ஞானமாய் நடங்கள் “திறம்பட்ட வழிநடத்துதலை” பெறுங்கள்
வாழ்க்கை என்பது ஒரு கடற்பயணத்திற்கு ஒப்பிடப்படுகிறது. சரியான வழிநடத்துதலைப் பெறுகிறவர்களின் பயணம் சுகமாய் இருக்கிறது. சொந்த அறிவைச் சார்ந்திருப்பவர்களின் பயணமோ சூறாவளியில் சிக்கிக்கொள்கிறது. (சங். 107:23, 27) வாழ்க்கையைக் கடற்பயணத்திற்கு ஒப்பிடுவது ஏன் கச்சிதமாய் இருக்கிறது?
அந்தக் காலத்தில், கடற்பயணம் செய்வது லேசுப்பட்ட விஷயம் அல்ல, நிறைய அனுபவம் தேவைப்பட்டது. கரைகண்ட கப்பலோட்டிகளிடமிருந்து, உதாரணத்திற்குக் கப்பல் தலைவனிடமிருந்து, கற்றுக்கொள்ள வேண்டிய கலையாக அது இருந்தது. (அப். 27:9-11) எல்லாரையும்விட கப்பல் தலைவனின் படத்தை மட்டும் பெரிதாகச் சித்தரிப்பதன் மூலம் அவருடைய பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் பழங்கால ஓவியங்கள் சிறப்பித்துக் காட்டுகின்றன. பரந்து விரிந்த கடலில் பயணிப்பதற்கு காற்று... நட்சத்திரங்கள்... போன்ற திசைக்காட்டிகளைப் பற்றிக் கடலோடிகள் கற்றறிந்தார்கள். சில மாலுமிகள் ‘திறமைமிக்கவர்களாய்’ இருந்ததாக பைபிள் குறிப்பிடுகிறது. ‘திறமைமிக்கவர்கள்’ என்ற வார்த்தை ‘ஞானிகள்’ என்றும் அர்த்தம் தரலாம்.—எசே. 27:8, பொது மொழிபெயர்ப்பு.
இன்று வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பது, பண்டைய கடற்பயணங்கள் போல் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், “எதிர்காற்றை” எதிர்த்து போராட வழி இருக்கிறது. அது என்ன?
‘திறம்பட்ட வழிநடத்துதல்’ பெற...
வாழ்க்கை ஒரு கடற்பயணத்திற்கு ஒப்பிடப்படுவதை மனதில் வைத்து... பைபிள் சொல்லும் இந்த உண்மையைச் சிந்தித்துப் பாருங்கள்: “ஞானமுள்ளவன் காதுகொடுத்துக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி திறம்பட்ட வழிநடத்துதலைப் பெறுவான்.” (நீதி. 1:5, 6, NW) திறம்பட்ட வழிநடத்துதல் என்பதற்கான எபிரெய வார்த்தை பழங்கால கப்பல் தலைவன் செய்துவந்த பணிகளைக் குறிக்கலாம். திறம்பட வழிகாட்ட ஒருவருக்குள்ள திறனையும் அது குறிக்கலாம்.
“திறம்பட்ட வழிநடத்துதலை” பெற்றால் வாழ்க்கை என்ற கடலில் சுகமாய்ப் “பயணிக்க” முடியும். ஆனால், அதற்கு முயற்சி தேவை. எனவே, ‘ஞானம்,’ “புத்திமதி,” “விவேகம்” ஆகிய அனைத்தையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதிமொழிகள் சொல்கிறது. (நீதி. 1:2-6; 2:1-9) அநியாயமான காரியங்களைச் சாதிக்க கெட்டவர்களே ‘ஆலோசனை’ பெறுகிறார்கள் என்றால், நாம் எந்தளவு கடவுளுடைய ஆலோசனையை, அதாவது வழிநடத்துதலை, பெறுவது அவசியம்.—நீதி. 12:5.
எனவே, கடவுளுடைய வார்த்தையை நாம் ஆராய்ந்து படிக்க வேண்டும். அப்படிப் படித்தால்... யெகோவாவைப் பற்றியும், அவரை அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கிற இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அருமையான விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். (யோவா. 14:9) கிறிஸ்தவக் கூட்டங்களில் ஞானமான ஆலோசனைகளை ஏராளமாகப் பெறுகிறோம். அதோடு, மற்றவர்களின் அனுபவங்களிலிருந்தும் நம்முடைய பெற்றோரின் அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.—நீதி. 23:22.
ஆபத்துகளை எதிர்பார்த்து திட்டமிடுங்கள்
வாழ்க்கை எனும் கடற்பயணத்தில், முக்கியமாக சூறாவளி அடிக்கும் சமயத்தில், “திறம்பட்ட வழிநடத்துதல்” நமக்கு ரொம்பவே அவசியம். இக்கட்டான ஒரு சூழ்நிலையில் என்ன முடிவு எடுக்க வேண்டுமென்று தெரியாமல் இருக்கும்போது நாம் திணறிப்போகலாம், அதனால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்கலாம்.—யாக். 1:5, 6.
ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், “திறம்பட்ட வழிநடத்துதல்” என்பதற்கான எபிரெய வார்த்தை யுத்தம் சம்பந்தமாகவும் பயன்படுத்தப்படுகிறது. “போரில் வெற்றி பெற திறம்பட்ட வழிநடத்துதல் தேவை; ஆலோசனைக்காரர் அநேகர் இருக்கும்போது வெற்றி நிச்சயம்” என்று நீதிமொழிகளில் வாசிக்கிறோம்.—நீதி. 20:18; 24:6, NW.
போர்த் திறன் படைத்த ஒருவர் போர்க்களத்தில் வரும் ஆபத்துகளை எதிர்பார்த்து அவற்றைச் சந்திக்கத் தயாராய் இருப்பார். அதேபோல் நாமும் கடவுளோடு நமக்குள்ள பந்தத்திற்கு வரும் ஆபத்துகளை எதிர்பார்த்து அவற்றைச் சந்திக்கத் தயாராய் இருக்க வேண்டும். (நீதி. 22:3) உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கிறது என்றால்... அல்லது பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது என்றால்... அதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். எவ்வளவு சம்பளம் கிடைக்கும்... வேலைக்குப் போய்வர எவ்வளவு நேரம் பிடிக்கும்... இப்படிப் பல விஷயங்களை நீங்கள் யோசிக்கலாம். அது சரிதான். ஆனால், மற்ற விஷயங்களைக் குறித்தும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்: இந்த வேலையை ஏற்றுக்கொண்டால் பைபிள் நியமங்களை மீற வேண்டியிருக்குமா? ஒருவேளை, நீண்ட மணிநேரம் வேலை செய்ய சொன்னால் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் போக எனக்கு நேரம் கிடைக்குமா?—லூக். 14:28-30.
லோரட்டா என்ற சகோதரி உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தார். அந்த கம்பெனியை வேறொரு இடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. அந்தப் புதிய இடத்தில் லோரட்டாவுக்குப் பெரிய பதவி கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. “இந்த மாதிரி வாய்ப்பு உங்களுக்கு வாழ்க்கையில் கெடைக்கவே கெடைக்காது, இந்தப் பொன்னான வாய்ப்ப நழுவ விட்டுடாதீங்க” என்று அதன் உரிமையாளர்கள் லோரட்டாவிடம் சொன்னார்கள். அதோடு, “கவலப்படாதீங்க, அந்த இடத்துக்குப் பக்கத்தில ஒரு ராஜ்ய மன்றமும் இருக்கு” என்றும் சொன்னார்கள். ஆனால் லோரட்டா, வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டு தன்னுடைய படைப்பாளருக்கு இன்னும் அதிகமாய்ச் சேவை செய்ய விரும்பினார். அந்தப் பெரிய பதவியை ஏற்றுக்கொண்டால் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் போக அந்தளவு நேரம் இருக்காது என்பதைத் தெரிந்துகொண்டார். அதனால், தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அப்போது கம்பெனி உரிமையாளர் ஒருவர் அவரைத் தனியாகக் கூப்பிட்டு... யாரை இழந்தாலும் அவரை இழக்க நிர்வாகம் தயாராயில்லை என்று சொன்னார். இருந்தாலும் லோரட்டா தன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது, 20 வருடங்களாக அவர் ஓர் ஒழுங்கான பயனியராக சேவை செய்து வருகிறார். “திறம்பட்ட வழிநடத்துதலை” பெற்று அதன்படி திட்டமிட்டதால்தான் வாழ்க்கையில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார். ஆம், கடவுளுடைய வார்த்தையில் உள்ள ஆலோசனையின்படி நடந்ததால்தான் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. யெகோவாவுடன் தனக்கிருந்த பந்தம் உறுதியானதாகவும்... அநேகர் சத்தியத்திற்கு வர உதவ முடிந்திருப்பதாகவும்... சொல்கிறார்.
குடும்பத்தில், ‘திறம்பட்ட வழிநடத்துதல்’ நிச்சயம் தேவை. பிள்ளைகளை வளர்த்தெடுப்பது என்பது ஒரு நீண்டகால திட்டம். குடும்பத்தாரின் ஆன்மீகத் தேவைகளை அல்லது பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விஷயத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாருடைய எதிர்காலத்தையும் பாதிக்கும். (நீதி. 22:6) எனவே, கிறிஸ்தவப் பெற்றோர் பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எங்கள் பிள்ளைகள் கடவுளிடம் நெருங்கி வருவதற்கும்... அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைத் திறமையாய்ச் சமாளிப்பதற்கும்... எங்களுடைய சொல்லும் செயலும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றனவா?’ ‘இருப்பதை வைத்து திருப்தியாய் வாழ வேண்டும்... ஊழியம்தான் இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை... என்பதை எங்களைப் பார்த்து அவர்கள் புரிந்துகொள்கிறார்களா?’—1 தீ. 6:6-10, 18, 19.
இந்த உலகத்தார் நினைப்பது போல் அந்தஸ்தும் ஆஸ்தியும் உண்மையான வெற்றிக்கு அடையாளம் அல்ல. சாலொமோன் ராஜா தன் வாழ்க்கையில் உணர்ந்த உண்மை இது. “தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்” என்று எழுதிவைக்கும்படி கடவுளுடைய சக்தி அவரைத் தூண்டியது. (பிர. 8:12) பைபிள் தரும் திறம்பட்ட வழிநடத்துதலைப் பெறுவதே ஞானமானச் செயல் என்பதையே இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.—2 தீ. 3:16, 17.
[பக்கம் 30-ன் படம்]
கப்பல் தலைவனின் பங்கைச் சிறப்பித்துக் காட்ட அவருடைய படம் மட்டும் பெரிதாகச் சித்தரிக்கப்பட்டது
[படத்திற்கான நன்றி]
Su concessione del Ministero per i Beni e le Attività Culturali. எந்த விதத்திலும் இந்தப் படத்தை நகல் எடுக்கக் கூடாது.