வாழ்த்துக்கு இருக்கிற வலிமை!
“வணக்கம்! எப்படி இருக்கீங்க?”
இதுபோன்ற வார்த்தைகளால் நீங்கள் பலரை நலம் விசாரித்திருப்பீர்கள். அதோடு, அவர்களைக் கைகுலுக்கி வரவேற்றிருப்பீர்கள் அல்லது பாசமாகக் கட்டித் தழுவியிருப்பீர்கள். வாழ்த்துச் சொல்வதற்கான வார்த்தைகளும், சம்பிரதாயங்களும் இடத்துக்கு இடம் வேறுபடலாம். ஆனால், வாழ்த்துவதற்கான காரணம் ஒன்றுதான்! மற்றவர்களை நாம் நலம் விசாரிக்காமல் இருப்பதும், மற்றவர்கள் நம்மை நலம் விசாரிக்கும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அன்பற்ற செயலாகவும் முறையற்ற செயலாகவும் கருதப்படுகிறது.
ஆனால், வாழ்த்துச் சொல்வது எல்லாருக்கும் சுலபமாக இருப்பதில்லை. சிலர், கூச்ச சுபாவத்தால் அல்லது தாழ்வு மனப்பான்மையால் மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லத் தயங்குகிறார்கள். வேறுசிலருக்கு, மற்ற இனத்தையோ கலாச்சாரத்தையோ பின்னணியையோ சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது கஷ்டமாக இருக்கிறது. ஆனால், ஒரு சின்ன வாழ்த்துகூட, பெரியளவில் பலன்களைத் தரலாம்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மத்தவங்களுக்கு வாழ்த்து சொல்றப்போ என்ன பலன் கிடைக்கும்? வாழ்த்து சொல்றத பத்தி பைபிள் என்ன சொல்லுது?’
“எல்லா விதமான ஆட்களுக்கும்” வாழ்த்துச் சொல்லுங்கள்
மற்ற தேசத்தைச் சேர்ந்த நபர்களிலேயே முதல்முதலில் கிறிஸ்தவராக ஆன கொர்நேலியுவை கிறிஸ்தவ சபைக்குள் வரவேற்றபோது, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப். 10:34) பிற்பாடு, ‘எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்’ என்றும் எழுதினார். (2 பே. 3:9) இந்த இரண்டு வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி, புதிதாக சத்தியத்தைக் கற்றுக்கொள்பவர்களிடம் நாம் பாரபட்சம் காட்ட மாட்டோம் என்பது உண்மைதான். ஆனால், கிறிஸ்தவர்களுக்கு பேதுரு கொடுத்த ஆலோசனையைக் கவனியுங்கள். “எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்” என்று அவர் சொன்னார். (1 பே. 2:17) அப்படியிருக்கும்போது, இனம், கலாச்சாரம், பின்னணி என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்வதுதானே சரியாக இருக்கும்? அப்படிச் செய்யும்போது, நாம் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோம், அன்பு காட்டுகிறோம் என்று அர்த்தம்!
“கிறிஸ்து நம்மை வரவேற்றதுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் சபையாரிடம் சொன்னார். (ரோ. 15:7) தனக்கு ‘பக்கபலமாக’ இருந்த சகோதரர்களைப் பற்றித் தன்னுடைய கடிதங்களில் குறிப்பிட அவர் மறக்கவில்லை. கடவுளுடைய மக்களுக்கு எதிரான சாத்தானுடைய தாக்குதல்கள் தீவிரமாகியிருக்கிற இந்த நாட்களில், நம்முடைய சகோதரர்களுக்கு நாம் இன்னும் எந்தளவுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்!—கொலோ. 4:11, அடிக்குறிப்பு; வெளி. 12:12, 17.
நாம் மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும்போது, அவர்களுடைய மனதுக்கு அது இதமாக இருக்கிறது. ஆனால் அதுமட்டுமல்ல, வாழ்த்துவதால் வேறுசில பலன்களும் இருப்பதாக பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன.
நம்பிக்கை, உற்சாகம், அன்பு
தன்னுடைய மகனின் உயிரை மரியாளின் கருப்பைக்கு மாற்ற வேண்டிய சமயம் வந்தபோது, அவளிடம் பேச யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பினார். அந்தத் தேவதூதர், “கடவுளுக்கு மிகவும் பிரியமானவளே, வாழ்க! யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்று வாழ்த்துச் சொல்லி மரியாளிடம் பேச ஆரம்பித்தார். திடீரென்று ஒரு தேவதூதர் தன்னிடம் பேசியதைப் பார்த்து, மரியாள் ‘மிகவும் கலக்கமடைந்தாள்.’ இதைப் புரிந்துகொண்ட அந்தத் தூதர், “மரியாளே, பயப்படாதே; நீ கடவுளுக்குப் பிரியமானவள்” என்று சொன்னார். அதோடு, மரியாள்தான் மேசியாவைப் பெற்றெடுப்பார் என்றும், அதுதான் கடவுளுடைய விருப்பம் என்றும் விளக்கினார். பயந்து நடுங்கிக்கொண்டே இருக்காமல், “இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்! நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்று கீழ்ப்படிதலோடு மரியாள் சொன்னாள்.—லூக். 1:26-38.
யெகோவாவின் தூதராகச் செயல்படுவது அந்தத் தேவதூதருக்குக் கிடைத்த ஒரு பாக்கியம்! ஆனால், ‘பாவ இயல்புள்ள ஒரு பெண்ணிடம் பேச வேண்டியிருக்கிறதே’ என்று அவர் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, முதலில் வாழ்த்துச் சொல்லிவிட்டு பிறகு பேச ஆரம்பித்தார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? வாழ்த்துச் சொல்லவும் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் சொல்லும் ஒருசில வார்த்தைகள், மற்றவர்களைத் தூக்கிநிறுத்தும்! தாங்களும் யெகோவாவின் மக்களில் ஒரு அங்கம்தான் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறக்கும்!
ஆசியா மைனர் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சபைகளில் இருந்த நிறைய பேரை பவுல் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அவருடைய கடிதங்களில், சில விஷயங்களைக் குறிப்பாகச் சொல்லி அவர்களை வாழ்த்தினார். அந்த விவரங்கள், ரோமர் 16-ம் அதிகாரத்தில் இருக்கின்றன. அதில், நிறைய பேருக்கு பவுல் வாழ்த்துச் சொன்னார். பெபேயாளை, “நம் சகோதரி” என்று குறிப்பிட்டார்; பின்பு, “நீங்கள் பரிசுத்தவான்களை வரவேற்பதுபோல் நம் எஜமானைப் பின்பற்றுகிற அவளையும் வரவேற்று அவளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யுங்கள்” என்று சகோதரர்களிடம் சொன்னார். பிரிஸ்கில்லாளுக்கும் ஆக்கில்லாவுக்கும் வாழ்த்துச் சொல்லும்படி குறிப்பிட்டுவிட்டு, “அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், மற்ற தேசத்தாரின் எல்லா சபைகளும்கூட நன்றி சொல்கின்றன” என்று சொன்னார். இன்று அவ்வளவாக அறியப்படாதவர்களுக்கும் அவர் வாழ்த்துச் சொன்னார். அதாவது, ‘அன்புக்குரிய எப்பனெத்துவுக்கும்,’ “எஜமானுக்காகக் கடினமாய் உழைத்து வருகிற பெண்களான திரிபேனாளுக்கும் திரிபோசாளுக்கும்” வாழ்த்துச் சொன்னார். சகோதர சகோதரிகளை பவுல் மனதார வாழ்த்தினார் என்பதில் சந்தேகமே இல்லை.—ரோ. 16:1-16.
தங்கள்மேல் பவுல் அன்பு வைத்திருப்பதையும், தங்களை ஞாபகம் வைத்திருப்பதையும் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! பவுல்மீது இருந்த அன்பும், அவர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த அன்பும் இன்னும் ஆழமாகியிருக்கும், இல்லையா? அந்த அன்பான வாழ்த்துதல்களைக் கேட்ட மற்ற கிறிஸ்தவர்களுக்கும் உற்சாகமாக இருந்திருக்கும், விசுவாசத்தில் உறுதியாயிருக்க உதவியாக இருந்திருக்கும்! மற்றவர்கள்மீது இருக்கிற உண்மையான அக்கறையாலும், அவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தாலும் சொல்லப்படுகிற வாழ்த்துதல்கள், உறவுகளைப் பலப்படுத்துகின்றன; கடவுளுடைய உண்மை ஊழியர்களை ஒன்றுசேர்க்கின்றன.
புத்தேயோலி துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்த பின்பு, பவுல் ரோமுக்குப் புறப்பட்டார். அப்போது, அவரைச் சந்திப்பதற்காக, உள்ளூர் சகோதரர்கள் தெற்கு நோக்கி வந்தார்கள். பவுல் அவர்களைத் தூரத்திலிருந்து பார்த்ததுமே, “கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்.” (அப். 28:13-15) சிலசமயம், நம்மால் வெறுமனே ஒரு புன்னகை மட்டுமே செய்ய முடியலாம் அல்லது அன்போடு கையசைக்க மட்டுமே முடியலாம். ஆனால் அந்தச் சிறிய செயல், மற்றவர்களை, முக்கியமாக மனச்சோர்விலோ சோகத்திலோ இருப்பவர்களை, உற்சாகப்படுத்தும்.
அருமையான ஆரம்பம்
அன்றிருந்த சில கிறிஸ்தவர்கள், உலகத்தோடு நட்பு வைத்துக்கொண்டதன் மூலம் கடவுளுக்கு உண்மை இல்லாதவர்களாக ஆனார்கள். (யாக். 4:4) சீஷராகிய யாக்கோபு, அப்படிப்பட்டவர்களுக்குக் கடுமையான ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், தன்னுடைய கடிதத்தை அவர் எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்.
“கடவுளுக்கும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அடிமையாக இருக்கிற யாக்கோபு, பல இடங்களுக்குச் சிதறிப்போன 12 கோத்திரத்தாருக்கு எழுதுவது: வாழ்த்துக்கள்!” என்று ஆரம்பிக்கிறார். (யாக். 1:1) அவர் அப்படி வாழ்த்துச் சொல்லி ஆரம்பித்தது, அவருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ள அந்தக் கிறிஸ்தவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். ஏனென்றால், அவர்கள்கூட கடவுளுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் அடிமைகள்தான் என்பதை அவருடைய வார்த்தைகள் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். மற்றவர்களிடம் முக்கியமான விஷயங்களைப் பேசும்போதுகூட, தாழ்மையோடு வாழ்த்துச் சொல்லி ஆரம்பித்தால், அதைப் பற்றிப் பேசுவது சுலபமாக இருக்கும்.
நாம் சொல்லும் வாழ்த்து சின்னதாக இருந்தாலும், அதை உண்மை மனதோடும் அன்போடும் சொல்லும்போது, அதற்கு வலிமை சேருகிறது. அதை யாருமே கவனிக்காததுபோல் தெரிந்தாலும் நாம் அப்படிச் செய்ய வேண்டும். (மத். 22:39) அயர்லாந்தில் இருக்கிற ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். ஒரு தடவை, கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு ஒருசில வினாடிகளுக்கு முன்புதான் அவர் ராஜ்ய மன்றத்துக்கு வந்தார். வேகவேகமாக அவர் உள்ளே நுழைந்தபோது, ஒரு சகோதரர் அவரைப் பார்த்து அன்பாகப் புன்னகைத்தார். “வணக்கம் சிஸ்டர், உங்கள பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்று சொன்னார். பிறகு அந்தச் சகோதரி, தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்தார்.
சிலவாரங்களுக்குப் பிறகு, வாழ்த்துச் சொன்ன அந்தச் சகோதரரிடம் வந்து அந்தச் சகோதரி பேசினார். அப்போது, சிலநாட்களாக தன் வீட்டில் கஷ்டமான ஒரு சூழ்நிலை இருப்பதாகவும், அதைச் சமாளித்து வருவதாகவும் சொன்னார். அதோடு, “கூட்டத்துக்கு வந்தப்போ ரொம்ப நொந்துபோயிருந்தேன் . . . வரவேண்டாம்னுதான் நினைச்சேன். சொல்லப்போனா, கூட்டத்துல நடந்த நிறைய விஷயம் எனக்கு ஞாபகம் இல்ல. நீங்க சொன்ன வாழ்த்துதான் ஞாபகம் இருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ரொம்ப நன்றி பிரதர்” என்று சொன்னார்.
தான் சொன்ன ஒரு சின்ன வாழ்த்துக்கு இவ்வளவு வலிமை இருக்குமென்று அந்தச் சகோதரர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. “நான் சொன்ன வாழ்த்து தனக்கு சந்தோஷத்த கொடுத்ததா அந்த சகோதரி சொன்னப்போ . . . நான் எடுத்த முயற்சிய நினைச்சு சந்தோஷப்பட்டேன். எனக்கு உற்சாகமாவும் இருந்துச்சு” என்று அந்தச் சகோதரர் சொல்கிறார்.
“உன் ரொட்டியைத் தண்ணீரின் மேல் தூக்கிப் போடு, நிறைய நாட்களுக்குப் பிறகு அது மறுபடியும் உனக்குக் கிடைக்கும்” என்று சாலொமோன் எழுதினார். (பிர. 11:1) வாழ்த்துக்கு இருக்கிற வலிமையை மறக்காமல் இருக்கும்போது, முக்கியமாக நம் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துச் சொல்லும்போது, அவர்களுடைய வாழ்க்கையையும் நம்முடைய வாழ்க்கையையும் வளமாக்குகிறோம். அதனால், வாழ்த்துக்கு இருக்கிற வலிமையை நாம் எப்போதும் குறைவாக எடைபோடக் கூடாது!