படிப்புக் கட்டுரை 42
யெகோவா உங்களை என்னவாக ஆக்குவார்?
“கடவுள்தான் . . . ஆர்வத்தையும் வல்லமையையும் உங்களுக்குக் கொடுத்து உங்களைப் பலப்படுத்துகிறார்.”—பிலி. 2:13.
பாட்டு 71 கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு
இந்தக் கட்டுரையில்...a
1. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற யெகோவாவால் என்ன செய்ய முடியும்?
தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு என்னவாக ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆவதற்கு யெகோவாவால் முடியும். ஒரு போதகராக... ஆறுதல் தருபவராக... நற்செய்தியாளராக... அவர் ஆகியிருக்கிறார். இதைத் தவிர வேறுசில ஸ்தானங்களையும் அவர் ஏற்றிருக்கிறார். (ஏசா. 48:17; 2 கொ. 7:6; கலா. 3:8) இருந்தாலும், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மனிதர்களையும் அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். (மத். 24:14; 28:19, 20; 2 கொ. 1:3, 4) தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாம் என்னவாக ஆகவேண்டுமோ அப்படியெல்லாம் ஆவதற்குத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் அவரால் தர முடியும். சில அறிஞர்கள் சொல்வதுபோல், இவையெல்லாமே யெகோவாவுடைய பெயரின் அர்த்தத்தில் அடங்கியிருக்கும் சில அம்சங்கள்தான்!
2. (அ) யெகோவா உண்மையிலேயே நம்மைப் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் நமக்கு ஏன் வரலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
2 யெகோவா நம்மைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், வயதாகிவிட்டதாலோ சூழ்நிலை மாறிவிட்டதாலோ முன்பு செய்ததைப் போல் சிலரால் செய்ய முடியாமல் போகலாம். அதனால், ‘யெகோவா என்னை உண்மையிலேயே பயன்படுத்துறாரா?’ என்ற சந்தேகம் அவர்களுக்கு வரலாம். வேறுசிலர், ‘நான்தான் ஏற்கெனவே இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கேனே? இது போதும்! இதுக்கு மேல செய்றதுக்கு என்ன இருக்கு?’ என்று சொல்லி திருப்தி அடைந்துவிடலாம். இந்தக் கட்டுரையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற யெகோவா எப்படி நம் ஒவ்வொருவரையும் தயார்படுத்துகிறார் என்பதைப் பற்றிப் பார்ப்போம். தன்னுடைய ஊழியர்களாக இருந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் யெகோவா எப்படி ஆர்வத்தையும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார் என்பதையும் பார்ப்போம். கடைசியாக, யெகோவா நம்மையும் பயன்படுத்த நாம் எப்படி இடம்கொடுக்கலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
யெகோவா எப்படி நம்மைத் தயார்படுத்துகிறார்?
3. பிலிப்பியர் 2:13 சொல்கிறபடி, யெகோவா நமக்கு எப்படியெல்லாம் ஆர்வத்தை தரலாம்?
3 பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) செயல்படுவதற்குத் தேவையான ஆர்வத்தை யெகோவாவால் நமக்குத் தர முடியும். எப்படி? சில சூழ்நிலைகளை இப்போது பார்க்கலாம். ஒருவேளை, சபையில் யாருக்காவது உதவி தேவைப்படலாம் அல்லது சபையில் வேறு ஏதாவது வேலை செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது வேறொரு இடத்தில் தேவை இருப்பதாகச் சொல்லி கிளை அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தை மூப்பர்கள் வாசிக்கலாம். அதுபோன்ற சமயங்களில், “என் பங்குல நான் என்ன செய்யலாம்?” என்று நாம் யோசிக்கலாம். அல்லது சவாலான ஒரு நியமிப்பு நமக்குக் கிடைக்கும்போது, ‘இத என்னால செய்ய முடியுமா’ என்று நாம் தயங்கலாம். அல்லது பைபிள் படித்துவிட்டு, ‘இந்த வசனத்துல சொல்லியிருக்கிற மாதிரி நான் எப்படி மத்தவங்களுக்கு உதவலாம்?’ என்று நாம் யோசிக்கலாம். நாம் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று யெகோவா கட்டாயப்படுத்த மாட்டார். ஆனால், “நான் எப்படி இந்த விஷயத்தில உதவலாம்?” என்று நாம் யோசிக்கும்போது, யெகோவா அதைப் பார்க்கிறார். அந்த விஷயத்தைச் செய்து முடிப்பதற்கான ஆர்வத்தைத் தருகிறார்.
4. செயல்படுவதற்கான வல்லமையை யெகோவா எப்படித் தரலாம்?
4 செயல்படுவதற்குத் தேவையான வல்லமையையும் யெகோவாவால் நமக்குத் தர முடியும். (ஏசா. 40:29) எப்படி? தன்னுடைய சக்தியைக் கொடுத்து நமக்கு ஏற்கெனவே இருக்கிற திறமைகளை அவரால் பட்டைதீட்ட முடியும். (யாத். 35:30-35) குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்வதற்குத் தன்னுடைய அமைப்பின் மூலம் யெகோவா நமக்குச் சொல்லித்தரலாம். ஒரு நியமிப்பை எப்படிச் செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? உதவி கேட்கத் தயங்காதீர்கள்! ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ தரும்படி தாராள குணம் படைத்த நம் தந்தையிடமும் உதவி கேளுங்கள். (2 கொ. 4:7; லூக். 11:13) செயல்படுவதற்குத் தேவையான ஆர்வத்தையும் வல்லமையையும் ஆண்கள் பெண்கள் என நிறைய பேருக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்டவர்களைப் பற்றி பைபிள் பேசுகிறது. அந்தப் பதிவுகளில் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம். அப்போது, அவர்களைப் போலவே உங்களையும் யெகோவா எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்துப்பாருங்கள்.
எப்படிப்பட்டவர்களாக ஆவதற்கு ஆண்களுக்கு யெகோவா உதவினார்?
5. மோசேயை யெகோவா எப்படி, எப்போது பயன்படுத்தினார் என்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
5 யெகோவா பயன்படுத்திய ஆண்களில் மோசேயும் ஒருவர்! இஸ்ரவேலர்களை விடுவிப்பவராக யெகோவா அவரை ஆக்கினார். ‘எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும் பயிற்சி பெற்ற’ பிறகு, யெகோவாவின் வேலையைச் செய்ய தான் தயாராக இருப்பதாக மோசே நினைத்தார். ஆனால், அந்தச் சமயத்திலா யெகோவா அவரைப் பயன்படுத்தினார்? (அப். 7:22-25) இல்லை! மனத்தாழ்மையுள்ளவராக, சாந்தமானவராக அவரை மாற்றிய பிறகுதான் யெகோவா அவரைப் பயன்படுத்தினார். (அப். 7:30, 34-36) சக்திபடைத்த எகிப்திய அரசனுக்கு முன்னால் நிற்பதற்குத் தேவையான தைரியத்தையும் அவருக்குக் கொடுத்தார். (யாத். 9:13-19) மோசேயை அவர் எப்படி, எப்போது பயன்படுத்தினார் என்பதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். தன்னுடைய குணங்களை வெளிக்காட்டுகிறவர்களையும், தன்னை முழுமையாக நம்பியிருக்கிறவர்களையும் யெகோவா பயன்படுத்துகிறார்.—பிலி. 4:13.
6. தாவீது ராஜாவுக்கு உதவ பர்சிலாவை யெகோவா பயன்படுத்தியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 பல வருஷங்களுக்குப் பிறகு, தாவீது ராஜாவுக்கு உதவி செய்ய பர்சிலா என்பவரை யெகோவா பயன்படுத்தினார். அப்சலோமிடமிருந்து தாவீது ராஜாவும் மற்றவர்களும் தப்பித்து ஓடிய சமயம் அது! அவர்கள் எல்லாரும் ரொம்பவே ‘பசிதாகத்தோடு இருந்தார்கள், களைத்துப்போயிருந்தார்கள்.’ அந்தச் சமயத்தில் பர்சிலா உதவிக் கரம் நீட்டினார். மற்றவர்களோடு சேர்ந்து தன் உயிரைப் பணயம் வைத்தார்; தாவீதுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் தேவையானவற்றை கொண்டுபோய் கொடுத்தார். ‘எனக்குதான் வயசாயிடுச்சே, என்னையெல்லாம் யெகோவா இனிமேல் பயன்படுத்துவாரா?’ என்று நினைத்து பர்சிலா அப்படியே உட்கார்ந்துவிடவில்லை. கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது உடனடியாக செயலில் இறங்கினார்; தன்னிடம் இருந்தவற்றைத் தாராளமாகக் கொடுத்தார். (2 சா. 17:27-29) நமக்கு என்ன பாடம்? நாம் எந்த வயதில் இருந்தாலும் சரி, யெகோவாவால் நம்மைப் பயன்படுத்த முடியும். அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்கு யெகோவா நம்மைப் பயன்படுத்துவார். அவர்கள் உள்ளூரில் இருந்தாலும் சரி, வேறு நாடுகளில் இருந்தாலும் சரி! (நீதி. 3:27, 28; 19:17) நம்மால் நேரடியாக அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும், உலகம் முழுவதும் நடக்கிற வேலைக்கு நன்கொடை கொடுப்பதன் மூலம் உதவ முடியும். எங்கே எப்போது உதவி தேவைப்படுகிறதோ, அங்கே அப்போது அந்த நன்கொடை பயன்படுத்தப்படும்.—2 கொ. 8:14, 15; 9:11.
7. சிமியோனை யெகோவா எப்படிப் பயன்படுத்தினார், அதைப் பற்றி நினைத்துப்பார்ப்பது நமக்கு எப்படிப் புதுத்தெம்பைக் கொடுக்கிறது?
7 இப்போது, எருசலேமிலிருந்த வயதான மனிதரான சிமியோனை யெகோவா எப்படிப் பயன்படுத்தினார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மேசியாவைப் பார்ப்பதற்கு முன்பு அவர் சாக மாட்டார் என்று யெகோவா அவருக்கு வாக்குக் கொடுத்தார். மேசியாவுக்காக அவர் ரொம்பக் காலம் காத்திருந்ததால், உண்மையிலேயே யெகோவா கொடுத்த வாக்கு அவருக்குப் புதுத்தெம்பைக் கொடுத்திருக்கும். அவருடைய விசுவாசத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் பலன் கிடைத்ததா? நிச்சயமாக! ஒருநாள், கடவுளுடைய “சக்தியின் தூண்டுதலால்” அவர் ஆலயத்துக்குள் போனார். குழந்தையாக இருந்த இயேசுவை அங்கே பார்த்தார்! கிறிஸ்துவாக ஆகப்போகும் அந்தக் குழந்தையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைச் சொல்ல யெகோவா அவரைப் பயன்படுத்தினார். (லூக். 2:25-35) இயேசு செய்த ஊழியத்தைப் பார்க்கும்வரை அவர் உயிரோடு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும், குழந்தையாக இருந்த இயேசுவைப் பார்ப்பதற்குக் கிடைத்த பாக்கியத்துக்காக அவர் ரொம்ப நன்றியோடு இருந்திருப்பார். எதிர்காலத்தில் அருமையான ஆசீர்வாதங்கள் அவருக்குக் காத்திருப்பது நிச்சயம். இந்த உண்மையுள்ள மனிதர், இயேசுவின் அரசாட்சி இந்தப் பூமியில் இருக்கிற எல்லா குடும்பங்களுக்கும் எப்படி ஓர் ஆசீர்வாதமாக இருக்கப்போகிறது என்பதை புதிய உலகத்தில் பார்க்கப்போகிறார். (ஆதி. 12:3) இப்போது நம்முடைய விஷயத்துக்கு வரலாம். தன்னுடைய சேவையைச் செய்ய யெகோவா நம்மை எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் சரி, அதற்கு நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்!
8. பர்னபாவைப் போல நம்மையும் யெகோவா எப்படிப் பயன்படுத்தலாம்?
8 இப்போது, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தாராள குணமுள்ள ஒருவரைப் பற்றிப் பார்க்கலாம். அவருடைய பெயர் யோசேப்பு. தன்னைப் பயன்படுத்த அவர் யெகோவாவுக்கு இடம்கொடுத்தார். (அப். 4:36, 37) மற்றவர்களை ஆறுதல்படுத்துவதில் அவர் பேர்பெற்றவராக இருந்ததால், அவரை பர்னபா என்று அப்போஸ்தலர்கள் அழைத்தார்கள். “ஆறுதலின் மகன்” என்பதுதான் அதன் அர்த்தம்! சவுல் கிறிஸ்தவராக மாறியபோது பர்னபா அவருக்கு எப்படி உதவினார் என்பதை யோசித்துப்பாருங்கள். கிறிஸ்தவர்களை சவுல் கடுமையாகத் துன்புறுத்தியிருந்ததால், அவரைப் பார்த்து நிறைய சகோதரர்கள் நடுங்கினார்கள். அவரிடம் போய் பேசுவதற்குத் தயங்கினார்கள். ஆனால், கனிவான உள்ளம் படைத்த பர்னபா சவுலுக்கு உதவினார். அவருடைய அன்பை ருசித்த சவுலின் இதயத்தில் நிச்சயம் நன்றி பொங்கியிருக்கும்! (அப். 9:21, 26-28) கொஞ்ச நாள் கழித்து, ரொம்பத் தூரத்திலிருந்த சீரியாவைச் சேர்ந்த அந்தியோகியாவில் வாழ்ந்த சகோதரர்களைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருந்ததாக எருசலேமிலிருந்த மூப்பர்கள் நினைத்தார்கள். அப்போது யாரை அனுப்பினார்கள்? பர்னபாவைத்தான்! அது சரியான முடிவு, இல்லையா? “இதயத்தில் உறுதியோடு எஜமானுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்கும்படி எல்லாரையும் [பர்னபா] உற்சாகப்படுத்தினார்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 11:22-24) நமக்கு என்ன பாடம்? நம்மையும் ‘ஆறுதலின் மகனாக,’ ‘ஆறுதலின் மகளாக,’ யெகோவாவால் பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு, நெஞ்சார நேசித்த ஒருவரை இழந்த துக்கத்தில் சிலர் இருக்கலாம். இப்படிப்பட்டவர்களை ஆறுதல்படுத்த யெகோவா நம்மைப் பயன்படுத்தலாம். சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது மனச்சோர்வால் அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு ஃபோன் செய்யும்படியோ அவர்களைப் போய் பார்க்கும்படியோ யெகோவா நம்மைத் தூண்டலாம். அதுபோன்ற சமயங்களில் பர்னபாவைப் போல் நடந்துகொள்வீர்களா? யெகோவா உங்களைப் பயன்படுத்த இடம்கொடுப்பீர்களா?—1 தெ. 5:14.
9. சகோதரர் வாசிலியை யெகோவா பயன்படுத்திய விதத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 இன்றும் யெகோவா நிறைய பேரைப் பயன்படுத்துகிறார். அவர்களில் ஒருவரைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவருடைய பெயர் வாசிலி. 26 வயதில் அவர் மூப்பராக நியமிக்கப்பட்டார். சபையில் இருந்தவர்களுக்கு உதவ, அதுவும் கஷ்டத்தில் தவித்தவர்களுக்கு உதவ, தனக்குப் போதுமான அனுபவம் இல்லை என்று நினைத்து அவர் பயந்தாராம். ஆனால், அருமையான மேய்ப்பராக ஆவதற்கு யெகோவா அவருக்கு உதவினார். எப்படி? முதிர்ச்சியுள்ள மூப்பர்கள் அவருக்குப் பயிற்சி கொடுத்தார்கள். அதோடு, ராஜ்ய ஊழியப் பள்ளியும் அவருக்கு கை கொடுத்தது. வாசிலியும் தன்னுடைய பங்கில் கடினமாக உழைத்தார். முதலில், தான் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களை அவர் பட்டியல் போட்டார். ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க முடிக்க அவருடைய பயம் பறந்து போனது. “எத நினைச்சு நான் முதல்ல பயந்தேனோ, அதெல்லாம் இப்ப எனக்கு சந்தோஷத்த கொடுக்குது. சபையில இருக்கிற சகோதர சகோதரிகள ஆறுதல்படுத்துறதுக்கு, பொருத்தமான வசனத்தைக் கண்டுபிடிக்க யெகோவா உதவுறாரு. இது எனக்கு திருப்திய தருது” என்று வாசிலி சொல்கிறார். அன்பான சகோதரர்களே, யெகோவா உங்களைப் பயன்படுத்த நீங்களும் வாசிலியைப் போலவே இடம்கொடுப்பீர்களா? அப்படிக் கொடுத்தால், நிறைய பொறுப்புகளை எடுத்துச் செய்வதற்கான திறமையை யெகோவா தருவார்.
எப்படிப்பட்டவர்களாக ஆவதற்கு பெண்களுக்கு யெகோவா உதவினார்?
10. அபிகாயில் என்ன செய்தாள், அவளிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
10 தாவீதையும் அவரோடு இருந்தவர்களையும் சவுல் ராஜா துரத்திக்கொண்டிருந்த சமயம் அது! தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் அப்போது உதவி தேவைப்பட்டது. அவர்கள் வனாந்தரத்திலிருந்தபோது பணக்கார இஸ்ரவேலனாகிய நாபாலின் மந்தையைப் பாதுகாத்திருந்ததால் அவரிடம் போய் உதவி கேட்கலாம் என்று நினைத்தார்கள். அதனால், தங்களுக்குக் கொஞ்சம் உணவு கொடுத்து உதவும்படி கேட்டு தாவீதின் ஆட்கள் அவனிடம் போனார்கள். ஆனால், நாபால் ஒரு சுயநலவாதி! தாவீதின் ஆட்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது என்று சொல்லி கையை விரித்துவிட்டான். இதைக் கேட்ட தாவீதுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. நாபாலையும் அவனுடைய வீட்டிலிருந்த எல்லா ஆண்களையும் துவம்சம் செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தார். (1 சா. 25:3-13, 22) இப்போது, நாபாலின் மனைவி செயலில் இறங்குகிறாள். அவள் எந்தளவு அழகாக இருந்தாளோ அந்தளவு புத்திசாலியாகவும் இருந்தாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தாவீதின் முன்னால் போய் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்குகிறாள். பழிக்குப்பழி வாங்குவதன் மூலம் கொலைப்பழிக்கு ஆளாக வேண்டாம் என்று தாவீதிடம் கெஞ்சுகிறாள். இந்த விஷயத்தை யெகோவாவின் கையில் விட்டுவிடும்படி பக்குவமாக எடுத்துச் சொல்கிறாள். பணிவான அந்த வார்த்தைகளைக் கேட்டு, விவேகமான அந்தச் செயலைப் பார்த்து, தாவீதின் நெஞ்சம் கரைகிறது. யெகோவாதான் அவளை அனுப்பியிருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். (1 சா. 25:23-28, 32-34) அபிகாயில் தங்கமான குணங்களை வளர்த்திருந்ததால், யெகோவா அவளைப் பயன்படுத்தினார். அபிகாயிலைப் போலவே, இன்றிருக்கும் சகோதரிகள் பக்குவமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ளும்போது, தங்கள் குடும்பங்களையும் சபையில் இருக்கிறவர்களையும் பலப்படுத்த யெகோவா அவர்களைப் பயன்படுத்துவார்.—நீதி. 24:3; தீத். 2:3-5.
11. சல்லூமின் மகள்கள் என்ன செய்தார்கள், அவர்களைப் போலவே இன்று யார் நடந்துகொள்கிறார்கள்?
11 இப்போது, சல்லூமின் மகள்களைப் பற்றிப் பார்க்கலாம். அபிகாயிலுக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவர்கள்தான் இவர்கள்! எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்கு இவர்களையும் யெகோவா பயன்படுத்தினார். (நெ. 2:20; 3:12) இவர்களுடைய அப்பா ஒரு மாகாணத் தலைவராக இருந்தபோதும், மதில்களைக் கட்டுகிற அந்தக் கஷ்டமான, ஆபத்தான வேலையைச் செய்ய இவர்களுக்கு மனம் இருந்தது. (நெ. 4:15-18) ‘வேலை செய்ய மறுத்த’ தெக்கோவா ஊரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! (நெ. 3:5) எருசலேமின் மதில் வெறும் 52 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டபோது, சல்லூமின் மகள்கள் எப்படிப் பூரித்துப்போயிருப்பார்கள்! (நெ. 6:15) அவர்களைப் போலவே இன்றும் நிறைய சகோதரிகள் கடவுளுக்கு விசேஷ சேவை செய்கிறார்கள். யெகோவாவின் சேவையில் பயன்படுத்தப்படுகிற கட்டிடங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஆசையோடு முன்வருகிறார்கள். அவர்களுடைய திறமைகளும் உற்சாகமும் உண்மைத்தன்மையும் இந்த வேலையின் வெற்றிக்கு கைகொடுக்கிறது.
12. தபீத்தாளைப் போலவே நம்மையும் யெகோவா எப்படிப் பயன்படுத்தலாம்?
12 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தபீத்தாள் என்ற பெண்ணை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மற்றவர்களுக்கு, முக்கியமாக விதவைகளுக்கு, “நல்ல காரியங்களையும் தானதர்மங்களையும்” அவள் செய்துவந்தாள். யெகோவாதான் அவளுக்கு அந்தத் தூண்டுதலைத் தந்தார். (அப். 9:36) தாராள குணத்தையும் அன்பையும் காட்டுவதில் அவள் மணிமகுடமாக இருந்தாள். அதனால், அவள் இறந்தபோது நிறைய பேர் அழுது புலம்பினார்கள். அப்போஸ்தலன் பேதுரு அவளை உயிரோடு எழுப்பியபோது அவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருப்பார்கள்! (அப். 9:39-41) நமக்கு என்ன பாடம்? இளைஞர்களோ வயதானவர்களோ, ஆண்களோ பெண்களோ, நாம் யாராக இருந்தாலும், சகோதர சகோதரிகளுக்குத் தேவையான உதவியை நம்மால் செய்ய முடியும்.—எபி. 13:16.
13. ரூத் என்ற சகோதரியை யெகோவா எப்படிப் பயன்படுத்தினார், அவர் என்ன சொன்னார்?
13 இப்போது, கூச்ச சுபாவமுள்ள ரூத் என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். மிஷனரியாக ஆக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அவர் சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒவ்வொரு வீட்டிலும் ஆர்வத்துடிப்போடு துண்டுப்பிரதிகளை கொடுப்பாராம். “ஊழியம் செய்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஆனாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மக்களைச் சந்தித்து அவர்களிடம் பேசுவது அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. கூச்ச சுபாவமுள்ளவராக இருந்தபோதிலும் 18 வயதில் பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தார். 1946-ல் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டார். பிறகு, ஹவாயிலும் ஜப்பானிலும் ஊழியம் செய்தார். அந்த நாடுகளில் நல்ல செய்தியைச் சொல்வதற்கு யெகோவா அவரை அருமையான விதத்தில் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட 80 வருஷங்கள் ஊழியம் செய்த பிறகு அவர் என்ன சொன்னார் தெரியுமா? “யெகோவாதான் எனக்கு பக்கபலமா இருந்தாரு. கூச்ச சுபாவத்த விடுறதுக்கு அவர் உதவுனாரு. யெகோவா மேல நம்பிக்கை வெச்சா போதும், அவங்க யாரா இருந்தாலும், யெகோவா அவங்கள பயன்படுத்துவாரு. இத நான் உறுதியா நம்புறேன்” என்று சொன்னார்.
யெகோவா உங்களைப் பயன்படுத்த இடம்கொடுங்கள்
14. கொலோசெயர் 1:29 காட்டுகிறபடி, யெகோவா நம்மைப் பயன்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
14 இதுவரை பார்த்ததுபோல், தன்னுடைய ஊழியர்களை யெகோவா நிறைய விதங்களில் பயன்படுத்தியிருக்கிறார். உங்களையும் அவர் பயன்படுத்துவாரா? கடினமாக உழைக்க உங்களுக்கு எந்தளவு மனம் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அது இருக்கிறது! (கொலோசெயர் 1:29-ஐ வாசியுங்கள்.) யெகோவா உங்களைப் பயன்படுத்த நீங்கள் இடம்கொடுத்தால், அவர் உங்களை சுறுசுறுப்பான நற்செய்தியாளராக, அருமையான போதகராக, மற்றவர்களை ஆறுதல்படுத்துபவராக, திறமையுள்ள வேலையாளாக, தோள்கொடுக்கும் தோழனாக ஆக்குவார். தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேறு விதங்களிலும் அவரால் உங்களைப் பயன்படுத்த முடியும்.
15. ஒன்று தீமோத்தேயு 4:12, 15-ல் சொல்லியிருப்பதைச் செய்வதற்கு, இளம் சகோதரர்கள் யெகோவாவிடம் எதைக் கேட்டு கெஞ்ச வேண்டும்?
15 நீங்கள் ஓர் இளம் சகோதரரா? அப்படியென்றால், உதவி ஊழியர்களாக சேவை செய்வதற்கு உங்களைப் போன்று இளமைத் துடிப்போடு இருக்கிற சகோதரர்கள் எங்களுக்குத் தேவை. நிறைய சபைகளில், உதவி ஊழியர்களைவிட மூப்பர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இன்னும் நிறைய பொறுப்புகளை எடுத்து செய்ய வேண்டும் என்ற ஆசையை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம், இல்லையா? சில சகோதரர்கள், “ஒரு நல்ல பிரஸ்தாபியா இருந்தாலே போதும்” என்று சொல்கிறார்கள். நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா? அப்படியென்றால், உதவி ஊழியராக ஆவதற்குத் தேவையான ஆர்வத்தைத் தரும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள். அவருடைய சேவையில் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதற்குத் தேவையான வல்லமையைத் தரும்படியும் அவரிடம் கேளுங்கள். (பிர. 12:1) உங்கள் சேவை எங்களுக்குத் தேவை!—1 தீமோத்தேயு 4:12, 15-ஐ வாசியுங்கள்.
16. நாம் யெகோவாவிடம் எதைக் கேட்க வேண்டும், ஏன்?
16 தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் என்னவாக ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் உங்களை ஆக்க யெகோவாவால் முடியும். அதனால், அவருடைய வேலையைச் செய்வதற்கான ஆர்வத்தை தரும்படி அவரிடம் கேளுங்கள். பிறகு, அதைச் செய்வதற்குத் தேவையான வல்லமையை தரும்படியும் அவரிடம் கேளுங்கள். நீங்கள் இளைஞராக இருந்தாலும் சரி வயதானவராக இருந்தாலும் சரி, யெகோவாவை மகிமைப்படுத்துவதற்காக உங்களுடைய நேரம், சக்தி, வளங்கள் ஆகியவற்றை அர்ப்பணியுங்கள். (பிர. 9:10) யெகோவாவுக்குச் சேவை செய்வதற்குக் கிடைக்கிற பொன்னான வாய்ப்பை, பயத்தாலோ தாழ்வு மனப்பான்மையாலோ இழந்துவிடாதீர்கள். அன்பே உருவான நம் தந்தைக்கு மகிமை சேர்ப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்!
பாட்டு 61 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்
a யெகோவாவுக்கு நீங்கள் அவ்வளவாக எதுவும் செய்வதில்லை என்று நினைக்கிறீர்களா? ‘யெகோவாவுக்கு நான் உண்மையிலயே பிரயோஜனமா இருக்கிறேனா’ என்று யோசிக்கிறீர்களா? அல்லது, யெகோவாவின் சேவையை இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறீர்களா? தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் என்னவாக ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆவதற்குத் தேவையான ஆர்வத்தையும் வல்லமையையும் யெகோவா உங்களுக்குத் தருவார். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
b முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தாலும், இதில் இருக்கிற ஆலோசனைகள் நமக்கும் பொருந்துகின்றன.