நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்!
சத்தியத்தில் இல்லாத உங்கள் மணத்துணையும் உங்களோடு சேர்ந்து யெகோவாவை வழிபட வேண்டுமென பல வருடங்களாக ஆசையோடு காத்திருக்கிறீர்களா?
அல்லது, முதலில் ஆர்வமாகப் படித்த உங்கள் பைபிள் மாணாக்கர், பிறகு படிப்பை நிறுத்திவிட்டதால் சோர்ந்துபோய் இருக்கிறீர்களா?
பிரிட்டனிலிருந்து வரும் சில அனுபவங்களைக் கவனியுங்கள். நம்பிக்கையை இழந்துவிடாதிருக்க அவை உங்களுக்கு உதவும். “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு” என்ற வசனத்திற்கு ஏற்ப, சத்தியத்தில் ஆர்வம் காட்டாதவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.—பிர. 11:1.
விடாமுயற்சி முக்கியம்
உங்கள் பங்கில் விடாமுயற்சி அவசியம். அதாவது, சத்தியத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும், யெகோவாவைத் தொடர்ந்து சேவிக்க வேண்டும். (உபா. 10:20) கியார்கினா அதைத்தான் செய்தார். 1970-ல் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது அவருடைய கணவர் கிரியாகோஸ் கொதிப்படைந்தார். படிப்பை நிறுத்த முயற்சி செய்தார், சாட்சிகள் வீட்டிற்கு வருவதைத் தடைசெய்தார், கண்ணில்பட்ட பிரசுரங்களை எல்லாம் ஒளித்துவைத்தார்.
கியார்கினா கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தபோது அவருடைய கோபம் தலைக்கேறியது. ஒருநாள் விதண்டாவாதம் செய்வதற்கென்றே ராஜ்ய மன்றத்திற்குப் போனார். அவர் ஆங்கிலத்தைவிட கிரேக்கு மொழியில் நன்கு பேசியதைக் கண்ட ஒரு சகோதரி, அவருக்கு உதவ கிரேக்க மொழிபேசும் சகோதரரை மற்றொரு சபையிலிருந்து அழைத்தார். அந்தச் சகோதரர் அன்பாக நடந்துகொண்டது அவருடைய மனதைக் கவர்ந்தது. சில மாதங்களுக்கு அந்தச் சகோதரருடன் பைபிளைப் படித்தார். பிறகு படிப்பை விட்டுவிட்டார்.
மூன்று வருடங்களாக கியார்கினாவுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். ‘ஞானஸ்நானம் எடுத்தால் உன்னை அம்போனு விட்டுட்டு போயிடுவேன்’ என்று பயமுறுத்தினார். ஞானஸ்நானம் எடுக்கப்போகும் நாளில், கிரியாகோஸ் தன்னைவிட்டு போய்விடக் கூடாதென்று கியார்கினா ஊக்கமாக ஜெபம் செய்தார். மாநாட்டுக்கு கியார்கினாவை அழைத்துச் செல்ல சாட்சிகள் வீட்டிற்கு வந்தபோது, “நீங்க முன்னால போங்க. நாங்க பின்னால கார்ல வர்றோம்” என்று கிரியாகோஸ் சொன்னார். காலை நிகழ்ச்சிநிரலில் கலந்துகொண்டார். தன் மனைவி ஞானஸ்நானம் எடுத்ததையும் பார்த்தார்.
அதன் பிறகு, மனைவிக்கு அவ்வளவாக தொல்லை கொடுக்கவில்லை; போகப் போக பெரிய மாற்றங்களைச் செய்தார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு கிரியாகோஸ் ஞானஸ்நானம் பெற்றார்! எது அவரைத் தூண்டியது? “என்ன தடை வந்தாலும் யெகோவாவ வணங்குறத கியார்கினா நிறுத்தவே இல்ல. அதுதான் என் மனச தொட்டுச்சு” என்று அவர் சொல்கிறார். கியார்கினா சொல்கிறார்: “என் கணவர் என்னை எதிர்த்தாலும் கடவுள வணங்குறத நிறுத்த கூடாதுன்னு உறுதியா இருந்தேன். எப்பவும் ஜெபம் செஞ்சிட்டே இருந்தேன்; அதனால நம்பிக்கைய இழக்கவே இல்ல.”
புதிய சுபாவத்தின் மகிமை
உங்கள் மணத்துணைக்கு உதவ கைகொடுக்கும் இன்னொரு விஷயம், கிறிஸ்தவ சுபாவத்தை வளர்த்துக்கொள்வது. “உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், . . . நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்” என்று கிறிஸ்தவ மனைவிகளுக்கு அப்போஸ்தலன் பேதுரு அறிவுரை கூறினார். (1 பே. 3:1, 2) இந்த அறிவுரைப்படி வாழ்ந்தவர்தான் கிறிஸ்டின். அவருடைய கணவர் ஜானை சத்தியத்திடம் ஈர்க்க 20 வருடங்கள் எடுத்தபோதிலும் அவர் நம்பிக்கையை இழக்கவே இல்லை. ஜானுக்கு சுத்தமாகக் கடவுள் நம்பிக்கை கிடையாது. மதத்தில் துளியும் ஆர்வம் இல்லை. ஆனால், கிறிஸ்டின் புதிதாகச் சேர்ந்த மதத்தில் வைராக்கியமாக இருந்ததை அவர் கவனித்தார். “இந்த மதத்தில் சேர்ந்த பிறகு அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா. எந்தவொரு விஷயத்திலயும் உறுதியா இருக்க கத்துகிட்டா. இது கஷ்டமான சூழ்நிலைகள சமாளிக்க எனக்கு உதவியா இருந்திருக்கு” என்று அவர் சொல்கிறார்.
தன்னுடைய மதத்தில் சேரும்படி கிறிஸ்டின் அவரை வற்புறுத்தியதே இல்லை. “ஆரம்பத்துல இருந்தே கிறிஸ்டின் அவளோட மதத்த பற்றி எதுவும் சொல்லாம இருக்குறதுதான் நல்லதுன்னு நினைச்சா. போகப் போக நானே எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவேன்னு பொறுமையா இருந்தா” என்று அவர் சொல்கிறார். அறிவியல், இயற்கை சம்பந்தமான கட்டுரைகள் ஜானுக்குப் பிடிக்கும். அதனால், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் அதுபோன்ற கட்டுரைகள் வந்தால், அதை அவரிடம் காட்டி, “இந்தக் கட்டுரை உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்” என்று கிறிஸ்டின் சொல்வார்.
ஜான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோட்ட வேலையைச் செய்துவந்தார். வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்க்க அவருக்கு நிறைய நேரம் இருந்ததால், ‘நாமெல்லாம் பரிணாமத்தினால வந்தோமா, இல்ல நம்மள யாராவது படைச்சாங்களா?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார். ஒருநாள், ஜான் ஒரு சகோதரரோடு பேசிக்கொண்டிருந்தபோது, “பைபிள் படிப்ப எடுத்துக்க விரும்புறீங்களா?” என்று அந்தச் சகோதரர் கேட்டார். “கடவுள நம்ப ஆரம்பிச்சுட்டதுனால அதற்கு ஒத்துக்கிட்டேன்” என்று ஜான் சொல்கிறார்.
கிறிஸ்டின் நம்பிக்கையை இழக்காமல் இருந்ததால் கிடைத்த பலனைப் பாருங்கள்! இருபது வருடங்களாக கிறிஸ்டின் விடாமல் ஜெபம் செய்ததால், கடைசியில் ஜான் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார், ஞானஸ்நானமும் பெற்றார். இப்போது இருவரும் சேர்ந்து மும்முரமாக யெகோவாவுக்குச் சேவைசெய்து வருகிறார்கள். “இரண்டு விஷயம் என் மனச தொட்டுச்சு. யெகோவாவின் சாட்சிகளுடைய அன்பும், நட்பும். ஒரு யெகோவாவின் சாட்சியை கல்யாணம் பண்ணினா, அந்த மனைவியோ கணவனோ உங்களுக்கு உண்மையா, நம்பகமா இருப்பாங்க, உங்களுக்காக எந்தத் தியாகமும் செய்வாங்க” என்று ஜான் சொல்கிறார். ஆம், 1 பேதுரு 3:1, 2-லுள்ள வார்த்தைகளை கிறிஸ்டின் கடைப்பிடித்தார், அதற்கு பலனும் கிடைத்தது.
பல வருடங்களுக்குப் பின் முளைத்த விதைகள்
பைபிள் மாணாக்கர்கள், ஆரம்பத்தில் காட்டிய ஆர்வத்தை இழக்கும்போது என்ன செய்வது? “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (பிர. 11:6) சில சமயங்களில், சத்திய விதைகள் ஒருவருடைய இருதயத்தில் வேர்விட்டு வளர பல வருடங்கள் எடுக்கலாம். நாளடைவில், கடவுளிடம் நெருங்கி வருவது முக்கியம் என்பதை அவர் உணரலாம். (யாக். 4:8) ஒருநாள் நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் அவர் தீர்மானம் எடுக்கலாம்.
ஆலீஸ் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிமாறினார். 1974-ல் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அவர் ஹிந்தி பேசுபவர், ஆனால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச விரும்பினார். சில வருடங்களுக்கு பைபிள் படிப்பு தொடர்ந்தது. சிலசமயம் ஆங்கில சபை கூட்டங்களுக்கும் சென்றார். தான் படிப்பது சத்தியம் என்பதை அறிந்திருந்தபோதிலும், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், பண விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டினார், பார்ட்டிகளுக்குப் போவதில் குறியாக இருந்தார். கடைசியில் பைபிள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு, ஆலீஸிடமிருந்து ஸ்டெல்லாவுக்கு ஒரு கடிதம் வந்தது. ஸ்டெல்லாதான் அவருக்கு ஆரம்பத்தில் பைபிள் படிப்பு நடத்தியவர். அதில் இப்படி எழுதியிருந்தது: “1974-ல் உங்களிடம் பைபிளைப் படித்தவர் கடந்த மாவட்ட மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்ததை அறிந்தால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள். நான் இந்தப் படியை எடுத்ததற்கு நீங்கள்தான் முக்கிய காரணம். நீங்கள்தான் சத்திய விதையை எனக்குள் விதைத்தீர்கள். அந்தச் சமயத்தில் கடவுளுக்கு என்னை அர்ப்பணிக்க நான் தயாராகவில்லை. ஆனாலும் அந்த சத்திய விதை என் மனதிலும் இருதயத்திலும் அப்படியே இருந்தது.”
பிறகு என்ன நடந்தது? 1997-ல் ஆலீஸின் கணவர் இறந்துவிட்டார், அதனால் அவர் ரொம்பவே மனமுடைந்து போனார். கடவுளை நோக்கி மன்றாடினார். பத்து நிமிடங்களுக்குள் பஞ்சாபி மொழி பேசும் இரண்டு சாட்சிகள் வீட்டிற்கு வந்து, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு சென்றார்கள். தான் செய்த ஜெபத்திற்கு பதில் கிடைத்ததாக நினைத்து, மீண்டும் யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளத் தீர்மானித்தார். ஆனால், அவர்களை எங்கே போய் பார்ப்பது? ஒரு பழைய டைரியை அவர் கண்டுபிடித்தார்; அதில் ஸ்டெல்லா கொடுத்திருந்த பஞ்சாபி சபையின் விலாசம் இருந்தது. அந்தச் சபைக்குச் சென்றார், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவரை அன்போடு வரவேற்றார்கள். “நான் படிப்பை பாதியில விட்டிருந்தாலும், அவங்களோட அன்பு குறையல. என் கவலைய போக்க உதவி செஞ்சாங்க” என்கிறார் ஆலீஸ்.
அவர் கூட்டங்களுக்குத் தவறாமல் போக ஆரம்பித்தார், மீண்டும் பைபிள் படிப்பைத் துவங்கினார். பஞ்சாபி மொழியில் சரளமாகப் பேசவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். 2003-ல் ஞானஸ்நானம் பெற்றார். ஸ்டெல்லாவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் கடைசி வரிகள்: “29 வருடங்களுக்கு முன் எனக்குள் சத்திய விதைகளை விதைத்ததற்காகவும் நான் பின்பற்ற ஒரு நல்ல முன்மாதிரி வைத்ததற்காகவும் மிக்க நன்றி.”
“29 வருடங்களுக்கு முன் எனக்குள் சத்திய விதைகளை விதைத்ததற்காகவும் நான் பின்பற்ற ஒரு நல்ல முன்மாதிரிவைத்ததற்காகவும் மிக்க நன்றி.”—ஆலீஸ்
இந்த அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள காலம் எடுக்கலாம்; ஆனால், அவர் ஆன்மீக பசியுள்ளவராக, நல்மனமுள்ளவராக, தாழ்மையுள்ளவராக இருந்தால் சத்திய விதை அவருடைய இருதயத்தில் வேர்விட்டு வளர யெகோவா கண்டிப்பாக உதவுவார். இயேசு சொன்ன உவமையிலுள்ள குறிப்பைக் கவனியுங்கள்: ‘விதைத்தவருக்கே தெரியாமல் அந்த விதை முளைத்துப் பெரிதாக வளருகிறது. அந்த நிலம் தானாகவே படிப்படியாகப் பலன் தருகிறது; முதலில், தளிரையும் பின்பு, இளங்கதிரையும் கடைசியில், முற்றிய கதிரையும் தருகிறது.’ (மாற். 4:27, 28) ஆம், அந்த வளர்ச்சி படிப்படியாக, “தானாகவே” நடக்கிறது. சொல்லப்போனால், நற்செய்தியைப் பிரசங்கிக்கிற யாருக்குமே இது எப்படி நடக்கிறதென தெரியாது. ஆகவே, ஏராளமான விதைகளை விதைத்துக்கொண்டே இருங்கள். தாராளமாக அறுவடை செய்வீர்கள்.
ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். கியார்கினாவும் கிறிஸ்டினும் யெகோவாவிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார்கள். நம்பிக்கையை இழந்துவிடாமல் “ஜெபத்தில் உறுதியாயிருங்கள்”; அப்போது “ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்” என்பது நிஜமாகும்.—ரோ. 12:12; பிர. 11:1.