சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய மற்ற தேசத்தாருக்கு உதவுங்கள்!
“மற்ற தேசத்தாரை யெகோவா பாதுகாக்கிறார்.”—சங். 146:9.
1, 2. (அ) நம் சகோதர சகோதரிகளுக்கு என்னென்ன சவால்கள் இருந்திருக்கின்றன? (ஆ) என்னென்ன கேள்விகள் வருகின்றன?
“புரூண்டியில உள்நாட்டுப் போர் ஆரம்பிச்சப்போ நாங்க குடும்பமா மாநாட்டுல இருந்தோம். துப்பாக்கிச்சூடு நடக்கிறதயும், ஜனங்க அங்கயும் இங்கயும் ஓடுறதயும் எங்களால பார்க்க முடிஞ்சது. என் அப்பா அம்மாவும், என்கூட பிறந்த 10 பேரும், நானும் எங்ககிட்ட இருந்த கொஞ்ச பொருள்களோட தப்பிச்சு ஓடுனோம். என் குடும்பத்துல இருந்த கொஞ்ச பேர், சுமார் 1,600 கி.மீ. (1,000 மைல்) தூரத்துல இருந்த மலாவி நாட்டு அகதிகள் முகாமுக்குப் போய்ச் சேர்ந்தாங்க. மீதியிருந்த நாங்க எல்லாரும் வேற வேற இடங்களுக்கு போயிட்டோம்” என்கிறார் சகோதரர் லிஜெ.
2 உலகம் முழுவதும் சுமார் 6,50,00,000 அகதிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் போர் அல்லது துன்புறுத்தல் காரணமாக தங்கள் நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள். இதுவரை பதிவு செய்யப்பட்ட அகதிகளின் எண்ணிக்கையிலேயே இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை!a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இவர்களில் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளும் இருக்கிறார்கள். இவர்களில் நிறைய பேர், அன்பானவர்களை இழந்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பறிகொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு வேறு என்னென்ன சவால்கள் இருந்திருக்கின்றன? வேதனைகள் மத்தியிலும் யெகோவாவைச் சந்தோஷமாக வணங்க, அகதிகளாக இருக்கிற நம் அன்பான சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படி உதவலாம்? (சங். 100:2) யெகோவாவைப் பற்றி கேள்விப்படாத மற்ற அகதிகளுக்குப் பிரசங்கிக்கும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
அகதிகளின் வாழ்க்கை
3. இயேசுவும் அவருடைய சீஷர்களில் நிறைய பேரும் எப்படி அகதிகளாக ஆனார்கள்?
3 இயேசுவைக் கொல்ல ஏரோது ராஜா திட்டம் போட்டிருப்பதாக யெகோவாவின் தூதர் யோசேப்பை எச்சரித்த பிறகு, இயேசுவும் அவருடைய பெற்றோரும் எகிப்தில் அகதிகளாக ஆனார்கள். ஏரோது சாகும்வரை அவர்கள் எகிப்திலேயே இருந்தார்கள். (மத். 2:13, 14, 19-21) பல வருஷங்களுக்குப் பிறகு, துன்புறுத்தல் காரணமாக இயேசுவின் சீஷர்கள் “யூதேயா, சமாரியா பகுதிகள் முழுவதும் சிதறிப்போனார்கள்.” (அப். 8:1) தன் சீஷர்களில் நிறைய பேர், தங்கள் வீடுகளை விட்டு துரத்தப்படுவார்கள் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், “உங்களை ஒரு நகரத்தில் துன்புறுத்தினால், வேறொரு நகரத்துக்குத் தப்பித்து ஓடுங்கள்” என்று அவர் சொன்னார். (மத். 10:23) எந்தக் காரணத்துக்காக வீட்டைவிட்டுப் போக வேண்டியிருந்தாலும் சரி, அது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல!
4, 5. (அ) வீட்டைவிட்டுத் தப்பிக்கும்போதும்... (ஆ) அகதிகள் முகாமில் இருக்கும்போதும்... அகதிகளுக்கு என்னென்ன ஆபத்துகள் வரலாம்?
4 வீட்டைவிட்டுத் தப்பிக்கும்போதும், அகதிகள் முகாமில் இருக்கும்போதும், அகதிகளுக்கு சில ஆபத்துகள் வரலாம். “வாரக் கணக்குல நாங்க நடந்தோம். வழியில நூத்துக்கணக்கான பிணங்கள் கிடந்துச்சு . . . எனக்கு அப்போ 12 வயசு. என் கால் ரொம்ப வீங்கிடுச்சு. அதனால, என்னை விட்டுட்டு போங்கனு என் குடும்பத்துல இருந்தவங்ககிட்ட சொன்னேன். கலகக்கார கும்பல்கிட்ட என்னை விட்டுட்டு போகக் கூடாதுங்கிறதுனால, அப்பா என்னை தூக்கிக்கிட்டு போனார். நாங்க யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம், அவரயே நம்பியிருந்தோம். அதனாலதான், ஒவ்வொரு நாளும் எங்களால தாக்குப்பிடிக்க முடிஞ்சது. சில சமயத்துல, வழியில விளைஞ்சு கிடந்த மாம்பழங்களைதான் சாப்பிட்டோம்” என்கிறார் சகோதரர் லிஜெயின் தம்பி காட்.—பிலி. 4:12, 13.
5 லிஜெயின் குடும்பத்திலிருந்த பெரும்பாலானவர்கள், பல வருஷங்களாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாம்களில் இருந்தார்கள். ஆனால், அங்கேயும் ஆபத்துகள் இருந்தன. இப்போது வட்டாரக் கண்காணியாக இருக்கிற லிஜெ இப்படிச் சொல்கிறார்: “அங்க இருந்த நிறைய பேர் வேலை இல்லாம இருந்தாங்க. புறணி பேசுறது... குடிக்கிறது... சூதாடுறது... திருடுறது... ஒழுக்கக்கேடா நடந்துக்கிறது... இதெல்லாந்தான் அவங்க வேலை.” இது போன்ற மோசமான விஷயங்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க, அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் சபை காரியங்களில் மும்முரமாக ஈடுபட வேண்டியிருந்தது. (எபி. 6:11, 12; 10:24, 25) நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தியதால், அவர்கள் சத்தியத்தில் உறுதியாக இருந்தார்கள்; நிறைய பேர் பயனியர் ஊழியமும் செய்தார்கள். வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேலர்களுக்கு கடைசியில் விடுதலை கிடைத்தது போல, தங்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்த்தார்கள். நம்பிக்கையான மனநிலையோடு இருக்க இது அவர்களுக்கு உதவியது.—2 கொ. 4:18.
அன்பு காட்டுங்கள்
6, 7. (அ) ‘கடவுள்மேல் இருக்கிற அன்பு,’ சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்ட நம்மை எப்படித் தூண்டும்? (ஆ) ஒரு உதாரணம் கொடுங்கள்.
6 சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்ட, அதுவும் அவர்கள் கஷ்டப்படும்போது அன்பு காட்ட, ‘கடவுள்மேல் இருக்கிற அன்பு’ நம்மைத் தூண்டும். (1 யோவான் 3:17, 18-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, முதல் நூற்றாண்டில் யூதேயாவில் பஞ்சம் வந்தபோது, அவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய அங்கிருந்த சபை ஏற்பாடு செய்தது. (அப். 11:28, 29) அதோடு, ஒருவரை ஒருவர் உபசரிக்க வேண்டும் என்று பவுலும் பேதுருவும் அங்கிருந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்கள். (ரோ. 12:13; 1 பே. 4:9) வேறொரு இடத்திலிருந்து நம்மைச் சந்திக்க வருகிற சகோதர சகோதரிகளுக்கே நாம் அன்பு காட்ட வேண்டும் என்றால், ஆபத்தில் இருக்கிற சகோதரர்களுக்கும் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காததால் துன்பப்படுகிற சகோதரர்களுக்கும் நாம் எந்தளவு அன்பு காட்ட வேண்டும்!b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—நீதிமொழிகள் 3:27-ஐ வாசியுங்கள்.
7 சமீபத்தில், போர் மற்றும் துன்புறுத்தலால் கிழக்கு உக்ரைனிலிருக்கிற யெகோவாவின் சாட்சிகள் தங்கள் இடத்தை விட்டு போக வேண்டியிருந்தது. அவர்களில் சிலர் கொல்லப்பட்டது சோகமான ஒரு விஷயம்! ரஷ்யா மற்றும் உக்ரைனின் மற்ற பகுதிகளில் இருக்கிற சகோதர சகோதரிகள் அவர்களை அன்போடு வரவேற்று தங்கள் வீடுகளில் தங்க வைத்தார்கள். இந்த 2 நாடுகளிலிருந்த சகோதர சகோதரிகளும் நடுநிலைமையோடு இருந்தார்கள். அவர்கள், ‘உலகத்தின் பாகமாக இருக்கவில்லை.’ அதோடு, “கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியை” வைராக்கியமாக மற்றவர்களுக்குச் சொன்னார்கள்.—யோவா. 15:19; அப். 8:4.
விசுவாசத்தைப் பலப்படுத்த உதவுங்கள்
8, 9. (அ) அகதிகளாகத் தங்கியிருக்கும் நாட்டில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கலாம்? (ஆ) அவர்களுக்கு உதவும்போது நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்?
8 சிலர், தங்கள் சொந்த நாட்டிலிருக்கும் வேறு இடத்துக்கு அகதிகளாகப் போக வேண்டியிருக்கிறது. மற்றவர்கள், பெரும்பாலும் தங்களுக்குப் பழக்கமில்லாத வேறொரு நாட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது. சாப்பாடு, துணிமணி, தங்க இடம் என அரசாங்கங்கள் அவர்களைக் கவனித்துக்கொண்டாலும், அவர்களுக்கு இன்னும் சில சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, பழக்கமில்லாத உணவுகளை அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கலாம். சூடான நாட்டிலிருந்து குளிரான நாட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு, குளிருக்கு ஏற்றபடி உடுத்தத் தெரியாமல் இருக்கலாம். கிராமப்புறங்களிலிருந்து வந்திருப்பவர்கள் நவீன சாதனங்களை முதல் முறையாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
9 புதிய நாட்டில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள சில அரசாங்கங்கள் அகதிகளுக்குப் பயிற்சி கொடுக்கின்றன. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு, அவர்களே தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு ரொம்பவே சிரமமாக இருக்கலாம். ஒரே சமயத்தில் அவர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது! புதிய மொழி, புதிய பழக்கவழக்கங்கள், ‘பில்’ கட்டுவது மற்றும் வரி கட்டுவது சம்பந்தமான புதிய சட்டங்கள், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, அவர்களைக் கண்டிப்பது என எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் கற்றுக்கொள்வது அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்! இது போன்ற கஷ்டங்களை அனுபவிக்கிற நம் சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் பொறுமையோடும் மரியாதையோடும் உதவி செய்வீர்களா?—பிலி. 2:3, 4.
10. விசுவாசத்தில் பலமாக இருக்க அகதிகளுக்கு நாம் எப்படி உதவலாம்? (ஆரம்பப் படம்)
10 சில சமயங்களில், உள்ளூர் சபையைத் தொடர்புகொள்ள முடியாதபடி அதிகாரிகள் அகதிகளுக்குப் பிரச்சினை கொடுக்கலாம். அகதிகள் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதும் கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், சபைக் கூட்டங்களுக்குத் தடையாக இருக்கிற வேலையை ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படலாம். அப்படி ஏற்றுக்கொள்ளாமல் போனால், எந்த உதவியும் கிடைக்காது என்று அரசாங்க அமைப்புகள் பயமுறுத்தலாம். உதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் சில சகோதர சகோதரிகள் அப்படிப்பட்ட வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால், சகோதர சகோதரிகள் அகதிகளாக வந்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும்போது அவர்களை உடனே போய் பார்க்க வேண்டும். நமக்கு அவர்கள்மேல் அக்கறை இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். இப்படி அக்கறை காட்டும்போதும், நடைமுறையான உதவிகள் செய்யும்போதும் அவர்களுடைய விசுவாசம் பலப்படும்.—நீதி. 12:25; 17:17.
நடைமுறையான உதவிகளைச் செய்யுங்கள்
11. (அ) ஆரம்பத்தில் அகதிகளுக்கு எவையெல்லாம் தேவை? (ஆ) அகதிகள் எப்படி நன்றியோடு இருக்கலாம்?
11 ஆரம்பத்தில், உணவு, உடை அல்லது சில அத்தியாவசியமான பொருள்களை நாம் அவர்களுக்குத் தர வேண்டும்.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதுமட்டுமல்ல, ‘டை’ போன்ற சின்ன சின்ன பரிசுகளையும் அவர்களுக்குத் தரலாம்; அதை அவர்கள் பெரிதாக நினைப்பார்கள். தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று அகதிகள் மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, சகோதரர்கள் செய்கிற உதவிக்கு அவர்கள் நன்றியோடு இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது, உதவி செய்கிற சகோதரர்களும் சந்தோஷப்படுகிறார்கள். போகப் போக, அகதிகள் தங்களைக் கவனித்துக்கொள்ள பழகிக்கொள்வது ரொம்ப முக்கியம். அப்போது, தங்கள் சுய மரியாதையை அவர்களால் காத்துக்கொள்ள முடியும்; சகோதரர்களோடும் நல்ல பந்தத்தில் இருக்க முடியும். (2 தெ. 3:7-10) இருந்தாலும், அவர்களுக்கு இன்னும் சில நடைமுறையான உதவிகள் தேவை.
12, 13. (அ) அகதிகளுக்கு என்னென்ன நடைமுறையான உதவிகளைச் செய்யலாம்? (ஆ) ஒரு உதாரணம் கொடுங்கள்.
12 அகதிகளுக்கு உதவ நம்மிடம் நிறைய பணம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால், நம் நேரமும் அன்பும்தான் அவர்களுக்கு அதிகம் தேவை. உதாரணத்துக்கு, பொது வாகனங்களில் எப்படிப் பயணம் செய்வது என்று அவர்களிடம் சொல்லலாம். ஆரோக்கியமான, அதே சமயத்தில் விலை குறைவான உணவுப் பொருள்களை எங்கே வாங்கலாம் என்று சொல்லலாம். தையல் மெஷின் அல்லது புல் கத்தரிக்கும் மெஷின் போன்றவற்றை எப்படி வாங்கலாம் என்றும் சொல்லலாம். இதன் மூலம், அவர்களுக்குத் தேவையான வருமானத்தை அவர்களால் சம்பாதிக்க முடியும். இதைவிட முக்கியமாக, புதிய சபையில் தங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவலாம். முடிந்தால், கூட்டங்களுக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போகலாம். சபை பிராந்தியத்தில் இருக்கிற மக்களிடம் எப்படிப் பேசலாம் என்று சொல்லித்தரலாம். அவர்களோடு ஊழியமும் செய்யலாம்.
13 இளம் அகதிகள் 4 பேர் ஒரு சபைக்கு வந்தவுடன் வெவ்வேறு மூப்பர்கள் அவர்களுக்கு நடைமுறையான உதவிகளைச் செய்தார்கள். கார் ஓட்டவும், கடிதங்களை ‘டைப்’ செய்யவும், வேலைக்கு விண்ணப்பிக்கவும் அவர்களுக்குச் சொல்லித்தந்தார்கள். யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுக்கும் விதத்தில் எப்படி நேரத்தைத் திட்டமிடலாம் என்றும் சொல்லித்தந்தார்கள். (கலா. 6:10) சீக்கிரத்திலேயே அந்த 4 பேரும் பயனியர்களாக ஆனார்கள். ஆன்மீக இலக்குகளை அடைய மூப்பர்கள் செய்த உதவியும், தாங்கள் எடுத்த முயற்சியும், நல்ல முன்னேற்றம் செய்ய அவர்களுக்கு உதவியது. அதோடு, சாத்தானுடைய உலகத்தின் பாகமாக ஆகிவிடாமல் இருக்கவும் அது உதவியது.
14. (அ) அகதிகள் எந்த ஆசையை எதிர்த்து நிற்க வேண்டும்? (ஆ) ஒரு உதாரணம் கொடுங்கள்.
14 யெகோவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொருள் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான ஆசை வந்துவிடாமல் இருக்க எல்லா கிறிஸ்தவர்களும் முயற்சி செய்வது போல, அகதிகளும் முயற்சி செய்ய வேண்டும்.d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) தங்கள் குடும்பம் வேறொரு நாட்டுக்குத் தப்பித்துப் போனபோது, விசுவாசம் சம்பந்தமாக தங்கள் அப்பா சொல்லித்தந்த பாடங்களைப் பற்றி ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட லிஜெயும், அவர்கூட பிறந்தவர்களும் இப்படிச் சொல்கிறார்கள்: “நாங்க கொண்டுபோன சில அவசியமில்லாத பொருள்கள அப்பா ஒவ்வொண்ணா தூக்கி எறிஞ்சார். கடைசியில, வெறும் பைதான் இருந்துச்சு. என் அப்பா சிரிச்சிக்கிட்டே, ‘இப்போதைக்கு இது மட்டும் இருந்தா போதும்’னு சொன்னார்.”—1 தீமோத்தேயு 6:8-ஐ வாசியுங்கள்.
அகதிகளின் மிக முக்கியமான தேவை
15, 16. (அ) அகதிகளுடைய விசுவாசத்தை நாம் எப்படிப் பலப்படுத்தலாம்? (ஆ) உணர்ச்சி ரீதியில் அவர்களுக்கு எப்படி உதவலாம்?
15 சாப்பாடு மற்றும் துணிமணிகளைத் தருவதைவிட, அகதிகளிடம் ஆறுதலாகப் பேசுவதும், அவர்களுக்கு பைபிளிலிருந்து உற்சாகத்தைத் தருவதும்தான் ரொம்ப முக்கியம். (மத். 4:4) அகதிகளுடைய சொந்த மொழியில் பிரசுரங்கள் கிடைப்பதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம். அவர்களுடைய மொழியைப் பேசுகிற சகோதரர்களைத் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு உதவலாம். இதைச் செய்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால், குடும்பம், சமுதாயம், சபை என தங்களுக்கு நெருக்கமான எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர வேண்டிய சூழ்நிலை அகதிகள் நிறைய பேருக்கு இருந்திருக்கிறது. தங்கள் சகோதரர்களின் மத்தியில், யெகோவாவின் அன்பையும் கரிசனையையும் அவர்கள் உணர வேண்டும்! இல்லை என்றால், தாங்கள் அகதிகளாக வந்திருக்கிற நாட்டில், யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்களிடம் அவர்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுவார்கள். (1 கொ. 15:33) நாம் அகதிகளிடம் நன்றாகப் பழகும்போது, தாங்களும் சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு வரும். அவர்கள் அப்படி உணர்ந்தால், “மற்ற தேசத்தாரை” பாதுகாக்க யெகோவாவோடு சேர்ந்து நாமும் உழைக்கிறோம் என்று அர்த்தம்.—சங். 146:9.
16 தங்களைத் துன்புறுத்தியவர்கள் ஆட்சி செய்தவரை, இயேசுவாலும் அவருடைய குடும்பத்தாராலும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக முடியவில்லை. அதே போன்ற காரணங்களுக்காக, இன்றும் அகதிகளால் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிப் போக முடிவதில்லை. மற்ற சில அகதிகளோ, அப்படிப் போக விரும்புவதில்லை. அகதிகளாக வந்த பெற்றோர் நிறைய பேர், தங்களுடைய நாட்டில் தங்கள் குடும்பத்தார் கற்பழிக்கப்பட்டதையும் கொலை செய்யப்பட்டதையும் பார்த்ததால், தங்கள் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மறுபடியும் அங்கே போக விரும்புவதில்லை என்று லிஜெ சொல்கிறார். அகதிகளாக இருக்கிற நம் சகோதரர்களுக்கு, “அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் கரிசனையையும் மனத்தாழ்மையையும்” காட்ட வேண்டும். (1 பே. 3:8) துன்புறுத்தலை அனுபவித்ததால், மற்றவர்களோடு பழக சிலர் தயங்கலாம். தங்களுக்கு நடந்த சம்பவங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேச, முக்கியமாக பிள்ளைகள் முன்னால் பேச, அவர்களுக்கு அவமானமாக இருக்கலாம். அது போன்ற சமயங்களில், உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “எனக்கு அந்த மாதிரி ஏதாவது நடந்தா, மத்தவங்க என்னை எப்படி நடத்தணும்னு நான் எதிர்பார்ப்பேன்?”—மத். 7:12.
சாட்சிகளாக இல்லாத அகதிகளுக்குப் பிரசங்கிக்கும்போது
17. பிரசங்க வேலை எப்படி அகதிகளுக்கு நிம்மதியைத் தருகிறது?
17 நிறைய பேர், நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கிற நாடுகளிலிருந்து அகதிகளாக வருகிறார்கள். ஆயிரக்கணக்கான அகதிகள், முதல் முறையாக “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை” கேட்கிறார்கள். அவர்களுக்கு வைராக்கியமாகப் பிரசங்கிக்கும் சகோதர சகோதரிகளை நாம் பாராட்ட வேண்டும். (மத். 13:19, 23) “பாரமான சுமையைச் சுமக்கிற” நிறைய பேர் நம் கூட்டங்களுக்கு வரும்போது, ஆறுதலையும் நிம்மதியையும் பெறுகிறார்கள். அதனால்தான், “உண்மையாகவே கடவுள் உங்கள் மத்தியில் இருக்கிறார்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.—மத். 11:28-30; 1 கொ. 14:25.
18, 19. அகதிகளுக்குப் பிரசங்கிக்கும்போது நாம் எப்படி ஞானமாக நடந்துகொள்ளலாம்?
18 அகதிகளுக்குப் பிரசங்கிக்கும்போது, ஞானமாகவும் “ஜாக்கிரதையாகவும்” நடந்துகொள்ள வேண்டும். (மத். 10:16; நீதி. 22:3) அவர்கள் பேசும்போது, பொறுமையாகக் கேளுங்கள்; அரசியலைப் பற்றி பேசாதீர்கள். கிளை அலுவலகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வரும் வழிநடத்துதல்களைப் பின்பற்றுங்கள். அப்போதுதான், நாமோ அகதிகளோ எந்த ஆபத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டோம். அகதிகளுடைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்; அவற்றுக்கு மரியாதை கொடுங்கள். உதாரணத்துக்கு, சில கலாச்சாரங்களிலிருந்து வந்தவர்கள், பெண்கள் இப்படித்தான் உடுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால், அவர்களுக்குப் பிரசங்கிக்கும்போது அவர்கள் இடறலடையாதபடி உடுத்துவது நல்லது.
19 யெகோவாவை வணங்காதவர்கள் உட்பட, கஷ்டப்படுகிற எல்லாருக்கும் உதவ நாம் ஆசைப்படுகிறோம். அப்படிச் செய்யும்போது, இயேசுவின் உதாரணத்தில் வருகிற அந்தச் சமாரியனைப் போல நாம் இருப்போம். (லூக். 10:33-37) மக்களுக்கு உதவுவதற்கான மிகச் சிறந்த வழி, நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதுதான்! நிறைய அகதிகளுக்கு உதவிய ஒரு மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “நாம யெகோவாவின் சாட்சிகள்ங்கிறத முதல்லயே சொல்லிடுறது நல்லது. பொருளாதார ரீதியில உதவுறதவிட ஆன்மீக ரீதியில உதவுறதுதான் நம்மளோட முக்கிய நோக்கங்கிறதையும் அவங்ககிட்ட சொல்லிடணும் . . . இல்லன்னா, சில அகதிகள் சுய லாபத்துக்காக நம்மகூட பழக ஆரம்பிச்சிடுவாங்க.”
நல்ல பலன்கள்
20, 21. (அ) அகதிகளிடம் உண்மையான அன்பு காட்டும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
20 ‘மற்ற தேசத்தாரிடம்’ உண்மையான அன்பு காட்டும்போது, நிறைய பலன்கள் கிடைக்கும். எரிட்ரியாவில் நடந்த துன்புறுத்தலால், தன்னுடைய குடும்பத்தார் அங்கிருந்து புறப்பட்டதாக ஒரு சகோதரி சொன்னார். அவருடைய 4 பிள்ளைகளும் பாலைவனம் வழியாக 8 நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ரொம்பவே களைப்பான அந்தப் பயணத்துக்குப் பிறகு, ஒருவழியாக அவர்கள் சூடான் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தச் சகோதரி இப்படிச் சொல்கிறார்: “அங்கிருந்த சகோதரர்கள் அவங்கள நெருங்குன சொந்தக்காரங்க மாதிரி கவனிச்சுக்கிட்டாங்க. சாப்பாடு, துணிமணி, தங்க இடம், போக்குவரத்து உதவிகள்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. ஒரே கடவுள வணங்குறோங்கிற காரணத்துக்காக, யாராவது புதுசா வந்தவங்கள அவங்க வீட்டில தங்க வைப்பாங்களா? யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் அப்படி செய்வாங்க.”—யோவான் 13:35-ஐ வாசியுங்கள்.
21 தங்கள் பெற்றோரோடு வந்த நிறைய பிள்ளைகளைப் பற்றி என்ன சொல்லலாம்? யெகோவாவைச் சந்தோஷமாக வணங்க அவர்களுக்கு நாம் எல்லாரும் எப்படி உதவலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
a இந்தக் கட்டுரையில், “அகதிகள்” என்ற வார்த்தை, போர், துன்புறுத்தல் அல்லது இயற்கைப் பேரழிவுகள் காரணமாக தங்கள் நாடுகளை விட்டு துரத்தப்பட்டவர்களைக் குறிக்கிறது. வேறொரு நாட்டுக்கோ, அதே நாட்டிலேயே இன்னொரு இடத்துக்கோ அவர்கள் துரத்தப்பட்டிருக்கலாம். உலகம் முழுவதும், 113 பேருக்கு ஒருவர் அகதியாகத் துரத்தப்படுகிறார் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையர் (UNHCR) சொல்கிறார்.
b அக்டோபர் 2016 காவற்கோபுரம், பக். 8-12-ல் இருக்கிற “அந்நியர்களுக்குத் தயவு காட்ட மறந்துவிடாதீர்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c சகோதர சகோதரிகள் அகதிகளாக வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனே, யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், அதிகாரம் 8, பக்கம் 87, பாரா 2-ல் இருக்கிற வழிநடத்துதலின்படி மூப்பர்கள் செய்ய வேண்டும். அகதிகளுடைய சொந்த நாட்டில் இருக்கிற சபையைத் தொடர்புகொள்ள jw.org மூலமாக தங்கள் கிளை அலுவலகத்துக்கு எழுத வேண்டும். அதே சமயத்தில், அகதியாக வந்திருப்பவர் ஆன்மீக ரீதியில் எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, அவருடைய சபையைப் பற்றியும், ஊழியம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் மூப்பர்கள் அகதியிடம் விவேகமாக கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
d ஏப்ரல் 15, 2014 காவற்கோபுரத்தில் பக். 17-26-ல் இருக்கிற “ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முடியாது” மற்றும் “தைரியமாயிருங்கள் யெகோவா உங்கள் துணை!” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.