நம் வரலாற்றுச் சுவடுகள்
‘யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது’
அது 1919-வது வருஷம். செப்டம்பர் 1, திங்கட்கிழமை. புயல் அடித்து ஓய்ந்து, அன்றுதான் வெயில் பளிச்சென்று அடித்தது. அமெரிக்காவில், ஒஹாயோவிலுள்ள சீடர் பாயிண்ட்டில் ஒரு மாநாடு நடந்தது. மாநாட்டு மன்றத்தில் 2,500 பேர் உட்காரும் அளவுக்கு இடமிருந்தது. அன்று மதியம் ஆரம்பித்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 1,000 பேர் வந்திருந்தார்கள். ஆனால், சாயங்காலத்துக்குள் இன்னும் 2,000 பேர் வந்துவிட்டார்கள். அவர்கள் படகில், காரில், ரயிலில் எல்லாம் பயணம் செய்து வந்தார்கள். செவ்வாய்கிழமை அன்று இன்னும் நிறையப் பேர் வந்ததால் மன்றத்தில் உட்காரவே இடமில்லை. அதனால், மன்றத்துக்கு வெளியே பெரிய பெரிய மரங்களின் நிழலில் மாநாட்டை நடத்தினார்கள்.
இலைகள் வழியாக நுழைந்த சூரிய வெளிச்சம், ஆண்களின் கோட்டுகளில் (coat) பட்டபோது ஏதோவொரு அழகான டிசைன் (Design) போல் இருந்தது. பக்கத்திலுள்ள ஏரியிலிருந்து அடித்த தென்றல் காற்றில் பெண்களுடைய தொப்பியில் இருந்த இறகுகள் அசைந்தாடியது. ஒரு சகோதரர் இப்படி சொன்னார்: “மாநாடு நடந்த இடம் ஒரு பூங்கா போல ரொம்ப அழகா இருந்துச்சு. எந்த கூச்சலும் குழப்பமும் இல்லாம ரொம்ப அமைதியா இருந்துச்சு. சகோதர சகோதரிகள் எல்லாரும் ஒன்னா இருந்தது புதிய உலகத்துல இருக்குற மாதிரி இருந்தது.”
மாநாட்டுக்கு வந்த சகோதர சகோதரிகள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். அதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. அவர்களை சுற்றியிருந்த இயற்கையின் அழகுகூட தோற்றுப்போனது. “அவங்க எல்லாரும் கடவுள் பக்தியுள்ளவங்களா இருந்தாங்க. அதேசமயம் சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருந்தாங்க” என்று ஒரு உள்ளூர் செய்தித்தாள் சொன்னது. ஆனால் சில வருஷங்களாக அவர்கள் பல சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தார்கள். உதாரணத்துக்கு முதல் உலகப் போரில் அவர்கள் எதிர்ப்புகளை சந்தித்தார்கள், சபைக்குள் ஒற்றுமை இல்லை, புருக்லின் பெத்தேலும் மூடப்பட்டது. அதோடு, நற்செய்தியை சொன்னதுக்காக நிறையப் பேர் ஜெயிலில் போடப்பட்டார்கள். முக்கியமாக, அவர்களை வழிநடத்திய 8 சகோதரர்களுக்கு 20 வருஷ ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது.a ஆனால், இப்போது மாநாட்டில் எல்லாரும் ஒன்றாக சேர்ந்திருந்தது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
இந்த கஷ்டங்களினால் சில சகோதர சகோதரிகள் சோர்ந்துபோய் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நிறையப் பேர் அப்படியில்லை. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் தொடர்ந்து பிரசங்கித்தார்கள். ஒருசமயம் பைபிள் மாணாக்கர்களை விசாரணை செய்த ஒரு அதிகாரி அவர்களை பிரசங்கிக்க கூடாது என்று மிரட்டினார். ஆனால், “எங்க உயிர் இருக்குற வரைக்கும் நாங்க எல்லாருக்கும் பைபிள்ல இருக்கிற நற்செய்தியை சொல்வோம்” என்று அவர்கள் தைரியமாக சொன்னார்கள்.
இந்த கஷ்டமான சமயங்களில் “யெகோவா அவர்களை வழிநடத்தியதை புரிந்துகொண்டார்கள், . . . தொடர்ந்து அவர் வழிநடத்த வேண்டும் என்று ஜெபம் செய்தார்கள்.” இப்போது அவர்கள் எல்லாரும் திரும்பவும் சந்தோஷமாக கூடிவந்திருக்கிறார்கள். பிரசங்க வேலைதான் அவர்களுக்கு ரொம்ப முக்கியமாக இருந்தது. அதனால்தான் ஒரு சகோதரி, “பிரசங்க வேலையை மறுபடியும் எப்போ சுறுசுறுப்பா செய்ய போறோம்னு தெரியலையே” என்று ஏக்கமாக சொன்னார். சொல்லப்போனால், அந்த மாநாட்டுக்கு வந்த நிறையப் பேர் இதேபோல் நினைத்தார்கள்.
பொற்காலம்
அறிவிப்பு பலகைகள், மாநாட்டு நிகழ்ச்சி நிரல், வரவேற்பு அட்டை என எல்லாவற்றிலும் “GA” என்ற எழுத்துக்கள் இருந்தன. அங்கு வந்திருந்தவர்கள் அது என்னவென்று தெரியாமல் குழம்பிப்போயிருந்தார்கள். வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் ரதர்ஃபோர்ட் அங்கு வந்திருந்த 6,000 பேருக்கு அதன் அர்த்தத்தை சொன்னார். “GA” என்பது த கோல்டன் ஏஜ் (அதாவது, பொற்காலம்) என்ற ஆங்கில பத்திரிகையை குறிக்கிறது என்று சொன்னார். ஊழியத்தில் கொடுப்பதற்காக இந்த பத்திரிகை புதிதாக தயாரிக்கப்பட்டது.b—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி சகோதரர் ரதர்ஃபோர்ட் இப்படி சொன்னார்: “அவங்களுக்கு உறுதியான விசுவாசம் இருக்குறனாலதான் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் மேசியாவோட ஆட்சிக்காக அவங்க ஆசையா காத்துட்டு இருக்காங்க. . . . வரப்போற அந்த பொற்காலத்தை பத்தி எல்லா மக்களுக்கும் சொல்றத அவங்களோட கடமையாவும் பெரிய பாக்கியமாவும் நினைக்கிறாங்க. இந்த வேலையை கடவுளே அவங்களுக்கு கொடுத்திருக்கிறத புரிஞ்சிருக்காங்க.”
நற்செய்தியை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் சந்தா மூலமாக (பணம் கட்டி) இந்த பத்திரிகையை வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இந்த ஏற்பாட்டைப் பற்றி சொல்ல யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறது என்று கேட்டபோது அங்கிருந்த எல்லாரும் சந்தோஷத்தில் துள்ளிகுதித்து நின்றார்கள். “உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்” என்ற பாடலை இயேசுவின் சீடர்களுக்கே உரிய வைராக்கியத்தோடும் புதுத்தெம்போடும் அவர்கள் பாடினார்கள். “நாங்க பாடுன பாட்டை கேட்டு அங்கிருந்த மரங்களெல்லாம் அதிர்ந்த மாதிரி இருந்துச்சு” என்று சகோதரர் J. M. நாரிஸ் சொன்னார்.
மாநாட்டுக்கு வந்தவர்கள்தான் முதல்முதலில் நம் பத்திரிகையை சந்தா கட்டி வாங்கினார்கள். அதற்காக அன்று மாநாடு முடிந்த பிறகு அவர்கள் ரொம்ப நேரமாக வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். “திரும்பவும் ஊழியம் செய்ய ஆரம்பிக்க போறோம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சகோதரி மேபெல் பில்பிரிக் சொன்னார். நிறையப் பேர் இந்த சகோதரியைப் போலவே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள்.
‘யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது’
கிட்டத்தட்ட 7,000 சகோதர சகோதரிகள் ஊழியம் செய்ய தயாராக இருந்தார்கள். அமைப்பு சொல்லும் வழிகள் என்ற துண்டுப்பிரதியும் யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற சிறு புத்தகமும் இந்த விஷயங்களை விளக்கியது: ‘தலைமை அலுவலகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சர்வீஸ் டிபார்ட்மென்ட் இந்த வேலையை வழிநடத்தும். சபையில் ஊழியக் குழு ஆரம்பிக்கப்படும். அமைப்பு கொடுக்கும் ஆலோசனைகளை சபைக்கு சொல்ல ஒரு சர்வீஸ் டைரக்டரும் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு பிராந்தியத்திற்கு 150-200 வீடுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஊழிய கூட்டம் நடக்கும். அப்போது சகோதரர்கள் ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களை சொல்வார்கள். அதோடு, அவர்களுடைய ஊழிய அறிக்கையையும் கொடுப்பார்கள்.
“மாநாடு முடிஞ்சு வீட்டுக்கு போன பிறகு இந்த புது விதமான ஊழியத்தை நாங்க சுறுசுறுப்பா செஞ்சோம்” என்று சகோதரர் எர்மென் பில்பிரிக் சொன்னார். ஆர்வமுள்ள நிறையப் பேரை அவர்கள் ஊழியத்தில் பார்த்தார்கள். ‘போர் நடந்ததுனால மக்கள் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தாங்க. ஒரு அருமையான எதிர்காலத்தை பத்தி அவங்ககிட்ட சொன்னப்போ அதை ரொம்ப ஆர்வமா கேட்டாங்க’ என்று சகோதரி பியூலா சொன்னார். ஆர்த்தர் க்ளாஸ் என்ற சகோதரர் இப்படி சொன்னார்: “பணம் கட்டி பத்திரிகையை வாங்கி படிக்க இத்தனை பேர் ஆர்வமா இருந்ததை பார்த்தப்போ சபையில இருந்த எல்லாருக்கும் ஆச்சரியமா இருந்துச்சு.” கோல்டன் ஏஜ் பத்திரிகையை வெளியிட்ட இரண்டு மாதத்துக்குள் சுமார் 5 லட்சம் பத்திரிகைகளை ஊழியத்தில் கொடுத்தார்கள். ஒவ்வொரு மாதமும் 50,000 பேர் சந்தா கட்டி அந்த பத்திரிகையை வாங்கினார்கள்.
ஜூலை 1, 1920 காவற்கோபுரத்தில் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்தச் நற்செய்தி’ என்ற கட்டுரை வந்தது. முதல்முதலில் அந்த கட்டுரையில்தான் இந்த வேலை உலகம் முழுவதும் செய்யப்பட வேண்டுமென சொல்லப்பட்டது என்று சகோதரர் A. H. மேக்மில்லன் சொன்னார். “கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வரப்போகிறது” என்ற உண்மையை பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் சொல்ல இந்த கட்டுரை அவர்களை உற்சாகப்படுத்தியது. இன்று, கிறிஸ்துவின் சகோதரர்களிடம் “இந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.” இவர்களோடு சேர்ந்து இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த வேலையை சுறுசுறுப்பாக செய்கிறார்கள். பொற்காலமாக இருக்கப் போகிற மேசியாவின் ஆட்சிக்காக அவர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
a யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் (Proclaimers) என்ற ஆங்கில புத்தகத்தில் “சோதனை காலம் (1914-1918)” என்ற 6-வது அதிகாரத்தைப் பாருங்கள்.
b த கோல்டன் ஏஜ் பத்திரிகையின் பெயர் 1937-ல் கான்சலேஷன் என்று மாற்றப்பட்டது. பிறகு 1946-ல் விழித்தெழு! என்று மாற்றப்பட்டது.