“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”
“ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?” —மத். 24:45.
1, 2. இன்று யார் மூலமாக இயேசு நமக்கு உணவளிக்கிறார், அவர்கள் யாரென தெரிந்துகொள்வது ஏன் மிக முக்கியம்?
“சகோதரர்களே, பல முறை நான் பார்த்திருக்கிறேன். எந்த விஷயத்தை பற்றி நான் ரொம்ப யோசிக்கிறேனோ அதே விஷயம் கட்டுரைகளில் அப்படியே வரும்” என்று ஒரு சகோதரி நன்றிபொங்க நம்முடைய தலைமை அலுவலகத்திற்குக் கடிதம் எழுதினார். நீங்களும் இதேபோல் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நம்மில் அநேகர் நிச்சயம் இப்படி உணர்ந்திருப்போம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
2 ஏனென்றால், சபையின் தலைவர் இயேசு ஏற்ற வேளையில் ஆன்மீக உணவை அளிப்பதாக கொடுத்த வாக்கைக் காப்பாற்றி வருகிறார். ஆனால், யார் மூலம் இதைச் செய்து வருகிறார்? தம்முடைய பிரசன்னத்திற்கான அடையாளத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டபோது, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலம் தம் வீட்டாருக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிப்பதாக’ சொன்னார்.a (மத்தேயு 24:45-47-ஐ வாசியுங்கள்.) இந்த உண்மையுள்ள அடிமையைப் பயன்படுத்தியே இந்த முடிவு காலத்தில் வாழும் தம் சீடர்களுக்கு இயேசு உணவளித்து வருகிறார். ஆகவே, இந்த உண்மையுள்ள அடிமை யாரென தெரிந்துகொள்வது மிக முக்கியம். நாம் ஆன்மீக ரீதியில் பலமாக இருப்பதற்கும் யெகோவாவோடு நல்லுறவை அனுபவிப்பதற்கும் இந்த அடிமை மூலம் நமக்குக் கிடைக்கும் ஆன்மீக உணவு அவசியம்.—மத். 4:4; யோவா. 17:3.
3. கடந்த காலங்களில் நம்முடைய பிரசுரங்கள் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை பற்றி என்ன குறிப்பிட்டிருந்தன?
3 உண்மையுள்ள அடிமை பற்றி இயேசு சொன்ன உவமையின் அர்த்தம் என்ன? கடந்த காலங்களில் நம்முடைய பிரசுரங்கள் இப்படிக் குறிப்பிட்டிருந்தன: கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று இயேசு தம் வீட்டாருக்கு உணவளிப்பதற்காக உண்மையுள்ள அடிமையை நியமித்தார். அன்றிலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் பூமியிலிருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரையும் இந்த அடிமை குறிக்கிறது. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தனி நபர்களாக வீட்டார் என அழைக்கப்படுகிறார்கள். 1919-ல், இயேசு ‘தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும்’ அதாவது கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட பூமிக்குரிய காரியங்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள உண்மையுள்ள அடிமையை நியமித்தார். ஆனால், கவனமாக ஆராய்ந்து ஜெபம் செய்து தியானித்தபோது உண்மையும் விவேகமும் உள்ள அடிமை பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலில் மாற்றம் தேவைப்படுவதைத் தெரிந்துகொண்டோம். (நீதி. 4:18) நமக்கு பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கை இருந்தாலும் சரி, இந்த உவமை நமக்கு எதைக் குறிக்கிறதென இப்போது ஆராயலாம்.
அடிமை பற்றிய உவமை எப்போது நிறைவேறுகிறது?
4-6. உண்மையுள்ள அடிமை பற்றிய இயேசுவின் உவமை 1914-க்குப் பிறகே நிறைவேற ஆரம்பித்தது என்ற முடிவுக்கு ஏன் வரலாம்?
4 உண்மையும் விவேகமும் உள்ள அடிமை பற்றிய உவமையின் சூழமைவைக் கவனிக்கும்போது இது கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் அல்ல, இந்த முடிவு காலத்தில்தான் நிறைவேற ஆரம்பித்ததென புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு வேதவசனங்கள் எப்படி அத்தாட்சி அளிக்கிறதென கவனிக்கலாம்.
5 உண்மையுள்ள அடிமை பற்றிய உவமை, இயேசுவின் “பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம்” பற்றிய தீர்க்கதரிசனத்தின் பாகமாக இருக்கிறது. (மத். 24:3) மத்தேயு 24:4-22-லுள்ள தீர்க்கதரிசனத்தின் முதல் பகுதிக்கு இரண்டு நிறைவேற்றங்கள் உள்ளன. முதல் நிறைவேற்றம் கி.பி. 33-லிருந்து கி.பி. 70 வரையான காலப்பகுதியில் நடந்தேறியது. இரண்டாவது நிறைவேற்றம், நம்முடைய நாளில் பெரியளவில் நடந்தேறுகிறது. அப்படியானால், உண்மையுள்ள அடிமை பற்றி இயேசு சொன்ன உவமைக்கும் இரண்டு நிறைவேற்றங்கள் இருக்கிறதென்று அர்த்தமா? இல்லை.
6 மத்தேயு 24:29 முதற்கொண்டு உள்ள வசனங்களில், முக்கியமாக நம் நாட்களில் நடக்கவிருக்கும் சம்பவங்களையே இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 24:30, 42, 44-ஐ வாசியுங்கள்.) மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கவிருக்கும் சம்பவங்களைக் குறிப்பிடுகையில், “மனிதகுமாரன் . . . வானத்து மேகங்கள்மீது வருவதை அவர்கள் [மக்கள்] பார்ப்பார்கள்” என்று இயேசு சொன்னார். பின்பு கடைசி நாட்களில் வாழ்கிறவர்கள் விழிப்புடன் இருப்பதற்காக இப்படி சொன்னார்: “உங்கள் எஜமானர் எந்த நாளில் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது,” “நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வரப்போகிறார்.”b கடைசி நாட்களில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி இயேசு பேசிய இந்தச் சந்தர்ப்பத்தில்தான் உண்மையுள்ள அடிமை பற்றிய உவமையைச் சொன்னார். எனவே, உண்மையுள்ள அடிமை பற்றிய இயேசுவின் உவமை 1914-ல் கடைசி நாட்கள் ஆரம்பமான பிறகே நிறைவேற ஆரம்பித்தது என்ற முடிவுக்கு வரலாம். இந்த முடிவுக்கு வருவது ஏன் சரியாக இருக்கும்?
7. அறுவடைக் காலம் ஆரம்பமானபோது என்ன முக்கியமான கேள்வி எழுந்தது, ஏன்?
7 இந்தக் கேள்வியைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்: “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?” முதல் நூற்றாண்டில் இந்தக் கேள்விக்கு அவசியமே இருக்கவில்லை. ஏனென்றால், முந்தின கட்டுரையில் பார்த்தபடி, அப்போஸ்தலர்கள் கடவுளுடைய ஆதரவைப் பெற்றிருந்ததற்கு அத்தாட்சியாக அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார்கள். (அப். 5:12) எனவே, முன்நின்று வழிநடத்த கிறிஸ்து யாரை நியமிப்பார் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், 1914-ல் இருந்த சூழ்நிலையே வேறு. அந்த வருடத்தில்தான் அறுவடைக் காலம் ஆரம்பமானது. கோதுமையிலிருந்து களைகளைப் பிரிப்பதற்கான சமயமாகவும் இருந்தது. (மத். 13:36-43) அந்த அறுவடைக் காலம் ஆரம்பமானதும், ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது: இயேசுவின் உண்மை சீடர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த போலி கிறிஸ்தவர்கள் அநேகர் இருந்ததால், கோதுமை போன்ற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? உண்மையுள்ள அடிமை பற்றிய உவமை இதற்குப் பதிலளித்தது. அதாவது, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்துவின் சீடர்கள் தங்களுக்குத் தேவையான ஆன்மீக உணவைப் பெற்றுவருவார்கள்.
உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?
8. உண்மையுள்ள அடிமை, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களால் ஆனது என்று சொல்வது ஏன் சரியாக இருக்கும்?
8 உண்மையுள்ள அடிமை, பூமியிலிருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களால் ஆனது என்றே சொல்ல வேண்டும். இவர்கள் ‘ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டம்’ என்று அழைக்கப்படுகிறார்கள்; ‘இருளிலிருந்து அற்புதமான ஒளியின் பக்கம் தங்களை அழைத்தவருடைய ‘மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று’ நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.’ (1 பே. 2:9) எனவே, சக கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தைக் கற்பிப்பதில் இந்த ‘ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டத்திற்கு’ நேரடி பங்கு இருக்கிறது என்று சொல்வது சரியே.—மல். 2:7; வெளி. 12:17.
9. பூமியிலுள்ள பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லோருமே உண்மையுள்ள அடிமையா? விளக்குங்கள்.
9 பூமியிலிருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லோருமே உண்மையுள்ள அடிமையா? இல்லை. பூமியெங்குமுள்ள சகோதரர்களுக்கு பரலோக நம்பிக்கையுள்ள எல்லா கிறிஸ்தவர்களும் ஆன்மீக உணவை அளிப்பதில்லை. அவர்களில் சிலர் உள்ளூர் சபைகளில் மூப்பராகவோ உதவி ஊழியர்களாகவோ சேவை செய்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் சபையிலும் கற்பிக்கிறார்கள், தலைமை அலுவலகத்திலிருந்து வரும் வழிநடத்துதலுக்கு முழு ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், உலகெங்குமுள்ள சகோதரர்களுக்கு ஆன்மீக உணவை அளிப்பதில் பங்குகொள்வதில்லை. பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சகோதரிகளும் இருக்கிறார்கள். இவர்கள் சபையில் போதகர்களாக ஆவதற்கு ஒருபோதும் முயலுவதில்லை.—1 கொ. 11:3; 14:34.
10. உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?
10 அப்படியானால், உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்? கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது ஆன்மீக உணவைத் தயாரித்து அளிப்பதில் நேரடியாக ஈடுபடும் பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களாலான ஒரு சிறு தொகுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், முதல் நூற்றாண்டிலும் உணவளிக்க இயேசு சிலரையே பயன்படுத்தினார். இவர்கள் இந்தக் கடைசி நாட்களில், தலைமை அலுவலகத்தில் ஒன்றுசேர்ந்து சேவித்து வந்திருக்கிறார்கள். சமீப காலங்களில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினரே இந்த அடிமையாக இருந்து வருகிறார்கள். இயேசுவின் உவமையிலுள்ள “அடிமை” என்ற வார்த்தை ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இது சிலர் அடங்கிய ஒரு தொகுதியாக இருக்க வேண்டும். ஆகவே, ஆளும் குழுவினர் ஒன்றுசேர்ந்துதான் தீர்மானங்கள் எடுக்கிறார்கள்.
வீட்டார் யார்?
11, 12. (அ) உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு என்ன இரண்டு நியமிப்புகள் கொடுக்கப்படுகின்றன? (ஆ) இயேசு தம் வீட்டார் மீது உண்மையுள்ள அடிமையை எப்போது நியமித்தார், அதற்காக யாரைத் தேர்ந்தெடுத்தார்?
11 இயேசுவின் உவமையில், உண்மையும் விவேகமும் உள்ள அடிமை இரண்டு நியமிப்புகளைப் பெறுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று, வீட்டாருக்கு உணவளிப்பது; இரண்டு, எஜமானரின் உடமைகள் எல்லாவற்றையும் கவனிப்பது. அடிமை பற்றிய உவமை இந்த முடிவு காலத்தில் நிறைவேறுவதால், இந்த இரண்டு நியமிப்புகளும் ராஜாவாக இயேசுவின் பிரசன்னம் 1914-ல் ஆரம்பித்த பிறகே செய்யப்பட வேண்டும்.
12 தம் வீட்டாருக்கு உணவளிக்க உண்மையுள்ள அடிமையை இயேசு எப்போது நியமித்தார்? இதற்கான பதிலைக் காண 1914-ல் அறுவடைக் காலம் ஆரம்பமானபோது என்ன நடந்ததென பார்க்கலாம். ஏற்கெனவே பார்த்தபடி, அந்தச் சமயத்தில் அநேக மதப் பிரிவினர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படியிருக்க, எந்த மதப் பிரிவிலிருந்து உண்மையுள்ள அடிமையை இயேசு தேர்ந்தெடுத்து நியமிப்பார்? இயேசுவும் அவருடைய தகப்பனும் ஆன்மீக ஆலயத்தை, அதாவது வணக்கத்திற்கான ஏற்பாடுகளை, 1914 முதல் 1919-ன் ஆரம்பம் வரையான காலப்பகுதியில் சோதனையிட்ட பிறகே இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டது.c (மல். 3:1) ஒரு சிறு தொகுதியாக இருந்த உண்மையுள்ள பைபிள் மாணாக்கர்கள் கடவுளையும் அவருடைய வார்த்தையையும் நேசித்ததை கண்டு அவர்கள் இருவரும் மகிழ்ந்தார்கள். இந்தச் சிறு தொகுதியையும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது; அவர்களைச் சுத்திகரித்து புடமிட்டபோது அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார்கள். (மல். 3:2-4) அந்த உண்மையுள்ள பைபிள் மாணாக்கர்களே கோதுமை போன்ற உண்மை கிறிஸ்தவர்கள். 1919-ல், அவர்களிலிருந்து தகுதியுள்ள பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களை இயேசு உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாகத் தேர்ந்தெடுத்து தம் வீட்டார் மீது நியமித்தார்.
13. வீட்டாராக இருப்பவர்கள் யார், ஏன்?
13 அப்படியானால், யார் அந்த வீட்டார்? எளிய வார்த்தைகளில் சொன்னால், ஆன்மீக உணவை பெறுகிறவர்களே. கடைசி நாட்களின் ஆரம்பத்தில், பரலோக நம்பிக்கையுள்ள எல்லோரும் வீட்டாராக இருந்தார்கள். பிறகு, வேறே ஆடுகளான திரள் கூட்டத்தாரும் வீட்டார் ஆனார்கள். இப்போது கிறிஸ்துவின் “ஒரே மந்தை” பெரும்பாலும் வேறே ஆடுகளால் ஆனது. (யோவா. 10:16) உண்மையுள்ள அடிமை மூலம் அளிக்கப்படும் காலத்திற்கேற்ற ஆன்மீக உணவால் இரு தொகுதியினரும் பயனடைகிறார்கள். இன்று, உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக இருக்கும் ஆளும் குழுவினரைப் பற்றி என்ன? இவர்களுக்கும் ஆன்மீக உணவு தேவை. ஆகவே, இயேசுவின் மற்ற எல்லா உண்மையுள்ள சீடர்களைப் போலவே இவர்களும் தனி நபர்களாக, வீட்டாராக இருக்கிறார்கள் என்பதை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறார்கள்.
14. (அ) உண்மையுள்ள அடிமைக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதில் என்னவெல்லாம் அடங்கும்? (ஆ) உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு இயேசு என்ன எச்சரிப்பைக் கொடுத்தார்? (‘அந்த அடிமை தீயவனாக இருந்தால் . . .’ என்ற பெட்டியைப் பாருங்கள்.)
14 உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு இயேசு மிகவும் முக்கியமான பொறுப்பைக் கொடுத்தார். பைபிள் காலங்களில், இப்படிப்பட்ட நம்பகமான ஓர் அடிமை அல்லது நிர்வாகி, தன் எஜமானரின் உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். (லூக். 12:42) அதேவிதமாக, பூமியில் கிறிஸ்துவுக்குச் சொந்தமான உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பணம், பொருள், பிரசங்க வேலை, மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கவனித்துக்கொள்வது, சபைக் கூட்டங்களில்... தனிப்பட்ட படிப்பில்... வெளி ஊழியத்தில்... பயன்படுத்துவதற்கான பைபிள் பிரசுரங்களைத் தயாரிப்பது என பல பொறுப்புகள் இருக்கின்றன. இந்த அடிமையின் மூலம் அளிக்கப்படும் எல்லா விதமான ஆன்மீக ஏற்பாடுகளையும் சார்ந்தே வீட்டார் இருக்கிறார்கள்.
எஜமானரின் உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள நியமிக்கப்படுவது எப்போது?
15, 16. தன்னுடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள உண்மையுள்ள அடிமையை இயேசு எப்போது நியமிப்பார்?
15 ‘தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதற்கான’ இரண்டாவது நியமிப்பை இயேசு எப்போது கொடுக்கிறார்? இயேசு சொன்னார்: “எஜமான் வரும்போது [சொல்லர்த்தமாக, “வந்திருக்கும்போது,” அடிக்குறிப்பு, NW] அப்படி உணவளிப்பவனாகக் காணப்படுகிற அடிமையே சந்தோஷமானவன்! உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவர் தன்னுடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார்.” (மத். 24:46, 47) இயேசு வந்தபிறகு ‘அப்படி உணவளிக்கும்’ அடிமையை, அதாவது, ஆன்மீக உணவை உண்மையோடு அளிக்கும் அடிமையை, பார்க்கும்போது இரண்டாவது நியமிப்பைக் கொடுப்பார். அப்படியானால், இரண்டு நியமிப்புகளுக்கும் இடையே கால இடைவெளி இருக்கும். இயேசு, தம் உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அடிமையை எப்போது, எப்படி நியமிப்பார் என்பதைப் புரிந்துகொள்ள, இரண்டு விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்: இயேசு எப்போது வருவார், அவருடைய உடமைகளில் என்னவெல்லாம் இருக்கின்றன.
16 இயேசு எப்போது வருவார்? சூழமைவு பதிலளிக்கிறது. முந்தைய வசனங்களில் சொல்லப்பட்டுள்ள “வருகிறார்” என்ற வார்த்தை, இந்த உலகத்தின் முடிவு காலத்தில் இயேசு நியாயத்தீர்ப்பை அறிவித்து அதை நிறைவேற்ற வரும் சமயத்தையே குறிக்கிறது.d (மத். 24:30, 42, 44) எனவே, உண்மையுள்ள அடிமை பற்றிய உவமையில் இயேசு ‘வருவதாக’ சொல்லப்பட்டிருப்பதும் மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில்தான் நடக்கும்.
17. இயேசுவின் உடமைகளில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கின்றன?
17 ‘[இயேசுவின்] உடமைகள் எல்லாவற்றிலும்’ என்னவெல்லாம் உட்பட்டிருக்கின்றன? இயேசுவுக்கு பூமியில் மட்டுமல்ல பரலோகத்திலும் உடமைகள் இருக்கின்றன. “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று இயேசு சொன்னார். (மத். 28:18; எபே. 1:20-23) 1914-ல் மேசியானிய அரசாங்கம் அவருக்குச் சொந்தமானது; அதுவும் அந்த உடமைகளில் ஒன்று. பரலோக நம்பிக்கையுள்ள தம் சீடர்களோடு அதைப் பகிர்ந்துகொள்வார்.—வெளி. 11:15.
18. இயேசு ஏன் தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள உண்மையுள்ள அடிமையை சந்தோஷமாக நியமிப்பார்?
18 மேலே சொல்லப்பட்ட விஷயங்களைப் பார்க்கும்போது நாம் என்ன முடிவுக்கு வரலாம்? மிகுந்த உபத்திரவத்தின்போது இயேசு நியாயந்தீர்க்க வருகையில், உண்மையுள்ள அடிமை காலத்திற்கேற்ற ஆன்மீக உணவை வீட்டாருக்கு முழுமூச்சுடன் அளித்து வருவதைப் பார்ப்பார். அப்போது சந்தோஷமாக இரண்டாவது நியமிப்பைக் கொடுப்பார். ஆம், தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவர்களை நியமிப்பார். உண்மையுள்ள அடிமை பரலோகத்திற்கு போன பிறகே இந்த நியமிப்பைப் பெறுவார்கள்; கிறிஸ்துவின் உடன் ராஜாக்கள் ஆவார்கள்.
19. பரலோக நம்பிக்கையுள்ள மற்றவர்களைவிட உண்மையுள்ள அடிமை பரலோகத்தில் விசேஷ நியமிப்பைப் பெறுமா? விளக்குங்கள்.
19 பரலோக நம்பிக்கையுள்ள மற்றவர்களைவிட உண்மையுள்ள அடிமை பரலோகத்தில் விசேஷ நியமிப்பைப் பெறுமா? இல்லை. ஒரு பரிசை ஒரு சிறு தொகுதிக்கு தருவதாக ஒரு சமயத்தில் சொல்லியிருந்தாலும் பிறகு மற்றவர்களும் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, தாம் மரிப்பதற்கு முந்தின இரவு தம்முடைய உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்னதைக் கவனியுங்கள். (லூக்கா 22:28-30-ஐ வாசியுங்கள்.) அந்தச் சிறு தொகுதியினர் உண்மையோடு இருந்ததால் ஓர் அருமையான பரிசை நிச்சயம் பெறுவார்கள் என்று இயேசு வாக்குக்கொடுத்தார்; அவர்கள் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு, 1,44,000 பேரும் சிம்மாசனத்தில் அமர்ந்து தம்மோடு ஆட்சி செய்வார்கள் என்று குறிப்பிட்டார். (வெளி. 1:1; 3:21) அதேபோல், மத்தேயு 24:47-ல் தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள ஒரு சிறு தொகுதியை, அதாவது பரலோக நம்பிக்கையுள்ள உண்மையுள்ள அடிமையை நியமிப்பதாக இயேசு வாக்கு கொடுத்தார். ஆனால் உண்மையில், 1,44,000 பேருக்கும் கிறிஸ்துவின் உடமைகள் எல்லாவற்றின்மீதும் அதிகாரம் இருக்கும்.—வெளி. 20:4, 6.
20. உண்மையுள்ள அடிமையை இயேசு ஏன் நியமித்தார், நாம் எப்போதும் என்ன செய்ய வேண்டும்?
20 இயேசு, முதல் நூற்றாண்டில் சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தது போல இன்றும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமையைக் கொண்டு பலருக்கு ஆன்மீக உணவை அளித்து வருகிறார். தம்மைப் பின்பற்றுவோர், பரலோக நம்பிக்கையுள்ளோராக இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோராக இருந்தாலும் சரி, இந்தக் கடைசி நாட்கள் முழுவதிலும் காலத்திற்கேற்ற ஆன்மீக உணவை தொடர்ந்து பெறுவதற்காக உண்மையுள்ள அடிமையை இயேசு நியமித்திருக்கிறார். எனவே, பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களாலான உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு முழு ஆதரவு கொடுப்பதன் மூலம் எப்போதும் நம்முடைய போற்றுதலைக் காட்டுவோமாக!—எபி. 13:7, 17.
a பாரா 2: இதற்கு முன் ஒரு சமயத்தில், இதே போன்ற ஓர் உவமையை இயேசு சொன்னார். அதில், ‘அடிமையை’ ‘நிர்வாகியாகவும்’ ‘வீட்டாரை’ ‘வீட்டுப் பணியாளர்களாகவும்’ குறிப்பிட்டார்.—லூக். 12:42-44.
b பாரா 6: கிறிஸ்துவின் “வருகைக்கும்” (கிரேக்கில் எர்கோமாய்) “பிரசன்னத்திற்கும்” (பரோஸியா) வித்தியாசம் இருக்கிறது. நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற அவர் வருவதற்கு முன்பே காணமுடியாத அவரது பிரசன்னம் ஆரம்பித்துவிடுகிறது.
c பாரா 12: இதே இதழில், பக்கங்கள் 10-12-லுள்ள “இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்” என்ற கட்டுரையில் பாராக்கள் 5-8-ஐப் பாருங்கள்.
d பாரா 16: இதே இதழில், பக்கங்கள் 7-8-லுள்ள “இவையெல்லாம் எப்போது நடக்கும்?” என்ற கட்டுரையில் பாராக்கள் 14-18-ஐப் பாருங்கள்.