படிப்புக் கட்டுரை 12
படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள்
“பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.”—ரோ. 1:20.
பாட்டு 6 வானம் கடவுளுடைய மகிமையை பாடுகிறது
இந்தக் கட்டுரையில்...a
1. யெகோவாவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள யோபுவுக்கு எது உதவியது?
யோபுவிடம் நிறைய பேர் பேசியிருப்பார்கள். ஆனால் ஒருவர் பேசியதை மட்டும் அவருடைய வாழ்நாளில் மறந்திருக்கவே மாட்டார். அது யெகோவா அவரிடம் பேசியது. அவர் படைப்பில் இருக்கிற அற்புதமான விஷயங்களைப் பற்றி யோபுவிடம் சொன்னார். அவற்றையெல்லாம் காண்பித்து, ‘எனக்கு ஞானம் இருக்கிறது, என்னுடைய மக்களை என்னால் பார்த்துக்கொள்ள முடியும்’ என்று யெகோவா யோபுவின் நம்பிக்கையைப் பலப்படுத்தினார். உதாரணத்துக்கு, மிருகங்களுக்கு தேவையானதையெல்லாம் கொடுத்து, யெகோவாதான் அவற்றைக் கவனித்துக்கொள்கிறார். அப்படியென்றால், யோபுவையும் அவரால் கவனித்துக்கொள்ள முடியும் என்று ஞாபகப்படுத்தினார். (யோபு 38:39-41; 39:1, 5, 13-16) படைப்பில் இருக்கிற இந்த உதாரணங்களை நன்றாகக் கவனித்துப் பார்த்ததால் யெகோவாவுடைய குணங்களைப் பற்றி யோபு நிறைய கற்றுக்கொண்டார்.
2. சில நேரங்களில் படைப்புகளை நன்றாகக் கவனித்துப் பார்க்க முடியாமல் போவதற்குக் காரணம் என்ன?
2 யெகோவாவின் படைப்புகளை நன்றாகக் கவனித்தால் அவரைப் பற்றி நாமும் நிறைய தெரிந்துகொள்ள முடியும். ஆனால், எல்லா நேரத்திலும் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. நகரத்தில் பெரிதாக இயற்கைக் காட்சிகள் எதையுமே பார்க்க முடியாது. கிராமங்களில் இயற்கைக் காட்சிகளைப் பார்க்க முடியும், ஆனால் அவற்றைக் கவனித்துப் பார்க்கிற அளவுக்கு நேரம் இருக்காது. நன்றாக நேரமெடுத்து, முயற்சியெடுத்து படைப்புகளைக் கவனித்துப் பார்ப்பது ஏன் நல்லது என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். யெகோவாவும் இயேசுவும் படைப்புகளைப் பயன்படுத்தி எப்படிக் கற்றுக்கொடுத்தார்கள் என்றும், இயற்கையைப் பார்த்து இன்னும் நிறைய கற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்ப்போம்.
படைப்புகளை ஏன் கவனித்துப் பார்க்க வேண்டும்?
3. ஆதாம் படைப்புகளைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்பட்டார் என்பதை எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
3 யெகோவா, தான் படைத்த எல்லாவற்றையும் முதல் மனிதன் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆதாமைக் கடவுள் படைத்தபோது அவன் ஒவ்வொன்றையும் அணு அணுவாக பார்த்து ரசிப்பதற்காக எந்தக் குறையும் இல்லாத அழகான பூஞ்சோலையைக் கொடுத்தார். அவனுக்கு ஒரு வேலையையும் கொடுத்தார். அந்தப் பூஞ்சோலையைப் பராமரிக்க வேண்டும், பூமி முழுவதையும் அதேபோல் மாற்ற வேண்டும் என்றும் சொன்னார். (ஆதி. 2:8, 9, 15) விதைகள் முளைப்பதைப் பார்த்தபோது... பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்தபோது... அவன் ஆச்சரியத்தில் அசந்துபோயிருப்பான், அல்லவா? ஏதேன் தோட்டத்தைப் பராமரிப்பது ஆதாமுக்குக் கிடைத்த எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! அதுமட்டுமல்ல, எல்லா மிருகங்களுக்கும் பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆதாமிடம் யெகோவா சொல்லியிருந்தார். (ஆதி. 2:19, 20) யெகோவாவே எல்லா மிருகங்களுக்கும் பெயர் வைத்திருந்திருக்கலாம். ஆனால் இந்த வேலையை அவர் ஆதாமிடம் கொடுத்தார். பெயர் வைப்பதற்கு முன்பு, கண்டிப்பாக அந்த மிருகங்களை ஆதாம் நன்றாகக் கவனித்திருப்பான். அது என்னவெல்லாம் செய்கிறது, அது பார்க்க எப்படி இருக்கிறது என்பதையும் கவனித்திருப்பான். ஆதாம் இந்த வேலையை ரொம்பவே ரசித்துச் செய்திருப்பான். அப்போது தன்னுடைய அப்பா யெகோவாவின் ஞானத்தை, கலைத்திறனை, ரசனையைப் பற்றியெல்லாம் புரிந்துகொள்ள அவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
4. (அ) நாம் படைப்புகளைக் கவனித்துப் பார்ப்பதற்கு ஒரு காரணம் என்ன? (ஆ) படைப்புகளில் உங்களுக்கு ரொம்பப் பிடித்தது எது?
4 நாம் படைப்புகளை நன்றாகக் கவனித்துப் பார்ப்பதற்கு ஒரு காரணம், நாம் அப்படிச் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். “வானத்தை அண்ணாந்து பாருங்கள்” என்று யெகோவா சொல்கிறார். “அங்கே இருக்கும் நட்சத்திரங்களைப் படைத்தது யார்?” என்று கேட்கிறார். அதற்குப் பதில் நமக்கே நன்றாகத் தெரியும். (ஏசா. 40:26) வானத்தில் மட்டுமல்ல, பூமியிலும் கடலிலும் நம்மைப் பிரமிக்க வைக்கிற எக்கச்சக்கமான விஷயங்களை யெகோவா படைத்திருக்கிறார். அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார். (சங். 104:24, 25) யெகோவா நம்மை எப்படிப் படைத்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். இயற்கை அழகைப் பார்த்து ரசிக்கிற ஆசையை நமக்குள் வைத்திருக்கிறார். விதவிதமாக அவர் படைத்திருக்கிற எல்லாவற்றையும் பார்த்து ரசிப்பதற்காக நமக்கு ஐந்து திறன்களையும் கொடுத்திருக்கிறார். நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், தொடுகிறோம், ருசிக்கிறோம், முகர்கிறோம்.
5. ரோமர் 1:20 சொல்கிறபடி, யெகோவாவுடைய படைப்புகளைக் கவனித்துப் பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை?
5 நாம் படைப்புகளைக் கவனித்துப் பார்ப்பதற்கான இன்னொரு காரணத்தை பைபிள் சொல்கிறது. அவற்றிலிருந்து யெகோவாவின் குணங்களைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள முடியும். (ரோமர் 1:20-ஐ வாசியுங்கள்.) யெகோவா ஒவ்வொன்றையும் எவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து அவருடைய ஞானத்தைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம். விதவிதமான சாப்பாட்டை நாம் ரசித்து ருசித்து சாப்பிடுகிறோம். யெகோவாவுக்கு மனிதர்கள்மேல் எவ்வளவு அன்பு இருக்கிறது! யெகோவா படைத்த விஷயங்களிலிருந்து அவருடைய குணங்களைப் பற்றி நாம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். நாம் எந்தளவுக்கு யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவரிடம் நெருங்கிப்போக வேண்டும் என்ற ஆசை வரும். மனிதர்களுக்கு முக்கியமான பாடங்களைச் சொல்லி தருவதற்காக படைப்புகளை யெகோவா எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று இப்போது நாம் பார்க்கலாம்.
படைப்புகளை வைத்து தன்னைப் பற்றி கடவுள் கற்றுக்கொடுக்கிறார்
6. இடம்பெயர்ந்து போகிற பறவைகளைக் கவனித்துப் பார்க்கும்போது நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 யெகோவாவிடம் ஒரு அட்டவணை இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி கடைசியிலிருந்து மே பாதி வரைக்கும் நாரைகள் இடம்பெயர்ந்து, வடக்குப் பக்கமாக பறந்துபோவதை இஸ்ரவேலர்கள் பார்த்திருப்பார்கள். “ஒரு சாதாரண நாரைக்குக்கூட இடம்பெயர வேண்டிய காலம் தெரியும்” என்று யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். (எரே. 8:7) இந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து போவதற்கே யெகோவா ஒரு அட்டவணையை வைத்திருக்கிறார். அதேபோல் அவருடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கும் ஒரு அட்டவணையை வைத்திருக்கிறார். இனிமேல் பறவைகள் இடம்பெயர்ந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம், இந்தப் பொல்லாத உலகத்துக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் யெகோவாவுடைய அட்டவணையில் இருக்கிறது என்று முழு நம்பிக்கையோடு இருங்கள்.—ஆப. 2:3.
7. ஒரு பறவைப் பறப்பதைப் பார்க்கும்போது நமக்கு என்ன நம்பிக்கை வருகிறது? (ஏசாயா 40:31)
7 யெகோவா அவருடைய மக்களுக்கு புதுத்தெம்பு கொடுக்கிறார். சோர்ந்துபோய் மனமுடைந்த தன்னுடைய மக்களுக்கு புதுத்தெம்பு கொடுப்பேன் என்று யெகோவா ஏசாயா மூலமாக வாக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் “கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்” என்றும் சொன்னார். (ஏசாயா 40:31-ஐ வாசியுங்கள்.) வானத்தில் ரொம்ப உயரத்தில் பறக்கிற கழுகுகளை இஸ்ரவேலர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள். மேலே போகிற வெப்பக் காற்றைப் பயன்படுத்தி, அது மேலே மேலே பறந்துகொண்டே இருக்கும். அது அடிக்கடி சிறகடிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்தப் பறவைகளுக்கே யெகோவா எவ்வளவு தெம்பு கொடுத்திருக்கிறார், பாருங்கள்! அப்படியென்றால், கண்டிப்பாக அவருடைய மக்களுக்கும் அவர் தெம்பு கொடுப்பார். வானத்தில் சிறகுகளை விரித்துக்கொண்டு ரொம்ப உயரத்தில் தெம்பாக பறக்கிற பறவைகளை இனி நீங்கள் பார்க்கும்போதெல்லாம் உங்கள் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் வெளியே வருவதற்கு யெகோவா தெம்பு கொடுப்பார் என்று நம்புங்கள்.
8. யெகோவா படைத்த விஷயங்களிலிருந்து யோபு என்ன கற்றுக்கொண்டார், நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 யெகோவாவை தாராளமாக நம்பலாம். யெகோவாமேல் யோபு வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகமாக்க யெகோவா அவருக்கு உதவி செய்தார். (யோபு 32:2; 40:6-8) யோபுவிடம் பேசியபோது கடவுள், தான் படைத்திருக்கிற நட்சத்திரங்கள், மின்னல், மேகங்களைப் பற்றியெல்லாம் சொன்னார். காட்டு எருது, குதிரை போன்ற மிருகங்களைப் பற்றியும் பேசினார். (யோபு 38:32-35; 39:9, 19, 20) இந்தப் படைப்புகள் எல்லாம் யெகோவாவுக்கு இருக்கிற சக்தியை மட்டுமல்ல, அவருக்கு எவ்வளவு அன்பும் ஞானமும் இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. இதைப் பற்றி யெகோவா அவரிடம் பேசியதுதான், இதுவரை இல்லாத அளவுக்கு யெகோவாமேல் நம்பிக்கை வைக்க யோபுவுக்கு உதவியது. (யோபு 42:1-6) அதேபோல் நாமும் படைப்புகளை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் யெகோவாவுடைய ஞானத்துக்கு எல்லையே இல்லை, அவருக்கு நம்மை விட பல மடங்கு அதிக சக்தி இருக்கிறது என்று புரிந்துகொள்வோம். நம்முடைய எல்லா கஷ்டத்திற்கும் அவரால் முடிவு கொண்டு வர முடியும். கண்டிப்பாகக் கொண்டும் வருவார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்போது, நாம் அவர்மேல் வைத்திருக்கிற நம்பிக்கை பலமாகிறது.
படைப்புகளை வைத்து இயேசு தன் அப்பாவைப் பற்றிக் கற்றுக்கொடுத்தார்
9-10. சூரியனையும் மழையையும் பார்க்கும்போது யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 இயற்கையில் இருக்கிற எல்லாவற்றைப் பற்றியும் இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். “கைதேர்ந்த கலைஞனாக” தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து இந்த முழு பிரபஞ்சத்தையும் படைக்கிற வேலையில் உதவி செய்கிற வாய்ப்பு இயேசுவுக்குக் கிடைத்தது. (நீதி. 8:30) இயேசு பூமிக்கு வந்த பிறகும் படைப்புகளைப் பயன்படுத்தி அவருடைய அப்பாவைப் பற்றி சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் கற்றுக்கொடுத்த சில பாடங்களை இப்போது நாம் பார்க்கலாம்.
10 யெகோவா எல்லாரிடமும் அன்பு காட்டுகிறார். மலைப்பிரசங்கத்தில் கடவுள் படைத்த சூரியனைப் பற்றியும் மழையைப் பற்றியும் இயேசு தன்னுடைய சீஷர்களிடம் பேசினார். இவை இரண்டையும் மக்கள் சாதாரணமாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை மட்டும் இல்லை என்றால் நம்மால் உயிர் வாழவே முடியாது. ‘என்னை வணங்காதவர்களுக்கு இதை நான் கொடுக்க மாட்டேன்’ என்று யெகோவா இவற்றை நிறுத்தி வைக்கவில்லை. மக்கள் மேலுள்ள அன்பினால் சூரியனையும் மழையையும் அவர் எல்லாருக்கும் கொடுக்கிறார். (மத். 5:43-45) நாமும் எல்லாரிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை இயேசு இதுபோன்ற படைப்புகளை வைத்து தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். சூரியன் மறைகிற அழகைப் பார்த்து ரசிக்கும்போது... சில்லென்ற மழைத் தூறலைப் பார்க்கும்போது... யெகோவா எல்லாரிடமும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுகிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாருக்கும் நல்ல செய்தியைச் சொல்லும்போது அவரைப் போலவே நாமும் அன்பு காட்டலாம்.
11. வானத்தில் இருக்கிற பறவைகளைப் பார்க்கும்போது நமக்கு என்ன உற்சாகம் கிடைக்கிறது?
11 யெகோவா நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார். மலைப்பிரசங்கத்தில் இயேசு இதையும் சொன்னார்: “வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார்.” இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் பறவைகள் அங்கே பறப்பதைப் பார்த்திருப்பார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?” என்று கேட்டார். (மத். 6:26) இப்படி, யெகோவா நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார் என்று அன்பாகச் சொல்லிக்கொடுத்தார். (மத். 6:31, 32) படைப்பிலிருந்து கற்றுக்கொண்டதால் இந்தப் பாடம் யெகோவாவுடைய ஊழியர்களுக்கு இன்றும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. ஸ்பெயினில் இருந்த ஒரு இளம் பயனியர் சகோதரி, தங்குவதற்கு ஒரு இடம் கிடைக்காமல் ரொம்ப சோர்ந்துபோய் இருந்தார். பறவைகள் விதைகளையும் பழங்களையும் சாப்பிடுவதை அவர் பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது. “யெகோவா அந்தப் பறவைகளைப் பார்த்துக்கொள்கிறார் என்றால் கண்டிப்பாக என்னையும் பார்த்துக்கொள்வார்” என்று சொன்னார். அதன்பின் சீக்கிரத்திலேயே அவருக்குத் தங்குவதற்கு ஒரு நல்ல இடமும் கிடைத்தது.
12. சிட்டுக்குருவிகளிடமிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்? (மத்தேயு 10:29-31)
12 நாம் ஒவ்வொருவருமே யெகோவாவுக்கு முக்கியமானவர்கள். அப்போஸ்தலர்களை ஊழியத்துக்கு அனுப்புவதற்கு முன்பு, எதிர்ப்பை நினைத்து பயப்படாமல் இருக்க இயேசு அவர்களுக்கு உதவினார். (மத்தேயு 10:29-31-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலில் ரொம்ப சாதாரணமாக பார்க்க முடிந்த பறவையைப் பற்றி, சிட்டுக்குருவிகளைப் பற்றி, இயேசு பேசினார். இயேசுவின் காலத்தில் சிட்டுக்குருவிகளை அவ்வளவாக யாரும் மதிக்க மாட்டார்கள். “ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை” என்று இயேசு சீஷர்களிடம் சொன்னார். அதோடு, “சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்” என்றும் சொன்னார். இப்படி, யெகோவா அவர்கள் ஒவ்வொருவரையும் ரொம்ப முக்கியமானவர்களாக நினைக்கிறார் என்று இயேசு அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அதனால் அவர்கள் துன்புறுத்தலை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. சீஷர்கள் நகரத்திலும் கிராமத்திலும் ஊழியத்துக்குப் போனபோது, சிட்டுக்குருவிகளைப் பார்த்திருப்பார்கள். அப்போது இயேசு சொன்னதுதான் அவர்கள் ஞாபகத்துக்கு வந்திருக்கும். நீங்களும் அழகான குட்டிப் பறவையைப் பார்க்கும்போதெல்லாம், யெகோவா உங்களையும் முக்கியமானவராக நினைக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், “சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.” எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் யெகோவாவின் உதவியோடு அதை நாம் தைரியமாகச் சமாளிக்கலாம்.—சங். 118:6.
படைப்பிலிருந்து கடவுளைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளுங்கள்
13. படைப்பிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
13 படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். எப்படி? முதலில் படைப்பை நன்றாகக் கவனித்துப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அடுத்து, அவற்றிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளலாம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்வது எல்லா சமயத்திலும் சுலபமாக இருக்காதுதான். கேமரூனில் இருக்கிற ஜெரால்டின் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் சிட்டியில்தான் வளர்ந்தேன், அதனால் இயற்கையை நன்றாகக் கவனித்துப் பார்ப்பதற்கு நான்தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.” அல்ஃபோன்சோ என்ற ஒரு மூப்பர் இப்படிச் சொன்னார்: “தனியாக உட்கார்ந்து யெகோவாவுடைய படைப்புகளைப் பார்க்க வேண்டும். அவற்றிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டுமென்றால், நான் ஒரு அட்டவணை போட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.”
14. யெகோவாவுடைய படைப்புகளைப் பற்றி யோசித்துப் பார்த்ததால் தாவீது என்ன தெரிந்துகொண்டார்?
14 யெகோவாவுடைய படைப்புகளைப் பற்றி தாவீது நன்றாக யோசித்துப் பார்த்திருந்தார். அவர் யெகோவாவிடம் இப்படிச் சொன்னார்: “உங்கள் கைகளால் படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது, நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது, அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ அவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.” (சங். 8:3, 4) இரவு நேரத்தில் பறந்து விரிந்த வானத்தை தாவீது பார்த்தபோது, அங்கே ஜொலித்துக் கொண்டிருக்கிற நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டு அப்படியே சும்மா இருந்துவிடவில்லை. அவற்றிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம் என்று அவர் யோசித்துப் பார்த்தார். யெகோவாவை நினைத்து பிரமித்துப்போனார். இன்னொரு சமயத்தில், அவருடைய அம்மாவின் வயிற்றில் ஒரு கருவாக உருவானதைப் பற்றிச் சொன்னார். இவற்றையெல்லாம் அவர் யோசித்துப் பார்த்தபோது, யெகோவாவுடைய ஞானத்தைப் பார்த்து அசந்துபோய்விட்டார். யெகோவாமேல் அவருக்கு நன்றியும் அதிகமானது.—சங். 139:14-17.
15. யெகோவாவுடைய என்னென்ன குணங்களை அவருடைய படைப்பில் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? சில உதாரணங்களைச் சொல்லுங்கள். (சங்கீதம் 148:7-10)
15 நாமும் தாவீதைப் போல் செய்யலாம். யெகோவாவுடைய படைப்புகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பதற்காக நாம் எங்கேயும் போக வேண்டிய அவசியமில்லை. உங்களைச் சுற்றி இருப்பதைப் பாருங்கள். அவற்றிலிருந்து யெகோவாவின் குணங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, வெளிச்சத்தைத் தருகிற சூரியனைப் பார்க்கும்போது, யெகோவாவின் சக்தியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். (எரே. 31:35) கூடு கட்டுகிற ஒரு பறவையைப் பார்க்கும்போது, யெகோவாவின் ஞானத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒரு நாய்க்குட்டி, அதன் வாலைப் பிடிப்பதற்காக சுற்றிச் சுற்றி வருவதைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது, அவர் எவ்வளவு சந்தோஷமானவர் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு அம்மா தன் குழந்தையுடன் விளையாடுவதைப் பார்க்கும்போது, யெகோவாவின் அன்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதற்கு நன்றியோடு இருங்கள். யெகோவாவின் படைப்புகள் சிறியதோ, பெரியதோ... நம் பக்கத்தில் இருக்கிறதோ, தூரத்தில் இருக்கிறதோ... அவற்றிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அந்தப் படைப்புகள் எல்லாமே அவரைப் புகழ்கிறது.—சங்கீதம் 148:7-10-ஐ வாசியுங்கள்.
16. என்ன செய்ய வேண்டும் என்று நாம் தீர்மானமாக இருக்கலாம்?
16 யெகோவாவுக்கு எல்லையே இல்லாத ஞானம் இருக்கிறது. அவர் பாசமானவர், எல்லாவற்றையும் ரொம்ப அழகாக படைத்திருக்கிறார். அவருக்கு நிறைய சக்தியும் இருக்கிறது. படைப்பை உற்றுக் கவனிக்கும்போது, இதுபோன்ற அவருடைய எக்கச்சக்கமான குணங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். படைப்பைப் பார்த்து ரசிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவற்றிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம் என்று நன்றாக நேரமெடுத்து யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது நம்முடைய படைப்பாளரிடம் உங்களால் இன்னும் நெருங்கிப் போக முடியும். (யாக். 4:8) பிள்ளைகள் யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு பெற்றோர்கள் படைப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
பாட்டு 5 கடவுளுடைய அதிசய செயல்கள்
a யெகோவாவுடைய படைப்பைப் பார்த்து நாம் வாயடைத்துப் போகிறோம். கண்ணைக் கூச வைக்கிற சூரிய வெளிச்சத்திலிருந்து கண்ணைப் பறிக்கிற அழகான பூக்கள் வரை அவருடைய படைப்புகள் எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடங்கள் யெகோவாவுடைய குணங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள உதவி செய்கின்றன. படைப்புகளைக் கவனித்துப் பார்க்க நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்? அப்படிச் செய்வது யெகோவாவிடம் நெருங்கிப் போக நமக்கு எப்படி உதவும்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.