பைபிள் வசனங்களின் விளக்கம்
யோவான் 1:1—“ஆதியிலே வார்த்தை இருந்தது”
“ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார். அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார். அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.”—யோவான் 1:1, புதிய உலக மொழிபெயர்ப்பு.
“ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாக இருந்தது.”—யோவான் 1:1, தமிழ் O.V. பைபிள் (BSI).
யோவான் 1:1-ன் அர்த்தம்
மனிதராக பூமிக்கு வருவதற்கு முன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த வசனம் காட்டுகிறது. (யோவான் 1:14-17) வசனம் 14-ல் “அந்த வார்த்தை” என்ற சொல், (அதாவது “அந்த லோகோஸ்,” கிரேக்கில் ஹோ லோகோஸ்) ஒரு சிறப்புப் பெயராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சிறப்புப் பெயர், கடவுளுடைய கட்டளைகளையும் ஆலோசனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதில் இயேசுவுக்கு இருந்த பங்கைக் காட்டுகிறது. பூமியில் ஊழியம் செய்த காலத்திலும் சரி, பரலோகத்துக்குப் போன பிறகும் சரி, அவர் கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.—யோவான் 7:16; வெளிப்படுத்துதல் 1:1.
“ஆதியிலே” என்ற சொல் படைப்பு வேலையைக் கடவுள் ஆரம்பித்து, ‘வார்த்தை’ என்பவரை உருவாக்கிய சமயத்தைக் குறிக்கிறது. அதற்குப் பின் மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்கு அந்த ‘வார்த்தையை’ கடவுள் பயன்படுத்தினார். (யோவான் 1:2, 3) இயேசுதான் ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு’ என்றும் “எல்லாம் . . . அவர் மூலம்தான் படைக்கப்பட்டன” என்றும் பைபிள் சொல்கிறது.—கொலோசெயர் 1:15, 16.
“அந்த வார்த்தை தேவனாக இருந்தது” என்ற சொற்றொடர், பூமிக்கு வருவதற்கு முன் இயேசுவுக்கு இருந்த தெய்வீகத்தன்மையைக் குறிக்கிறது. அவரைப் பற்றி அப்படிச் சொல்வதற்கு நல்ல காரணம் இருந்தது. ஏனென்றால், அவர் கடவுள் சார்பாகப் பேசுகிறவராக இருந்தார்; கடவுளுடைய முதல் மகன் என்ற விசேஷ அந்தஸ்து அவருக்கு இருந்தது; அவர் மூலமாகத்தான் எல்லாமே படைக்கப்பட்டன.
யோவான் 1:1-ன் சூழமைவு
பூமியில் இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும் பற்றிய பதிவு யோவான் புத்தகத்தில் இருக்கிறது. முதல் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்கள், பூமிக்கு வருவதற்கு முன் இயேசு பரலோகத்தில் இருந்ததைப் பற்றியும், கடவுளோடு அவருக்கு இருந்த விசேஷ பந்தத்தைப் பற்றியும், மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் அவருக்கு இருந்த முக்கிய பங்கைப் பற்றியும் சொல்கின்றன. (யோவான் 1:1-18) இந்த விவரங்கள், பூமியில் இயேசு ஊழியம் செய்த காலத்தில் சொன்னவற்றையும் செய்தவற்றையும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.—யோவான் 3:16; 6:38; 12:49, 50; 14:28; 17:5.
யோவான் 1:1 பற்றிய தவறான கருத்துக்கள்
தவறான கருத்து: யோவான் 1:1-ன் கடைசியில் வருகிற சொற்றொடர் “அந்த வார்த்தை தேவனாக இருந்தது” என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
உண்மை: நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்த்தாலும், இதை வேறுவிதமாக மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது என்பதைச் சிலர் புரிந்திருக்கிறார்கள். யோவான் 1:1-ன் மூலமொழி வாக்கியத்தில் “கடவுள்” (கிரேக்கில், தியாஸ்) என்ற வார்த்தை வருகிற இரண்டு இடங்களிலும் அதன் இலக்கண அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அதாவது, முதலாவது வருகிற “கடவுள்” என்ற வார்த்தைக்கு முன் நிச்சய சுட்டிடைச் சொல் (definite article) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது வருகிற இடத்தில் அந்தச் சுட்டிடைச் சொல் பயன்படுத்தப்படவில்லை. இரண்டாவது இடத்தில் அந்தச் சுட்டிடைச் சொல் இல்லாதது, யோசிக்க வேண்டிய விஷயம் என்று அறிஞர்கள் நிறைய பேர் சொல்கிறார்கள். இதைப் பற்றி த டிரான்ஸ்லேட்டர்ஸ் நியு டெஸ்டமென்ட் இப்படிச் சொல்கிறது: “இரண்டாவதாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கடவுள்’ என்ற வார்த்தைக்கு இருக்கும் விசேஷத் தன்மையை இது காட்டுகிறது. அப்படியென்றால், அந்தச் சொற்றொடரின் அர்த்தம் ‘அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்’a என்பதுதான்.” இந்த வித்தியாசத்தை மற்ற அறிஞர்களின்b கருத்துகளிலும் மற்ற சில பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் பார்க்க முடிகிறது.
தவறான கருத்து: அந்த “வார்த்தை” சர்வவல்லமையுள்ள கடவுளைப் போன்றவர்தான் என்று அந்த வசனம் சொல்கிறது.
உண்மை: “அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது” என்ற சொற்றொடரிலிருந்து இரண்டு தனித்தனி நபர்களைப் பற்றி அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. அந்த வார்த்தை ‘தேவனிடத்தில் இருந்துகொண்டு’ அதேசமயத்தில் சர்வவல்லமையுள்ள கடவுளாகவும் இருப்பது முடியாத விஷயம். அந்த “வார்த்தை” சர்வவல்லமையுள்ள கடவுள் அல்ல என்பதை அதன் சூழமைவும் உறுதிப்படுத்துகிறது. “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை” என்று யோவான் 1:18 சொல்கிறது (தமிழ் O.V. பைபிள்). ஆனால், “வார்த்தை” என்பவரை, அதாவது இயேசுவை, மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான், “அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம்” என்று யோவான் 1:14 சொல்கிறது.
தவறான கருத்து: “வார்த்தை” என்பவருக்கு ஆரம்பம் இல்லை.
உண்மை: இந்த வசனத்தில் “ஆதியிலே” என்று குறிப்பிடப்பட்டிருக்கிற சொல் கடவுளுக்குப் பொருந்தாது. ஏனென்றால், கடவுளுக்கு ஆரம்பமே இல்லை. யெகோவாc தேவன் ‘என்றென்றும் இருக்கிறவர்.’ (சங்கீதம் 90:1, 2) ஆனால், ‘வார்த்தையாகிய’ இயேசு கிறிஸ்துவுக்கு ஆரம்பம் இருக்கிறது. அவர் ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாக இருக்கிறார்.’—வெளிப்படுத்துதல் 3:14, தமிழ் O.V. பைபிள்.
தவறான கருத்து: “வார்த்தை” என்பவரை “ஒரு கடவுள்” என்று சில பைபிள்கள் மொழிபெயர்த்திருப்பதால் பல தெய்வ வழிபாட்டை பைபிள் ஆதரிக்கிறது.
உண்மை: ‘கடவுள்’ என்பதற்கான தியாஸ் என்ற கிரேக்க வார்த்தை, ஏல், ஏலோஹிம் என்ற எபிரெய வார்த்தைகளுக்குச் சமமானது. இந்த வார்த்தைகள் பைபிளில் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிற பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எபிரெய வார்த்தைகள் “வல்லமையுள்ளவர், வலிமையானவர்” என்ற அர்த்தத்தைத் தருவதாக நம்பப்படுகிறது. இந்த வார்த்தைகள் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கும், மற்ற கடவுள்களுக்கும் மனிதர்களுக்கும்கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. (சங்கீதம் 82:6; யோவான் 10:34) “வார்த்தை” என்பவர் மூலமாக கடவுள் எல்லாவற்றையும் படைத்ததால் அவரை வல்லமையுள்ளவர் என்று சொல்வது சரியானதே. (யோவான் 1:3) “வார்த்தை” என்பவரை “ஒரு கடவுள்” என்று சொல்வது ஏசாயா 9:6-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தோடு ஒத்துப்போகிறது. அந்த வசனத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதாவது மேசியா அல்லது கிறிஸ்து, “வல்லமையுள்ள கடவுள்” (எபிரெயுவில், ஏல் கிபோர்) என அழைக்கப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஆதியாகமம் 17:1; 35:11; யாத்திராகமம் 6:3; எசேக்கியேல் 10:5 ஆகிய வசனங்களில் பார்க்கிறபடி “சர்வவல்லமையுள்ள கடவுள்” (ஏல் ஷடாய்) என்று சொல்லப்படவில்லை.
பல தெய்வ வழிபாட்டை பைபிள் ஆதரிப்பது இல்லை. “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 4:10) “பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன. இப்படி நிறைய ‘கடவுள்களும்’ நிறைய ‘எஜமான்களும்’ இருந்தாலும், உண்மையில் ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார், அவர்தான் பரலோகத் தகப்பன்; அவரால்தான் எல்லாம் உண்டாயிருக்கிறது, அவருக்காக நாமும் உண்டாயிருக்கிறோம்; இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் இருக்கிறார்; அவர் மூலம் எல்லாம் உண்டாயிருக்கிறது, அவர் மூலம் நாமும் உண்டாயிருக்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 8:5, 6.
a த டிரான்ஸ்லேட்டர்ஸ் நியு டெஸ்டமென்ட், பக்கம் 451.
b யோவான் 1:1-ல் சொல்லப்பட்டுள்ள ‘வார்த்தை’ என்பவர், நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ள ஒரே கடவுள் கிடையாது, ஆனால் அவர் ஒரு கடவுள், அதாவது தெய்வீகத்தன்மை உள்ளவர் என்று ஜேஸன் டேவிட் பெடூன் என்ற அறிஞர் சொல்கிறார்.—மொழிபெயர்ப்பில் உண்மை: புதிய ஏற்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் திருத்தமும் வேறுபாடும் (ஆங்கிலம்), பக்கங்கள் 115, 122, 123.
c யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.