கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யார்?
கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யார்? அவர் யார் என்று கண்டுபிடிக்க உதவும் தகவல்களை, கடவுள் பல பைபிள் எழுத்தாளர்களைப் பயன்படுத்தி பதிவு செய்திருக்கிறார். அந்த அரசர்...
கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுவார். “என் ராஜாவை நியமித்திருக்கிறேன் . . . தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன். பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.”—சங்கீதம் 2:6, 8.
தாவீது ராஜாவின் வம்சத்தில் வருவார். “நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார். நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார். . . . அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் முடிவே இருக்காது. அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார். . . . [ஆட்சியை] உறுதியாக நிலைநாட்டுவார்.”—ஏசாயா 9:6, 7.
பெத்லகேமில் பிறப்பார். “பெத்லகேமே, . . . ராஜா உன்னிடமிருந்து வருவார். . . . அவருடைய பெருமை பூமியெங்கும் எட்டும்.”—மீகா 5:2, 4.
மனிதர்களால் ஒதுக்கப்பட்டு கொல்லப்படுவார். “நாம் அவரை வெறுத்தோம்; நாம் அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. . . . நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார். நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.”—ஏசாயா 53:3, 5.
உயிரோடு எழுப்பப்பட்டு, மகிமையான நிலைக்கு உயர்த்தப்படுவார். ‘[அவர்] கல்லறையில் விட்டுவிடப்பட மாட்டார் என்றும், அவருடைய உடல் அழிந்துபோகாது என்றும் சொல்லியிருந்தார். தகப்பனாகிய கடவுளுடைய வலது பக்கத்துக்கு அவர் உயர்த்தப்பட்டார்.’—அப்போஸ்தலர் 2:31, 33.
இயேசு கிறிஸ்து—தகுதியானவர் அவரே!
சிறந்த அரசரை அடையாளம் காட்டும் இந்த எல்லா தகவல்களும் மனித சரித்திரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் பொருந்தும். அவர்தான் இயேசு கிறிஸ்து. அவருடைய தாய் மரியாளிடம் ஒரு தேவதூதர் என்ன சொன்னார் என்று கவனியுங்கள்: “தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார். . . . அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது.”—லூக்கா 1:31-33.
இயேசு இந்தப் பூமியில் ஓர் அரசராக ஆகவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக அவர் பரலோகத்திலிருந்து மனிதர்களை ஆட்சி செய்யப்போகிறார். அவரை ஏன் ஓர் சிறந்த அரசர் என்று சொல்கிறோம்? பூமியில் இருந்தபோது அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள்.
இயேசு மக்கள்மேல் அக்கறையாக இருந்தார். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என்று எல்லாருக்குமே பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்தார். (மத்தேயு 9:36; மாற்கு 10:16) தொழுநோயாளி ஒருவன்: “உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று இயேசுவிடம் கெஞ்சினான். அப்போது அவர் மனம் உருகி அவனைக் குணமாக்கினார்.—மாற்கு 1:40-42.
இயேசு, கடவுளை எப்படிப் பிரியப்படுத்தலாம் என்று சொல்லிக்கொடுத்தார். “நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று அவர் சொன்னார். மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதேபோல் நாம் மற்றவர்களை நடத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். அதோடு, நம்முடைய செயல்களை மட்டுமல்ல, நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி உணருகிறோம் என்றெல்லாம் கடவுள் பார்க்கிறார் என்பதைப் புரிய வைத்தார். அதனால், கடவுளைப் பிரியப்படுத்த, நாம் நம் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். (மத்தேயு 5:28; 6:24; 7:12) உண்மையான சந்தோஷத்தைப் பெற, கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொண்டு, அதன்படி செய்ய வேண்டும் என்று இயேசு வலியுறுத்தினார்.—லூக்கா 11:28.
இயேசு, உண்மையான அன்பைக் காட்டச் சொல்லிக்கொடுத்தார். இயேசு பேசின விஷயங்களும் அவர் செய்த விஷயங்களும் ரொம்ப வலிமையாக இருந்தன; கேட்பவர்களுடைய மனதைத் தொட்டன. “அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள். ஏனென்றால், . . . கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராக அவர் கற்பித்தார்.” (மத்தேயு 7:28, 29) “உங்கள் எதிரிகளிடம் . . . அன்பு காட்டுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். தன் சாவுக்குக் காரணமாக இருந்த சிலருக்காகக்கூட அவர் இப்படி ஜெபம் செய்தார்: “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை.”—மத்தேயு 5:44; லூக்கா 23:34.
கருணை உள்ளம் கொண்ட, உதவி செய்ய மனம் படைத்த இயேசுவுக்குத்தான், சிறந்த அரசராக இருப்பதற்கான எல்லா தகுதியும் இருக்கிறது. ஆனால் அவர் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிப்பார்?