புதிய சபை மாற்றத்தைச் சமாளிப்பது எப்படி?
“இங்க வரப்போறத நினைச்சு நான் ரொம்ப பயந்தேன்” என்று ஆலன் சொல்கிறார்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “எனக்கு நண்பர்கள் கிடைப்பாங்களா... இங்க இருக்கிறவங்களுக்கு என்னை பிடிக்குமா... இதப் பத்தியெல்லாம் நான் யோசிச்சேன்” என்கிறார் அவர். தன்னுடைய வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 1,400 கி.மீ. (900 மைல்) தூரத்திலிருக்கும் ஒரு சபைக்கு ஆலன் மாறி வந்திருக்கிறார்.
நீங்கள் ஒரு புது சபைக்கு மாறி வந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் மனதில் ஒருவித பயம் இருக்கலாம். புது இடத்துக்குத் தகுந்தபடி உங்களை மாற்றிக்கொள்ள எது உங்களுக்கு உதவும்? அப்படிச் செய்வது நீங்கள் எதிர்பார்த்ததைவிட கஷ்டமாக இருந்தால் என்ன செய்யலாம்? நீங்கள் எங்கேயும் மாறிப்போகவில்லை என்றாலும், உங்கள் சபைக்கு வந்திருக்கும் புதியவர்கள் சகஜமாக உணருவதற்கு நீங்கள் எப்படி உதவலாம்?
புது சூழ்நிலை—எப்படி சமாளிக்கலாம்?
ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு மரத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தில் நடும்போது, அந்த மாற்றத்தைச் சமாளிப்பது அந்த மரத்துக்குச் சிரமமாக இருக்கும். அந்த மரத்தை சுலபமாகக் கொண்டுபோவதற்காக, அதனுடைய பெரும்பாலான வேர்களைப் பொதுவாக வெட்டிவிடுவார்கள். வேறு இடத்தில் நடப்பட்ட உடனே, அந்த மரம் புதிய வேர்களை விட ஆரம்பிக்க வேண்டும். அதே போல, இன்னொரு சபைக்கு மாறி வந்திருப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். நீங்கள் முன்பு இருந்த சபையில் நன்றாக “வேர்” விட்டு பலமாக இருந்திருப்பீர்கள். அதாவது, உங்களுக்கு அருமையான நண்பர்கள் இருந்திருப்பார்கள்; அதோடு, நல்ல ஆன்மீக பழக்கவழக்கங்களும் உங்களுக்கு இருந்திருக்கும். இப்போது, ஒரு புது சூழ்நிலையில் மறுபடியும் நீங்கள் “வேர்” விட வேண்டியிருக்கிறது. இதைச் செய்ய பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும். அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
தவறாமல் பைபிள் படிப்பவர்கள், ‘வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும், அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான மரம் போலவும் இருப்பார்கள். அவர்கள் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.’—சங். 1:1-3.
ஒரு மரம் செழிப்பாக இருப்பதற்கு, அதன் வேர்கள் தவறாமல் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ள வேண்டும். அதே போல, ஒரு கிறிஸ்தவர் ஆன்மீக ரீதியில் செழிப்பாக இருப்பதற்கு, அவர் தவறாமல் கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரை உறிஞ்சிக்கொள்ள வேண்டும். அதனால், தினமும் பைபிளைப் படியுங்கள், தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்துகொண்டிருந்த குடும்ப வழிபாடு மற்றும் தனிப்பட்ட படிப்பு போன்ற நல்ல பழக்கங்களை விட்டுவிடாதீர்கள். உங்களை ஆன்மீக ரீதியில் பலமாக வைத்துக்கொள்ள முன்பு இருந்த சபையில் எதையெல்லாம் செய்தீர்களோ, அதையெல்லாம் இப்போதும் செய்ய வேண்டும்.
“மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்.”—நீதி. 11:25.
புது சபையில் இருக்கிறவர்களிடம் சீக்கிரமாகப் பழகுவதற்கு, ஊழியம் ரொம்பவே உதவும். “புது சபைக்கு போன உடனே நானும் என் மனைவியும் துணைப் பயனியர் செய்ய ஆரம்பிச்சோம்; அது எங்களுக்கு ரொம்ப உதவுச்சு” என்று கெவின் என்ற மூப்பர் சொல்கிறார். “சகோதரர்கள்கிட்டயும் பயனியர்கள்கிட்டயும் நாங்க சீக்கிரமாவே பழக ஆரம்பிச்சிட்டோம். பிராந்தியத்த பத்தியும் தெரிஞ்சுக்கிட்டோம்” என்று அவர் சொல்கிறார். 1,600 கிலோமீட்டருக்கும் (1,000 மைலுக்கும்) அதிகமான தூரத்திலிருந்த ஒரு சபைக்கு மாறிப்போன ரோஜெர் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “புது சபையில இருக்கிறவங்ககிட்ட பழகுறதுக்கு ஒரு நல்ல வழி, அடிக்கடி ஊழியத்துக்கு போறதுதான். அதோட, எந்த வேலையையும் செய்ய நீங்க தயாரா இருக்கீங்கனு மூப்பர்கள்கிட்ட சொல்லுங்க. ஒருவேளை ராஜ்ய மன்றத்த சுத்தம் செய்றது... நியமிப்பு இருக்குறவங்க கூட்டத்துக்கு வரலனா, அந்த நியமிப்பை செய்றது... கூட்டங்களுக்கு சகோதர சகோதரிகள் யாரையாவது வண்டியில கூட்டிக்கிட்டு வர்றது... இந்த மாதிரி வேலைகளை செய்றதுக்கு நீங்க தயாரா இருக்கறத பத்தி மூப்பர்கள்கிட்ட சொல்லுங்க. சபைக்கு புதுசா வந்த ஒருத்தர் இந்தளவு தியாகங்கள் செய்றத சகோதர சகோதரிகள் பார்க்குறப்போ, அவங்க உங்ககிட்ட சுலபமா பழக ஆரம்பிப்பாங்க.”
“உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்.”—2 கொ. 6:13.
சகோதர அன்பை எல்லாரிடமும் காட்டுங்கள். மெலிஸாவும் அவருடைய குடும்பத்தாரும் புதிய சபைக்கு மாறிப்போனபோது, புது நண்பர்களைத் தேடுவதில் மும்முரமாக இறங்கினார்கள். “கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும், முடிஞ்சதுக்கு அப்புறமும் எல்லார்கிட்டயும் பழகுவோம்” என்று மெலிஸா சொல்கிறார். “அதனால, வெறுமனே ‘குட்மார்னிங், குட் ஈவ்னிங்’ சொல்றது மட்டும் இல்லாம, அவங்ககிட்ட நேரம் எடுத்து நிறைய பேச முடிஞ்சுது” என்று அவர் சொல்கிறார். அவர்கள் இப்படிச் செய்ததால், எல்லாருடைய பெயரையும் சீக்கிரத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது. அதோடு, சகோதர சகோதரிகளை உபசரிப்பதன் மூலம் அவர்களுடைய இதயக் கதவை அகலமாகத் திறந்தார்கள். புதிதாக மலர்ந்த நட்பு பலமாவதற்கு அது உதவியது. “எங்க ஃபோன் நம்பரை அவங்களுக்கு கொடுத்தோம், அவங்க நம்பரை நாங்க வாங்கிக்கிட்டோம்” என்று மெலிஸா சொல்கிறார். “அதனால, அடிக்கடி பேசிக்கவும் ஒண்ணா சேர்ந்து ஆன்மீக காரியங்கள்லயும் மத்த காரியங்கள்லயும் ஈடுபட முடிஞ்சுது” என்றும் சொல்கிறார்.
புதிய ஆட்களிடம் பேசுவதை நினைத்தால் பயமாக இருக்கிறதா? அப்படியென்றால், சில எளிமையான விஷயங்களைச் செய்ய ஆரம்பியுங்கள். உதாரணத்துக்கு, உங்களுக்குக் கஷ்டமாக இருந்தாலும், புதியவர்களைப் பார்த்த உடனே புன்னகை செய்யுங்கள். அப்போது அவர்கள் உங்களிடம் நட்பாகப் பழக விரும்பலாம். “ஒருவரின் சந்தோஷப் பார்வை இதயத்தைப் பூரிப்பாக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 15:30, அடிக்குறிப்பு) தான் வளர்ந்த இடத்திலிருந்து ரொம்பத் தூரத்தில் இருந்த ஒரு சபைக்கு மாறி வந்திருக்கும் ரேச்சல், “பொதுவா நான் யார்கிட்டயும் அவ்வளவா பேச மாட்டேன்” என்று சொல்கிறார். “புது சபையில இருக்குற சகோதர சகோதரிகள்கிட்ட பேசுறதுக்கு, சில சமயம் என்னை நானே கட்டாயப்படுத்த வேண்டியிருக்கும். ராஜ்ய மன்றத்துல யாராவது தனியா, யார்கிட்டயும் பேசாம உட்கார்ந்துட்டு இருக்காங்களானு பார்ப்பேன். ஒருவேளை அவங்களுக்கும் என்ன மாதிரியே கூச்ச சுபாவம் இருக்கலாம்” என்று அவர் சொல்கிறார். கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பும், முடிந்த பிறகும் புதிதாக யாராவது ஒருவரிடம் பேசுவதை நீங்கள் ஏன் ஒரு குறிக்கோளாக வைக்கக் கூடாது?
புதுப்புது சகோதர சகோதரிகளைப் பார்ப்பது சில வாரங்களுக்கு உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால், நாட்கள் போகப்போக சுவாரஸ்யம் குறைந்துவிடலாம். அதனால், புது நட்பு மலர்வதற்கு நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம்.
காலத்தை அனுமதியுங்கள்
புது இடத்தில் ஆழமாக வேர்விட, சில மரங்களுக்கு மற்ற மரங்களைவிட அதிக நாட்கள் ஆகலாம். அதேபோல், புது சபையில் நன்றாகப் பழக, சிலருக்கு மற்றவர்களைவிட அதிக நாட்கள் ஆகலாம். ஒருவேளை வேறு சபைக்கு மாறிவந்து ரொம்ப நாட்களாகியும் அந்த மாற்றத்தைச் சமாளிக்க நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்:
“நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும். நாம் சோர்ந்துபோகாமல் இருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.”—கலா. 6:9.
புது இடத்துக்குத் தகுந்தபடி உங்களை மாற்றிக்கொள்ள, நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக நாட்கள் ஆகலாம். கிலியட் பள்ளியில் பயிற்சி பெற்ற மிஷனரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தாங்கள் நியமிக்கப்பட்ட நாட்டுக்கு அவர்கள் வந்த பிறகு, ரொம்ப வருஷங்கள் கழித்துதான் தங்களுடைய சொந்த நாட்டில் இருக்கிறவர்களைப் பார்க்கப் போகிறார்கள். இப்படிச் செய்வதால், தாங்கள் நியமிக்கப்பட்ட நாட்டில் இருக்கிற சகோதர சகோதரிகளிடம் அவர்களால் பலமான பந்தத்தை ஏற்படுத்த முடிகிறது. உள்ளூர் கலாச்சாரத்துக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்ளவும் முடிகிறது.
நிறைய தடவை புது இடங்களுக்கு மாறிப் போயிருக்கிற ஆலஹாண்ட்ரோ என்ற சகோதரரின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அந்த மாற்றத்தைச் சமாளிப்பது அவ்வளவு சீக்கிரம் நடக்கிற ஒரு விஷயமல்ல என்பதை அவர் அனுபவத்தில் பார்த்திருக்கிறார். “நாங்க ஒரு புது சபைக்கு வந்தப்போ, என் மனைவி என்கிட்ட, ‘நம்மளோட பழைய சபையிலதான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்கனு’ சொன்னா” என்று அவர் சொல்கிறார். இரண்டு வருஷங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு சபைக்கு மாறியபோதும் அவருடைய மனைவி இதையேதான் சொல்லியிருந்தார்! அவர் சொன்னதை மறுபடியும் ஆலஹாண்ட்ரோ அவருக்கு ஞாபகப்படுத்தினார். அப்படியென்றால், அந்த இரண்டு வருஷங்களில், அவருடைய மனைவி புது சகோதர சகோதரிகளிடம் நன்றாகப் பழகியிருக்கிறார், நெருங்கிய நண்பர்களையும் சம்பாதித்திருக்கிறார்!
“இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று சொல்லாதே. அப்படிச் சொல்வது ஞானம் அல்ல.”—பிர. 7:10.
முன்பு இருந்த சபையோடு உங்கள் புது சபையை ஒப்பிடாதீர்கள். ஒருவேளை, புது சபையில் இருக்கும் சகோதரர்களுக்கு உங்கள் பழைய சபையில் இருந்த சகோதரர்களைப் போல் சகஜமாகப் பழகும் இயல்பு இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்களைவிட ரொம்ப சகஜமாகப் பழகலாம். எப்படியிருந்தாலும் சரி, அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஏனென்றால், மற்றவர்களும் உங்களிடம் இருக்கும் நல்லதைப் பார்க்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பீர்கள்! புது சபைக்கு மாறிவந்திருக்கும் சிலருக்கு, ‘“சகோதரர்கள் எல்லாரிடமும்” நான் அன்பு காட்டுகிறேனா?’ என்று யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.—1 பே. 2:17.
“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்”—லூக். 11:9.
உதவிக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். “நீங்களே சமாளிச்சிடலாம்னு நினைக்காதீங்க,” என்கிறார் டேவிட் என்ற மூப்பர். முன்பு குறிப்பிடப்பட்ட ரேச்சல், “நிறைய விஷயங்கள யெகோவாவோட உதவியாலதான் செய்ய முடியும். அதனால அத பத்தி ஜெபம் செய்யுங்க” என்று சொல்கிறார். “சபையில இருக்குறவங்க கிட்ட அவ்வளவா ஒட்டாத மாதிரி நானும் என் கணவரும் உணர்ந்தா . . . யெகோவா கிட்ட அத பத்தி நாங்க குறிப்பா ஜெபம் செய்வோம். ‘மத்தவங்க எங்ககூட நல்லா பழகுறதுக்கு எங்ககிட்ட ஏதாவது தடையிருந்தா அத எங்களுக்கு தெரியப்படுத்துங்கனு ஜெபத்துல சொல்வோம்.’ அப்புறம் சகோதர சகோதரிகளோட ரொம்ப நேரம் செலவு செய்யறதுக்கு முயற்சி செய்வோம்” என்று ரேச்சல் சொல்கிறார்.
பெற்றோர்களே, மாற்றத்தைச் சமாளிக்க உங்கள் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்களா? அப்படியென்றால், அவர்களோடு சேர்ந்து இதைப் பற்றி ஜெபம் செய்ய நேரம் ஒதுக்குங்கள். பலப்படுத்துகிற தோழமையை அனுபவிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அப்போது, உங்கள் பிள்ளைகளுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
புதியவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்
உங்கள் சபைக்கு வந்திருக்கும் புதியவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம்? ஆரம்பத்திலிருந்தே உண்மையான நண்பராக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரு புது சபைக்கு நீங்கள் போயிருந்தால் மற்றவர்களிடம் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள், பின்பு உங்கள் சபைக்குப் புதிதாக வந்திருப்பவர்களுக்கு அதையே செய்யுங்கள். (மத். 7:12) குடும்ப வழிபாட்டுக்காகவோ மாதாந்திர JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகவோ புதியவர்களை உங்கள் வீட்டுக்குக் கூப்பிட முடியுமா? அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய முடியுமா? நீங்கள் ஒரு எளிய உணவை கொடுத்தால்கூட அதை அவர்கள் ரொம்ப நாட்களுக்கு மறக்க மாட்டார்கள். நடைமுறையான வேறு என்ன உதவிகளை நீங்கள் செய்யலாம்?
“நாங்க புது சபைக்கு வந்தப்போ . . . நியாயமான விலையில பொருள்கள விக்கிற கடைகளோட லிஸ்ட்ட ஒரு சகோதரி கொடுத்தாங்க. அது ரொம்ப உதவியா இருந்துச்சு” என்று கார்லோஸ் சொல்கிறார். சிலர், வேறு விதமான சீதோஷ்ண நிலை இருக்கும் இடத்திலிருந்து வந்திருக்கலாம். சூடான சீதோஷ்ணத்திலும், குளிர் அல்லது மழைக் காலங்களிலும் எப்படி உடுத்துவது என்று கற்றுக்கொடுக்கும்போது அவர்கள் ரொம்பவே நன்றியோடு இருப்பார்கள். அதோடு, உள்ளூர் சமுதாயத்தைப் பற்றிய சரித்திரத்தையோ மத நம்பிக்கைகளைப் பற்றியோ நீங்கள் சொல்லலாம். நன்றாக ஊழியம் செய்ய அது அவர்களுக்கு உதவலாம்.
உங்கள் முயற்சி வீண்போகாது
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஆலன் புது சபைக்கு வந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. “சகோதர சகோதரிகள பத்தி தெரிஞ்சிக்குறதுக்கு ஆரம்பத்துல நான் நிறைய முயற்சி எடுக்க வேண்டியிருந்துச்சு. ஆனா இப்போ, அவங்கெல்லாம் என் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி ஆயிட்டாங்க. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று ஆலன் சொல்கிறார். புது சபைக்குப் போனதால் நண்பர்களை இழக்கவில்லை என்பதை ஆலன் உணருகிறார். அதற்குப் பதிலாக, இணைபிரியாத புதிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள்!
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.