படிப்புக் கட்டுரை 24
யெகோவா மன்னிப்பதில் தலைசிறந்தவர்
“யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர். உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.”—சங். 86:5.
பாட்டு 42 கடவுளுடைய ஊழியரின் ஜெபம்
இந்தக் கட்டுரையில்...a
1. பிரசங்கி 7:20-ல் சாலொமோன் ராஜா என்ன உண்மையைச் சொல்லியிருக்கிறார்?
“பாவமே செய்யாமல் நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (பிர. 7:20) இது உண்மைதான் இல்லையா? நாம் எல்லாருமே தவறுகள் செய்கிறோம். (1 யோ. 1:8) அதனால், நமக்குக் கடவுளுடைய மன்னிப்பு தேவை. சிலசமயம், நம்மைப் போன்ற மனிதர்களிடமிருந்தும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது.
2. உங்களுடைய நெருங்கிய நண்பர் உங்களை மன்னித்துவிட்டார் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
2 நீங்கள் எப்போதாவது உங்கள் நெருங்கிய நண்பருடைய மனதைக் காயப்படுத்தியிருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களிடையே எந்த மனஸ்தாபமும் இருக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டிருக்கலாம். உங்களுடைய நண்பரும் உங்களை மனதார மன்னித்திருக்கலாம். அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது? உங்கள் மனதிலிருந்து ஒரு பெரிய பாரம் குறைந்ததுபோல் இருந்திருக்கும், இல்லையா? ரொம்ப சந்தோஷமாகவும் இருந்திருக்கும், இல்லையா?
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
3 யெகோவாதான் நம்முடைய ரொம்ப ரொம்ப நெருங்கிய நண்பராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், சில சமயங்களில் அவருடைய மனதைக் காயப்படுத்தும் விதத்தில் எதையாவது சொல்லிவிடுகிறோம் அல்லது செய்துவிடுகிறோம். இருந்தாலும், யெகோவா நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்? ஒருவரை நாம் மன்னிப்பதற்கும் யெகோவா மன்னிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? யாரையெல்லாம் யெகோவா மன்னிப்பார்?
யெகோவா மன்னிக்கத் தயாராக இருக்கிறார்
4. யெகோவா மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்?
4 யெகோவா மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்று பைபிள் உறுதியாகச் சொல்கிறது. சீனாய் மலையில் யெகோவா ஒரு தேவதூதர் மூலமாகத் தன்னைப் பற்றி மோசேயிடம் இப்படிச் சொன்னார்: “யெகோவா, யெகோவா, இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர், குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர்.” (யாத். 34:6, 7) யெகோவா இரக்கமும் கருணையும் நிறைந்த கடவுள். அதனால், பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது அவர் மன்னிக்க எப்போதுமே தயாராக இருக்கிறார்.—நெ. 9:17; சங். 86:15.
5. சங்கீதம் 103:13, 14 சொல்கிறபடி, யெகோவா நம்மைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருப்பதால் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்?
5 யெகோவா நம்மைப் படைத்தவர். அதனால், நம்மைப் பற்றி அவர் முழுமையாகத் தெரிந்துவைத்திருக்கிறார். சொல்லப்போனால், பூமியில் இருக்கிற ஒவ்வொருவரைப் பற்றியும் அவர் அணு அணுவாகத் தெரிந்துவைத்திருக்கிறார். (சங். 139:15-17) நம்முடைய அம்மா அப்பாவிடமிருந்து நமக்கு வந்திருக்கும் குறைகள் பற்றியெல்லாம் அவருக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் அனுபவித்திருக்கிறோம், அதனால் நம்முடைய சுபாவம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்றும்கூட அவருக்கு நன்றாகத் தெரியும். இந்தளவுக்கு மனிதர்களைப் பற்றி அவர் தெரிந்துவைத்திருப்பதால் அவர் என்ன செய்கிறார்? நம்மிடம் ரொம்ப இரக்கமாக நடந்துகொள்கிறார்.—சங். 78:39; சங்கீதம் 103:13, 14-ஐ வாசியுங்கள்.
6. யெகோவா நம்மை மன்னிக்கத் தயாராக இருப்பதை எப்படி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்?
6 யெகோவா நம்மை மன்னிக்கத் தயாராக இருப்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். எப்படி? ஆதாம் செய்த பாவத்தினால்தான் நம் எல்லாருக்கும் பாவமும், மரணமும் வந்தது என்று யெகோவாவுக்குத் தெரியும். (ரோ. 5:12) இந்தச் சாபத்திலிருந்து நாம் நம்மையே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்றும், மற்றவர்களையும் காப்பாற்ற முடியாது என்றும் அவருக்குத் தெரியும். (சங். 49:7-9) அதனால், நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் அன்போடும் கரிசனையோடும் ஒரு ஏற்பாடு செய்தார். அது என்ன? யோவான் 3:16 சொல்கிறபடி, யெகோவா தன்னுடைய ஒரே மகனையே நமக்காக இந்தப் பூமிக்கு அனுப்பினார். (மத். 20:28; ரோ. 5:19) இயேசு நமக்காக உயிரையே கொடுத்ததால், அவர்மீது விசுவாசம் வைக்கிறவர்கள் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாவதற்கு வழிசெய்தார். (எபி. 2:9) தன்னுடைய அன்பு மகன் வேதனையில் துடிதுடித்து சாவதைப் பார்த்தபோது, யெகோவாவின் மனம் எவ்வளவு வலித்திருக்கும்! நம்மை மன்னிக்க அவருக்கு விருப்பமே இல்லையென்றால், தன்னுடைய மகன் இந்தளவுக்கு வேதனைப்பட்டு சாவதற்கு அவர் விட்டிருப்பாரா?
7. யெகோவா யாரையெல்லாம் தாராளமாக மன்னித்திருக்கிறார்? சில பைபிள் உதாரணங்களைச் சொல்லுங்கள்.
7 யெகோவா தாராளமாக மன்னித்த நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. (எபே. 4:32) யாருடைய உதாரணம் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறது? ஒருவேளை, மனாசே ராஜா உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். யெகோவா அருவருக்கிற படுமோசமான பாவங்களை அவர் செய்தார். பொய் தெய்வங்களை அவர் வணங்கினார், மற்றவர்களையும் வணங்கச் சொன்னார். தன்னுடைய குழந்தைகளையே அந்தப் பொய் தெய்வங்களுக்கு நரபலி கொடுத்தார். சொல்லப்போனால், யெகோவாவின் பரிசுத்த ஆலயத்திலேயே ஒரு பொய் தெய்வத்தின் உருவச் சிலையை வைக்குமளவுக்குத் துணிந்துவிட்டார். “யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 33:2-7) ஆனாலும், மனாசே உண்மையிலேயே மனம் திருந்தியபோது யெகோவா மனதார அவரை மன்னித்தார். அதுமட்டுமல்ல, அவரை மறுபடியும் ராஜாவாக்கினார். (2 நா. 33:12, 13) தாவீது ராஜாவின் உதாரணம்கூட உங்கள் மனதுக்கு வரலாம். அவரும் யெகோவாவுக்கு விரோதமாக படுமோசமான பாவங்களைச் செய்தார். உதாரணத்துக்கு, இன்னொருவருடைய மனைவியோடு தவறான உறவு வைத்துக்கொண்டார், ஒரு கொலையும் செய்தார். ஆனாலும், தாவீது தன்னுடைய பாவத்தை ஒத்துக்கொண்டு மனம் திருந்தியபோது, யெகோவா அவரையும் மன்னித்தார். (2 சா. 12:9, 10, 13, 14) யெகோவா மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. அதோடு, நம்மை அவர் மன்னிக்கிற விதத்துக்கும், மற்றவர்களை நாம் மன்னிக்கிற விதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. எப்படியென்று பார்க்கலாம்.
யெகோவா மன்னிக்கும் விதம் விசேஷமானது
8. யெகோவா தலைசிறந்த நீதிபதியாக இருப்பதால் மன்னிப்பதிலும் எப்படித் தலைசிறந்தவராக இருக்கிறார்?
8 யெகோவா “இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்.” (ஆதி. 18:25) ஒரு நல்ல நீதிபதி எல்லா சட்டங்களையும் நன்றாகப் புரிந்துவைத்திருப்பார். யெகோவாவின் விஷயத்தில், நீதிபதியும் அவர்தான் சட்டங்களைக் கொடுத்தவரும் அவர்தான். (ஏசா. 33:22) அதனால், அவருக்குத் தெரியாத அல்லது புரியாத சட்டங்கள் எதுவுமே கிடையாது. சரி எது, தவறு எது என்று அவருடைய அளவுக்குத் தெரிந்துவைத்திருப்பவர்கள் வேறு யாருமே கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு நல்ல நீதிபதி தீர்ப்பு கொடுப்பதற்கு முன்பு எல்லா உண்மைகளையும் நன்றாக அலசிப் பார்ப்பார். இந்த விஷயத்திலும் யெகோவாதான் தலைசிறந்த நீதிபதி. ஏனென்றால், அவருக்கு எல்லா உண்மைகளும் நன்றாகத் தெரியும்.
9. யெகோவா என்ன விஷயங்களையெல்லாம் வைத்து ஒருவரை மன்னிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்?
9 மனித நீதிபதிகள் எல்லா உண்மைகளையும் தெரிந்துவைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், யெகோவாவுக்கு எல்லா உண்மைகளும் முழுமையாகத் தெரியும். (ஆதி. 18:20, 21; சங். 90:8) மனிதர்கள் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்துத் தீர்ப்பு சொல்லலாம். ஆனால், யெகோவா ஒருவருடைய பிறவிக் குணம், வளர்ப்பு, சூழ்நிலை, மனநிலை, உணர்ச்சிகள் போன்ற எல்லா விவரங்களையும் முழுமையாகப் புரிந்துவைத்திருக்கிறார். ஒருவருடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும்கூட யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். ஒருவருடைய உள்நோக்கங்கள், அவருடைய மனதின் ஆழத்திலிருக்கிற ஆசைகள் எல்லாமே அவருக்குத் தெரியும். யெகோவாவுக்கு முன்பாக எல்லாமே வெட்டவெளிச்சமாக இருக்கிறது. (எபி. 4:13) அதனால், யெகோவா ஒருவரை மன்னிக்கும்போது எல்லா உண்மைகளையும் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பதால்தான் மன்னிக்கிறார்.
10. யெகோவாவின் முடிவுகள் எப்போதுமே நியாயமாக இருக்கும் என்று எப்படிச் சொல்லலாம்? (உபாகமம் 32:4)
10 யெகோவாவின் முடிவுகள் எப்போதுமே நியாயமாகத்தான் இருக்கும். அவர் பாரபட்சம் பார்ப்பதே இல்லை. ஒருவருடைய தோற்றத்தையோ வசதியையோ அந்தஸ்தையோ திறமைகளையோ பார்த்து அவர் மன்னிப்பது கிடையாது. (1 சா. 16:7; யாக். 2:1-4) யெகோவாவை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது, அவருக்கு லஞ்சம் கொடுக்கவும் முடியாது. (2 நா. 19:7) அவர் வெறுத்துப்போயோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ ஒரு முடிவெடுப்பது கிடையாது. (யாத். 34:7) யெகோவா நம்மைப் பற்றியும், நம்முடைய சூழ்நிலையைப் பற்றியும் முழுமையாகப் புரிந்துவைத்திருப்பதால் நிச்சயமாகவே அவர்தான் தலைசிறந்த நீதிபதி.—உபாகமம் 32:4-ஐ வாசியுங்கள்.
11. யெகோவா மன்னிக்கிற விதம் ஏன் விசேஷமானது?
11 யெகோவா மன்னிக்கிற விதம் ரொம்ப விசேஷமானது என்று எபிரெய வேதாகமத்தை எழுதியவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். அதனால், யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி எழுதும்போது சில இடங்களில் ஒரு எபிரெய வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். “பாவிகளைக் கடவுள் எப்படி மன்னிக்கிறார் என்று சொல்லும்போது மட்டும்தான் அந்த வார்த்தையை அந்த இடங்களில் அவர்கள் பயன்படுத்தினார்கள். கடவுளுடைய மன்னிப்பு ரொம்ப ரொம்ப உயர்ந்தது என்பதால் மனிதர்கள் மனிதர்களை மன்னிப்பதைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. மனம் திருந்தியவர்களை முழுமையாக மன்னிக்கிற அதிகாரம் யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. அப்படி அவர் மன்னிக்கும்போது என்ன பலன்கள் கிடைக்கின்றன?
12-13. (அ) யெகோவா மன்னிக்கும்போது ஒருவருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? (ஆ) அந்த நன்மைகள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்?
12 யெகோவா நம்மை மன்னித்துவிட்டார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும்போது நமக்கு “புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே” இருக்கும். நமக்கு மன நிம்மதியும், சுத்தமான மனசாட்சியும் எப்போதுமே இருக்கும். மனிதர்கள் அல்ல ‘யெகோவாவே’ நம்மை மன்னிக்கும்போதுதான் இந்த நன்மைகளெல்லாம் நிரந்தரமாக நமக்குக் கிடைக்கும். (அப். 3:19) ஏனென்றால், யெகோவா நம்மை மன்னிக்கும்போது மறுபடியும் நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார். நாம் ஏதோ அந்தப் பாவத்தையே செய்யாத மாதிரி நம்மை அன்பாக நடத்துகிறார்.
13 யெகோவா நம்மை மன்னித்த பிறகு மறுபடியும் நாம் செய்த பாவத்தை நினைத்துப்பார்த்து நம்மைக் குற்றப்படுத்துவதோ தண்டிப்பதோ இல்லை. (ஏசா. 43:25; எரே. 31:34) “கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு” நம் பாவங்களை அவர் தூக்கியெறிந்துவிடுகிறார்.b (சங். 103:12) யெகோவாவின் மன்னிப்பு எவ்வளவு பெரியது என்று நாம் யோசித்துப் பார்க்கையில், நம் மனதில் நன்றியுணர்வும் பயபக்தியும் நிரம்பி வழிகிறது, இல்லையா? (சங். 130:4) ஆனால், யாரையெல்லாம் யெகோவா மன்னிக்கிறார்?
யெகோவா யாரையெல்லாம் மன்னிக்கிறார்?
14. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, எதை வைத்து ஒருவரை மன்னிப்பதா வேண்டாமா என்று யெகோவா முடிவெடுக்கிறார்?
14 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ஒருவர் செய்த பாவம் பெரியதா சிறியதா என்பதை வைத்து அவரை மன்னிப்பதா வேண்டாமா என்று யெகோவா முடிவெடுப்பதில்லை. நம்முடைய படைப்பாளராக... நமக்கு சட்டம் கொடுத்தவராக... நம் நீதிபதியாக அவருக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் யோசித்துப்பார்த்துதான் அவர் முடிவை எடுக்கிறார். என்னென்ன விஷயங்களைப் பார்த்து யெகோவா ஒருவரை மன்னிக்கிறார்?
15. லூக்கா 12:47, 48 சொல்கிறபடி, யெகோவா ஒருவரை மன்னிப்பதற்கு முன்பு என்ன விஷயத்தைப் பார்க்கிறார்?
15 முதலில், தவறு செய்கிற ஒருவருக்கு தான் செய்வது தவறு என்று தெரியுமா என்று யெகோவா பார்க்கிறார். இதைப் பற்றி லூக்கா 12:47, 48-ல் இயேசு தெளிவாக சொல்லியிருக்கிறார். (வாசியுங்கள்.) ஒரு கெட்ட விஷயம் யெகோவாவை அவமதிக்கும் என்று நன்றாகத் தெரிந்திருந்தும் ஒருவர் வேண்டுமென்றே திட்டம் போட்டு அதைச் செய்கிறார் என்றால் அவர் படுமோசமான பாவத்தை செய்கிறார் என்று அர்த்தம். அவருக்கு மன்னிப்பு கிடைப்பது கஷ்டம்தான். (மாற். 3:29; யோவா. 9:41) சில சமயங்களில், ஒரு விஷயம் தவறு என்று தெரிந்திருந்தும் அதை நாம் செய்துவிடலாம். அப்போது நமக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது. ஏனென்றால், ஒருவரை மன்னிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க யெகோவா இன்னொரு விஷயத்தையும் பார்க்கிறார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
16. மனம் திருந்துவது என்றால் என்ன? யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் மனம் திருந்துவது ஏன் முக்கியம்?
16 ஒருவர் தான் செய்த பாவத்தை நினைத்து உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா என்றும் யெகோவா பார்க்கிறார். மனம் திருந்துவது என்றால் என்ன? “ஒருவர் தன்னுடைய எண்ணத்தையோ மனப்பான்மையோ நோக்கத்தையோ மாற்றிக்கொள்வதை” இது குறிக்கிறது. செய்யக்கூடாத தவறை செய்துவிட்டோமே அல்லது செய்ய வேண்டியதை செய்யாமல் போய்விட்டோமே என்று நினைத்து ரொம்ப ரொம்ப வருத்தப்படுவதையும் இது குறிக்கிறது. மனம் திருந்தியவர் தான் செய்த தவறை நினைத்து மட்டும் வருத்தப்படுவது இல்லை. அதற்குக் காரணமாக இருக்கிற விஷயத்தை நினைத்தும் வருத்தப்படுகிறார். அதாவது, யெகோவாவுடன் தனக்கு இருந்த பந்தம் பலவீனமாவதற்கு விட்டுவிட்டோமே என்று நினைத்தும் வருத்தப்படுகிறார். மனாசே ராஜாவையும் தாவீது ராஜாவையும் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்கள் படுமோசமான பாவங்களைச் செய்தார்கள். ஆனாலும், அவர்கள் உண்மையிலேயே மனம் திருந்தியதால் யெகோவா அவர்களை மன்னித்தார். (1 ரா. 14:8) அப்படியென்றால், ஒருவர் மனம் திருந்தியிருப்பது தெளிவாகத் தெரியும்போது மட்டும்தான் யெகோவா அவரை மன்னிக்கிறார். ஆனாலும், நாம் செய்த தவறை நினைத்து நாம் மனதுக்குள் வருத்தப்பட்டால் மட்டும் போதாது, அதைச் செயலிலும் காட்ட வேண்டும்.c இதுதான் யெகோவா எதிர்பார்க்கிற இன்னொரு விஷயம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
17. வழியை மாற்றிக்கொள்வது என்பதன் அர்த்தம் என்ன, செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யாமலிருக்க இது ஏன் முக்கியம்? (ஏசாயா 55:7)
17 ஒருவர் தன் வழியை மாற்றிக்கொண்டாரா என்று யெகோவா பார்க்கிறார். அப்படியென்றால், அவர் கெட்ட வழியை விட்டுவிட்டு யெகோவா சொல்கிற வழியில் நடக்க ஆரம்பிக்க வேண்டும். (ஏசாயா 55:7-ஐ வாசியுங்கள்.) தான் யோசிக்கிற விதத்தையே அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, யெகோவா யோசிப்பதுபோல் அவர் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். (ரோ. 12:2; எபே. 4:23) கெட்ட யோசனைகளையும் செயல்களையும் விட்டொழிக்க அவர் தீர்மானமாக இருக்க வேண்டும். (கொலோ. 3:7-10) யெகோவா நம்மை மன்னித்து பாவத்திலிருந்து நம்மை சுத்தமாக்குவதற்கு இயேசுவின் பலியில் நாம் விசுவாசம் வைப்பது அவசியம்தான். ஆனால், நம் வழியை மாற்றிக்கொள்ள நாம் முழு முயற்சி எடுப்பதைப் பார்க்கும்போதுதான் அவர் நம்மை சுத்தமாக்குவார்.—1 யோ. 1:7.
யெகோவா உங்களை மன்னிப்பார் என்று நம்புங்கள்
18. யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி நாம் என்ன விஷயங்களைத் தெரிந்துகொண்டோம்?
18 இதுவரை நாம் பார்த்த சில முக்கியமான குறிப்புகளை மறுபடியும் நம் ஞாபகத்துக்குக் கொண்டுவரலாம். இந்தப் பிரபஞ்சத்திலேயே யெகோவாதான் மன்னிப்பதில் தலைசிறந்தவர். ஏன் அப்படிச் சொல்லலாம்? முதலில், அவர் மன்னிக்க எப்போதுமே தயாராக இருக்கிறார். இரண்டாவதாக, அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்துவைத்திருக்கிறார். நாம் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றி அவர் முழுமையாகத் தெரிந்துவைத்திருக்கிறார். அதனால், நாம் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறோமா இல்லையா என்று அவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். மூன்றாவதாக, யெகோவா நம்மை மன்னிக்கும்போது நம் பாவத்தைத் துடைத்து அழித்துவிடுகிறார். அதனால், நமக்கு சுத்தமான மனசாட்சி கிடைக்கிறது, அவருடைய அங்கீகாரமும் கிடைக்கிறது.
19. பாவ இயல்பால் நாம் தொடர்ந்து பாவம் செய்வோம் என்றாலும் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்?
19 நம்மிடம் பாவ இயல்பு இருக்கும்வரை நாம் பாவம் செய்துகொண்டேதான் இருப்போம். ஆனாலும், வேதாகமத்தின் பேரில் உட்பார்வை என்ற ஆங்கில புத்தகத்தின் இரண்டாவது தொகுதியில் சொல்லியிருக்கிற ஒரு விஷயம் நமக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது. அதில், 771-ஆம் பக்கத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “யெகோவா இரக்கமுள்ளவர். தன்னுடைய ஊழியர்கள் பலவீனமானவர்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவருடைய ஊழியர்கள் பாவ இயல்பால் செய்கிற தவறுகளை நினைத்து நினைத்து எப்போதும் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. (சங். 103:8-14; 130:3) கடவுளுடைய வழியில் நடக்க அவர்கள் முழு முயற்சி எடுக்கும்போது அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் (பிலி. 4:4-6; 1 யோ. 3:19-22).” இந்த விஷயம் நமக்கு எவ்வளவு உற்சாகம் தருகிறது, இல்லையா?
20. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
20 இந்தக் கட்டுரையில் நாம் பார்த்தபடி, நம் பாவங்களை நினைத்து நாம் உண்மையிலேயே மனம் திருந்தும்போது யெகோவா நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும், இல்லையா? ஆனாலும், அவர் மன்னிப்பதுபோல் நாம் எப்படி மற்றவர்களை மன்னிக்கலாம்? நாம் மன்னிக்கிற விதமும் யெகோவா மன்னிக்கிற விதமும் என்னென்ன விதங்களில் ஒரே மாதிரி இருக்கிறது? என்னென்ன விதங்களில் அது வித்தியாசமாக இருக்கிறது? இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? அடுத்த கட்டுரையில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வோம்.
பாட்டு 45 என் இதயத்தின் தியானம்
a பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது அவர்களை மன்னிக்க யெகோவா தயாராக இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், ‘எனக்கெல்லாம் மன்னிப்பே கிடைக்காது’ என்று சிலசமயம் நமக்கு தோன்றலாம். நாம் உண்மையிலேயே மனம் திருந்தும்போது யெகோவா நம்மை மன்னிப்பார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
c வார்த்தையின் விளக்கம்: “மனம் திருந்துதல்” என்பது ஒருவர் தன்னுடைய பழைய வாழ்க்கையை, செய்த தவறை அல்லது செய்யத் தவறியதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி மனம் மாறுவதைக் குறிக்கிறது. உண்மையாகவே மனம் திருந்தும்போது நல்ல பலன்கள் கிடைக்கின்றன. ஒருவருடைய வாழ்க்கையே மாறுகிறது.