விழிப்புடன் இருங்கள்!
வெறுப்பில் முளைத்த வன்முறை பிடுங்கப்படுமா—பைபிள் என்ன சொல்கிறது?
இன்று வெறுப்பினால் நடக்கும் குற்றச்செயல்கள் சர்வசாதாரணமாகிவிட்டது. இனம், மதம், பாலினம், பின்னணி போன்றவற்றில் இருக்கும் வித்தியாசங்களை காரணம் காட்டி ஒருசில மக்களை வெறுக்கிறார்கள், தாக்குகிறார்கள். இப்படி நடப்பதால் நிறைய மக்கள் ஒரு பயத்தில்தான் இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றச்செயல்கள் நிறைய பேருடைய மனதையும் உடலையும் ரணமாக்கி இருக்கிறது. சிலருடைய உயிரையும் பறித்திருக்கிறது.
நாம் வாழும் இந்த காலத்தில் மக்கள், “கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக,” “பந்தபாசம் இல்லாதவர்களாக” இருப்பார்கள் என்று பைபிளில் முன்பே சொல்லியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) வெறுப்பை காரணம் காட்டி நடக்கும் இந்த குற்றச்செயல்கள் ஓயுமா? அதைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
வெறுப்பில் முளைத்த வன்முறையை யார் பிடுங்குவார்
கொடூரமான செயல்களுக்கு கடவுளால் முடிவுகட்ட முடியும், முடிவும் கட்டுவார் என்று பைபிள் உறுதியாக சொல்கிறது.
“அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள். . . . தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.” (சங்கீதம் 37:9-11) கொடூரமான ஆட்கள் மக்களை கொடுமைப்படுத்திக்கொண்டே இருக்க கடவுள் விடமாட்டார்.
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.” (வெளிப்படுத்துதல் 21:4) மக்கள் பட்ட காயங்களையும் வலிகளையும் சுவடு தெரியாமல் கடவுள் குணமாக்குவார். அது உடலில் இருந்தாலும் சரி உள்ளத்தில் இருந்தாலும் சரி!
மக்கள் “உயிரோடு எழுப்பப்படுவார்கள்” (அப்போஸ்தலர் 24:15) இறந்துபோன லட்சக்கணக்கான மக்களை கடவுள் உயிரோடு எழுப்புவார். வெறுப்பு என்ற கொடுமைக்கு பலியானவர்களையும் அவர் உயிரோடு எழுப்புவார்.
இன்று வெறுப்பை சமாளிக்க
பைபிள் நமக்கு நம்பிக்கை தருகிறது. ஆனால் அதுமட்டுமல்ல, இன்று வெறுப்பை சமாளிப்பது எப்படி என்றும் சொல்லித் தருகிறது. பின்வரும் கேள்விகளுக்கு பைபிள் என்ன பதில் தருகிறது என்று பாருங்களேன்:
வன்முறையை முளைக்க வைக்கும் வெறுப்பை வளர்க்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள “வெறுப்பு சங்கிலியை உடைத்து எறியுங்கள்” என்ற காவற்கோபுர பத்திரிகையை பாருங்கள்.
இந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட கடவுள் ஏன் விட்டிருக்கிறார்? பைபிளில் இருந்து இதற்கு தெளிவான பதிலை தெரிந்துகொள்ள கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.