எனக்கு ஆறுதல் தருகிற வார்த்தைகள் பைபிளில் இருக்கிறதா?
பைபிள் தரும் பதில்
ஆம், இருக்கிறது. (ரோமர் 15:4) கஷ்டமான சூழ்நிலைமைகளோடும் உணர்ச்சிகளோடும் போராடிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஆறுதல் தருகிற நிறைய வசனங்கள் பைபிளில் இருக்கின்றன. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில்...
கஷ்டகாலம்
சங்கீதம் 23:4: “பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும், எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன். ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.”
அர்த்தம்: நீங்கள் கடவுளிடம் ஜெபம் செய்யும்போதும் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் இருக்கிற ஆலோசனையைக் கேட்டு நடக்கும்போதும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான தைரியம் உங்களுக்குக் கிடைக்கும்.
பிலிப்பியர் 4:13: “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.”
அர்த்தம்: உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்பதற்கு கடவுள் உங்களுக்குப் பலம் கொடுப்பார்.
நேசிக்கிற ஒருவரை மரணத்தில் பறிகொடுப்பது
பிரசங்கி 9:10: “நீ போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.”
அர்த்தம்: இறந்துபோனவர்கள் எங்கேயும் போய்க் கஷ்டப்படுவதில்லை. அவர்களால் நமக்குக் கெடுதல் பண்ணவும் முடியாது. அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறார்கள்.
அப்போஸ்தலர் 24:15: “[இறந்தவர்கள்] உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”
அர்த்தம்: இறந்துபோன நம்முடைய அன்பானவர்களை கடவுள் திரும்பவும் உயிரோடு கொண்டு வருவார்.
அளவுக்கு மீறிய குற்ற உணர்ச்சி
சங்கீதம் 86:5: “யெகோவாவே,a நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர். உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.”
அர்த்தம்: கடந்த காலத்தில் செய்த தவறை நினைத்து ஒருவர் உண்மையிலேயே வருத்தப்பட்டு அதை திரும்பவும் செய்யக் கூடாது என்று தீர்மானமாக இருந்தால் கடவுள் அவரை நிச்சயம் மன்னிப்பார்.
சங்கீதம் 103:12: “கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.”
அர்த்தம்: கடவுள் நம்மை மன்னிக்கும்போது நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப தூரத்தில் நம்முடைய பாவங்களை தூக்கிப் போட்டுவிடுவார். நம்மைக் குற்றப்படுத்துவதற்காகவோ அல்லது நம்மைத் தண்டிப்பதற்காகவோ திரும்பத் திரும்ப அதை சொல்லி குத்திக் காட்ட மாட்டார்.
சோகம்
சங்கீதம் 31:7: “நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.”
அர்த்தம்: நீங்கள் படுகிற கஷ்டங்கள் எல்லாம் கடவுளுக்கு நன்றாகவே தெரியும். மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் கூட நீங்கள் அனுபவிக்கிற வேதனையையும் வலியையும் கடவுள் நன்றாகவே புரிந்துகொள்கிறார்.
சங்கீதம் 34:18: “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”
அர்த்தம்: நீங்கள் சோகத்தில் துவண்டுபோகும்போது உங்களை தாங்கிப் பிடிப்பதாக கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நீங்கள் அனுபவிக்கிற வலியை தாங்குவதற்கான பலத்தையும் அவர் தருவார்.
நோய்
சங்கீதம் 41:3: “அவன் சுகமில்லாமல் படுத்துக் கிடக்கும்போது யெகோவா அவனைத் தாங்குவார்.”
அர்த்தம்: நீங்கள் தீராத வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் கடவுள் உங்களுக்கு மன சமாதானம் தருவார். அதோடு, அதை தாங்குவதற்கான சக்தியையும் சகிப்புத்தன்மையையும் தருவார். நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்கும் உதவி செய்வார்.
ஏசாயா 33:24: “’எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”
அர்த்தம்: எல்லாரும் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கிற ஒரு காலம் வரும் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
டென்ஷன், கவலை
சங்கீதம் 94:19: “கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.”
அர்த்தம்: நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது கடவுளிடம் உதவி கேட்டால் அவர் நமக்கு மன அமைதி தருவார்.
1 பேதுரு 5:7: “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”
அர்த்தம்: நாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுளுக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதனால் நம்முடைய கவலைகளை எல்லாம் மனம் திறந்து அவரிடம் கொட்டச் சொல்லி நமக்கு அழைப்பு கொடுக்கிறார்.
போர்
சங்கீதம் 46:9: “அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.”
அர்த்தம்: கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் எல்லா போர்களுக்கும் முடிவுகட்டும்.
சங்கீதம் 37:11, 29: “தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள். . . . நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”
அர்த்தம்: நல்ல ஆட்கள் பூமியில் சமாதானமாக என்றென்றும் வாழ்வார்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய பயம்
எரேமியா 29:11: “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.’”
அர்த்தம்: நமக்கு ஒளிமயமான எதிர்காலத்தைத் தருவதாக கடவுள் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
வெளிப்படுத்துதல் 21:4: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”
அர்த்தம்: நம்மை சுற்றி நடந்துகொண்டிருக்கிற எல்லா கெட்ட காரியங்களையும் அடியோடு ஒழித்துக்கட்டப் போவதாக கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.