வாழ்க்கை சரிதை
பண்பட்ட பெரியவர்களோடு பழகியதால் பயனடைந்தேன்
எல்வா ஜெர்டி சொன்னபடி
சுமார் 70 வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு ஒருவர் வந்திருந்தார். அப்பாவிடம் அவர் சொன்ன ஓர் ஆலோசனை என் வாழ்க்கையை அடியோடு மாற்றியது. அந்த நாளை மறக்கவே முடியாது. அன்றுமுதல் எத்தனையோ பேர் என் வாழ்க்கையில் முத்திரை பதித்திருக்கிறார்கள். இதுவரை நிறையப் பேருடைய நட்பைச் சம்பாதித்திருக்கிறேன், ஆனால் ஒருவருடைய நட்பை மட்டும் பொக்கிஷமாய்க் கருதுகிறேன். ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள்...
நான் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் 1932-ல் பிறந்தேன். என் அப்பா அம்மா கடவுள்பக்தி மிக்கவர்கள். ஆனால், சர்ச் பக்கம் போகாதவர்கள். ‘கடவுள் எல்லாரையும் பார்த்துக்கிட்டே இருக்கார். நீ குறும்பு செஞ்சா உன்னைத் தண்டிப்பார்’ என்று என் அம்மா சொல்லிச் சொல்லி அதுவே மனதில் பதிந்துவிட்டது. அதனால், நான் கடவுள் என்றாலே பயப்பட்டேன். ஆனாலும் எனக்கு பைபிள் என்றால் ரொம்பப் பிடிக்கும். என் பெரியம்மா வாரா வாரம் எங்கள் வீட்டில் வந்து தங்குவார். அவர் எனக்கு பைபிளிலிருந்து நிறைய சுவாரசியமான கதைகளைச் சொல்வார். சனி, ஞாயிறு என்றாலே அவர் வருகைக்காக ஆசை ஆசையாகக் காத்திருப்பேன்.
அப்போது எனக்குப் பருவ வயது. யெகோவாவின் சாட்சியாக இருந்த வயதான ஒரு பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சில புத்தகங்களைக் கொடுத்தார். என் அப்பா அவற்றைப் படித்துப் பார்த்தார். படித்த விஷயங்கள் அவருக்குப் பிடித்துவிட்டன. எனவே, யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டார். ஒருநாள் மாலை அப்பாவுக்கு பைபிள் படிப்பு நடந்துகொண்டிருந்தபோது நான் மறைந்திருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன், அப்பா அதைப் பார்த்துவிட்டார். ‘உள்ளே போய்ப் படு’ என்று அவர் சொன்னபோது, ‘ஏன், எல்வாவும் வந்து உட்கார்ந்து கேட்கட்டுமே’ என்று படிப்பு நடத்திய சகோதரர் சொன்னார். அது... என் வாழ்க்கைக்குப் புதிய பாதை காட்டியது, உண்மைக் கடவுளான யெகோவாவை நண்பராக்கிக்கொள்ள முதற்படியாய் அமைந்தது.
அதன் பிறகு சீக்கிரத்திலேயே, நானும் என் அப்பாவும் சபை கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தோம். அவர் கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஏற்ப நிறைய மாற்றங்களைச் செய்தார். கோபப்படுவதைக்கூட குறைத்துக்கொண்டார். இதைப் பார்த்து அம்மாவும் ஃபிராங்க் அண்ணனும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள்.a நாங்கள் நான்கு பேரும் ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்து, யெகோவாவின் சாட்சிகளாக ஞானஸ்நானம் பெற்றோம். அதுமுதல், சத்தியத்தில் பண்பட்ட பல சகோதர சகோதரிகள் எனக்கு நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள், வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் எனக்குப் பக்கபலமாய் இருந்திருக்கிறார்கள்.
கணக்கு டீச்சராக ஆசைப்பட்டேன், மிஷனரி ஆனேன்
நான் பருவ வயதுப் பெண்ணாக இருந்தபோது சபையிலிருந்த பெரியவர்களே பெரும்பாலும் என் நண்பர்கள். அவர்களில் ஒருவர் அலஸ் ப்ளேஸ். இவர்தான் முதன்முதலாக எங்கள் வீட்டுக்குச் சத்தியத்தைச் சொல்ல வந்த சகோதரி. போகப் போக இவர் எனக்குச் சொந்த பாட்டிபோல் ஆனார். ஊழியம் செய்ய எனக்குப் பயிற்சி கொடுத்தார், ஞானஸ்நானம் எடுக்க இலக்கு வைக்கும்படி ஊக்கப்படுத்தினார். 15 வயதில் அந்த இலக்கை அடைந்தேன்.
இவர் தவிர பர்ஸீ மற்றும் மாஜ் [மார்கரெட்] டனம் தம்பதியரும் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். இந்த வயதான தம்பதியருடன் நெருங்கிப் பழகியது என் லட்சியத்தையே மாற்றிவிட்டது. கணக்கு என்றால் எனக்குக் கொள்ளைப்பிரியம், என் கனவெல்லாம் கணக்கு டீச்சர் ஆக வேண்டும் என்பதுதான். 1930-களில் பர்ஸீயும் மாஜும் லாட்வியாவில் மிஷனரிகளாகச் சேவை செய்தவர்கள். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் மூண்டபோது, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த பெத்தேலில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றார்கள். அவர்கள் இருவரும் என்மீது அன்பும் அக்கறையும் காட்டினார்கள். மிஷனரி ஊழியத்தில் அவர்கள் பெற்ற சுவாரஸ்யமான அனுபவங்களை எனக்குக் கதைகதையாய்ச் சொன்னார்கள். கணக்குக் கற்றுக்கொடுப்பதைவிட கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுப்பது ஆத்மதிருப்தி தரும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். எனவே, மிஷனரி ஆக முடிவுசெய்தேன்.
மிஷனரி சேவைக்கு முதற்படி பயனியர் ஊழியம் என்பதால் அதைத் தொடங்கும்படி டனம் தம்பதியர் என்னை உற்சாகப்படுத்தினார்கள். 1948-ல், என் 16 வயதில் பயனியர் ஆனேன். சிட்னியிலுள்ள எங்கள் ஹர்ஸ்ட்வில்லே சபையில் ஏற்கெனவே பயனியராகச் சேவை செய்து வந்த பத்து இளம் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்துகொண்டு நானும் சந்தோஷமாய் ஊழியம் செய்தேன்.
அடுத்த நான்கு வருடங்களுக்கு நான்கு நகரங்களில் பயனியராகச் சேவை செய்தேன்—அவை நியூ சௌத் வேல்ஸிலும் குயின்ஸ்லாந்திலும் இருந்தன. ஆரம்ப நாட்களில், நான் பைபிள் படிப்பு நடத்தி சத்தியத்திற்கு வந்தவர்களில் ஒருவர்தான் பெட்டி லா (இப்போது பெட்டி ரெம்நன்ட்). என்னைவிட இரண்டு வயது மூத்தவளான பெட்டி ரொம்ப கரிசனையானவள். சிட்னிக்கு மேற்கே சுமார் 230 கிலோமீட்டர் (145 மைல்) தூரத்திலுள்ள கௌரா என்ற நகரத்தில் பயனியர் செய்த காலத்தில் இவளே என் ‘பார்ட்னர்.’ நாங்கள் இருவரும் சேர்ந்து கொஞ்ச காலமே ஊழியம் செய்தபோதிலும் இன்றுவரை அவள் எனக்கு நல்ல தோழி.
கௌரா நகரத்திற்குத் தென்மேற்கே 220 கிலோமீட்டர் (137 மைல்) தொலைவிலுள்ள நரன்ட்ரா நகரத்தில் விசேஷ பயனியராகச் சேவை செய்ய நியமிப்புப் பெற்றேன். என்னுடன் சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய ஜாய் லெனாக்ஸ் (இப்போது ஜாய் ஹன்டர்) என்ற சகோதரி நியமிக்கப்பட்டாள். இவளும் என்னைவிட இரண்டு வயது மூத்தவள். நாங்கள் மட்டுமே அந்த நகரத்தில் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தோம். ரே மற்றும் எஸ்தர் ஐயன்ஸ் தம்பதியரின் வீட்டில் நானும் ஜாயும் வாடகைக்குத் தங்கினோம். உபசரிக்கும் குணம்படைத்த இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே சத்தியத்தில் ஆர்வம் காட்டினார்கள். ரேயும் அவரது மகனும் நகரத்தைவிட்டு தள்ளியிருந்த ஒரு பண்ணையில் வாரநாட்கள் முழுவதும் வேலை செய்தார்கள். அந்தப் பண்ணையில் அவர்கள் கோதுமையை விளைவித்தார்கள், ஆடுகளை வளர்த்தார்கள். எஸ்தரும் அவரது மூன்று மகள்களும் தங்கும் விடுதியை நடத்தி வந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு சாப்பாட்டுக்கு, நானும் ஜாயும்... ஐயன்ஸ் குடும்பத்தாருக்கும் அவர்களுடைய விடுதியில் தங்கியிருந்த கிட்டத்தட்ட 12 பேருக்கும் சேர்த்து இறைச்சி சமைத்தோம். விடுதியில் தங்கியிருந்தவர்கள் எல்லாரும் ரயில்வே பணியாளர்கள் என்பதால் கொள்ளைப் பசியோடு இருப்பார்கள். இப்படிச் சமைத்துக்கொடுத்துதான் எங்கள் வாடகையில் பாதிப் பணத்தைக் கழித்துக்கொண்டோம். சாப்பாடு முடிந்து, எல்லாவற்றையும் சுத்தப்படுத்திய பிறகு, அந்தக் குடும்பத்தாருக்கு ஆன்மீக உணவை “பரிமாறினோம்.” ஆம், அந்த வாரத்திற்குரிய காவற்கோபுரத்தை அவர்களுடன் சேர்ந்து படித்தோம். ரே, எஸ்தர், அவர்களுடைய நான்கு பிள்ளைகள்... எல்லாருமே சத்தியத்தை ஏற்றுக்கொண்டு நரன்ட்ரா சபையின் முதல் அங்கத்தினர்களாக ஆனார்கள்.
1951-ல் சிட்னியில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் கலந்துகொண்டேன். மிஷனரி சேவையில் ஆர்வமுள்ள பயனியர்களுக்காக நடத்தப்பட்ட விசேஷக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பெரிய கூடாரத்தில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் 300-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டோம். புருக்லின் பெத்தேலிலிருந்து வந்திருந்த சகோதரர் நேதன் நார் பேசினார். பூமியில் மூலைமுடுக்கெல்லாம் நற்செய்தியை அறிவிப்பதற்கு அவசர தேவை இருப்பதாகச் சொன்னார். அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் இருதயத்தில் ஆழமாய்ப் பதிந்தன. அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பயனியர்களில் அநேகர் தென் பசிபிக் மற்றும் பிற பகுதிகளில் முதன்முறையாக நற்செய்தியை அறிவிக்க சென்றார்கள். 1952-ல் நடைபெற்ற கிலியட் பள்ளியின் 19-வது வகுப்பில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து அழைக்கப்பட்ட 17 பேரில் நானும் ஒருத்தி என்பதை அறிந்தபோது ஆனந்தத்தில் துள்ளினேன். அப்போது எனக்கு இருபதே வயது. என் மிஷனரி கனவு நனவாக ஆரம்பித்தது!
கெடுபிடியாக இருந்தேன், கனிவைக் கற்றேன்
கிலியட் பள்ளியில் பெற்ற ஆலோசனையும்... சக மாணவர்களின் சகவாசமும்... என் பைபிள் அறிவை அதிகரித்தது, விசுவாசத்தையும் பலப்படுத்தியது. அதோடு, என் சுபாவத்தைப் பெருமளவு மாற்றியது. அப்போது எதையும் எதார்த்தமாக சிந்திக்கத் தெரியாத சின்ன வயது. என்னிடமும் மற்றவர்களிடமும் அளவுக்குமீறி எதிர்பார்த்தேன். சில விஷயங்களில் கெடுபிடியாக நடந்துகொண்டேன். உதாரணத்திற்கு, சகோதரர் நார் பெத்தேலிலிருந்த இளம் சகோதரர்களுடன் சேர்ந்து பந்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன்.
கிலியட் போதனையாளர்கள் அனுபவசாலிகள் என்பதால் என் மனப் போராட்டத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். என்னிடம் கனிவாய் நடந்துகொண்டார்கள், என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள உதவினார்கள். யெகோவா அன்பானவர், நாம் நல்லது செய்ய முயற்சி எடுக்கும்போது சந்தோஷப்படுகிறவர், அவர் கெடுபிடியானவர் அல்ல, அளவுக்குமீறி எதிர்பார்ப்பவரும் அல்ல என்பதையெல்லாம் மெல்ல மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். என் வகுப்பிலிருந்த சிலரும் எனக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அவர்களில் ஒரு சகோதரி என்னிடம், “யெகோவா சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு நம்மை அடக்கிக்கொண்டிருப்பவர் அல்ல. அதனால, உன்னிடம் அளவுக்குமீறி எதிர்பார்க்காதே!” என்று சொன்னார். அவருடைய எதார்த்த வார்த்தைகள் என் கண்களைத் திறந்தன.
கிலியட் பள்ளி முடிந்ததும் நானும் இன்னும் நான்கு பேரும் ஆப்பிரிக்காவில் உள்ள நமிபியாவுக்கு அனுப்பப்பட்டோம். சீக்கிரத்திலேயே நாங்கள் மொத்தம் 80 பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தோம். நமிபியா நாடும் மிஷனரி வாழ்க்கையும் எனக்கு ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. ஆனால், கிலியட் பள்ளியில் என்னுடன் படித்த... சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்ட... ஒருவரை நான் காதலித்தேன். எனவே, நமிபியாவில் ஒரு வருடம் ஊழியம் செய்த பிறகு அவருடன் சேர்ந்து ஊழியம் செய்ய சுவிட்சர்லாந்துக்குப் போனேன். எங்கள் திருமணத்திற்குப் பிறகு அவருடன் சேர்ந்து வட்டார ஊழியத்தில் ஈடுபட்டேன்.
நொறுங்கிப் போனேன், மீண்டு வந்தேன்
வட்டார ஊழியத்தில் ஐந்து வருடங்களைச் செலவிட்ட பிறகு சுவிட்சர்லாந்திலுள்ள பெத்தேலில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றோம். பெத்தேல் குடும்பத்தில் சத்தியத்தில் பண்பட்ட சகோதர சகோதரிகளுடன் பழகியது மறக்க முடியாத ஓர் அனுபவம்.
சீக்கிரத்திலேயே என் தலையில் ஒரு பேரிடி விழுந்தது. என் கணவர் எனக்கும் யெகோவாவுக்கும் துரோகம் செய்தது தெரியவந்தது. அவர் என்னை அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார். நான் நொறுங்கிப் போனேன்! பெத்தேல் குடும்பத்தில் பாசத்தையும் பரிவையும் காட்டிய பண்பட்ட அந்தச் சகோதர சகோதரிகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், அந்தப் பயங்கரமான சூழ்நிலையை எப்படிச் சமாளித்திருப்பேன் என்பதைக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. நான் மனம்விட்டுப் பேச விரும்பியபோதெல்லாம் அவர்கள் என் பக்கத்தில் இருந்தார்கள், என் உடல் ஒத்துழைக்க மறுத்தபோதெல்லாம் என்னை அனுசரித்து நடந்துகொண்டார்கள். வேதனையில் வதங்கிய அந்த நாட்களில் அவர்களுடைய ஆறுதலான வார்த்தைகளும் அன்பான செயல்களும் எனக்கு உயிரூட்டின. யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வரச் செய்தன.
சோதனைகளைச் சகித்த பண்பட்ட பெரியவர்கள் பல வருடங்களுக்கு முன்பு சொன்ன வார்த்தைகளும் அந்தச் சமயத்தில் என் மனதில் எதிரொலித்தன. உதாரணத்திற்கு, மாஜ் டனம் ஒருமுறை என்னிடம், “எல்வா, யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது நீ நிறையப் பிரச்சினைகளை எதிர்ப்பட வேண்டியிருக்கும். ஆனால் தாங்க முடியாத, பயங்கரமான சோதனைகள் உனக்கு ரொம்ப வேண்டியவர்களிடமிருந்தே வரலாம். அந்தச் சமயங்களில் யெகோவாவிடம் நெருங்கிப் போக முயற்சி செய். நீ யெகோவாவுக்குச் சேவை செய்கிறாய், மனிதருக்கு அல்ல—அதை மறந்துவிடாதே!” என்று சொன்னார். மாஜ் கொடுத்த அந்த அறிவுரை சோகமான சமயங்களில் எல்லாம் என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. என் கணவர் செய்த தவறு என்னை யெகோவாவிடமிருந்து பிரிக்க நான் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
பின்னர், என் குடும்பத்தாருக்கு அருகே இருந்துகொண்டு பயனியர் ஊழியம் செய்வதற்காக ஆஸ்திரேலியா திரும்பினேன். அப்படிக் கப்பலில் வீடு திரும்பிய சமயத்தில் சக பயணிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பைபிள் விஷயங்களைப் பற்றிப் பேசினேன். அது மகிழ்ச்சியான ஓர் அனுபவம். அந்தப் பயணிகளில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் அமைதியானவர். அவரது பெயர் ஆர்னா ஜெர்டி. நான் சொன்ன விஷயங்கள் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போயின. பிறகு அவர் சிட்னிக்கு வந்து என்னையும் என் குடும்பத்தாரையும் சந்தித்தார். அவர் மளமளவென சத்தியத்தில் முன்னேற்றம் செய்தார், ஞானஸ்நானம் பெற்றார். 1963-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் செல்ல மகன் கேரி பிறந்தான்.
பட்ட காலிலேயே பட்டது
அன்பான கணவன், அழகான குழந்தை என எங்கள் இல்லற வாழ்க்கை இனிமையாய் நகர்ந்தது. எனது வயதான அப்பா-அம்மாவை எங்களுடன் வைத்துப் பார்த்துக்கொள்வதற்காக ஆர்னா எங்கள் வீட்டை விசாலமாக்கினார். ஆறு வருடம் தெள்ளிய நீரோடை போல் இருந்த எங்கள் குடும்ப வாழ்க்கையை அடுத்த பிரச்சினை வந்து சுழற்றியடித்தது. ஆர்னாவுக்கு மூளை புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ரேடியேஷன் சிகிச்சைக்காக அவர் ஆஸ்பத்திரியில் நீண்ட காலம் தங்கியிருந்த சமயத்தில் தினமும் போய் அவரைப் பார்த்தேன். கொஞ்ச நாட்களில் உடல்நிலை தேறியது. பின்னர் மோசமடைய ஆரம்பித்தது. அதோடு, பக்கவாதமும் தாக்கியது. மிஞ்சிப்போனால் ஒருசில வாரங்கள்தான் உயிரோடிருப்பாரென டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், ஆர்னா பிழைத்துக்கொண்டார். ஆஸ்பத்திரியிலிருந்து விரைவிலேயே வீடு திரும்பினார். கூடவே இருந்து நான் பார்த்துக்கொண்டதால் பழையபடி தேறினார். மெல்ல மெல்ல அவரால் நடக்க முடிந்தது. மூப்பராக மீண்டும் சபைக் காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட ஆரம்பித்தார். அவரது சிரித்த முகமும் நகைச்சுவை உணர்வும் பழைய ஆர்னாவாக அவரைத் திருப்பித் தந்தது. அதனால், அவரைக் கவனித்துக்கொள்வது எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.
வருடங்கள் உருண்டோடின. 1986-ல் மீண்டும் ஆர்னாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதற்குள் என் அப்பா, அம்மா இருவருமே இறந்துபோய்விட்டார்கள். நாங்கள் சிட்னி நகருக்கு வெளியே இருந்த அழகிய ப்ளூ மவுண்டன்ஸ் பகுதிக்குக் குடிமாறிப் போனோம். அதனால், எங்கள் நண்பர்களுக்கு அருகிலேயே வசிக்க முடிந்தது. பின்பு, கடவுள்பக்திமிக்க கேரன் என்ற அருமையான பெண்ணை கேரி மணந்தான். எல்லாரும் ஒரே வீட்டில் வசிக்கலாமென மகனும் மருமகளும் யோசனை சொன்னார்கள். ஒருசில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் எல்லாரும் ஒரே வீட்டிற்கு குடிமாறினோம். அந்த வீடு நானும் ஆர்னாவும் முன்பு குடியிருந்த வீட்டிலிருந்து ஓரிரு தெருக்கள் தள்ளியிருந்தது.
ஆர்னா இறப்பதற்கு முன்பு கடைசி 18 மாதங்கள் படுத்த படுக்கையாகிவிட்டார். பக்கத்திலேயே இருந்து அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மாதங்களில் வீட்டைவிட்டு வெளியே போக முடியாமல் போனதால் தினமும் இரண்டு மணிநேரம் பைபிளையும் நம் பிரசுரங்களையும் படித்தேன். அப்படிப் படித்தபோது மணிமணியான ஆலோசனைகளைக் கண்டெடுத்தேன். என் சூழ்நிலையைச் சமாளித்து வாழ அவை வழிகாட்டின. எங்கள் சபையிலிருந்த வயதானவர்கள் எங்களைப் பார்க்க வந்ததும்கூட ஆறுதலாய் இருந்தது. அவர்களில் சிலர் எங்களைப் போலவே துன்பப் பாதையைக் கடந்து வந்தவர்கள். அந்த அன்புள்ளங்கள் தந்த உற்சாகம் உண்மையிலேயே எனக்கு உதவியாய் இருந்தது. 2003, ஏப்ரல் மாதம் ஆர்னா இறந்துவிட்டார். உயிர்த்தெழுதலில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
என்னைத் தூண்போல் தாங்கியவர்
சின்ன வயதில் எதார்த்தமாகவே யோசிக்க மாட்டேன், எல்லாமே சரியாக நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பேன். ஆனால், நாம் ஆசைப்படுகிறபடி எப்போதுமே வாழ்க்கை அமையாது என்பதை அனுபவத்தில் கற்றேன். நான் நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறேன். இரண்டு பேரிடிகளையும் சந்தித்திருக்கிறேன்—முதல் கணவர் எனக்குத் துரோகம் செய்துவிட்டார், இரண்டாவது கணவரை நோய் வாரிக்கொண்டது. இந்தச் சமயங்களிலெல்லாம்... பல பேரிடமிருந்து பல வழிகளில் ஆலோசனையையும் ஆறுதலையும் பெற்றேன். ஆனால், அன்றும் சரி இன்றும் சரி, என்னைத் தூண்போல் தாங்குவது ‘நீண்ட ஆயுசுள்ள’ யெகோவாவே. (தானி. 7:9) அவருடைய ஆலோசனைகள் என் சுபாவத்தைச் செதுக்கி சீராக்கியிருக்கின்றன, மிஷனரி ஊழியத்தில் நெஞ்சைவிட்டு நீங்கா நினைவுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. பிரச்சினைகள் வந்தபோது, ‘யெகோவாவின் கிருபை என்னைத் தாங்கியது . . . அவரது ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றின.’ (சங். 94:18, 19) என் குடும்பத்தார் எனக்கு அன்பையும் ஆதரவையும் அளித்திருக்கிறார்கள். அதோடு, “இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்பதற்கு ஏற்ப என் நண்பர்கள் என்னைக் கவனித்து வந்திருக்கிறார்கள். (நீதி. 17:17) அவர்களில் பெரும்பாலோர் பண்பட்ட பெரியவர்கள்.
“முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே” என்று யோபு சொன்னார். (யோபு 12:12) நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிகிறது. பண்பட்ட பெரியவர்களின் ஆலோசனைகள் எனக்கு அறிவொளியூட்டியிருக்கின்றன, அவர்களது ஆறுதலான வார்த்தைகள் கைகொடுத்து என்னைத் தூக்கிவிட்டிருக்கின்றன, அவர்களது நட்பு என் வாழ்க்கையை வளமாக்கியிருக்கிறது. அவர்களை நண்பர்களாய்ப் பெற்றதைப் பாக்கியமாய்க் கருதுகிறேன்.
எனக்கு இப்போது 80 வயது. நானும் பெரியவர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டேன். பெரியவர்களின் மனதை அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போதும்கூட பெரியவர்களைப் போய்ச் சந்திப்பதென்றால்... அவர்களுக்கு உதவி செய்வதென்றால்... எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறியவர்களும் என் சிநேகிதர்களே, அவர்களுடனும் பொழுதைக் கழிக்கிறேன். அவர்களிடம் கொப்பளிக்கும் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்கிறது. என் வயதையும் மறந்து அவர்களில் ஒருத்தி ஆகிவிடுகிறேன். ஆலோசனைக்காகவும் ஆதரவுக்காகவும் இளைஞர்கள் என்னைத் தேடி வரும்போது எனக்கு உள்ளூரச் சந்தோஷமாய் இருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a எல்வாவின் அண்ணன் ஃபிராங்க் லாம்பர்ட் சிறந்த பயனியராக ஆனார். ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதியில் அவர் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய சுவையான அனுபவங்கள் யெகோவாவின் சாட்சிகளின் இயர்புக் 1983 (ஆங்கிலம்), பக்கங்கள் 110-112-ல் இடம்பெற்றுள்ளன.
[பக்கம் 14-ன் படம்]
நரன்ட்ரா நகரத்தில் ஜாய் லெனாக்ஸுடன் பயனியர் ஊழியம் செய்தபோது
[பக்கம் 15-ன் படம்]
1960-ல் சுவிட்சர்லாந்து பெத்தேல் குடும்பத்தாரோடு எல்வா
[பக்கம் 16-ன் படம்]
சுகமில்லாத ஆர்னாவைக் கவனித்துக்கொண்ட சமயத்தில்