வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற ஏழாவது உலக வல்லரசாக எப்போது ஆனது?
▪ நேபுகாத்நேச்சார் ராஜா கனவில் கண்ட மிகப் பெரிய உலோகச் சிலை எல்லா உலக வல்லரசுகளையும் குறிப்பதில்லை. (தானி. 2:31-45) தானியேல் வாழ்ந்த காலம் முதற்கொண்டு ஆட்சி செய்து வந்த... கடவுளுடைய மக்களை எதிர்த்து வந்த... ஐந்து உலக வல்லரசுகளை மட்டுமே அது குறிக்கிறது.
ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ரோமைத் தோற்கடித்து உலக வல்லரசாகவில்லை, மாறாக ரோமிலிருந்துதான் உருவானது என்று உலோகச் சிலை பற்றி தானியேல் கொடுத்த விளக்கத்திலிருந்து தெரிகிறது. இந்தச் சிலையின் கால்களில் இருந்த இரும்பு அதன் பாதங்கள் மற்றும் விரல்கள்வரை இருந்ததை தானியேல் பார்த்தார். (பாதங்கள் மற்றும் விரல்களில் இரும்பும் களிமண்ணும் கலந்திருந்தன.)a இந்த இரும்புக் கால்களிலிருந்தே ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு உருவாகும் என்பது தானியேல் கொடுத்த விளக்கத்திலிருந்து புரிகிறது. தானியேல் சொன்னபடியே நடந்ததாகச் சரித்திரம் சொல்கிறது. ரோம வல்லரசின் பாகமாக இருந்த பிரிட்டன் 1700-களின் பிற்பகுதியில் செல்வாக்குமிக்க நாடாக உருவெடுக்க ஆரம்பித்தது. பிற்பாடு, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் திடீரென மிகப் பெரிய தேசமாக ஆனது. இருந்தாலும், அந்தச் சமயத்தில் பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற ஏழாவது உலக வல்லரசு இன்னும் உருவாகவில்லை. ஏனென்றால், பிரிட்டனும், அமெரிக்காவும் ஒன்றுசேர்ந்து அதுவரை பெரிதாக எதையும் செய்யவில்லை. ஆனால், முதல் உலகப் போரில் இந்த இரு நாடுகளும் கைகோர்த்து செயல்பட்டன.
அந்தச் சமயத்தில், “அரசாங்கத்தின் பிள்ளைகள்” அமெரிக்காவில் மிகச் சுறுசுறுப்பாக ஊழியம் செய்து வந்தார்கள். ஏனென்றால், அமெரிக்காவில் நியு யார்க், புருக்லினில் அவர்களுடைய தலைமை அலுவலகம் இருந்தது. (மத். 13:36-43) பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளிலும் பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள் மும்முரமாகப் பிரசங்கித்து வந்தார்கள். முதல் உலகப் போரின்போது பிரிட்டனும் அமெரிக்காவும் ஒரு விசேஷ ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டன. அது மட்டுமல்ல, போர்க் காலத்தில் தேசப்பற்று தீவிரமாய் இருந்ததால், ‘பெண்ணின்’ சந்ததியைச் சேர்ந்தவர்களை அவை எதிர்த்தன. அவர்கள் வெளியிட்ட பிரசுரங்களுக்குத் தடைவிதித்தன. பிரசங்க வேலையை முன்நின்று நடத்தியவர்களைச் சிறையில் அடைத்தன.—வெளி. 12:17.
பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, 1700-களின் பிற்பகுதியில் பிரிட்டன் செல்வாக்குமிக்க நாடாக உருவாக ஆரம்பித்தபோது ஏழாவது உலக வல்லரசு தோன்றவில்லை. மாறாக, எஜமானருடைய நாளின் ஆரம்பத்தில்தான் ஏழாவது உலக வல்லரசு தோன்றியது.b
[அடிக்குறிப்புகள்]
a இரும்போடு கலந்திருந்த களிமண்... இரும்பைப் போன்ற உறுதி படைத்த ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் பாகமாக இருக்கும் சில அமைப்புகளைக் குறிக்கிறது. காலப்போக்கில் இந்தக் களிமண் அந்த வல்லரசை வலிமையோடு செயல்பட விடாமல் செய்து வந்திருக்கிறது.
b தானியேல் தீர்க்கதரிசனம் புத்தகத்தில், பக்கம் 57, பாரா 24-லும், பக்கங்கள் 56 மற்றும் 139-ல் உள்ள அட்டவணைகளிலும் இருக்கும் விஷயங்களை இந்த விளக்கம் மாற்றீடு செய்கிறது.
[பக்கம் 19-ன் படம்]
உவாட்ச்டவர் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த எட்டுச் சகோதரர்கள் 1918, ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்