வாசகர் கேட்கும் கேள்விகள்
கலாத்தியர் 4:24-ல், எந்த இரண்டு ஒப்பந்தங்களைப் பற்றி பவுல் பேசுகிறார்?
ஆபிரகாமுக்கு சாராளோடும் ஆகாரோடும் இருந்த பந்தத்தைப் பற்றி சொன்ன பிறகு, அப்போஸ்தலன் பவுல் இப்படி சொன்னார்: “இவற்றுக்கு அடையாள அர்த்தம் இருக்கலாம்; ஏனென்றால், இந்தப் பெண்கள் இரண்டு ஒப்பந்தங்களைக் குறிக்கிறார்கள்.” (கலா. 4:22-24) முன்பு, இந்த இரண்டு ஒப்பந்தங்களும் திருச்சட்ட ஒப்பந்தத்தையும் புதிய ஒப்பந்தத்தையும் குறிப்பதாக நினைத்தோம். ஆனால், கூடுதலாக ஆராய்ச்சி செய்து பார்த்தபோது, இதில் மாற்றம் தேவை என்று புரிந்துகொண்டோம். இங்கே பவுல், புதிய ஒப்பந்தத்தைப் பற்றி பேசவில்லை, ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தைப் பற்றித்தான் பேசுகிறார் என்று தெரிகிறது. அதற்கு சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.a
பவுல், அடிமைப் பெண் ஆகாரை சீனாய் மலையோடு ஒப்பிட்டு பேசுகிறார். (கலா. 4:25) அப்படியென்றால், கி.மு. 1513-ல் சீனாய் மலையில் செய்யப்பட்ட திருச்சட்ட ஒப்பந்தத்தை ஆகார் குறிக்கிறாள். (யாத். 19:5, 6) எந்தவொரு குறையுள்ள மனிதனாலும் இந்த திருச்சட்டத்தை அப்படியே முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. அதனால், தாங்கள் பாவத்துக்கு அடிமையாக இருந்ததை இது யூதர்களுக்கு ஞாபகப்படுத்தியது. அதோடு, மேசியாவை அடையாளம் கண்டுபிடிக்கவும் இந்த ஒப்பந்தம் இஸ்ரவேலர்களுக்கு உதவியிருக்கும். ஏனென்றால், மேசியாவால் மட்டும்தான் இந்த திருச்சட்டத்தை முழுமையாக அப்படியே கடைப்பிடிக்க முடியும். மேசியா தன்னுடைய பரிபூரண உயிரை பலியாக கொடுத்ததால், குறையுள்ள மனிதர்களுக்கு பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை பெற வாய்ப்பு கிடைத்தது. (கலா. 3:19, 24, 25) கடவுளுடைய விருப்பத்தை இயேசு நிறைவேற்றிய பிறகு, திருச்சட்டம் இனியும் தேவைப்படவில்லை.—ரோ. 10:4.
ஆகாருக்கும் சாராளுக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். சாராள் ஒரு ‘சுதந்திரப் பெண்,’ “கடவுளுடைய வாக்குறுதியால்” பிள்ளையை பெற்றெடுத்தாள் என்று சொன்னார். (கலா. 4:23) அந்த வாக்குறுதிதான் ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தம். (கலா. 3:29; 4:28, 30) அந்த ஒப்பந்தத்தைப் பற்றி ஆதியாகமம் 22:18-ல் யெகோவா இப்படி சொன்னார்: “நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய [ஆபிரகாமுடைய] சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.”
ஏதேனில் யெகோவா கொடுத்த வாக்குறுதியை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள, ஆபிரகாமோடு அவர் செய்த ஒப்பந்தம் உதவுகிறது. (ஆதி. 3:15) இந்த ஒப்பந்தம், முன்னறிவிக்கப்பட்ட ‘சந்ததி’ ஆபிரகாமுடைய வம்சத்தில் வரும் என்று சொன்னது. இந்த ‘சந்ததி,’ முக்கியமாக இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது என்று பவுல் சொன்னார். ஆனால், ‘கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்களாக’ இருக்கிற 1,44,000 பேரும் இந்த சந்ததியின் பாகமாக இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவோடு சேர்ந்து அவருடைய அரசாங்கத்தில் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள். (கலா. 3:16, 29; வெளி. 14:1-3) அப்படியென்றால், ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி நிறைவேறும்போது, இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்ப்படிகிற எல்லாருக்கும் அளவில்லாத ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
சரி, இந்த ‘அடையான அர்த்தத்தைப்’ பற்றி குறிப்பிடுவதன் மூலமாக என்ன பாடத்தை பவுல் சொல்ல நினைத்தார்? அவருடைய காலத்தில் இருந்த யூதர்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தால், அவர்கள் ஆகாரைப் போல இருப்பார்கள். அதாவது, அடிமைத்தனத்திலேயே இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஆபிரகாமுடைய ‘சந்ததியின்’ முக்கியமான பாகமாக இருக்கிற இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் சாராளைப் போல் இருப்பார்கள். அதாவது, அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். (யோவா. 8:32-34) ஆனால், அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், திருச்சட்ட ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதற்கான நோக்கத்தையே தவற விட்டுவிடுவார்கள். ஏனென்றால், கிறிஸ்துவிடம் வழிநடத்துவதுதான் திருச்சட்ட ஒப்பந்தத்தின் நோக்கமே.
கலாத்தியர்களுக்கு பவுல் இந்தக் கடிதத்தை எழுதியபோது, அங்கிருந்த நிறைய பேர் யூதர்கள் கிடையாது. அவர்கள் இதுவரை திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததே இல்லை. இருந்தாலும் சில யூத மதவாதிகள், கிறிஸ்தவர்களாக மாறிய மற்ற தேசத்து மக்கள் திருச்சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும், விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், சபையில் இருந்தவர்கள் ஏற்கனவே இயேசுவை ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கு ‘விடுதலை’ கிடைத்திருந்தது. அப்படியென்றால், திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து, மறுபடியும் ‘அடிமைத்தனத்துக்குள்’ போவது முட்டாள்தனமாக இருக்கும் என்று பவுல் விளக்கினார்.—கலா. 5:1, 10-14.
a இது, காவற்கோபுரம் மார்ச் 15, 2006 பக். 10-12-ல் வந்த தகவலை மாற்றீடு செய்கிறது.