யெகோவாவின் சேவைக்கு ஏன் முதலிடம் கொடுக்க வேண்டும்?
“என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்.”—சங். 71:15.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
நோவா, மோசே, எரேமியா, பவுல் என அனைவரும் ஏன் யெகோவாவுக்குத் தங்கள் வாழ்வில் முதலிடம் கொடுத்தார்கள்?
உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதைத் தீர்மானிக்க எது உங்களுக்கு உதவும்?
யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுப்பதில் ஏன் உறுதியாய் இருக்கிறீர்கள்?
1, 2. (அ) ஒருவர் யெகோவாவுக்காகத் தன்னையே அர்ப்பணிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) நோவா, மோசே, எரேமியா, பவுல் ஆகியோர் எடுத்தத் தீர்மானங்களைச் சிந்தித்துப் பார்ப்பது ஏன் நல்லது?
யெகோவாவுக்காக உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெறும்போது நீங்கள் ஒரு முக்கியப் படியை எடுக்கிறீர்கள். சொல்லப்போனால், அதுதான் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானம். ஒருவிதத்தில் யெகோவாவுக்குமுன் நீங்கள் இதுபோல ஓர் உறுதிமொழியை எடுக்கிறீர்கள்: ‘யெகோவாவே, என்னோட வாழ்க்கையில எல்லா சமயத்திலும் நீங்கதான் என்னை வழிநடத்த வேண்டும். என்னையே உங்களுக்காக அர்ப்பணிச்சிருக்கேன். என்னோட நேரத்தையும் பணத்தையும் வளத்தையும் திறமையையும் சரியா பயன்படுத்த நீங்கதான் எனக்கு வழிகாட்ட வேண்டும். வாழ்க்கையில எதற்கு முதலிடம் கொடுக்கணும் என்று நீங்கதான் எனக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.’
2 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தபோது நீங்களும் இப்படித்தான் சொல்லியிருப்பீர்கள். நீங்கள் எடுத்த இந்தத் தீர்மானம் சரியானது, விவேகமானது, உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இனிமேல் யெகோவாதான் எல்லா சமயத்திலும் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருப்பதால்... உங்கள் நேரத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? நோவா, மோசே, எரேமியா, அப்போஸ்தலன் பவுல் ஆகியோரின் உதாரணங்களைச் சிந்தித்துப் பார்த்தால் பதில் தெரிந்துகொள்ள முடியும். இவர்கள் ஒவ்வொருவருமே யெகோவாவுக்கு முழுமூச்சோடு சேவை செய்தவர்கள். கிட்டத்தட்ட இவர்களுடைய சூழ்நிலையில்தான் இப்போது நாமும் இருக்கிறோம். வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் இவர்கள் எடுத்தத் தீர்மானங்களைச் சிந்தித்துப் பார்த்தால்... நம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.—மத். 28:19, 20; 2 தீ. 3:1.
பெருவெள்ளத்திற்கு முன்
3. நம்முடைய நாட்கள் எந்த விதத்தில் நோவாவின் நாட்களைப் போல இருக்கின்றன?
3 நம்முடைய நாட்கள் நோவாவின் நாட்களைப் போல இருக்கும் என இயேசு அன்றைக்கே சொல்லி வைத்தார். “நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ அப்படியே மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும்” என்று அவர் சொன்னார். அன்றிருந்த மக்கள் “நோவா பேழைக்குள் நுழைந்த நாள்வரை . . . சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை.” (மத். 24:37-39) இன்றும் பெரும்பாலோர் காலத்தின் அவசரத்தன்மையை உணராமல் இருக்கிறார்கள். கடவுளுடைய ஊழியர்கள் சொல்லும் எச்சரிக்கை செய்தியைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மனிதர்களுடைய விஷயத்தில் கடவுள் தலையிடப்போகிறார் என்று சொன்னால் நோவாவின் நாட்களில் இருந்தவர்களைப் போலவே கேலிசெய்கிறார்கள். (2 பே. 3:3-7) மக்கள் தன்னுடைய செய்திக்குச் செவிகொடுக்காதபோதிலும் நோவா எப்படி தன் நேரத்தைப் பயன்படுத்தினார்?
4. யெகோவாவிடமிருந்து கட்டளை பெற்ற பிறகு நோவா தன் நேரத்தை எப்படிப் பயன்படுத்தினார், ஏன்?
4 கடவுள் தமது தீர்மானத்தைச் சொல்லி, நோவாவுக்குக் கட்டளை கொடுக்க... பேழை கட்டும் பணி ஆரம்பமானது—மனித உயிர்களையும் மிருக உயிர்களையும் பாதுகாக்க. (ஆதி. 6:13, 14, 22) பேழை கட்டுவது போக, யெகோவா சீக்கிரத்தில் கொண்டுவரவிருந்த அழிவைப் பற்றியும் நோவா அறிவித்தார். அந்த அழிவிலிருந்து பாதுகாக்கப்பட எல்லாரும் பேழைக்குள் வந்தே ஆக வேண்டுமென நோவா விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார். அதனால்தான், ‘நீதியைப் பிரசங்கித்தவர்’ என்று அப்போஸ்தலன் பேதுரு அவரை அழைத்தார். (2 பேதுரு 2:5-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்... நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதிலோ, மற்றவர்களுக்கு முன் ‘ஜாம் ஜாம்’ என்று வாழ்வதிலோ, எக்கச்சக்கமான பொருள்களைச் சேர்த்து வைப்பதிலோ கவனம் செலுத்தியிருந்தால் அது சரியாக இருந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்காது! எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் இப்படிப்பட்ட ஆசைகளுக்கு அவர்கள் இடங்கொடுக்கவில்லை.
எளிய வாழ்வைத் தேர்ந்தெடுத்த எகிப்திய இளவரசன்
5, 6. (அ) எதற்காக மோசேக்கு அத்தனை பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம்? (ஆ) எகிப்தின் இன்பங்களை மோசே ஏன் வேண்டாமென்று ஒதுக்கினார்?
5 அடுத்து, மோசேயின் உதாரணத்தைப் பார்ப்போம். அவர் பார்வோனின் மகளால் தத்தெடுக்கப்பட்டு எகிப்திய அரண்மனையில் வளர்க்கப்பட்டார். இந்த இளவரசனுக்கு “எகிப்தியருடைய எல்லாத் துறைகளிலும் பயிற்சி” கொடுக்கப்பட்டது. (அப். 7:22; யாத். 2:9, 10) ஒருவேளை பார்வோனின் அரண்மனையில் உயர் பதவியில் அவரை அமர்த்த அவருக்கு இப்படிப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம். மோசே நினைத்திருந்தால், அந்த வல்லரசின் முக்கியப் புள்ளியாக ஆகியிருக்கலாம். அதிகாரமும், ஆடம்பரமும், ஆனந்தமும் அவர் காலடியில் கிடந்திருக்கும். ஆனால், இவற்றையெல்லாம் ஆண்டு அனுபவிக்க மோசே ஆசைப்பட்டாரா?
6 சிறுவனாய் இருந்தபோது அவரது பெற்றோர் கற்றுத்தந்த விஷயங்கள் அவருடைய மனதில் இன்னும் பசுமையாய் இருந்தன. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதிகளைப் பற்றி நிச்சயம் அவருடைய பெற்றோர் அவருக்குச் சொல்லி கொடுத்திருப்பார்கள். அந்த வாக்குறுதிகள்மீது மோசேக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. ‘இந்த அரண்மனைல இருந்தா... என் எதிர்காலம் என்ன ஆகும்? நான் எப்படி யெகோவாவுக்கு உண்மையாயிருக்க முடியும்?’ என்பதைப் பற்றியெல்லாம் அவர் தீவிரமாய் யோசித்திருப்பார். எகிப்திய இளவரசனாக வலம் வருவதா... இஸ்ரவேல அடிமையாக வாழ்வதா... என்று தீர்மானிக்க வேண்டிய சமயம் வந்தபோது அவர் என்ன செய்தார்? “பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பதையே” தேர்ந்தெடுத்தார். (எபிரெயர் 11:24-26-ஐ வாசியுங்கள்.) பிற்பாடு, யெகோவா கொடுத்த வேலையைச் செய்ய தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். (யாத். 3:2, 6-10) மோசே ஏன் அவ்வாறு செய்தார்? ஏனென்றால், கடவுளுடைய வாக்குறுதிகளில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ‘எகிப்தில் நீ இருந்தால் உன் எதிர்காலமே இருண்டுவிடும்’ என்று அவர் மனம் சொல்லியது. அது என்னவோ உண்மைதான். ஏனென்றால், வெகு சீக்கிரத்தில் யெகோவா அந்தத் தேசத்தின் மீது பத்து வாதைகளை வரவழைத்து அதைச் சின்னாபின்னமாக்கினார். யெகோவாவின் இன்றைய ஊழியர்கள் இந்தப் பதிவிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக்கொள்ள முடியுமா? இந்த உலகத்தின் அந்தஸ்தும் ஆடம்பரமும் நம் கண்ணை மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. யெகோவாவையும் அவரது சேவையையுமே நம் கண்முன் வைக்க வேண்டும்.
அழிவு வருமென்று எரேமியா அறிந்திருந்தார்
7. எரேமியாவின் சூழ்நிலை எப்படி நம்முடைய சூழ்நிலைக்கு ஒத்திருந்தது?
7 யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுத்த இன்னொரு நபர் எரேமியா. விசுவாசதுரோகத்தில் மூழ்கியிருந்த எருசலேம்வாசிகளுக்கும் யூதாவாசிகளுக்கும் அழிவின் செய்தியை அறிவிக்க இந்தத் தீர்க்கதரிசியை யெகோவா நியமித்திருந்தார். ஒருவிதத்தில், எரேமியா “கடைசிநாட்களில்” வாழ்ந்துகொண்டிருந்தார். (எரே. 23:19, 20) எருசலேமும் யூதேயாவும் சீக்கிரத்தில் அழிந்துவிடும் என்பதில் அவர் உறுதியாயிருந்தார்.
8, 9. (அ) பாருக் தன்னை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது? (ஆ) எதிர்காலத் திட்டங்கள் போடும்போது நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
8 எருசலேமும் யூதேயாவும் சீக்கிரத்தில் அழிந்துவிடும் என்பதில் எரேமியா உறுதியாயிருந்ததால் என்ன செய்தார்? அழிந்து போகவிருந்த ‘உலகில்’ சொத்துசுகங்களை அவர் நாடவில்லை. அப்படி நாடியிருந்தாலும் பிரயோஜனம் இருந்திருக்காதே. ஆனால், எரேமியாவின் செயலரான பாருக் அப்படி நினைக்கவில்லை. அவருடைய மனம் கொஞ்சக் காலத்திற்கு வேறு தடத்தில் பயணித்தது. ஆகவே, பாருக்கிடம் இவ்வாறு சொல்லும்படி எரேமியாவுக்குக் கடவுள் கட்டளையிட்டார்: ‘இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும். நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் . . . ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன்.”—எரே. 45:4, 5.
9 பாருக் எப்படிப்பட்ட “பெரிய காரியங்களை” தேடினார் என்று நமக்குச் சரியாகத் தெரியாது.a ஆனால், அவை எதுவாக இருந்தாலும் சரி, அவை நிரந்தரமானவை அல்ல. கி.மு. 607-ல் பாபிலோனியர் எருசலேமைத் தரைமட்டமாக்கவிருந்தபோது அவை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழியவிருந்தன. இதில் நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா? வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்காலத்திற்காக நாம் சில விஷயங்களைத் திட்டமிட வேண்டும் என்பது உண்மைதான். (நீதி. 6:6-11) ஆனால், கொஞ்ச காலமே இருக்கப் போகும் காரியங்களுக்காக நம்முடைய எல்லா நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பது ஞானமாக இருக்குமா? அப்படியானால், யெகோவாவின் அமைப்பு மட்டும்... புதிய ராஜ்ய மன்றங்களையும் கிளை அலுவலகங்களையும் கட்டுவதற்காக... இன்னும் மற்ற காரியங்களுக்காக... திட்டமிடுகிறதே என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் மறந்துவிடக்கூடாது: அவை கடவுளுடைய அரசாங்கத்திற்குரிய காரியங்களை ஆதரிக்கின்றன. யெகோவாவின் ஊழியர்களும் எதிர்காலத் திட்டங்களைப் போடும்போது அதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. “‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும்தான் [நான்] நாடிக்கொண்டு இருக்கிறேன்’” என்று நீங்கள் ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டு சொல்ல முடியுமா?—மத். 6:33.
“அவற்றையெல்லாம் வெறும் குப்பையாகக் கருதுகிறேன்”
10, 11. (அ) கிறிஸ்தவராவதற்கு முன்பு பவுல் எதை உயர்வாகக் கருதினார்? (ஆ) பவுலுடைய லட்சியம் தலைகீழாய் மாறியதற்கு என்ன காரணம்?
10 கடைசியாக, பவுலுடைய உதாரணத்தைச் சிந்திப்போம். அவர் கிறிஸ்தவராவதற்கு முன்பு... உலகின் கண்ணோட்டத்தில் அவருக்குப் பிரகாசமான ஓர் எதிர்காலம் காத்திருந்தது. புகழ் பெற்ற ஓர் ஆசானிடம் யூதச் சட்டம் படித்திருந்தார். யூதர்களின் தலைமைக் குருவிடமிருந்து அதிகாரம் பெற்றிருந்தார். அவருடைய வயதில் இருந்த அநேகரைவிட யூத மதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்கினார். (அப். 9:1, 2; 22:3; 26:10; கலா. 1:13, 14) ஆனால்... யூதத் தேசத்தை யெகோவா உதறித்தள்ளிவிட்டதை பவுல் உணர்ந்தபோது அவருடைய அந்தஸ்திற்கும் அதிகாரத்திற்கும் அறிவிற்கும் எந்த மதிப்பும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டார்.
11 யூத சமுதாயத்தில் பேரையோ புகழையோ அடைவதில் ஒரு லாபமும் இல்லை... அதை யெகோவாவும் மெச்சிக்கொள்ள மாட்டார்... என்பதை பவுல் உணர்ந்துகொண்டார். (மத். 24:2) யெகோவாவுடைய நோக்கங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, சீடராக்கும் பாக்கியத்தைப் பெற்ற பிறகு, அவருடைய கண்ணோட்டம் அடியோடு மாறிவிட்டது. முன்பு பரிசேயனாக இருந்தபோது எவற்றை உயர்வாகக் கருதினாரோ அவற்றை இப்போது ‘வெறும் குப்பையாகக் கருதினார்.’ யூத மதத்தை முன்னேற்றுவிக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு, நற்செய்தியை அறிவிப்பதில் மும்முரமாய் இறங்கினார். தன்னுடைய வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தார்.—பிலிப்பியர் 3:4-8, 15-ஐ வாசியுங்கள்; அப். 9:15.
எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
12. ஞானஸ்நானம் எடுத்த பிறகு இயேசு எதற்கு முதலிடம் கொடுத்தார்?
12 நோவா, மோசே, எரேமியா, பவுல் எனப் பல பேர் தங்கள் நேரத்தையும் சக்தியையும் கடவுளுடைய சேவைக்காகப் பெருமளவு அர்ப்பணித்தார்கள். இவர்கள் ஒவ்வொருவருமே நமக்கு வழிகாட்டிகள்தான். என்றாலும், இயேசுவே நம்முடைய தலைசிறந்த வழிகாட்டி. (1 பே. 2:21) இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் தம் வாழ்க்கையையே செலவிட்டார். அப்படியானால்... யெகோவாவைத் தங்கள் வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவருடைய சேவைக்கே முதலிடம் தரவேண்டும். நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா? சரி... நம்முடைய சொந்த காரியங்களைக் கவனித்துக்கொண்டு அதேசமயத்தில் யெகோவாவின் சேவையிலும் எப்படி அதிகமாய் ஈடுபடலாம்?—சங்கீதம் 71:15-ஐயும் 145:2-ஐயும் வாசியுங்கள்.
13, 14. (அ) எல்லாக் கிறிஸ்தவர்களும் எதைச் செய்ய உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்? (ஆ) எதைச் செய்வது கிறிஸ்தவர்களுக்குச் சந்தோஷத்தை அளிக்கும்?
13 பயனியர் ஊழியம் செய்வதைக் குறித்து ஜெபத்துடன் யோசித்துப் பார்க்கும்படி காலங்காலமாக யெகோவாவின் அமைப்பு நம்மை உற்சாகப்படுத்தி வருகிறது. ஊழியத்தில் ஒவ்வொரு மாதமும் 70 மணிநேரம் செலவிட சிலருடைய சூழ்நிலை அனுமதிப்பதில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. (1 தீ. 5:8) இப்போது, உங்களுடைய விஷயத்திற்கு வருவோம். பயனியர் ஊழியமே செய்ய முடியாத சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா?
14 இந்த வருடம் இயேசுவின் நினைவுநாள் அனுசரிப்பு காலத்தின்போது பல சகோதர சகோதரிகள் அனுபவித்த ஆனந்தத்தைச் சற்று அசைபோட்டுப் பாருங்கள். மார்ச் மாதத்தில் துணை பயனியர் ஊழியம் செய்பவர்கள் 30 மணிநேரமோ 50 மணிநேரமோ அறிக்கை செய்வதற்கு ஒரு விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டது. (சங். 110:3) லட்சக்கணக்கானோர் துணை பயனியர் சேவையில் ஈடுபட்டார்கள். அதனால், சபைகளில் எப்போதும் இல்லாதளவுக்கு ஆனந்தமும் மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தன. இதுபோன்ற சந்தோஷத்தை அடிக்கடி ருசிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் வேலைகளை அதற்கேற்றபடி சரிசெய்துகொள்ளுங்கள். பயனியர் ஊழியம் செய்யும் கிறிஸ்தவர்கள், “யெகோவாவே, உங்களுக்காக என்னால முடிந்த எல்லாத்தையும் இன்னைக்கு நான் செஞ்சிருக்கேன்” என்று சொல்லி ஒவ்வொரு நாள் முடிவிலும் சந்தோஷப்பட முடியும்.
15. உயர் கல்வி கற்பதை ஓர் இளம் கிறிஸ்தவர் எவ்வாறு கருத வேண்டும்?
15 நீங்கள் ஓர் இளம் கிறிஸ்தவராக படிப்பை முடிக்கும் தறுவாயில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்க வாய்ப்பில்லை. ஓரளவு நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள். ஒழுங்கான பயனியராக ஆவதைக் குறித்துக் கவனமாக யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் உயர் கல்வி கற்று நல்ல வேலையில் சேர்ந்தால் வாழ்க்கையில் சுகமாய் இருப்பீர்கள் என்று கல்வி ஆலோசகர்கள் சொல்லலாம், அதில் தவறில்லை. ஆனால், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் சமூக அமைப்புகளும் நிதி நிறுவனங்களும் நிலையானவை அல்ல. மறுபட்சத்தில், நீங்கள் கடவுளுடைய சேவையில் ஈடுபட்டால் உங்கள் நேரத்தைப் பயனுள்ள விதத்தில் செலவழிப்பீர்கள். எதிர்காலத்தில் நிலையான வாழ்வையும் பெறுவீர்கள். அதுமட்டுமல்ல, ஆதர்ச முன்மாதிரியான இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவீர்கள். அதுதான் நீங்கள் எடுக்கும் ஞானமான தீர்மானம். அது உங்கள் வாழ்க்கைக்குச் சந்தோஷம் சேர்க்கும், பாதுகாப்பை அளிக்கும். யெகோவாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கடைசிவரை காப்பாற்ற நீங்கள் உறுதியாய் இருப்பதைக் காட்டும்.—மத். 6:19-21; 1 தீ. 6:9-12.
16, 17. வேலை விஷயத்திலும் பொருள்களை வாங்கும் விஷயத்திலும் நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
16 இன்று கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் தங்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீண்டநேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், சிலர் தேவைக்கதிகமாகப் பணம் சம்பாதிப்பதற்காகக் கூடுதல் மணிநேரம் வேலை செய்யலாம். (1 தீ. 6:8) மார்க்கெட்டில் வரும் புதுப் புது பொருள்களை எல்லாம் வாங்கியே தீரவேண்டும், அவை இல்லாவிட்டால் வாழவே முடியாது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் புகுத்துவதற்கு இன்றைய வியாபார உலகம் மும்முரமாய் செயல்படுகிறது. ஆனால், தங்கள் வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதில் உண்மைக் கிறிஸ்தவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள். சாத்தானுடைய உலகம் தங்களை ஆட்டிப்படைக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. (1 யோ. 2:15-17) வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தைப் பயனுள்ள விதத்தில் செலவழிக்க யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுத்து பயனியர் ஊழியம் செய்வதைவிட சிறந்த வழி வேறெதாவது இருக்க முடியுமா?
17 யெகோவாவுக்காகத் தங்களை அர்ப்பணித்திருக்கும் எல்லாருமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: வாழ்க்கையில் என் லட்சியம் என்ன? கடவுளுடைய அரசாங்கத்திற்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கிறேனா? இயேசுவின் தியாக மனப்பான்மையைப் பின்பற்றுகிறேனா? தம்மைத் தொடர்ந்து பின்பற்றும்படி இயேசு கொடுத்த அறிவுரையை ஏற்று நடக்கிறேனா? பிரசங்க வேலையில் அல்லது மற்ற ஆன்மீகக் காரியங்களில் இன்னும் அதிகமாய் ஈடுபட என்னுடைய அட்டவணையில் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா? தற்சமயம் செய்ய முடியாவிட்டாலும் யெகோவாவுக்காக என் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிக்க முடிந்தளவு முயற்சி செய்கிறேனா?
‘மனமுவந்து செயல்படுங்கள்’
18, 19. எதைக் குறித்து நீங்கள் ஜெபம் செய்யலாம், அப்படிப்பட்ட ஜெபம் யெகோவாவை ஏன் சந்தோஷப்படுத்தும்?
18 கடவுளுடைய மக்கள் மத்தியில் பற்றியெரியும் ஆர்வத் தீயைப் பார்க்கும்போது நமக்குள்ளும் சந்தோஷம் தானாகவே பற்றிக்கொள்கிறது. ஆனால், சிலருக்கு... பயனியர் ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இன்னும் சிலர் சூழ்நிலை சாதகமாய் இருக்கிறபோதிலும்... பயனியர் ஊழியம் செய்ய தாங்கள் தகுதியற்றவர்கள் என்று நினைத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுகிறார்கள். (யாத். 4:10; எரே. 1:6) ஒருவேளை நீங்களும் அப்படி உணர்ந்தால் என்ன செய்யலாம்? உங்கள் மனநிலையைக் குறித்து யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். “உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காகக் கடவுள் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்” என்று சக கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார். (பிலி. 2:13) ஊழியத்தில் இன்னும் அதிகமாய் ஈடுபட உங்கள் மனம் உங்களைத் தூண்டவில்லை என்றால், அந்த எண்ணத்தையும் அதற்கான திறமையையும் கொடுக்கும்படி யெகோவாவிடம் மன்றாடுங்கள்.—2 பே. 3:9, 11.
19 நோவா, மோசே, எரேமியா, பவுல், இயேசு என எல்லாருமே யெகோவாவுக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள். அவருடைய எச்சரிப்பு செய்தியை அறிவிப்பதற்காகத் தங்கள் நேரத்தையும் சக்தியையும் கணக்குப் பார்க்காமல் செலவிட்டவர்கள். யாரும், எதுவும் தங்களைத் திசைதிருப்ப அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த உலகத்திற்கு அழிவு நெருங்கிவிட்டது. எனவே, கடவுளுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிற நாம் ஒவ்வொருவரும் இந்த முத்தான முன்மாதிரிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற இன்றும் என்றும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோமாக. (மத். 24:42; 2 தீ. 2:15) அப்படிச் செய்தால், யெகோவாவின் நெஞ்சில் பால் வார்ப்போம், அளவில்லா ஆசீர்வாதங்களை அறுவடை செய்வோம்.—மல்கியா 3:10-ஐ வாசியுங்கள்.
[அடிக்குறிப்பு]
a எரேமியா மூலம் நமக்குக் கடவுள் சொல்லும் வார்த்தை என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 104-106-ஐப் பாருங்கள்; அதோடு, காவற்கோபுர பத்திரிகையில் ஆகஸ்ட் 15, 2006 தேதியிட்ட இதழில் பக்கங்கள் 16-19-ஐயும், அக்டோபர் 15, 2008 தேதியிட்ட இதழில் பக்கங்கள் 8, 9-ல் பாராக்கள் 7-9-ஐயும் பாருங்கள்.
[பக்கம் 21-ன் படம்]
நோவாவின் எச்சரிக்கையை ஜனங்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை
[பக்கம் 24-ன் படம்]
ஒழுங்கான பயனியராகச் சேவை செய்வதைக் குறித்துக் கவனமாக யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?