விழிப்புடன் இருங்கள்!
அர்மகெதோன் வெடிக்கும் என்று அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை—பைபிள் என்ன சொல்கிறது?
அக்டோபர் 10, 2022 திங்கள் அன்று, உக்ரேனின் பல்வேறு நகரங்கள்மீது ரஷ்யா ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இரண்டு நாட்களுக்கு முன்பு கிரிமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கிற ஒரு முக்கியமான பாலம் தகர்க்கப்பட்டது. அதன் எதிரொலிதான் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்! சீக்கிரத்தில் அர்மகெதோன் வெடிக்கலாம் என்று சில அரசியல் தலைவர்கள் எச்சரித்த சில நாட்களிலேயே இந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
”[அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப்.] கென்னடி மற்றும் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, அர்மகெதோன் ஆரம்பிப்பதற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது ஏற்பட்டிருக்கிறது. . . . போரில் சர்வசாதாரணமாக அணு ஆயுதத்தை பயன்படுத்திவிட்டு அது அர்மகெதோனில் முடியாது என்று நினைப்பது சரியாக இருக்காது.“—அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அக்டோபர் 6, 2022.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவதன் பின்விளைவுகளை பற்றி கேட்டபோது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சொன்ன பதில்: ”ரொம்ப சீக்கிரத்தில் அர்மகெதோனை சந்திக்க போகிறோம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அது இந்த பூமிக்கே பேராபத்து!“—பிபிசி நியூஸ், அக்டோபர் 8, 2022.
அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது அர்மகெதோனில் போய் முடியுமா? இதை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
அணு ஆயுதங்கள் அர்மகெதோன் போரை துவக்கிவிடுமா?
இல்லை! “அர்மகெதோன்” என்ற வார்த்தை பைபிளில் ஒரேவொரு முறைதான் வருகிறது. அது வெளிப்படுத்துதல் 16:16-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வார்த்தை, நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை குறிப்பதில்லை. கடவுளுக்கும் ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்களுக்கும்’ நடுவில் நடக்கும் ஒரு போரைத்தான் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14) அந்தப் போரின் மூலம் கடவுள் மனித ஆட்சிக்கு முடிவுகட்டுவார்.—தானியேல் 2:44.
அர்மகெதோன் போரால் பூமிக்கு என்ன ஆகும்? இதை பற்றி தெரிந்துகொள்ள “அர்மகெதோன் போர் என்றால் என்ன?“ என்ற கட்டுரையை பாருங்கள்.
பூமியும் அதில் இருக்கிற உயிரினங்களும் அணு ஆயுதப் போரால் அழிக்கப்படுமா?
நிச்சயமாக இல்லை! ஒருவேளை, எதிர்காலத்தில் மனிதர்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம். ஆனால், பூமி அழிந்துபோவதற்கு கடவுள் விடவே மாட்டார். ஏனென்றால், பைபிள் இப்படி சொல்கிறது:
“பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.”—பிரசங்கி 1:4.
“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.
சரித்திரம் காணாத மிகப் பெரிய சம்பவங்கள் சீக்கிரத்தில் நடக்கும் என்று பைபிள் தீர்க்கதரிசனங்களும் இப்போது நடக்கிற சம்பவங்களும் காட்டுகின்றன. (மத்தேயு 24:3-7; 2 தீமோத்தேயு 3:1-5) எதிர்காலத்தை பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள இலவச பைபிள் படிப்பு திட்டத்தின் மூலம் பைபிளை ஆழமாக படியுங்கள்.