாடுகளை அனுபவிப்பதற்கும் நீங்கள் பாக்கியம் பெற்றீர்கள். முன்பு எனக்கிருந்த போராட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள், இப்போது எனக்கிருக்கிற போராட்டத்தைப் பற்றியும் கேள்விப்படுகிறீர்கள்; அதே போன்ற போராட்டம் உங்களுக்கும் இருக்கிறது.”—பிலி. 1:29, 30.
அதேபோல் இன்றும் சாட்சி கொடுப்பதால் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பைச் சந்திக்கிறார்கள். இந்த எதிர்ப்பு சில சமயங்களில் தாக்குதல் வடிவில் வரலாம். மற்ற சந்தர்ப்பங்களில், விசுவாச துரோகிகளுடைய பொய்க் குற்றச்சாட்டுகள்... குடும்ப அங்கத்தினர்களுடைய விரோதம்... சக வேலையாட்களின் அல்லது மாணவர்களின் கேலிப்பேச்சுகள்... வடிவில் வரலாம். இப்படிப்பட்ட சோதனைகளைக் கண்டு நாம் ஆச்சரியப்படவோ உற்சாகமிழந்துவிடவோ கூடாதென இயேசு எச்சரித்தார். மாறாக, இவையெல்லாம் நாம் மனமகிழ்வதற்குக் காரணங்களாக இருக்கின்றன. அவர் கூறினார்: “நீங்கள் என்னை விசுவாசிப்பதன் காரணமாக மக்கள் உங்களை அவதூறாகப் பேசும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும் சந்தோஷப்படுங்கள். மனமகிழ்ந்து ஆனந்தத்தில் துள்ளிக் குதியுங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மாபெரும் பலன் கிடைக்கும்.”—மத். 5:11, 12.
சில நாடுகளில் நம் சகோதரர்கள் கொடூர துன்புறுத்தலை எதிர்ப்படுகிறார்கள் என்பதை நாம் கேள்விப்படுகையில் பயப்படவோ பீதியடையவோ கூடாது. மாறாக, அவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட வேண்டும். அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும்படியும் அவர்கள் சகித்திருக்க உதவும்படியும் யெகோவாவிடம் நாம் ஜெபம் செய்யலாம். (பிலி. 1:3, 4) அந்த அன்பான சகோதரர்களுக்காக நாம் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் நம்முடைய சபையில் இருக்கிறவர்களுக்கு உதவலாமே. சோதனைகளை அனுபவிக்கிற அப்படிப்பட்ட சகோதரர்கள்மீது அக்கறை காட்டி அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாமே. அவர்களோடு சேர்ந்து சந்தோஷப்படுவதற்கு நாம் வாய்ப்புகளை உருவாக்கலாமே. எவ்வாறு? ஒருவேளை குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்ள எப்போதாவது அவர்களை நாம் அழைக்கலாம்... அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யலாம்... அவர்களோடு சேர்ந்து பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.
நாம் ஒன்றுகூடி மகிழ்வதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன! இந்த உலகத்தாரைப் போல் நாம் தனிமை விரும்பிகளாக இல்லாமல், நம் சகோதரர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வோமாக. அப்படிச் செய்யும்போது, சபையில் அன்பும் ஐக்கியமும் நிலவ நாம் பங்களிப்போம்; அதுமட்டுமல்ல, சகோதரக் கூட்டுறவை முழுமையாக அனுபவித்தும் மகிழ்வோம். (பிலி. 2:1, 2) ஆம், “நம் எஜமானருடைய சேவையில் எப்போதும் மனமகிழ்ச்சியாக இருங்கள்; மறுபடியும் சொல்கிறேன், மனமகிழ்ச்சியாக இருங்கள்!” என்று பவுல் நம்மை ஊக்கப்படுத்துகிறார்.—பிலி. 4:4.
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
கோளம்: Courtesy of Replogle Globes