‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவாவை நம்புங்கள்
“நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவர் போற்றப்படுவாராக. அவரே கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்; எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.”—2 கொ. 1:3.
1. நம் எல்லாருக்கும் தேவைப்படுவது என்ன?
பிறந்ததிலிருந்தே நம் எல்லாருக்கும் ஆறுதல் தேவைப்படுகிறது. ஒரு குழந்தை பசிக்காக அல்லது அரவணைப்புக்காக அழும்போது, தனக்கு ஆறுதல் வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. வளர்ந்த பிறகும் பல சமயங்களில் நாம் எல்லாரும் ஆறுதலை எதிர்பார்க்கிறோம். அதுவும், ஏதாவது கஷ்டத்தில் இருக்கும்போது ஆறுதலுக்காக மிகவும் ஏங்குகிறோம்.
2. யெகோவா தம்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு என்ன வாக்குறுதி தருகிறார்?
2 நம் குடும்பத்தாரும் நண்பர்களும் ஓரளவு நமக்கு ஆறுதல் அளிக்கலாம். ஆனால், கஷ்டப்படுகிற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர்களால் நமக்கு உதவ முடியாது. சில சமயங்களில் கடவுளால் மட்டும்தான் நமக்கு ஆறுதல் தர முடியும். அவரது வார்த்தை இவ்வாறு வாக்குறுதி தருகிறது: ‘தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். . . . அவர்கள் கூப்பிடுதலைக் கேட்கிறார்.’ (சங். 145:18, 19) அதோடு, “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது” என்றும் சொல்கிறது. (சங். 34:15) ஆனால், கடவுள் நமக்கு ஆறுதலளிக்க வேண்டுமென்றால், நாம் அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்” என்று தாவீது எழுதினார்.—சங். 9:9, 10.
3. யெகோவா நம்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை இயேசு எவ்வாறு விளக்கினார்?
3 யெகோவா தம் வணக்கத்தாரை மிகவும் மதிப்புள்ளவர்களாகக் கருதுகிறார். இயேசு இவ்வாறு சொன்னார்: “குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனால், அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லை. உங்கள் தலைமுடியும்கூட எண்ணப்பட்டிருக்கிறது. பயப்படாதீர்கள்; அநேக சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புமிக்கவர்கள்.” (லூக். 12:6, 7) யெகோவா இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்; எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்.”—எரே. 31:3, பொது மொழிபெயர்ப்பு.
4. யெகோவாவின் வாக்குறுதிகளை நாம் ஏன் நம்பலாம்?
4 நாம் யெகோவா மீதும் அவரது வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைத்தால், கஷ்ட காலங்களில் ஆறுதலைப் பெறுவோம். கடவுள்மீது யோசுவா எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்தளவுக்கு நாமும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் இவ்வாறு சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” (யோசு. 23:14) கஷ்டங்களால் நாம் இன்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால்கூட, “கடவுள் நம்பகமானவர்” என்பதில் முழு நம்பிக்கை வைக்கலாம்; அவர் தமது உண்மையுள்ள ஊழியர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்றும் நிச்சயமாக இருக்கலாம்.—1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.
5. நம்மால் ஏன் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க முடிகிறது?
5 யெகோவா “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். “ஆறுதல் அளிப்பது” என்பது வேதனையில் இருப்பவரின் மனதை மயிலிறகால் வருடுவதைப் போன்றதாகும், சோகத்திலிருந்து மீண்டு நிம்மதி பெற அவருக்கு உதவி செய்வதாகும். யெகோவா இதைச் செய்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. (2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.) எதுவுமே... எவருமே... நம் பரலோகத் தகப்பன் நமக்கு ஆறுதல் அளிப்பதைத் தடுக்க முடியாது. ஆகவே, தம்மை நேசிப்பவர்களை ஆறுதல்படுத்த அவரால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். நாம் அவரிடமிருந்து ஆறுதலைப் பெற்றிருப்பதால், “எல்லா உபத்திரவங்களிலும்” நம் சகோதர சகோதரிகளுக்கு ஆறுதல் அளிக்க முடிகிறது. யெகோவாவைப்போல் வேறு யாரால் நமக்கு ஆறுதல் அளிக்க முடியும்?!
கஷ்டத்திற்கான காரணங்கள்
6. கஷ்டத்திற்கான சில காரணங்கள் யாவை?
6 வாழ்வில் பல சூழ்நிலைகளில் நமக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. சிலர், அன்பானவரைப் பறிகொடுக்கும்போது வேதனையிலேயே கொடிய வேதனையை அனுபவிக்கிறார்கள். அதுவும், கணவனையோ மனைவியையோ பிள்ளையையோ பறிகொடுக்கும்போது துடியாய்த் துடிக்கிறார்கள். இன்னும் சிலர் பாகுபாடு, பாரபட்சம் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மற்றவர்கள், உடல்நலக் குறைவு, முதுமை, வறுமை, உலகில் நடக்கிற அட்டூழியங்கள் போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள்.
7. (அ) கஷ்ட காலங்களில் நமக்கு என்ன தேவைப்படுகிறது? (ஆ) இருதயம் ‘நொறுங்குண்டும் நருங்குண்டும்’ போகும்போது யெகோவா என்ன செய்வார்?
7 கஷ்ட காலங்களின்போது நாம் பல விதங்களில் வேதனையை அனுபவிக்கிறோம். அச்சமயங்களில் நம் இருதயமும், மனமும், உணர்ச்சிகளும், உடல்நலமும், விசுவாசமும்கூட பாதிக்கப்படுவதால் நமக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, இருதயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நம் இருதயம் ‘நொறுங்குண்டும் நருங்குண்டும்’ போகலாம் என பைபிள் சொல்கிறது. (சங். 51:17) அப்படிப்பட்ட சமயத்தில் யெகோவாவால் நிச்சயம் நமக்கு உதவ முடியும். அவர், “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.” (சங். 147:3) மிகப் பெரிய பிரச்சினைகளைச் சந்திக்கும் சமயங்களில்கூட, நாம் முழு விசுவாசத்தோடு யெகோவாவிடம் ஜெபம் செய்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நொந்துபோன நம் இருதயத்திற்கு அவர் நிம்மதியைத் தருவார்.—1 யோவான் 3:19-22; 5:14, 15-ஐ வாசியுங்கள்.
8. நாம் மன வேதனையில் இருக்கும்போது யெகோவா எவ்வாறு உதவுகிறார்?
8 பல வித சோதனைகளின் காரணமாக நமக்கு மிகுந்த மன வேதனை ஏற்படுவதால் நம் மனதிற்கு அவ்வப்போது ஆறுதல் தேவைப்படுகிறது. சோதனைகளை நம் சொந்த பலத்தினால் சமாளிக்க முடியாது. என்றாலும், சங்கீதம் 94:19-ஐ (பொ.மொ.) எழுதியவர் இவ்வாறு சொன்னார்: “என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.” பவுலும் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.” (பிலி. 4:6, 7) நாம் மன வேதனையில் இருக்கும்போது பைபிளை வாசித்து அதிலுள்ள விஷயங்களைத் தியானிக்க வேண்டும். அது நமக்கு அதிக ஆறுதலைத் தரும்.—2 தீ. 3:15-17.
9. எதிர்மறையான உணர்ச்சிகள் நம்மை ஆட்டிப்படைக்கும்போது யெகோவா உதவுவார் என ஏன் நம்பலாம்?
9 சில சமயங்களில், நாம் சோர்வின் எல்லைக்கே சென்றுவிடலாம்; இதனால், எதிர்மறையான உணர்ச்சிகள் நம்மை ஆட்டிப்படைக்கலாம். யெகோவா கொடுத்திருக்கும் ஏதோவொரு வேலையைச் செய்யவோ பொறுப்பைக் கையாளவோ முடியாதென நாம் நினைக்கலாம். இந்தச் சூழ்நிலையில்கூட, யெகோவாவால் நமக்கு ஆறுதலையும் உதவியையும் அளிக்க முடியும். பலம்பொருந்திய எதிரிகளுக்கு விரோதமாக இஸ்ரவேலரை நடத்திச் செல்லும்படி யோசுவா நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது மோசே மக்களிடம், “நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்றார். (உபா. 31:6) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று அங்கிருந்த எதிரிகளையெல்லாம் வெல்ல இஸ்ரவேலரை யோசுவா வழிநடத்தினார்; இதற்கு யெகோவாவின் உதவியைப் பெற்றார். இஸ்ரவேலர் செங்கடலைக் கடந்த சமயத்தில் மோசேயும் இதேபோல் யெகோவாவிடமிருந்து உதவி பெற்றார்.—யாத். 14:13, 14, 29-31.
10. சில பிரச்சினைகளால் நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது எதையெல்லாம் செய்வது உதவும்?
10 சில பிரச்சினைகளால் நம் உடல்நலம் பாதிக்கப்படலாம். உண்மைதான், சத்துள்ள உணவு சாப்பிட்டு, போதிய ஓய்வு எடுத்து, தவறாமல் உடற்பயிற்சி செய்து, நம் வீட்டையும் உடலையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல்நலத்தைக் காக்கலாம். அதோடு, எதிர்காலத்தைப் பற்றிய பைபிளின் வாக்குறுதியை எப்போதும் மனக்கண்ணில் நிறுத்தினால் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஏதோவொரு சோதனையினாலோ பிரச்சினையினாலோ நாம் அவதிப்படும்போது, பவுலின் அனுபவத்தையும் உற்சாகமூட்டும் இந்த வார்த்தைகளையும் நினைத்துப் பார்ப்பது உதவியாக இருக்கும்: “நாங்கள் எல்லா விதத்திலும் நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை; குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை; துன்புறுத்தப்படுகிறோம், ஆனால் கைவிடப்படுவதில்லை; தள்ளப்படுகிறோம், ஆனால் அழிந்துபோவதில்லை.”—2 கொ. 4:8, 9.
11. நம் விசுவாசம் பலவீனமாகி வருவதாக நாம் உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
11 சில சோதனைகள் நம் விசுவாசத்தைப் பாதிக்கலாம். அப்போதும் யெகோவா நம் உதவிக்கு வருவார். “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” என்று அவரது வார்த்தை வாக்குறுதி தருகிறது. (சங். 145:14) நம் விசுவாசம் பலவீனமாகி வருவதாக நாம் உணர்ந்தால் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும். (யாக். 5:14, 15) அதோடு, புது உலகில் என்றென்றும் வாழப் போவதைப் பற்றி எப்போதும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; அப்போது, சோதனைகளைத் தாங்கிக்கொள்ள பலம் பெறுவோம்.—யோவா. 17:3.
கடவுளுடைய ஆறுதலைப் பெற்றவர்கள்
12. யெகோவா எவ்வாறு ஆபிரகாமை ஆறுதல்படுத்தினார்?
12 சங்கீதம் 119-ஐ எழுதியவர் யெகோவாவிடம் இவ்வாறு சொன்னார்: “நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.” (சங். 119:49, 50) யெகோவாவின் ஆறுதலைப் பெற்ற பலருடைய உதாரணங்களை அவரது வார்த்தையான பைபிள் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, சோதோமையும் கொமோராவையும் அழிக்கப்போவதாக அவர் சொன்னபோது ஆபிரகாம் மிகவும் கவலைப்பட்டார். அதனால், “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்று யெகோவாவிடம் கேட்டார். 50 நீதிமான்கள் இருந்தால்கூட சோதோமை அழிக்கப் போவதில்லை என யெகோவா வாக்குறுதி தந்தார்; இவ்வாறு, ஆபிரகாமை ஆறுதல்படுத்தினார். ஆனால் ஆபிரகாம், 45 நீதிமான்கள் மட்டும் இருந்தால்?... 40 பேர் இருந்தால்?... 30 பேர்?... 20?... 10?... என இன்னும் ஐந்து முறை யெகோவாவிடம் கேட்டார். யெகோவா பொறுமையோடும் அன்போடும் ஆபிரகாமுக்குப் பதிலளித்தார்; பத்து நீதிமான்கள் இருந்தால்கூட சோதோமை அழிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார். அங்கு பத்து நீதிமான்கள்கூட இல்லாதபோதிலும் லோத்துவையும் அவரது மகள்களையும் யெகோவா காப்பாற்றினார்.—ஆதி. 18:22-32; 19:15, 16, 26.
13. அன்னாள் எப்படி யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்ததைக் காட்டினாள்?
13 எல்க்கானாவின் மனைவி அன்னாள் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டுமென ஏங்கினாள். ஆனால், அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால் மிகவும் வேதனைப்பட்டாள். இதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபம் செய்தாள். தலைமைக் குரு ஏலி அவளிடம், “நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக” என்றார். அந்த வார்த்தைகள் அன்னாளுக்கு ஆறுதலாக இருந்தன; “அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.” (1 சா. 1:8, 17, 18) அன்னாள் யெகோவாமீது நம்பிக்கை வைத்து, பிரச்சினையை அவர் கையில் விட்டுவிட்டாள். என்ன நடக்குமென அவளுக்குத் தெரியாதபோதிலும் மன நிம்மதியோடு இருந்தாள். காலப்போக்கில் யெகோவா அவளது ஜெபத்திற்குப் பதிலளித்தார். அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.—1 சா. 1:20.
14. தாவீதுக்கு ஏன் ஆறுதல் தேவைப்பட்டது, அவர் யாரிடம் ஆறுதலைக் கேட்டார்?
14 கடவுளுடைய ஆறுதலைப் பெற்ற இன்னொருவர் தாவீது ராஜா. யெகோவா “இருதயத்தைப் பார்க்கிறார்.” ஆகவே, தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தபோது, தாவீது நேர்மையானவராகவும் உண்மை வணக்கத்தை நேசிப்பவராகவும் இருந்ததை அறிந்திருந்தார். (1 சா. 16:7; 2 சா. 5:10) பிற்பாடு, தாவீது பத்சேபாளுடன் தவறான உறவில் ஈடுபட்டார், அந்தப் பாவத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்கவும் பார்த்தார். அது எப்பேர்ப்பட்ட மகா பாவம் என்பது அவருக்கு உணர்த்தப்பட்டபோது, யெகோவாவிடம் இவ்வாறு ஜெபம் செய்தார்: “உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.” (சங். 51:1-3) தாவீது உண்மையிலேயே மனந்திருந்தினார், யெகோவாவும் அவரை மன்னித்தார். ஆனால், தன் பாவத்தின் விளைவுகளிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. (2 சா. 12:9-12) என்றாலும், யெகோவா காட்டிய இரக்கம் அவருக்கு ஆறுதல் தந்தது.
15. கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்னர் இயேசுவுக்கு யெகோவா எப்படி உதவினார்?
15 இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது பல கஷ்டங்களை எதிர்ப்பட்டார். யெகோவா அதையெல்லாம் அனுமதித்தார், ஆனால் இயேசு எப்போதும் உண்மையோடு இருந்தார். பரிபூரண மனிதரான அவர் எல்லாச் சமயத்திலும் யெகோவாமீது நம்பிக்கை வைத்தார், அவருடைய பேரரசுரிமையையே ஆதரித்தார். காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்னர், “என் சித்தத்தின்படி அல்ல, உங்களுடைய சித்தத்தின்படியே நடக்கட்டும்” என்று யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது ஒரு தேவதூதர் தோன்றி அவரைப் பலப்படுத்தினார். (லூக். 22:42, 43) அச்சமயத்தில் அவருக்குத் தேவைப்பட்ட ஆறுதலையும் பலத்தையும் ஆதரவையும் யெகோவா அளித்தார்.
16. விசுவாசத்தின் காரணமாக நம் உயிருக்கு ஆபத்து வந்தாலும் யெகோவா எப்படி உதவுவார்?
16 விசுவாசத்தின் காரணமாக நம் உயிருக்கு ஆபத்து வந்தாலும், உண்மையுடன் நிலைத்திருக்க யெகோவாவால் நமக்கு உதவ முடியும், அப்படி உதவவும் செய்வார். உயிர்த்தெழுதல் நம்பிக்கைகூட நமக்கு ஆறுதல் அளிக்கிறது. கடைசி எதிரியான மரணம் “ஒழிக்கப்படும்” நாளுக்காக நாம் எவ்வளவு ஆவலோடு காத்திருக்கிறோம்! (1 கொ. 15:26) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களும் மற்றவர்களும் இறந்துபோயிருந்தாலும் அவரது நினைவில் இருக்கிறார்கள். மறதி என்பதே யெகோவாவின் அகராதியில் இல்லை. அவர் கண்டிப்பாக அவர்களை உயிர்த்தெழுப்புவார். (யோவா. 5:28, 29; அப். 24:15) துன்புறுத்தலைச் சந்திக்கும்போது, உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு ஆறுதலையும் திட நம்பிக்கையையும் அளிக்கிறது.
17. நம் அன்பானவர் இறந்துவிட்டால் யெகோவா நமக்கு எவ்வாறு ஆறுதல் அளிப்பார்?
17 இறந்துபோன நம் அன்பானவர்கள் அற்புதமான புதிய உலகில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை அறிவது எப்பேர்ப்பட்ட ஆறுதல் தருகிறது! இனி எதுவுமே வேதனை தராது. யெகோவாவின் ஊழியர்களில் “திரள் கூட்டமான மக்கள்” வரவிருக்கும் அழிவில் தப்பிப்பிழைத்து, உயிர்த்தெழுந்து வருவோரை வரவேற்பார்கள், அவர்களுக்குப் போதிப்பார்கள். இது என்னே ஒரு பாக்கியம்!—வெளி. 7:9, 10.
கடவுளுடைய நித்திய புயங்கள் நமக்கு ஆதாரம்
18, 19. துன்புறுத்தப்பட்ட தம் ஊழியர்களுக்கு யெகோவா எவ்வாறு ஆறுதல் தந்திருக்கிறார்?
18 தீர்க்கதரிசியான மோசே இஸ்ரவேலருக்கு ஆறுதலும் பலமும் தந்த ஒரு பாடலை எழுதினார். அதில், “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” என்று எழுதினார். (உபா. 33:27) பிற்பாடு சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள் . . . கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.” (1 சா. 12:20-22) நாம் யெகோவாவை உண்மையுடன் சேவிக்கும்வரை அவர் ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார். நமக்குத் தேவைப்படும் உதவியை அவர் எப்போதும் தருவார்.
19 இந்தக் கொடிய கடைசி நாட்களில் கடவுள் தம் மக்களுக்கு உதவியையும் ஆறுதலையும் தருகிறார். நவீன காலங்களில், உலகெங்கும் உள்ள நம் சகோதர சகோதரிகள் பலர் யெகோவாவைச் சேவிக்கும் ஒரே காரணத்துக்காகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சோதனைகளைச் சந்திக்கிற தம் மக்களை யெகோவா உண்மையிலேயே ஆறுதல்படுத்துகிறார் என்பதை அவர்களுடைய அனுபவங்கள் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த ஒரு சகோதரர் தன் விசுவாசத்திற்காக 23 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், சிறையிலும்கூட பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார்; அவை அவருக்குப் பலத்தையும் ஆறுதலையும் தந்தன. “அத்தனை வருடங்களும் நான் யெகோவாமீது நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொண்டேன், அவரிடமிருந்து பலத்தையும் பெற்றேன்” என அவர் சொன்னார்.—1 பேதுரு 5:6, 7-ஐ வாசியுங்கள்.
20. யெகோவா ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார் என நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
20 எதிர்காலத்தில் நமக்கு என்ன நடந்தாலும் சரி, “யெகோவா தம்முடைய ஜனத்தைக் கைவிடார்” என்ற ஆறுதலான வார்த்தைகளை நம் நினைவில் வைப்பது நல்லது. (சங். 94:14, திருத்திய மொழிபெயர்ப்பு) நமக்கே ஆறுதல் தேவைப்பட்டாலும் நாமும்கூட மற்றவர்களுக்கு ஆறுதல் தர முடியும். அடுத்த கட்டுரையில், இந்தக் கொடிய உலகில் கஷ்டப்படுவோருக்கு நாம் எவ்வாறு ஆறுதல் அளிக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வோம்.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• நம் கஷ்டங்களுக்கான சில காரணங்கள் யாவை?
• யெகோவா தம் ஊழியர்களை எவ்வாறு ஆறுதல்படுத்துகிறார்?
• உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும் எது நமக்கு ஆறுதல் அளிக்கும்?
[பெட்டி/பக்கம் 25-ன் படங்கள்]
இவற்றைப் பாதிக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க வழி . . .
▪ நம் இருதயம் சங். 147:3; 1 யோ. 3:19-22; 5:14, 15
▪ நம் மனம் சங். 94:19, பொ.மொ.; பிலி. 4:6, 7
▪ நம் உணர்ச்சிகள் யாத். 14:13, 14; உபா. 31:6
▪ நம் உடல்நலம் 2 கொ. 4:8, 9
▪ நம் விசுவாசம் சங். 145:14; யாக். 5:14, 15