படிப்புக் கட்டுரை 46
விசுவாசம் என்ற பெரிய கேடயம்—அதை நீங்கள் பராமரிக்கிறீர்களா?
“விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.”—எபே. 6:16.
பாட்டு 54 நமக்குத் தேவை மெய் விசுவாசம்
இந்தக் கட்டுரையில்...a
1-2. (அ) எபேசியர் 6:16-ன்படி, ‘விசுவாசம் [என்ற] பெரிய கேடயம்’ நமக்கு ஏன் தேவை? (ஆ) எதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?
‘விசுவாசம் [என்ற] பெரிய கேடயம்’ உங்களிடம் இருக்கிறதா? (எபேசியர் 6:16-ஐ வாசியுங்கள்.) நிச்சயம் இருக்கும்! ஒரு பெரிய கேடயம் எப்படி உடலின் பெரும்பாலான பாகத்தைப் பாதுகாக்கிறதோ, அதேபோல் உங்களுடைய விசுவாசமும் உங்களைப் பாதுகாக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற ஒழுக்கங்கெட்ட செயல்களிலிருந்தும், வன்முறையிலிருந்தும், கடவுளுடைய நெறிமுறைகளுக்கு விரோதமாக இருக்கிற எல்லா கெட்ட விஷயங்களிலிருந்தும் அது உங்களைப் பாதுகாக்கிறது.
2 இருந்தாலும், நாம் “கடைசி நாட்களில்” வாழ்வதால் விசுவாசப் பரீட்சைகள் நமக்கு வந்துகொண்டேதான் இருக்கும். (2 தீ. 3:1) அப்படியென்றால், விசுவாசம் என்ற கேடயம் நல்ல நிலையில் இருக்கிறதா என்று எப்படிப் பரிசோதித்துப் பார்ப்பது? அந்தக் கேடயத்தை எப்படிக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பது? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
உங்கள் கேடயத்தைக் கவனமாகப் பரிசோதித்துப் பாருங்கள்
3. கேடயங்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள படைவீரர்கள் என்ன செய்தார்கள், ஏன்?
3 பழங்காலத்தில், பெரும்பாலும் படைவீரர்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களை வைத்திருந்தார்கள். தோலைப் பாதுகாக்கவும், கேடயங்களில் இருந்த உலோக பாகங்கள் துருப்பிடிக்காமல் இருக்கவும், கேடயங்களுக்கு எண்ணெய் போட்டார்கள். அவற்றில் ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனடியாக அதைச் சரிசெய்வார்கள்! அப்போதுதான், அடுத்த போருக்கு அவர்களால் தயாராக முடியும். இந்த விஷயம் நம்முடைய விசுவாசத்துக்கு எப்படிப் பொருந்துகிறது?
4. விசுவாசம் என்ற கேடயத்தை ஏன் பரிசோதித்துப் பார்க்க வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்?
4 அந்தக் காலத்திலிருந்த படைவீரர்களைப் போலவே, நீங்களும் விசுவாசம் என்ற உங்கள் கேடயத்தைத் தவறாமல் பரிசோதித்துப் பார்த்து, அதை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போர் செய்ய எப்போதுமே நம்மால் தயாராக இருக்க முடியும். (எபே. 6:10-12) உங்களுக்குப் பதிலாக வேறு யாரும் விசுவாசம் என்ற கேடயத்தைப் பராமரிக்க முடியாது. அப்படியென்றால், சோதனைகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலில், கடவுளுடைய உதவிக்காக ஜெபம் செய்ய வேண்டும். அடுத்ததாக, கடவுள் எதிர்பார்க்கும் விதத்தில் உங்களுடைய விசுவாசம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள பைபிளைப் படிக்க வேண்டும். (எபி. 4:12) “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 3:5, 6) இதை மனதில் வைத்து, சமீபத்தில் உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைப் பற்றியும், அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள். ஒருவேளை பண நெருக்கடியில் நீங்கள் தவித்திருக்கலாம். அப்போது, எபிரெயர் 13:5-ல் இருக்கிற, “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்ற வாக்குறுதி உங்கள் ஞாபகத்துக்கு வந்ததா? யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை அந்த வாக்குறுதி உங்களுக்குக் கொடுத்ததா? அப்படியென்றால், விசுவாசம் என்ற கேடயத்தை நல்ல நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
5. உங்கள் விசுவாசத்தைப் பரிசோதித்துப் பார்த்த பிறகு உங்களுக்கு என்ன தெரியவரலாம்?
5 உங்கள் விசுவாசத்தைக் கவனமாகப் பரிசோதித்துப் பார்த்த பிறகு, நீங்கள் ஒருவேளை அதிர்ச்சியடையலாம். உங்கள் கவனத்துக்கு வராத சில பலவீனங்கள் உங்களிடம் இருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். உதாரணத்துக்கு, வீணான கவலைகள், பொய்கள், மனச்சோர்வு ஆகியவற்றால் உங்கள் விசுவாசம் என்ற கேடயம் பழுதடைந்திருக்கலாம். உங்கள் கேடயம் இன்னும் மோசமாக பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?
வீணான கவலைகள், பொய்கள் மற்றும் மனச்சோர்விலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
6. எந்த விதமான கவலைகள் நல்லது?
6 சில விதமான கவலைகள் நல்லதுதான்! உதாரணத்துக்கு, யெகோவாவையும் இயேசுவையும் வேதனைப்படுத்திவிடுவோமோ என்று நினைத்து நாம் கவலைப்படுகிறோம். (1 கொ. 7:32) ஒருவேளை மோசமான தவறு செய்திருந்தால், கடவுளுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்தில் ஏற்பட்ட விரிசலை எப்படிச் சரி செய்வது என்று நினைத்து கவலைப்படுகிறோம். (சங். 38:18) அதுமட்டுமல்ல, கணவனுக்கு அல்லது மனைவிக்குப் பிரியமாக நடந்துகொள்வது எப்படி... நம் குடும்பத்தாரையும் சகோதர சகோதரிகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்வது எப்படி... என்று நினைத்தும் நாம் கவலைப்படுகிறோம்.—1 கொ. 7:33; 2 கொ. 11:28.
7. நீதிமொழிகள் 29:25-ன்படி, நாம் ஏன் மற்றவர்களை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை?
7 ஆனால், வீணான கவலைகள் நம்முடைய விசுவாசத்தை அரித்துவிடும். உதாரணத்துக்கு, உண்ணவும் உடுக்கவும் என்ன செய்வோமோ என்று நினைத்து நாம் சதா கவலைப்படலாம். (மத். 6:31, 32) அதனால், பணம் பொருளைச் சேர்ப்பதில் நம்முடைய கவனம் திசைதிரும்பிவிடலாம். ஒருபடி மேலே போய், பண ஆசை என்ற நச்சு வேர் நமக்குள் முளைக்கும்படி நாம் விட்டுவிடலாம். அப்படி மட்டும் நடந்துவிட்டால், யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற விசுவாசம் குறைந்துவிடும்; அவரோடு இருக்கிற பந்தத்தில் விரிசல் விழுந்துவிடும். (மாற். 4:19; 1 தீ. 6:10) இன்னொரு விதமான கவலையும் நமக்கு வரலாம். அதாவது, ‘என்னை பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க?’ என்று நினைத்து அளவுக்கு அதிகமாகக் கவலைப்படலாம். அப்படிக் கவலைப்பட்டால், யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவேனோ என்று பயப்படுவதற்குப் பதிலாக மற்றவர்கள் நம்மைக் கேலி செய்வார்களோ துன்புறுத்துவார்களோ என்று பயப்பட ஆரம்பித்துவிடுவோம். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இந்தப் பயத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான விசுவாசத்தையும் தைரியத்தையும் தரும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும்.—நீதிமொழிகள் 29:25-ஐ வாசியுங்கள்; லூக். 17:5.
8. பொய்கள் நம்மைத் தாக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
8 ‘பொய்க்குத் தகப்பனாகிய’ சாத்தான், தன்னுடைய கைக்குள் இருக்கிறவர்களைப் பயன்படுத்தி, யெகோவாவைப் பற்றியும் நம் சகோதர சகோதரிகளைப் பற்றியும் பொய்களைப் பரப்புகிறான். (யோவா. 8:44) உதாரணத்துக்கு, விசுவாசதுரோகிகள் தங்களுடைய வெப்சைட்டுகள் வழியாகவும், டிவி... ரேடியோ... செய்தித்தாள்கள்... போன்றவை வழியாகவும் யெகோவாவின் அமைப்பைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பரப்புகிறார்கள். இவையெல்லாம் சாத்தான் எறிகிற ‘நெருப்புக் கணைகளில்’ ஒன்று! (எபே. 6:16) இப்படிப்பட்ட பொய்களைப் பற்றி யாராவது நம்மிடம் பேச ஆரம்பித்தால் என்ன செய்ய வேண்டும்? அதை நாம் கேட்கக் கூடாது! ஏனென்றால், யெகோவாமேல் நமக்கு விசுவாசம் இருக்கிறது; சகோதர சகோதரிகள்மேல் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லப்போனால், விசுவாசதுரோகிகளிடம் நாம் பேசவே மாட்டோம். எந்தக் காரணத்துக்காகவும், எதைப் பற்றியும், நாம் அவர்களிடம் பேச மாட்டோம். அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தோடுகூட அவர்களிடம் பேச மாட்டோம்.
9. மனச்சோர்வால் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படலாம்?
9 மனச்சோர்வும் நம் விசுவாசத்தை அரித்துவிட வாய்ப்பு இருக்கிறது. பிரச்சினைகள் வரும்போது சிலசமயங்களில் நாம் சோர்ந்துவிடலாம். அந்தப் பிரச்சினைகளை நாம் கண்டும்காணாமல் விட்டுவிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், எப்போது பார்த்தாலும் அதை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால், யெகோவா தந்த பொன்னான வாக்குறுதிகளை நாம் மறந்துவிடலாம். (வெளி. 21:3, 4) அதுமட்டுமல்ல, மனச்சோர்வு நம் பலத்தையெல்லாம் உறிஞ்சிவிடும்; யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையைத் தடுத்துவிடும். (நீதி. 24:10) இப்படியொரு நிலைமை நமக்கு வரவே கூடாது!
10. ஒரு சகோதரி எழுதிய கடிதத்திலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?
10 அமெரிக்காவில் இருக்கிற ஒரு சகோதரி, ரொம்பவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற தன்னுடைய கணவரைக் கவனித்துக்கொள்வதோடு, தன்னுடைய விசுவாசத்தையும் விட்டுவிடாமல் பார்த்துக்கொள்கிறார். தலைமை அலுவலகத்துக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்: “நாங்கள் ரொம்பவே கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறோம். சிலசமயங்களில், மனச்சோர்வு எங்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ஆனாலும், எங்கள் நம்பிக்கை பலமாக இருக்கிறது. எங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தவும், எங்களுக்குத் தெம்பளிக்கவும் யெகோவா தருகிற எல்லாவற்றுக்காகவும் நான் ரொம்ப நன்றி சொல்கிறேன். இதுபோன்ற அறிவுரைகளும் உற்சாகமும் எங்களுக்கு ரொம்பத் தேவைப்படுகின்றன. தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யவும், எங்களைப் பலவீனப்படுத்துவதற்காக சாத்தான் கொண்டுவருகிற சோதனைகளைச் சமாளிக்கவும் இவை எங்களுக்கு உதவுகின்றன.” இந்தச் சகோதரி எழுதியதிலிருந்து சோர்வைச் சமாளிக்க உதவுகிற ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். என்ன பாடம்? உங்களுடைய பிரச்சினைகளை சாத்தானிடமிருந்து வருகிற சோதனைகளாகப் பாருங்கள்! யெகோவா உங்களுக்கு ஆறுதல் தருவார் என்று நம்புங்கள்!! விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்காக யெகோவா தருகிற எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருங்கள்!!!
11. நம் விசுவாசம் என்ற கேடயம் நல்ல நிலையில் இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்க என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
11 உங்கள் விசுவாசம் என்ற கேடயத்தில் எங்காவது பழுதுபார்க்க வேண்டியிருக்கிறதா? இந்தக் கேள்விகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: கடந்த சில மாதங்களில், வீணான கவலைகளை உங்களால் தவிர்க்க முடிந்திருக்கிறதா? விசுவாச துரோகிகள் சொல்கிற பொய்களைக் கேட்க வேண்டும்... அவர்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்க வேண்டும்... என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடிந்திருக்கிறதா? மனச்சோர்வைச் சமாளிக்க முடிந்திருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று நீங்கள் பதில் சொன்னால், உங்கள் விசுவாசம் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். ஆனாலும், ஓர் எச்சரிக்கை! நம் விசுவாசம் என்ற கேடயத்தைச் சேதப்படுத்த சாத்தான் வேறுசில அம்புகளையும் வைத்திருக்கிறான். அவற்றில் ஒன்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
பொருளாசையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
12. பொருளாசையால் என்ன ஆகலாம்?
12 பொருளாசை நம் கண்களை மறைத்துவிடும், விசுவாசம் என்ற கேடயத்தை அரித்துவிடும். “படைவீரனாகச் சேவை செய்கிற எந்தத் மனிதனும் மற்ற தொழில்களில் ஈடுபட மாட்டான்; தன்னைப் படைவீரனாகச் சேர்த்துக்கொண்டவரின் பிரியத்தைச் சம்பாதிக்கவே முயற்சி செய்வான்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 தீ. 2:4) சொல்லப்போனால், ரோமப் படைவீரர்கள், வேறு எந்த தொழிலையும் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒருவேளை, ஒரு படைவீரன் வேறு ஏதாவது தொழிலைச் செய்தால் என்ன ஆகலாம்?
13. படைவீரர்கள் ஏன் மற்ற வேலைகளில் மூழ்கிவிடக் கூடாது?
13 இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: ஒருநாள் காலையில், படைவீரர்கள் எல்லாரும் வாள் பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு படைவீரர் மட்டும் சந்தையில் உணவுப் பொருள்களை விற்பதற்காகப் போய்விடுகிறார். இப்போது மாலை மயங்கும் நேரம்! படைவீரர்கள் எல்லாரும் தங்கள் கவசங்களைப் பரிசோதித்துப்பார்க்கிறார்கள்; வாள்களைக் கூர்மையாக்குகிறார்கள். ஆனால் சந்தைக்குப் போன படைவீரரோ, அடுத்த நாள் விற்பனைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மூழ்கிவிடுகிறார். அடுத்த நாள் காலையில், திடீரென்று எதிரிப் படை தாக்குகிறது. இப்போது எந்தப் படைவீரர் போருக்குத் தயாராக இருப்பார்? படைத் தளபதியின் மனதை யார் சந்தோஷப்படுத்துவார்? ஒருவேளை நீங்கள் அந்தப் போர்க்களத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தப் படைவீரர் பக்கத்தில் நிற்க விரும்புவீர்கள்? போருக்குத் தயாராக இருந்த படைவீரர்களுக்குப் பக்கத்திலா அல்லது சந்தையில் உணவுப்பொருள்களை விற்பதற்குப் போன படைவீரர் பக்கத்திலா?
14. கிறிஸ்துவின் படைவீரர்களாகிய நாம் எதைப் பொக்கிஷமாக நினைக்கிறோம்?
14 நாம் அந்த நல்ல படைவீரர்களைப் போன்றவர்கள்! நம்முடைய தளபதிகளான யெகோவாவையும் கிறிஸ்துவையும் சந்தோஷப்படுத்தவே நாம் ஆசைப்படுகிறோம். இதுதான் நம்முடைய மிக முக்கியமான குறிக்கோள்! சாத்தானுடைய உலகம் தருகிற எதையும்விட இதைத்தான் நாம் பொக்கிஷமாக நினைக்கிறோம். அதனால், யெகோவாவுக்குச் சேவை செய்யவும், விசுவாசம் என்ற கேடயத்தையும் கடவுள் தருகிற கவசத்தின் மற்ற பாகங்களையும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ளவும், நம்முடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறோம்.
15. என்ன எச்சரிக்கையை பவுல் கொடுக்கிறார், ஏன்?
15 நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அப்போஸ்தலன் பவுல் எச்சரித்ததுபோல், ‘பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருந்தால்,’ நாம் ‘விசுவாசத்தைவிட்டு விலகிப்போய்’ விடுவோம். (1 தீ. 6:9, 10) “விலகி” என்ற வார்த்தை, தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிப்பதில் நம் கவனம் திசைதிரும்பிவிடலாம் என்ற கருத்தைத் தருகிறது. கவனம் திசைதிரும்பிவிட்டால், ‘தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு’ நாம் அடிபணிந்துவிடுவோம். இப்படிப்பட்ட ஆசைகள் நம் மனதுக்குள் வந்தால், அவை சாத்தான் எறிகிற அம்புகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
16. மாற்கு 10:17-22 வசனங்கள், என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள நம்மைத் தூண்ட வேண்டும்?
16 நிறைய பொருள்களை வாங்குமளவுக்கு நம்மிடம் வசதி இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேவைக்காக வாங்காமல் ஆசைக்காக வாங்குவது தவறா? அப்படிச் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வீர்கள்: பொருள்கள் வாங்குவதற்கு நம்மிடம் வசதி இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் நமக்கு நேரமும் சக்தியும் இருக்கிறதா? பொருள்களை அளவுக்கு அதிகமாக நேசிக்க ஆரம்பித்துவிடுவோமா? பொருள்கள்மீது இருக்கும் ஆசை, இயேசுவின் உவமையில் வருகிற அந்த இளம் மனிதனைப் போல் நம்மை ஆக்கிவிடுமா? அதாவது, கடவுளுக்கு அதிகமாக சேவை செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை ஒதுக்கித்தள்ளிய அந்த மனிதனைப் போல் நம்மை ஆக்கிவிடுமா? (மாற்கு 10:17-22-ஐ வாசியுங்கள்.) வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டு, பொன்னான நேரத்தையும் சக்தியையும் கடவுளுடைய சேவைக்காக செலவு செய்வது எவ்வளவு ஞானமானது!
விசுவாசம் என்ற கேடயத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்!
17. நாம் எதை மறந்துவிடக் கூடாது?
17 நாம் ஒவ்வொரு நாளும் போர் செய்ய வேண்டியிருப்பதால், எப்போதும் தயாராக இருக்க வேண்டும். (வெளி. 12:17) விசுவாசம் என்ற கேடயத்தை நமக்காக நம் சகோதர சகோதரிகள் சுமக்க முடியாது. நாம்தான் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
18. பழங்காலத்திலிருந்த படைவீரர்கள் தங்கள் கேடயங்களை ஏன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள்?
18 பழங்காலத்தில், போர்க்களத்திலிருந்து வெற்றியோடு திரும்பிய படைவீரனுக்குப் புகழ் மாலைகள் குவிந்தன. ஆனால், அதே படைவீரன் கேடயம் இல்லாமல் வெறுங்கையோடு வீடு திரும்பினால் அவனுக்கு அவமானம்தான் மிஞ்சும். ரோம சரித்திராசிரியர் டாஸிட்டஸ் இப்படி எழுதினார்: “ஒரு படைவீரன் கேடயம் இல்லாமல் திரும்பினால், அது அவனுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.” படைவீரர்கள் தங்களுடைய கேடயங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
19. விசுவாசம் என்ற கேடயத்தை நாம் எப்படிக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளலாம்?
19 விசுவாசம் என்ற கேடயத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதற்கு, நாம் தவறாமல் கூட்டங்களுக்குப் போக வேண்டும்; யெகோவாவுடைய பெயரையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி தவறாமல் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். (எபி. 10:23-25) அதோடு, தினமும் பைபிளைப் படிக்க வேண்டும். படித்ததைப் பின்பற்ற உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். (2 தீ. 3:16, 17) இதையெல்லாம் செய்தால், சாத்தானுடைய எந்த ஆயுதமும் நமக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தாது. (ஏசா. 54:17) விசுவாசம் என்ற பெரிய கேடயம் நம்மைக் காப்பாற்றும். நாம் தைரியமாக இருப்போம். சகோதர சகோதரிகளோடு தோளோடு தோள் சேர்ந்து உழைப்போம். இந்த உலகமெனும் போர்க்களத்தில் தினமும் ஜெயிப்பது மட்டுமல்ல, சாத்தானையும் அவனுடைய கூட்டாளிகளையும் இயேசு ஜெயிக்கும்போது, அவருடைய பக்கத்தில் இருக்கிற பொன்னான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும்!—வெளி. 17:14; 20:10.
பாட்டு 81 ‘அதிகரியும் எம் விசுவாசமே!’
a எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள படைவீரர்களுக்குக் கேடயம் அவசியம்! அந்தக் கேடயம் மாதிரிதான் நம்முடைய விசுவாசமும்! கேடயத்தைப் பராமரிப்பது எப்படி அவசியமோ, அதேபோல் நம்முடைய விசுவாசத்தைப் பராமரிப்பதும் அவசியம். விசுவாசம் என்ற பெரிய கேடயத்தை நன்றாகப் பராமரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
b படங்களின் விளக்கம்: யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிப் பொய்களைப் பரப்புகிற விசுவாச துரோகிகளைப் பற்றிய அறிக்கை டிவியில் வருவதைப் பார்த்ததும், யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற ஒரு குடும்பத்தார் டிவியை அணைத்துவிடுகிறார்கள்.
c படங்களின் விளக்கம்: பிற்பாடு, குடும்ப வழிபாட்டின்போது அந்தக் குடும்பத் தலைவர் பைபிள் வசனங்களைப் பயன்படுத்தி குடும்பத்தாரின் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார்.