படிப்புக் கட்டுரை 14
கடவுளுடைய சேவையை முழுமையாகச் செய்கிறீர்களா?
“நல்ல செய்தியைத் தொடர்ந்து பிரசங்கி. உன் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடி.”—2 தீ. 4:5, அடிக்குறிப்பு.
பாட்டு 142 எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!
இந்தக் கட்டுரையில்...a
1. கடவுளுடைய ஊழியர்கள் எல்லாரும் என்ன செய்ய ஆசைப்படுகிறார்கள், ஏன்? (அட்டைப் படம்)
‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’ என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்குக் கிறிஸ்து இயேசு கட்டளை கொடுத்தார். (மத். 28:19) கடவுளுடைய உண்மை ஊழியர்கள் எல்லாரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிப்பது’ எப்படி என்று கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். (2 தீ. 4:5) ஏனென்றால், இந்த வேலைதான் மிக மிக முக்கியமான வேலை, எல்லாவற்றையும்விட அர்த்தமுள்ள ஒரு வேலை, வேறு எந்த வேலையையும்விட அவசரமான வேலை! ஆனால், நாம் ஆசைப்படுகிற அளவுக்கு இந்த வேலையைச் செய்ய நம்மால் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம்.
2. ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிப்பதில் நமக்கு என்னென்ன சவால்கள் வரலாம்?
2 சில முக்கியமான வேலைகள், நம்முடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகின்றன. நம்முடைய தேவைகளையும் நம் குடும்பத்தாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக, நாம் ரொம்ப நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். மற்ற குடும்பப் பொறுப்புகளோடும் நாம் போராட வேண்டியிருக்கலாம். நோய், மனச்சோர்வு அல்லது வயதாவதால் ஏற்படுகிற வலியையும் வேதனையையும் சமாளிக்க வேண்டியிருக்கலாம். இந்தக் கஷ்டமான சூழ்நிலைகளையும் சமாளித்துக்கொண்டு, ஊழியத்தையும் முழுமையாகச் செய்து முடிப்பது எப்படி?
3. மத்தேயு 13:23-ல் இருக்கும் இயேசுவின் வார்த்தைகளை வைத்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
3 நம்மால் யெகோவாவுக்கு அதிக நேரம் சேவை செய்ய முடியாமல் போவதற்கு நம்முடைய சூழ்நிலை ஒரு காரணமாக இருந்தால் என்ன செய்வது? சோர்ந்துபோக வேண்டிய அவசியம் இல்லை! நல்ல செய்தியைப் பிரசங்கிக்க நம் எல்லாராலும் ஒரே அளவு நேரத்தையும் சக்தியையும் செலவிட முடியாது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. (மத்தேயு 13:23-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சேவையில் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது, யெகோவா அதை உயர்வாக நினைக்கிறார். (எபி. 6:10-12) அதேசமயத்தில், ஊழியத்தை இன்னும் அதிகமாகச் செய்ய நம்முடைய சூழ்நிலை ஒத்துவருவதாக நாம் நினைக்கலாம். அப்படியென்றால், கடவுளுடைய சேவையை எப்படி வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்கலாம் என்பதைப் பற்றியும், வாழ்க்கையை எப்படி எளிமையாக வைக்கலாம் என்பதைப் பற்றியும், பிரசங்கிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் நமக்கு இருக்கும் திறமைகளை எப்படி இன்னும் மெருகேற்றலாம் என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம். முதலில், கடவுளுக்கு முழுமையாகச் சேவை செய்வது என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
4. கடவுளுக்கு முழுமையாகச் சேவை செய்வது என்றால் என்ன, அதை எப்படி விளக்குவீர்கள்?
4 பிரசங்கிக்கும் வேலையையும் கற்றுக்கொடுக்கும் வேலையையும் எந்தளவு முடியுமோ அந்தளவு அதிகமாகச் செய்யும்போது, கடவுளுக்கு முழுமையாகச் சேவை செய்கிறோம் என்று அர்த்தம். ஆனால், நாம் எவ்வளவு மணிநேரங்கள் ஊழியம் செய்கிறோம் என்பது மட்டுமே முக்கியம் கிடையாது. எந்த உள்நோக்கத்தோடு செய்கிறோம் என்பதுதான் முக்கியம்; யெகோவாவும் அதைத்தான் முக்கியமாக நினைக்கிறார். யெகோவாவின் மேலும் மற்றவர்களின் மேலும் அன்பு வைத்திருப்பதால், நாம் முழு மூச்சோடு அவருக்குச் சேவைb செய்கிறோம். (மாற். 12:30, 31; கொலோ. 3:23) முழு மூச்சோடு சேவை செய்வது என்றால், நம்முடைய எல்லா பலத்தையும் சக்தியையும் பயன்படுத்தி யெகோவாவுக்குச் சேவை செய்வது என்று அர்த்தம். பிரசங்க வேலையைச் செய்கிற பாக்கியத்துக்காக நாம் நன்றியோடு இருந்தால், நம்மால் முடிந்தவரை எல்லாரிடமும் இந்த நல்ல செய்தியைச் சொல்ல முயற்சி செய்வோம்.
5-6. அதிக நேரம் இல்லாத ஒருவரால் பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுக்க முடியுமா? விளக்குங்கள்.
5 இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். மற்றவர்களுக்குப் பாடம் சொல்லித்தருவதென்றால், ஓர் இளைஞருக்கு ரொம்ப இஷ்டம். முடிந்தபோதெல்லாம் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லித்தர அவர் ஆசைப்படுகிறார். கடைசியில், வாரயிறுதி நாட்களில் ஆசிரியராக வேலை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. ஆனால், அந்த வேலையில் கிடைக்கும் சம்பளம் அவருக்குப் போதுமானதாக இல்லை. அதனால், திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு ஜவுளி கடையில் அவர் வேலை செய்கிறார். அதிக நேரம் ஜவுளி கடையில் வேலை செய்தாலும், ஆசிரியர் வேலையைத்தான் அவர் மிகவும் நேசிக்கிறார். ஆசிரியர் வேலையில் தன்னுடைய திறமைகளை மெருகேற்ற வேண்டும் என்றும், அந்த வேலையை முழுநேரமாகச் செய்ய வேண்டும் என்றும் அவருக்குள் தீராத ஆசை இருக்கிறது. ஆனால், அவர் நினைத்தபடி அவரால் செய்ய முடிவதில்லை. இருந்தாலும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், அது சிறிய வாய்ப்பாக இருந்தாலும், நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்; அதைச் சந்தோஷமாகவும் செய்கிறார்.
6 அதேபோல், நீங்கள் ஆசைப்படும் அளவுக்கு ஊழியம் செய்ய உங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். இருந்தாலும், ஊழியம் செய்வதைத்தான் நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள். மக்களின் மனதைத் தொடும் விதத்தில் நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காக உங்கள் திறமைகளை மெருகேற்ற கடினமாக முயற்சி செய்கிறீர்கள். நிறைய விஷயங்கள் உங்கள் நேரத்தை உறிஞ்சிவிடுவதால், ஊழிய வேலைக்கு எப்படி முதலிடம் கொடுப்பது என்று நீங்கள் யோசிக்கலாம்.
ஊழியத்துக்கு முதலிடம் கொடுப்பது எப்படி?
7-8. ஊழியத்தைப் பற்றி இயேசுவுக்கு இருந்த அதே கண்ணோட்டத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
7 ஊழியத்தை இயேசு சரியான கண்ணோட்டத்தில் பார்த்தார். இந்த விஷயத்தில் அவர் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவதுதான் அவருடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமானதாக இருந்தது. (யோவா. 4:34, 35) எவ்வளவு பேரிடம் முடியுமோ அவ்வளவு பேரிடம் பிரசங்கிப்பதற்காக, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே போனார். கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பொது இடங்களிலும் வீடுகளிலும் பிரசங்கித்தார். தன்னுடைய வாழ்க்கையில் ஊழியத்துக்கு முதலிடம் கொடுத்தார்.
8 எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நல்ல செய்தியைச் சொல்வதற்கு நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டால், நம்மால் கிறிஸ்துவைப் பின்பற்ற முடியும். ஊழியம் செய்வதற்காக நம்முடைய சொந்த சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நமக்கு மனம் இருக்கிறது. (மாற். 6:31-34; 1 பே. 2:21) சபையில் இருக்கும் சிலர், விசேஷ பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ துணைப் பயனியராகவோ சேவை செய்கிறார்கள். வேறு சிலர், புதிய மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது தேவை அதிகமுள்ள இடத்துக்கு மாறிப் போகிறார்கள். ஆனால், சில பிரஸ்தாபிகளால் இப்படிச் செய்ய முடிவதில்லை. இருந்தாலும், இவர்களைப் போன்ற பிரஸ்தாபிகளால்தான் பிரசங்க வேலையின் பெரும்பாகம் செய்யப்படுகிறது. எப்படியிருந்தாலும் சரி, நம்மால் முடியாததை யெகோவா கேட்பது கிடையாது. ‘சந்தோஷமுள்ள கடவுளுடைய மகத்தான நல்ல செய்தியை’ அறிவிக்கும் இந்தப் பரிசுத்த வேலையை நாம் எல்லாரும் சந்தோஷமாகச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.—1 தீ. 1:11; உபா. 30:11.
9. (அ) தனக்காக வேலை செய்ய வேண்டியிருந்தபோதிலும் பிரசங்க வேலைக்கு பவுல் எப்படி முதலிடம் கொடுத்தார்? (ஆ) ஊழியத்தைப் பற்றிப் பவுலுக்கு எப்படிப்பட்ட கண்ணோட்டம் இருந்ததாக அப்போஸ்தலர் 28:16, 30, 31 சொல்கிறது?
9 பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுக்கும் விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலும் நமக்கு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார். தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, அவர் கொரிந்து நகரத்துக்குப் போயிருந்தார். அந்தச் சமயத்தில், அவரிடம் கொஞ்சம் பணம் மட்டுமே இருந்தது. அதனால், சில நாட்களுக்குக் கூடார வேலை செய்தார். இருந்தாலும், அந்த வேலைக்கு அவர் முதலிடம் கொடுக்கவில்லை. கொரிந்து நகரத்தில் இருந்தவர்களுக்கு “எந்தச் செலவும் வைக்காமல்” நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத்தான் அவர் அந்த வேலையைச் செய்தார். (2 கொ. 11:7) தன்னுடைய தேவைக்காக வேலை செய்ய வேண்டியிருந்தபோதிலும், ஊழியத்துக்குத்தான் அவர் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்தார்; ஒவ்வொரு ஓய்வுநாளிலும் பிரசங்கித்தார். அவருடைய சூழ்நிலை மாறிய பிறகு, ஊழியத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தினார். “யூதர்களிடம் கடவுளுடைய வார்த்தையை முழு மூச்சோடு பிரசங்கிக்கவும், இயேசுவே கிறிஸ்து என்று நிரூபிக்கவும் சாட்சி கொடுக்கவும் ஆரம்பித்தார்.” (அப். 18:3-5; 2 கொ. 11:9) இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, ரோமில் வீட்டுக்காவலில் இருந்தபோதும், தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் சாட்சி கொடுத்தார்; கடிதங்களை எழுதினார். (அப்போஸ்தலர் 28:16, 30, 31-ஐ வாசியுங்கள்.) ஊழியம் செய்வதற்குத் தடையாக இருக்க எதையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். “இந்த ஊழியத்தை . . . பெற்றிருக்கிற நாங்கள் சோர்ந்துபோவதில்லை” என்று அவர் எழுதினார். (2 கொ. 4:1) பவுலைப் போலவே, நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக நாம் வேலை செய்ய வேண்டியிருந்தாலும், கடவுளுடைய சேவைக்கு நம்முடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க முடியும்.
10-11. உடல்நிலை சரியில்லாதபோதும் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிக்க முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?
10 வயதாவதாலோ மோசமான உடல்நலப் பிரச்சினைகளாலோ உங்களால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியவில்லையா? அப்படியென்றால், மற்ற விதங்களில் உங்களால் ஊழியம் செய்ய முடியும். ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள், மக்களை எங்கெல்லாம் பார்த்தார்களோ அங்கெல்லாம் பிரசங்கித்தார்கள். சத்தியத்தைப் பற்றிப் பேசுவதற்காகக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார்கள். அதாவது, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்கள், பொது இடங்களில் ஊழியம் செய்தார்கள், தாங்கள் ‘சந்தித்த ஆட்களிடம்’ சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார்கள். (அப். 17:17; 20:20) ஒருவேளை, நம்மால் அவ்வளவாக நடக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்யலாம்? ஏதாவது ஒரு பொது இடத்தில் உட்கார்ந்துகொண்டு, அங்கே வந்துபோகிறவர்களிடம் சத்தியத்தைப் பற்றிப் பேசலாம். அல்லது, சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம், கடிதம் எழுதலாம், ஃபோன் மூலம் சாட்சி கொடுக்கலாம். உடல்நலப் பிரச்சினைகளாலும் வேறுசில பிரச்சினைகளாலும் கஷ்டப்படுகிற பிரஸ்தாபிகள் நிறைய பேர், மற்ற விதங்களில் ஊழியம் செய்வதன் மூலம் சந்தோஷத்தையும் திருப்தியையும் அடைகிறார்கள்.
11 உங்களுக்கு உடல்நலப் பிரச்சினை இருந்தாலும், உங்களால் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிக்க முடியும். அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை மறுபடியும் கவனியுங்கள். “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று அவர் சொன்னார். (பிலி. 4:13) ஒரு மிஷனரி பயணத்தில் பவுலுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது, அந்தப் பலம் அவருக்குத் தேவைப்பட்டது. “எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான், முதன்முதலில் உங்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் சொன்னார். (கலா. 4:13) அதேபோல், உங்கள் உடல்நிலையும் சரியில்லாமல் போகும்போது, டாக்டர்கள், நர்ஸுகள், உங்கள் உடல்நிலையைப் பராமரிப்பவர்கள் போன்ற எல்லாரிடமும் நல்ல செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இப்படிப்பட்டவர்களில் நிறைய பேரை, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்திப்பது கஷ்டம்; வேலை செய்யும் இடத்தில்தான் இவர்களைப் பார்க்க முடிகிறது.
வாழ்க்கையை எளிமையாக வைப்பது எப்படி?
12. ‘கண்ணை ஒரே விஷயத்தின் மேல் கவனமாக வைப்பது’ என்றால் என்ன?
12 “கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருந்தால், [“கண் எளிமையாக” இருந்தால், அடிக்குறிப்பு], உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்” என்று இயேசு சொன்னார். (மத். 6:22) இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? வாழ்க்கையை நாம் எளிமையாக வைக்க வேண்டும் அல்லது ஒரு குறிக்கோளின்மீது [அதாவது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின்மீது] கவனமாக இருக்க வேண்டும்; அதைவிட்டு திசை திரும்பிவிடக் கூடாது! தன் வாழ்க்கையில் ஊழியத்துக்கு முழு கவனம் செலுத்தியதன் மூலம் இயேசு நமக்கு அருமையான முன்மாதிரி வைத்தார். யெகோவாவுடைய சேவையின் மீதும், அவருடைய அரசாங்கத்தின் மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஊழியத்துக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம், அதாவது ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுப்பதன்’ மூலம், நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம்.—மத். 6:33.
13. ஊழியத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு எது நமக்கு உதவும்?
13 ஊழியத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு வழி, நம்முடைய வாழ்க்கையை எளிமையாக வைப்பது! அப்படி எளிமையாக வைக்கும்போது, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவரை நேசிக்கவும் மற்றவர்களுக்கு உதவ நம்மால் நிறைய நேரம் செலவு செய்ய முடியும்.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) உதாரணத்துக்கு, வார நாட்களில் அதிக நேரம் ஊழியம் செய்வதற்காக, உங்களால் வேலையில் சில மாற்றங்களைச் செய்ய முடியுமா? நேரத்தைத் திருடிவிடுகிற பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்ள முடியுமா?
14. ஊழியத்தை அதிகமாகச் செய்வதற்கு ஒரு தம்பதி என்ன செய்தார்கள்?
14 இலியாஸ் என்ற மூப்பரும் அவருடைய மனைவியும் இதைத்தான் செய்தார்கள். “அந்த சமயத்துல, எங்களால பயனியர் சேவை செய்ய முடியல. ஆனா, நிறைய நேரம் ஊழியம் செய்றதுக்கு எங்களால சில மாற்றங்கள செய்ய முடியும்னு தோணுச்சு. அதனால, சின்ன சின்ன படிகள எடுத்தோம். உதாரணத்துக்கு, எங்களோட செலவுகள குறைச்சோம், பொழுதுபோக்குக்காக செலவிடுற நேரத்தை குறைச்சோம், அப்புறம் எங்க வேலையில சில மாற்றங்கள செய்ய முடியுமானு முதலாளிகிட்ட கேட்டோம். இதெல்லாம் செஞ்சதுனால, சாயங்கால நேரத்துல ஊழியம் செய்ய முடிஞ்சுது. நிறைய பைபிள் படிப்புகளையும் நாங்க நடத்துனோம். மாசத்துல இரண்டு தடவை, வார நாட்கள்ல நடக்குற ஊழியத்துல கலந்துக்கிட்டோம். இதெல்லாம் செஞ்சது, எங்களுக்கு சந்தோஷத்த தந்துச்சு!” என்று இலியாஸ் சொல்கிறார்.
பிரசங்கிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் திறமையை மெருகேற்றுவது எப்படி?
15-16. ஒன்று தீமோத்தேயு 4:13, 15 சொல்கிறபடி, ஊழியத்தில் நம்முடைய திறமைகளை எப்படி மெருகேற்றலாம்? (“என் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிக்க உதவும் இலக்குகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
15 பிரசங்கிப்பதில் நம்முடைய திறமைகளை மெருகேற்றுவதன் மூலம் ஊழியத்தை நம்மால் முழுமையாகச் செய்து முடிக்க முடியும். சில குறிப்பிட்ட துறையில் இருப்பவர்கள், தங்களுக்கு இருக்கும் அறிவையும் திறமையையும் மெருகேற்ற சில பயிற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கும் ஊழியர்களின் விஷயத்திலும் இதுதான் உண்மை! ஊழியத்தில் நம்முடைய திறமைகளை மெருகேற்றிக்கொண்டே இருக்க நாம் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.—நீதி. 1:5; 1 தீமோத்தேயு 4:13, 15-ஐ வாசியுங்கள்.
16 அப்படியென்றால், ஊழியம் செய்வதில் தொடர்ந்து முன்னேற என்ன செய்ய வேண்டும்? வாராவாரம் நடக்கிற வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் கொடுக்கப்படும் அறிவுரைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். ஊழியத்தில் நம்முடைய திறமைகளைப் படிப்படியாக மெருகேற்ற, இந்தக் கூட்டத்தில் அருமையான பயிற்சி கிடைக்கிறது. உதாரணத்துக்கு, மாணாக்கர் நியமிப்புகளைச் செய்பவர்களுக்கு சேர்மேன் கொடுக்கும் ஆலோசனைகளிலிருந்து, ஊழியத்தை இன்னும் நன்றாகச் செய்ய உதவுகிற குறிப்புகளைக் கற்றுக்கொள்ளலாம். அடுத்த தடவை ஊழியம் செய்யும்போது, கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தலாம். ஊழியத் தொகுதிக் கண்காணியிடம் உதவி கேட்கலாம் அல்லது அவரோடு சேர்ந்து ஊழியம் செய்யலாம். முதிர்ச்சியுள்ள ஒரு பிரஸ்தாபியோடு அல்லது பயனியரோடு அல்லது வட்டாரக் கண்காணியோடு சேர்ந்து ஊழியம் செய்யலாம். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துவதில் நாம் திறமைசாலிகளாக ஆகும்போது, ஊழிய வேலையையும் கற்றுக்கொடுக்கும் வேலையையும் இன்னும் சந்தோஷமாகச் செய்வோம்.
17. ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிக்கும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள்?
17 தன்னுடைய “சக வேலையாட்களாக” இருக்க யெகோவா நம்மை அனுமதித்திருக்கிறார். இது நமக்குக் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (1 கொ. 3:9) ‘மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளும்போதும்’ கடவுளுடைய சேவையில் அதிக கவனம் செலுத்தும்போதும், உங்களால் “சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை” செய்ய முடியும். (பிலி. 1:10; சங். 100:2) கடவுளுடைய ஊழியர்களாக, நீங்கள் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கலாம். அதாவது, உங்களுக்கு எப்படிப்பட்ட சவால்கள் இருந்தாலும் சரி, என்ன வரம்புகள் இருந்தாலும் சரி, ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிப்பதற்குத் தேவையான பலத்தைக் கடவுள் கொடுப்பார்! (2 கொ. 4:1, 7; 6:4) ஊழியத்தில் நீங்கள் கொஞ்சம் செய்தாலும் சரி, அதிகமாகச் செய்தாலும் சரி, அதை முழு மூச்சோடு செய்யும்போது உங்களால் ‘சந்தோஷமாக’ இருக்க முடியும். (கலா. 6:4) ஊழியத்தை நீங்கள் முழுமையாகச் செய்து முடிக்கும்போது, யெகோவாவின் மேலும் மற்றவர்களின் மேலும் உங்களுக்கு அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறீர்கள். ‘இப்படிச் செய்யும்போது நீங்களும் மீட்புப் பெறுவீர்கள், நீங்கள் சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்.’—1 தீ. 4:16.
பாட்டு 141 நல்லவர்களைத் தேடுவோம்
a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்து, மற்றவர்களைச் சீஷராக்க வேண்டும் என்ற கட்டளையை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். நமக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், இந்த ஊழிய வேலையை எப்படி முழுமையாகச் செய்து முடிக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஊழியம் செய்யும் விதத்தில் இன்னும் எப்படி முன்னேற்றம் செய்யலாம் என்றும், ஊழியத்தை இன்னும் எப்படிச் சந்தோஷமாகச் செய்யலாம் என்றும் தெரிந்துகொள்வோம்.
b வார்த்தைகளின் விளக்கம்: கடவுளுக்குச் செய்யும் சேவையில், பிரசங்கிப்பது மற்றும் கற்றுக்கொடுப்பது, அமைப்பின் கட்டிடங்களைக் கட்டுவது மற்றும் பராமரிப்பது, நிவாரண வேலைகளில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும்.—2 கொ. 5:18, 19; 8:4.
c ஜூலை 2016 காவற்கோபுரத்தின் 10-வது பக்கத்தில் இருக்கிற “வாழ்க்கையை எப்படி எளிமையாக்கலாம்?” என்ற பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏழு வழிகளைப் பாருங்கள்.
d படங்களின் விளக்கம்: மறுசந்திப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை, வார நாட்களில் நடக்கும் கூட்டத்தில் ஒரு சகோதரி நடித்துக்காட்டுகிறார். பிறகு, சேர்மேன் அவருக்கு ஆலோசனை கொடுக்கிறார். கற்றுக்கொடுப்பது என்ற சிற்றேட்டில், அந்தச் சகோதரி அதைக் குறித்துக்கொள்கிறார். வாரயிறுதியில் ஊழியம் செய்யும்போது, அந்தக் குறிப்பைப் பயன்படுத்துகிறார்.