வேதனைக்கு விடிவுகாலம் விரைவில்!
வேதனையில்லா உலகம்! ஆஹா... கற்பனை செய்துபாருங்கள், எத்தனை அருமையாக இருக்கும்! கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும் குற்றச்செயல் இல்லை, போர் இல்லை, நோய் இல்லை, இயற்கைப் பேரழிவு இல்லை. அதுமட்டுமா? பணக் கவலை இல்லை, பாரபட்சம் இல்லை, வன்முறை இல்லை. இதெல்லாம் வெறும் கனவுபோல் தோன்றுகிறதா? உண்மைதான், எந்தவொரு மனித அமைப்பாலும் உலகத்தில் இப்படிப்பட்ட நிலைமையை உருவாக்க முடியாது. ஆனால், சென்ற கட்டுரையில் பார்த்த ஐந்து காரணங்கள் உட்பட, வேதனைகளுக்குக் காரணமான எல்லாவற்றையுமே தகர்த்தெறியப்போவதாகக் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். அவருடைய வார்த்தையான பைபிளில் பதிவாகியுள்ள பின்வரும் வாக்குறுதிகளைக் கவனியுங்கள்:
நல்ல அரசாங்கம் ஆட்சி செய்யும்
“அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார், அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோக அரசாங்கமாகும். மனித ஆட்சியாளர்களுக்குப் பதிலாக, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவரான இயேசு கிறிஸ்து அதன் ராஜாவாக இருப்பார்; பரலோகத்தில் மட்டுமல்ல பூலோகத்திலும் கடவுளுடைய சித்தம் நடைபெறும்படி அவர் பார்த்துக்கொள்வார். (மத்தேயு 6:9, 10) எந்தவொரு மனித அரசாங்கமும் அந்தப் பரலோக அரசாங்கத்தை மாற்றீடு செய்ய முடியாது; ஏனென்றால், அது ‘நம்முடைய எஜமானரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் முடிவில்லா அரசாங்கமாக’ இருக்கும். நிரந்தர சமாதானத்தை அது நிச்சயமாகவே அளிக்கும்.—2 பேதுரு 1:11.
பொய் மதம் இனி இருக்காது
“சாத்தானும்கூட ஒளியின் தூதனைப் போல் நடித்து வருகிறானே. அதனால், அவனுடைய ஊழியர்களும் நீதியின் ஊழியர்களைப் போல் நடித்து வருவது பெரிய விஷயம் அல்ல. அவர்களுடைய முடிவு அவர்களுடைய செயல்களுக்குத் தக்கதாகவே இருக்கும்.”—2 கொரிந்தியர் 11:14, 15.
பொய் மதம் சாத்தானின் கைக்கருவி என்ற உண்மை வெட்டவெளிச்சமாக்கப்பட்டு, முற்றிலுமாக அழிக்கப்படும். அதன்பின், மதவெறியும் மதத்தின் பேரில் செய்யப்படுகிற படுகொலைகளும் இனி இருக்காது. ‘உயிருள்ள உண்மைக் கடவுளான’ யெகோவாவை நேசிப்பவர்கள் ‘ஒரே விசுவாசத்தோடும்,’ “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” அவரை வணங்குவார்கள். சமாதானமும் ஒற்றுமையும் செழித்தோங்கும்.—1 தெசலோனிக்கேயர் 1:9; எபேசியர் 4:5; யோவான் 4:23.
மனிதர்கள் பரிபூரணம் அடைவார்கள்
‘கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.’—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இதையெல்லாம், மனிதகுலத்திற்காக உயிரையே கொடுத்த தம் மகன் இயேசுவின் மூலம் யெகோவா செய்யப்போகிறார். (யோவான் 3:16) இயேசுவின் வழிநடத்துதலில் மனிதகுலம் மீண்டும் பரிபூரணம் அடையும். இனி எந்த வேதனையும் இருக்காது; ஏனென்றால், ‘கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்.’ மனிதர்களுடைய அபூரணமும் வேதனையும் கானல் நீர்போல் மறைந்துவிடும்; அப்போது, “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
பொல்லாத தூதர்கள் அழிக்கப்படுவார்கள்
“பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பை, அதாவது பிசாசாகிய சாத்தானை, அவர் [இயேசு கிறிஸ்து] பிடித்து ஆயிரம் வருடங்களுக்குக் கட்டிப்போட்டார். அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை தேசங்களை அவன் ஏமாற்றாதபடி அவனை அதலபாதாளத்திற்குள் தள்ளியடைத்து, அதற்கு முத்திரை போட்டார்.”—வெளிப்படுத்துதல் 20:2, 3.
சாத்தானும் அவனுடைய தூதர்களான பேய்களும் கட்டப்பட்டு ‘அதலபாதாளத்திற்குள்,’ அதாவது செயல்படவே முடியாத நிலைமைக்கு, தள்ளப்படுவார்கள்; அதன்பிறகு அவனுடைய தீய செல்வாக்கு எல்லாமே செல்லாததாகிவிடும். அவனுடைய அராஜக ஆட்சி முடிவுக்கு வரும். சாத்தானின் தொந்தரவும் பொல்லாத தூதர்களின் தொல்லையும் இல்லாத உலகத்தில் வாழ்வது அடடா எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!
‘கடைசி நாட்கள்’ முடிவுக்கு வரும்
இயேசு குறிப்பிட்டிருந்த ‘மிகுந்த உபத்திரத்தின்’ முடிவிலே இந்த ‘கடைசி நாட்கள்’ முடிவுக்கு வரும். அவர் சொன்னார்: “அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதன் பின்பும் வரப்போவதில்லை.”—மத்தேயு 24:21.
முன்னொருபோதும் வந்திராத அளவுக்கு பெரிய கஷ்டங்கள் வரும் என்பதால்தான் அது மிகுந்த உபத்திரவமாக இருக்கும். ‘கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும்’ “அர்மகெதோன்” என்ற போரில் அந்தக் கஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
இந்தப் பொல்லாத உலகம் முடிவுக்கு வருவதைப் பார்க்க நல்மனமுள்ளோர் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தில் அவர்கள் அனுபவிக்கப்போகிற ஆசீர்வாதங்களில் சிலவற்றைக் கவனியுங்கள்.
கடவுள் இன்னும் நிறையச் செய்யப்போகிறார்
‘திரள் கூட்டமானோர்’ சமாதான புதிய உலகிற்குள் தப்பிப்பிழைப்பார்கள்: எண்ணிக்கையில் அடங்கா “திரள் கூட்டமான மக்கள்” ‘மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைத்து’ நீதியான புதிய உலகத்தில் வாழ்வார்கள் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14; 2 பேதுரு 3:13) ‘உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியான’ இயேசு கிறிஸ்துவே தங்கள் மீட்பர் என அப்போது அவர்கள் புகழ்பாடுவார்கள்.—யோவான் 1:29.
தெய்வீகக் கல்வியால் மாபெரும் பலன்கள் விளையும்: புதிய உலகத்தில், “பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) எல்லா மனிதர்களோடும் எப்படிச் சமாதானமாக வாழ்வது... சுற்றுச்சூழலுக்குத் தீங்குண்டாக்காதபடி எப்படி வாழ்வது... போன்ற விஷயங்களும் அந்தத் தெய்வீகக் கல்வியில் அடங்கும். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்.—ஏசாயா 48:17.
இறந்துபோனவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்: இயேசு பூமியிலிருந்தபோது, இறந்துபோன தன் நண்பர் லாசருவை உயிரோடு எழுப்பினார். (யோவான் 11:1, 5, 38-44) கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் மிகப் பெரியளவில் செய்யப்போகிற காரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அவர் அதைச் செய்தார்.—யோவான் 5:28, 29.
நீதி, சமாதானம் என்றென்றும் கொடிகட்டிப் பறக்கும்: கிறிஸ்துவின் ஆட்சியில், அக்கிரமம் அறவே அகன்றுபோயிருக்கும். நமக்கு எப்படித் தெரியும்? இயேசுவுக்கு இருதயங்களை ஆராய்ந்துபார்க்கும் ஆற்றல் இருக்கிறது என்பதால், அவர் அந்த ஆற்றலைப் பயன்படுத்தி நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிறார். ஆக, தங்கள் பொல்லாத வழிகளை மாற்றிக்கொள்ள மனமில்லாதவர்கள் அந்தப் புதிய உலகில் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.—சங்கீதம் 37:9, 10; ஏசாயா 11:3, 4; 65:20; மத்தேயு 9:4.
வரவிருக்கும் மகத்தான காலத்தைப் பற்றி பைபிள் சொல்கிற தீர்க்கதரிசனங்களில் சிலவற்றை மட்டுமே நாம் இப்போது சிந்தித்தோம். கடவுளுடைய அரசாங்கம் பூமியின் மீது ஆட்சி செய்யத் தொடங்கும்போது, ‘மிகுந்த சமாதானம்’ என்றென்றுமாக நிலவும். (சங்கீதம் 37:11, 29) வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமான எல்லாமே ஒழிந்துபோயிருக்கும். கடவுள்தாமே இப்படி வாக்குறுதி அளித்திருக்கிறார்: “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் . . . இந்த வார்த்தைகள் உண்மையானவை, சத்தியமானவை.”—வெளிப்படுத்துதல் 21:5. ▪ (w13-E 09/01)