பைபிள் தகவல்
பைபிள் காலங்களில் பயன்படுத்திய மீன் வலைகள்
இயேசுவின் சீஷர்களில் சிலர் மீனவர்கள் என்று நமக்குத் தெரியும். (மாற். 1:16-20) அவர்கள் கலிலேயா கடலில் மீன் பிடிக்க வலைகளைப் பயன்படுத்தினார்கள்.
நாரிழை நூலை அல்லது வேறு விதமான நூலைப் பயன்படுத்தி துவாரங்கள் இருப்பதுபோல் வலைகளைப் பின்னுவார்கள். எவ்வளவு பெரிய மீன்களைப் பிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சின்ன துவாரங்கள் இருக்கிற வலையையோ பெரிய துவாரங்கள் இருக்கிற வலையையோ பயன்படுத்துவார்கள். சின்ன வலைகளின் ஓரத்தைச் சுற்றிலும் கற்களோ ஈயத்தால் செய்யப்பட்ட குண்டுகளோ பொருத்தப்பட்டிருந்தன. வலை தண்ணீருக்குள் மூழ்குவதற்காக இப்படிச் செய்தார்கள். பெரிய இழுவலைகளின் அடிப்பகுதியில் கனமான பொருள்களும், மேல்பகுதியில் மிதக்கும் பொருள்களும் இணைக்கப்பட்டிருந்தன.
மீன் வலைகள் ரொம்ப விலை உயர்ந்தது. அவை, கடலுக்கு அடியில் இருக்கும் பாறைகளால் சேதமடைந்துவிடலாம், அல்லது நிறைய மீன்கள் சிக்கும்போது கிழிந்துவிடலாம். (லூக். 5:6) யாக்கோபும் யோவானும் “வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (மத். 4:21) ஒருவேளை அவர்கள் ஊசியையும் நாரிழை நூலையும் வைத்து பழுதுபார்த்திருக்கலாம். ஒவ்வொரு தடவை மீன்பிடித்துவிட்டு வந்த பிறகும் மீனவர்கள் வலைகளைப் பழுதுபார்த்திருக்கலாம். மீனவர்கள் “வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்” என்று லூக்கா எழுதினார். (லூக். 5:2) மண்ணையும் அழுக்கையும் கழுவுவதற்காக அவர்கள் அப்படிச் செய்தார்கள். பிறகு, வலைகள் நாசமடையாமல் இருக்க அதைக் காய வைப்பார்கள்.—எசே. 47:10.
வலைகளைப் பயன்டுத்தி மீன் பிடித்தவர்களிடம் இயேசு, “வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்” என்று சொன்னார்.—மாற். 1:17.