உங்களுடைய பிள்ளையைச் சரியான வழியில் பயிற்றுவியுங்கள்—அதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்யுங்கள்!
“குழந்தைப் பருவமே வளம் மிகுந்த பருவம் என்பதில் சந்தேகமில்லை. இது கூடிய மட்டும் எல்லா வழியிலும் கல்வி புகட்டப்படுவதில் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தப் பருவம் வீணாக்கப்பட்டால் அதை எவ்விதத்திலும் ஈடுசெய்ய முடியாது. இந்த ஆரம்பக்கால வருடங்களை அசட்டை செய்வதற்குப் பதிலாக, முழு கவனத்தோடு அதைப் பண்படுத்துவது நம்முடைய கடமை.”—டாக்டர் அலெக்ஸிஸ் காரல்.
மனதையும் இருதயத்தையும் செயல் திட்டத்தால் பக்குவப்படுத்துவது அவசியம். மனதின் ஆச்சரியமான சாதனைகளைக் கண்டு மனிதர் ஒருவேளை வியப்படையலாம், ஆனால் கடவுள் இருதயத்தைப் பார்க்கிறார். அறிவு தலைகர்வம் கொள்ளச்செய்யும்; ஆனால் இருதயத்திலிருக்கும் அன்புதானே கட்டுவிக்கக்கூடும். அறிவுக்கூர்மை படைத்த மனங்களுக்கு அன்பான இருதயங்கள் தேவைப்படுகிறது. ஏனென்றால், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.” (மத்தேயு 12:34, 35; 15:14; 1 சாமுவேல் 16:7; 1 கொரிந்தியர் 8:1) பிள்ளைகளின் மனதைத் தூண்டிவிடுவது அவசியமாயிருக்க, அதைவிட முக்கியம், அவர்களுடைய இருதயங்களில் அன்பை வளர்ப்பதாகும்.
இதை ஆரம்பித்து வைக்க ஓர் உள் அமைப்பு இருக்கிறது. அதற்குத்தான் பிணைப்பு என்று பெயர். தாய் தன் குழந்தையை தூக்குகிறாள், முத்தமிடுகிறாள், அணைக்கிறாள், மற்றும் கொஞ்சி விளையாடுகிறாள். குழந்தை தாயை நேராக நோக்குகிறது. ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. தாய்மையின் உணர்ச்சிகள் பொங்கிவழிகிறது, குழந்தை பாதுகாப்பாக உணருகிறது. “குழந்தை பிறந்து முதல் சில நிமிடங்களிலும் மணிநேரங்களிலும் ஓர் உணர்ச்சி மிகுந்த காலத்தைக் காண்கிறோம், இது தாய்-சேய் பிணைப்புக்கு அத்தியாவசியமானது,” என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஒரு நல்ல துவக்கம், ஆனால் அது ஒரு துவக்கமே, குழந்தை உதவியற்ற நிலையில் தன்னுடைய உடனடியான தேவைகளுக்கு—உடல் மற்றும் உணர்ச்சி தேவைகளுக்கு அது தன் தாயையே நோக்கியிருக்கிறது, அது உணர்ச்சி சம்பந்தமாகவும் பசியாயிருக்கக்கூடும். கொஞ்சுவது, கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, தொட்டிலில் தாலாட்டுவது, விளையாடுவது, அன்பை வெளிப்படுத்துவது—இவை அனைத்துமே மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. இந்தத் தூண்டுதல் மூளைக்குப் போஷக்காக அமைகிறது. அது இல்லாவிடில் மூளை மந்தப்பட்டு வாழ்க்கையில் வளர்ச்சிபெறாமல் போய்விடுகிறது. இது அசட்டை செய்யப்பட்டால் குழந்தை எரிச்சலும், வன்மையும் வழிதவறும் பிள்ளையாகவும் ஆகிவிடக்கூடும். குழந்தைக்குத் தாய்ப் பாசம் மிக முக்கியமானதும் முதன்மையானதுமாயிருக்கிறது, மற்றும் சமுதாயத்தின் பார்வையிலும் முக்கியமானது—வேறு எந்த உலகப் பிரகாரமான வாழ்க்கைப் பணியைக் காட்டிலும் மிக முக்கியமானது!
தந்தையின் பாகம்
தந்தையை ஒதுக்கிவிட முடியாது. குழந்தை பிறக்கும்போது அதன் தந்தையும் அங்கு இருப்பாரானால், தந்தை-சேய் பிணைப்பு அப்பொழுதே ஏற்படும். வாரங்களும் மாதங்களும் கடந்து செல்ல, அவர் வகிக்கும் பாகத்தின் செல்வாக்கு வேகமாகக் கூடுகிறது. இது குழந்தை வளர்ப்புப் பிரிவின் நிபுணராகிய டாக்டர் T. பெரி பிரேஸில்டன் என்பவரால் காண்பிக்கப்படுகிறது.
“ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாயும் ஒரு தகப்பனும் தேவை,” என்கிறார் அவர். “ஒவ்வொரு தகப்பனும் ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். சுறுசுறுப்பாக, தன்னை உட்படுத்திக்கொள்ளும் தகப்பனுடைய ஒரு குழந்தைக்குத் தாய்மையுணர்ச்சியை அதிகமாக வெளிப்படுத்திடும் ஒரு தாயும் அந்தத் தகப்பனும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.” தாய்மார்களும் தகப்பன்மார்களும் பிள்ளைகளைக் கையாளுவது ஏற்படுத்தும் வித்தியாசத்தைக் காண்பித்த ஓர் அறிக்கையை அவர் குறிப்பிட்டு பேசினார். “தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் தன்மையாகவும் கட்டுப்பட்டவர்களாகவும் நடந்துகொள்ளும் தன்மைபடைத்தவர்கள். மறுபட்சத்தில் தகப்பன்மார்கள், அதிக விளையாட்டுத்தனமாக, தங்கள் குழந்தைகளை கிச்சுகிச்சு காட்டுவதும் சிரிக்க வைப்பதுமாயிருப்பார்கள்.
ஆனால் தகப்பன்மார்கள், பிள்ளைகளுடன் வேடிக்கையாக விளையாடுவதைவிட அவர்களுக்கு அதிகத்தைக் கொடுக்கின்றனர். “சுறுசுறுப்பான ஒரு தகப்பன் இருக்கும்போது, பிள்ளை பள்ளியில் அதிக வெற்றிகரமாக வளருகிறது, தமாஷாக பழகுகிறது மற்றும் மற்ற பிள்ளைகளுடன் நல்ல விதத்தில் பழகிட முடிகிறது. அவன் தன்னை நம்புகிறவனாய் கற்றுக்கொள்ள நன்கு உந்துவிக்கப்படுகிறது. அவன் ஆறு அல்லது ஏழு வயதை எட்டுவதற்குள் பிள்ளையின் அறிவுத் திறன் உயருகிறது.”
தகப்பனுக்கும் மகனுக்குமிடையே நெருங்கிய கற்பிக்கும் உறவைத்தான் யெகோவா வலியுறுத்துகிறார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிற போதும், எழுந்திருக்கிறபோதும், அவைகளைக் குறித்துப் பேசு.” (உபாகமம் 6:6, 7) சந்ததி பிளவு ஏற்படுவதற்கு இங்கு இடமே கிடையாது!
பாலகனாயிருப்பதிலிருந்தே பயிற்றுவிப்பு
குழந்தைகளில் பிறப்பு முதல் ஆறு வயது வரை வளர்ச்சிப் பருவங்கள் இருக்கின்றன: தசை ஒத்திசைவு, பேச்சுத் திறமைகள், உணர்ச்சிக்குரிய தன்மைகள், ஞாபகத்திறன், சிந்தனாசக்தி, மனச்சாட்சி போன்றவை. குழந்தையின் மூளை வேகமாக வளர்ச்சியடைகையிலும் இந்தப் பருவங்கள் அதனதன் நிலையில் தோன்றும்போதும் தானே இந்த வித்தியாசமான திறமைகளில் அவர்களைப் பயிற்றுவிப்பதற்குத் தகுந்த சமயம்.
கடற்பஞ்சு தண்ணீரை உரிஞ்சுவதைப்போல் குழந்தையின் மூளை இந்தத் திறமைகளை அல்லது தன்மைகளை ஈர்த்துக்கொள்ளும் சமயமும் அதுவே. நேசிக்கப்பட்டால், அது நேசிக்கக் கற்றுக்கொள்கிறது. அதனிடம் பேசினால் அல்லது வாசித்தால், அதுவும் பேச, வாசிக்கக் கற்றுக்கொள்கிறது. பனிநடைக் கட்டையிட்டுப் பழக்கினால், திறம்பட்ட பனிநடையாளராக ஆகிறது. நீதியான சூழ்நிலையில் வளரும்போது சரியான நியமங்களை ஏற்றுக்கொள்கிறது. கற்றுக்கொள்வதற்குச் சாதகமான இந்தப் பருவங்களில் இக்காரியங்கள் சரியான விதத்தில் செலுத்தப்படாவிட்டால் அது இந்தப் பண்புகளையும் திறமைகளையும் பிற்காலத்தில் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாயிருக்கும்.
பைபிள் இதை மதித்துணரும் விதத்தில் பெற்றோருக்கும் பின்வரும் புத்திமதியைத் தருகிறது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து [பயிற்றுவி, NW], அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6) கீல்-டெலிஷ் விளக்கவுரை இப்படியாக வாசிக்கிறது: “குழந்தைக்கு அவனுடைய வழிக்கு இணங்க புத்திமதி கொடு.” “நடத்து” அல்லது “பயிற்றுவி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெயு வார்த்தை “துவக்கிவை” என்றும் அர்த்தம் கொள்கிறது, எனவே குழந்தைக்கு முதல் ஆலோசனை கொடுப்பதை துவக்கி வைத்தலைக் குறிக்கிறது. பிள்ளையின் வழிக்கு ஏற்ப, அவனுடைய வழிக்கு இணங்க, அவன் கடந்து செல்லும் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப அதைக் கொடுங்கள். மிக எளிதாகக் கிரகித்துக்கொள்வதற்கு அதுவே பொருத்தமான சமயம், மற்றும் இந்த வளர்ச்சிப் பருவங்களின் வருடங்களில் அவன் என்ன கற்றுக்கொள்கிறானோ அது அவனில் நிலைத்திருக்கும் சாத்தியம் இருக்கிறது.
மனித வளர்ச்சியடைவது குறித்து ஆராயும் மாணவர்கள் பலருடைய கருத்தும் இதுவே. “பிள்ளை வளர்ச்சி ஆய்வில், ஆரம்பக்கால ஆள்தன்மை அமைப்பை அல்லது ஆரம்பக்கால சமூக மனப்பான்மைகளை மாற்றுவதற்கான பலமான திறனை நாங்கள் எங்கும் வெளிப்படுத்தியதில்லை. அது நடக்கக்கூடும் என்று ஒப்புக்கொள்கின்றனர், ஆனால் அநேக சமயங்களில் பரிகாரம் காணமுடியாது.” என்றபோதிலும் விதிவிலக்குகள் பல இருக்கின்றன, கடவுளுடைய சத்திய வல்லமையால் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றன.—எபேசியர் 4:22, 24; கொலாசெயர் 3:9, 10.
சரியான சமயத்தில் கொடுக்கப்படும் பயிற்சிக்கு மொழி ஒரு நல்ல உதாரணம். பிறப்பு மூலத்துக்குரிய திட்டத்தின்படி குழந்தைகள் பேசுவதற்கான திட்ட அமைப்பைக் கொண்டிருக்கின்றன, ஆனால் உள்ளமைந்த மூளை சுற்றோட்ட அமைப்பு உச்ச திறமையோடு செயல்படுவதற்கு, குழந்தை அதன் சரியான வளர்ச்சிப் பருவத்தில் அப்படிப்பட்ட பேச்சு சப்தங்களைக் கேட்கச் செய்ய வேண்டும். பேச்சுக்குரிய பகுதியில் 6 முதல் 12 மாதங்களில் வளர்ச்சி விரைகிறது. 12 முதல் 18 மாதங்களில் வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கின்றன என்பதை அந்தக் குழந்தை கிரகிக்கும்போது வளர்ச்சி அதிவேகமாகக் காணப்படுகிறது.
தான் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறான். வாழ்க்கையின் இரண்டாம் ஆண்டில் இந்த சொல்வளத்திறம் ஒருசில வார்த்தைகளிலிருந்து பல நூறு வார்த்தைகளாக ஆகக்கூடும். “பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் (குழந்தை பருவம் முதல்) அறிந்தவன்” என்று பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டினான். (2 தீமோத்தேயு 3:15) “சிறு வயது” அல்லது “குழந்தைப் பருவம்” என்ற வார்த்தை “பேசாதவர்” என்ற நேர்ப்பொருளைக் கொண்டிருக்கிறது. அநேகமாகத் தீமோத்தேயு ஒரு குழந்தையாக இருக்கும்போதே அவனிடம் பரிசுத்த வேத வசனங்களை வாசித்துக் காண்பித்திருக்கக்கூடும், இப்படியாக அவற்றைப் பேசுவதற்கு முன்பே அவன் அநேக பைபிள் வார்த்தைகளை அறிந்திருந்தான்.
குறிப்பு என்னவென்றால், குழந்தையின் வளர்ச்சியில் சில குறிப்பிட்ட காலப்பகுதிகளில் சில காரியங்களை மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம், கிரகித்துக்கொள்ளலாம். என்றபோதிலும், தேவையான ஊக்குவிப்பு இல்லாதபடிக்கு அந்தக் காலப்பகுதிகள் கடந்துபோய்விடுமானால், திறமைகள் முழுமையாக வளராது. உதாரணமாக, பிற்காலம் வரையாக பிள்ளைகள் எந்தப் பேச்சையும் கேட்காதவர்களாயிருந்தால், அவர்கள் மெதுவாகவும், கஷ்டப்பட்டும் பேசக் கற்றுக்கொள்வார்கள், பொதுவாக நன்கு பேசுவதற்குக் கற்றுக்கொள்வதில்லை.
குழந்தைப்பருவம் முதல் உங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காண்பியுங்கள்
நீங்கள் எப்பொழுது ஆரம்பிக்கிறீர்கள்? ஆரம்பம் முதல் பிறந்த குழந்தைக்கு வாசித்துக் காண்பியுங்கள். ‘ஆனால் அவனுக்குப் புரியாதே!’ நீங்கள் எப்பொழுது அவனிடம் பேச ஆரம்பித்தீர்கள்? ‘ஏன், பிறந்தது முதல்,’ நீங்கள் சொன்னது அவனுக்குப் புரிந்ததா? ‘இல்லை, ஆனால் . . . ’ அப்படியென்றால், ஏன் அவனுக்கு வாசித்துக் காண்பிக்கக்கூடாது?
உங்கள் குழந்தையை மடியில் அமர்த்தி, உங்கள் கையால் அவனை அணைத்துக் கட்டிக்கொள்ளும்போது அவன் பாதுகாப்பாக உணருகிறான், உங்கள் பாசத்தைக் காண்கிறான். அவனுக்கு வாசித்துக் காண்பிப்பது உங்களுக்கு ஓர் இன்பமான அனுபவமாக இருக்கிறது. அது அவனில் ஓர் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அவன் சந்தோஷத்தை வாசித்தலுடன் இணைக்கிறான். குழந்தைகள் காரியங்களைப் பின்பற்றும் இயல்புடையவை, பெற்றோர்கள்தான் அவர்களுக்கு மாதிரிகள். அவன் உங்களைப் பின்பற்ற விரும்புகிறான். வாசிக்க விரும்புகிறான். அவன் வாசிப்பதாக விளையாடுகிறான். பின்னால் அவன் வாசிப்பதிலிருக்கும் இன்பத்தை அனுபவிக்கிறான்.
இதனால் இன்னொரு பெரிய நன்மை ஏற்படுகிறது—அவன் தொலைக்காட்சிக்கு அடிமையாகிவிடுவதில்லை. தன் கண்களை உருட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான கொலைகளையும், குத்துகளையும், சுட்டுக்கொல்லப்படுவதையும், கற்பழித்தல்களையும், வேசித்தனத்தையும், விபச்சாரத்தையும் உட்கார்ந்து பார்ப்பதில்லை. அவன் டிவி-யை மூடிவிடக்கூடும்; ஒரு புத்தகத்தைத் திறந்து வாசிக்கக்கூடும். எழுத்தறிவின்மை மற்றும் டிவி-க்கு அடிமையாகுதலின் இந்தக் காலத்தில் இது ஒரு பெரிய சாதனை!
பிள்ளையை நேசிக்க நேரம் எடுக்கிறது
உண்மைதான், பிள்ளைகளுக்கு வாசித்துக் காண்பிக்க நேரம் எடுக்கிறது. உங்கள் குழந்தையோடு விளையாடுவதற்கும் நேரம் எடுக்கிறது. ‘கைவீசம்மா கைவீசு, கைதட்டம்மா கைதட்டு’ என்று விளையாடுவதற்கும், அது புதிது புதிதாகக் காரியங்களைக் கண்டுபிடிப்பதைக் காண்பதற்கும், செயல்பட முன்வருவதையும், புதியவற்றின்மேல் ஆர்வங்கொள்வதையும், அறிவார்வத்தை திருப்தி செய்துகொள்வதையும், புதியவை உருவாக்கும் அதன் திறமையும் காண்பதற்கு நேரம் எடுக்கிறது. அதற்குப் பெற்றோராயிருப்பதும் நேரத்தை எடுக்கிறது. ஆக உங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதே ஆரம்பித்துவிடுங்கள். அங்குதான் அநேகமாய் சந்ததிப் பிளவு ஆரம்பமாகிறது; இளவயதுவரை அவர்கள் காத்திருப்பதில்லை. ராபர்ட் J. கீஷன், காப்டன் கங்காருவாகப் பிள்ளைகளுக்கு ஒலிபரப்பில் வருகிறவர், இது எப்படிச் சம்பவிக்கக்கூடும் என்பதை விளக்குகிறார்:
“ஒரு சிறுமி வாயில் ஒரு விரலும் கையில் ஒரு பொம்மையுமாக, பொறுமையில்லாமல் பெற்றோரின் வருகைக்கு ஆவலாய்க் காத்துக்கொண்டிருக்கிறாள். ஏதோ ஒரு மண்விளையாட்டு அனுபவத்தை சொல்வதற்கு ஆவலாயிருக்கிறாள். அந்த நாளில் தனக்குக் கிளர்ச்சியளித்த காரியத்தைப் பகிர்ந்துகொள்வதில் கிளர்ச்சியடைகிறாள், அந்த நேரம் வருகிறது, பெற்றோர் வீடு திரும்புகிறார். வேலை செய்யும் இடத்தில் தனக்கு இருந்த அழுத்தங்களால் அதிக களைப்பாயிருக்கும் பெற்றோர் தன் பிள்ளையைப் பார்த்து, ‘இப்பொழுது, சொல்லாதே கண்ணே, நான் அதிக வேலையாக இருக்கிறேன், போய் கொஞ்சம் டிவி பார்,’ என்று அநேக சமயங்களில் சொல்லிவிடுகின்றனர். அநேக அமெரிக்க குடும்பங்களில், அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகள்: ‘நான் அதிக வேலையாக இருக்கிறேன், போய் டெலிவிஷன் பார்’ என்பதாகும். இப்பொழுது நேரம் இல்லை என்றால், எப்பொழுது? ‘பின்னால்.’ ஆனால் அந்தப் பின்னால் என்ற சமயம் வருவது அரிது . . .
“வருடங்கள் உருண்டோடுகின்றன, பிள்ளை வளருகிறது. அவளுக்கு விளையாட்டுப் பொருட்களும் உடைகளும் கொடுக்கிறோம். நாம் அவளுக்கு டிசைன் designer clothes?உடைகளும் ஒரு ஸ்டீரியோவும் வாங்கிக் கொடுக்கிறோம், ஆனால் அவள் அதிகமாக விரும்பும் ஒன்றை நாம் அவளுக்குக் கொடுப்பதில்லை, அதுதான் நம்முடைய நேரம். இப்பொழுது அவளுக்கு வயது பதினான்கு, அவளுடைய கண் கலங்கி நிற்கிறாள், ஏதோ சிக்கல். ‘கண்ணே, என்ன விஷயம்? என்னிடம் சொல்லு, பேசு.’ காலம் கடந்துவிட்டது, அதிக தாமதம் ஏற்பட்டுவிட்டது. அன்பு நம்மைக் கடந்துபோய்விட்டது. . . .
“‘இப்பொழுது சொல்லாதே, பின்னால்,’ என்று நாம் ஒரு பிள்ளையிடம் சொல்லும்போது. “போய் டிவி பார்,” என்று நாம் சொல்லும்போது. “இப்படி அநேகக் கேள்விகளைக் கேட்காதே,” என்று நாம் சொல்லும்போது. நம்முடைய பிள்ளைகள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் அந்த ஒரு காரியத்தை—நம்முடைய நேரத்தை—அவர்களுக்குக் கொடுக்கத் தவறும்போது. நம்முடைய குழந்தையை நாம் நேசிக்க தவறும்போது. நாம் பிள்ளையில் போதுமான அக்கறையை எடுக்கவில்லை என்றல்ல. வெறுமென பிள்ளையை நேசிக்க நமக்கு நேரம் இல்லாதபடிக்கு அதிக வேலையாக இருக்கிறோம்.
அது உண்மைதான், உங்களுடைய பிள்ளையை நேசிப்பதற்கு நேரம் எடுக்கிறது. அதனுடைய உடலைப் பேணிக் காப்பதற்கு, உணவு கொடுப்பதற்கும் உடை உடுத்துவிப்பதற்கும் எடுக்கும் நேரம் மட்டும் அல்ல, ஆனால் அதன் இருதயத்தை அன்பால் நிரப்புவதற்கு எடுக்கும் நேரத்தை உட்படுத்துகிறது. நிறுத்து அளந்து, சிக்கனமாகக் கொடுக்கப்படும் அன்பு அல்ல, ஆனால் பொங்கிவழியும் “அளவுகடந்த அன்பு” என்கிறார் வாழ்க்கையின் முதல் மூன்று ஆண்டுகள் என்ற நூலின் ஆசிரியர் பர்ட்டன் L. வைட், அவர் சொன்னார்: “வேலை செய்யும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவருவது, முக்கியமாக பிள்ளைகளைக் கவனிக்கும் மையங்களிடம் விட்டுவருவது அதிக ஞானமற்ற செயல். அப்படிச் சொல்வதால் நான் அதிகமாக வெறுக்கப்படுகிறேன், ஆனால் குழந்தைகளுக்குச் சிறந்தது எது என்பதே என்னுடைய அக்கறை.” “குழந்தைகளுக்குச் சிறந்தது” என்பதாக அவர் இதை நோக்குகிறார், அதே சமயத்தில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரோ வேலை செய்ய வேண்டிய இடங்களில் இது எல்லா சமயங்களிலும் கூடியதன்று என்பதையும் அவர் உணருகிறார்.
சிட்ச—சினங்கொள்ளச் செய்யும் ஒரு பொருள்
சிட்சை சம்பந்தமாக பைபிள் கொடுக்கும் புத்திமதியின் பேரில் பைபிளைப் பலர் வெறுக்கின்றனர். “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கெனவே தண்டிக்கிறான்.” (நீதிமொழிகள் 13:24) இந்த வசனத்தின் பேரில் நியு இன்டர்நேஷனல் வெர்ஷன் ஸ்டடி பைபிளின் அடிக்குறிப்பு கூறுகிறதாவது: “பிரம்பு. அநேகமாய் எந்த ஒரு விதமான சிட்சையைக் குறிப்பிடும் சொல்லணி.” பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி “பிரம்பு” என்ற வார்த்தையை “செங்கோல், ஆட்சி அதிகாரத்துக்குரிய சின்னம்” என்று விளக்குகிறது.
பெற்றோரின் அதிகாரம் புட்டத்தில் அடிப்பதை உட்படுத்தக்கூடும், ஆனால் எல்லா சமயங்களிலும் அப்படியாக இருக்கவேண்டியதில்லை. 2 தீமோத்தேயு 2:24, 25-ன்படி கிறிஸ்தவர்கள் “எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும் . . . சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்.” “உபதேசித்தல்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை சிட்சை என்பதற்குரிய வார்த்தையாகும். பிள்ளைகளின் உணர்ச்சிகளை மதித்தவண்ணம் சிட்சை கொடுக்கப்பட வேண்டும்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற [யெகோவாவுக்கேற்ற, NW] சிட்சையிலும் போதனையிலும் [மனப்பக்குவத்திலும், NW] அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
மனம்போகும் போக்கில் போவதை அனுமதித்தல் சார்பாகப் பேசும் உளநூலறிஞர் சொல்லுவதாவது, உங்கள் பிள்ளையை நீங்கள் புட்டத்தில் அடிப்பது அவனைப் பகைப்பதாகும். இது உண்மை அல்ல. மனம் போகும் போக்கில் செயல்படுவது வெறுக்கத்தக்கது. இது பூமி முழுவதும் வழிதவறிய இளைஞர் வெள்ளத்தையும் குற்றச்செயல்களையும் திறந்துவிட்டிருக்கிறது. நீதிமொழிகள் 29:15 சொல்லுகிறது: “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” “கண்டிப்புள்ள பெற்றோருக்கு எதிராக மனம்போகும் போக்கில் போவதை அனுமதிக்கும் பெற்றோர்கள்” என்ற தலைப்பில் டாக்டர் ஜாய்ஸ் பிரதர்ஸ் கூறுவதாவது:
“அண்மையில் ஏறக்குறைய 2,000 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களை உட்படுத்திய ஒரு சுற்றாய்வு—அவர்களில் சிலர் கண்டிப்பான பெற்றோராலும் மற்றவர்கள் மனம்போன போக்கில் செல்ல அனுமதிக்கப்பட்ட பெற்றோராலும் வளர்க்கப்பட்டவர்கள்—வியப்பூட்டும் பலன்களைக் காணச்செய்தது. கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் உயர்ந்தளவில் சுய மரியாதையுள்ளவர்களாயும் சமுதாயத்திலும் கல்வியிலும் சிறந்ததை சாதிப்பவர்களாயும் இருந்திருக்கிறார்கள்.” தங்களைக் கண்டிப்பாக வளர்த்த பெற்றோரை வெறுத்தனரா? இல்லை, “பிள்ளைகளின் சொந்த நன்மைக்காகவே பெற்றோர்கள் விதிமுறைகளைக் கொண்டனர்—பெற்றோர் காண்பிக்கும் அன்பின் ஓர் வெளிக்காட்டு என்று அவர்கள் நம்பினர்.”
நீங்கள் உங்கள் பிள்ளையுடன் கண்டிப்பாக இருந்தால், “நீங்கள் கண்டிப்பற்றவர்களாக இருக்கும்போது அவர்கள் காண்பிக்கும் அன்பைவிட குறைவாக உங்களை நேசிப்பார்கள்” என்பது குறித்து நீங்கள் பயப்பட வேண்டாம். பிள்ளைகள் தங்களுடைய முதல் இரண்டு வருடங்களில் தங்களைக் கவனித்துக் கொள்கிறவர்களிடமிருந்து அவ்வளவு எளிதாக பிரிந்துவிடுவதில்லை; நீங்கள் இடைவிடாமல் அவர்களுடைய புட்டத்தில் அடித்தாலும் அவர்கள் உங்களிடம்தான் திரும்பி வருவார்கள்.”
எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த போதனை
எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த போதனை நீங்கள்தான். உங்களுடைய முன்மாதிரி. நீங்கள்தான் பிள்ளைக்கு ஒரு மாதிரி. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதைவிட என்னவாயிருக்கிறீர்கள் என்பதற்குத்தான் செவிகொடுக்கிறான். உங்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறான், அனால் உங்களுடைய செயல்களைத்தான் பின்பற்றுகிறான். உங்களுடைய பிள்ளை பிறரைப் பின்பற்றும் சுபாவமுடையது. எனவே அவன் என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அவன் அன்பு, தயவு, தயாளம், நன்கு படிக்கக்கூடிய புத்திசாலியான சுறுசுறுப்பான ஓர் ஆளாக, இயேசுவின் ஒரு சீஷனாக, யெகோவாவின் வணக்கத்தாராக இருக்க விரும்புகிறீர்களல்லவா? அது என்னவாக இருந்தாலும் நீங்கள் தாமே அப்படிப்பட்டவர்களாக இருங்கள்.
எனவே குழந்தைப்பருவம் முதல் உங்கள் பிள்ளையைப் பயிற்றுவியுங்கள். அதன் மூளை வேகமாக வளரும் அந்தச் சமயமுதல், மனதுக்கும் இருதயத்துக்கும் தகவல்களையும் உணர்ச்சிகளையும் சேர்த்திடும் அந்தப் பருவம் முதல் பயிற்றுவியுங்கள். ஆனால் வளர்ச்சி மிகுந்த இந்தப் பருவம் கடந்துவிட்டால், உங்களுடைய பிள்ளையில் தெய்வீக தன்மைகள் ஊன்றுவிக்கப்படாவிட்டால், அப்பொழுது என்ன? மனம் தளரவேண்டாம். மாறுதல்கள் ஏற்படலாம், கடவுளுடைய வல்லமையால் இளைஞரும் முதியோருமாக பல இலட்சக்கணக்கானோரில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. “பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போடுங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:9, 10. (g87 5/22)
[பக்கம் 8-ன் படங்கள்]
தகப்பனோடு: வாசிப்பதற்கு ஒரு நேரம், விளையாடுவதற்கு ஒரு நேரம்
[பக்கம் 10-ன் படம்]
குளிக்கும் நேரம் மகிழும் நேரமாக இருக்கக்கூடும்