அட்டைப்படக் கட்டுரை
உலக அழிவு சீக்கிரத்தில்!
மனிதர்கள் மற்றவர்களை அடக்கி ஆளுவதையும் ஒருவரையொருவர் அழித்துக்கொள்வதையும் பார்த்துகொண்டு, கடவுள் சும்மா இருப்பாரா? இல்லை! காலங்காலமாக மனிதர்கள் படும் கஷ்டங்களுக்கு அவர் முடிவு கட்டப்போகிறார். அதை சீக்கிரமாக செய்யப்போகிறார். அந்த செய்தியை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதை நமக்கு எப்படி சொல்கிறார்?
இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: முன்பின் தெரியாத இடத்துக்கு நீங்கள் காரில் போகிறீர்கள். போவதற்கு முன்பு மேப், ஜிபிஎஸ் (GPS), இன்டர்நெட் மூலமாக அந்த இடத்திற்கு போவதற்கான வழியை தெரிந்துகொள்கிறீர்கள். மேப்-ல் பார்த்த இடங்களையும், சில வழிகாட்டிப் பலகைகளையும் (sign boards) போகிற வழியில் பார்க்கிறீர்கள். அப்போது போக வேண்டிய இடத்திற்கு பக்கத்தில் வந்து விட்டீர்கள் என்று புரிந்துகொள்வீர்கள். அதேபோல், அழிவுக்கு முன் முக்கியமான சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கும் என்று பைபிள் சொல்கிறது. அந்த சம்பவங்கள் எல்லாம் நம் கண்முன் நடப்பதை பார்க்கும்போது, இந்த உலகத்துக்கு அழிவு நெருங்கி வந்துவிட்டதென்று தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
வேறெந்த காலப்பகுதியிலும் நடக்காத சம்பவங்கள் உலக அழிவுக்கு முன்பாக நடக்கும் என்று பைபிள் சொல்கிறது. அந்த சம்பவங்கள் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் நடக்கும் என்றும் சொல்கிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. உலகை உலுக்கும் சம்பவங்கள் உலக அழிவுக்கு முன்பாக நடக்கும் சம்பவங்களைப் பற்றி மத்தேயு 24-ம் அதிகாரம் சொல்கிறது. அந்த காலப்பகுதியை ‘சகாப்தத்தின் இறுதிக்கட்டம்’ என்றும், அதற்கு “பின்பு முடிவு வரும்” என்றும் சொல்கிறது. (மத்தேயு 24:3, 14) என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என பைபிள் சொல்கிறது? பெரிய போர்கள் நடக்கும், பஞ்சங்கள் இருக்கும், அடுத்தடுத்து பல இடங்களில் பூமியதிர்ச்சிகள் ஏற்படும், அக்கிரமம் அதிகமாகும், மக்கள் மத்தியில் அன்பு குறைந்து போகும், மதத் தலைவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். (மத்தேயு 24:6-26) பல நூறு வருஷங்களாகவே இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து வந்திருக்கலாம். ஆனால் அழிவு வருவதற்கு முன்பாக இந்த எல்லா சம்பவங்களும் ஒரே காலப்பகுதியில் நடக்கும் என்று பைபிள் சொல்கிறது. அடுத்து நாம் பார்க்கப்போகிற மூன்று குறிப்புகளும்கூட இதே காலப்பகுதியில்தான் நடக்கும்.
2. மக்களுடைய சுபாவம் உலக அழிவுக்கு முன்பு இருக்கிற காலப்பகுதியை ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. இந்த காலத்தில் வாழ்கிற பெரும்பாலான மக்கள் படுமோசமானவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்கிறது. அவர்கள் “சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, அவதூறு பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, காட்டிக்கொடுக்கிறவர்களாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:1-4) சக மனிதர்களை நேசிக்காத, மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்காத ஆட்கள் எல்லாக் காலத்திலும்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நாட்களில் வாழ்கிற பெரும்பாலான மக்கள்தான், படுமோசமாக நடந்துகொள்வார்கள். அதனால்தான் அதை “சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்கள்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் பார்க்கிறீர்களா?
3. மக்கள் பூமியை நாசமாக்குகிறார்கள் ‘பூமியை நாசமாக்குபவர்களை நாசமாக்குவேன்’ என்று கடவுள் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18) மனிதர்கள் பூமியை எப்படி நாசமாக்குகிறார்கள்? நோவா என்பவர் வாழ்ந்த காலத்தில் “பூமி உண்மைக் கடவுளின் பார்வையில் நாசமாகியிருந்தது. அது வன்முறையால் நிறைந்திருந்தது. ஆம், கடவுள் பூமியைப் பார்த்தபோது, அது நாசமாகியிருந்தது.” என்று பைபிள் சொல்கிறது. அதனால் அந்த கெட்ட மக்கள்மீது “அழிவைக் கொண்டுவரப்போகிறேன்” என்று கடவுள் சொல்கிறார். (ஆதியாகமம் 6:11-13 NW) நோவா காலத்தில் இருந்தவர்களைப் போலவே இன்றும், பூமி முழுவதும் இருக்கிற நிறைய பேர் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள். இப்படி நடந்து கொள்வதன்மூலம் அவர்கள் ஒருவிதத்தில் பூமியை நாசமாக்குகிறார்கள் என சொல்லலாம். அதுமட்டுமல்ல, இப்போது மனிதர்களிடம் அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன. அந்த ஆயுதங்களை வைத்து மனித இனத்தையே வேரோடு அழித்துவிட முடியும். மற்றொரு விதத்திலும் மனிதர்கள் பூமியை நாசமாக்குகிறார்கள். எப்படி? நாம் வாழ்வதற்கு தேவையான மரங்கள், உயிரினங்கள், கடல்கள் ஆகியவற்றையும் அவர்கள் கெடுத்திருக்கிறார்கள்.
நூறு வருஷங்களுக்கு முன்பு, ஒட்டுமொத்த மனித இனத்தையும் அழிப்பதற்கான ஆயுதங்கள் மனிதர்களிடம் இல்லை. ஆனால், இன்று மனிதர்கள் சக்தி வாய்ந்த போர் ஆயுதங்களை குவித்து வைத்திருக்கிறார்கள், இயற்கை வளங்களை அழித்திருக்கிறார்கள். விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது. அது ஏற்படுத்துகிற பாதிப்புகளை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஆனால் மனிதர்கள் இந்த பூமியை அழிப்பதற்கு கடவுள் அனுமதிக்கமாட்டார். அவர் தலையிட்டு பூமியை நாசப்படுத்துகிற மக்களை நாசப்படுத்துவார். அதை செய்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார். பூமியின் எதிர்காலம் மனிதர்கள் கையில் இல்லை!
4. உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலை உலக அழிவுக்கு முன்பாக ஒரு முக்கியமான வேலை செய்யப்படும் என்று பைபிள் சொல்கிறது. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14) காலங்காலமாக நிறைய அமைப்புகள் பைபிளில் இருக்கிற விஷயங்களை பிரசங்கித்து வந்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நாளில் நடக்கிற பிரசங்க வேலையில், முக்கியமாக ‘கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நற்செய்தி’ பிரசங்கிக்கப்படும். எந்த அமைப்பில் இருக்கிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றி சொல்லித் தருகிறார்கள்? அப்படியே சொன்னாலும், ஒருசில மக்களுக்கு மட்டும் அந்த செய்தியை சொல்கிறார்களா? அல்லது “உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும்” இந்த நற்செய்தியை சொல்கிறார்களா?
www.jw.org என்ற வெப்சைட் ‘கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நற்செய்தியை’ மக்களுக்கு சொல்கிறது. இந்த வெப்சைட்-ல் நற்செய்தியைப் பற்றி சொல்கிற புத்தகங்களும் பத்திரிகைகளும் 700-க்கும் அதிகமான மொழிகளில் இருக்கின்றன. வேறெந்த அமைப்பாவது உலகம் முழுவதும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றி சொல்வதற்கு இந்தளவு முயற்சி எடுக்கிறார்களா? மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு முன்பாகவே யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை பிரசங்கிப்பதில் பெயர் பெற்றவர்களாக இருந்தார்கள். 1939-ல் இருந்து “யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது” என்ற வாக்கியம் ஒவ்வொரு காவற்கோபுர பத்திரிகையின் அட்டைப் படத்திலும் இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளைப் போல “வேறு யாரும் இந்த பிரசங்க வேலையை இந்தளவுக்கு தீவிரமாகவும் உலகம் முழுவதும் செய்ததில்லை” என்று மதங்களைப் பற்றி விளக்குகிற ஒரு புத்தகம் சொல்கிறது. கடவுள் இந்த பூமியை சீக்கிரமாக ஆட்சி செய்யப் போகிறார், அப்போது இந்த உலகத்துக்கு “முடிவு வரும்” என்ற நல்ல செய்தியை யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் சொல்லி வருகிறார்கள்.
சரித்திரத்திலேயே ஒரு முக்கியமான காலம்
பைபிள் சொல்கிற இந்த நான்கு அடையாளங்களும், நாம் வாழ்கிற காலத்தில் நடந்து வருவதை நீங்கள் பார்க்கிறீர்களா? உலகத்தில் நடக்கிற மாற்றங்களைப் பற்றி நூறு வருஷங்களுக்கும் மேலாக இந்த பத்திரிகை சொல்லி வருகிறது. உலகத்துக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பதை இதனுடைய வாசகர்கள் புரிந்துகொள்ள உதவி செய்கிறது. ஆனால் சில சந்தேகவாதிகள், நாம் கடைசி காலத்தில் வாழவில்லை, இப்போது பார்த்த தகவல்கள் எல்லாம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து, அந்த தகவல்களை ஆளாளுக்கு மாற்றிகூட சொல்லலாம் என்று நினைக்கிறார்கள். டி.வி, செல்போன், இன்டர்நெட் பயன்பாடு அதிகமாகிவிட்டதால், எது, எங்கே நடந்தாலும் அது உடனே நமக்கு தெரிந்துவிடுகிறது; அதனால்தான் இன்று உலகம் ரொம்ப மோசமாக இருப்பதுபோல் தெரிகிறது என்றும் அந்த சந்தேகவாதிகள் சொல்கிறார்கள். ஆனால், நாம் வாழ்கிற காலம் சரித்திரத்திலேயே ஒரு முக்கியமான காலம், இந்த உலகத்துக்கு சீக்கிரமாக அழிவு வரப்போகிறது என்பதைத்தான் ஆதாரங்கள் காட்டுகிறது.
சீக்கிரத்தில் பூமியில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று சில அறிஞர்கள் நினைக்கிறார்கள். 2014-ல் வெளிவந்த ஒரு பத்திரிகையில் இப்படி சொல்லியிருந்தார்கள்: “தொழில்நுட்பத்தால் மனித இனம் அழிவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்பதைத்தான் ஆதாரங்கள் தெளிவாக காட்டுகின்றன.” நாம் எல்லாருமே முக்கியமான காலத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நிறைய பேர் புரிந்துகொள்கிறார்கள். நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை இந்த பத்திரிகையை வெளியிடுபவர்களும், நிறைய வாசகர்களும் நம்புகிறார்கள். இந்த உலகத்திற்கு அழிவு நெருங்கிவிட்டது என்றும் நம்புகிறார்கள். ஆனால் இந்த அழிவை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டுமா? பயப்பட வேண்டியதே இல்லை! ஏனெனில், உங்களால் அந்த அழிவிலிருந்து தப்பிக்க முடியும். (w15-E 05/01)