யெகோவாவின் பண்புகளை முழுமையாக மதித்துணருங்கள்
“அன்புக்குரிய பிள்ளைகளாகக் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.” —எபே. 5:1.
1. (அ) யெகோவாவின் என்னென்ன பண்புகள் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகின்றன? (ஆ) கடவுளுடைய பண்புகளை ஆராய்ந்து பார்ப்பதால் எப்படி நன்மை அடைவோம்?
யெகோவாவைப் பற்றி யோசிக்கும்போது அவருடைய என்னென்ன பண்புகள் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகின்றன? அன்பு, நீதி, ஞானம், வல்லமை ஆகிய பண்புகள் ஞாபகத்திற்கு வரும். அவை தவிர இன்னும் நிறைய பண்புகளும் அவருக்கு இருப்பது நமக்குத் தெரியும். அவற்றில் 40-க்கும் அதிகமான பண்புகள் நம்முடைய பிரசுரங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பட்ட படிப்பிலும் குடும்ப வழிபாட்டிலும் யெகோவாவின் இந்த அருமையான குணங்களைப் பற்றி ஆழ்ந்து படிக்கும்போது அவரைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்வோம். அப்போது, நம் பரலோகத் தகப்பன்மீதுள்ள மதிப்பு அதிகமாகும். அவரிடம் நெருங்கிச் செல்லவும் அவரைப் பின்பற்றவும் வேண்டுமென்ற விருப்பமும் அதிகமாகும்.—யோசு. 23:8; சங். 73:28.
2. (அ) யெகோவாவின் பண்புகள்மீதுள்ள நம் மதித்துணர்வை எப்படி அதிகரிக்கலாமென விளக்குங்கள். (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
2 சரி, “மதித்துணர்வது” என்றால் என்ன? அந்த வார்த்தையே அதன் அர்த்தத்தை விளக்குகிறது; அதாவது, ஒன்றின் மதிப்பை உணர்ந்துகொள்வது. இந்த மதித்துணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். எப்படி? ஒரு புது வகை உணவை பார்த்த உடனே பிடித்துவிடாது. முதலில் அதன் நறுமணத்தை முகருவீர்கள், ஒவ்வொரு வாயாக சாப்பிடுகையில் அதன் சுவையை ருசிப்பீர்கள், பிறகென்ன, அது உங்கள் சமையலில் இடம் பிடித்துவிடும். இப்படித்தான் யெகோவாவுடைய ஒரு பண்பின் மீதுள்ள மதித்துணர்வும் அதிகரிக்கும். முதலில் அந்தப் பண்பைப் பற்றித் தெரிந்துகொள்வோம், அதைப் பற்றி சிந்திப்போம், பிறகு அதைப் பின்பற்றுவோம். (எபே. 5:1) கடவுளுடைய பிரதான பண்புகளைத் தவிர பிற பண்புகள்மீதும் நம் மதித்துணர்வை அதிகரிக்க இந்தக் கட்டுரையும் அடுத்த இரண்டு கட்டுரைகளும் நமக்கு உதவும். ஒவ்வொரு பண்பையும் பற்றி சிந்திக்கையில் இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடியுங்கள்: அதன் அர்த்தம் என்ன? அதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்? அந்தக் குணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
யெகோவா அணுகத்தக்கவர்
3, 4. (அ) அணுகத்தக்க ஒருவர் எப்படி இருப்பார்? (ஆ) யெகோவா தாம் அணுகத்தக்கவர் என்பதை எப்படிக் காட்டுகிறார்?
3 முதலில், யெகோவா எப்படி அணுகத்தக்கவராய் இருக்கிறார் என்று பார்க்கலாம். அணுகத்தக்க ஒருவர் எப்படி இருப்பார்? கனிவாக நடந்துகொள்வார், மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார், மற்றவர்கள் அவரிடம் தயக்கமில்லாமல் பேசுமளவுக்கு இருப்பார். ஒருவர் அணுகத்தக்கவரா இல்லையா என்பதை அவருடைய பேச்சு, சைகை, முகபாவனை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
4 யெகோவா, தாம் அணுகத்தக்கவர் என்பதை எப்படிக் காட்டுகிறார்? அவர் இந்த அண்டசராசரத்தையே படைத்த சர்வவல்லவர். ஆனாலும், தம்மிடம் ஜெபம் செய்யும்படி நம்மை அழைக்கிறார்; ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்க ஆவலாகவும் இருக்கிறார். (சங்கீதம் 145:18-ஐயும் ஏசாயா 30:18, 19-ஐயும் வாசியுங்கள்.) அவரிடம் நாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். நம்மீது கோபப்பட்டுவிடுவாரோ என்ற பயமே இல்லாமல் அவரை அணுகலாம். (சங். 65:2; யாக். 1:5) அவரைப் பற்றி பைபிள் விவரித்துள்ள விதங்களைப் பார்க்கும்போது ஜெபத்தில் அவரை எளிதாக அணுகலாம் என்ற எண்ணம் பிறக்கிறது. உதாரணத்திற்கு, யெகோவாவுடைய கண்கள் நம்மைப் பார்ப்பதாக சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார். (சங். 34:15) ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு இப்படிச் சொன்னார்: ‘ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமப்பார்.’ (ஏசா. 40:11) சற்று யோசித்துப் பாருங்கள். பாசமுள்ள ஒரு மேய்ப்பன் ஆட்டுக்குட்டியை மடியில் வைத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்வதுபோல் நாமும் யெகோவாவோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தயக்கமில்லாமல் அணுக முடிந்த ஒரு தகப்பன் நமக்குக் கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவரிடமுள்ள இந்தப் பண்பை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
மிக உயர்ந்த பண்பு
5. மூப்பர்கள் அணுகத்தக்கவர்களாக இருப்பது ஏன் முக்கியம்?
5 “ஒரு மூப்பரிடம் முக்கியமாக என்ன குணத்தை எதிர்பார்ப்பீர்கள்?” உலகின் பல்வேறு இடங்களில் வாழ்கிற சாட்சிகளிடம் சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்வி இது. “அணுகத்தக்கவராக இருக்க வேண்டும்” என்றுதான் நிறையப் பேர் பதிலளித்தார்கள். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் குணத்தை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், முக்கியமாக மூப்பர்கள் அணுகத்தக்கவர்களாக இருக்க வேண்டும். (ஏசா. 32:1, 2) இந்தப் பண்பு ஏன் அந்தளவு முக்கியம் என்பதைப் பற்றி ஒரு சகோதரி குறிப்பிட்டார்: “ஒரு மூப்பர் அணுக முடிந்தவரா இருந்தாதான் அவர்கிட்ட இருக்கிற மற்ற எல்லா நல்ல குணங்களையும் தெரிஞ்சுக்க முடியும்.” அது உண்மைதானே! அப்படியென்றால், மற்றவர்கள் தயக்கமில்லாமல் வந்து பேசுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
6. அணுகத்தக்கவராய் இருப்பதற்கு ஒரு முக்கிய வழி என்ன?
6 அணுகத்தக்கவராய் இருப்பதற்கு ஒரு முக்கிய வழி, மற்றவர்களிடம் உள்ளப்பூர்வமாக அக்கறை காட்டுவது. ஒரு மூப்பர் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டி, அவர்களுக்காக உயிரையே கொடுக்கத் தயாராயிருக்கும்போது சகோதர சகோதரிகள், பிள்ளைகள் என எல்லோருமே அவரிடம் சகஜமாய்ப் பேசுவார்கள். (மாற். 10:13-16) “ராஜ்ய மன்றத்துல மூப்பர்கள் சிரிச்ச முகத்தோட அன்பா பேசுறாங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று 12 வயது கார்லோஸ் சொல்கிறான். ‘எல்லாரும் தாராளமா என்கிட்ட வந்து பேசலாம்’ என்று ஒரு மூப்பர் சொன்னால் மட்டும் போதாது, அதைச் செயலிலும் காட்ட வேண்டும். (1 யோ. 3:18) எப்படி?
7. மாநாட்டு பேட்ஜ் அணிந்திருப்பது, மற்றவர்கள் நம்மிடம் வந்து பேச வழி திறக்கிறதென எப்படிச் சொல்லலாம், இதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
7 இந்த அனுபவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். சமீபத்தில், ஒரு சகோதரர் வெளிநாட்டில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு விமானத்தில் வீடு திரும்பினார். அவர் மாநாட்டு பேட்ஜ் அணிந்திருந்தார். அதில், “கடவுளது அரசாங்கம் வருக!” என்ற வார்த்தைகளைப் பார்த்த விமானப் பணியாளர், “ஆமா, கடவுளுடைய அரசாங்கம் வரணும்—அத பற்றி உங்ககிட்ட நிறைய பேசணும்” என்று சொன்னார். பிறகு, அவர்கள் அதைப் பற்றிப் பேசினார்கள், அந்தப் பணியாளர் நம் பத்திரிகைகளையும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார். நிறைய பேருக்கு இதுபோன்ற அனுபவங்கள் இருக்கும். மாநாட்டு பேட்ஜ் அணிவதால் ஏன் நிறைய பேர் நம்மிடம் வந்து பேசுகிறார்கள்? அந்த பேட்ஜ் அணிந்திருப்பது, “என்கிட்ட வந்து தாராளமா பேசுங்க, நான் எங்க போறேன்னு கேளுங்க” என்று சொல்வதுபோல் இருக்கிறது. நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல நாம் தயாராய் இருக்கிறோம் என்பதை அது சொல்லாமல் சொல்கிறது. அதேபோல் மூப்பர்களும், “என்கிட்ட வந்து தாராளமா பேசுங்க” என்பதை மற்ற சகோதர சகோதரிகளிடம் சொல்லாமல் சொல்லலாம். எப்படி?
8. மற்றவர்கள்மேல் அக்கறை இருப்பதை மூப்பர்கள் எப்படிச் சொல்லாமல் சொல்லலாம், இதனால் சபையார் எப்படி நன்மையடைகிறார்கள்?
8 பழக்கவழக்கங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனாலும், சகோதர சகோதரிகளைப் பார்த்து அன்பாகப் புன்னகைப்பது, பாசமாகக் கைகுலுக்குவது, நின்று நிதானமாக வாழ்த்து சொல்வது போன்ற செயல்கள் அவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருப்பதைக் காட்டும். இப்படிச் செய்ய யார் முன்வர வேண்டும்? இயேசு வைத்த முன்மாதிரியைக் கவனியுங்கள். தம் சீடர்களைச் சந்தித்த ஒருசமயத்தில், “இயேசு சீடர்களின் அருகே சென்று” பேசினாரென மத்தேயு குறிப்பிடுகிறார். (மத். 28:18) அதுபோல, மூப்பர்களும் சபையாரிடம் அவர்களாகவே சென்று பேசுகிறார்கள். அதனால் சபையார் எப்படி நன்மை அடைகிறார்கள்? 88 வயதான பயனியர் சகோதரி இப்படிச் சொன்னார்: “ராஜ்ய மன்றத்துக்குள்ள வர்றப்போ மூப்பர்கள் பாசமா புன்னகைத்து, தெம்பூட்டுற மாதிரி பேசும்போது அவங்ககிட்ட எதுவா இருந்தாலும் சொல்லலாம் என்ற உணர்வு வருது.” இன்னொரு சகோதரி சொல்கிறார்: “புன்னகைக்கிறது சாதாரண விஷயம்தான். இருந்தாலும், கூட்டத்துக்கு வர்றப்போ ஒரு மூப்பர் நம்மள சிரிச்ச முகத்தோட வரவேற்கும்போது, என்னையும் மதிக்கிறாங்க என்ற எண்ணம் வருது.”
பேச நேரம் செலவிடுங்கள்
9, 10. (அ) யெகோவா என்ன நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார்? (ஆ) சபையாருக்காக மூப்பர்கள் எப்படி நேரம் ஒதுக்கலாம்?
9 மற்றவர்கள் நம்மிடம் வந்து பேச நேரம் கொடுக்கவில்லை என்றால் நாம் அணுகத்தக்கவராக இருக்க முடியாது. இந்த விஷயத்தில் யெகோவா நமக்கு நல்ல முன்மாதிரி. ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவர் அல்ல.’ (அப். 17:27) மூப்பர்கள் இதை எப்படிப் பின்பற்றலாம்? கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் இளையோர், முதியோர் என எல்லோரோடும் பேச நேரம் ஒதுக்கலாம். “ஒரு மூப்பர் என்கிட்ட வந்து எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு, நான் சொல்றத காது கொடுத்து கேட்குறப்போ, என்னையும் மதிக்கிறாங்கன்னு தோனும்” என்று ஒரு பயனியர் சகோதரர் சொன்னார். சுமார் 50 வருடங்களாக யெகோவாவைச் சேவிக்கும் சகோதரி சொன்னார்: “கூட்டம் முடிஞ்சு என்கிட்ட வந்து பேச மூப்பர்கள் நேரம் ஒதுக்கும்போது, என்னை ரொம்ப உயர்வா நினைக்கிறாங்கன்னு தோனும்.”
10 மூப்பர்களுக்கு சபையில் பொறுப்புகள் இருப்பது உண்மைதான். ஆனாலும், சபைக் கூட்டங்களில் சகோதர சகோதரிகளிடம் பேச நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியம்.
யெகோவா பாரபட்சமற்றவர்
11, 12. (அ) பாரபட்சமற்றவர் எப்படி நடந்துகொள்வார்? (ஆ) யெகோவா பாரபட்சம் காட்டாதவர் என்று பைபிள் எப்படிச் சொல்கிறது?
11 யெகோவாவிடம் நம்மை ஈர்க்கும் இன்னொரு குணம் பாரபட்சமற்ற தன்மை. பாரபட்சம் இல்லாமல் இருப்பது என்றால் என்ன? நியாயமாக நடந்துகொள்வது; ஒருதலைபட்சமாக, ஓரவஞ்சனையாக நடந்துகொள்ளாதிருப்பது அல்லது அப்படிப்பட்ட எண்ணம் இல்லாதிருப்பது. இதில் இரண்டு விஷயங்கள் உட்பட்டிருக்கின்றன: ஒன்று மனப்பான்மை, மற்றொன்று நடந்துகொள்கிற விதம். ஏன் இரண்டும் முக்கியம்? ஏனென்றால், ஒருவர் தன் மனதில் பாரபட்சமில்லாதவராக இருந்தால்தான், எல்லோரிடமும் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள முடியும். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ‘பாரபட்சம் காட்டாதிருப்பது’ என்ற சொற்றொடர் ‘ஆள் பார்த்து செயல்படாதிருப்பதை’ அர்த்தப்படுத்துகிறது. (அப். 10:34, பொது மொழிபெயர்ப்பு) எனவே, பாரபட்சமற்றவர், ஒருவருடைய வெளித்தோற்றம், பேர்-புகழ், பணம் ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல, அவருடைய குணநலன்களின் அடிப்படையிலேயே மதிப்பு மரியாதை கொடுப்பார்.
12 பாரபட்சம் காட்டாமல் இருப்பதில் யெகோவா தலைசிறந்த முன்மாதிரி. “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்,” ‘பட்சபாதம் பண்ணுகிறவர் அல்ல’ என்றெல்லாம் அவருடைய வார்த்தை சொல்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35-ஐயும் உபாகமம் 10:17-ஐயும் வாசியுங்கள்.) மோசேயின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இதை உறுதிப்படுத்துகிறது.
13, 14. (அ) செலொப்பியாத்தின் ஐந்து மகள்கள் என்ன பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) யெகோவா பாரபட்சமற்றவர் என்பதை எப்படிக் காட்டினார்?
13 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் போவதற்குச் சற்று முன்பு, மணமாகாத உடன்பிறந்த ஐந்து சகோதரிகள் ஒரு பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள். இஸ்ரவேலில் இருந்த மற்ற குடும்பங்களைப் போலவே, தங்களுடைய குடும்பத்திற்கும் ஒரு நிலம் கிடைக்கும், அதாவது, தங்களுடைய அப்பாவிற்குக் கிடைக்கும் என்று அறிந்திருந்தார்கள். (எண். 26:52-55) ஆனால், மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த அவர்களுடைய அப்பா செலொப்பியாத் இறந்துவிட்டார். முறைப்படி அவருக்குக் கிடைக்க வேண்டிய நிலத்தை அவருடைய மகன்களிடம் கொடுக்க வேண்டும். ஆனால், அவருக்கு மகள்கள் மட்டும்தான் இருந்தார்கள். (எண். 26:33) அப்படியென்றால், அந்த நிலம் அவர்களுடைய உறவினர்களுக்குப் போய்விடுமா? செலொப்பியாத்தின் மகள்கள் என்ன செய்வார்கள்?
14 அந்த ஐந்து பெண்களும் மோசேயிடம் வந்து, “எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும்” என்று சொல்லி முறையிட்டார்கள். ‘சட்டத்தை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாதே’ என்று மோசே பதிலளித்தாரா? இல்லை. ‘அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனார்.’ (எண். 27:2-5) யெகோவா என்ன சொன்னார்? “செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்க வேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.” அதுமட்டுமல்ல அதைச் சட்டமாக்கினார். “ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்” என்று மோசேக்குக் கட்டளையிட்டார். (எண். 27:6-8; யோசு. 17:1-6) அது முதற்கொண்டு, இதே சூழ்நிலையிலிருந்த இஸ்ரவேல் பெண்களுக்கு ஆஸ்தி கொடுக்கப்பட்டது.
15. (அ) யெகோவா தம் மக்களிடம், முக்கியமாக நிர்க்கதியாக நிற்போரிடம் எப்படி நடந்துகொள்கிறார்? (ஆ) யெகோவா பாரபட்சமற்றவர் என்பதைக் காட்டும் மற்ற பைபிள் பதிவுகளைக் குறிப்பிடுங்கள்.
15 இது உண்மையிலேயே பாரபட்சமற்ற ஒரு தீர்மானம்! மற்ற இஸ்ரவேலரிடம் நடந்துகொண்ட விதமாகவே, நிர்க்கதியாக நின்ற அந்தப் பெண்களிடமும் யெகோவா நியாயமாக நடந்துகொண்டார், அவர்களைக் கௌரவித்தார். (சங். 68:5) யெகோவா தம்முடைய எல்லா ஊழியர்களிடமும் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்கிறார் என்பதற்கு இதுபோன்ற நிறைய பைபிள் பதிவுகள் சான்றளிக்கின்றன.—1 சா. 16:1-13; அப். 10:30-35, 44-48.
யெகோவாவைப் பின்பற்றலாம்
16. யெகோவாவைப் போல பாரபட்சமற்ற குணத்தைக் காட்ட என்ன செய்யலாம்?
16 யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? பாரபட்சமற்ற தன்மையில் இரண்டு விஷயங்கள் இருப்பதை மறந்துவிடாதீர்கள். பாரபட்சமற்றவராக இருந்தால்தான் மற்றவர்களிடம் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்வோம். ‘எனக்கு பரந்த மனசு, யாரிடமும் பாரபட்சம் காட்டுறதில்ல’ என்று நாம் எல்லோருமே நினைத்துக்கொள்ளலாம். அதே சமயம் மற்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்று யதார்த்தமாக யோசித்துப்பார்ப்பது கஷ்டம்தான் என்பதையும் ஒத்துக்கொள்வோம். அப்படியென்றால், நாம் பாரபட்சமற்றவரா, இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஒருசமயம் தம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிய விரும்பினார். அதனால், தம்முடைய நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் “மனிதகுமாரனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். (மத். 16:13, 14) இயேசுவின் முன்மாதிரியை நாமும் பின்பற்றலாம், அல்லவா? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படையாகப் பேசுகிற உங்கள் நண்பர்கள் யாரிடமாவது கேட்கலாம். ஒரு குறிப்பிட்ட இனம், பணம், படிப்பு இவற்றைப் பார்த்துதான் மற்றவர்களிடம் பழகுகிறீர்கள் என்று அவர் சொன்னால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவைப் போல மற்றவர்களிடம் துளியும் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்வதற்கு உதவும்படி ஊக்கமாக ஜெபம் செய்ய வேண்டும்.—மத். 7:7; கொலோ. 3:10, 11.
17. பாரபட்சமற்ற குணத்தை எவ்வழிகளில் காட்டலாம்?
17 சபையில் சகோதர சகோதரிகள் எல்லோரையும் மதிப்பு மரியாதையோடு, கனிவோடு நடத்துவதன் மூலம் யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்தைக் வெளிக்காட்டலாம். உதாரணத்திற்கு, உபசரிக்கும்போது சபையிலுள்ள வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களை, வசதியற்றவர்களை, தாய்தகப்பன் இல்லாதவர்களை, துணையை இழந்தவர்களை என பலதரப்பட்டவர்களையும் அழைக்கலாம். (கலாத்தியர் 2:10-ஐயும் யாக்கோபு 1:27-ஐயும் வாசியுங்கள்.) ஊழியம் செய்யும்போதும் வெளிநாட்டவர் உட்பட எல்லா ஆட்களிடமும் நற்செய்தியைச் சொல்கிறோம். அதுமட்டுமா, சுமார் 600 மொழிகளில் பைபிள் பிரசுரங்கள் கிடைக்கிறதே! பாரபட்சமற்ற குணத்திற்கு இவை கண்கண்ட சாட்சி அல்லவா?
18. இக்கட்டுரையில் பார்த்த யெகோவாவின் இரண்டு குணங்களையும் நீங்கள் மதித்துணருகிறீர்கள் என்பதை எப்படிச் செயலில் காட்டுவீர்கள்?
18 ஆம், யெகோவா அணுகத்தக்கவராயும் பாரபட்சமற்றவராயும் இருக்கிறார் என்பதை எந்தளவு சிந்தித்துப் பார்க்கிறோமோ அந்தளவு அவர்மீதுள்ள நம் மதிப்பு கூடும். அப்படி மதிப்பு கூடும்போது, அவருடைய பண்புகளை முழுமையாகப் பின்பற்ற விரும்புவோம். அதைச் சக கிறிஸ்தவர்களிடமும் ஊழியத்தில் சந்திக்கிறவர்களிடமும் காட்டுவோம்.