அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு தைரியமான தீர்மானம் எடுக்கிறார்
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, ரோம ஆளுநரைச் சந்தித்துப் பேசும் அளவுக்குத் தனக்கு தைரியம் இல்லையென்று நினைத்தார். ஏனென்றால், அந்த ஆளுநரான பொந்தியு பிலாத்து பயங்கரப் பிடிவாதக்காரராக இருந்த விஷயம் எல்லாருக்குமே தெரிந்திருந்தது. ஆனாலும், இயேசுவின் உடலைக் கண்ணியமான விதத்தில் அடக்கம் செய்வதற்கு யாராவது பிலாத்துவிடம் பேச வேண்டியிருந்தது; இயேசுவின் உடலைத் தரும்படி அவரிடம் கேட்க வேண்டியிருந்தது. அப்படிக் கேட்டால், பெரிய பிரச்சினை வருமென்று யோசேப்பு நினைத்திருக்கலாம். ஆனால், அவர் பிலாத்துவை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியபோது, அப்படி எந்தப் பிரச்சினையும் வரவில்லை. இயேசு உண்மையிலேயே இறந்துவிட்டாரா என்பதை ஒரு அதிகாரியிடம் கேட்டு உறுதிசெய்துகொண்ட பிறகு, பிலாத்து யோசேப்புக்கு அனுமதி தந்தார். சோகத்தை நெஞ்சில் சுமந்துகொண்டிருந்தபோதிலும், இயேசு கொல்லப்பட்ட இடத்துக்கு யோசேப்பு அவசர அவசரமாகப் போனார்.—மாற். 15:42-45.
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு யார்?
அவருக்கும் இயேசுவுக்கும் என்ன சம்பந்தம்?
அவரைப் பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
நியாயசங்க உறுப்பினர்
யோசேப்பு ‘நியாயசங்கத்தின் மதிப்புக்குரிய உறுப்பினராக’ இருந்தார் என்று மாற்கு சுவிசேஷப் புத்தகம் சொல்கிறது. நியாயசங்கம் என்பது யூதர்களின் உயர் நீதிமன்றமாகவும், உயர் நிர்வாகக் குழுவாகவும் இருந்தது. (மாற். 15:1, 43) அப்படியென்றால், யோசேப்பு தன்னுடைய மக்களின் தலைவர்களில் ஒருவராக இருந்தார்; அதனால்தான், ரோம ஆளுநரையே சந்தித்துப் பேச அவரால் முடிந்தது. யோசேப்பு பணக்காரராக இருந்ததிலும் ஆச்சரியமே இல்லை.—மத். 27:57.
இயேசுவை உங்கள் ராஜாவாக வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?
நியாயசங்கம் இயேசுவை வெறுத்தது. அதன் உறுப்பினர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள். ஆனால், யோசேப்பு ‘நல்லவராகவும், நீதிமானாகவும்’ இருந்தார். (லூக். 23:50) பெரும்பாலான மற்ற நியாயசங்க உறுப்பினர்களைப் போல அவர் இருக்கவில்லை. அவர் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்தார்; கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடிந்தளவு முயற்சி செய்தார். அதோடு, அவர் ‘கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தார்.’ அவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவராக ஆனதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம். (மாற். 15:43; மத். 27:57) உண்மையையும் நீதியையும் அவர் மனமார நேசித்ததால், இயேசு சொன்ன செய்தியிடம் கவரப்பட்டிருக்கலாம்.
ரகசிய சீஷர்
யோசேப்பு, “இயேசுவின் சீஷர்களில் ஒருவர். ஆனால், யூதர்களுக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்தவர்” என்று யோவான் 19:38 சொல்கிறது. யோசேப்பு ஏன் பயப்பட்டார்? யூதர்கள் இயேசுவை வெறுத்தார்கள் என்பதும், அவர்மேல் விசுவாசம் வைத்திருப்பதாகச் சொல்கிறவர்களை ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிடத் தீர்மானமாக இருந்தார்கள் என்பதும் யோசேப்புக்குத் தெரிந்திருந்தது. (யோவா. 7:45-49; 9:22) ஜெபக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டால், மற்ற யூதர்கள் தன்னைக் கேலி செய்வார்கள், வெறுத்து ஒதுக்குவார்கள், தள்ளி வைத்துவிடுவார்கள் என்றெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், இயேசுமேல் விசுவாசம் இருந்ததை வெளியில் சொல்ல அவர் தயங்கினார். அப்படி வெளியில் சொன்னால், அவருடைய பதவியும் கௌரவமும் பறிபோய்விடும் ஆபத்து இருந்தது.
யோசேப்பு மட்டுமே இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இல்லை. “யூதத் தலைவர்களில்கூட நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள். ஆனால், தங்களைப் பரிசேயர்கள் ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிடக் கூடாது என்பதற்காக அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை” என்று யோவான் 12:42 சொல்கிறது. அதே நிலையிலிருந்த இன்னொருவர்தான் நிக்கொதேமு. அவரும் நியாயசங்க உறுப்பினராக இருந்தார்.—யோவா. 3:1-10; 7:50-52.
யோசேப்பு ஒரு சீஷராக இருந்தது உண்மை என்றாலும், அதை வெளியில் சொல்ல அவருக்குத் தைரியம் வரவில்லை. இது அவர் செய்த பெரிய தவறாக இருந்தது; ஏனென்றால், இயேசு இப்படிச் சொல்லியிருந்தார்: “மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஒதுக்கித்தள்ளுவேன்.” (மத். 10:32, 33) யோசேப்பு இயேசுவை ஒதுக்கித்தள்ளினார் என்று சொல்ல முடியாது, அதேசமயத்தில் மற்றவர்களுக்கு முன்னால் அவரை ஏற்றுக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை. உங்களுக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா?
இயேசுவைத் தீர்த்துக்கட்ட நியாயசங்கம் போட்ட திட்டத்தை யோசேப்பு ஆதரிக்கவில்லை என்று பைபிள் சொல்கிறது; இந்த விஷயத்தில் அவரைப் பாராட்ட வேண்டும். (லூக். 23:51) ஒருவேளை, இயேசு விசாரணை செய்யப்பட்டபோது யோசேப்பு அங்கே இருந்திருக்க மாட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். எப்படியிருந்தாலும் சரி, நீதிநியாயம் அடியோடு புரட்டப்பட்டதைப் பார்த்து அவர் மிகவும் வேதனைப்பட்டிருப்பார்! அதைத் தடுக்க தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று நினைத்தும் நொறுங்கிப்போயிருப்பார்!
தயக்கத்தை விட்டொழிக்கிறார்
இயேசு இறந்த சமயத்தில், யோசேப்பு தன்னுடைய பயத்தையெல்லாம் விட்டொழித்து, இயேசுவின் சீஷர்களுக்குத் தோள்கொடுக்க தீர்மானம் எடுத்ததாகத் தெரிகிறது. இதை எப்படிச் சொல்கிறோம்? “யோசேப்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்” என்று மாற்கு 15:43 சொல்கிறது.
இயேசு இறந்தபோது யோசேப்பு அங்கே இருந்ததாகத் தெரிகிறது. ஏனென்றால், அவர் இறந்த விஷயம் பிலாத்துவின் காதுக்கு வருவதற்கு முன்பே யோசேப்புக்குத் தெரிந்திருந்தது. இயேசுவின் உடலை யோசேப்பு கேட்டபோது, ‘இயேசு அதற்குள் இறந்துவிட்டதைக் குறித்து பிலாத்து ஆச்சரியப்பட்டார்.’ (மாற். 15:44) இயேசு மரக் கம்பத்தில் வேதனைப்பட்ட அந்தப் பயங்கரமான காட்சியை யோசேப்பு ஒருவேளை பார்த்திருந்தால், அவருடைய மனசாட்சியைச் சோதித்துப் பார்க்கவும் சத்தியத்தின் சார்பாக உறுதியான தீர்மானம் எடுக்கவும் அது அவரைத் தூண்டியிருக்குமா? இருக்கலாம். எப்படியோ, யோசேப்பு செயலில் இறங்கினார். அதன் பிறகும் அவர் ரகசிய சீஷராக இருக்கவில்லை.
யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்கிறார்
மரண தண்டனை பெற்றவர்களைச் சூரியன் மறைவதற்கு முன்பே அடக்கம் செய்ய வேண்டுமென்று யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் சொன்னது. (உபா. 21:22, 23) ஆனால் ரோமர்கள், குற்றவாளிகளின் உடல் அழுகிப்போகும்படி மரக் கம்பத்திலேயே விட்டுவிட்டார்கள் அல்லது பொதுவான கல்லறையில் வீசியெறிந்தார்கள். இயேசுவுக்கு அப்படி நடந்துவிடக் கூடாதென்று யோசேப்பு நினைத்தார். இயேசு கொல்லப்பட்ட இடத்துக்குப் பக்கத்தில், புதிதாக வெட்டப்பட்ட ஒரு கல்லறை யோசேப்புக்கு இருந்தது. அதுவரை யாரும் அதில் அடக்கம் செய்யப்படாததால், யோசேப்பு அரிமத்தியாவிலிருந்துa (அடிக்குறிப்பைப் பாருங்கள்) எருசலேமுக்குக் குடிமாறிவந்து கொஞ்சக் காலம்தான் ஆகியிருக்கும் என்று தெரிகிறது. தன்னுடைய குடும்பத்துக்காக அந்தக் கல்லறையைப் பயன்படுத்த அவர் நினைத்திருக்கலாம். (லூக். 23:53; யோவா. 19:41) தனக்காக வெட்டிய கல்லறையில் இயேசுவின் உடலை அடக்கம் செய்தது, யோசேப்பின் தாராள மனதைக் காட்டியது; அதோடு, மேசியா ‘இறந்தபோது பணக்காரரோடு இருந்தார்’ என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது.—ஏசா. 53:5, 8, 9.
யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தைவிட வேறெந்த விஷயத்துக்காவது நீங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறீர்களா?
இயேசுவின் உடலை மரக் கம்பத்திலிருந்து இறக்கிய பிறகு, யோசேப்பு அதை உயர்தரமான நாரிழைத் துணியில் சுற்றி தன்னுடைய கல்லறையில் அடக்கம் செய்தார் என்று நான்கு சுவிசேஷப் பதிவுகளுமே சொல்கின்றன. (மத். 27:59-61; மாற். 15:46, 47; லூக். 23:53, 55; யோவா. 19:38-40) யோசேப்புக்கு உதவியதாகச் சொல்லப்படுகிற ஒரே நபர் நிக்கொதேமு. அடக்கம் செய்வதற்கான நறுமணப் பொருள்களை அவர் எடுத்துக்கொண்டு வந்தார். இந்த இரண்டு பேருடைய அந்தஸ்தைப் பார்க்கும்போது, அவர்களாகவே இயேசுவின் உடலைத் தூக்கிக்கொண்டு வந்து அடக்கம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. தங்களுடைய வேலைக்காரர்களை வைத்துத்தான் அதைச் செய்திருப்பார்கள். இருந்தாலும், அந்த இரண்டு பேரும் செய்தது சின்ன விஷயம் அல்ல. ஏனென்றால், பிணத்தைத் தொட்டவர்கள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவர்களாக இருந்தார்கள்; அவர்கள் தொட்ட எல்லாமே தீட்டுப்பட்டதாக இருந்தது. (எண். 19:11; ஆகா. 2:13) அதனால், பஸ்கா பண்டிகையோடு சம்பந்தப்பட்ட எதிலும் கலந்துகொள்ளாமல் அந்த வாரம் முழுவதும் அவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டியிருந்தது. (எண். 9:6) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததால், தன்னோடு பொறுப்பு வகித்த மற்றவர்களுடைய கேலி கிண்டலுக்கு யோசேப்பு ஆளாக வேண்டியிருந்தது. ஆனாலும், இயேசுவின் உடலைக் கண்ணியமான விதத்தில் அடக்கம் செய்வதாலும், தன்னை கிறிஸ்துவின் சீஷராக வெளிப்படையாகக் காட்டுவதாலும் வரும் பின்விளைவுகளைச் சந்திக்க அவர் தயாராக இருந்தார்.
யோசேப்பைப் பற்றிய பதிவு முடிவடைகிறது
இயேசு அடக்கம் செய்யப்பட்டதைப் பற்றிய சுவிசேஷப் பதிவுகளில் மட்டும்தான் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அவரைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. அப்படியென்றால், அவருக்கு என்ன ஆனது? நமக்குத் தெரியாது. இருந்தாலும், நாம் சிந்தித்த விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, தான் ஒரு கிறிஸ்தவரென அவர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருப்பார் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால், சோதனையான காலத்திலும் நெருக்கடியான நேரத்திலும், அவருடைய விசுவாசமும் தைரியமும் குறைவதற்குப் பதிலாக அதிகமாகத்தான் ஆனது! அது நிச்சயமாகவே ஒரு நல்ல அறிகுறி!
யோசேப்பைப் பற்றிய பதிவு இந்தக் கேள்வியை எழுப்புகிறது: நம்முடைய அந்தஸ்து, வேலை, உடைமை, பந்தபாசம், சுதந்திரம் போன்ற ஏதோவொரு விஷயத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் தருகிறோமா அல்லது யெகோவாவுடன் நமக்கு இருக்கும் பந்தத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோமா? இதை நாம் எல்லாருமே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
a அரிமத்தியா என்பது ராமா ஊராக, அதாவது இன்றைய ரென்டிஸ் (ரான்டிஸ்) ஊராக, இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுதான் சாமுவேல் தீர்க்கதரிசியின் சொந்த ஊராக இருந்தது. எருசலேமுக்கு வடமேற்கே கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் (22 மைல்) தூரத்தில் அது இருந்தது.—1 சா. 1:19, 20.